Advertisement

Vanavil 15 (2)

“ஏன்? உங்க அத்தைக்கு எங்க போச்சு புத்தி? நீங்களும் கௌரியும் எப்படி வளர்ந்தீங்கன்னு கண்கூடா பார்த்தவங்க தானே? அவங்கதானே உங்கக்கிட்ட வந்து கெளரியே பிறக்க போறான்னு சொல்லிருக்காங்க. அந்த பொம்பளைக்கு தான் அறிவில்லாம போச்சுனா உங்க அத்தைக்குமா இல்லை?…” என்று சற்று சூடாகவே கேட்டாள்.

அவளது ஆவேசத்தில் அதிர்ந்தவன், “என்னதான் இருந்தாலும் அவங்க என்னோட அத்தை. அதுக்குமேல வயசுல பெரியவங்க. புரியும்னு நினைக்கேன்…” என்று அவனும் அழுத்தமாக கூறவும் சீற ஆரம்பித்தாள்.

“வயசுல பெரியவங்க பன்ற காரியத்தையா அவங்க செய்திருக்காங்க. நான் ஒண்ணும் தப்பா சொல்லலை. உன்னை பேசினதுபோல மரியாதை இல்லாமலும் பேசலை. அறிவில்லைன்னு சொன்னதுல என்ன குறஞ்சுபோச்சு உனக்கு? புத்தி இருக்கிறவங்க செய்ற செயலா அவங்க செய்யுறதும், நடந்துக்கறதும்?…” என படபடவென பொரிந்தவளிடம் எவ்வாறு விளக்கி புரியவைப்பது என்று தவித்தான் உதயா.

சொந்த பந்தத்துக்குள்ளே அள்ளி எறியப்படும் வார்த்தைகள் கல்லில் வடித்த சிலை போல. காலத்திற்கும் மாறாது என்று உணர்ந்தவனுக்கு அதை தன் மனைவிக்கு உணர்த்த வழியில்லாமல் போய்விட்டது.

சந்தனமுல்லையென வாசம் வீசிக்கொண்டிருந்தவளை முள்ளில் தூக்கி எறிந்துவிட்டோமோ என்று மனம் குமைந்தான். மேலும் ஏதேனும் பேசினால் மறுபடியும் குதிப்பாள், பின்னால் கொஞ்சம் மெல்லமாக மாற்றிக்கொள்ளலாம் என்று தன்னை தேற்றிக்கொண்டான்.

இன்னும் கண்களில் அனலை நிரப்பிக்கொண்டு தன்னை நோக்கியவாறே அமர்ந்திருந்த மனைவியை பார்த்தவன், “வேணும்டா உதயா நல்லா வேணும். வாங்கு. இன்னும் நிறைய வாங்க வேண்டியிருக்கு. மனசை தேத்திக்கோ. இனிமே எல்லாமே அப்டிதான்…” என்று தனக்குதானே கூறிக்கொண்டான்.

ஆனால் தன் அத்தையை பற்றிய இந்த முன்னாள் நல்லவர் என்ற பிம்பமும் ஒரு நாள் சுக்குநூறாக உடைய போவது தெரிந்திருந்தால் நந்தினிக்கு புரியவைக்க முயன்றிருக்க மாட்டானோ?

அந்த பிம்பம் உடையுமன்று தன் குடும்பமே ஆழியலையில் சிக்கியது போல தவிக்க போவதை முன்பே அறியாமல் போனதுதான் விதியோ?

அவளை திசைமாற்றும் விதமாக, “முதல்ல அத்தையும் நல்லா திட்டிவிட்டு பேசவே இல்லையாம். விடாம வீட்டுக்கு வந்து மாமா முன்னால அந்த சுந்தரி தேடி வந்து மன்னிப்பு கேட்டுச்சாம். மாமாவும் பிடிச்சு திட்டவும் இனிமே உங்க குடும்ப விஷயம் பேசமாட்டேன்னும் சொல்லிருக்காங்க. ஆனா அது திருந்தலை. கொஞ்ச நாள் எதுமே பேசாம ரொம்ப நம்பிக்கையா இருந்து மறுபடியும் தன் ஆட்டத்தை ஆடிருக்கு. அதுக்கு ஊர்ல வேலையே இதுதான் போல…”

“நம்ம குடும்பத்தை பத்தி சொல்லி சொத்து விட்டுடும். சொந்தம் வெட்டிடும்னு சுத்திவளைச்சு என்னென்னமோ கதை சொல்லி அத்தையோட மனசை கலைச்சிருச்சு. அதுமில்லாம அப்பாவும் அம்மாவும் அத்தையை ஏமாத்தி ஓரங்கட்ட பார்க்கறாங்கன்னு பழி வேற. கரைப்பார் கரைச்சா கல்லும் கரையும்ன்ற பழமொழிதான் அங்கே. அத்தை கரைஞ்சுட்டாங்க…” எனவும் அந்த சுந்தரியை எங்காவது கண்டால் பார்த்த இடத்திலேயே தூக்கிபோட்டு நல்லா மிதிக்கணும் என்ற உத்வேகம் எழுந்தது நந்தினிக்குள்.

“அதுக்கு பின்னால அத்தை மாமாக்கிட்ட தினமும் சண்டை போட்டிருக்காங்க. நீங்க உங்க தங்கச்சிக்கிட்ட பேசறீங்களா? இல்லை நான் என்னோட அண்ணன்கிட்டயும், அம்மா கிட்டயும் பேசவான்னு ரொம்ப ரகளை போல. இவ்வளோ நடந்தது எதுவும் மாமா எங்க யார்க்கிட்டயும் சொல்லவே இல்லை. பிரச்சனை ஆகிடும்னு அத்தையையும் சொல்ல விடலை. ஆனா அது ஒருநாள் பூகம்பமா வெடிச்சதுடா…” என்றவன்,

அவ்வளவு நேரம் நந்தினியின் கைவிரல்களை பார்த்துக்கொண்டே அதை நீவிவிட்டபடி பேசியவன் இப்போது அவள் கண்களை நேருக்குநேராக பார்த்து தன் விழிகளை அதனோடு கலக்க முற்பட்டான். அவளும் சளைக்காம அவனது பார்வையை எதிர்கொண்டவள் தாக்குபிடிக்க முடியாம அவனது விழிகளை மூடினாள்.

“ப்ச். போதும் பார்த்தது. என்ன நடந்தது? எப்போ அவங்க பத்தி தெரிஞ்சது உங்க எல்லோருக்கும்?…” என்ற கேள்வியில் தன்னை மீட்டெடுத்தவன் அன்றைய நாள் நடந்த போராட்டம் அவன் கண்முன் நிழலாடியது.

“அருவியூர்ல இருந்து வந்தன்னைக்கு…” என்ற பதிலை எதிர்பார்க்காதவள் அதிர்ந்துபோனாள். அன்றைக்கு தான் இருந்த மன உளைச்சலுக்கு சற்றும் குறைவில்லாத வலியை அவனும் அனுபவித்திருப்பான் என்று நம்பினாள்.

“வீட்டுக்குள்ள நுழையும் போதே மாடியில ஒரே சண்டை சத்தம். வேலையாளுங்க எல்லோருமே நாகரீகமா வெளியில போய் நின்னுட்டாங்க. ஏற்கனவே குற்ற உணர்வோடு வீட்டுக்குள் நுழைந்த எனக்கு அத்தையோட பேச்சு இன்னும் வேதனையை கொடுத்தது…” என்றவனது குரலில் வேதனை அளவில்லாமல் மண்டிக்கிடந்தது.

“யார் சொல்றதயும் புரிஞ்சுக்காம தப்பு தப்பா பேச ஆரம்பிச்சுட்டாங்க. அப்பாவும், அம்மாவும் எவ்வளவோ எடுத்து சொன்னாங்க. பாட்டியோட பேச்சு கூட எடுபடலை. அவ்வளோ ஆக்ரோஷமா பேசினாங்க. இந்த கல்யாணம் நடக்கலைனா கௌரியை கொன்னுட்டு தானும் தற்கொலை செய்துக்கிறதாக சொல்லவும் எல்லோருமே ஸ்தம்பிச்சு போய்ட்டோம்…” என கூறியவனின் முகத்தில் வலி மிதமிஞ்சி இருந்தது. இதனால் வேணியின் மேல் உள்ள வெறுப்பு அதிகமாகிக்கொண்டே போனது நந்தினிக்கு.

“அத்தைக்கிட்ட இப்படி ஒரு எண்ணம் இருக்கும்னு நாங்க யாருமே எதிர்பார்க்கவே இல்லை. எவ்வளோ எடுத்து சொன்னாலும் புரிஞ்சுக்காம சொன்னதயே திரும்ப திரும்ப சொல்றவங்க கிட்ட கெஞ்சியும், போராடியும் புரியவைக்க முயற்சி செய்யறது வேஸ்ட்ன்னு தெரிஞ்சது. அதற்கு மேல பொறுமையில்லாம தான் நான் பேசினேன்…” என்று கூறியவனின் மனைவிக்கு தன்னவன் என்ன பேசியிருப்பான்? என்று தெரிந்துகொள்ள உள்ளம் அலைபாய்ந்தது.

அவளின் தவிப்பை புரிந்தவன் போல அவளை பார்த்துக்கொண்டே, “எனக்கு இன்னைக்கு காலையில கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னேன். யாருமே நம்பலை. நான் அப்படி செய்திருக்க மாட்டேன்னு நம்பினாங்க. ஆனா நான் பொய் சொல்லலைன்னு என் முகத்தை பார்த்தே புரிஞ்சுக்கிட்ட அப்பா, அம்மா, மாமா பாட்டி எல்லோரும் யாரு என்னனு விசாரிச்சாங்க….”

“சொன்னீங்களா? நான் யாரு. நமக்கு கல்யாணம் நடந்த சூழ்நிலை எல்லாமே?…” என்று கேட்கும் போதே முகம் கருத்து நா வரண்டுவிட்டது நந்தினிக்கு. அவளை தன் அருகில் இழுத்து ஆறுதலாக அணைத்துக் கொண்டவன்,

“என்னை பெத்தவங்களாகவே இருந்தாலும் அவங்க மத்தியில் என் மனைவியோட மரியாதை அவளை விட எனக்கு முக்கியம். அதுக்கு ஒரு பங்கமும் வர நான் அனுமதிக்க மாட்டேன். எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டுடுவோ. விட்டுகொடுக்கவோ மாட்டேன். சரியா?…” என்றவன் தன்னவளின் உடல் லேசாக நடுங்குவதை உணர்ந்து இன்னும் இறுக்கிகொண்டான்.

“உன் பேர், உன் அப்பா அம்மா பேர் மட்டுமே சொன்னேன். நீ எந்த ஊர், என்ன செய்யற எதுவுமே சொல்லலை. பார்த்ததும் பிடிச்சது. அதான்  கல்யாணம் செய்துட்டேன். என் வாழ்க்கை முழுவதுக்கும் இந்த ஒரு கல்யாணம் தான்னு சொல்லிட்டு போய்ட்டேன். இனி இதை பத்தி யாருமே பேசவேண்டாம்னு கோவமா சொன்னதும் எல்லோருமே அப்போதைக்கு அமைதியா போய்ட்டாங்க. அத்தையும் தான் நினைத்தது நிறைவேறலைன்னு ரொம்பவே கோவமா கத்திட்டு போய்ட்டாங்க…” எனவும்,

“நிஜமாவே என்னை பார்த்ததுமே பிடிச்சதா?…” என்று கண்களில் தவிப்போடு கேட்டவளின் தலையை மெல்ல இடித்தவன்,

“சத்தியமா!!! இந்த வாயாடியை, கோவக்காரியை பார்த்ததுமே பிடிச்சிடுச்சு போல. என்ன ஒன்னு என்னோட மரமண்டைக்குதான் அது லேட்டா உரைச்சிருக்கு…” என்று முழுமனதோடு கூறி மனம் விட்டு சிரிக்கவும்,

“இப்போ சொன்னீங்க பாருங்க மரமண்டைன்னு அது ரொம்ப ரொம்ப சரி. இப்போ நம்பறேன்…” என்று அவனை வாரினாள். அதை ரசித்தவன் மேலே சொல்ல ஆரம்பித்தான்.

“அப்பாம்மா கூட அந்த பொண்ணை எதுக்கு கூட்டிட்டு வரலைன்னு கேட்டாங்க. நேரம் வரும் போது நானே கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டேன்….” அவங்களும் வேற வழியில்லாம அமைதியாகிட்டாங்க…”

“கோவமா கிளம்பி போன அத்தை அடுத்த நாலு நாள்ல திரும்ப வந்து பிரச்சனையை ஆரம்பிச்சாங்க. எங்கத்தை ஏற்பாடு செய்த கல்யாணத்தை மறுக்க காரணமா நான் கதை சொல்றேன்னு சொல்லி ஆர்ப்பாட்டம் செய்யவும் தான் எனக்கும் கோவம் வந்து …. வந்து…” என்று பாதியில் நிறுத்தி திருதிருவென திருட்டுமுழி முழிக்கவும்,

இழுத்த இழுவையில் அவனிடமிருந்து விலகியவள், “என்ன வந்து போயி? என்ன பண்ணுனீங்க சொல்லுங்க…” என்றாள்.

“அது…. சொன்னா திட்ட மாட்டியே…” என்று சொல்லும் போதே நா வரண்டுபோவது இப்போது இவன் முறையானது. நந்தினி குழப்பத்தோடும் சந்தேகத்தோடும் முறைக்க இனியும் தப்ப முடியாது என நினைத்தவன் தன் லேப்டாப்பை தயக்கத்தோடு எடுத்து அதை விட தயக்கமாக அதில் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து காண்பித்தான்.

அந்த புகைப்படத்தில் பிடிமானமில்லாமல் தடுமாறியபடி நின்று கொண்டிருந்த நந்தினியின் கண்களில் கண்ணீர் வற்றிப்போய் காய்ந்திருந்தது. அவளது கன்னத்தில் ஐந்து விரல்களும் பதிந்துபோய் கன்றி சிவந்து பிரசாத் அறைந்ததற்கான சுவடு அப்பட்டமாக தெரிந்தது. முகம் முழுவதும் கலக்கம் மட்டுமே சூழ்ந்திருந்தது.

உதயாவின் முகத்தில் அவசரமும் பரிதவிப்பும் மட்டுமே குடியிருந்தது. சிறிதும் சந்தோஷமில்லாத, கடுகளவும் உடன்பாடில்லாத அந்த திருமணப் புகைப்படம் இருவருக்குமே வலிகளை மட்டுமே தந்தது.

நந்தினிக்கு என்னவாறு உணர்ந்தாள் என்றே தெரியவில்லை. அதை பார்க்க பார்க்க விழிகள் அகன்றுகொண்டே போனது. அவளின் மோனநிலை பொறுக்காமல்,

“அருவியூர்ல யாரோ பசங்க அன்னைக்கு நடந்த கல்யாணத்தை  போட்டோ எடுத்தது ரெண்டு நாள் கழிச்சுதாண்டா எனக்கே தெரியும். அந்த ஊர்ல இருக்கும் என் ப்ரெண்ட் தான் இதை அனுப்பிவிட்டான். அதான் பத்தரமா வச்சிருக்கேன்…” என்று அதை மெதுவாக வருடியவன் நந்தினியின் முகம் பார்க்க அவள் கண்களில் கரகரவென கண்ணீர் வழிந்தது.

“ஒரு பொண்ணா மனோபலமும், உடல்பலமும் இல்லாததால தானே, என்னால உன்னை எதிர்க்க முடியாதுன்ற ஆம்பளைங்கிற திமிர் தானே உன்னையும், அவனையும் அப்டிலாம் செய்ய வச்சது?…” என்று அதுவரை எழிலாக இருந்தவள் எரிமலையானாள்.

“ப்ளீஸ்டா. புரிஞ்சுக்கோயேன்…” என்றாவது குரலில் போராடிக்களைத்த மன்றாடல் வந்திருந்தது.

என்ன நினைத்தாளோ பின் அமைதியாக தன்னவனின் நெஞ்சத்தில் சாய்ந்துகொண்டவள் எதுவுமே பேசவில்லை.

“வேணி அத்தைக்கிட்ட ஆதாரமா இந்த போட்டோவை காட்டினேன். எல்லோருக்குமே ஷாக் நாம ரெண்டு பேருமே அதில் இருந்த கோலம். என்ன நடந்ததுன்னு கேட்டவங்க கிட்ட என்னனு பதில் சொல்லுவேன். எனக்கு பிடிச்சது. அதான் கல்யாணம் செய்துக்கிட்டேன்னு சொன்னேன். அப்போ கட்டாய கல்யாணமான்னு கேட்டாங்க. எங்கே உளறிருவேனோன்னு பயத்துல இதுக்கு மேல முடியாதுன்னு வெளியூர் கிளம்பிட்டேன்…” என்றவன் ஒரு பெருமூச்சோடு,

“அதுக்கப்றமா யாருமே இதை பத்தி கேட்கமாட்டேன்னு சொன்னதும் தான் திரும்ப இங்க வந்தேன். அப்பாவும் அத்தைக்கிட்ட நந்தினிதான் இந்த வீட்டு மருமக. உன்னோட அசிங்கமான நினைப்பை மூட்டை கட்டிடுன்னு சொல்லிட்டாங்க. அத்தையால அதன் பின்னால இதை பத்தி நேரடியா பேசாட்டிலும் மறைமுகமா பேசத்தான் செஞ்சாங்க. ஆனா நான் பிடிகொடுக்கலை…” என்றவன் அனுபவித்த கஷ்டங்களை அவன் வாய்மொழியாக கேட்ட பின்னும் அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ குடைந்தது.

எப்போதோ கேட்க நினைத்த விஷயம் திடீரென பளிச்சென ஞாபகம் வந்தது.

“நான் ப்யூட்டீஷியன் கோர்ஸ் படிச்சது, எங்க ஊர், எனக்கு கல்யாணம் நடக்க இருந்தது, இதெல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும்?. எங்கப்பா அன்னைக்கு அங்க வச்சு உங்ககிட்ட எங்களை பத்தி எந்த தகவலும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்கலாமே?…” என கேட்டு அவன் கண்களுக்குள் பார்த்தாள்.

முதலில் தயங்கியவன் தலைக்குமேல போய்டுச்சு இனி என்னானா என்ன? என்று எண்ணிக்கொண்டே, “அது அருவியூர்ல நீங்க கிளம்பவுமே என் ப்ரெண்ட் கிட்ட சொல்லி அவங்க ஊர் பையனை அனுப்பி உங்க வண்டியை தொடர்ந்து போக சொன்னேன். அப்படிதான் உங்க ஊரை கண்டுபிடிச்சேன்…” என்று தலை கவிழ்ந்தவாறே சொன்னான்.

அவனது பதிலில் படாரென கட்டிலை விட்டு இறங்கியவள் விழியே தெறித்துவிடும் அளவிற்கு அவனையே பார்த்திருந்தாள்.

“அப்போ நான் படிச்சது? கல்யாணம்?…” என்று ஒற்றை வார்த்தையில் உயிரை தேக்கி வைத்து நிராசையோடு பார்த்தாள். அந்த பார்வையில் தான் குறுகிப்போய்விட்டான்.

“மகிமா…” என்ற ஒற்றை வார்த்தையில் சகலமும் விளங்கியது நந்தினிக்கு. உயிரற்றுபோன உடலென மடிந்தமர்ந்தவள் இப்போது அழுகவில்லை. அரற்றவில்லை. ஆனால் உள்ளுக்குள் துவண்டு போய் துடித்தாள்.

“எல்லாமே தெரிஞ்சும் ஏண்டா?…” என்று கேட்ட நொடியில் எழுந்துபோய் அவளை அணைத்தவன் பதில் சொல்லாமல் இன்னுமின்னும் தன்னுள் ஆழ புதைத்துகொண்டே போனான்.

முன் கேட்டதுபோல வார்த்தையால் அவளிடம் மன்னிப்பை கேட்கவில்லை. அவனது உடலின் ஒவ்வொரு அணுவும் அவளிடம் மன்னிப்பை யாசித்தது. வெகுநேரத்திற்கு பிறகும் அணைப்பை தளர்த்தாததால் தானே அவனிடமிருந்து விலக நினைத்தாள்.

அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவன் போல அவனை தள்ளி நிறுத்தியவன்,

“நந்துமா…” எனவும் கையமர்த்தி தடுத்தவள்,

“தயவு செய்து எதுவுமே பேசாதீங்க. நடந்து முடிஞ்சதை பேசறதால எந்த விதமான பிரயோஜனமும் இல்லைதான். ஆனாலும் மனசு அதை ஏத்துக்க மறுக்குது. மன்னிப்பு அப்டின்ற வார்த்தைக்கு மதிப்பில்லை. நான் உங்களுக்காக வார்த்தையால பொய்யா மன்னிச்சிட்டு மனசுக்குள்ள மருக தயாரா இல்லை…” என்றவளை தணலாக தகிக்கும் இதயத்தோடு பார்த்தான்.

“ஆனா கொஞ்சம் கொஞ்சமா இந்த சூழலால் என் மனசு மாறும்னு நினைக்கேன். அப்போ நான் சொல்லாமலேயே என்னை நீங்க புரிஞ்சுப்பீங்க. இப்போ ப்ளீஸ்…” என்று கைகூப்பவும் சுத்தமாக உடைந்துவிட்டான்.

மேலும் எதுவும் பேசி அவளின் காயத்தை அதிகமாக்காமல் தன் கண்களில் உடைப்பெடுக்க தயாராக இருந்த கண்ணீரை கட்டுப்படுத்தியவன் அமைதியாக அவளை தயக்கமாக நெருங்கினான்.

“வா. வந்து தூங்கு…” என்று அழைத்து வந்து படுக்க வைத்து தன் கையணைப்பில் கொண்டு வந்து தன்னவளின் சிகையை வருடினான்.  இன்று ஏற்பட்ட மன உளைச்சலாலும், அதுவரை இருந்த அலைப்புருதலாலும் அந்த இதமான வருடலில் தானாகவே கண்ணயர்ந்தாள்.

தனக்காக அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும்  சின்ன சின்ன அசைவிலும் கூட தன் மீதான அவனது காதலை உணர்த்திய  கணவனை மன்னிக்க எண்ணினாலும், முன்பு அனுபவித்த சங்கடங்கள் அனைத்துமே அவனால் தானே என்றும் ஒரே சேர தோன்றி உண்மை அவளை உலுக்கியது.

அவன் மீது மனதில் வருத்தமும் ஏமாற்றமும், இப்படி செய்துவிட்டானே என்ற மனத்தாங்கலும் இருந்தாலும் அவனை தள்ளி வைக்கவுமில்லை. அவளின் ஆழ்மனதில் உள்ள ஏதோ ஒன்று அவனை விட்டு விலகாமல் அவளை பிணைத்து வைத்தது.

எதிர்காலம் தன் வாழ்க்கையில் அடுத்து என்ன நிகழ்த்த இருக்கிறதோ அது போக்கில் வாழ எண்ணினாள். அனைத்தும் சரியாகி தன் மணவாழ்வு சீராகவேண்டும் என்ற வேண்டுதலோடு தூங்கினாள். 

தன் அருகாமையையும் தொடுகையையும் தடுக்கவில்லை என்பதே உதயாவிற்கு ஒருவித நிறைவை தந்தது. இந்த அளவிற்காவது அனுமதிக்கிறாளே என்ற நிம்மதியோடும், அனைத்தும் விரைவில் சரியாகி வாழ்வில் வசந்தகாலம் கைகூடும் என்ற நம்பிக்கையோடும் தானும் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

இருவரும் சஞ்சலத்தையும், போராட்டத்தையும் காலத்தின் கையில் கொடுத்துவிட்டு உறக்கத்தின் பிடிக்குள் தங்களை திணித்த நேரம் சூரியன் உதயமானான்.

அவர்களின் சந்தோஷமான எதிர்காலத்திற்கான விடியல் தான் எப்போது விடியுமோ?

Advertisement