Advertisement

நட்சத்திர விழிகள் – 17
உதயா சென்றவுடன் தனக்குள் எழும்பிய ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடையை தேடியவளின் தேடல் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே இருந்ததில் ஆயாசமடைந்தவள் இப்படியே யோசித்துகொண்டிருந்தால் பைத்தியமாகிவிடுவோம் என்று எண்ணி கீழே செல்ல ஆயத்தமானாள்.
குளித்து முடித்த பின் தான் உற்சாகமாக இருப்பது போல உணர்ந்தவள் வேகமாக கீழே சென்றாள். எத்தனை நாளாகிற்று கீழே வந்து என நினைத்துக்கொண்டே பூஜையறைக்குள் நுழைந்து விளக்கேற்றி சாமி கும்பிட்டாள்.
கீழே அவளின் நடமாட்டம் தெரியவும் நாச்சி வந்துவிட்டார் அவளை நோக்கி.
“என்னடாம்மா, இருட்டப்போற நேரத்துல இப்டி குளிச்சிட்டு வந்திருக்க? மறுபடியும் உடம்புக்கு ஏதும் வரப்போகுது?…” என்றார் அக்கறையாக.
“இல்லை பாட்டி. ரொம்ப அசதியா தெரிஞ்சது. அதான் ஒண்ணுமில்லை. நான் நல்லாதானே இருக்கேன்…” என்று அவரை சமாதானப்படுத்தவும் உதயா தோட்டத்திலிருந்து உள்ளே வரவும் சரியாக இருந்தது.
எப்போதும் போல நாச்சியுடன் உரையாடிக்கொண்டிருந்தவளை பார்த்து இரு புருவங்களை உயர்த்தி தலையிலிருந்து பாதம் வரை நோட்டம் விட்டவன்,
“அம்மா…” என கத்தினான்.
அவனது சத்தத்தில் கௌரியின் அறையில் அவளோடு வேலையாக இருந்தவர் என்னவோ ஏதோவென பதறியடித்து ஓடிவந்தார் பாக்கியம். அவரின் பின்னாலேயே கௌரியும்.
“என்னப்பா பிரபா? ஏன் சத்தம் போட்ட?…” என கேட்கவும் கண்ஜாடையில் நந்தினியை காண்பித்தான்.
இவன் கத்தலில் கலவரமான நந்தினியையும், எதற்காக இந்த சத்தம் என்று அவனை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த நாச்சியையும் ஏறிட்டவர் அவர்களை பார்த்து புன்னகைத்தார்.
“நந்துமா, இப்போ எப்டிடா இருக்கு? ஏன் இந்நேரம் குளிச்ச? மறுபடியும் சேராம போய்டுமே?…” என்று நாச்சி கேட்ட அதே கேள்வியை தானும் கேட்டார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா. நீங்க கவலை படாதீங்கம்மா…” என்று அவரது பயத்தை போக்க கூறினாள்.
“இருந்தாலும் நீ இந்நேரம் குளிச்சிருக்க கூடாது. நான் சொல்றது சரிதானே கெளரி? நீங்க  என்ன சொல்றீங்க அத்தை…” என  விடாப்பிடியாக அவர்களையும் இழுத்து வைத்து பாக்கியம் கேட்கவும்,
கௌரியும், “ ஆமாமா, அண்ணி நீங்க செஞ்சது பெரிய தப்பு…” என தன பங்குக்கு சொல்லிவைத்தாள்.
“ப்ளீஸ்மா, விட்ருங்களேன்…” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சலுகையாக சிணுங்கினாள். 
அவளின் பாவங்களை ரசித்துக்கொண்டே, “இதை வந்து கேட்க சொல்லிதான் கூப்ட்டேன். போதுமா?…” என கூறியவன் கௌரியிடம் நந்தினிக்கு சூடாக பால் எடுத்து வர சொன்னான்.
“ஏண்டா அதைத்தானே நானும் கேட்டேன்? உங்கம்மா வேற வந்து கேட்கனுமாக்கும்?. நீ இருக்கியே?…” என்று பேரனின் காதை பிடித்து திருகினார்.
“ஏய் கிழவி, என்னத்தை கேட்ட நீ? என்ன இருந்தாலும் அம்மா வந்து கேட்ட மாதிரி இருக்குமா?. அதுவுமில்லாம இப்டி நீ என்கிட்டே சண்டை போட்டு எத்தனை நாள் ஆச்சு கிழவி. அதுக்கும் சேர்த்து தான்…”என நாச்சியின் காதில் கிடந்த தண்டட்டியை பிடித்து ஆட்டியபடி  பழைய உதயாவாக வம்பு வளர்த்தான்.
அதில் அனைவரும் கலகலத்து சிரித்ததில் பழைய சந்தோஷம் மீண்டிருந்தது அக்குடும்பத்தில்.
அனைத்தையும் மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த வேணிக்கு கபகபவென வயிறெரிந்தது.
“சிரிப்பை பாரு சிரிப்பை. பெரிய மகாராணி வந்துட்டாளாக்கும். சந்தோஷம் தாண்டவமாடுதே?  இனி இதுங்களை கைல பிடிக்க முடியுமா?…” என கரித்துக்கொட்டியவர்,
“யாருக்கு யாரு வேலை பார்க்கிறது. கெளரி என்ன வேலைக்காரியா? என் பொண்ணை இப்டி கொடுமை படுத்துறாங்களே?…” என்று அங்கலாயித்தவர் விடுவிடுவென கீழே வந்தார்.
வேணி வந்தவுடன் நந்தினியின் அருகில் சென்றவர்,
“ஏண்டியம்மா, ஏற்கனவே உனக்கு முடியாத உடம்பு. லேசா தும்மினா கூட முடியலைன்னு நீ படுத்துக்குவ. மறுபடியும் இழுத்துவச்சு படுத்துக்கவா இந்நேரம் குளிச்சிட்டு வந்த? அது சரி உனக்கு பண்ணையம் பார்க்கத்தான் இத்தனை பேரு இருக்காங்களே? அந்த தைரியம் தானே?…” என அவளை நோயாளி என சொல்லாமல் சொல்லிக்காட்டிவிட்டதில் ஒரு வெற்றி பார்வை பார்த்தார் நந்தினியையும் உதயாவையும்.
அவரது பார்வையை எதிர்க்கொள்ளும் விதமாக மிக மிக இகழ்ச்சியான பார்வையொன்றை சளைக்காமல் தன் விழிகளில் பிரதிபலித்தாள் நந்தினி.
நந்தினியின் பின்னால் அனைவரும் நின்றிருந்ததால் யாருக்கும் அவளது பார்வை மாற்றம் தெரியவில்லை. ஆனால் அவளின் பக்கவாட்டில் நின்றிருந்த உதயாவிற்கு அதற்கான அர்த்தம் நன்கு விளங்கியது.
“இந்த அத்தை வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம நல்லா வாங்கிக்கட்டிக்க போகுது…” என நினைத்தவன் எதையும் தடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்தான்.
இத்தனை நாள் நனைந்த கோழியாய் நடுங்கியவள் இப்போது சிறிதும் பயமில்லாமல் தன்னை எதிர்கொண்டு தீர்க்கமாக பார்க்கிறாளே என்ற யோசனையோடு உதயாவை பார்த்தார் வேணி. அவனோ இவரை கண்டுகொள்ளவே இல்லை.
நாச்சிக்கு அதற்கு மேல் பொறுக்கவே முடியவில்லை. நந்தினி காய்ச்சலில் விழுந்ததிலிருந்தே வேணியின் ஜாடைப்பேச்சு அளவுக்கதிகமாகிக் கொண்டே போனது. இன்று நந்தினியின் முன்னாலும் அதே போல பேசவும் தன் பொறுமையை கைவிட்டுவிட்டார்.
“ஏன் வேணி, அவளே இப்போதான் நல்லபடியா எழுந்து வந்திருக்கா. இப்போ போய் இப்டி அறிவில்லாம பேசறியே? மாடு மாதிரி வளர்ந்ததுதான் மிச்சம். எங்க என்ன பேசணும்னு தெரியாது. யார்க்கிட்ட எப்படி நடந்துக்கனும்னும் தெரியாது உனக்கு. வர வர உன் புத்தியே சரியில்லை. நடந்துக்கிறது எல்லாமே ஏடாகூடமா இருக்கு. இன்னொருக்க இப்படி பேசிப்பாரு, அன்னைக்கு வச்சிக்கறேன் உன்னை…” என்று எச்சரிக்கும் விதமாக நாச்சி பொரிந்து தள்ளிவிட்டார். 
மேலும் ஏதோ பேச வாயெடுத்த நாச்சியை பாக்கியம் தான் சமாதானப்படுத்தி அமரவைத்தார். வேணியின் பேச்சில் தனக்கும் வருத்தம் தான். இருந்தாலும் அனைவரின் முன்னாலும் நாச்சி இப்படி வேணியை பேசியதில் பாக்கியத்திற்கு சிறிதும் உடன்பாடில்லை. வேணியை இயலாமையோடு பார்த்த பாக்கியம் அனைவருக்கும் குடிக்க ஏதேனும் எடுத்து வரலாமென உள்ளே சென்றுவிட்டார்.
வேணிக்கோ யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. நந்தினியின் முன்னால் இப்படி பேசிவிட்டாரே தன் தாய் என்று கொலைவெறியோடு அவரை நோக்கியவர் நொந்தேவிட்டார்.
நாச்சி பக்கத்தில் அமர்ந்திருந்த நந்தினியின் மேல் தன்னையறியாமல் பார்வையை செலுத்தியவர் அவளின் செய்கையால் உடனடியாக அவளை துவம்சம் செய்துவிடும் அளவிற்கு உக்கிரமானார்.
அவர் அவளை பார்க்கும் போது நந்தினி சிரிப்பை அடக்க படாதபாடு பட்டவாறே தன்னை எள்ளலாக பார்த்துகொண்டிருந்தாள். அதுவே அவருக்கு பெரும் அவமானமாக போய்விட்டது. உதயா நந்தினியை அமைதியாக இருக்குமாறு ஜாடை காண்பித்தது கூட அவருக்கு தவறாகவே பட்டது.
தன் அதிகாரத்தை தற்போது நிலைநாட்ட வேண்டுமென நினைத்து, “வள்ளி. ஏய் வள்ளி…” என ஆங்காரமாக அழைத்தார்.
அவரது செயலில் மீண்டும் கோவமுற்ற நாச்சி வாயை திறக்க விழைய நந்தினி கைகளால் அழுத்தம் கொடுத்து தடுத்துவிட்டாள். அதை பார்த்த வேணி இன்னும் உள்ளுக்குள் பொருமினார்.
“என் அம்மாவையே கைக்குள்ள போட்டுக்கிட்டு என்னவெல்லாம் மாய்மாலம் பன்ற. உனக்கு ஆப்பு வைக்கத்தானே ஒருத்தியை கொண்டுவந்திருக்கேன். இப்போ பாரு…” என்று இறுமாப்புடன்  நினைத்துக்கொண்டே அடுக்களையை நோக்கி பார்வையை செலுத்தினார்.
வள்ளியோ சாகாவாசமாக வந்து நேரே நந்தினி புறம் சென்றாள். கையில் கொண்டுவந்த பாலை கொடுத்துவிட்டு, “நந்தினிம்மா இந்த பால்ல மிளகு தட்டிப்போட்டு பனங்கற்கண்டு மஞ்சள் தூள் கலந்து கொண்டு வந்திருக்கேன். கொஞ்சம் இதமா இருக்கும். ஜலதோஷத்துக்கு நல்லது…” என கூறிவிட்டு புன்னைகைத்தாள். நந்தினியும் ஸ்நேகத்தோடு பதிலுக்கு முறுவலித்துக்கொண்டே அதை வாங்கிகொண்டாள்.
இருவரது சிரிப்பில் வேணி தான் பொசுங்கிவிட்டார். “இவ யாருக்கு வேலை பார்க்க வந்திருக்கா? கூப்பிட்டது நானு? பணிவிடை அவளுக்கா? இவளை இப்படியே விடகூடாது…” என எண்ணியவராக,
“ஏய் வள்ளி, உன்னை கூப்பிட்டது நானு. என்னன்னு வந்து என்க்கிட்ட கேட்காம எவ்வளோ திண்ணக்கம் உனக்கு?…”என்று வசைபாட அதற்கு வள்ளியோ பயந்தது போல பவ்யமாக நின்றாள். வள்ளியை உள்ளே போக சொன்ன நாச்சி,
“ஏன் வேணி நீ திருந்தவே மாட்டியா? உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் தலையில ஏறாதா?. ஆண்டவன் தலையில மூளைக்கு பதிலா மண்ணையா வச்சிருக்கான்?…” என்று மிக கடுமையாக கேட்டதும் அதற்கு மேல் தாங்க முடியாமல் வேகமாக எழுந்து மாடிக்கு சென்று விட்டார்.
சிற்றுண்டி எடுத்து வந்த பாக்கியமும் கௌரியும் அவர் செல்வதை பார்த்துக்கொண்டே வந்து கொண்டு வந்ததை மேஜையில் பரப்பிவிட்டு ஒரு பெருமூச்சோடு அமர்ந்தனர்.
கெளரி, “ஏன் லக்ஷ்மிம்மா? இந்த வேணிம்மா ஏன் இப்டி இருக்காங்க? வரவர அவங்க போக்கும் பேச்சும் எனக்கு பிடிக்கவே இல்லை…” என சொல்லவும் கௌரியை அதட்டினார் பாக்கியம்.
“அவங்க உன்னோட அம்மா, வயசுல பெரியவங்க இல்லையா?, இனி அப்டிலாம் பேசக்கூடாது. புரியுதா?…” என்று சிறிது கண்டிப்பு கலந்த அன்பான குரலில் கூறினார்.
சிறிது நேரத்தில் தேனீர் எடுத்து வந்த வள்ளி அனைவருக்கும் கொடுத்துவிட்டு வேணிக்கு எடுத்து செல்லும் போது நாச்சி தடுத்தார்.
“வேண்டாம்மா வள்ளி. அவ ரொம்ப கோவத்துல இருக்கா, ஏதாவது சொல்லிட போறா…” எனவும் மிதமான புன்னகையை சிந்திவிட்டு,
“அதனால என்னங்க பாட்டிம்மா?, பரவாயில்லை…” என கூறி மேலே சென்றாள்.
“பாரு லட்சுமி, இந்த புள்ளையை போய் வாய்க்கு வந்தபடி பேசறாளே இந்த வேணி. என்னைக்குதான் நல்லபுத்தி வருமோ?…” என வருத்தமாக கூறினார்.
மேலே சென்ற வள்ளி வேணியின் அறைக்கதவை தட்டவும் சிறிது நொடிகளில் படாரென திறந்தார். வள்ளியை பார்த்ததும் இன்னும் உஷ்ணம் ஏறியது அவருக்கு. கையில் வைத்திருந்த தேனீரை பார்த்தவர்,
“இப்போ இதுக்கு ஒண்ணுதான் குறைச்சல்? எடுத்துட்டு போய்டு, இல்லை கண்டபடி பேசிடுவேன்…” என கடித்து குதறாத குறையாக பேசிவிட்டு கதவை அடைக்க எத்தனிக்க அவரை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள் வள்ளி.
வள்ளியின் திடீர் செயலில் ஸ்தம்பித்து நின்றதோ ஒரு நிமிடமே. கோவத்தில் கண்கள் சிவப்பேற, “என்ன தைரியம் உனக்கு? என் அனுமதி இல்லாம என்னோட ரூம்க்குள்ள வர அளவுக்கு நீ துணிஞ்சிட்டியா? இப்போவே உன்னை வேலையை விட்டு தூக்கறேன் பாரு…” என சூளுரைத்தவரை பார்த்து சிரித்த வள்ளியை எரித்துவிடுவது போல பார்த்தார் வேணி.
“போ, போய் சொல்லித்தான் பாரேன். அடுத்த நிமிஷம் நீயும் இந்த வீட்ல இருக்க மாட்ட…” என்று வள்ளி மிரட்டிய மிரட்டலில் வேணிதான் மிரண்டு போனார்.
“இப்போவே நான் போய் சொல்லுவேன். நான் ஏன் இந்த வீட்டுக்கு வந்தேன்? யார் என்னை இங்க வரவழைச்சது? எதுக்காக வந்தேன்னு. சொல்லவா?…”என்று நிதானமாக கேட்டதும் வேண்டாம் என்பது போல மறுப்பாக தானாகவே தலையை ஆட்டினார்.
“ம்ம் அந்த பயம் இருக்கட்டும். சும்மா சும்மா என்கிட்ட வந்து அதை செய், இதை செய்ன்னு என்னை உயிரெடுத்த அவ்வளோதான். உனக்கு குடுக்குற டீ, காபில பேதி மருத்தை கலந்து குடுக்க எனக்கு எவ்வளோ நேரம் ஆகும்னு நினைக்க? ஜாக்கிரதை…” என கூறிவிட்டு மெதுவாக அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.
அவள் சென்றதும் பேயறைந்தது போல இருந்த வேணி உடனே போனில் பிரசாத்தை தொடர்புகொள்ள முயன்று அழைக்க அவனோ அவரது அழைப்பை நிராகரித்து விட்டான். மொத்தமும் முடிந்தது போல தோன்றியது வேணிக்கு.
இனி தான் நினைத்தது எதுவுமே அவர்கள் மூலம் நிறைவேறாது என தெளிவாக புரிந்துகொண்டார். கெளரி கல்யாணம் மட்டும் முடியட்டும் அதன் பின்னால மொத்தமாக எல்லோருக்குமே முடிவு கட்டிடலாம் என்ற தீர்மானத்திற்கு வந்த பின் தான் அவரால் அமைதியடைய முடிந்தது.
வள்ளி கீழே இறங்கி வருவதை பார்த்த நாச்சி, “என்னமா ஏதாவது சத்தம் போட்டாளா?…” என பரிதாபமாக கேட்டதும்,
“அதெல்லாம் இல்லைங்க பாட்டிம்மா. அவங்களும் என்னோட முதலாளியம்மா தானே. அவங்க பேசினா நான் பொறுத்துக்க மாட்டேனா? நீங்க வருத்தபடாதீங்க பாட்டிமா…” என கூறிவிட்டு மேலும் அங்கே நின்றால் இன்னும் எதுவும் கேட்பாரோ என நினைத்து அங்கிருந்து அகன்றுவிட்டாள்.
“இந்த வள்ளி எவ்வளோ நல்ல புள்ளையா இருக்கா தானே பாக்கியம்?…” என நாச்சி தன் மருமகளிடம் கூறவும் அனைவரும் அதை ஆமோதித்தனர்.
உதயா பாக்கியத்தின் புறம் திரும்பி, “ஏன்ம்மா நான் கூப்பிடும் போது எதுவும் முக்கியமான வேலையாவா இருந்தீங்க?…” என கேட்டதும்,
“ஆமாம் பிரபா. நம்ம கெளரி கல்யாணத்துக்கு இன்னும் முழுசா ரெண்டு மாசம் கூட இல்லைல. அவளுக்கு குடுத்துவிட என்னென்ன துணிமணி இப்போ இருக்கு, என்னவெல்லாம் புதுசா எடுக்கணும்ன்னு பார்த்திட்டு இருந்தோம். வேறொன்னும் இல்லை…” என்றார்.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் பின் முடிவெடுத்தவனாக நாச்சியிடம் பேசிக்கொண்டிருந்த நந்தினியை ஊன்றி கவனித்துக் கொண்டே,
“ம்ம் . ஓகேம்மா. நீங்க போய் பாருங்க. நானும் தனம் சித்தி வீட்டு வரைக்கும் போய்ட்டு வரேன். மதியமே வர சொல்லிருந்தாங்க…” என்றவனின் பார்வை மட்டும் நந்தினியிடமே நிலைத்திருந்தது.
அவளின் முகபாவனைகளை பார்த்தவனுக்கு எதுவுமே வித்யாசமாக தோன்றவில்லை. “என்னடா இது, அங்க போறேன்னு சொன்னா குறஞ்சபட்சம் ஒரு முறைப்பாவது இருக்கும்னு பார்த்தேன். கோவத்தை கூட காட்டாமல் சாதாரணமாக இருக்கிறாளே?…” என நினைத்துகொண்டிருந்தவனின் சிந்தனையை கலைத்த நாச்சி,
“என்னைய்யா ராசா? இன்னேரமா போற? தனம் எதுக்காக வர சொன்னா?…” என குறுகுறுவென அவனையே பார்த்தார் நாச்சி. அவனும் தனமும் பேசியதை கேட்டவராகிற்றே.
முதலில் தடுமாறியவன், “அன்னைக்கு நந்தினி திடீர்னு மயங்கிட்டதால சித்தி எடுத்து வச்சிருந்த சீர் எதையும் வாங்காம வந்திட்டோம்னு அவங்களுக்கு ரொம்ப வருத்தம். அதான் வந்து வாங்கிட்டு போக சொன்னாங்க. நந்துவையும் வர சொன்னாங்க. நான்தான் இன்னொரு முறை பார்த்துக்கலாமேன்னு சொல்லிட்டேன்…” என சொல்லி முடித்து கிளம்புவதாக சொல்லிக்கொண்டு நந்தினியை தன் கண்ணசைவில் வெளியே வர சொல்லி தான் முன்னால் சென்றான்.
நாச்சி நந்தினியின் முகத்தை ஆராய்ந்தார். அவளின் இயல்பான பாவனையில் தனக்குள் குழம்பியவர் நடப்பது நடக்கட்டும் என விட்டுவிட்டார்.
உதயாவை பின் தொடர்ந்து நந்தினியும் எழுந்து செல்லவும் பாக்கியத்தோடு தானும் கௌரியின் அறைக்குள் நுழைந்துவிட்டார் நாச்சி.
வாசலுக்கு சென்றவன் திரும்பி பார்க்கையில் நந்தினி மட்டுமே தன்னை நோக்கி வருவதை கண்டு உள்ளே எட்டிப்பார்த்தால் ஹாலில் யாரும் இல்லை. ஒரு நிம்மதி பெருமூச்சோடு நந்தினியை பார்த்தான்.
“எதுக்கு கூப்பிட்டீங்க?…” என்ற அவளின் கேள்வியில் ஆழந்த பார்வையொன்றை அவள் மீது செலுத்திவிட்டு,
“நான் தனம் சித்தி வீட்டுக்கு போய்ட்டு வரேன்…”
“ம்ம். போய்ட்டுவாங்க. நான் வேண்டாம்னு சொல்லவே இல்லையே?…” என்றாள் கூலாக. “இவளை புரிஞ்சுக்கவே முடியலையே…” என குமைந்தவன்,
“ப்ச், நந்து. அவங்க எதுக்கு வர சொல்லிருக்காங்கன்னு தெரியுமா உனக்கு?…” என்றான் சலிப்பான குரலில்.
“ம்ம். நீங்க அவங்களோட பேசினதை வச்சே ஓரளவுக்கு தெரிஞ்சுக்கிட்டேன்…”
“அருவியூர்ல நடந்ததை பத்தி தெரிஞ்சுக்க கூப்பிடறாங்கன்னு தெரிஞ்சும் உன்னால எப்படி அமைதியா இருக்க முடியுது?…” என திரும்ப வளைத்து வளைத்து கேள்வி கேட்டதில் சலிப்பான நந்தினி,
“அதுக்கு என்னை என்ன செய்ய சொல்லுற?, உன்கிட்ட கேட்டாங்கன்னா சொல்லு…” என மிக சாதாரணமாக கூறவும் கொதித்து விட்டான்.
“ஏய். அப்போ நான் சொல்றதை பத்தி உனக்கு ஒண்ணுமே இல்லை அப்டி தானே?…” என்று கோவத்தில் அவளின் தோளை பற்றி உலுக்கவும் அந்த வலியிலும் முகம் மாறாமல் அவனின் விழிகளுக்குள் ஊடுருவியவள்,
“எனக்கு உதய் பிரபாகரனை பத்தி எதுவுமே தெரியாது. தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் இல்லை….” என நிதானமாக கூறியதில் புரியாமல் விழித்தவனை பார்த்து,
“ஆனா என் புருஷனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். என்னை, என் மனசை அறிந்தவனும், புரிந்தவனும் இந்த உலகத்துல என் புருஷனை தவிர வேற யாருமே கிடையாதுன்னு நம்பறேன். அவன் பொண்டாட்டி விஷயத்துல எதை செய்யணும், எதை செய்ய கூடாதுன்னு அவனுக்கு நல்லாவே தெரியும். இதுக்கு மேலையும் என் கிட்ட வந்து இப்படி கேட்கலாமா மிஸ்டர் மரமண்டை?…”என்றவளின் நகைப்பில் முதலில் திகைத்தவன் பின் அவள் கூறியதன் பொருளுணர்ந்து தானும் அவளோடு சிரிப்பில் கலந்துகொண்டான்.

Advertisement