Advertisement

மின்னல் – 32
            அன்று அஷ்மியின் கல்யாணத்திற்கு முகூர்த்தக்கால் ஊன்றும் வைபவம். அதிரூபன் குடும்பம் மொத்தமும் ராஜாங்கம் வீட்டில் இருந்தனர்.
வெளி ஆட்கள் யாரையும் அழைக்காமல் மிக சுருக்கமாக வீட்டினரை வைத்தே முடித்துக்கொள்ளலாம் என அகிலாவின் யோசனைப்படி அனைத்தும் நடந்தேறியது. அஷ்மியின் திருமணம் முழுவதும் பத்மினி, அகிலா சொல்வதை கேட்டுத்தான்.
அவர்கள் இருவரும் அஷ்மியின் அத்தைகளாக, அவளை பெறாத தாயாக நின்று அனைத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினர். இதன் மூலம் அகிலாவும், பத்மினியும் இன்னமும் நெருக்கமான தோழிகளாய் அவர்களறியாமலே மாறிக்கொண்டிருந்தனர்.
சின்ன சின்ன விஷயங்களை கூட ஒருவரை விட்டு ஒருவர் கேட்காமல் ஒன்றாக கலந்துகொள்ளாமல் செயல்படுத்தியது கிடையாது. அந்தளவிற்கு அவர்களின் அன்பு பலமாகிக்கொண்டே வந்தது.
பூரணி இன்னமும் அப்படியே தான் இருக்கிறார். அவரின் மனம் முழுவதும் வைத்தியநாதனின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்கிற ஆற்றாமை மட்டும் இன்னும் அவருக்குள் தீயாய் தகித்துக்கொண்டிருந்தது.
இன்னமும் அவர் செய்தது எத்தனை பெரிய தவறென்று அவர் உணரவே இல்லை. ஒரு பெண்ணாய் சக மனுஷியாய் அகிலாவிற்கு தான் இழைத்த துரோகம் இன்னமும் அவருக்கு புரியவே இல்லை.
இப்போது மட்டுமல்ல அவரின் எண்ணவோட்டத்திற்கும் மனதிற்கும் எப்பவும் இப்படியே தான் இருப்பார். சிலரின் பிறப்பு குணங்களை மாற்ற இயலாது. வைத்தியநாதனும் சரி அன்னபூரணியும் சரி அப்படிப்பட்டவர்கள் தாம்.
ரத்தினசாமி மகன், பேத்தி இவர்கள் மேல் கொண்ட பாசம் மட்டுமே அவரை அடுத்த கட்டத்திற்கு இட்டு சென்றது.
முதலில் தங்கையிடம் எத்தனையோ முறை மன்றாடியவர் பின் பூரணியின் ஒதுக்கத்தில் சிறிது நாள் மனமுடைந்து தான் இருந்தார். வெகுநாட்கள் அப்படி இருக்க முடியாது அல்லவா? பூரணிக்கு அவரின் மொத்த வாழ்க்கையும் இருண்டது.
ஆனால் ரத்தினசாமிக்கு அதையும் தாண்டி தன் குடும்பம், மனைவி பிள்ளைகள், பேத்தி என இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அது அவரை மீள செய்தது.
ரத்தினசாமி அகிலாவிடம் நடந்துகொண்டதற்கு முழுமுதற் காரணம் பூரணி மட்டுமே. எத்தனையோ முறை நினைத்திருப்பார் பூரணி வைத்தியை திருமணம் செய்யாமல் வேறு ஒருவரை முடித்திருந்தால் அனைவருக்குமே நிம்மதியாக போயிருக்கும் என்று.
ஆனால் அதை வெளியில் சொல்லிவிட்டால் அவர் ரத்தினசாமி அல்லவே. தங்கைக்காக மட்டுமே வைத்தியை ஏற்றார். தங்கைக்காக மட்டுமே அகிலாவின் வாழ்க்கையில் அவரின் பார்வை, செயல்பாடுகள் அனைத்தும் மாறிப்போனது.
என்னதான் அரசியலில் ஆயிரம் தகிடுதத்தம் செய்தாலும் குடும்பம் என்று வரும் பொழுது அவர் முற்றிலும் வேறு ஒருவராய் ஆகிவிடுவார். ஆனால் அளவுக்கு மீறிய தங்கையின் பாசம், தங்கையே அவரின் பாசத்தை பயன்படுத்திக்கொண்டது தெரியாமல் அகிலாவின் வாழ்க்கையை பந்தாடியது என அவர் நினைக்காமல் இல்லை.
சோழியை சுழற்றினால் சுழல்வது போல ரத்தினசாமியின் பாசத்தை வைத்து தன் வாழ்க்கையை மாற்றி அகிலாவின் வாழ்க்கை பாதையை மாற்றிய குற்றவுணர்வு சிறிதும் இன்றி இன்றும் இருக்கிறார் அகிலாவின் மீது பெரும் கோபத்துடன்.
“உங்க தங்கச்சியை சொல்றேன்னு நீங்க கோபப்பட்டாலும் சரிங்கப்பா. ஆனா இதை நான் கேட்டு தான் தீருவேன். உங்க தங்கச்சி வான்னா அகிலாத்தை வரனும். உன் புருஷனை எடுத்துக்கறேன்னா குடுத்திறனும். என்ன பூரணியத்தை வச்சது தான் சட்டமா?…” அதிரூபன் துக்க வீட்டில் பதினாறாம் நாள் விசேஷம் முடிந்த பின்னர் ரத்தினசாமியிடம் பொங்கிவிட்டான்.
“நானும் அமைதியா தான் இருந்தேன் இத்தனை நாள். ஆனா அவங்க கடைசியா பண்ணினது ரொம்பவே அதிகம். என்ன ஒரு நெஞ்சழுத்தம் இந்த அத்தைக்கு? அவங்க வச்சது தான் சட்டம்னா அது இந்த வீட்ல தான். அது எல்லா இடத்திலையும் செல்லுபடி ஆகனும்னு நினைக்கிறது எவ்வளவு ஆணவம்?…”
“என்ன அதிபா? ஏன் இவ்வளவு கோவமா பேசற?…” என்றவரிடம் நடந்த அனைத்தையும் சொல்லிய அதிரூபன்,
“இங்க உங்க வீட்ல அவங்க கொடி பறக்குதுன்னா அது உங்க தங்கச்சின்ற அதிகாரம். நானும் உங்களுக்காக தான் அமைதியா பொறுமையா போறேன். அதே நேரம் அவங்க உரிமைன்ற பேர்ல அம்மாக்கு இடைஞ்சல் நிறைய செஞ்சிருக்காங்க. இதை நான் சொல்லித்தான் ஆகனும். ஆனா இந்த வீட்ல இருக்கிறவங்க அவங்க இஷ்டத்துக்கு தலையாட்டின மாதிரி எல்லாருமே செய்யனும்னா இது அதிகப்படி இல்லையாப்பா?…”
“அதிபா என்ன சொல்ற நீ?…”
“அதான் சொன்னேனே, இன்னொருத்தவங்கட்ட போய் என் புருஷனுக்கு உன்னோட பூவையும் பொட்டையும் குடுன்னு நிக்கிறாங்க. என்ன நினைப்புல இதையெல்லாம் செய்துட்டு இருக்காங்க? நல்லவேளை உங்களுக்கு முடியலை. இல்லைனா உங்கட்ட வந்து முறையிட்டு உடனே நீங்களும் அதை செய்யவைக்க ஏற்பாடு செஞ்சிருந்தாலும் ஆச்சர்யமில்லை…”
“அதிபா, என்ன பேச்சு இது? நான் நிறைய தப்பு பண்ணியிருக்கேன் தான். ஆனா அதுக்கும் ஒரு எல்லை இருக்கு. இப்படி ஒரு கீழ்த்தரமான செயலை நான் செய்வேன்னா நினைக்கிற?…”
“அப்படி ஒரு வேலையை உங்க தங்கச்சி செஞ்சிருக்காங்களே? சொல்லி வைங்கப்பா. அவங்க இப்பவும் அகிலாத்தை மேல இருக்கிற கொவட்டஹி வீட்ல எல்லார்ட்டையும் பேசாம இருந்து காமிக்கிறாங்க. இதுக்கு மேலையும் ஏதாவது பண்ணினா பேசாம சொத்தை பிரிச்சு குடுத்து தனியா அனுப்பிடுங்க…”
“அதிபா என்ன பேச்சுப்பா இது?…” ரத்தினசாமி ஸ்வேதா, சந்தோஷ் நினைத்து கலங்கிவிட,
“பின்ன என்னப்பா? பெத்த பிள்ளைங்க தவிச்சு போய் அம்மாட்ட ஆறுதல் தேடி போகுதுங்க. அப்படி என்ன வன்மம் அவங்களுக்கு. பிள்ளைகளுக்காக இனி யோசிக்கலாமே? அவங்களை தேத்தி அவங்க சந்தோஷத்துல மிச்ச வாழ்க்கையை வாழலாமே?…”
“நீ சொல்றது உண்மை தான்ப்பா. ஆனா அவ பிடிவாதக்காரி…”
“அந்த பிடிவாதம் நம்ம குடும்பத்தோட நிம்மதியை குலைச்சிடுமோன்னு தான் எனக்கு பயமா இருக்குப்பா. இப்ப எதை சாதிக்க இப்படி அமைதியா இருந்து யார்க்கிட்டயும் பேசாம இருக்காங்களோ எனக்கு தெரியலை…” என சலித்தவன் ரத்தினசாமியின் முகம் பார்த்து,
“உங்ககிட்ட கடைசியா சொல்லிக்கறேன்ப்பா. திரும்ப அவங்க அது இதுன்னு ஏதாவது சொல்லி நீங்க எதையாவது செய்யனும்னு நினைச்சீங்க. இத்தனை நாள் சொல்லிட்டு தான் இருந்தேன்.  என்னை செயல்படுத்த வச்சிடாதீங்க…” என எச்சரிக்கும் குரலில் சொல்ல அவனை சமாதானம் செய்யும் தெம்பை கூட இழந்தவராய் கவலையாய் அவனை பார்த்து அமர்ந்திருந்தார்.
“ஸ்வேதா, சந்தோஷ்க்காக பார்க்கறீங்கன்னு எனக்கும் புரியுதுப்பா. ஆனா வேற வழி இல்லை. அத்தை எப்ப எதை பேசுவாங்கன்னே தெரியாது. துவா பேசினா நான் பொறுப்பில்லை…” என்றவன்,
“ஏன்ப்பா அத்தை உனக்கான உரிமையை, அங்கீகாரத்தை தரேன்னு சொல்லியும் எனக்கு தேவையில்லைன்னு துட்சமா தூக்கி எறிஞ்சிட்டு அத்தனை கம்பீரமா நின்னாங்கப்பா அகிலா அத்தை. அவங்களா உங்க தங்கச்சி புருஷனை தட்டி பறிச்சிடுவாங்கன்னு ஓட ஓட விரட்டினீங்க?…”
“அதிபா?…” என உடைந்துபோய் அவர் பார்க்க,
“பாசம் இருக்கனும்ப்பா. அது யாருக்கும் பாதகமில்லாம இருக்கனும். உங்க பாசத்தை பகடையாக்கி இன்னொரு குடும்பத்தையே சிதைச்சு அந்த பாவத்தை உங்க தலையில ஏத்திட்டாங்க பாருங்க. இதையே நீங்க உங்க வீரத்தை வேகத்தை கண்டிப்பை உங்க தங்கச்சிட்ட காண்பிச்சு இருந்தா இதெல்லாம் நடந்திருக்காதேப்பா?…”
“இன்னைக்கு என் மகளை பார்த்ததும் மாறின உங்க மனசு என் மகள் துவாக்குள்ள இருக்கும் போது கூட அவளை என்னை விட்டு பிரிக்கனும்னு தானே நினைச்சது. அதுக்கும் உங்க தங்கச்சி தானே காரணம்? அப்போ வாழ்ந்து முடிச்ச அவங்களுக்காக என்னோட வாழ்க்கை எப்படி போனாலும் கவலை இல்லைன்னு தானே நீங்க நினைச்சிருக்கீங்க?…”
“உங்க தங்கச்சியை பாருங்க. அவங்களை கை விடணும்னு நான் சொல்லலை. அதே நேரம் உங்க மனைவி, பிள்ளைங்களுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் குடுங்கன்னு சொல்றேன். எத்தனையோ அள்ளிகுடுத்த உங்ககிட்ட பாசத்தை எங்களுக்கும் காண்பிங்கன்னு கேட்க வச்சுட்டீங்களே?…”
அதிபன் பேசிய ஒவ்வொன்றும் ரத்தினசாமியை சுக்கல் சுக்கலாய் நொறுங்க செய்தது. அவன் பேசிய உண்மைகள் ரத்தினசாமியின் முகத்தில் அறைந்தது.
“அதிபா. ஐயோ என் பிள்ளையை என்கிட்டே கையேந்த வச்சுட்டேனே? கடவுளே?…” என மகனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட அதிபனுக்கும் கவலையாக தான் இருந்தது. அவரை அமைதிப்படுத்தியவனுக்கு அதற்கு மேலும் பேச தோன்றவில்லை. ஏற்கனவே நொறுங்கிப்போய் இருக்கிறார் என நினைத்து கிளம்பிவிட்டான்.
அதிலிருந்தே ரத்தினசாமியின் நடவடிக்கைகளில் மெலிதான மாற்றங்கள் பிறக்க ஆரம்பித்தது. ஆனாலும் முற்றிலும் இல்லை. உடல் வேறு நலிய ஆரம்பித்திருந்தது.
அகிலாவை பார்க்கும் பொழுது அவரறியாமலே ஒரு ஒதுக்கமும் எரிச்சலும் எழுதவதை அவராலேயே தடுக்க முடிவதில்லை. அதனாலே ஒதுங்கி போக அகிலா இவரை கண்டுகொள்வதே இல்லை.
மகனின் வீட்டிற்கு செல்லவேண்டும் என்றாலும் யாரையேனும் அழைத்துக்கொண்டு வந்து பேத்தியுடன் நேரம் கழித்துவிட்டு கிளம்பிவிடுவார். யாரையும் எதிர்பார்ப்பதும் இல்லை. சட்டைசெய்வதும் இல்லை.
பூரணி பேசாமல் தனிமையை நாட சில நாட்கள் கெஞ்சி பார்த்தவர் அதன் பின்னர் கண்டுகொள்வதே இல்லை. அவருக்கே என்று அனைவரிடமும் பேசவேண்டும் என்று தோன்றுகிறதோ என்று பேசட்டும், தொந்திரவு செய்ய வேண்டாம் என மற்றவர்களையும் நெருங்க அனுமதிக்கவில்லை.
மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் பூரணி அப்படியே இருக்க அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. இனி தன்னால் யாரிடமும் பேச முடியாதோ? பழையபடி குடும்பத்தில் வீட்டினுள் வலம் வர முடியாதோ என? அந்த பிரம்மையும் அவரை தனிமை என்னும் இருளில் இன்னமும் கட்டிப்போட்டது.
பேசவேண்டும் என நினைத்தாலும் ஏனோ வார்த்தைகள் வெளிவருவதில்லை. வைத்தியநாதன் இருந்த அறையில் தான் இன்னமும் இருக்கிறார். அவர் கடைசியாக உபயோகபடுத்திய படுக்கை, உடுப்புகள், மருத்துவ பொருட்களை கூட அகற்ற அவர் சம்மதிக்கவில்லை.
அறையை சுத்தம் செய்ய யாராவது வந்து பொருட்களை மாற்றி எடுத்து வைத்தால் அப்படி ஒரு ரகளையை செய்தார் பூரணி. யாரையும் எதையும் தொட அனுமதிக்கவில்லை. இதை ஒருவித மனபிறழ்வு என்றும் வந்து பார்த்த டாக்டர்கள் சொல்லி செல்ல ரத்தினசாமி இடிந்து போனார்.
அந்த அறையை தானே சுத்தம் செய்வது, அங்கேயே சாப்பிடுவது, பொழுதை கழிப்பது என வைத்தியநாதன் பயன்படுத்திய அனைத்தையும் வைத்துகொண்டு அங்கேயே நாட்களை கழித்துக்கொண்டிருக்கிறார். இதை எப்படி கையாள என்று தவித்தவர்களுக்கு பூரணியை அணுகவே பயமாய் இருந்தது.
அவரை வைத்து குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. அதே தெளிவு தான். ஆனால் யாரிடமும் பேசுவதற்கில்லை. அறைக்குள் சென்று ஒன்றையும் எடுத்துவந்துவிட முடியாது. அத்தனை மூர்க்கமாகிவிடுவார் பூரணி. அது ஒன்று தான் அவரை வேறாய் காட்டியது.
அதை கொண்டே இப்பொழுதெல்லாம் பூரணியை அவர் போக்கில் விட்டுவிட்டனர். சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் முடங்கிகொள்ளும் அவரை வேறு என்ன செய்வது என சங்கரன் சொல்லி அப்படியே விட்டுவிட்டனர்.
பிள்ளைகள் கூட இப்பொழுது முழுவதுமாய் பத்மினியின் கவனிப்பிற்குள். அதுவும் ஸ்வேதா தான் அதிகமாய் துவண்டுபோனாள். சந்தோஷ் பக்குவப்பட்டவன் என்பதால் ஓரளவிற்கு தேறி தொழிலில் கவனம் செலுத்த ஸ்வேதாவை தான் அதிகம் கவனித்துக்கொள்ள வேண்டியதானது.
இன்று பூரணியை பார்த்துக்கொள்ள இருவர் எப்பொழுதுமே வீட்டில் இருப்பதால் மற்ற அனைவரும் முகூர்த்த கால் ஊன்றும் விசேஷத்திற்கு வந்திருந்தனர் விஷாலை தவிர.
“என்ன துவா குழந்தைக்கு பேர் எல்லாம் செலெக்ட் பண்ணியாச்சா? பிறந்து மூணு மாசம் ஆகிடுச்சு. இன்னும் நீங்க பேர் வைக்காம இருக்கீங்க?…” என சங்கரன் கேட்க,
“ஹ்ம்ம் முடிவு பண்ணிட்டோம் சித்தப்பா. அடுத்த வாரம் நம்ம வீட்ல வச்சு செஞ்சிடலாம்…” அதிரூபன் பதில் சொல்ல சங்கரன் அமைதியாய் துவாரகாவை பார்த்தார்.
“இன்னும் எத்தனை நாளைக்குமா எங்களோட நீ பேசாம மௌனவிரதம் இருக்க போற? நடந்ததை மாத்த முடியலைனாலும் இனி நடக்க போறதை நினைக்கலாமே? நாங்க பண்ணின தப்பை மன்னிச்சு எங்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை நீ குடேன்மா? எதுவும் சொல்லாம அமைதியாவே இருக்கிறாயே?…”
சங்கரன் மிகுந்த வருத்தத்துடன் பேச அதற்கும் அமைதியாகவே இருந்தாள் துவாரகா. ஆம், அந்த வீட்டில் துவாரகா இயல்பாய் பழகும் இரண்டே பேர் பத்மினியும், சந்தியாவும் மட்டுமே.
ஸ்வேதா தானே வந்து வளவளவென்று பேசினாலும் பதில் ஒற்றை வார்த்தையில் தான் வரும். சங்கரன் வந்துவிட்டால் அதுவும் இல்லை. இன்றுவரை அப்படியே தான் இருக்கிறாள்.
அதிலும் தன்னுடைய பிரசவத்திற்கு பின் தான் விஷால், அர்னவ்வை பார்த்தால் முன்பு போல கோபம் கொள்ளாமல் முகம் திருப்பாமல் இருக்கிறாள். ஆனால் பேச்சு இன்று வரை இல்லை. அவன்களாக பேசினாலும் தலையசைப்பு மட்டுமே.
“சொல்லும்மா துவா, நாம இப்ப ஒரே குடும்பம். எங்க வீட்டு பொண்ணு நீ. இன்னும் எவ்வளவு நாளைக்கு நீ இப்படியே இருக்க போற? பேசும்மா…”
மீண்டும் சங்கரன் சொல்ல அங்கே அமர முடியாமலும் இருந்தாள் துடுக்காய் ஏதேனும் பேசிவிடுவோமோ என்றும் நினைத்து குழந்தையை அதிரூபனிடம் கொடுத்துவிட்டு அவ்விடம் விட்டு எழுந்து சென்றுவிட்டாள்.
விசேஷத்திற்கு வந்த இடத்தில் தேவையில்லாமல் இதை பற்றி பேச்சை வளர்த்து பிரச்சனையை உண்டாக்க வேண்டாம் என அதிரூபனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் ஒதுங்கி போக அவளின் பார்வை புரிந்தவனாக,
“விடுங்க சித்தப்பா, வற்புறுத்த வேண்டாம். தானா அவளுக்கு என்னைக்கு எல்லோர்ட்டையும் பேசனும்னு தோணுதோ அப்போ பேசட்டும். பேசு பேசுன்னு சொன்னா இன்னும் பிடிவாதமும் கோவமும் ஜாஸ்தி ஆகும். பழசை நினைக்காதேன்னு சொல்ல சொல்ல அவளோட எண்ணம் முழுவதும் பழைய விஷயங்கள் தான் ஆக்கிரமிக்கும். விட்டுடுங்க சித்தப்பா…”
“ஹ்ம்ம் என்னவோப்பா அதி. நீ சொல்ற மாதிரி துவா மனசு மாறினா சரி. நீங்க சந்தோஷமா இருந்தா போதும்…” என சொல்ல ரத்தினசாமி எதையும் கவனிக்காதவர் போல அனைத்தையும் கேட்டு கொண்டு தான் இருந்தார்.
எல்லாம் சரியானாலும் இவ விடமாட்டாளே? அகிலா பொண்ணாச்சே? அந்த திமிர் இருக்கும்ல. என் மகனே சப்போர்ட்டா இருக்கும் போது நான் என்ன சொல்ல?  அவளா பேசாம நானும் பேசமாட்டேன். மாமனார்ன்னு ஒரு மரியாதை இருக்கா பரு? என நினைத்துக்கொண்டவரின் கை தன்னைப்போல அவரின் நெற்றியை தடவி பார்த்தது.
அதே நேரம் எதற்கோ திரும்பிய துவாரகா அவரின் பார்வையையும் நெற்றி தடவலையும் கண்டு ஒரு நொடி திகைத்தவளுக்கு ஞாபகம் வந்து இதழ்களில் புன்னகை அரும்பியது. அதை பார்த்தவ ரத்தினசாமி முறைத்துக்கொண்டு  வேறு புறம் திரும்ப.
“ஞாபகம் இருந்தா சரி. அந்த பயம் இருக்கனும்…” என்ற முனுமுனுக்க,

Advertisement