Advertisement

மின்னல் – 31
                மறுநாள் அதிகாலையிலேயே சங்கரனும் வந்துவிட்டார். வரும் பொழுதே அங்கிருப்பவர்களுக்கு இனிப்பையும் வாங்கி வந்துவிட கொடுத்து கொண்டாடிவிட்டனர்.
இதில் சங்கரன் வீட்டில் சொல்லியிருப்பார் என ரத்தினசாமியும் ரத்தினசாமி சொல்லாமலா இருப்பார் என சங்கரனும் வீட்டிற்கே செல்லாமல் நேராக மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.
இரவு முழுவதும் மழை வேறு பெய்துகொண்டிருந்ததால் அனைவரும் அங்கேயே ஒரு அறை ஏற்பாடு செய்து தங்கிக்கொண்டனர். அகிலாவும், பத்மினியும் துவாரகாவுடனே இருக்க அதிபனும் அங்கேயே இருந்துகொண்டான்.
விஷால் அர்னவ், ரத்தினசாமி மூவரும் அறையில் தங்கிக்கொண்டனர். அதிலும் ரத்தினசாமி ஏதாவது ஒரு குழந்தை சத்தம் கேட்டுவிட்டால் பேத்திதான் அழுகிறாளோ என எண்ணி மெதுவாக வந்து பார்த்துவிட்டு செல்வார். அவரின் அலப்பறையில் மற்றவர்களுக்கு தலை சுற்றாத குறை தான்.
“ஆனாலும் இன்னைக்கு மயிலாட்டம் கொஞ்சம் ஓவராதான் இருக்கு அதி…” என அஷ்மி கூட அவரின் காதுபட சொல்ல அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில்  ரத்தினசாமி இல்லை.
இப்படியாக மாற்றி மாற்றி இங்கேயே இருந்துவிட எட்டுமணியை நெருங்கும் வர அன்னபூரணி வரவில்லை என்ற பின்னர் ரத்தினசாமயிடம் பத்மினி கேட்க,
“ஒரு வேளை மாப்பிள்ளையை பார்த்துக்கனும்னு இருக்காளோ என்னவோ? அவளுக்கு முடியும் போது வரட்டும். அங்கயும் அவரை பார்த்துக்க ஆள் வேணும்ல பத்மி…” என்று சொல்லிவிட பத்மினியும் ஒன்றும் பேசவில்லை அதற்கு மேல்.
அகிலாவை முதலில் காலையிலேயே வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவர் வரும் வரை பத்மினி இருந்துவிட்டு காலை உணவை முடித்துக்கொண்டு இப்பொழுது அவரும் வீட்டிற்கு சென்று வர கிளம்பினார்.
அர்னவும் சந்தோஷும் பத்மினியுடன் கிளம்பிவிட ரத்தினசாமி சிறிது நேரம் இருந்துவிட்டு சங்கரனுடன் வருவதாக சொல்ல அகிலா அவரை கண்டுகொள்ளவே இல்லை.
அதிபனின் கண்களுக்கு துவாரகாவும், குழந்தையும் தவிர வேறொன்றும் கண்களுக்கு தெரியவில்லை. பூரித்து பூரித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
வீட்டிற்கு வந்ததும் போட்டது போட்டபடி இருப்பதை பார்த்து பத்மினி வேகமாய் குளித்துவிட்டு வந்து அனைத்தையும் சரி செய்ய அப்பொழுதுதான் கீழே வருவதை போல வந்த அன்னபூரணி ஒன்றும் பேசாமல் கிட்சனிற்குள் சென்று தோசை கல்லை வைத்துவிட்டு சாம்பாரை சூடு செய்ய ஆரம்பித்தார்.
“பூரணி என்ன பன்ற?. இன்னுமா நீ சாப்பிடலை?…” என கேட்டுக்கொண்டே பத்மினி வர,
“இல்லை அண்ணி, உங்களுக்கு தான்  தோசை ஊத்தறேன்…”
சொல்லிவிட்டு கல் சூடாகிவிட்டதா என தண்ணீர் தெளிக்க பத்மினி அவரை ஆராய்வதை போல பார்த்தார்.
“பூரணி?…” என அழைத்து,
“நா சாப்ட்டுட்டு தான் வந்தேன். ஹாஸ்பிட்டலுக்கு அகிலாம்மா கொண்டுவந்தாங்க…”
“என்ன ஹாஸ்பிட்டலுக்கா? யாருக்கு என்னாச்சு?…” என பதட்டமா கேட்கவும் இன்னும் திகைப்பாய் போனது.
“ஏன் உனக்கு தெரியாதா? அதிக்கு பொண்ணு பொறந்திருக்கு. நேத்து நைட் விஷால் கால் பண்ணி ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்னு வர சொல்லவும் உன் அண்ணன் உடனே கிளப்பி கூட்டிட்டு போய்ட்டார்…”
என்றதுமே குழந்தை பிறந்த சந்தோஷத்தை விட இதை யாருமே இந்த நிமிடம் வரை யாருமே தன்னிடம் அந்த தகவலை சொல்லவில்லையே, தன்னுடைய அண்ணன் கூட சொல்லாமல் கிளம்பிவிட்டாரே என்ற எண்ணமும் சேர்ந்து வாட்டி வதைக்க கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
அவரின் அமைதியை பார்த்த பத்மினிக்கு என்னவோ போல ஆகிவிட்டது. சொல்லாமல் விட்ட வீட்டினர் மீது கோபமும் வந்தது.
“உன்கிட்ட சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சேன் பூரணி. உன் அண்ணனும் சின்னண்ணன் சொல்லியிருப்பாங்கன்னு இருந்துட்டார். சின்னவருக்கு இவர் சொல்லியிருப்பாருன்னு நினைச்சுட்டாரு. நைட் புல்லா மழை இல்லையா? நீ வேற சீக்கிரம் தூங்க போய்ட்ட. அதான் சொல்லிட்டும் கிளம்ப முடியலை. அங்க இருந்த பரபரப்புல…”
“பரவாயில்லை அண்ணி. துவா எப்படி இருக்கா?…” சுரத்தில்லாமல் அவள் கேட்க,
“ஹ்ம்ம் குழந்தையும் அவளும் நல்லா இருக்காங்க…”
“ரொம்ப சந்தோஷம் அண்ணி…” என சொல்லிவிட்டு மேலே சென்றுவிட பத்மினிக்கு கஷ்டமாக போனது.
அதற்கு மேலும் யோசிக்க நேரமின்றி பரபரவென சமையல் வேலையை ஆரம்பித்தார். ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோக வேண்டிய பொருட்கள் என சிலவற்றை எடுத்துக்கொண்டு கிளம்ப சரியாக சந்தோஷும் வந்துவிட்டான். பூரணி தென்படுகிறாரா என பார்த்த பத்மினியிடம்,
“போலாமா அத்தை? நான் ரெடி…” என சடையின் காலரை சரிபண்ணிக்கொண்டு வர,
“ஏன்டா இவ்வளவு அவசரம்? மெதுவா கிளம்ப வேண்டியது தானே?…”
“இல்லை அத்தை உங்களை ட்ராப் பண்ணிட்டு நான் லாரி ஆபீஸ் வேற போகனும். அப்ப தான் மாமா வீட்டுக்கு வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பாங்க. வேலை நிறைய இருக்கு அத்தை…” என சொல்லவும்,
“சரி, இரு நான் வரேன். இதை கார்ல வச்சிட்டு வெய்ட் பண்ணு…” அவனிடம் சொல்லிவிட்டு வேகமாய் மேலே பூரணியை பார்க்க சென்றார்.
“பூரணி…” என அழைத்ததும் வந்தவரின் முகம் அழுதிருந்தது.
“பூரணி அழுதியா?…”
“இல்லை அண்ணி, நீங்க சொல்லுங்க. கண்ணுல தூசு விழுந்துட்டு. அதான்…” அவர் போய் சொல்கிறார் என தெரிந்தாலும்,
“டே ஷிப்ட் நர்ஸ் வந்தாச்சி தானே? என்கூட ஹாஸ்பிட்டல் வா. போகலாம்…”
“நீங்க போய்ட்டு வாங்க அண்ணி. அவருக்கு சரியாகவும் அவரோட சேர்ந்து வந்து நான் பார்த்துக்கறேன்…” ஒரேடியாய் மறுத்துவிட்டார் பூரணி. நெஞ்சம் நிறைய குழந்தையை பார்க்கும் ஆசை இருந்தும் வைத்தியநாதனின் கண்ணீரினால் மனமுடைந்து போயிருந்தார் அன்னபூரணி.
“என்ன பேச்சு இது பூரணி? நம்ம வீட்டுக்கு முதல் வாரிசு. நீ அதி அத்தை. பார்க்க வரலைனா நல்லா இருக்காது பூரணி…”
“இல்லை அண்ணி, நான் வரலைன்னு யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க. என்னை எதிர்பார்க்க அங்க யார் இருக்கா?…” என சொல்லும் பொழுதே கண்ணீர் இறங்க ஆரம்பித்தது.
“அப்படியெல்லாம் நினைக்காத பூரணி. யாரும் உன்னை விட்டுடலைம்மா…” பத்மினி சமாதானம் சொல்ல எதுவும் பூரணியை அடையவில்லை. அந்தளவிற்கு உடைந்துபோய் இருந்தார் வைத்தியநாதன் விட்ட கண்ணீரினால்.
“ஐயோ உங்க யாரையுமே நான் குறை சொல்லலை அண்ணி. அவருக்கே பார்க்க குடுத்துவைக்கலை. நான் மட்டுமென்ன? நீங்க கிளம்புங்க…” என சொல்லி திரும்பியவரை,
“அம்மா. நீங்க ஹாஸ்பிட்டல் வரலையா?…”  என கேட்டு சந்தோஷ் வந்து நிற்க,
“உனக்கு கூட என்கிட்ட சொல்ல தோணலைல?…” என்றவர் கதவை சட்டென பூட்டிக்கொண்டார். அதிர்ந்து பார்த்த சந்தோஷிடம் நடந்ததை சொல்ல அவன் தலையில் அடித்துக்கொண்டான்.
“நானாவது சொல்லியிருக்கனும் அத்தை. ஒருதடவை ட்ரை பண்ணிட்டு லைன் கிடைக்கலைன்னதும் நானும் விட்டுட்டேன். தப்பு பண்ணிட்டேன். யாராச்சும் சொல்லியிருப்பாங்கன்னு. நீங்களுமா அத்தை?…” என்றதும் பதறிவிட்டார்,
“ஐயோ சந்தோஷ், உன் மாமா என்னைக்காவது பூரணியை விட்டு எதாச்சும் செஞ்சிருக்காரா? எப்படியும் அவர் சொல்லாம இருக்கமாட்டார்ன்னு நான் நினைச்சேன்…” என சொல்ல,
“பரவாயில்லை அத்தை, நாம கிளம்புவோம்…” பத்மினியை அழைத்துக்கொண்டு வேகமாய் முன்னால் நடந்துவிட்டான் சந்தோஷ்.
ஹாஸ்பிட்டல் கேண்டீனில் அஷ்மிதாவின் எதிரில் அமர்ந்திருந்த விஷாலுக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என தயக்கமாய் இருந்தது.
“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே மூஞ்சியை பார்த்துட்டே இருப்ப? நான் கிளம்பி போய்டவா? இதோட மூணு சமோஸா சாப்ட்டுட்டேன்…” அஷ்மி சொல்ல,
“இல்ல வந்து, நீங்க போனவாரம் ஹாஸ்பிட்டல் வரலையே? அதான் கேட்கலாம்னு…” ஏதோ பேசவேண்டுமென ஆரம்பிக்க,
“இத கேட்கவா என்னை தனியா கூட்டிட்டு வந்த? சரியில்லையே. என்ன விஷயம்? உண்மையை சொல்லு. சொல்லு….” என்றவள்,
“ஆமா, நான் வரலைன்றது உனக்கு எப்படி தெரியும்? என்ன ஃபாலோ பன்றியா?…” கூர்மையாய் அவனை பார்த்து கேட்க விஷால் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான்.
“இங்க பாரு விஷால். உன் மனசுல என்ன இருக்குன்னு தெளிவா பேசு. ஏன் தயங்கற?…” அஷ்மி மிக பொறுமையாய் அவனை பார்க்க,
“வந்து உங்களுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருக்கிறதா வீட்ல பேசிக்கிட்டாங்க. அது உங்களுக்கு ஓகே தானா? ஐ மீன் உங்க விருப்பத்தோட தான் நடக்குதா?…” சொல்லவந்ததை வேகமாய சொல்லிவிட்டு பயப்பார்வை பார்த்தான்.
“இதுதான் விஷயமா? லுக் விஷால், உன் அண்ணன் மேரேஜ்ல நான் சொன்னது உன்னை டிஸ்டர்ப் பண்ணியிருக்குன்னு நினைக்கிறேன். எனக்கு உன்னை பிடிச்சு உன் மேல ஆசைப்பட்டு ஒன்னும் இந்த ப்ரப்போசலை நானும், அப்பாவும் டிஸைட் பண்ணலை அன்னைக்கு…”
“ஜஸ்ட் ஒரு குட் பேமிலி, நீ அதி ப்ரதர் இதெல்லாம் தான் பேசலாம்னு தோணுச்சு. பட் துவா விஷயத்துல நீ நடந்துக்கிட்ட விதம். உனக்குள்ளையும் உன் பெரியப்பாவோட வக்கிர புத்தி கொஞ்சமாவது இருக்குன்னு ப்ரூ பண்ணியிருக்கு. எல்லாருக்குள்ளையும் ஒரு கெட்டவன் இருப்பான் தான். நீ மாறிட்ட, இல்லையில்லை. அந்த ஒருவிஷயத்துல தான் உன் தப்புனாலும் தப்பு தப்பு தான்…”
“இல்லை அஷ்மிதா. இப்போ நான்…”
“நீ இதை இவ்வளவு சீரியஸா எடுக்க அவசியமே இல்லை விஷால். கல்யாண வயசுல பொண்ணுன்னு ஒன்னு இருந்தா இந்த வரனுக்கா அந்த வரனுக்கான்னு ஒன்னுக்கு பத்தா பார்த்து அலசி ஆராஞ்சு தான் கல்யாணம் செய்யறாங்க. ஜஸ்ட் உனக்கே தெரியாத ஒரு டாக் எங்களோடது. கோவத்துல உன்கிட்ட நானும் சொல்லிட்டேன். இப்போ வரை நீ அதையே நினைச்சுட்டு இருந்தா எப்படி?…”
“அஷ்மி, எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும்ங்க…”
“எப்போ இருந்து? உன் அண்ணன் துவாவை மேரேஜ் பண்ணின பின்னால நான் உன்கிட்ட உன்னை மேரேஜ் பண்ணிக்கலாம்னு நினச்சேன்னு சொன்னதால தானே? இல்லைனா?. முதல்ல இப்படி யோசிக்கிறதை விடு. ஏதோ இப்ப தான் உன் மேல கொஞ்சம் குட் ஒபினியன் வந்திருக்கு. ஆனாலும் உன்னை பார்த்த அடுத்த நிமிஷம் என் ஞாபகத்துக்கு நீ துவாவை அடிச்சு தூக்கிட்டு போனது தான் வந்து நிக்குது. இது சரிவராது விஷால்…”
“ஆனாலும் நீங்க சொன்னதுல இருந்து எனக்குள்ள ஏதோ…”
“என்ன பட்டாம்பூச்சி பறந்துருச்சாக்கும்? டேய், என்ன கைய புடிச்சு இழுத்தியா கதையாக்கி திரும்ப திரும்ப பேசுற நீன்னு என்னை புலம்ப வச்சிருவ போலேயே? போடா. நானும் பொறுமையா சொல்லிட்டே இருக்கேன்…” என எகிற,
“அப்பா இந்த கல்யாணம்?…”
“இன்விடேஷன் நானே வந்து வைக்கறேன். வந்து உன் அண்ணனுக்கு கல்யாண வேலைக்கு ஹெல்ப்பா இரு. இப்ப கிளம்பு…” என பேச்சை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் அஷ்மிதா.
விஷாலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வீட்டில் சொல்லி பேச சொல்வதென்றால் இன்னமும் அஷ்மியின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோம். சொல்லாமல் விட்டால் தன்னால் இயல்பாக இருக்க முடியாது.
பாவம் செய்துவிட்டு பரிகாரம் பண்ணிவிட்டால் அன்றைய பாவத்தின் சுவடு காணாமல் போய்விடுமா என்ன? வடுவாய் இருந்து தன் வாழ்க்கையை பறித்துவிட்டதே? என நொறுங்கி போனான்.
ஹாஸ்பிட்டலுக்கு வந்த பத்மினி ரத்தினசாமியை தேட அவர் டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச்சை கேட்ட பத்மினி தலையில் அடித்துக்கொண்டு,
“நேத்தும், இன்னைக்கு காலையிலையும் இதே கேள்விய தானே கேட்டீங்க? இப்பவும் இதையே கேட்கறீங்க? அவங்களுக்கு வேற வேலை இருக்கும்ங்க. நீங்க வாங்க இங்க…” என இழுத்துக்கொண்டு வர,
“இவ ஒருத்து அறிவுகெட்டவ…” பத்மினியை ரத்தினசாமி திட்ட முறைத்தார் அவர்.
“பின்ன என்ன? ஒன்னுக்கு நாலு தடவை கேட்டா தானே எதாச்சும் மறந்திருந்தாலும் ஞாபகமா சொல்லுவாங்க அவங்க. நாம கேட்டா கேட்டதுக்கு பதில் சொல்றதுக்கு தான் டாக்டருக்கு படிச்சிருக்காங்க…”
“நான் கூட டாக்டர் தான். மயிலுக்கு என்ன சந்தேகம்?…” அஷ்மி வந்து நிற்க அவளை பார்த்ததும் முறைத்தவர்,
“பத்மி, நான் வீட்டுக்கு போய் குளிச்சுட்டு வரேன். நீ எல்லாரையும் சாப்பிட வை. வந்ததை கொண்டு போய் குடுக்காம என்கிட்டே வார்த்தையாடிட்டு இருக்க?…” என சொல்லிவிட்டு வேகமாய் கிளம்பிவிட,
“அஷ்மி உன்னை பார்த்தாலே மிரண்டுடறார் மனுஷன்…” என சொல்லி சிரிக்க அவளும் ஆமோதிப்பாய் புன்னகைத்தாள்.
ரத்தினசாமி கிளம்பிய பின்னர் தான் அன்னபூரணியின் ஞாபகமே பத்மினிக்கு வர அவசரமாய் போன் செய்து நடந்ததை சொல்லி பூரணியை சமாதானம் செய்து அழைத்து வர சொன்னார்.
ரத்தினசாமிக்கு ஏதோ தன் தங்கைக்கு பெரிய துரோகம் இழைத்துவிட்டதை போல குற்றவுணர்ச்சி ஆகிப்போனது. வீட்டிற்கு வந்தவர் பூரணியை பார்க்க சென்றார்.
“பூரணிம்மா, அம்மாடி….” நா தழுதழுக்க அழைக்க வெளியே வந்த பூரணி அண்ணனை பார்த்துவிட்டு பதிலேதும் பேசவே இல்லை. அது இன்னமும் பலமாய் தாக்கியது அண்ணனை.
அதன் பின்னான எந்த சமாதானம் ரத்தினசாமியின் கெஞ்சலும் எதுவும் எடுபடவில்லை. எத்தனை மன்றாடியும் குழந்தையை பார்க்க வரமுடியாது என்பதில் பிடிவாதமாய் இருந்தார் அன்னபூரணி. பிடிவாதம் அவருக்கொன்றும் புதிதில்லையே.
யாரின் பேச்சும் எடுபடவில்லை. பத்மினி சொல்லி அதிரூபன் கூட அழைத்துவிட்டான் பூரணியை. பேசும் பொழுது நன்றாய் அவர்களை வாழ்த்தி பேசிவிட்டு பிறகு வருகிறேன் என்பதோடு நிறுத்திவிட்டார்.

Advertisement