Advertisement

மின்னல் – 28

          அகிலவேணிக்கு அஷ்மிதாவை அத்தனை பிடித்து போனது. எத்தனை அருமையான பெண் என சில்லாகித்துக்கொண்டார். அதை அவளிடம் சொல்லவும் செய்ய அதற்கே அஷ்மிதா அகிலாவை தூக்கி ஒரு சுற்று சுற்றிவிட்டாள்.

“ஆன்ட்டி, நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்ன்னு அந்த அதி பொய் சொல்லிட்டான். இப்பத்தான தெரியுது நீங்க எவ்வளவு ஸ்வீட்ன்னு…” என அகிலாவின் கன்னம் கிள்ளி முத்தமிட துவாரகா புன்னகையோடு பார்த்திருந்தாள்.

“இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகலையா டாக்டர்? நேத்தும் என்கூடவே இருந்தீங்க. இன்னைக்கும் இப்பவே வந்துட்டீங்க…” துவா கேட்க,

“ஹ்ம்ம், சரியான பர்னிங் ஸ்டமக் உனக்கு. அங்க கூட என்னை விட்டுடுவாங்க. நீ விட்டுட மாட்ட போல? எனக்கு நைட் ஷிப்ட் தாயே. போதுமா? இப்ப நான் இங்க வரலாம் தானே?…”

அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்க பத்மினி சந்தியாவுடன் வந்தார். உடன் சந்தியாவின் குழந்தையும். அவர்களை பார்த்ததும் பத்மினியை கண்டுகொள்ளாத துவாரகா சந்தியாவை வரவேற்று அவளின் குழந்தையை வாங்கிக்கொண்டாள்.

இது பத்மினிக்கு சந்தோஷத்தை கொடுத்தது. இந்தளவிற்காவது ஏதோ ஒட்டுதலோடு இருக்கிறாளே என தன்னை வாவென சொல்லாததை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நிம்மதிப்பட்டுக்கொண்டார்.

“உள்ள வாங்க சந்தியா…” என கூட்டி வர,

“நீ எப்படிம்மா இருக்க? நேத்தே உன்னை பார்க்க வரனும்னு இருந்தேன். சந்தியா தான் நானும் வரேன். சேர்ந்து போகலாம்னு சொல்லிட்டா…” தயக்கமாய் பத்மினி பேச தலையசைப்பை மட்டும் அவருக்கு கொடுத்தவள் அதிபனை பார்க்க,

“உட்காருங்கம்மா…” என்றவன்,

“துவா, ஜூஸ்…” என அழைக்க அகிலா முறைக்க அஷ்மிக்கு தான் அடிவயிறு கலங்கியது. வேகமாய் வந்து அவனின் தலையில் கொட்டியவள்,

“இப்பத்தானடா நல்லா சாப்பிட்ட. இப்ப அதுக்குள்ளே ஜூஸ்? அதுவும் உன் பொண்டாட்டி போட்டு நான் குடிக்க. கொலை கேஸ்ல உள்ள போய்டாதடா…”

“டாக்டர்…” என துவாரகா சிணுங்க,

“அட இரேன்மா. இந்த பஞ்சாயத்தை முடிச்சுட்டு வரேன்…” என சொல்லி,  

“இப்ப என்ன ஜூஸ் தானே வேணும்? நான் போட்டு எடுத்துட்டு வரேன். வந்தவங்கள வாசலோட அனுப்பி வைக்க பார்த்தியே?…” என சொல்லி துவாரகாவிடம் திரும்பியவள்,

“இப்ப உனக்கு என்னம்மா?…” என இடுப்பில் கை வைத்து கேட்க செல்லமாய் முகம் திருப்பிக்கொண்டாள் துவாரகா.

“அச்சோ முயல்க்குட்டி கோச்சுட்டீங்களா? கோச்சுக்க. கோச்சுக்க. வாங்க ஆன்ட்டி நாம போய் கலக்குவோம். அட ஜூஸை சொன்னேன்…” என அகிலாவை கூப்பிடவும் தான் பத்மினி அவரை கவனிக்கவே செய்தார்.

ஒரு கணம் அதிர்ந்தவர் வேகமாய் எழுந்து அகிலாவின் பக்கத்தில் வந்து நின்று நம்பமுடியாமல் பார்த்தார்.

“நீங்க அகிலவேணி தானே? நீங்க எப்படி இங்க?…” என கேட்டுவிட்டு நாக்கை கடித்தவர்,

“நல்லா இருக்கீங்களாம்மா? நான் உங்களை ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது பார்த்தேன். பேசற நிலமைல நீங்க இல்லை. இப்ப இங்க பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்ங்க…” உண்மையான மனதோடு பத்மினி சந்தோஷம் கொள்ள அவரிடம் அகிலா பகைமை பாராட்டாமல்,

“நல்லா இருக்கேன்…” என இன்முகத்தோடு பதில் அளிக்க அதை பார்த்து நிம்மதியடைந்தான் அதிரூபன்.

“பெருமூச்சு பொங்குது போல? இன்னும் கொஞ்ச நேரத்துல பெரிய பூகம்பமே வர போகுது. ஸார் என்ன பன்றீங்கன்னு பார்க்கிறேன்…” அஷ்மி அவனை வம்பிழுக்க,

“அதான் நீ இருக்கியே?…” என்றவன்,

“வாங்க அங்கிள் நாம அந்த ரூம் போய் பேசலாம். லேடீஸ் க்ரவுட் ஜாஸ்தியா இருக்கு…” என ராஜாங்கத்தை அங்கிருந்து அழைத்து செல்ல,

“உனக்கு வேலை இல்லைனா என்னையும் ஏன்பா விடமாட்டேன்ற?…”

ராஜாங்கம் புலம்பிக்கொண்டே அவனுடன் செல்ல அகிலா வந்தவர்களுக்கு குடிக்க எடுத்து வர உள்ளே செல்ல மற்றவர்களும் அவருடனே பின்னே வந்தனர்.

“நீங்கலாம் ஏன் கிட்சன் வந்தீங்க? போய் ஹால்ல இருங்க. நான் எல்லாருக்கும் எடுத்துட்டு வரேன்…” என சொல்ல,

“பரவாயில்லை ஆன்ட்டி. இப்படி இருக்கத்தான் நல்லா இருக்கு. உங்களுக்கு ஹெல்ப் பண்ணின மாதிரியும் இருக்கும். உங்களோட பேசிட்டு இருக்கற மாதிரியும் இருக்கும். உங்களை பத்தி அஷ்மி நிறைய சொல்லியிருக்காங்க…” என சந்தியா சொல்ல,

“எனக்கு ரொம்ப சந்தோஷம் அகிலா நீங்க துவா கூட இருக்கறது. என்னால ஒன்னும் பண்ண முடியாது. இப்படி எல்லாம் நடக்கனும்ன்றது எல்லாம் விதி…” உண்மையான கவலையோடு பத்மினி சொல்ல,

“மனுஷங்க அவங்கவங்க மனசுக்குள்ள இருக்கிற ஆசையை, சுயநலத்தை நிறைவேத்தி நினைச்சதை சாதிச்சுக்கிட்டு அதுக்கு காரணத்தை விதி மேல போட கூடாது. நாம நினைக்காமலா விதி நடத்திடும்? எனக்கு நம்பிக்கை இல்லைங்க. நான் பொதுவா தான் சொன்னேன்…”

பத்மினியின் சிறுத்துவிட்ட முகத்தை பார்த்தும் அகிலா வேறு எதுவும் சொல்லவில்லை. மற்றவர்களும் சட்டென அமைதியாகிவிட,

“எல்லாரும் பேசிட்டு இருக்கலாம்னு சொல்லிட்டு இப்படி சைலன்ட்டா இருந்தா என்ன அர்த்தம்? நான் மட்டும் தான் பேசறேன்…” அகிலா கேட்க,

“அதொண்ணுமில்லை ஆன்ட்டி. நீங்க குடுங்க நான் இந்த பழத்தை கட் பன்றேன். நீங்க மிக்சி ஜார் எடுத்து வைங்க…” சந்தியா இயல்பாக அவரிடமிருந்து கத்தியையும் பழங்களையும் வாங்கிக்கொள்ள பத்மினி சட்டென தெளிந்தவராய் அகிலாவை பார்த்து சிரித்தார்.

அனைவரும் பேசியபடி ஜூஸ் போட்டு கிட்சனிலேயே ஒரு சேரையும் இழுத்துப்போட்டு அமர்ந்துவிட அஷ்மி அதிபனுக்கும், தன் தந்தைக்கும் குடிக்க எடுத்து செல்ல வாசலில் ரத்தினசாமி வந்து நிற்க அவரை பார்த்தும் கண்டுகொள்ளாதவள்,

“ஆன்ட்டி யாரோ வந்திருக்காங்க பாருங்க…” என்று சொல்லி சென்றுவிட்டாள்.

ரத்தினசாமி மட்டுமில்லை அவருடன் சந்தோஷ் வேறு வந்திருந்தான். அதே நேரம் விஷாலும் தன்னுடைய காரில் வந்துவிட அப்போது தான் சந்தோஷிற்கு மூச்சே வந்தது.

“பெரியப்பா இப்ப எதுக்காக இங்க வந்திருக்கீங்க? உங்களை யார் இங்க வர சொன்னா?…” மீண்டும் சண்டையிட தான் வந்திருக்கிறாரோ என பயந்து போய் அவன் அடித்து பிடித்து வந்திருந்தான்.

ரத்தினசாமி அன்று துவாரகாவிடம் அடிவாங்கி சென்ற பின்பு இன்று தான் வருகிறார். வேகமாய் வந்துவிட்டவருக்கு வாசலை தாண்டி வீட்டிற்குள் நுழைய மனம் ஒப்பவில்லை.

அதிரூபனாக வந்து அழைக்காமல் உள்ளே செல்வதா? என அவரின் கௌரவம் தடுத்தது. அதே நேரம் அகிலா வந்து இருப்பதையும் அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

“பெரியப்பா வாங்கன்னு சொல்றேன்ல…” விஷால் கையை பிடித்து இழுக்க,

“விடுடா. நான் என்ன வீட்டுக்குள்ளையா போனேன். நான் மானஸ்தனடா. அதிபனா கூப்பிடாம உள்ளே போகமாட்டேன். அதுக்குன்னு அந்த அகிலா இங்க இருக்கறதையும் நான் அனுமதிக்க மாட்டேன்…” என பொங்க அகிலாவும் வாசலுக்கு வந்துவிட்டார்.

ஒரு நொடி ரத்தினசாமியை பார்த்ததும் முகம் இருண்டுவிட்டது. அன்று போலீஸ் ஸ்டேஷனில் தானும் தன் மகளும் பட்ட துயரங்கள் கண் முன்னால் வலம் வர எரிமலையாய் வெடிக்க இருந்தவர் நொடியில் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்தினார்.

“இவர்களிடம் பேச உனக்கொன்றுமில்லை அகிலா…”   என முனங்கலாய் சொல்லிக்கொண்டவர் முகம் தன் இயல்பான கம்பீரத்தையும் நிமிர்வையும் மீட்டெடுத்தது. நிமிர்ந்து ரத்தினசாமியை பார்த்து,

“யார் நீங்க? என்ன வேணும்?…” என கேட்க ரத்தினசாமியின் ரத்த அழுத்தம் எக்கச்சக்கமாய் எகிறியது.

“என் மகன் வீட்ல இருந்துட்டு உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என்னையே யார்ன்னு கேட்ப? என்ன பயம் விட்டுப்போச்சா? நான் யார்ன்னு தெரிஞ்சும் என்ன தெனாவெட்டா பேசற? உன்னையெல்லாம் இப்படியே விடகூடாது…” என சீறியவர் தன் வேஷ்டியை வேகமாய் மடித்துக்கட்ட,

“பெரியப்பா என்ன பன்றீங்க?…” விஷால் பதற,

“இன்னைக்கு இவளை நான் வெளில தள்ளி வீதியல நிறுத்தல?…”

“முடிஞ்சா பண்ணுங்களேன்…” அகிலா வாசலை தாண்டி வெளியில் வந்து நின்று தன் மார்பின் குறுக்கே கைகளை கட்டி நேருக்கு நேராய் பார்க்க,

“ஏய்…” என ரத்தினசாமி கை நீட்டிக்கொண்டு வர,

“உங்களால ஒன்னும் பண்ண முடியாது. என்ன சொன்னீங்க? பயமா? பயத்தால தான் நான் போய்ட்டேன்னு நினைச்சுட்டீங்களா? தப்புக்கணக்கு போட்டிருக்கீங்க. உண்மையில் இத்தனை வருஷமா பயந்து போய் இருந்தது நீங்கதான்…”

“ஏய் என்ன ஓவரா பேசற? நான் மினிஸ்டர். ஞாபகம் வச்சுக்கோ. உன்னை இப்பவே அட்ரஸ் இல்லாம ஆக்கிடுவேன் பார்த்துக்க…”

“ஆமாமா, மினிஸ்டர் தான். அந்த மினிஸ்டர் தானே சில வருஷத்துக்கு முன்னால எங்க உங்க தங்கச்சி புருஷனை என்னோட கூட்டிட்டு போய்டுவேனொன்னு பயந்து என்னை போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வச்சது. பயந்தது நீங்களா இல்லை நானா? இந்த நிமிஷம் கூட பயந்துட்டு தானே ஓடி வந்திருக்கீங்க…” என்றவர்,

“தொடைநடுங்கி, உண்மையில் பயந்தது, பதறுறது எல்லாமே நீங்கதான். நான் விலகி போனேன். என்னோட என் பொண்ணோட நிம்மதியான கறையில்லாத வாழ்க்கைக்காக விலகி போனேன். இன்னொன்னும் ஞாபகம் இருக்கட்டும். இந்த அகிலா பிச்சை போட்டதை திரும்பி கூட பார்க்க மாட்டா. போட்டது போட்டது தான்…”

அகிலவேணியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ரத்தினசாமியின் தன்மானத்தையும் கௌரவத்தையும் பதம் பார்க்க விஷாலிடமிருந்து திமிறிக்கொண்டு வந்தார்.

“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன மயிலு?…” என பாடிக்கொண்டே அஷ்மி வந்தது நிற்க இவள் அனைத்தையும் கேட்டிருப்பாளோ என்கிற நினைப்பில் ரத்தினசாமியின் முகம் பயங்கரமாய் மாறியது.

“பச்சக்கிளி ஏன் மயில் முகமே வாடிப்போய் இருக்கு. ரொம்ப சிரமப்பட்டு கன்ட்ரோல் பண்ணிட்டு நிக்கிறவர் மாதிரி வாயை வச்சிருக்காரே?…” என சந்தோஷிடம் கேட்க அவனின் நிலையோ பேசிவிட்டாளே என்கிற பரவசம் தான்.

“அஷ்மி…” என சந்தோஷமாய் பார்க்க,

“ஆன்ட்டி ஆலம்பனா, அம்மிக்கல்லை குத்த தெரியாதவன் குத்தினத்தை போல் இருக்கிறது என் கட்சிக்காரரின் கபாலம். கொத்து கொத்துன்னு கொத்துபொரோட்டா போட்டுட்டேங்களே?…”

அஷ்மி கலாய்க்கவும் அகிலாவின் முகம் அனைத்தையும் மறந்து முகம் மலர்ந்தது. அவளின் கன்னம் கிள்ள,

“ஏய் அஷ்மிதா, உன்னை என்ன பன்றேன்னு பாரு…” ரத்தினசாமிக்கு பெருத்த அவமானமாக போயிற்று அகிலாவின் முன்னான அஷ்மி பேச்சு.

“வர்தா புயலுக்கே டஃப் குடுக்கறவ இந்த அஷ்மி. உன் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்துடுவேனா? போயா யோவ்…” என அசால்ட்டாய் சொல்லியவள்,

“வாங்க ஆன்ட்டி இன்னொரு க்ளாஸ் ஜூஸ் குடிச்சாதான் கொஞ்சம் ப்ரெஷா இருக்கும்…” என சொல்லவும் சிரித்துக்கொண்டே அகிலா உள்ளே செல்ல மீண்டும் திரும்பிய அஷ்மி,

“ஊட்டி வளர்த்த ஏ அன்பு தங்கச்சி…”  என பாடியவளை குழப்பமாய் ரத்தினசாமி பார்க்க,

“அதான்யா உன் தங்கச்சிக்கு சாப்பாடு ஊட்ட போகல. அகிலா ஆன்ட்டி இங்க வந்ததுல உன் தங்கச்சி உண்ணாவிரதத்தை ஆரம்பிச்சிருப்பாங்களே. அதான் ஊட்ட போகலையான்னு கேட்டேன்…” என சொல்லிவிட்டு தன் கையை பின்னால் கட்டிக்கொண்டு,

“வாழ்க்க நாடகமா? உன் பொறப்பு போய் கணக்கா? தினந்தோறும் வெறுங்கனவா? மயிலு விதிய எழுதயிலே அந்த சாமி உறங்கிடுச்சே?…” என பாடிக்கொண்டே செல்ல அவளை கொன்றுபோடும் ஆத்திரம் கிளர்ந்தது ரத்தினசாமிக்கு.

“என்ன இன்னைக்கு ஒரே பாட்டா வருது? அஷ்மி பாட்டுல உன்னை அடிச்சுக்க ஆளே இல்லைடா. சூப்பர் சிங்கர் பக்கம் போன அத்தனை கப்பையும் தட்டிட்டு வந்துடுவ நீ…” என தன்னையே சில்லாகித்து துள்ளிக்கொண்டு உள்ளே ஓடினாள்.

“இவளுக்கு இருக்குடா ஒரு நாள். இப்ப உன் அண்ணனை கூப்பிடுடா. வாசலுக்கு வந்து எம்புட்டு நேரம் ஆகிடுச்சு. வந்து பார்த்திருக்கானா பாரு. இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்த்திடறேன்…” என விஷாலிடம் எரிந்துவிழ,

“நான் இதுக்குதான் முதல்லையே வேண்டாம்னு சொன்னேன். நாளைக்கு ஆபீஸ்ல வச்சு எதுவானாலும் பேசிக்கலாம்னு…” சந்தோஷ் சொல்ல விஷால் தன் மொபைலில் இருந்து அதிபனுக்கு அழைப்பதற்குள் அவனே வந்துவிட்டான் அஷ்மியால்.

“உள்ள வாங்கப்பா. நீங்களும் வாங்கடா. ஏன் அங்கயே நிக்கறீங்க?…” நடந்ததை அனைத்தையும் அவனும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

அதிலும் அகிலா ரத்தினசாமியை எதிர்கொண்டவிதம் அவனுக்கு அத்தனை திருப்தியாக இருந்தது. இது போதும். அகிலாவை பற்றிய கவலை இனி இல்லை என்றே நினைத்தான்.

“அதிபா என்ன காரியம் பண்ணியிருக்கப்பா?…” என உள்ளே வந்ததும் கேக்க அதற்குள் அஷ்மி பத்மினியையும், சந்தியாவையும் அழைத்துக்கொண்டு ஹாலிற்கு வந்துவிட கப்சிப்பென ஆனார் ரத்தினசாமி.

ராஜாங்கமும் உள்ளே இருந்து வர ரத்தினசாமியின் முகம் யோசனையில் சுருங்கி விரிந்தது. அதை ராஜாங்கமும் கவனித்துக்கொண்டு தான் வந்தார்.

“வாங்க ரத்தினசாமி, மருமக உண்டாகியிருக்கா. இப்பத்தான் பார்க்க வரீங்களா? ரொம்ப லேட் நீங்க. தாத்தாவாகின பின்னாலையும் இன்னும் பொறுப்பு வரலைனா எப்படி?…” என பொடிவைத்து பேச அதை புரியாதவரா ரத்தினசாமி.

“கட்சி ஆபீஸ்ல வேலை. அதுதான் வரமுடியலை…” என்று பல்லை கடித்து சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே துவாரகா வந்துவிட்டாள்.

அவளை பார்த்ததும் அன்று தான் அசிங்கப்பட்டு அவளிடம் அடிவாங்கி தப்பிக்க ஓடி ஒளிந்தது ஞாபகத்திற்கு வர முகம் கறுத்து போனார்.

“சொல்லுங்கப்பா, ஏதாவது சாப்பிடறீங்களா?…” என அதிபன் கேட்டும் பேசமுடியாமல் வியர்த்து வழிந்தவர்,

“இல்லைப்பா நான் சும்மா தான் வந்தேன்…” என சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட துடித்தார்.

ஒரு வேகத்தில் கிளம்பி வந்து அகிலாவிடமும் பேசிவிட்டார் தான். அதன் பின்னால் தான் அன்னபூரணிக்கு தான் கொடுத்த வாக்கு ஞாபகத்திற்கு வர அதிபன் வேறு தன்மையாக அவரிடம் பேச என அவரை நிலைகுலைய  செய்தது.

இரண்டு நாள் முன்பு மகன் பேசி சென்றதை பிணக்கை மறந்து இப்பொழுது நன்றாய் பேசுவதை கெடுத்துக்கொள்ள வேண்டுமா என யோசித்தார்.

இப்போதைக்கு அகிலாவை மகனிடம் சண்டை பிடித்து வெளியேற்றுவதை விட தந்திரமாக அகிலாவே கிளம்பும் படி செய்யவேண்டும் என நினைத்துக்கொண்டார்.

“நான் கிளம்பறேன் அதிபா…” என சட்டென எழுந்துகொண்டவர் தன் மனைவியையும் சந்தியாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேற பத்மினிக்கு வெடவெடக்க ஆரம்பித்தது.

‘வீட்டில் என்ன பேசுவாரோ?’ என பயந்துபோனார்.

ரத்தினசாமி கிளம்பியதும் சந்தோஷும் கிளம்பிவிட விஷால் தான் அனைவரையும் பார்த்து நின்றான். அதிலும் துவாரகாவிடமும், அஷ்மிதவைடமும் அவனின் பார்வை அதிகமாக நிலைத்து மீண்டது.

இருவருமே அவனை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் பரிதாபம். அவனும் சில நிமிடங்கள் இருந்து அதிபனோடு பேசி சந்தியாவின் குழந்தையோடு விளையாடி என பொழுதை ஓட்டி அங்கிருந்து ஏமாற்றத்துடன் கிளம்பினான்.

சிறிது நேரத்தில் மற்றவர்களும் கிளம்ப வீடே வெறிச்சோடியது. அஷ்மிதா இருந்த பொழுது இருந்த உற்சாகம் அனைத்தையும் அவள் செல்லும் பொழுது எடுத்து சென்றுவிட்டதை  போல ஒரு உணர்வை தந்துவிட்டு சென்றாள்.

அதை அவர்களுமே உணர்வுப்பூர்வமாக உணர்ந்தனர்.

அதன் பின்னான நாட்கள் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்ட வேகத்துடன் தான் சென்றது.

அதிபனின் வேலை அகிலாவின் கவனிப்பு, அஷ்மியின் கலாட்டாக்கள் என துவாரகாவின் நாட்களை அனைத்தும் சுவாரசியமாகிக்கொண்டே சென்றது.

அகிலா வந்துவிட்டார் என்பதை அறிந்து அன்னபூரணி இரண்டொரு முறை வீட்டிற்கு வந்து பார்க்க அவரின் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை அகிலா. அவர் வந்து பேசினாலும் ஆமாம், இல்லை என்கிறதோடு ஓரிரு தலையசைப்புகள் மட்டுமே இருக்கும் அகிலாவிடம்.

இதை பார்த்த பத்மினியோ அங்கே சென்று அகிலாவிற்கு சங்கடத்தை தந்து அவர் மீண்டும் எங்காவது சென்றுவிடும் நிலைக்கு அவரை ஆளாக்கிவிடாதே என்று எச்சரிக்க அதன் பின்னே அங்கு செல்வதை நிறுத்திக்கொண்டார்.

செல்லாமல் இருந்துகொண்டரே தவிர வைத்தியநாதனின் புலம்பல்கள் தவிப்புகள் என அனைத்தையும் தாங்கமுடியாமல் நித்தம் நித்தம் வேதனையில் உழன்றுகொண்டிருந்தார்.

ஒரு முறையேனும் அகிலாவை பார்த்து மன்னிப்பை கேட்கவேண்டும் என வைத்தியநாதன் கெஞ்ச அன்னபூரணிக்கு அப்படி ஒரு ஆவேசம் பிறந்தது. அப்பொழுதும் அவர்களின் இந்த தவிர்ப்பு ஏன்? என யோசிக்கவில்லை.  தன் தவறை அவர் உணரவே இல்லை.

ரத்தினசாமி தான் வைத்தியநாதன் அங்கு செல்லவே கூடாது என்பதில் உறுதியாக பிடிவாதமாக இருந்தார். அதிலும் பத்மினி வேறு என்றைக்கும் பேசாதவர் குரலை உயர்த்தி பேசிவிட அந்த அவமானம் வேறு அன்னபூரணியை குறுகசெய்தது.

அதுவும் இன்றி வைத்தியநாதனின் உடல்நிலை வேறு குன்ற ஆரம்பிக்க அன்னபூரணிக்கு அவரை பார்க்கவே சரியாக போனது.

அதனாலும் வேறு அங்கு செல்ல தோன்றினாலும் செல்லாமல் இருந்தார். இனி எதற்கும் யாரிடமும் சென்று நின்று அவமானப்பட போவதில்லை என நினைத்தார்.

நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன?

அன்னபூரணி நினைக்காததும் நடந்தது. அனைத்தையும் சாதித்தே பழக்கப்பட்டவர் கடைசியாக வைத்தியநாதனின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் மூலையில் முடங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அனைத்தும் ரத்தினசாமியின் சக்திக்கு அப்பாற்ப்பட்டது.

துவாரகாவிற்கு ஒன்பதாம் மாதம் ஆரம்பிக்கும் தருவாய். ஒவ்வொரு நாளும் கண்மூடி திறக்கும் வேகத்தில் ஒடி ஒளிய அவளின் வளைகாப்பு ஏற்பாடுகள் மிக ஜரூராக நடக்க ஆரம்பித்தது.

விடிந்தால் வளைகாப்பு. வைத்தியநாதனுக்கு அழைப்பில்லை. அன்னபூரணியையுமே பெயருக்கு அழைத்தான் அதிரூபன் அவ்வளவே.

அதிபன் பிறந்த வீட்டில் இதை நடத்தாமல் தாங்கள் வசிக்கும் வீட்டில் அவன் வீட்டில் வளைகாப்பு வைத்திருக்க அதுவே ரத்தினசாமியை கோபமூட்டியது.

அன்னபூரணி வேறு எப்படியாவது இந்த வீட்டில் நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என நச்சரித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது தானே வைத்தியநாதனால் அதை பார்க்க முடியும்.

ரத்தினசாமிக்கு அது தலையிரக்கம் தான். ஆனாலும் தங்கைக்காய் அதையும் அவர் செய்தார். அதிரூபன் பார்த்த ஒற்றை பார்வையில்  கேட்ட வார்த்தையோடு திரும்பிவிட்டார் ரத்தினசாமி.

நாளை வளைகாப்பு. பத்மினி வீட்டையே இரண்டு பண்ணிக்கொண்டிந்தார். சந்தியாவும் ஸ்வேதாவும் அவருக்கு துணையாக பம்பரமாய் சுழன்றனர்.

ஆம், ஸ்வேதாவிற்கு சங்கரன் மூலம் சரியான மண்டகப்படி நிகழ்ந்திருந்தது. அதனால் அவ்வப்போது சந்தியாவுடன் அவளும் துவாரகாவை சென்று பார்த்து வந்தாள். அகிலவேணியிடமும் இன்முகமாகவே பழகினாள்.

சங்கரன் தன் பெண்ணிற்கே வளைகாப்பு போல வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வேலையில் சுற்றினார். மறுநாள் வைக்க வேண்டிய வரிசை பொருட்கள் சரியாக இருக்கிறதா என ஒன்றுக்கு பத்துமுறை அர்னவ்வை விட்டு சரிபார்க்க சொல்லி அனைவரையும் படுத்தி வைத்தார்.

இதில் பார்வையாளராய் இருந்தது அன்னபூரணியும், ரத்தினசாமியும் மட்டும். ஒருவருக்கு நடப்பதில் பிடித்தமில்லை. இன்னொருவருக்கு அதில் கலந்துகொள்ள முடியவில்லையே என்கிற ஆதங்கம்.

யாரின் வருத்தத்தையும் பொருட்படுத்தாமல் மறுநாள் மிக அழகானதாகவே விடிந்தது. சீர்வரிசைகளுடன் அனைவரும் புறப்பட்டாகிற்று அதிரூபன் துவாரகா இல்லத்திற்கு.

மின்னல் தெறிக்கும்…

Advertisement