Advertisement

அத்தியாயம் எழுபத்தி ஒன்பது :

கண்ணில் வலியிருந்தால்.. கனவுகள் வருவதில்லை! 

ஷாம்பெயின் பாட்டிலில் இருந்த திரவம் பீச்சியடிக்க…  அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பார்ட்டி ஹால் களை கட்டியது. The Conquerors’ என்று கூடவே அந்த மாநிலத்தில் பெயரோடு சேர்த்து புதிய பெயர் இடப்பட்டு ஈஸ்வர் உரிமையாளர் ஆகியிருந்த கிரிக்கெட் அணியினை பற்றிய அறிவிப்பு… அதன் பின் நடக்கும் பார்ட்டி.  

பழைய உரிமையாளரும், அணியினரும் இருக்க.. கூட மற்ற முக்கியஸ்தர்கள்.. பிரபலங்கள்… மீடியா ஆட்கள் என அந்த இடமே ஆட்களோடு ஜகஜோதியாய் ஜொலித்தது…

இது மற்றொரு மாய உலகம், அதற்குள் அடியெடுத்து வைத்திருந்தான் ஈஸ்வர்.

கூட முரளியும் ஜகனும். வேறு வீட்டினர் யாரும் இல்லை. பத்துவையும்  அழைத்து இருந்தான், ஆனால் அவன் வரவில்லை.. இன்னுமே ஒரு தயக்கம் பத்துவிடம் ஈஸ்வரைக் குறித்து.. நன்றாக இப்போது பேசினாலும் ஒரு சகஜ மனப் பான்மை இன்னும் வரவில்லை.. நமஷிவாயத்தை அவனே வேண்டாம் என்று சொல்லியே வந்திருந்தான்.. இன்னும் அவருக்கு இந்த பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.. அதுவுமன்றி இது வேறு மாநிலம் கூட..   

பெண் பிள்ளைகளை இந்த மாதிரி பார்ட்டிக்கு அழைக்கும் வழக்கம் இன்னும் அவர்களின் வீட்டினுள் நுழையவில்லை என்பதால் அவர்களுக்கு அது ஒரு செய்தியே..

நம் மாநிலத்தின் செய்தித் தாள்களில் முதல் பக்கத்திலேயே அவனின் புகைப்படம் இந்த ஐ பீ எல் டீம் வாங்கியதற்கு.. மற்றுமொரு பரிமாணத்திற்கு அவனின் வியாபாரத்தை கொண்டு சென்றிருந்தான்..

ஆளாளுக்கு வாழ்த்துச் சொல்ல.. அது எதுவும் ஈஸ்வரை எட்டவில்லை. வெகு நாட்களுக்குப் பிறகு கையினில் மதுபானக் கோப்பையும்.. தொண்டையில் மிடறு மிடறாக சரித்தபடி எல்லோரையும் பார்வையிட்டுக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தான்..

ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் சிலரும் பார்ட்டியில் இருந்தனர்.. அங்கிருந்தவர்களின் குடும்ப ஆட்கள், திரைத்துறை பிரபலங்கள், மாடல்கள் என..

அதில் முரளியுடன் ஒரு மாடல் அழகி சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருக்க.. “இவன் என்னடா இந்த ஜொள்ளு விடறான் அவகிட்ட” என்று ஈஸ்வர் முரளியின் மேல் பார்வையை பதித்து இருந்தான்..

ஆனால் அதிகம் பார்வையிட முடியாமல் யாராவது பேசிக் கொண்டு இருந்தனர்.. கிரிகெட் வீரர்கள் சிலருடனும் அழகிகள் சிலர் வந்திருக்க.. அவர்களின் உடைகள் அணிமணிகள்.. ம்கூம் ஈஸ்வரால் சகிக்கவும் முடியவில்லை.. ரசிக்கவும் முடியவில்லை.. தான் தன் எண்ணப் போக்கை சற்று விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்ற மனப்பான்மையுடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

பலரும் அவனுடன் பேச ஆர்வம் காட்ட.. ஒதுங்கித் தான் நின்றான்.. அப்போது பழைய உரிமையாளர் அவனிடம் வந்தவர், “ஷி இஸ் வர்ஷா.. உங்களுக்குத் தெரியுமே, பெரிய மாடல், இப்போ சில படங்கள் நடிச்சிட்டு இருக்காங்க, உங்க ஊரு தான்” என..

“ஓஹ்” என்று செய்தியாய் கேட்டுக் கொண்டான்.. அவனுக்கு அப்படியொன்றும் அவளைத் தெரியவில்லை.. மரியாதை நிமித்தம் வணக்கதிற்காய் கை குவிக்க..

பொதுவாய் யாரும் வர்ஷாவைப் பார்க்கும் போது இப்படி ஒரு அழகா என வியந்து பார்ப்பார்… அப்படி ஒரு பாவனை ஈஸ்வரின் கண்களில் இல்லவே இல்லை.. வெகு சாதாரணமான பார்வை.. ஆனாலும் அதில் ஒரு மரியாதையும் தெரிய.. அதுவே வர்ஷாவை அவனின் புறம் ஈர்த்தது.   

வர்ஷா கை குலுக்குவதற்காய் கை நீட்டினாள், ஈஸ்வர் வணக்கம் சொல்லிய பிறகும்.. ஈஸ்வர் பார்த்து நிற்க… “இவ்வளவு ஹேண்ட்சம் மேன் கிட்ட கை குலுக்கலைன்னா இன்னைக்கு நைட் எனக்கு தூக்கமே வராது” என சொல்லி பளிச்சென்று ஒரு புன்னகை புரிய அதில் சிநேகபாவத்தைத் தவிர வேறொன்றுமில்லை.  

“கை குலுக்கறது மட்டும் போதுமா?” என்று அந்த உரிமையாளர் பேச.. அந்தப் பேச்சை அவள் ரசிக்கவில்லை என்ற பாவனையில் தைரியமாய் அவரை பார்த்தாள்.. ஆனாலும் மறுத்து எதுவும் பேசவில்லை.   

திரும்ப ஈஸ்வரை பார்த்து புன்னகைக்க.. “கிரேட் ஈஸ்வர்!” என்று அவனின் தோள் தட்டியவர்.. “பேச பழக அத்தனை பேர் வெயிட் பண்றாங்க, பட்சி உன்னைச் சுத்தி வட்டமிடுது, என்சாய்” என சொல்லிப் போகப் போக.. அதற்கான பிரதிபலிப்பு எதுவும் இல்லை ஈஸ்வரிடம்.. ஆனாலும் சற்று ஆராய்ந்து தான் பார்த்திருந்தான்..

அந்த அவளின் வர்ஷா என்ற பெயர் அவனை பார்க்க வைத்தது.. பேச்சு தான் சற்று அதிகப் படியாய் தெரிந்தது.. மற்றபடி உடைகளில் நளினம் இருந்த அளவு கண்ணியமும் இருந்தது.. ஆளை அசரவைக்கும் அழகி தான்.. பாவனைகளிலேயே ஒரு திமிர் இருக்க..       

கை இறக்காமல் நீட்டியபடியே வைத்திருக்க.. வேறு வழியில்லாமல் கை பற்றி குலுக்கினான்.. “என்னை பத்தி சொல்லாம போறீங்களே” என வர்ஷா சொல்ல..

“உன்னை பத்தி யாராவது தனியா சொல்லணுமா, யு ஆர் எ ஸ்டார்” என்று அந்த மனிதர் ஏகத்திற்கும் வழிய..

அவரின் வழிசலை எல்லாம் ஒரு அலட்சியத்தோடு ஒதுக்கி ஈஸ்வரை தான் ஆர்வமாய் பார்த்து இருந்தாள்..

“ஷி இஸ் தி பிராண்ட் அம்பாசிடர் ஆஃப் அவர் டீம்” என்றவர்.. “இனிமேலும் கண்டினியு ஆவாங்க தானே” என,

“எஸ், எஸ், அப்படியே ஆகட்டும்” என்று விட்டான்.. பின்பு அவர்களிடம் பேசியபடி ஜகனையும் முரளியையும் பார்க்க.. ஜகன் இருக்கும் அத்தனை கிரிகெகட் வீரர்களிடமும் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டு இருக்க..

முரளி அடுத்த அழகியிடம் பேசிக் கொண்டு இருந்தான்.. “அடடா, என்னடா பண்ணிட்டு இருக்கான் இவன்” என நினைத்து, “எக்ஸ்கியுஸ் மீ” என அவர்களிடம் கேட்டு முரளியின் அருகில் சென்றவன், அவனைத் தனியாக தள்ளிக் கொண்டு வந்து “என்னடா பண்ணிட்டு இருக்க நீ?” என,

“என்ன பண்ணிட்டு இருக்கேன், ஒன்னுமே பண்ணலைடா!”  

“மாத்தி மாத்தி இப்படி ஜொள்ளு விட்டுட்டு இருக்க” என..

“ஜொள்ளு மட்டும் தானே டா விட முடியும், மேல ப்ரொசீட் பண்ண முடியாதே!” என கவலையாக முரளி சொல்ல..

“ரொம்பக் கவலை போல” என ஈஸ்வர் கிண்டல் செய்தவன், “இரு, ஷாலினி கிட்ட சொல்றேன்” என,

“நீ சொல்லிட்டாலும்.. அவ நம்பிட்டாலும்” என சிரித்தவன்.. “நான் இன்னொரு பொண்ணை கிஸ் பண்ணிட்டு நிக்கறதை அவ பார்த்தாலும் என்னை நம்புவா.. அவளை பொறுத்தவரை அவ புருஷன் ஒரு அப்பாவி” என,

“அடப் பாவி” என வாய் பிளந்தான் ஈஸ்வர்.. இந்த ஈஸ்வரின் பாவனைகள் அத்தனையும் வர்ஷா ரசித்து பார்த்திருக்க.. ஒரு இரண்டு மூன்று பேர் வர்ஷாவின் பார்வை ஈஸ்வரை தொடர்வதை கவனிக்க ஆரம்பித்தனர்.   

“வேணா டெஸ்ட் பண்ணிக் காட்டட்டுமா.. ஒரு போட்டோ எடுத்து ஷாலினி கிட்ட காட்டறியா?” என,

“கொஞ்சமா உள்ள போனதுக்கே இவ்வளவு எஃபக்ட்டா டா.. இன்னும் நிறையப் போனா?” என ஆச்சர்யப் படுவது போல நடிக்க..

“யாரு சொன்னா நான் குடிச்சேன்னு, அது சும்மா என்னை ஒன்னும் தெரியாத பையன்னு யாரும் நினைச்சிடக் கூடாதுன்னு கைல வெச்சிருக்கேன்!”

“ஏன்டா குடிக்க வேண்டியது தானே?”

“அப்புறம் உன்னை யாரு ரூம் கொண்டு போய் பத்திரமா சேர்ப்பா?”

“உனக்கே இது ஓவரா தெரியலை, இங்க இருந்து மேல இருக்குற ரூம்க்கு என்னை கூட்டிட்டுப் போக நீ குடிக்காம இருக்குறியா?” என,

“நீ இப்போ எத்தனாவது பெக் அடிச்சிட்டு இருக்க தெரியுமா?” என சற்று கோபமாகக் கேட்கவும்..  

“எண்ணிட்டா இருக்க?” என்று ஈஸ்வர் அசடு வழிந்தான்.

“பின்ன, இதோட முடிக்கற! இனி கிளாஸ் கைல எடுக்கக் கூடாது!” என முரளி அதட்ட..

“நீ கண்டினியு பண்ணுடா?” என ஈஸ்வர் இடத்தை விட்டு அகலப் போக..

“ஈஸ்வர்” என்று அதட்டிய முரளி.. “சீரியஸா சொல்றேன், இதோட நிறுத்திக்கோ!” என,

“குடிச்சே பல வருஷம் ஆச்சு”

“அதுக்காக மொத்தமா சேர்த்து இன்னைக்கே குடிப்பியா” என..

“எவ்வளவு குடிச்சாலும் ஏறலை” என்றான் பரிதாபமாக.. அவனின் போதை ஒருவளின் கண்களில் இருக்க, அதனை இங்கே பரிதாபமாக தேடிக் கொண்டிருந்தான்.. மிகப் பெரிய நாள் இது, ஆனாலும் முழுதாக அனுபவிக்க முடியவில்லை.. “நான் கிஸ் பண்றதைப் பார்த்தாலும் கூட என்னை நம்புவா ஷாலினி” என முரளி சொல்லியிருக்க, அப்படி ஒரு நம்பிக்கை என்னால் என்றுமே வர்ஷினிக்கு கொடுக்க முடியாது எனத் தோன்ற.. சோர்வாக இருந்தது..

“போதும் நிறுத்திக்கோ” என முரளி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.. சொல்லச் சொல்ல பக்கத்தில் இருந்த பேரரை அழைத்து மீண்டும் ஒன்று எடுத்து ஒரே மூச்சில் தொண்டையில் சரித்தான்..      

“ஆம்!” என்றைக்கு வர்ஷினி போதை மாத்திரைகள் எடுக்கின்றாள் என்று தெரிந்ததோ அன்றிலிருந்து ஈஸ்வர் குடியைத் தொட்டது கூட இல்லை..

அதற்குள் “ஹல்லோ சர்” என்று யாரோ வர ஈஸ்வர் அவர்களிடம் பேச நிற்க.. முரளி கவலையாகத் தான் பார்த்து இருந்தான் ஈஸ்வரை..

உண்மையில் அவன் ஈஸ்வர் குடிப்பதை முதலில் கவனிக்கவில்லை, ஜகன் தான் சற்று முன் அவனிடம் வந்து.. “ஒரு பாட்டில் ஃபுல்லா இதுவரை உள்ள போயிடுச்சு.. என்னால சொல்ல முடியாது, நீ சொல்லு!” எனச் சொல்லியிருந்தான்..

அதன் பின்னே தான் கவனிக்க ஆரம்பித்தவன்.. உரிமையாளருடன் அவன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து நிற்க .. ஈஸ்வரே அவனைத் தேடி வந்துவிட்டான்.

அப்போதுதான் அந்த பார்ட்டி ஹாலிற்குள் அஸ்வின் நுழைந்தான்..  ஈஸ்வரை பார்த்ததும் அவன் காட்டிய பவ்யம்.. ஆம் சற்று அதிகம் தான்.. பின்னே தன்னை மீண்டும் இந்த ஐ பீ எல் லில் சேர்த்திருப்பது.. என்ன காரணம் ஈஸ்வரின் மனதில் ஓடுகின்றது என்று தெரியாத போதும்.. இது எதோ ஒரு வகையில் அவனை கௌரவப் படுத்தியதாக தான் எண்ணம். அதன் பிறகு சில அறிவிப்புகள்..      

“லேடீஸ் அண்ட் ஜென்டில் மேன்.. இந்த டீம் ஓனர் நான்னு இப்போ உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.. என்னோட பார்ட்னர் என்னோட அண்ணா ஜகன்னாத் இவர்” என்று காட்டி.. “தென் இந்த டீம் மேனேஜர் மிஸ்டர் அஸ்வின் பிரகாஷம்.. இவங்க ரெண்டு பேரும் தான் இதை மேனேஜ் பண்ணப் போறாங்க” என..

அவர்கள் இருவருக்குமே இது புதிய செய்தி..

அடுத்த நாள் செய்தி தாள்களில் ஈஸ்வர் ஜகனை தோளோடு அணைத்து இருக்க.. அவர்களின் பின்னால் அஸ்வின் நிற்பது போன்ற புகைப் படம் வருமாறு ஏற்பாடு செய்திருந்தான்.  

பார்ட்டி நடந்து கொண்டிருக்கும் போதே ஈஸ்வரை முரளி தள்ளிக் கொண்டு வந்துவிட்டான் யாரின் கவனத்தையும் கவராமல்.. அதன் பின் பார்ட்டியை ஜகனும் அஸ்வினும் பார்த்துக் கொண்டனர்.

மேலே ரூமிற்கு எல்லாம் செல்லவில்லை.. ஜகனிடம் “என்னோட ஈஸ்வரோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துகிட்டு ரூம் வேகெட் பண்ணி நீங்க வந்துடுங்க.. இப்போ பன்னிரண்டு மணிக்கு ஒரு பிளைட் இருக்கு…. நான் ஈஸ்வரை சென்னை கூட்டிட்டுப் போறேன்” என அலைபேசியில் சொல்லிவிட்டவன்.. அஸ்வினிற்கு அதனை ஒரு மெசேஜாகத் தட்டி விட்டுக் கிளம்பியிருந்தான்.

பின்னே நிறைய நிறைய குடித்துக் கொண்டே இருந்தான் ஈஸ்வர்.. என்னவோ அவனை வீடு கொண்டு சேர்த்துவிடு என்று உள்மனது சொல்ல.. காலை நான்கு மணிக்கு ஈஸ்வரின் வீட்டின் முன் நின்று வர்ஷினிக்கு அழைக்க.. அவள் வந்து கதவை திறந்து விட்டாள்..

ஈஸ்வர் ஒரு வார்த்தை கூட முரளியிடம் பேசவில்லை ஆனால் அவன் சொன்னதை தட்டாமல் செய்தான். தனக்கு ஏறவில்லை ஏறவில்லை என்று அவன் சொல்லிக் கொண்டிருந்த மப்பும் சற்று அதிகமாக இருக்க.. சிறு தள்ளாட்டாம் கூட… ஆனால் நினைவு தப்பும் அளவிற்கோ இல்லை, அசட்டுத் தனங்கள் செய்யும் அளவிற்கோ இல்லை. அவனின் நிலை அவனின் கட்டுப் பாட்டிற்குள் தான். வர்ஷினியைப் பார்வையால் தழுவிக் கொண்டு நிற்காமல், அவனின் ரூம் சென்று விட்டான்.

எதுவும் பேசாமல் செல்லும் ஈஸ்வரை பார்த்தவள் “என்ன ஆச்சு முரளிண்ணா, ஏதாவது ப்ராப்ளமா?” என,

“இல்லையில்லை, எல்லாம் நல்லாப் போச்சு! நாங்க சீக்கிரம் கிளம்பிட்டோம்.. பார்த்துக்கோ!”  

“என்ன பார்த்துக்க?” எனப் புரியாமல் வர்ஷினி கேட்க,

“நிறையக் குடிச்சிருக்கான்” என,

“ப்ச்” என்றவளின் முகத்தினில் ஒரு சலிப்பு தோன்றியது.. பிறகு பெருமூச்சொன்றை வெளியிட்டவள் “நீங்களும் இங்கேயே தூங்குங்க காலையில போங்க” என,

“தூங்குனா உடனே எந்திரிக்க முடியாது, வீட்டுக்கே போயிடறேன்” எனக் கிளம்பினான்..

“சரி அண்ணா” என அவள் வர..

“வாட்ச்மேன் இருக்கான் தானே, நான் போயிக்கறேன்! நீ கதவை சாத்திக்கோ” என அவள் சாத்திய பிறகு தான் படியே இறங்கினான்..

ரூமின் உள் செல்ல, இருந்த உடையில் அப்படியே படுத்திருந்தான், ஆனால் உறங்கியது போலத் தெரியவில்லை.. கோட், டை, என ஃபார்மலான பார்ட்டி உடை.. கண்மூடியிருந்தவனின் முகத்தை சில நொடிகள் பார்த்தவள்.. அவனின் அருகில் சென்று டை தளர்த்தினாள்.. உணர்ந்ததும் “தள்ளி போ வர்ஷ்” என,

“முதல்ல கண்ணைத் திறங்க” என்று அதட்ட..

“மாட்டேன், நீ என்னைத் தொடாதே, தூரப் போ!” என,

“ப்ச்” என்று சலித்தவள், தளர்த்திய டையை உருவ முற்பட..

“சொன்னாக் கேளு, நிறையக் குடிச்சிருக்கேன், என்னோட ஒரு ஒரு அணுவும் நீ வேணும்னு சத்தம் போட்டுட்டு இருக்கு, கண்ணைத் தொறந்தேன், என்ன பண்ணுவேன்னு தெரியாது.. தூரப் போ” எனக் கத்த,

டையை உருவ முற்பட்ட கைகளில் ஒரு தயக்கம், அந்தத் தயக்கம் இன்னும் கோபத்தைக் கொடுக்க.. கண்களைத் திறந்தவன் ஒரே இழுப்பில் அவளை இழுத்து மேலே போட்டுக் கொண்டு அவளைத் தீவிரமாய் பார்த்தான்..

“குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?” என்ற அவனின் கேள்விக்கு அவள் சொன்ன பதில் ஞாபகத்தில் வந்தது..       

“ரொம்ப ஆசையா இருக்கு, ஆனா கொஞ்சம் கூட இஷ்டமில்லை” என்றாள் அவனை நேருக்கு நேர் பார்த்து.

“என்ன பதில் இது?” என்பது போல் அவன் பார்க்க,

“ஸ்டில் ஐ அம் நாட் ஃபிட் டு பீ எ மதர்.. வாழ்க்கையில எனக்கு எந்த வேல்யுசும் தெரியலை.. எதுவுமே தெரியலை.. என்ன எதிர்பார்க்கிறேன்னு தெரியவேயில்லை.. உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு, ஆனா உங்களைப் பார்க்கும் போது ரொம்ப எரிச்சலா கோபமா வருது”

“என்னோட எதிர்பார்ப்பு என்னன்னு தெளிவா சொல்லியும் நீங்க ஏமாத்திட்டீங்க.. ரொம்ப முன்னாடி நடந்தது, ஆனாலும் மனசு அதையே திரும்பத் திரும்ப நினைக்குது.. எனக்கு மன்னிக்கற குணமும் இல்லை மறக்கற குணமும் இல்லை”

“என்னால என் குழந்தை கஷ்டப் படக் கூடாது” என

அவனுக்கு புரியவேயில்லை.. அவளை புரிந்து கொள்ள முயன்றான்.. உன்னை பிடிக்கவில்லை, உன் குழந்தை வேண்டாம் என்றால் அது வேறு.. இது என்ன பதில்..

அப்போதைக்கு அந்தப் பேச்சை விட்டவன், அதன் பிறகு சில சந்தர்ப்பங்களில் மெது மெதுவாக.. 

“ஏன் வர்ஷ் நீயும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்தற.. நல்லா வளர்க்கலாம் நம்ம குழந்தையை!”  

“எனக்குத் தெரியும், நீங்க நல்லா தான் வளர்ப்பீங்க. ஆனா நான்.. ? எனக்கு யாரையுமே பிடிக்கலை, நீங்க தான் என்னை ஏமாத்தினீங்க, ஆனா வேற யாரையும் கூடப் பிடிக்கலை, கமலம்மாவை, முரளிண்ணாவை, பத்துண்ணாவை… கொஞ்சம் நாள்ல பைத்தியம் பிடிச்சு சுத்தப் போறேன் போல, அந்த டாக்டர் சொன்ன மாதிரி! நான் நிஜமான லூசு!” என்றவளின் கண்களில் கண்ணீரை பார்த்தவனுக்கு விதார்தை அடித்து துவைக்கும் வெறி கிளம்பியது.  

ரஞ்சனியைத் தவிர வேறு யாருக்கும் வீட்டினில் அவள் கடித்தது தெரியாது.. யாருக்கும் யாரும் தெரியவிடவில்லை.   

“வர்ஷ் இந்த உலகத்துல நான் இருக்குற வரை உனக்கு எதுவும் ஆகாது! இப்படி எல்லாம் நினைக்காதே!” என,  

“ப்ச், வேண்டாம்! நாம வேற பேசலாம்!” என்று முடித்து விட்டாள்..  

“எதைப் பேசினாலும் வேற பேசலாம்னா, நான் என்ன பண்ண?” என்ற ஈஸ்வரின் கேள்விக்கு பதிலே இல்லை!

ஆனால் அவன் காய்ச்சலில் விழுந்த அந்த மூன்று நான்கு நாட்கள் அவனை நன்றாக கவனித்துக் கொண்டாள்.. மூன்று வருடம் கோபம் கொண்டு பிரிந்தவள் போலத் தெரியவேயில்லை…

வெகு பக்கத்தில் அந்த நீல நிறக் கண்களை பார்க்கும் தன்னை தானே அவன் கட்டுப் படுத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டு விட்டான்..

அதன் பிறகு வந்த இந்த ஒரு மாதத்தில் ஐ பீ எல் வாங்குவது வெற்றிகரமாக நடந்து விட்ட போதும் அதனை சிறிதும் அனுபவிக்க முடியவில்லை.. எல்லோரும் அவனின் வெற்றியை அவனை ஆச்சர்யமாய் பார்க்க, அவன் வர்ஷினி தன்னை பார்ப்பாளா என தான் பார்த்துக் கொண்டிருந்தான். 

இயல்பாய் இருந்தாளா? இயல்பாய் இருப்பது போல காட்டிக் கொள்கிறாளா? எதுவும் தெரியவில்லை. இதற்கு ஒரே படுக்கை தான், ஆனால் ஒட்டிக் கொண்டு படுக்கவில்லை.. தனித்தனியாய்.. இயல்பான தொடுகை கூட இல்லை.. அதற்கான சந்தர்ப்பங்கள் வரவில்லை.. ஈஸ்வருக்கு அவனாய் அருகில் செல்ல முடியவில்லை. பார்வையிலேயே தூர நிறுத்தினாள். 

ஒரு முறை சென்று அவளை கடிக்கும் நிலைக்கு தள்ளியதால் அது வேறு பயம் கொடுத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினான்.

என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் மண்டைக்குள் வர்ஷினி மட்டுமே ஓடிக் கொண்டு இருந்தாள் ஈஸ்வருக்கு.

இன்னும் யார் வீட்டிற்கும் செல்லவில்லை.. யாராய் இருந்தாலும் இங்கே வந்து தான் பார்த்து சென்றனர்.. என்ன எல்லோரிடமும் சகஜமாய் பேசினாள்.. அதுவரையில் நிம்மதி.

திரும்ப வேலை வேறு செய்து கொண்டிருந்தாள், கார்டூன் போல.. ஐ பீ எல் அணி வாங்கும் விஷயம் தலைக்கு மேல் இருந்ததால் ஈஸ்வர் அதற்கு மேல் எதுவும் கவனிக்க முடியவில்லை. இது முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டான்.

என்ன ஒரே ஆறுதலாக டைவர்ஸ் பற்றியோ, வீட்டில் இருந்து போவது பற்றியோ பேசவில்லை. ஐ பீ எல் முடிந்ததும் புது வீட்டு வேலைகள் வேறு தலைக்கு மேல் இருந்தது..   

இப்படியாக ஈஸ்வரின் நினைவலைகள் செல்ல.. இதோ இப்போது அவளிடம் “தூரப் போ” என்றவன், முடியாமல் இழுத்து மேலே போட்டுக் கொண்டான்..

அந்த நீல நிறக் கண்களை தீவிரமாய் பார்க்கவும்.. தயங்காமல் அந்த பார்வையை எதிர்கொண்டவள்.. அவனுக்கு சற்றும் சளைக்காமல் பதில் பார்வை பார்க்க, இன்னும் இன்னும் அவனுக்கு கோபம் வந்தது.. கூடவே காதலும் வந்தது.. பித்தும் பிடித்தது… கட்டுப்பாடு இழக்க ஆரம்பித்தவனை இன்னும் இழக்க வைத்தது வர்ஷினியின் பேச்சு..

“ரொம்ப அழகா இருக்காங்க இல்லை” என்றாள்.. அவள் சொல்லியவுடனயே யாரைச் சொல்கிறாள் எனப் புரிந்தது.. ஒரு மாதம் வரையிலும் பேசாமல் இருந்ததினால் அவள் ஐஸ்வர்யாவைப் பார்த்ததை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நினைத்திருக்க.. இல்லை நான் மறக்கவில்லை என அவளின் பேச்சு காட்டிக் கொடுத்தது. 

கூடவே “அவங்களைக் கல்யாணம் பண்ணியிருந்தா நிம்மதியா இருந்திருப்போம்னு தோணுதா!” என,

ஈஸ்வருக்கு கண் மண் தெரியாத கோபம் வந்தது.. பேசும் அவளின் இதழ்களை.. “சே” என்று கூறி தலையை உதறிக் கொண்டான்.. “பேசாத என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.. இவ்ளோ சொல்றேன்.. ஆனாலும்..” என்று நிறுத்தி அவன் தாடையை கடித்த விதம்.. கூடவே அவளை இறுக்கிப் பிடித்த விதம்.. வேறு யாராயிருந்தாலும் பயந்திருப்பர்..  வர்ஷினி ம்கூம்.. வலிக்குமே என்று அவனாகத் தான் பிடியை தளர்த்தினான்..  

“இன்னும் கொஞ்சம் நாள்ல தான் நீ பைத்தியமாகப் போற, ஆனா ஏற்கனவே நான் ஆகிட்டேன் உன் மேல” என்றவன்..        

“அவ கிட்ட காதல் சொன்ன பிறகு கிட்ட தட்ட ஆறு மாசம் கழிச்சு உன்னைப் பார்த்தேன்.. அதுவரை அவ என்னைத் தொடணும்னு தோணினது இல்லை, நான் அவளைத் தொடணும்னு தோணினது இல்லை.. தொட்டதும் இல்லை!”

“ஆனா உன்னை நேர்ல பார்க்கும் போது மட்டுமில்லை, நினைச்சாக் கூட..” என்றவன்.. வார்த்தைகளை நிறுத்தி.. “கல்யாணம் ஆனா பிறகு என்னோட அந்த நடத்தைக்கெல்லாம் காரணம் அதுதான்.. தப்பு தான்! பட் ஐ பேட்லி நீடட் யூ.. அதுதான் உன்னை என்கிட்டே வரவெச்சேன். நான் வந்திருந்தேன் உன்னை எந்தளவு ஹர்ட் பண்ணியிருப்பேன் எனக்கே தெரியாது .. அதுக்கு கிடைச்ச பரிசு தான் நீ என்னைப் பார்த்து சொன்ன அந்த வார்த்தை.. என் மனைவி என்னை பார்த்து அந்த வார்த்தை சொல்றதுன்றது, என்னை உயிரோட பொதச்சதுக்கு சமானம்.. ஆனா நீ இப்படி யோசிப்பேன் நான் நினைச்சதே இல்லை!”  

“நம்ம கல்யாணம் நடந்த பிறகு ரொம்ப ரொம்ப பலகீனமானவனா மாறிட்டு வந்தேன்.. ஒரு நாள் கூட நீ இல்லாம என்னால தூங்க முடியாது… ஆனா அந்த நாட்கள் என் வாழ்க்கையில வந்ததுனால தான் நான் நார்மல் ஆனேன். இல்லை முடிஞ்சு போயிருப்பேன்”  

“திகட்ட திகட்ட அனுபவிச்சேன்.. அப்புறம் தோணினது இது லைஃப் கிடையாது இல்லையா.. இதுல இருந்து வெளில வரணும்னு நினைச்சு உன்னை விட்டு தள்ளி நின்னேன்.. இதுல பணப் பிரச்சனை, ரஞ்சனி நடுவில”

“இப்படி எல்லாம் ரொம்ப சுயநலமா யோசிச்சு உன்னை தொலைச்சிட்டேன்.. என்னையே சுத்தி வர்ற ஹஸ்பன்ட் வேணும்னு நீ கேட்டது போல என்னால இருக்க முடியலை. ஆனா எப்பவும் உன்னை மறந்தது இல்லை! உன்னை மட்டும் தான் நினைச்சு இருப்பேன்!”        

“உனக்கு சொன்னாப் புரியாது” என்றவன் அவளை ஒரே தள்ளாக கீழே தள்ளியவன்.. எழுந்து அறை தாளிடப் பட்டு இருக்கிறதா எனப் பார்க்க.. இல்லை வெறுமனே தான் சாத்தி வந்திருந்தாள்.. சென்று அதனை சாற்றி வர..

அவன் எப்படி தள்ளினானோ அப்படியே அசையாமல் பார்த்த படி தான் இருந்தாள் தீவிரமாக… தள்ளியதில் அவளின் நைட்டியும் முழங்கால்களுக்கு மேல் ஏறி இருக்க.. அதை சரி செய்யும் எண்ணம் சற்று இல்லாதவளாக அப்படியே தான் கிடந்தாள்..

அவள் தளர்த்திய டையை கழற்றி வீசியவன்.. கோட்டையும், ஷர்ட்டும் கூட கழற்றி வீச..

இன்னுமே தீவிரமாகத் தான் அவனைப் பார்த்தாள்..

அருகில் நெருங்கிய போதும் அப்படியே தான் படுத்திருக்க.. நின்று பார்வையை அவள் மீது முழுதாய் ஓட்டினாலும் கண்களில் வந்து நிலைக்க… அதில் தெரிந்த தீவிரத் தன்மை..

“என்ன நான் பண்ணினேன்?’ என்று கேட்க வைக்க..

“என்னவோ திகட்ட திகட்ட அனுபவிச்சேன்! என்னை பலகீனமாகினதை நான் தவிர்த்தேன்னு எவ்வளவு ஈஸியா சொல்றீங்க.. ஃபீலிங்க்ஸ் ஆர் சேம் னா.. எத்தனை நாள் நான் அதுக்கு தவிச்சிருப்பேன்னு உங்களுக்கு புரியலையா..” என எழுந்து அமர்ந்தவள்.. அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டாள்.

அதிர்ந்து அவளைப் பார்த்தான்.. “அப்போ கூட யு ஆர் ஃபிட் ஃபார் நத்திங்னா சொன்னேன், நான் தானே ட்ரக்ஸ் தேடித் போனேன்.. இன்னும் இன்னும் பிரச்னையை தேடிக்கிட்டேன்.. இவ்வளவு நாளா தனியா சுத்திட்டு இருக்கேன்” என்றவளின் பார்வையில் தீவிரத்தோடு கண்ணீரும் சேர்ந்து கொண்டது..   

“எஸ், எப்பவும் தனியா இருந்த ஒரு பொண்ணு! திடீர்ன்னு ஒரு புது உலகத்துக்குள்ள கூட்டிட்டு போறீங்க, அப்புறம் திடீர்ன்னு விட்டுட்டு போயிட்டீங்க.. அந்த ஏஜ்ல எனக்கு அதை ஹேண்டில் பண்ணத் தெரியலை.. உங்க கிட்ட சொல்லவும் முடியலை.. அப்படி எப்படி சொல்ல முடியும்!”  

“முதல்ல என்கிட்டே மிஸ் பிஹேவ் பண்ணுனீங்க, அதுல இருந்து நான் வெளில வர்றதுக்குள்ள.. நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணினாலும் என்னை தூக்கிடுவேன்னு சொன்னீங்க.. ஒரு பதினெட்டு வயசு பொண்ணுக்கு அது எவ்வளவு ஸ்ட்ரெஸ் குடுக்கும் நீங்க யோசிக்கலை.. அப்புறம் எங்கப்பா சாகப் போறது.. திரும்ப கல்யாணம் செஞ்சு இப்படி ஒரு நடத்தை.. எல்லாம் சேர்ந்து தான் என்னை ட்ரக்ஸ் எடுக்க வெச்சது”   

“ஆனா நீங்க சாரி கேட்டா நான் அக்சப்ட் பண்ணிக்கணும், எல்லாம் மறந்து ஒரு ஹேப்பி ஃலைப் உங்களோட வாழணும்.. நீங்க அப்போ எனக்கு வேணும்னு சொல்லியிருந்தாலும் நான் கெட்டப் பொண்ணு.. நீங்க இப்போ எனக்கு வேண்டாம்னு சொன்னாலும் நான் கெட்டப் பொண்ணு! ஹவ் ஃபிஷி தி லைப் இஸ்” என்று சோர்வாக சொன்னவள்.. அடுத்த நொடி ஒரு நிமிர்வோடு..    

“ஆனா நான் இப்படி தான்.. இந்த மாதிரி நான் இருக்கக் கூடாதுன்னு நீங்க நினைச்சா, நீங்க வேற யாரையாவது தான் கல்யாணம் பண்ணியிருக்கணும்.. என்னை ஏன் பண்ணுனீங்க” என்று ஆவேசமாக கத்தியவள்..  

“நீங்க என் மேல பைத்தியமாயிருந்தாலும், என்னை சுத்த வைக்க தான் ட்ரை பண்ணினீங்க.. நீங்க அப்படின்னு காட்டினதேயில்லை.. ஈவன் இன் அவர் இன்டிமேட் ஃலைப்.. இதை நான் எப்படி மன்னிக்க முடியும்!” என ஆக்ரோஷமாக பேச..   

ஈஸ்வர் அப்படியே நின்று விட்டான்.. ஆழ் மனதின் சத்தங்கள் அவனுக்கு கேட்கவேயில்லை.. கண்மூடி சில நிமிடங்கள் நின்றான்.. அவனின் முகத்தில் தெரிந்த வேதனை வர்ஷினியை மேலே பேச வைக்கவில்லை.

அந்த இடத்தில இருந்த ஒரு அமைதி இருவரையுமே உயிரோடு புதைந்து விடச் சொல்லியது!

சில நிமிடங்களில் கண் திறந்தவன்.. “ஆமாம்! எல்லாம் பண்ணிட்டேன்! நீ சொன்ன மாதிரி ஒத்துக்கிட்டா நடந்தது இல்லைன்னு ஆகிடாது! ஆனா இப்போ ஒன்னும் பண்ண முடியாது! உன்னை விடவும் முடியாது! நான் சாகவும் முடியாது! உனக்கு நான் எனக்கு நீ தான்!” என்றவன்..         

“பாஸ்ட் இஸ் பாஸ்ட்! ஒரு சேன்ஸ் கொடேன் வர்ஷ்” என்றான் தளர்ந்த குரலில்..

“சேன்ஸ் எல்லா விஷயத்துலையும் கேட்டு நீங்க குட்ன்னு யாருக்கு ப்ரூவ் பண்ண போறீங்க! எனக்கா?” என அலட்சியமாய் அவள் கேட்ட விதத்தில்… 

ஈஸ்வர் மீண்டும் தீவிரமாய் அவளைப் பார்க்க.. “ஐ ஹேவ் சீன் ஆல் வொர்ஸ்ட் பார்ட் ஆஃப் யூ.. நீங்களும் என்னோட வொர்ஸ்ட் பார்ட் எல்லாம் பார்த்துட்டீங்க.. அப்போ யாருக்கு யார் ப்ரூவ் பண்ணனும்.. நாம நாமளா இருந்தா போதும்!”   

“எப்படி நானா இருக்க? நீ எப்போ போயிடுவியோன்னு பயமா இருக்கு!”

“சொல்ல வைங்க! உங்களை விட்டு போகமாட்டேன்னு சொல்ல வைங்க! எனக்கு பிடிச்சிருந்தாலும் ஒத்துக்க பிடிக்கலை இல்லையா? முடிஞ்சா ஒதுக்க வைங்க!” என்று திமிராகப் பேச..   

“உன்னை தான் பிடிச்சிருக்கு, உன்னை விட்டு போகமாட்டேன்னு சொல்ல வெச்சிட்டேன்னா, எனக்கு குழந்தை பெத்துக் கொடுக்கறியா” என்று அவனும் திமிர் பேச..   

“பார்க்கலாம்” என்பது போன்ற பாவனையைக் கண்களில் காட்டினாள்.

“எவ்வளவு வேணா என்னை பார்த்துக்கோ வர்ஷ், அதுக்கு தானே வெயிட் பண்றேன்” என்று பேசியபடி அருகில் வந்தவன்.. தள்ளியதால் விலகியிருந்த அவளின் ஆடையை சரி செய்தபடி.. அவளின் இடையில் கையினைக் கொடுத்து தூக்கியவன்..

“சொல்ல வைப்பேன்! அதுக்கு அப்புறம் இந்த மாதிரி ப்ளூ அய்ஸ்சோடா நமக்கு குழந்தை பிறக்கற வரை, நீ பெத்துக் கொடுத்துட்டே இருக்கணும்” என்று ஈஸ்வர் சொன்ன விதத்தில் வர்ஷினியின் நீல நிறக் கண்கள் பெரிதாக விரிய..   

அதில் தொலைந்து போக விரும்பி ஈஸ்வரின் முகம் நெருங்க.. தானாக அந்த கண்கள் மூடியது.. அந்த கண்களின் மேல் மென்மையாய் முத்தமிட்டான். இருவர் மனதிலுமே அடித்துக் கொண்டிருந்த புயல் அப்படியே ஓய்ந்தது..     

ஆதூரமாக அவளை அணைத்து சில நிமிடங்கள் நிற்க.. வர்ஷினியின் கண்ணீர் அவனின் வெற்றுக் கழுத்தில் படவும்.. “சாரி பேபி! சாரி!” என்றான்.

மெதுவாக அவனிடம் இருந்து விலகி.. “நான் ரொம்ப கெட்டப் பொண்ணு தானே!” என,

“ஆமாம்!” என்று வாய்விட்டு சொன்னவன்.. “ஆனா நீயா ஆகலை, நான் தான் அப்படி உன்னை பண்ணிட்டேன்! முரளி கல்யாணத்துல பார்த்த அந்த பொண்ணை நான் தான் என்னென்னவோ பண்ணிட்டேன்! ஆனா பார்த்த நாள்ல இருந்து இதுவரை என்னை அவளும் என்னென்னவோ செஞ்சிட்டு இருக்கா!”  

“எல்லாம் சரியாகிடும்!” என அவளுக்கு சொல்வது போல அவனுக்கும் சொல்லிக் கொள்ள..  வர்ஷினி சென்று அமைதியாய் படுத்துக் கொண்டாள்.. “தூங்கு” என்று சொல்லி அவளுக்கு போர்த்தி விடவும்..

“டிட் ஐ ஹர்ட் யூ” என்றாள் கண்களில் சற்று கலவரத்தோடு!  

“நோ பேபி, நோ! நாட் அட் ஆல்.. ப்ளீஸ் இப்படி பேசாதே! என்னோட  மிஸ்டேக்ஸ்…” என ஆரம்பித்தவனின் தொண்டையில் எதோ அடைத்துக் கொள்ள பேசவே முடியவில்லை.. ஒரு கசந்த முறுவலோடு நகர்ந்தான்.            

மோகம் நான்! மோக முள் நீ!        

 

Advertisement