Advertisement

அத்தியாயம் எழுபத்தி ஏழு :

பூவுக்குள் பூகம்பம்… எங்கு வரும் ஆனந்தம்..
நிழலாக நீ வந்தால்… இது போதும் பேரின்பம்..

“டாக்டர் பார்க்கணும்” என்றவனிடம்,  

“உட்காருங்க” என்று முன்னே இருந்த சிஸ்டர் பேர் குறித்துக் கொண்டவர், “அப்பாயின்ட்மென்ட்ஸ் இருக்கு அது பார்த்து தான் அனுப்ப முடியும்” என,

“ரொம்ப நேரம் ஆகுமா?” என்றாள் வர்ஷினி கவலையாக,

“கொஞ்சம் நேரம் ஆகும்” என்று அந்த சிஸ்டர் சொல்லிப் போக, இருவரும் அமர்ந்தார்கள்.

அவர்களை பார்த்திருந்த ஐஸ்வர்யா, அந்த சிஸ்டரை வரச் சொல்லி “என்னவாம் அவங்களுக்கு?” என,

“தெரியலை மேடம், அப்பாயின்ட்மென்ட் கேட்டாங்க, டைம் ஆகும் சொன்னேன்!”

“யார்ன்னு ஏதாவது சொன்னாங்களா, கார்ட் ஏதாவது குடுத்தாங்களா?” என,

“அதெல்லாம் இல்லை மேடம்!”  

“சரி, டாக்டர் வந்ததும் முதல்ல அவங்களை அனுப்புங்க. நான் சொன்னேன்னு சொல்லுங்க. என்னோட ரிலேடிவ் அவங்க, ஆனா நான் சொன்னேன்னு பேஷன்ட்க்கு தெரியக் கூடாது. அதையும் டாக்டர் கிட்ட சொல்லுங்க” என நீளமாகப் பேச,

“மேடம்” என்று இழுத்த அந்த சிஸ்டர், “நீங்களே ஒரு வார்த்தை சொல்லிடுங்களேன், டாக்டர் எந்த நேரம் எப்படிப் பேசுவார் தெரியாது” என இழுக்க,

“இது வேறையா” என நொந்து கொண்டே, “சரி, நான் பேசிக்கறேன்” என்றவள், “சர், என்னோட ரிலேடிவ்ஸ் அவங்க, ஆனா நான் இங்கே இருக்குறது அவங்களுக்கு தெரிய வேண்டாம்” என பவ்யமாகக் கேட்க,

மிகவும் கோபமாக வந்த போதும் “சரி” என்ற ஒப்புதலுடன் விதார்த் அலைபேசியை வைத்து விட்டான். ஆம்! ஐஸ்வர்யா அவனிடம் இப்போதெல்லாம் பேசுவதே இல்லை. “இப்போ மட்டும் எதுக்குக் கூப்பிடறா? யாரு அந்த அவ்வளவு முக்கியமான ரிலேடிவ்ஸ்?” என்று கடுப்பாக வந்தது.   

அவன் ரௌண்ட்ஸ் முடித்து கன்சல்டிங் ரூம் சென்றதும்  அவர்கள் அழைக்கப் பட, “கூப்பிட லேட் ஆகும்னு சொன்னீங்க, அப்புறம் எப்படி உடனே கூப்பிட்டாங்க” என்று அந்த சிஸ்டரிடம் ஈஸ்வர் கேட்க, “தெரியலை” என்றார் அவர் தயங்கி.

அவனுக்கு யோசனை.. “தெரிந்தவர் யாராவது இருப்பார்களா” என, யாரும் தெரிந்தவர் இருந்து விடக் கூடாது என்று தான் இந்த புது ஹாஸ்பிடல் வந்தான். ஐஸ்வர்யா இருப்பாள் எனக் கனவிலும் அவன் நினைக்கவில்லை. ஐஸ்வர்யா என்ற பெண் அவனின் எண்ணத்தில் எங்கும் இல்லை.

யோசனையோடே தான் உள்ளே சென்றான், “உட்காருங்க” என்ற விதார்த், “சொல்லுங்க” என்றதும் விதார்த்தை பார்வையால் அளந்து கொண்டே பேச ஆரம்பித்தான் ஈஸ்வர். தன்னுடைய வயதை ஒத்த தோற்றம் தான் அவனுக்கு எனப் புரிந்தது, சராசரி உயரத்தில் மரியாதையான தோற்றத்தில், இறுகிய முகத்துடன் இருந்த்தான்.

“காலையில இருந்து ஃபீவர், ரொம்ப அதிகமா இருக்கு” என,

“ரொம்ப, ரொம்ப அதிகமா இருக்கு, கண் மூடிட்டு முனகுறாங்க” என்று வர்ஷினியும் சொல்ல,

“காய்ச்சல்” என்பது சாதாரண விஷயம் தானே, அவளையும் ஒரு பார்வை பார்த்து, “மார்னிங் இருந்து தானே இருக்கு” என விதார்த் உறுதி படுத்த, “ஆம்” என ஈஸ்வர் தலையாட்ட,

“வேற இருமல், சளி, உடம்பு வலி, இப்படி ஏதாவது இருக்கா” எனக் கேட்டான்.  

“இல்லை” என்று சொன்ன ஈஸ்வரிடம் ஒரு தயக்கம், பின்பு “இங்க ஒரு காயம்” என்று தோளைக் காட்டியவன், “அதுல வலி இருக்கு” என,         

வர்ஷினி ஈஸ்வரையே பார்த்திருந்தாள், மனதிலும் ஒரு குற்ற உணர்ச்சி!

“என்ன காயம் காட்டுங்க?”  

தன்னுடைய டீ ஷர்ட் கழற்றி, ஈஸ்வர் காட்டவும், “என்ன காயம், எதோ கடிச்ச மாதிரி இருக்கு? என்ன இது? என சற்று அதிர்ந்து விதார்த் கேட்க, 

ஈஸ்வர் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசிக்கும் போதே, “நான், நான் தான் கடிச்சிட்டேன்” என்று வர்ஷினி சொல்லி விட,

“என்னது?” என்று விரும்பத் தகாத ஒரு பாவனையுடன் விதார்த்தும், “வர்ஷ்” என்ற ஈஸ்வரின் அதட்டலும், ஒருங்கே தான் கேட்டது.

அதுவரையிலும் சற்று அலட்சியமாகத் தான் ஈஸ்வரின் காயத்தை பார்த்துக் கொண்டிருந்தவன், இப்போது கவனமாக அதை ஆராய்ந்தான்.

“எப்போ நடந்தது”, “நேத்து நைட்” என ஈஸ்வர் சொல்ல,

“மே பீ காய்ச்சல் இதனால கூட இருக்கலாம். ஆனா இவ்வளவு சீக்கிரம் வரவும் வாய்ப்புகள் குறைவு” என்றவன், “ரொம்ப ஆழமா தான் பல் பதிஞ்சிருக்கும் போல, இவங்க உங்களுக்கு யாரு” என,

“என் மனைவி” என்றவனிடம்,

“அடி தடி சண்டை நடக்கும்னு கேள்விப் படறது தான், ஆனா இது கொஞ்சம் பயங்கரமா இருக்கே,, மனுஷக் கடி ரொம்ப ரொம்ப ஆபத்தானது” என்று சற்று நக்கல் கலந்து சொல்லிக் கொண்டே வர்ஷினியை பார்வையால் ஆராய்ந்தான். ஈஸ்வருக்கு அது சற்று கோபத்தை கொடுத்தது.

சிறு பெண்ணாக அந்த நீல நிற கண்களில் கலக்கத்தோடு அவள் பார்த்த விதம், இவள் இப்படி செய்திருப்பாளா என்று தான் தோன்றியது. கூடவே இவன் என்ன செய்தானோ என்று ஈஸ்வரையும் ஆராய்ந்தான். ஈஸ்வரிடமும் அவனுக்கு எந்த குறையும் தெரியவில்லை. அந்த லூசு மாதிரியே அவளோட சொந்தக்காரங்களும் லூஸ் போல என ஐஸ்வர்யாவை பற்றி நினைத்தான்.    

பின்பு காயத்தை சுத்தம் செய்து, அதற்கு ஊசி மருந்து செலுத்த வாங்கி வரச் சொல்லவும், “நான் போறேன்” என்று வர்ஷினி எழ, “நாங்க வாங்கிட்டு வர்றோம் டாக்டர்” என்று கூடவே எழுந்தான் ஈஸ்வரும்,    

அவர்கள் சென்றதுமே ஐஸ்வர்யாவை அழைத்தான் “எப்படி உனக்கு இவங்க ரிலேடிவ்ஸ்” என,

“ஏன் டாக்டர் கேட்கறீங்க?” என்றவளிடம்,

“சும்மா தான் சொல்லுங்க” என,

“என் அக்காவோட, வீட்டுக்காரரோட தம்பி”  

“அப்போ ஏன் நீங்க வராம சொல்ல மட்டும் செஞ்சீங்க”  

“எங்களுக்கும் அவங்களுக்கும் சண்டை டாக்டர்” என்றாள் எரிச்சலை அடக்கி, பின்னே ஏன் இப்படி துருவுகிறான் என நினைத்து, அதை கேட்கவும் செய்தால் “ஏன் டாக்டர் இப்படி கேட்கறீங்க”,

“சும்மா கேட்டேன்” என்று வைத்து விட்டான்.

பின்னே வேறு பேஷன்ட்களை பார்த்துக் கொண்டிருக்க,

அவர்கள் மருந்து வாங்கி வரவும்.. அதை செலுத்தியவன்.. பின்னே கையினில் , வென்ப்லான் போட்டு, அதன் மூலமாக ஆன்ட்டி பயாடிக் போட வேண்டும் என சொல்லி, “டியூட்டி டாக்டர் இருப்பாங்க, கேஷுவாளிட்டி போங்க” என,

“ரூம் போட்டுக்கலாம் டாக்டர்” என்றான் ஈஸ்வர்.

“ஒரு ரெண்டு மணி நேரம் தான், தேவையில்லை” என,

“இல்லை, இருக்கட்டும் மணி ப்ராப்ளம் இல்லை. எனக்கு ப்ரைவசி வேணும், ரொம்ப நேரம் உட்கார முடியலை”

“ஓகே உங்க இஷ்டம்”

அவர்கள் சென்று சிறிது நேரம் கழித்து வர்ஷினி மீண்டும் விதார்த்தை பார்க்க கேட்டு வந்தவள்.. “டாக்டர் நீங்க அங்க வர முடியுமான்னு கேட்டுட்டு வரச் சொன்னார்” என,

“என்னது என்னை ஒருவன் வரச் சொல்வதா? ரொம்ப திமிர் போல இவனுங்களுக்கு, எத்தனை பேர் வெயிட் பண்றாங்க, எப்படி விட்டுட்டுப் போக முடியும், உடனே விட்டவுடனே ரொம்ப பண்றாங்க” என நினைத்துக் கொண்டே, “ஏன்? என்ன ஆச்சு?” என்றான்.  

“அங்க அவங்க குத்தி குத்தி எடுக்கறாங்க, அது போடவே முடியலை, ரொம்ப வலிக்குது போல” என கவலையாகச் சொல்ல,  

“இந்தப் பெண் ரத்த நாளம் கிடைக்காததை சொல்கிறாள்” எனப் புரிந்தவன், அவள் சொல்லிய விதம், இதுவரை அங்கு வந்ததில் இருந்து பார்த்த விதம், எல்லாம் அப்படி ஒன்றும் பெரிய அப்பிராயத்தை வர்ஷினி மீது கொடுக்கவில்லை.

“நீங்க கடிச்ச போது வலிக்காததா இப்போ வலிக்கப் போகுது” என்று கேட்டு விட அருகில் அந்த சிஸ்டரும் இருக்க, அவரும் என்ன இது என்பது போலப் பார்க்க…

ஒரு அதிர்ச்சி வர்ஷினியின் முகத்தினில், பின்பு அப்படியே முகத்தினை மாற்றிக் கொண்டவள்.. “நான் கடிச்சதால நீங்க இப்படி பண்ணலாம்னு ஏதாவது இருக்கா டாக்டர்” என்று சொன்ன போது முகத்தினில் ஒரு கம்பீரம் மீண்டிருக்க..

“ஒரு பேஷன்ட் ஒரு விஷயத்தை சொன்னா, நீங்க இப்படி ஒரு க்ரிடிசிசம் கொடுப்பீங்களா. ஊருக்குள்ள ஆயிரம் ஹாஸ்பிடல் டாக்டர். அப்படியிருக்குறப்ப உங்களைத் தேடி வர்றவங்களுக்கு நீங்க கொடுக்கிற மரியாதை இதுதானா” என்றவள் நிற்காமல் சென்று விட..

தான் பேசியது பெரிய தவறு என்று விதார்திற்கு புரிந்தது.. ஆனாலும் ஒரு கர்வம் ஒத்துக்கொள்ள மனதில்லை.. “ஒழுங்கா பேஷன்ட் பார்த்திருப்பேன், இந்த அண்ணனோட பிசாசு என்னோட ரிலேடிவ்ன்னு சொல்லி என்னை டிஸ்டர்ப் பண்ணிடுச்சு” என்று கோபம் முழுவதும் ஐஸ்வர்யாவின் மேல் திரும்பியது …

அதற்குள் “அவங்க ட்ரீட்மென்ட் வேண்டாம், கிளம்பறோம் சொல்றாங்க டாக்டர், பில் கொடுக்கச் சொல்றாங்க” என,

“என்ன?” என்று நினைத்தவன்.. “ப்ச், அம்மாக்கு தெரிஞ்சது நீ தொலைஞ்சடா” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டு வெளியே வந்தான்…

“மா” என்று அவர் முன் வந்து நின்றவன் நடந்ததை சொல்ல,

“இப்படி ஒரு இர்ரெஸ்பான்சிபில் இடியட்டா நீ” என்று சகட்டு மேனிக்குத் திட்ட..

பதில் பேசமால் கடமையாய் வாங்கிக் கொண்டவன்.. “அந்த பொண்ணு கிட்ட எல்லாம் என்னால பேச முடியாது, நீங்களே பார்த்துக்கங்க” என,

“டாக்டர் ஐஸ்வர்யா எங்கே?” என,

“கேட்டேன், வீட்டுக்குப் போயிட்டாங்க போல, இனிமே தான் திரும்ப வருவாங்க”

“போ! நீயே ஹேண்டில் பண்ணு, தப்பு நீ பண்ணினா நீ தான் கேட்கணும்” என,

“அது சைக் மாதிரி புருஷனை கடிச்சு வெச்சிருக்கு, நான் ஏன் கேட்கணும்? முடியாது! என்னால முடியாது! கண்டிப்பா முடியாது!” என்றான், “எனக்கு பதிலா ஒருத்தன் இந்த பிரச்சனையை தீர்ப்பான், அவனை அனுப்பறேன்” என்று போக,

என்ன செய்ய முடியும்! செல்லும் மகனை முறைத்து நிற்பதை தவிர லக்ஷ்மிக்கு.. ஆம்! அந்த மருத்துவமனையின் உரிமையாளர் லக்ஷ்மி. மிகவும் புகழ் பெற்ற மகப்பேரு மருத்துவர்..

இப்போது சமீபமாய் இந்த பெரிய மருத்துவமனையைக் கட்டி அங்கே வந்திருக்கின்றார். அவருக்கு இரு மகன்கள் இளையவன் விதார்த்.. மூத்தவன் சஞ்சய்.. அவனும் மருத்துவனே.. அவன் எழும்பு முறிவு மருத்துவன்.

 இன்னும் அவன் மருத்துவமனை வந்திருக்கவில்லை. அப்போதுதான் வந்து கொண்டிருந்தான். “போனா போகட்டும்”  என்று விதார்த் போய் அமர்ந்து கொண்டு, அவனின் மற்ற நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்தான்.

அங்கிருந்த ஹாஸ்பிடல் ஊழியர் ஒருவர், ஈஸ்வரிடம் “சாரி சர், ஏன் டிஸ்சார்ஜ் ஆகறீங்க, என்ன பிரச்சனை?” என..

அதற்குள் லக்ஷ்மி அங்கே வந்திருந்தார்.. “நான் பார்க்கிறேன் உள்ள வாங்க” எனச் சொல்ல.. அவரின் மரியாதையான தோற்றம் ஈஸ்வரைத் தேக்க.. நடந்ததை ஈஸ்வரிடம் சொல்லியிருக்க வேண்டாம் என்று வர்ஷினி வேறு தவித்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு ஆவேசத்தில் சொல்லிவிட்டாள், ஈஸ்வர் ட்ரீட்மென்ட் வேண்டாம் என்று கோபமாய் கிளம்பவும் செய்வதறியாது திகைத்து இருந்தாள்.  

“அதுதான் மேம் சொல்றாங்க தானே, நாம ட்ரீட்மென்ட் எடுக்கலாம், உங்களுக்கு இன்னும் ஃபீவரா இருக்கு” என்று ஈஸ்வரிடம் பேச..

அவளைத் திரும்பி பார்வையால் முறைத்தவன்.. “பேசாத வர்ஷ்.. உன்னால தான் எல்லாம்.. நீ டாக்டர்ன்னு நம்பி நடந்ததை சொன்ன, அவங்க அதை கேலி ஆக்கிடாங்க! அப்படி ஒரு ட்ரீட்மென்ட் தேவையில்லை!” என்று அடிக்குரலில் அவளிடம் சீறினான்.. லக்ஷ்மி அதை பார்த்துக் கொண்டு தானிருந்தார்..

இதற்கு மேல் என்ன செய்வது என்று அவருக்கும் தெரியவில்லை.. ஒரு சின்ன பிரச்சனையாக தான் அவருக்கும் தோன்றியது.

வர்ஷினி அவனிடம் சொன்ன விதத்தில் ஈஸ்வருக்கு சின்ன பிரச்சனையாக தெரியவில்லை.. ஆம்! மிகவும் டிஸ்டர்ப்டாக அவள் சொன்ன விதம் ஐயோ என்று ஈஸ்வரை பதற வைத்தது.   

அதற்குள் சஞ்சய் வந்திருந்தான்.. அங்கே அம்மா நிற்பதை பார்த்தவன் அவரின் அருகினில் இயல்பாய் வந்தான்..

“அம்மா, என்ன இங்க நிக்கறீங்க?” என்று அவரின் முகம் பார்த்து கேட்க.. “அது” என்று அவர் தயங்க.. அப்போது தான் ஈஸ்வரின் புறம் பார்வையை திருப்பினான்..                                 

பார்த்தவன் இனிமையாய் அதிர்ந்து ஒரு முறுவலோடு, “ஹலோ சர்” என்று கை குலுக்க கை நீட்ட, “இது யாருடா இவன் இப்போ! இவனுக்கு என்னைத் தெரியுமா?” என்ற யோசனையோடே கை நீட்டாமல் கை குவித்து வணக்கம் சொன்ன ஈஸ்வர்.. “சாரி, ரொம்ப ஃபீவர் அதுதான்” என்று விளக்கமும் கொடுக்க..

“சர், நீங்க இங்கே வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம், என்ன நாங்க பண்ண முடியும்” என்று பணிவாகக் கேட்டான்.

“நீங்க?” என்று ஈஸ்வர் இழுக்க..

“நீங்க என்னை ஒரு தடவை பார்த்திருக்கீங்க, ஞாபகம் இல்லையா? இந்த ஹாஸ்பிடல் கட்டுறதுக்கு நீங்க தான் பைனான்ஸ் பண்ணியிருக்கீங்க” என,

“நிறைய பார்க்கிறேன், ஞாபகமில்லை”  என்றவன் அப்போது தான் ஹாஸ்பிடல் பேர் ஞாபகத்தில் வர, அவனின் ஞாபகத்திற்கும் வந்தது. ஆம்! பெரும் பணம் பைனான்ஸ் செய்திருந்தனர்.

“ப்ளீஸ், உள்ள வாங்க” என்று அவனின் கேபினிற்கு அழைத்துப் போக.. ஈஸ்வருக்கு போக மனதில்லை.

“இவன் எப்படியாவது ட்ரீட்மென்ட் எடுத்தால் போதும்” என நினைத்து “வாங்க” என கைப் பிடித்து ஈஸ்வரை இழுத்துப் போனாள்..

விதார்த் பேசிய போதே அந்த சிஸ்டர் ஐஸ்வர்யாவிற்கு அழைத்து எதோ பிரச்சனை என்பது போல சொல்லியிருக்க, பாதி வழியிலேயே அவள் திரும்ப வந்து கொண்டிருந்தாள்.

சஞ்சய் உள்ளே சென்றதும் “என்னம்மா? என்ன?” என்று அம்மாவிடம் கேட்க..

“பீவர் வந்திருப்பாங்க போல, விதார்த் தேவையில்லாம பேசிட்டான்” என்று மகனுக்கு சன்னக் குரலில் விளக்கம் கொடுக்க..

“மா” என்று அவரிடம் கடிந்தவன், “என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியலை, எதுவா இருந்தாலும் நான் அவங்க சார்பா சாரி கேட்டுக்கறேன்” என்றவன், விதார்திற்கு அழைத்து “இங்கே வா” என,

“நோ வேண்டாம், ஐ டோன்ட் வான்ட் டு ஸ்டே ஹியர் எனிமோர். என்ன பெஸ்ட் ட்ரீட்மென்ட் இங்க இருந்தாலும் எனக்கு வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

விதார்த் வந்தவன், ஐஸ்வர்யா அப்போது தான் உள்ளே நுழைந்தவளையும் கூட அழைத்து வந்திருந்தான்.

“என்ன விஷயம்?” என்றே தெரியாமல் “எதற்கு?” என்றும் தெரியாமல், விதார்த் அழைத்த உடன் அவள் கூட வர..

சஞ்சயின் கேபின் பார்த்ததுமே தயங்கி நின்றவளை,“வாங்க டாக்டர்” என்று அதட்டி அழைத்துப் போனான்.

“இவனை” என்று பல்லைக் கடித்தபடி உள்ளே நுழைந்தவள் அங்கே ஈஸ்வரியும் வர்ஷினியையும் பார்த்து அதிர்ந்து நிற்க,

அவர்களுமே இவளை பார்த்து அதிர்ந்தனர்.

அதற்குள் ஒரு சிஸ்டர் வந்தவர்.. “மேம், ஒரு பேஷன்ட்க்கு ரொம்ப வலி” என.. உடனே லக்ஷ்மி கிளம்பிவிட்டார்.  

ஈஸ்வர் வர்ஷினியை ஒரு பார்வை பார்க்க, அதுவரை அங்கே இருக்கலாம் என்றவள் ஐஸ்வர்யாவைப் பார்த்ததும், “நாம வேற ஹாஸ்பிடல் போகலாம்” என்ற பார்வை பார்க்க..

சஞ்சய் விதார்திடம் பேச வர.. “லுக் ஜென்டில்மேன், எனக்கு இங்க ஒரு நிமிஷம் கூட நிக்க முடியாது. என் மனைவியை சரியா ட்ரீட் பண்ணாத இடத்துல என்னால இருக்க முடியாது” என்று கடுமையான குரலில் கூறி ஈஸ்வர் கிளம்பியவன்… ஐஸ்வர்யாவை மௌனமாகக் கடக்க முடியவில்லை.

ஐஸ்வர்யா அருகில் வந்ததும் “எப்படி இருக்க ஐஸ்வர்யா, இங்கேயா இருக்க?” என,

“என்னவோ தெரியவில்லை மனைவியை சரியாக நடத்தவில்லை என்று சொல்கிறான்” என்று பதைத்தவள் “என்ன பிரச்சனை?”  என்று வர்ஷினியின் புறம் பார்வையை ஓட்ட..

“எனக்கு தான் ஃபீவர், காட்ட வந்தோம்”

“ஏன் ரஞ்சனி, என்ன பண்றா?” என,

“நான் அப்போவே சொன்னேன், இவர் தான் கேட்கலை, ரொம்ப ஃபீவரா இருக்கு” என வர்ஷினி சொல்ல,

“சண்டைன்னு சொன்னாங்க, இப்போ என்ன பண்றாங்க?” என்று விதார்த் ஐஸ்வர்யாவையும் ஈஸ்வரையும் பார்த்திருந்தான்.

“ப்ச், ஒன்னுமில்லை விடு” என்று வர்ஷினியை அதட்டியவன்.. “நீ போ, கார்ல இரு, நான் வர்றேன்!” என்றான். நான்கு வார்த்தையாவது கேட்காமல் போனால் அவன் மனது ஆறாது, கோபத்தின் உச்சியில் இருந்தான். உடல் முடியாத போதே இப்படி நன்றாக இருந்திருந்தால் இருந்த கோபத்திற்கு விதார்தை துவசம் செய்திருப்பான்.     

ஒன்றுமே இல்லாத விஷயம் தான், இங்கு மனதில் கொள்ள வேண்டியது வர்ஷினியின் மனநிலை ஆகிப் போயிற்று. பின்னே ஐஸ்வர்யா தான் ஈஸ்வர் காதல் சொன்ன பெண் என்று தெரியும், அவளிடமே ஈஸ்வரை பற்றி பேசுகிறாள்.. ஒரு தப்பு செய்து விட்ட குழப்பமான மனநிலை.. வர்ஷினிக்கு தெரியும் என்று ஐஸ்வர்யாவிற்கு தெரியாது.. தெரிந்திருந்தால், இப்படி அவர்களை எதிர்கொண்டிருக்க முடியாது! 

அதுவும் காய்ச்சல் கடித்ததால் கூட இருக்கலாம் என்று சொல்லப் பட்டு இருந்ததால், இப்படி செய்து விட்டோமே என்ற உணர்ச்சி! இனி எல்லோருக்கும் தெரிந்தால் தன்னை என்ன நினைப்பர் என்று உணர்வு.. மனதளவில் நிலை பிறழ்ந்து கொண்டிருந்தாள்.. நான் இங்கே இவனிடம் வந்திருக்க வேண்டாம் என்ற உணர்வு ஓங்க ஆரம்பித்து இருந்தது.     

“இல்லை, போக மாட்டேன்!” என்பது போல வர்ஷினி நிற்க.. “போன்னு சொன்னேன்” என்று ஈஸ்வர் கடிந்து கொண்டிருந்தான்.  

“சாரி கேளு விதார்த்” என சஞ்சய் அதட்ட,

“நான் ஏன் கேட்கணும்? என்ன தப்பு பண்ணினேன்? இவங்க கடிச்சாங்க, அதை தானே சொன்னேன், செய்யாததை சொல்லலையே” என சற்று திமிராகப் பேசினான். “அதுக்கு ஏன் இப்படி ஓவர் ரியாக்ட் பண்றாங்க, ஐ திங்க் திஸ் கேர்ள் நீட்ஸ் எ சைகலாஜிகல் ட்ரீட்மென்ட்” என்று உண்மையை சொல்கிறேன் என்று பேச.. 

“வாயை மூடு” என்று கத்தினான் ஈஸ்வர்..  ஐஸ்வர்யா பயந்தே விட்டால் விதார்த் அடி வாங்கப் போகிறான் என.. அதுவும் விதார்த் சொல்லும் விஷயம்.. ஹச்சோ இவன் என்ன பேசுகிறான்.. கண்டிப்பாய் இதனை சாதாரணமாகவோ இல்லை ஒரு டாக்டர் சொல்லுவது போலவோ ஈஸ்வர் எடுத்துக் கொள்ள மாட்டான் என்று தெரியும்.. அதுவும் வர்ஷினியை பார்க்க ஐஸ்வர்யாவிற்கு மனதிற்குள் பிசைந்தது. அந்த நீல நிறக் கண்களின் கலக்கம் அவளையே அசைக்க ஈஸ்வரை விடுமா என்ன?    

“பேசாதே விதார்த்” என்று அவனை அதட்ட கூட செய்தாள்.   

வர்ஷினி உடனே ஈஸ்வரின் கை பிடித்தவள், “நீங்க இங்க எதுவும் கலாட்டா பண்ணக் கூடாது” என,  

“பண்ண மாட்டேன், நீ போ, இப்ப நான் வர்றேன்” என

“என்னடா இவனுங்க?” என்பது போலத் தான் அப்போதும் விதார்த் பார்த்திருந்தான், இன்னும் அவனுக்கு அவர்கள் தான் பைனான்ஸ் செய்திருகிறார்கள் என்று தெரிவில்லை..

சஞ்சய் விதார்திடம் அதனை சொல்ல வர.. “நீங்க பேசாதீங்க” என்று அவனையும் அதட்டினான், ஈஸ்வரின் கோபத்தை பார்த்து சஞ்சய் அசந்து நிற்க,  

கண்களில் நீருடன் வர்ஷினி நிற்க.. கை பிடித்து பக்கத்தில் நிறுத்திக் கொண்டவன்.. “வா போகலாம்” என்று ஒன்றுமே சொல்லாமல் கிளம்ப,

“ப்ளீஸ் சர்” என சஞ்சய் அவசரமாக வர..

நிற்காமல் ஈஸ்வர் வர்ஷினியுடன் சென்று விட..

“நீ பண்ணினது கொஞ்சமும் சரியில்லை விதார்த்” என சஞ்சய் சத்தமிட..

“என்ன நீ? அவன் கிட்டப் போய் கெஞ்சிட்டு நிக்கற, யாரு அவன்? ஒரு லூசு பொண்டாட்டியை வெச்சிருக்கான்? அது கடிச்சு வெச்சிருக்கு? அதனால இன்பக்ஷன்!” என்று கேஸ் ஹிஸ்டரியை எடுத்து விட

ஐஸ்வர்யா “என்ன இது?” என்று விழிவிரித்து நிற்கும் போதே, அவன் லூசு பொண்டாட்டி என்ற வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கும் போதே ஈஸ்வர் புயலென உள்ளே வந்தவன்.. அவன் மேலே பேசியதை கேட்டதும் அப்படியே ஒற்றைக் கையினில் அவன் சட்டை பிடித்து தூக்கி சுவரோடு நிறுத்த..

சஞ்சய் “என்ன பண்றீங்க?” என்று அருகினில் ஓட.. “விஸ்வா என்ன பண்ற நீ? விடு அவனை!” என்று ஐஸ்வர்யா ஈஸ்வரின் கைபிடித்து இழுக்க..   

அவனை இறக்கி விட்டவன் ஐஸ்வர்யாவிடம் திரும்பி.. “மூணரை வருஷத்துக்கு அப்புறம் இப்போ தான் என்கிட்டே வந்திருக்கா, நான் அவளுக்கு டென்ஷன் குடுத்துட்டேன், அப்படிப் பண்ணிட்டா, அதுல  பெரிய ஒரு கில்டி கான்ஷியஸ் அவளுக்கு. திரும்ப போகட்டுமான்னு பேசிட்டு இருக்கா.. ஒண்ணுமில்லை, இது ஒரு விஷயமில்லைன்னு பல வகையில சமாளிச்சிட்டு இருக்கேன்!”

“இவன் லூசு மாதிரி திரும்பத் திரும்ப அதையே அவ முன்னாடியே சொல்லிட்டு இருக்கான், இவன் என் பொண்டாட்டியை லூசுன்னு சொல்றான். திரும்ப மட்டும் அவ போகட்டும் கொன்னு தூக்கி கட்டிடுவேன் இவனை!” என்று விதார்தை பார்த்து கர்ஜிக்க.. அதிர்ந்து நின்றனர்.  

“இன்னொரு தடவை அவளை லூசுன்னு சொன்னான் பேச வாய் இருக்காது” என்று விதார்தை பார்த்த பார்வையில் அவனுக்கு குளிர் பிறக்க.. 

“இந்த விஷயம் மட்டும் வெளில வந்தது, இந்த ஹாஸ்பிடல் முடிஞ்சதுன்னு நினைச்சிக்கோ” என்றும் சொல்ல.   

“இவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா.. இவனை எல்லோரும் கவனிக்க?” என்று தான் அப்போதும் விதார்திற்கு தோன்றியது.  

ஐஸ்வர்யா அந்த கோபத்தில் தெரிந்த அவனின் காதலில், ஆளுமையில், பிரமித்து தான் நின்றாள். ஒருவேளை இவன் என்னை திருமணம் செய்திருந்தாலும் விட்டு தான் சென்றிருப்பான் எனத் தோன்றியது.. ஆனால் ஐந்து வருடத்திற்கு பிறகு இந்த நினைப்பு அவளுக்கே பிடிக்காமல் போக..  மனதை கடிவாளமிட்டாள்.  

சஞ்சய்யை பார்த்து “முதல்ல இவனை கூட்டிட்டு போங்க சைகலாஜிகல் ட்ரீட்மென்ட்க்கு” எனத் திட்டியவன், “வேற நல்ல ஹாஸ்பிடலா பாரு, இவனுங்களும் இவனுங்க ஹாஸ்பிடலும்”  என்று ஐஸ்வர்யாவையும் அதட்டிப் போனான்.   

சஞ்சய் அப்படியே அமர்ந்து விட்டான்.. “அய்யயோ லோன் கேன்சல் செய்தால் என்ன ஆகும்?” என்பது தவிர வேறு எதுவுமே அவனின் எண்ணத்தில் இல்லை..  

இந்த ஹாஸ்பிடல் அவனின் ட்ரீம் ப்ராஜக்ட் பணத்தை இழைத்திருந்தான்… அம்மா மட்டுமே அவர்களின் ஆதாரம்.. இன்னும் அவனிற்கோ விதார்திற்கோ அப்படி ஒன்றும் கேஸ்கள் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை..   

அதுவுமில்லாமல் இப்படி ஒரு செய்கை பெரிய முட்டாள்தனம்!

சிறிய விஷயம், ஆனால் அவர்களுக்கு பெரிய விஷயமாய் தோன்றும் போது இவன் சீண்டியிருக்க வேண்டிய அவசியமில்லை.

இன்னுமே விதார்திற்கு ஒன்றும் புரியவில்லை.. ஆனால் ஈஸ்வரின் செய்கையில் மனதில் ஒரு பயம் வியாபிக்க.. அப்படியே நின்றான்.                     

“அவங்க தான் நம்ம ஹாஸ்பிடல்க்கு ஃபைனான்ஸ் பண்ணியிருக்காங்க” என விதார்திடம் சொல்ல.

“என்ன?” என்று அதிர்ந்து, “இவங்க ஈஸ்வர் பைனான்ஸ் ஆளுங்களா?” எனக் கேட்டவன் .. “எனக்குத் தெரியாது, இவங்க ஃபோன் செஞ்சு என்னோட ரிலேட்டிவ் சொன்னாங்க, இதுக்கு முன்ன என்கிட்டே பேசவேயில்லை நான் பல முறை ட்ரை பண்ணியும், திடீர்ன்னு இன்னைக்கு சொல்லவும் எனக்கு அவங்க ரிலேடிவ்ன்னு ஒரு எரிச்சல்”

“கூடவே அந்த பொண்ணு வந்து என்னை வரச் சொல்றாங்க சொல்லவும் ஒரு எரிச்சல் பேசிட்டேன்” என,

“சும்மா சப்பை கட்டு கட்டாதே! நீ ஒரு ஹால்ஃப் பேக்ட் பெர்சன், ஒரு பேஷன்ட் கிட்ட எப்படி நடந்துக்கணும் உனக்குத் தெரியலை, நீ எதுக்கு அவங்களைச் சொல்ற.. உனக்கெல்லாம் அறிவே கிடையாது.. எப்படி உன் கிட்ட பேச முடியும்.. சும்மா பார்க்கும் போதெல்லாம் எங்க அண்ணாவைக் கல்யாணம் பண்ணிக்கோ சொன்னா? எப்படி பேச முடியும்?” என்று ஐஸ்வர்யா பொங்கிவிட..

“இது எப்போ?” என்று சஞ்சய் விதார்தை முறைக்க..

“அது உனக்குப் பிடிச்சிருக்குன்னு” என,

“எனக்குப் பிடிச்சா நான் சொல்றேன், நீயேண்டா சொல்ற, இடியட்! எனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணலைன்னா கூடப் பரவாயில்லை, உபத்ரவம் பண்ணாத”

“இப்போ அவங்க அந்த லோன் கேன்சல் செஞ்சு திரும்பப் பணம் கட்ட சொன்னாங்கன்னா ஒன்னுமே பண்ண முடியாது! நடுத்தெருவுக்கு தான் நாம வரணும்.. இது நம்ம சம்பாதிச்சது இல்லைடா தொலைச்சு நிற்க, நம்ம அம்மா சம்பாரிச்சது” என பொரிந்தவன்,

“சாரி ஐஸ்வர்யா, இவன் இப்படி உங்களை டார்ச்சர் பண்ணினது எனக்குத் தெரியாது.. நீங்க இவனோட கிளாஸ் மேட்ன்னு கொஞ்சம் ஆர்வமா இவன் கிட்டப் பேசிட்டேன். ஐ அம் ரியல்லி சாரி” என குற்ற உணர்வோடு கேட்க,

“இட்ஸ் ஓகே டாக்டர், நான் ரிசைன் பண்ணிடலாம்னு யோசிச்சிட்டு தான் இருந்தேன்” என ஐஸ்வர்யா சொல்ல,

“என்ன?” என்று அதிர்ந்தான் சஞ்சய்..

ஐஸ்வர்யா சென்று விட.. “சாரிடா அண்ணா, எனக்கு இப்படி எல்லாம் ஆகும்னு தெரியாது” என  கலக்கமாக விதார்த் பேச,    

சஞ்சய் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

ஈஸ்வரின் பயம் நிஜம் என்பது போல வர்ஷினியின் முகம் மிகவும் சீரியசாக மாறியிருந்தது.. அவனின் காய்ச்சல் அவனின் முடியாத தன்மை எல்லாம் பின்னுக்குப் போய்விட, அவளை தூக்கிக் கொண்டு ஆளில்லாத இடத்திற்கு போய் விட மனம் துடித்தது.. எப்படி இவளை சரியாக்கப் போகிறேன்?   

நீ போகும் பாதை எங்கே பொன்மானே….

       

 

Advertisement