Advertisement

அத்தியாயம் எழுபத்தி ஆறு :

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ, ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்… சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்! 

“வீடு பத்தி ஒன்னுமே சொல்லலை வர்ஷ்” எனக் கேட்க,

“என்ன சொல்லணும்? ரொம்ப நல்லா இருக்கு இப்போவே, இன்னும் ஃபினிஷ் பண்ணினா இன்னும் நல்லா இருக்கும்” என இருவரும் பேசிக் கொண்டது சமையல் அறையில்..

ஆம்! சமையல் அறையில் தான்! காலை முதல் மாலை ஆறு மணி வரை இருந்தால் போதும் என்று சமையல் செய்யும் அம்மாவிடம் சொல்லியிருக்க, அவர் சாம்பார், சட்னி என்று செய்து வைத்து கிளம்பியிருந்தார்.

வீட்டைப் பார்த்து வந்திருந்தவர்கள், “பசிக்குது” என வர்ஷி சொல்லவும், “வா” என சமையல் அறை வந்திருந்தான். வரும் வழியிலேயே “ஹோட்டல் போகலாமா” என்று கேட்டவனிடம் “வேண்டாம்” என்று சொல்லியிருந்தாள். அப்படியும் வீட்டின் உள் நுழைந்ததுமே “பசிக்குது” என,

“இப்போது தானே கேட்டேன்” என்று சொல்ல வந்தவன், அவளின் முகம் பார்க்கவும் எதுவும் சொல்லாமல் “வா” என்று அழைத்து வந்திருந்தான். 

அவன் தோசை சுட, அங்கிருந்த சமையல் மேடையில் அமர்ந்து சுட, சுட, சூடாக உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்..

அப்போது தான் வீடு பற்றிய பேச்சு, அந்த வீட்டினில் வர்ஷினி பார்க்காத ஒரு பகுதியும் இருந்தது. அது அவளிடம் அப்போது காட்ட மனதில்லை.

கூடவே “உனக்கு என்ன என்ன அதுல மாற்றம் வேணும்” என கேட்டுக் கொண்டு இருந்தான். “தெரியலை, தேவைன்னா சொல்றேன்” என முடித்துக் கொண்டாள். அவள் கவனம் முழுவதும் உணவு உண்ணுவதில் மட்டுமே!    

அவள் தள்ளிய தோசைகளை எண்ணிக்கை வைத்திருந்தவன் “போதுமா வர்ஷி?” என,

“இல்லை பசிக்குது?” என்றாள்.  

“போதும்! கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடுவியாம்!” என அடுப்பை அணைக்க,

“உங்களுக்கு” என்று அப்போது தான் கேட்டாள். “நீ சாப்பிட்டு முடி, நான் டிரஸ் மாத்திட்டு வந்துடறேன்!” என போக, “ம்ம், சரி!” என்று சாப்பிடுவதில் கவனமாக.. அவளையே யோசனையோடு பார்த்து சென்றான்.

ஆம்! அதிகமாக உண்டாள். அங்கே ஊரில் அவளாக ஏதாவது செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், இல்லை பேயிங் கெஸ்டாக இருந்த வீட்டில் அவ்வப் போது. அதுவுமில்லாமல் உடல் குறைப்பு, தனிமை, அவளை உணவிடம் இருந்து தள்ளி நிறுத்தியிருக்க, இப்போது கட்டவிழ்ந்து உணவை தள்ளிக் கொண்டிருந்தாள் என்பது உண்மை!  

“இப்படி சாப்பிட்டு, எப்படி இவ்வளவு ஒல்லியா மாறினா?” என்று யோசித்தபடி உடை மாற்றி வந்தவன், அப்போதும் அவள் சமையல் அறை மேடையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து,

“இப்படி சாப்பிட்டு கை கழுவாம இருக்கக் கூடாது” என..

தோசை இல்லாதததால் சாம்பாரையும், சட்னியையும் ஊற்றி உண்டு கொண்டிருந்தாள். அது ஈஸ்வருக்கு தெரியவில்லை. அது கைகளில் சற்று வழிந்திருக்க,

“ரெண்டு கைலயும் பண்ணிட்டேன், வயிறு வேற ஃபுல்லா இருக்கு, கை ஊணி குதிச்சு இறங்க பயமா இருக்கு, ஒரு பவல்ல தண்ணி குடுங்க, கை கழுவி இறங்கறேன்” என,

அவளை ஒரு பார்வை பார்த்தவன், “பவல்ல தண்ணி எல்லாம் தர மாட்டேன், வேணா தூக்கி இறக்கி விடறேன்” என்றான்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், பவல்ல தான் தண்ணி வேணும்” என்றாள் பிடிவாதக் குரலில்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்று அவளைப் போல பிடிவாதக் குரலில் சொல்லியவன், அருகில் வந்து எப்படி அவளைத் தூக்குவது எனப் பார்த்து நின்றான்.

பின்னே சமணமிட்டு அமர்ந்திருந்தாள், “சும்மா, சும்மா என்னை தொடக் கூடாது” என கை நீட்டிப் பேச,

“சும்மா எங்கே தொடறேன், உன்னை இறக்கி விடத் தான் தொடறேன்” என உட்கார்ந்து இருந்தவளை அப்படியே இரு முழங்கால் முட்டியிலும் கை கொடுத்து அவள் சமணமிட்டு அமர்ந்த வாக்கிலேயே தூக்க,

“அம்மா” என கத்தி, “கீழ விழுந்துடப் போறேன்” என ஆட,

“விழ மாட்ட” என்று அவன் சொல்லச் சொல்ல, அவள் உணவுண்ட கையினில் அவனின் இரு தோள்களையும் பிடித்துக் கொண்டு அவன் மேலேயே சரிந்து நிமிர்ந்தாள்.

“ஒழுங்கா இறக்கி  விட்டிருப்பேன், இப்போ நீ…” எனச் சொல்லி அவளை இறுக்கி பிடித்து, “என்னை கொல்றடி” என்றான். பின்னே அவன் நிற்க, கால்களை இரு புறமும் அவன் இடுப்பினில் போட்டு, அவன் மேல் குழந்தையாய் அமர்ந்திருந்தாள்.

அவனுக்கு அவள் அப்போது குழந்தையும் இல்லை, குமரியும் இல்லை, கொல்லும் ராட்சசியாய் தான் தெரிந்தாள்.  

“இறக்கி விடுடா இடியட்” என அவன் எதோ தவறு செய்தவன் போல முகத்தை வைத்துச் சொல்லவும்,

அது ஈஸ்வருக்கு கடுப்பை கிளப்ப, “நீ இறங்கிக்கோ, என்னை ஏன் திட்டுற.. ஓவரா பேசற நீ. என் மேல் நீ உட்கார்ந்துட்டு என்னை சொல்ற?” என,

“இரு, உன் மேலேயே கை துடைக்கிறேன்” என அவனின் தோளில் தடவ, அங்கே பனியன் இருக்கக் கண்டவள், அவனின் வெற்று புஜங்களில் துடைக்க..

“ரொம்பப் பண்ணாத, இப்படியே பாத்ரூம் தூக்கிட்டுப் போயிடுவேன், நீ தான் என்னை குளிக்க வைக்கணும்”

இப்படியாக அவளும் இறங்கவில்லை, அவனும் இறக்கிவிடவில்லை, நிமிடமாக சண்டையிட்டனர் ..

அந்த நிமிடங்களை முழுமையாக அனுபவித்தான். பின் அவளின் முகத்தை, கண்களைப் பார்த்தவன் “பேபி, நாம இப்படியே இருந்துடலாமா?” என,

“எப்படி? இப்படி கட்டிப் பிடிச்சிக்கிட்டா?” என்றவளின் குரலில் என்ன இருந்தது எனப் புரியாத போதும், ஒரு முறுவல் முகத்தினில் மலர,

“இன்னுமே என்னால உன்னைப் புரிஞ்சிக்க முடியலை, இந்த ஜென்மம் போதாதுன்னு நினைக்கிறேன், ஆனா அதுக்காக நம்ம பிரிய வேண்டாம்” என்றான் ஆழ்ந்த குரலில்.

எதுவும் சொல்லாமல் ஈஸ்வரைப் பார்க்க, அவளை பிடித்த வாக்கிலேயே சமையல் அறையிலிருந்து ஹாலிற்கு வந்தவன், அப்படியே சோபாவில் அமர அவன் மேல் வர்ஷினி..

மிகவும் அபாயகரமான உணர்வுகளை தூண்டக் கூடிய ஒரு நிலை.. ஆனால் அப்படி இல்லை அவர்கள் இருவருக்குமே. அதையும் மீறிய எதிர்பார்ப்புகள் இருவருக்கு இடையிலும்.. 

“எனக்கு உன்னைப் பத்தி எதுவுமே தெரியலை போல, உன்னை புரிஞ்சிக்க முயற்சி பண்ணினாலும் புரியலை. எல்லாம் திரும்பத் திரும்ப தப்பாகுது. எனக்கு உன்னை விட்டு இனிமே இருக்கவும் முடியாது, இதுல உன்னை எப்படி என்னால இழக்க முடியும், ப்ளீஸ் இந்த டைவர்ஸ் எல்லாம் வேண்டாம்” என,

எப்போதும் வர்ஷினியின் கண்களைப் பார்க்கும் ஈஸ்வரின் கண்களை ஊன்றிப் பார்த்தால் வர்ஷினி. அந்த கண்களில் உண்மை மட்டுமே!

“ஆனா நீ என்னை ஏமாத்திட்ட, என்னால அதை மன்னிக்க முடிஞ்சாலும், மறக்க முடியலை” என சொல்லும் போதே கண்களில் கண்ணீர், குரலில் கலக்கம்..

“நீ இன்னொரு பொண்ணை லவ் பண்ணியிருக்க, என்னால அதை அக்சப்ட் பண்ணவே முடியலை. அதையும் விட நீ அந்தப் பொண்ணையும் ஏமாத்தி இருக்க. என்னால அதை இன்னும் தாங்க முடியலை. என்னை உனக்கு பிடிக்காம இருந்தாக் கூட, கூட வாழ்வேன். ஆனா இப்படி ஒரு பொண்ணை ஏமாத்தினவனை என்னால ஏத்துக்கவே முடியாது. இது இல்லாம எவ்வளவோ பிரச்சனை இருக்கு, என்னை நீ என்ன என்னவோ பண்ணியிருக்க, ஆனா எல்லாத்தையும் விட இது அதிகம்!”  

“கண்டிப்பா நீ சொல்றது உண்மை தான். ஆனா ஒன்னு தப்பு, கண்டிப்பா நான் அவளை லவ் பண்ணலை, ஆனா கண்டிப்பா ஏமாத்தி இருக்கேன்” என ஈஸ்வர் சொல்ல,

அந்த வார்த்தைகளை கேட்டதும், ஒரு கோபம், ஒரு ஆவேசம், ஒரு மூர்கத்தனம் கிளம்ப, “நீ… நீ… உண்மை ஒத்துக்கிட்டா நீ செஞ்சது இல்லைன்னு ஆகிடுமா” என்றவள் ஆத்திரமாக அவனின் தலை முடியைப் பற்றி இழுக்க..

அப்படி ஒரு வலி, ஆனாலும் அசையாமல் அதைத் தாங்கி அமர்ந்திருக்க, அதனை பார்த்ததும், ஒரு வெறியே வர்ஷினியினுள் வர.. அப்படியே அவனின் தோளில் கடிக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டுப் பாடற்ற தன்மை, விலக்கியிருந்தால், விலகியிருப்பாலோ என்னவோ. 

ஈஸ்வர் அசையவேயில்லை, அத்தனை வலிகளையும் தாங்கி அமர்ந்திருக்க, அவளின் பல் பதிந்து, ரத்தம்..  அதனை வர்ஷினி உணரவே சிறிது நேரம் பிடித்தது.  செய்யும் செயல் புரிந்து விலகி அவனின் முகம் பார்க்க,

ஈஸ்வரின் கண்களில் கண்ணீர், தலையிலும் தோளிலும் அப்படி ஒரு வலி!

அதனை பார்த்தவளுக்கு என்ன செய்ய என்றே புரியவில்லை, தன செயலில் தானே அதிர்ந்து அருவருத்துப் போனாள். தன் பற்களில் இருந்த ரத்தத்தை விரல்களில் தொட்டுப் பார்த்தவள், “பார்த்தியா நீ என்னை பைத்தியமாக்கிட்ட” என கலங்கிச் சொல்லி எழ முற்பட,

அவளை எழ விடாமல் ஈஸ்வர் அப்படியே அணைத்துக் கொண்டான்.

அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு.. சத்தம் வராமல் வாய் பொத்தி அவனின் மேலயே கதற.. அவளை இறுக்கி பிடித்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில கை எடுத்து விட்டு அவனை இறுக்க அணைத்துக் சத்தம் போட்டு அழவும்..

“ப்ளீஸ் வர்ஷி, அழாத!”

“இல்லை, இல்லை, நான் ரொம்ப ரொம்ப பேட் ஆகிட்டேன், எனக்கு என்னைப் பிடிக்கலை! நீ ஏன் இப்படி எல்லாம் பண்ணிட்ட, இதையெல்லாம் எனக்கு மறக்க முடியலை, நீ ஏன் இப்படி பண்ணிட்ட” என சொல்லிச் சொல்லி அழவும், அவள் முகம் நிமிர்த்த முற்பட நிமிர்த்தவே இல்லை..

“எனக்கு உன்கிட்ட வரவும் பிடிக்கலை, தனியா இருக்கவும் முடியலை, வாழவும் பிடிக்கலை, சாகவும் பிடிக்கலை, பைத்தியமாகிடுவனோன்னு பயமா இருக்கு! திரும்ப அந்த மாத்திரை போடவும் சில சமயம் தோணுது! ரொம்ப டிஸ்டர்ப் டா இருக்கேன் அதை யாருக்கும் தெரியவிடக் கூடாதுன்னு எப்பவும் டென்ஷன். எனக்கு என்னோட வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு பயமா இருக்கு! யாரையுமே எனக்குப் பிடிக்கலை! உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கலை, ஆனா உன்கூட மட்டும் தான் இருக்கத் தோணுது! அப்பா இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருக்கலாம். நான் அவரை ரொம்ப மிஸ் பண்றேன்”  அவள் அழுகையோடு பேசப் பேச..

அவனால் சமாதானம் சொல்ல முடியவில்லை, சொல்லவும் தெரியவில்லை. அணைப்பை மட்டும் இன்னும் இன்னும் உன்னை விட மாட்டேன், நான் இருக்கிறேன் என்பதாக இறுக்கிக் கொண்டான்.    

வெகு நேரம் அழுது, அது தேம்பலாக மாறி, ஓய்ந்து, அவனின் மேல் உறங்க ஆரம்பிக்க .. அதை உணர்ந்தவன் மேலும் அரை மணிநேரம் அப்படியே அமர்ந்து அவளின் உறக்கம் கலையாமல் அப்படியே எழுந்து தூக்கிப் போய் படுக்கையில் விட..

உறக்கம் கலையவில்லை. அவளின் கைகளில் அவனின் தலையில் இருந்து பிய்ந்த முடிகள், அதை மெதுவாக எடுக்க ஆரம்பித்தான். தலையில் வலி இருக்க, அதையும் விட, தோளில் எரிந்தது..  

தலையை திருப்பி அதனை பார்த்தான் பனியன் இருக்க ஒன்றும் தெரியவில்லை, அதனை கழட்ட கை தூக்க,  அப்படி ஒரு வலி! கழற்றிப் பார்க்க அங்கே பல் பதிந்து சிறு குழியாகி அதில் இருந்து ரத்தம் வந்திருந்தது..

வலி மாத்திரை என்று எதுவும் வீட்டினில் இல்லை, அதுவும் களிம்பு கூட இல்லை. நேரம் மிக அதிகமாகியிருக்க, ஒரு சோர்வு! அப்படியே அவளின் அருகினில் படுத்து விட்டான். அப்படி ஒரு பசி, இருந்தாலும் உணவு உண்ணப் பிடிக்கவில்லை. உறக்கமும் அணுகவில்லை வலியில்! ஆம்! மனதிலும் வலி, உடலிலும் வலி!

எப்படி அவளை சமாளிக்க என்று புரியவில்லை, வர்ஷினி போல அவனால் வாய் மூடியும் அழ முடியவில்லை, வாய் விட்டும் அழ முடியவில்லை, வர்ஷினியை பார்க்கப் பார்க்க பயமாக இருந்தது!

எப்படி அவளுக்கு ஒரு நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுப்பது என்று தெரியவில்லை.

மனதில் பாரமாக அழுத்த.. மீண்டும் கடவுளிடம் ஒரு பிரார்த்தனை, “இவள் இருக்கும் வரை நான் இந்த உலகில் இருக்க வேண்டும். இவளை தனியே விட முடியாது” என,

படுத்திருக்கும் அவளை இறுக்கி அணைத்துக் கொள்ள ஒரு உந்துதல்.. ஆனாலும் பார்த்தபடியே படுத்திருந்தான்.. அந்த முகம் அதில் தெரிந்த சோர்வு.. முதல் நாள் அவளை பார்த்த ஞாபகம் வந்தது முரளியின் திருமணத்தில், ஆறு வித்தியாசங்கள் இல்லை, முகமே மாறிவிட்டது போல தான்!

மெதுவாக அவளின் புருவங்களை நீவி, அந்தக் கண்களை துடைத்தான். ஆம்! கண்ணீர் கரைகள் இருந்தது.. பின்பு எவ்வளவு நேரம் பார்த்து இருந்தானோ அவனை அறியாமல் உறங்கிவிட.. சிறிது நேரத்திலயே மீண்டும் உறக்கம் கலைந்தது.. அவனை இறுக்கி அவன் தோள் மேல் தலை வைத்து வர்ஷினி உறங்கிக் கொண்டிருக்க, அது தூக்கத்தினில் செய்த செயல் எனப் புரிந்தது. ஆனாலும் அவனை எழுப்பியது வலி, அவள் கடித்த தோளின் புஜங்களில் தான் தலை இருந்தது.

வர்ஷினியை விலக்க வலி சொன்னாலும், மனம்மும் செய்யவில்லை, அறிவும் செய்யவில்லை.. அப்படியே வலி தாங்கி இருக்க, சிறிது நேரத்தில் இன்னும் வாகாக தலை நகர்த்தி அவன் நெஞ்சில் வைத்து படுத்துக் கொள்ள, வலி குறைந்தது. பின்பு மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.

காலையில் திரும்ப விழிப்பு வந்ததும் வலியினால் தான். ஆம்! பிஞ்சு விரல்கள் அந்தக் காயத்தை தடவிக் கொடுக்க அது வலி கொடுக்க, கண்களைத் திறந்தான்.. அவன் விழித்தது தெரியாமல் அந்தக் காயத்தை தடவி கொண்டிருந்தவளின் முகத்தினில் அவ்வளவு கலக்கம், கண்களிலும் நீர் நிறைய ஆரம்பித்தது!

“ஒண்ணுமில்லை, சரியாகிடும்!” என்றவனின் வாய் மொழி அவனின் முகம் பார்க்க வைக்க, ஈஸ்வரின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். ஆம், தோள் தடவிய போது சூட்டினை உணர்ந்தவள், இப்போது நெற்றிப் பார்க்க.. சூடாக இருந்தது.

“ஃபீவரா இருக்கு” என,

“சரியாகிடும்” என்றவனிடம், “சாரி, நான் வேணும்னு எல்லாம் செய்யலை, தானா வந்துடுச்சு, ரியல்லி வெரி சாரி! நான் ரொம்ப பண்றேன், எனக்குப் புரியுது, நான்.. நான்.. திரும்ப ஊருக்குப் போயிடட்டுமா?” என கலக்கமாகக் கேட்க..

சற்றும் யோசிக்காமல் “போயிடு, போயிடு” என்றான் கடினமாக..

நேற்றை செயலின் தாக்கம் போல என நினைத்து, அவளின் நீல நிற விழிகளில் தோன்றிய நீயா சொல்கிறாய் என்ற பாவத்தை பார்த்துக் கொண்டவன், “என்னைக் கொன்னுட்டு போய்டு!” என,

அந்தக் கண்களில் ஒரு ஆசுவாசம், கூடவே, “ரொம்ப முடியலைன்னா கொன்னுட்டு போயிடறேன்” என முறுக்கிச் சொல்ல,

“அப்புறம் நீ தனியா என்ன பண்ணுவ?” என்றான் ஒரு மயக்கும் முறுவலோடு..

“எஸ்” என்றவளின் முகத்தில் சோர்வையும் மீறி ஒரு புன்னகை கீற்று, “அதுதான், அது யோசிச்சு தான், அது பிடிக்காம தான் வந்துட்டேன். நீ என்ன நினைச்ச, நீ என்னை கார்னர் பண்ணினதால வந்துட்டேன்னா” என்று சொல்லும் போதே காலின் பெல் சத்தம் விடாமல் கேட்க,

இருவர் முகத்தினிலுமே புன்னகை..

ஈஸ்வர் மெதுவாக எழ முற்பட, “நான் பார்க்கிறேன்” என்று அவள் செல்ல முற்பட,

“நான் எப்பவும் உன்னை மட்டும் தான் நினைக்கிறேன் பேபி, நீ என்ன நினைக்கறேன்னு நினைச்சதில்லை” என சொல்லி சோர்வில் கண்களை மூடிக் கொண்டான்.

வந்தது சமையல் அம்மா.. “காபி போடுங்க, போட்டுட்டு என்னைக் கூப்பிடுங்க” என்று திரும்பவும் ரூமின் உள் வந்தவள், திரும்பவும் அவனின் கழுத்தை தொட்டுப் பார்த்தாள். மிகவும் சூடாக இருக்க..

“ரஞ்சனி அண்ணிக்கு ஃபோன் பண்ணட்டுமா?” என்றாள்.

“வேண்டாம், வேண்டாம்” என்றான் அவசரமாக.

“ஏன்? ஜுரம் அடிக்குது கூப்பிடலாம்!” என,

“டேப்ளட் போடலாம், அப்புறம் சரியாகலைன்னா பார்த்துக்கலாம்!”

சற்று தயங்கியவள் “நான் உங்களை கடிச்சிட்டேன், சாரி” என,

முகத்தில் ஒரு முறுவல் மலர, “எப்படி இருந்தது என்னோட ப்ளட் டேஸ்ட்” என்றான்.

“சரியாத் தெரியலை, இன்னொரு தரம் கடிச்சிப் பார்த்து சொல்றேன்” என, முறுவல் பெரிதான போதும், ஒரு சோர்வு அவனுள் தெரிய..

வர்ஷினி ஈஸ்வரை காலில் தட்டி கீழே விழ வைத்து, மண்டையில் அடிபட்டு ரத்தம் வந்த நாளில் பார்த்த சோர்வு அவனின் முகத்தினில்.

“நீங்க ஏன் என்னை தள்ளி விடலை” என,

“தெரியலை, உன்கிட்ட நான் நடந்துக்குற எந்த விதத்துக்கும், என்கிட்டே பதில் கிடையாது!” என்றான் ஆழ்ந்த குரலில் அவளின் கண்களைப் பார்த்து. அந்த நீல நிறக் கண்களில் மூழ்கும் அவா கிளர்ந்து எழுந்தது.   

அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்க, காஃபியுடன் அந்த அம்மா நின்றிருந்தார்.. வாங்கிக் கொண்டவள்.. “இட்லி, சாம்பார் மட்டும் செஞ்சிடுங்க” எனச் சொல்லி உள்ளே வந்து அந்த ட்ரேயை வைத்தவள்.

பாத்ரூம் சென்று மக் கொண்டு வந்து தண்ணீர் கொடுத்து வாய் கொப்பளிக்க சொல்ல, நேற்று அவளின் செயலிற்கும் இன்று செய்வதற்கும் துளி கூடச் சம்மந்தமில்லை.

அவளையேப் பார்த்திருக்க, ஈஸ்வரின் எண்ணம் புரிந்தவளாக, “நேத்து நான் அந்நியன், இன்னைக்கு அம்பியா மாறிட்டேன்” என்று நடிகர் விக்ரமின் சினிமா கதாபாத்திரம் சொல்ல,

“எனக்கு ரெமோ தான் வேணும் பேபி” என ஈஸ்வர் பதில் சொல்ல..  

வர்ஷினிக்கு சிரிப்பு வந்துவிட.. வாய் விட்டு சிரித்தாள். சிரிக்கும் அவளை காதலாகப் பார்த்திருந்தான்.

“உனக்கு கோபம் வந்தா, இந்த மாதிரி என்னைக் கடி, அடி, ஏதாவது செய்! ஆனா போகணும் நினைக்காதே!”  

“ரொம்ப எக்ஸ்ட்ரீமா நடந்துக்கறேன், எனக்கேத் தெரியுது. நேத்து நான் செஞ்சது எதோ சைக்கோ மாதிரி ஃபீல் பண்றேன், இப்படியே கண்டினியூ ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்காம கூடப் போயிடலாம், என்னவோ ஒரு அப்சஷன் நீங்க இப்படிப் பேசறீங்க! எப்போ வேணா இது மாறலாம்”  

“மாறாது மாறவே மாறாது! இன்னுமா வர்ஷ் என்னோடது உனக்கு அப்சஷன் மாதிரி தோணுது! இல்லை! இல்லை! இல்லவே இல்லை!” என ஸ்திரமாகப் பேச,  

“வேண்டாம்! வேண்டாம்! நாம இதைப் பேசவே வேண்டாம்!” என்று வர்ஷினி அவசரமாக சொல்லவும்,

“சரி, பேச வேண்டாம்!” என்று கண்களை மூடிக் கொண்டான்.

“காஃபி குடிங்க” என்று சொல்ல,

அவள் சொல்வது போல செய்து, வாய் கொப்பளித்து காஃபி அருந்தி அப்படியே படுத்துக் கொள்ள, அவனின் அருகிலேயே அமர்ந்து இருந்தாள் சிறிது நேரம்.. திரும்ப குளித்து வெளியில் வர, ஈஸ்வரிடம் இருந்து மெல்லிய முனகல் சத்தம்.. ஆம்! ஜுரம் மிகவும் அதிகமாக இருந்தது.

கடித்து விட்ட செயலை யோசித்து இருந்தவளுக்கு, கடித்தால் உண்டாகும் பிரச்சனை யோசனைக்கு வரவில்லை!

அவனின் அருகில் வந்து தொட்டுப் பார்க்க, கொதித்து..

யாருக்கு அழைப்பது என்று தெரியவில்லை, மலருக்கு அழைக்க அலைபேசி எடுக்க.. அவளின் தொடுதலில் விழித்தவன் அவள் அலைபேசியை வைத்திருப்பதை பார்த்து,

“யாருக்கு” எனக் கேட்டான்.

“மலர் அத்தைக்கு” எனச் சொல்லவும்,

“வேண்டாம்” என்பது போலத் தலையசைத்தான்.. வீட்டுக்குக்கு தெரிய வேண்டாம்.. ஒரு பத்து மணி போல ஹாஸ்பிடல் போகலாம், யாருக்கும் சொல்லாதே!” என சொல்லி கண்களை மூடிக் கொண்டான். வர்ஷினி கடித்த விஷயம் யாருக்கும் தெரிய வருவதில் அவனுக்கு விருப்பமில்லை!

நேரம் ஆக ஆக ஒரு பதட்டம், ஒரு பயம் தோன்ற அஸ்வினை அழைத்தாள்.. எடுத்தவனிடம் “உடனே வீட்டுக்கு வாங்க” என,

அவளின் குரலில் இருந்த பதட்டத்தில் உடனே கிளம்பி வந்தான், ஆனாலும் அரை மணிநேரம் ஆக..

“அவருக்கு ரொம்ப பீவர், ஹாஸ்பிடல் போகணும்! எனக்கு இங்கே ரொம்ப நாள் ஆகிடுச்சு, இருங்க கூட்டிட்டு வரேன்!” என,

“ஏன், ரஞ்சனி வரச் சொல்லலாம் தானே!”

“ப்ச், யாருக்கும் சொல்ல வேண்டாம் சொல்லிட்டார்!” என்று அவனை அழைக்க உள்ளே சென்றாள். 

“ஏன் சொல்லக் கூடாது” என சில நொடிகள் குழம்பி நின்றவனுக்கு தோன்றியது “என்ன செய்து வைத்திருக்கிறாலோ வர்ஷினி” என.

உள்ளிருந்தே “தாஸ் அண்ணாவை கார் எடுக்க சொல்லுங்க” எனச் சத்தமாக சொல்ல,

அந்த சத்தத்தில் விழித்தவன் “யார் கிட்டப் பேசற வர்ஷ்” என,

“அஸ்வின்” என்றவளிடம், “அவன் எதுக்கு வந்தான்” என,

எதிரில் நின்று அவன் எழ கை கொடுக்க, எழுந்து கொண்டவனிடம் “உங்களுக்கு ரொம்ப ஃபீவரா இருக்கு, எனக்கு பயமா இருக்கு, வீட்ல யாரையும் கூப்பிட வேண்டாம் சொல்லிட்டீங்க, அதுதான் அஸ்வின் கூப்பிட்டேன்” என,

“அவன் எதுக்கு நாம ஹாஸ்பிடல் போக”

“என்னவோ பயமா இருக்கு, எனக்கு இங்க இப்போ தெரியாது இல்லையா”

“எனக்குத் தெரியும், அவன் வேண்டாம், நாம போவோம்!” என்றபடி முகம் அலம்பி வந்தவன்.. ஒரு டி ஷர்ட் எடுத்து மாட்டிக் கொண்டு வர.. அவன் பின்னே வந்தாள்.

“நாங்க போயிட்டு வர்றோம், நீ வேண்டாம் அஸ்வின்!” என்று விட,

“ரொம்ப பயப்படறாங்க, நான் வர்றேனே” என்றவனிடம், “வேண்டாம்” என்று மறுத்து கிளம்பினார்கள்.

தெரிந்த ஹாஸ்பிடல் எதுவும் போக முடியாத நிலை, ஈஸ்வருக்கு கடித்த இடத்தினில் வலி தெரிந்தது. அதனால் தெரியாத இடத்திற்கு போனால் அதனைக் காட்டி சொல்ல முடியும் என்று நினைத்தவனாக, பக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு இருந்த பெரிய மருத்துவமனை ஒன்று இருக்க அங்கே சென்றான்.

அவனுக்கு தெரியாது அங்கு புதிதாக ஐஸ்வர்யா சேர்ந்திருக்கிறாள் என்று.

ஒரு டெலிவரி என்று அதிகாலையிலேயே வந்திருந்தவள், வீடு சென்று குளித்து வரலாம் என வெளியே வர இருக்கும் சமயம், ஈஸ்வர் வர்ஷினியுடன் வர, பார்த்தது பார்ததபடி நின்றாள். இந்தப் பெண் அமெரிக்காவில் இருப்பதாக அஸ்வின் சொன்னானே!

பார்த்தவுடனே ஈஸ்வருக்கு தான் உடல் நிலை சரியில்லை என்று தோன்றியது. அவன் ஒரு ஷார்ட்ஸ், டி ஷர்டில் இருந்தான். அவனின் வேக நடை மிஸ்ஸிங்..

அங்கே இருக்கும் எம் டீ டாக்டர் யார் இருக்கிறார் எப்போது வருவார் என்று ரிசப்ஷனில் கேட்டுக் கொண்டிருந்தான்.

அருகில் செல்லலாமா வேண்டாமா என்று பட்டி மன்றம் நடத்தி ஐஸ்வர்யா தயங்கி நின்று கொண்டிருந்தாள். கண்கள் இருவரையும் ஆராயும் பார்வை பார்த்தது. “இந்தப் பொண்ணு அவ்வளவு குண்டா இருக்கும், ஒல்லியா ஆகிடிச்சு, ஆனாலும் இவனுக்கு மேட்சிங் கம்மி தான்” என நினைத்துப் பார்த்திருந்தாள்.

எத்தனை முறை அந்தப் பேதைப் பெண் அதனை நினைப்பாள்? உண்மையில் ஈஸ்வரை கடந்து வந்து விட்டாள். பெரிதாக அவனின் நினைவுகள், தாக்கங்கள், எதிர்பார்ப்புகள் என்று எதுவும் இல்லை!

ஆனாலும் “நீ நல்லா இருடா” என்று வாழ்த்தும் அளவிற்கு மனப் பக்குவம் வரவில்லை. வரன் வரும் போது அவனோடு ஒப்பிட்டு பார்த்து அவனையும் விட சிறந்ததாக ஒன்றை தேடியது!  பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“இன்னும் அரைமணி நேரம் ஆகுமாம் வர்ஷ்” என்று அவளிடம் ஈஸ்வர் சொல்ல, “இன்னும் அரைமணி நேரமா” என்று அவனின் கையை காய்ச்சலுக்கு தொட்டுப் பார்க்க,

வர்ஷினியின் முகத்தினில் தெரிந்த கவலை, பரிதவிப்பு, “ஈஸ்வரை இந்தப் பெண் மிகவும் விரும்புகிறாள் போல” என்று தான் ஐஸ்வர்யாவிற்கு தோன்றியது. “ஆனா ஏன் ஹாஸ்டல் போனா? விட்டுட்டுப் போனா? இப்போ டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பியிருக்கான்னு ரூபாக்கா சொன்னா? ஏன் இவளையும் இவன் ஏமாத்திட்டானா?” என ஈஸ்வரை பார்த்திருந்தாள்.

அஸ்தமனமெல்லாம் நிரந்தரமல்ல.. மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்!      

 

Advertisement