Advertisement

அத்தியாயம் எழுபத்தி ஐந்து:

அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே

அதற்கு பதில் சொல்லாமல்.. “எனக்கு அந்த அக்கௌன்ட்ஸ் பார்க்கவேண்டாம்.. நீங்களே பார்த்துடுங்க.. எனக்கு என்னன்னு சொன்னா மட்டும் போதும், அண்ட் அமௌன்ட் ரொம்ப அதிகமாத் தான் என்கிட்டே இருக்கும்.. இல்லைன்னா நீங்க அந்த ப்ரபோசல்க்கு என்னை சூஸ் பண்ணியிருக்க மாட்டீங்க” என..

பேச்சிலிருந்து விஷயம் அவள் கிரகிப்பது அவளின் புத்திசாலிதனத்தைக் காட்டியது.. “இந்த ஐ பீ எல் ப்ரபோசல் நான் உன் முன்னே வைக்கறதுக்கு பணம் மட்டும் தான் ரீசன்னு நீ நினைக்கறியா வர்ஷி” என..

அதற்கும் பதில் சொல்லவில்லை அமைதியாக இருந்தாள்..

சிறிது இடைவெளியும் விட்டான் ஏதாவது சொல்வாளோ என எதிர்பார்த்து.. அவள் சொல்லும் வழியாகக் காணோம் என்றதும் அவளிடம் யோசனை கேட்டான் “நான் செய்யறது சரியா?” என.

“சரியா? தப்பா? அதுல என்ன ப்ராஃபிட் எல்லாம் எனக்குத் தெரியாது.. பட் நுழைஞ்சிட்டம்னா நாம சரி பண்ணிக்கணும் அண்ட் இந்தியால அது கண்டிப்பா முடியும்.. ஏன்னா ரொம்ப பேரை இங்க கிரிக்கட் பைத்தியம்மாக்குற விஷயம்.. இன்னொரு ஃபாண்டசி வோர்ல்ட், சோ ரிஸ்க் எடுக்கலாம்”

“ஆனா அதுல என்ன பண்ணனும் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?” என..

“எனக்கும் அதிகம் தெரியாது.. பட், ஜகன் இருக்கான், அஸ்வின் இருக்கான்.. பார்த்துடலாம்!”

“ஆனா அவங்க எல்லாம் இதுல விட்டாங்க தானே!”

“அவனுங்க விட்டது கேம்ப்ளிங்ல.. நாம என்ன அதுவா பண்ணப் போறோம்… நாம பண்றது கேம்.. அதுல வர்ற ஸ்பான்ஸர்ஸ்… ஆட்ஸ்.. ப்ளேயர்ஸ்.. இன்னும் நிறைய..”

“நான் சொல்றது சுத்தமா எனக்குத் தெரியாதுன்னு கிடையாது.. என்னையும் விட அவங்களுக்கு இதுல இன்னும் கொஞ்சம் தெரியும்.. என்னன்னு கேட்டுக்கலாம், அதுக்காக அவங்க சொல்றதை எல்லாம் செய்ய மாட்டேன்”

“இன்னும் பெஸ்ட் பீப்பில்ஸ் எல்லாம் இருக்காங்க.. நாம அவங்களை ஹையர் பண்ணலாம்.. எல்லாமே இப்போ கார்பரேட் தான்.. நாம அதை யூஸ் பண்ணனும்.. ஆனா அது நம்மை யூஸ் பண்ண விடக் கூடாது. பார்ப்போம்.. முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு”

“ஆனா நிறைய பணம்..” என இழுத்தவளிடம்.. 

“எஸ், கண்டிப்பா.. கிட்ட தட்ட நைன் ஹண்ட்ரட் க்ரோர்ஸ்” என,

விழி விரித்தவள்.. “நம்ம கிட்ட அவ்வளவு பணம் இருக்கா” என..

திரும்பவும் நம்ம என்ற வார்த்தையை வர்ஷினியின் வாய் மொழியாகக் கேட்கவும்..

ஈஸ்வரின் மனதில் ஒரு புது உற்சாகமே..

“லிக்விட் கேஷ் கிடையாது, ஆனா மொபளைஸ் பண்ண முடியும்.. என் கிட்ட ஈஸ்வர் ஃபைனான்ஸ் இருக்கு”

“இந்த நாலு வருஷத்துல.. முன்ன இருந்ததை விட பத்து மடங்கு அது அதிகமாகி இருக்கு.. இது சாதாரண விஷயம் கிடையாது.. நான் மட்டுமில்லை.. ஜகன் கூட இருக்கான்.. வாழ்க்கையில வாங்கின அடி.. அதுக்கு நான் சஃபர் ஆனது.. அவனை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணியிருக்கு.. ரொம்ப கடுமையா உழைக்கிறான்”  

“நான் என்ன பண்ணனும் நினைக்கறனோ அதை சொன்னா கரக்டா செஞ்சு முடிக்கறான்.. சோ, நான் ப்ளான் பண்றேன்.. அது எப்படி பண்ணனும் சொல்றேன்.. அவன் செஞ்சு முடிக்கறான்.. அது கரக்டா நடக்குதான்னு ரூபா பார்க்கறா..”

“ரூபா அக்காவா…” என..  

“எஸ், ரொம்ப இன்டெலிஜன்ட் அவ.. என்னோட ஸ்கூல் மேட்..உன்கிட்ட சொல்லியிருக்கேனா” என..  

“ஆம்” என்பது போல தலையசைத்தவளிடம்.. “ஜகன் அவளை ரொம்ப இஷ்டப்பட்டான்.. நான் தான் அவ கிட்டப் பேசினேன்.. நான் சொன்னா சரியா இருக்கும்னு உடனே சரின்னு சொல்லிட்டா… எங்க வீட்ல ஒத்துக்கவேயில்லை, ரொம்ப கன்வின்ஸ் பண்ணினேன்.. ஜகன் இந்தப் பணம் தொலைச்சப்போ சூசைட் அட்டம்ப்ட் பண்ணினான்.. உனக்கு தெரியும் தானே, உங்கப்பா கூட அப்போ ஹாஸ்பிடல்ல இருந்தார்”.  

“அந்த பீரியட்ல ரொம்பவும் ஸ்ட்ரெஸ்ல இருந்தேன்.. அவ ரொம்ப டிப்ரஷன்ல இருந்தா.. பணம் தொலைச்சதுக்கு காரணம் அவ தம்பி.. கணவன்  ஹாஸ்பிட்டல்ல.. என்னோட ரெஸ்பான்சிபிலிட்டீஸ் அதிகம் ஆகிடுச்சு. அஸ்வின் ஒரு பக்கம் ரஞ்சனியை கல்யாணம் பண்ண மிரட்டி இருக்கான், அதை என்கிட்டே சொல்ல பயந்து.. சொன்னா அஸ்வினை ஏதாவது பண்ணிடுவேன்னு.. கூடவே பணப் பிரச்னையும் சரி பண்றேன்னு இந்த ரஞ்சி பத்துவைக் கல்யாணம் பண்ணி.. ஆனா உங்க வீடும் பிடிக்காம.. அப்போ ரொம்ப ரொம்ப ஸ்ட்ரெஸ்.. எப்படியோ வெளில வந்துட்டோம்”    

“இப்போ பத்து அண்ணாவும் ரஞ்சனி அண்ணியும் ஓகே வா” என வர்ஷினி பதில் கேள்வி கேட்க..   

“அதான் குழந்தை இருக்கே சரியாகிட்டாங்க” என..  

“குழந்தை இருந்தா சரியாகிட்டாங்களா?” என வர்ஷினி பதில் கேள்வி கேட்க..

ஈஸ்வரின் முகத்தில் வேகமாக ஒரு கவலைப் படர.. “ஆரம்பிச்சிட்டான்டா இவன்” என மனதினில் நினைத்தாலும்.. “ஜஸ்ட் ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. நீங்க பார்க்கறீங்க தானே, ஏதாவது வித்தியாசம் தெரியுதா?” என..

“இல்லையில்லை” என ஈஸ்வர் சொல்ல.. “அப்போ சரியாகியிருக்கும்” என  வர்ஷினி சொல்லவும் தான் திரும்ப ரூபாவிற்கு வந்தான். “அவனை ஏன் நீ சமாதானம் செய்ய வேண்டும்.. என்ன பட்டாலும் நீ திருந்த மாட்டாய்” என தன்னையும் திட்டிக் கொண்டாள்.   

“இந்த ரெண்டு வருஷமா ரூபா எங்களோட இருக்குறா.. அதனால தான் ஜகன் எங்கேயும் ஏமாந்துடுவானோன்னு பயம் இல்லாம என்னால இன்னும் அதிகமா செயல் பட முடியுது”

“இப்போ பாரு ரெண்டு நாளா அங்கே என்ன நடக்குது கூட எனக்கு தெரியாது, அவங்க பார்த்துக்குவாங்க” என்றவன்.. “என்ன பண்ணலாம்?.. பண்ணிடலாமா ஐ பீ எல்” என,

“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” எனத் தலையாட்டினாள்.. 

“இன்னும் யார் கிட்டயும் சொல்லலை.. அதோட பிரசன்ட் ஓனர் இதை என்கிட்டே பேசி ஒரு மாசம் ஆச்சு.. மணி மொபளைஸ் பண்ண தான் ப்ளான் பண்ணிட்டு இருந்தேன்.. ஓரளவுக்கு ஷேப் ஆகிடுச்சு.. நீ வந்ததும் உன்கிட்ட பேசிட்டு ஃபைனல் டெசிஷன் எடுத்துடலாம்ன்னு வெயிட் பண்றேன் பண்ணிடலாமா?”

“ஒரு டூ ஹண்ட்ரட் க்ரோர்ஸ் ஷார்டேஜ் ஆகுது.. ரெண்டு வருஷம் முன்ன உன்னோட பணத்துல பிஃப்டி க்ரோர்ஸ் நான் சில இடத்துல இன்வெஸ்ட் பண்ணினேன்.. அது இப்போ நாலு மடங்கா போகுது.. வித்துட்டா முடியும்.. ஒரு அரசியல்வாதி மாட்டியிருக்கான்.. முடிச்சிடலாம்” என,

“ஆங்” என வாய் பிளந்தாள்.. கோடிஸ்வரர்கள் என்று தெரியும்.. ஆனாலும் இவன் பேசும் பணம்.. “நாம அவ்வளவு பணம் வெச்சிருக்குறவங்களா?” என ஆச்சர்யம் காட்ட..   

அவளின் பாவனையில் வாய் விட்டு சிரித்தவன்.. “உன்னோட சொத்து மதிப்பு தெரியாதா?” என,

“தெரியாது” என்றவள், “அப்பா இருந்தவரை எல்லாம் அப்பா பார்த்துக்கிட்டாங்க.. ஏதாவது கேட்டா கையெழுத்து தான் போடுவேன்.. அப்பாக்கு அப்புறம் பத்துண்ணா கையெழுத்து வாங்க வந்து.. அப்போ பிரச்சனையாகி.. நாம வீட்டை விட்டுப் போய்.. இப்படி பலதும் நடக்க.. நான் வேற பல விஷயத்துல சிக்கிட்டேன்.. அப்புறம் நாம பிரிஞ்சிட்டோம்.. அப்புறம் நான் வெளிநாடு போயிட்டேன்..” என வர்ஷினி பேசப் பேச இமைசிமிட்டாமல் பார்த்தான்..

இப்படித் தான் அவளின் அப்பா வீட்டில் இருக்கும் போது நடந்தவைகளை கதையாகச் சொல்வாள்.. இப்போது என் மனைவி ஆன பிறகும் கூட..  இது வாழ்க்கையில் என்றுமே தான் ஈடு செய்ய முடியாத அவளின் நாட்கள் என புரிந்தது.    

வர்ஷினி அவனின் எண்ணவோட்டம் புரியாதவளாக பேசிக் கொண்டே போனாள் “இதுல எந்த நேரத்திலையும் அது எனக்கு தெரிஞ்சிக்கணும்னு தோணலை”

“எனக்கு என்னோட உரிமை தான் முக்கியம், பணம் முக்கியமில்லை.. அது அப்போ தாத்தா பேசின பிறகு… அதுவும் நீங்க குடுத்துடலாம் சொன்ன பிறகு.. எனக்கு இதுல இருந்த இன்ட்ரஸ்ட் போயிடுச்சு”

“எல்லாம் தூக்கிப் போட்டு என்னை எனக்குப் பார்த்துக்க தெரியும்னு சொல்லணும்னு தோணினது, ஆனா உரிமைன்ற ஒரே விஷயத்துக்காக தான் அமைதியா இருந்தேன்.. கூடவே இது என்னோடதும் கூட”

“அப்புறம் நீங்க அஸ்வினை இதைப் பார்க்க விட்டீங்க.. அப்படியும் நீங்க தான் பார்த்துக்குவீங்க தெரியும்.. சோ, என்னை மட்டும் நான் பார்த்துக்கிட்டேன்” என்றாள்.. குரலில் ஒரு வருத்தம் வலி..

“நீ அக்கௌன்ட்ஸ் பார்த்துக்கணும் பேபி, உனக்கு எல்லாம் தெரியணும்.. நான் உன்னை ஏமாத்திட்டா?” என்றான்.

“நீங்களா?” என நிறுத்தியவள்.. “எஸ், நீங்க என்னை ஏமாத்திட்டீங்க தான், அதுல செகண்ட் தாட் கிடையாது.. ஆனா பண விஷயத்துல நீங்க பக்கா, எனக்குத் தெரியும்.. உங்க ஃபைனான்ஸ் விஷயத்துல பார்த்தேன் இல்லையா?”

“எதுலையும் ஒரு நேர்மை வேணும், ஏன் தப்பு செஞ்சாக் கூட ஒரு நேர்மை இருக்கணும்.. அந்த வகையில ஏதோ ஒரு நேர்மை உங்கக்கிட்ட இருக்கு.. அதனால தான் இவ்வளவு ஷார்ட் பீரியட்ல இந்த சக்சஸ் நினைக்கிறேன்.. நீங்க இன்னும் இன்னும் வளர என் வாழ்த்துக்கள்” என வர்ஷினி கையை நீட்ட..

“வர்ஷ்.. நான் தேர்ட் பெர்சன் கிடையாது.. இது நம்மோட சக்சஸ்! நீ வேற, நான் வேற கிடையாது” எனச் சொல்லியவன்.. அவளின் நீட்டிய கைகளைப் பற்றாமல் பார்த்திருந்தான்..

கூடவே “தப்பு செய்யறதுலையும் ஒரு நேர்மைன்னா.. புரியலை!” என,

“என்கிட்டே தப்பா நடந்தீங்க.. அது சரி பண்ண என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.. இல்லை கல்யாணம் பண்ணாம நான் உங்களுக்கு கிடைக்க மாட்டேன்னு கூட பண்ணியிருக்கலாம். இப்ப வரைக்கும் நான் உங்களை எவ்வளவு டார்ச்சர் பண்ணினாலும் என்னை பொறுத்துக்கறீங்க.. ஒரு ட்ரக் அடிக்ட்.. ஆனாலும் நீங்க என்னை விடலை” 

“அப்போ விட்ட இடத்துல பிடிக்கணும்னு நினைக்கற உங்க கான்சப்ட் என்கிட்டயும் யூஸ் பண்றீங்க.. என்கிட்டே டீமாரலைஸ் ஆன நீங்க, என்கிட்டயே மாரல் தேடறீங்க போல” என..

வர்ஷினியின் பேச்சைக் கேட்டதும் உள்ளம் கொதித்தது, “ரப்பிஷ்.. வாயை மூடு! எவ்வளவு தரம் உனக்கு என்னை புரிய வைக்க..” என ஆத்திரமாகப் பேச

கூலாக அவனின் ஆத்திரம் சிறிதும் தன்னை அசைக்காதவளாக நின்றவள்… “என்ன பண்ண? எனக்கு புரியலை!” என்றாள்.

“நீ கொஞ்சம் வீக் வர்ஷ், ஆனா நான் ரொம்ப ஸ்ட்ராங். உனக்குப் புரியற வரை புரிய வெச்சிட்டே இருப்பேன்” என,

“அப்படியா, புரிஞ்சாலும் நான் ஒத்துக்குவேன்னு நீங்க இன்னும் நம்பறீங்களா?” என்று கேட்டவளின் பார்வையில்.. வார்த்தையில்.. இருந்த அலட்சியம்.. ஈஸ்வருக்கு விசில் அடிக்கத் தான் தோன்றியது..

பின்னே இவ்வளவு பைத்தியமாய் இந்த ஐந்து வருடமாய் சுத்துகிறான்.. இந்த அவளின் பாவனைகள் தான் அவனை பித்தனாக்குகின்றதோ..

அதுவரையிலும் நீட்டிய கை நீட்டியபடி தான் வைத்திருக்க.. அதைப் பற்றியவன் அவள் எதிர்பாராமல் இழுக்க.. அவன் மேல் வந்து மோதி தான் நின்றாள்.. மோதலும் சற்று பலம் தான்..

“அம்மா” என்று வாய் தானாக சொல்லி, நெஞ்சுப் பகுதியில் ஒரு கை போக.. இடையோடு அணைத்துப் பிடித்தவன்… “சாரி” என்று வர்ஷினியின் கையை விலக்கி அந்த வேலையை  தனதாக்க..  

“அம்மா” என்று திரும்பவும் சொன்னவள்.. அவனின் கையை அசைய விடாமல் பிடித்துக் கொண்டாள். அதில் வலுவே இல்லை.. ஆனாலும் கையை ஈஸ்வர் அசைக்கவில்லை. அதே சமயம் எடுக்கவுமில்லை.. முன்னேறவும் மனதில்லை.. பெண்ணவளின் தடுமாற்றம் அவனை தேக்கியது..  

அந்த நீல நிறக் கண்களில் ஒரு கலவரம்.. தெரிவித்துக் கொள்ள விரும்பாத ஒரு கலவரம்.. உடலில் சில ரசாயன மாற்றம்.. தாள முடியவில்லை…  

“எனக்கு நம்பிக்கையிருக்கு வர்ஷ், கண்டிப்பா நீ சொல்வே” என்றான்..

“இல்லை, எனக்கு சொல்றதுல இஷ்டமில்லை” என்று சொன்னவளின் விழிகளும் கலங்க.. குரலும் கலங்கியது..

“உன்னோட சந்தோஷசம் என்னோட மட்டும் தான் வர்ஷ்.. உனக்குத் தெரியுமோ இல்லையோ எனக்குத் தெரியும்.. ரொம்ப கஷ்டப் படுத்திக்காத உன்னை.. நான் உன்னை தனியா விட்டாலும் நீ சந்தோஷமா இல்லை. நான் உன்னை தனியா விட்ட பிறகு நேர்ல பார்க்கலைன்னாலும் எனக்குத் தெரியும்” என..

ஈஸ்வரின் இரு கைகளிலும் அழுத்தம் கூட.. சில நொடி கண்மூடியவள்.. உடலின் வலு எல்லாம் சேர்த்து அவனை ஒரே தள்ளாக தள்ளவும்.. அதை எதிர்நோக்கி இருந்தவனாக .. விழ இருந்தவன் சுதாரித்து நின்றான்..

“ஷ், பா! எவ்வளவு பிடிவாதம்!” எனத் தோன்ற, முகத்தில் ஒரு கசந்த முறுவல் தானாக மலர..

“உன்னால என்னை விட்டு யாரோடையும் இருக்க முடியாது” என்றான் ஆணித்தரமாக.  

“முடியும், ஏன் முடியாது? என் அம்மாவோட இல்லை என் அப்பாவோட குணம் எனக்கும் இருக்கும்” என்று திமிராகப் பேச..

“கண்டிப்பா கிடையாது..  உங்கம்மாவோட, உங்கப்பாவோட திறமை உன்கிட்ட வந்திருக்கலாம், ஆனா குணம் வரலை.. ஒரு உண்மை சொல்லட்டுமா! இந்த நிமிஷம் நான் செத்துப் போனாக் கூட நீ இந்த உலகத்துல இருக்குற வரை தனியா தான் இருப்ப.”

“நான் இறந்த பிறகு உனக்கு ஒரு வாழ்க்கை அமையக் கூடாதுன்னு நான் நினைக்க மாட்டேன்.. அது தப்பும் கிடையாது.. ஆனா அப்படி ஒரு சூழல் வந்தாலும் நீ தனியா தான் நிற்பே..!” 

“ஐ சேலஞ்…!” என்றான் சவாலாக.

“வாயை மூடிட்டு போடா.. நீ பேசவே பேசாதே.. எரிச்சலா வருது.. பேசிட்டே இருக்காதே.. வாயை மூடு! அப்புறம் நான் தான் செத்துப் போவேன்!” எனக் கத்தினாள்.  

வர்ஷினி திரும்ப கோபமாகச் சொல்ல வர.. தன் வாயின் மேல் கைவைத்து பேச மாட்டேன் என சைகை செய்தவன்.. நீயும் பேசாதே என சிக்னல் காட்ட..

“போடாங்..” என்று ஆரம்பித்தவள் கெட்ட தமிழ் ஆங்கில வார்த்தைகளில் பாரபட்சமின்றி திட்ட.. வாயில் இருந்த கையை எடுத்து இரண்டு காதினையும் மூடிக் கொண்டான்..

முகத்திலும் “அச்சோ இவ்வளவா..” எனத் தோன்ற கண்களையும் மூடிக் கொண்டான்.. உண்மையில் ஈஸ்வருக்கு அவ்வளவு கெட்ட வார்த்தைகள் வராது..   

சிறிது நேரத்தில் சத்தம் எதுவும் கேட்காததால் கண் திறக்க.. “உன் காதுல இருக்குற கை எடு.. நான் உன்னை திட்டணும்.. அதை நீ கேட்கணும்” என அவள் மிக அருகில் நிற்க..

அந்த நீல நிறக் கண்களை பார்த்துக் கொண்டே ஆழ்ந்த மூச்செடுத்தவன் “ரொம்ப வாசனையா இருக்க வர்ஷ் நீ” என..  

“உன்னை” என திரும்பவும் ஆரம்பிக்க.. அவசரமாக அவளின் வாய் மூடியவன்.. “இன்னைக்கு இது போதும்.. ப்ளீஸ் பேசிடாதே.. அப்பப்போ திட்டிக்கோ” என சீரியசாகச் சொல்ல.. 

வர்ஷினியின் முகத்தில் தானாகப் புன்னகை மலர்ந்தது, ஆனால் ஈஸ்வர் வர்ஷினியின் வாய் மூடி இருந்ததால் அவனுக்கு தெரியவில்லை.

“சாப்பிட்டியா” என..

“இல்லை” என்பது போலத் தலையாட்டவும்.. வர்ஷினியின் வாய் மேல் இருந்த கையை எடுத்தவன்.. அவளையும் அமர வைத்து அவனும் உண்டு.. அவளை அழைத்துக் கொண்டு வெளியே வர.. தாஸ் காருடன் தயாராக இருந்தான்.  

பின்பு ஈஸ்வர் கட்டிக் கொண்டிருந்த வீட்டிற்கு அழைத்து சென்றான்… பிரமாண்டம்.. இன்னும் முடிக்கப் படவில்லை..  ஆங்காங்கே ஆட்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.. வர்ஷினி பார்த்தது பார்த்தபடி நிற்க..

“உன்னோட வீடு.. இதுல உன்கூட என்னை இருக்க விட்டாலும் சரி.. இல்லை வெளில நிக்க வெச்சாலும் சரி.. ஆனாலும் என்னையும் சேர்த்துக்கோ” என பாவனையாகச் சொல்ல ..

“ஏய், என்ன கிண்டலா? சும்மா என்னை டென்ஷன் பண்ணாதே” என அவனை முறைத்துப் பார்க்க.. யாரும் கேட்டுவிட்டார்களா என ஈஸ்வர் அவசரமாகச் சுற்றும் முற்றும் பார்த்தான்..

“இப்போதானே சொன்னேன் வாய் திறக்காதேன்னு!” என்று கை நீட்டி மிரட்ட.. மிரட்டும் கையை பிடித்து தன் மேல் மீண்டும் இழுத்து விடத் தோன்ற.. அவனின் பார்வை புரிந்து வேகமாகக் கை இறக்கினாள்.   

அப்போது அங்கே ஒருவன் வரவும்.. ஈஸ்வரின் முகம் அப்படியே மாறியது..

“ஹாய் சாம்.. திஸ் இஸ் மை வைஃப் சங்கீத வர்ஷினி”  

“ஹலோ மேம்” என்று பவ்யமாக அவள் முன் அந்த சாம் என்பவன் நிற்க.. 

“எனக்குத் தெரிஞ்ச மாதிரி மாடல் பண்ணியிருக்கேன் வர்ஷ்.. இன்னும் உனக்கு என்ன என்ன ப்ரொவிஷன் வேணும்.. இல்லை ஆல்ட்ரேஷன் வேணும்.. இல்லை இன்டீரியர்ஸ் என்ன வேணும்.. ஸ்டுடியோ பண்ணனுமா அதுக்கு என்ன வேணும்.. பாரு.. பார்த்துட்டு சொல்லு.. ஐடியாஸ் வேணும்னா இவர் கிட்ட சொல்லு காட்டுவார்”    என்றவன்…  

திரும்ப என்ன வேண்டும் என சாமிடம் பேச நின்று விட.. வர்ஷினி வீட்டை எல்லாம் பார்க்கவில்லை.. ஈஸ்வரை தான் பார்த்திருந்தாள்..

ஈஸ்வர் சாமிடம் முமுரமாக பேசிக் கொண்டிருக்க.. “ஹாய் மேம்” என்று ஒரு குரல்.. திரும்பினால் அஸ்வின்..

“ஹாய் அஸ்வின்” என..

“இருங்க, இருங்க, இது நீங்க தானான்னு ஈஸ்வர்கிட்ட கன்ஃபர்ம் பண்ணிக்கறேன்” என்று வர்ஷினி ஒல்லியானதை அஸ்வின் கிண்டல் செய்ய.. 

“ஓஹ், அவர் கிட்டயா கேளுங்களேன்!” என எப்படியும் அஸ்வின் கேட்க மாட்டான் என வர்ஷினி பதில் கிண்டல் செய்ய ..

“செமையா சைட் அடிச்சிட்டு இருந்தீங்க.. நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என சத்தமாக அஸ்வின் கேட்க..

ஈஸ்வர் அஸ்வின் என்ன பேசுகிறான் எனப் பார்த்தான்..  

திரும்ப வர்ஷினி அஸ்வினை பார்த்த பார்வையில்.. “வீட்டை விடாம பார்த்துட்டே இருந்தாங்க, சொன்னேன்!” என அஸ்வின் சமாளித்தான்.

“பிடிச்சிருக்கா வர்ஷ்” என  ஈஸ்வர் ஆரவமாகக் கேட்க…

“பிடிக்காமையா பார்ப்பாங்க” என அஸ்வின் ஈஸ்வரை மனதில் கொண்டு சொல்ல..

திரும்ப வர்ஷினி பார்த்த பார்வையில் வாய் மேல் பேசமாட்டேன் என்பது போல அஸ்வின் கை வைத்துக் கொண்டான்.    

கோபமாக ஈஸ்வரிடம் திரும்பியவள், “இவரை யாரு வரச் சொன்னா” என கடுப்பாகக் கேட்க..   

“உன்னை பார்க்கணும் சொன்னான், நான் தான் வரச் சொன்னேன்” என ஈஸ்வர் சொல்லவும்..

அஸ்வின் அருகில் வந்தவள் “கிண்டல் பண்றேன்னு லூசுத் தனம் பண்ணக் கூடாது.. புரிஞ்சதா!” என்றாள் மிரட்டலாக.

“புரிஞ்சது” என மண்டையை மண்டையை ஆட்டிய அஸ்வின்.. “லைஃபை என்ஜாய் பண்ற வயசு.. கோபத்தை இழுத்து பிடிச்சு ஸ்பாயில் பண்ணிக்காதீங்க, பிடிச்சிருக்குன்னா ஒதுக்கங்க” என்றான் சின்சியராய்.

“நீங்க என்னை விடப் பெரியவங்க தான்.. ஆனா அட்வைஸ் பண்ணனுமா என்ன?” என,

“எப்படியும் கேட்க மாட்டீங்க தெரியும், ஆனாலும் சொல்லணும் தோணிச்சு சொன்னேன்!” என அஸ்வின் சொல்ல..

“தோணினது எல்லாம் செய்யக் கூடாது!” என வர்ஷினி வழக்காட..

என்னவோ வர்ஷினி அஸ்வினை அதட்டுவது போலத் தோன்ற.. “என்ன வர்ஷ் அவனோட ஆர்கியுமென்ட்?” என்று ஈஸ்வர் அதட்டினான்.

அஸ்வினை முறைத்தவாரே ஈஸ்வரின் அருகில் சென்று நிற்க.. தானாக ஒரு புன்னகை அஸ்வின் முகத்தில் மலர்ந்தது.

அஸ்வின் சொல்லச் சொல்ல கிண்டல் செய்கிறான், ஈஸ்வருக்கு தெரிந்து விடப் போகிறது என பயந்து, ஒரு ஆத்திரம் கிளம்ப, “என்ன கிடைக்கிறது அவன் மேல் எரிய..” எனப் பார்த்தவள்.. அகப்பட்ட ஒன்றை கையில் எடுக்க..

“ஹே, என்ன பண்றே” என்ற ஈஸ்வர் அவள் எரியும் போது அப்படியே வர்ஷினியின் இடையில் கை கொடுத்து தூக்கி திசை மாற்ற.. அஸ்வின் அடிபடாமல் தப்பினான்..

எல்லோரும் பார்த்து இருந்தனர்.. எதோ விளையாட்டு எனத் தான் தோன்றியது.. எல்லோர் முகத்திலும் முறுவல் கூட..   

“என்ன வர்ஷ் இது சின்னப் பொண்ணு மாதிரி?” என்று ஈஸ்வர் அவளுக்கு மட்டும் கேட்குமாறு கடிய..

தப்பித்தாலும் வர்ஷினியின் செய்கைப் பார்த்து சிரிப்பு வர.. அஸ்வின் சிரித்தான்.  

“இவன் என்னை கிண்டல் பண்றான், கிண்டல் பண்ணவேண்டாம் சொல்லுங்க, அப்புறம் அடிச்சிடுவேன்!” என வர்ஷினி ஈஸ்வரிடம் முறையிட..

“என்ன கிண்டல் பண்றானா? என்ன விஷயம்?” என்று ஈஸ்வரின் முகம் நொடியில் சீரியசாக மாற..

ஈஸ்வரின் முக மாற்றத்தை பார்த்தவன்.. “அச்சோ, ஈஸ்வர் இவங்க உன்னை சைட் அடிச்சாங்க.. அது தான் சொன்னேன்..” என்று அஸ்வின் உளறி போட்டுக் கொடுக்க..

“போடாங்..” என்று வர்ஷினி ஆரம்பிக்கவும் அவசரமாக ஈஸ்வர் அவளின் வாய் மூடினான்..

“விடுங்க, விடுங்க” என்று வர்ஷினி திமிர..

“பேச மாட்டேன்னா தான் விடுவேன்” என்று ஈஸ்வர் டீல் பேச.. எல்லோர் பார்வையிலும் இருவரும் காதல் மிகுந்த தம்பதிகளாகத் தோன்றினர்..

ஈஸ்வரின் இறுக்கமான முகம் ஒரு  மென்மையோடு வர்ஷினியைப் பார்ப்பது அங்கிருந்த அனைவருக்குமே தெரிந்தது. ஈஸ்வரை அப்படித்தானே பார்த்திருந்தனர். அதனால் யாருக்கும் வர்ஷினியின் செய்கை தப்பாகத் தோன்றவில்லை.  

“சரி, சரி” என்பதாக அவள் தலையாட்டவும் தான் விட்டான்.  

பின்னே பேச விட்டால் மானம் கப்பல் ஏறி விடாதா.. விட்டவுடன் அஸ்வினை முறைத்துப் பார்க்க.. “நீங்க ஈஸ்வரை பார்க்கறதை இனிமே நான் சொல்லவே மாட்டேன்” என்று அஸ்வின் மேடை ரகசியம் பேச..

“இவன் நிஜம் சொல்கிறானா? பொய் சொல்கிறானா?” என்று ஈஸ்வர் மனதிற்குள் யோசித்த போதும் வாய் விட்டு சிரித்தான்.    

அஸ்வின் செய்த அசட்டுத்தனத்தில் வர்ஷினியும் அசடு வழிந்து முகத்தையும் கண்களையும் சுருக்கி தன் தலையைத் தானே தட்டிக் கொண்டாள்.

பார்பதற்க்கே அது ஒரு கவிதையாய் இருக்க.. அழகு வர்ஷினியை சுற்றி வேலை செய்த எல்லோரும் பார்த்திருந்தனர்.

“இல்லை, நான் ஒன்னும் சொல்லலை” என்று அஸ்வின் ஆரம்பிக்கும் போதே.. “பேசிடாதே” என்பது போல அஸ்வினை பார்த்து தலைக்கு மேல் ஒரு கும்பிடு போட..  

அங்கே தோட்டம் அமைக்க பாத்தி கட்டிக் கொண்டிருந்த இடத்தில் இருந்த ஒரு வயதான பெண்மணி நின்ற இடத்தில் இருந்தே வர்ஷினியை திருஷ்டி எடுத்தார்.    

நடப்பவை அத்தனையும் “பே” என்று திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்த தாஸிடம்.. சைகை செய்து அருகில் வரச் செய்து திருஷிடி சுற்றிய பெண்மணிக்கு சில நூறு ரூபாய் தாள்களை ஈஸ்வர் கொடுத்து விட்டான்.

அந்த சூழலில் வர்ஷினிக்கு எல்லாம் மறந்து போனது. ஒரு இறுக்கம் குறைந்த இலகுத்தன்மை அவளின் மனதில் வியாபித்தது.  அது கண்களிலும் பிரதிபலிக்க, வெகு நாட்களுக்குப் பிறகு வர்ஷினியின் கண்களில் ஒரு துடிப்பு.. அதை ஈஸ்வர் ஆசையோடு பார்த்திருந்தான்.  

இவ்வுலகம் இருண்ட பின்னும்
இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி!

 

 

      

 

 

Advertisement