Advertisement

அத்தியாயம் எழுபது :

கண் திறந்து காணும் கனவு நீ!                                                       உறங்காமலேயே விழித்திருக்கிறேன் உனக்காய்!

அதிகாலை நான்கு மணிக்கு வரும் விமானத்திற்காக இரண்டு மணிக்கே வந்து உட்கார்ந்து விட்டான் ஈஸ்வர்.. அவனின் நேரம் ஒரு மணிநேரம் விமானம் தாமதம்..

சில வருடங்களுக்கு பிறகு பார்க்கப் போகிறான்.. எப்போது கடைசியாகப் பார்த்தான் ஞாபகமே இல்லை.. பார்க்க அனுமதியாத போது ஒளிந்து மறைந்து ஓரிருமுறை தூரமாய் பார்த்திருக்கிறான்.. முன் செல்லும் தைரியம் இல்லை, எதையாவது ஏறுக்கு மாறாய் செய்து விட்டால்.. அதுவே அவனை தடுத்தது.   

இப்போது அதையே ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தான்.. அந்த நீல நிறக் கண்களை பார்க்கும் வேட்கை அவனை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது தான் உண்மை!

எப்படியிருப்பாள்.. இங்கிருந்து போகும் போதே இன்னுமே உடல் எடை அதிகரித்து இருந்தாள். இருபத்தி ஒரு வயதில் அந்த உடல் எடை அதிகம்.. ஆம்! முன்பே பூசின உடல் வாகு தான், ஹாஸ்டல் சென்ற பிறகு வெகுவாக அதிகரித்து குண்டான உடல் அமைப்பிற்குள் நுழைந்திருந்தாள். விசா இண்டர்வியுவிற்காக அவளை தாஸுடன் அமெரிக்கன் எம்பசி அனுப்பிய போது தூரமாய் நின்று பார்த்திருந்தான். “அம்மாடி! என்ன இது?” என்று பார்த்ததுமே கவலை கொள்ள வைத்தாள். 

பிறகு சில முறை பேசும் போது, பலமுறை அதை சொல்ல நினைத்து சொல்லாமல் இருந்திருக்கின்றான்… இந்த மூன்றரை வருடங்களில் எந்த வகையிலும் எந்த தொந்தரவும் கொடுத்ததே இல்லை.. என்ன ஏது அவ்வளவே!

உண்மையில் முரளிக்கும் பத்துவிற்கும் அவன் நன்றி தான் சொல்ல வேண்டும்.. அஸ்வினைக் கொண்டு அவர்கள் தள்ளி நின்று விட.. ஈஸ்வரே திரும்ப எல்லாம் கையினில் எடுத்துக் கொண்டான்.. முயன்றிருந்தால் சமாதானம் செய்திருக்கலாம், ஆனால் வர்ஷினி தன்னிடம் இருந்து தள்ளி நின்று விட்டால் என்ன செய்வது என்று ஈஸ்வர் முயன்றது இல்லை..

இந்த நினைப்பு மனதினில் தோன்றும் போதே.. மனம் ஒரு புறம் சிரித்தது.. “நீ எங்கே எடுத்துக் கொண்டாய்.. உண்மையில் உன்னை பார்க்கப் பிடிக்கவில்லை என்று சென்றவள், வேறு எதையும் நீ செய்யக் கூடாது என்று சொல்லியதில்லை, நானே பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொல்லியதில்லை.. அவளே தான் விட்டு வைத்திருக்கிறாள்..”

இப்படி யோசனைகள் ஓடும் போதே.. பிளைட்டின் அறிவிப்பு வந்து விட.. மனம் பரபரப்பானது..      

ஈஸ்வரையும் விட வர்ஷினியின் மனம் இன்னும் பரபரப்பாக இருந்தது உண்மை… ஆம்! ஈஸ்வரை சந்திக்க மனம் எகிறி தான் குதித்தது.. ஏனென்று தெரியவில்லை..

ஆம் இருவருமே முன்னுக்குப் பின் முரணாகிப் போயினர்.

விசா முடிய இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில் எங்கே போவது, சென்னை சென்றால் எங்கே தங்குவது என்ற கேள்வி முன் நிற்க.. அதற்கு அவசியமேயில்லாமல் ஒருவன் டைவர்ஸ்சின் கண்டிஷனாக வைத்தான்.

ஆம்! டைவர்ஸ் ஆகும் வரை அவனுடன் தான் தங்க வேண்டும் அவனின் வீட்டில் தான் இருக்க வேண்டும்.. தனியாக விட முடியாது.. இல்லை முடியவே முடியாது என்றால் அவளின் அம்மா வீட்டினில் தான் இருக்க வேண்டும்.. தனியாகவோ ஹாஸ்டல் சூழலிலோ விட முடியாது என்பது திட்ட வட்ட அறிவிப்பாக இருக்க.. இதற்கு சம்மதிக்காவிட்டால் டைவர்ஸ் கிடையாது என்றும் சொல்லிவிட..

இது தனக்கு மட்டுமேயானது என புரிந்த போதும்.. இது அவனுக்கும் சேர்த்து தானே என மனம் முரண்டியது..

இது வரையிலும் சரி என்ற பதிலும் சொல்லவில்லை, முடியாது என்றும் சொல்லவில்லை..

ஃபிளைட் ஏறுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு தான்.. நான் சென்னை வர்றேன் என்று மெசேஜ் தட்டி விட்டு, அது அவன் பார்த்த சிக்னலை காட்டியவுடன், ஃபோனை அணைத்து விட்டாள்.

எப்படியும் வந்திருப்பான் என்று தெரியும்..

ஆனாலும் அவனுடன் இருக்கும் இந்த சில பல மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும் என புரிந்தது..  ஈஸ்வர் அவ்வளவு எளிதாக தன்னை விட்டு விட மாட்டான் என்று தெரியும்.. முன்பு சொன்னதெல்லாம் கேட்டு அவளை ஹாஸ்டலில் இருக்க விட்டது, அப்போதைய நிகழ்வுகளால், அவளின் பழக்க வழக்கத்தால்.. இப்போது பின் வாங்கிட மாட்டான் என்றே தோன்றியது.. எதுவானாலும் பார்த்து விடலாம் என்று தான் கிளம்பியிருந்தாள்.  

என்ன விரும்புகிறது மனம் என்றே தெரியவில்லை.. அவனைப் பிடிக்கவில்லை, ஆனால் அவனைத் தவிர வேறு யாருடனும் பேசவும் முடியவில்லை.. எல்லோருமே அந்நியமாகிப் போயினர்..

தாத்தா, கமலம்மா, முரளி, பத்து எல்லோரும்.. முன்பே ஒரு ஒட்டாத தன்மை தான்.. பள்ளி படிப்பு முடித்து வீடு வந்த பிறகு சிறிது சகஜ நிலைமை வந்திருக்க.. மீண்டும் அது தொலைந்து இருந்தது.. ஷாலினி விடாமல் மெசேஜ் செய்த போதும் வர்ஷினி பதில் கொடுத்ததில்லை..

முரளிக்கு அது மனதில் சற்று கோபம் தான், ஆனாலும் காட்டிக் கொண்டதில்லை.. காட்டினால், வர்ஷினிக்காக ஈஸ்வர் அதற்கும் காரணம் சொல்வான்.. “நீயாகிற்று உன் பெண்டாட்டியாகிற்று” என்று தான் முரளி ஒதுங்கிக் கொண்டான்.. ஆம்! அவனுக்கு புரிந்தது சண்டையோ சச்சரவோ.. வர்ஷினி ஈஸ்வரிடம் காட்டும் நெருக்கம் தங்கள் வீட்டினரிடம் காட்டுவதில்லை என..  அதனால் ஒதுங்கிக் கொண்டான் என்பது தான் உண்மை!    

அன்று “எப்படி நீங்க டைவர்ஸ் பேப்பரில் கையொப்பம் இடலாம்” என்று பத்து சண்டையிட்ட போதும்..

பத்து கோபமாக ஈஸ்வரை பார்க்க சென்றிருக்கிறான் என்று அறிந்து அங்கே உடனே வந்திருந்த முரளி.. “அவனாச்சு அவன் மனைவியாச்சு, நீயேன் அவனை கேள்வி கேட்கற.. முடிஞ்சா வர்ஷினியைக் கேள், உனக்கு அவளை கேள்வி கேட்க தான் உரிமை.. இவனை இல்லை!” என்று பத்துவை அழைத்து வந்ததும் முரளியே!

வர்ஷினி, “ஈஸ்வருடன் வேறு யாரும் வந்திருப்பாரா, அவர்களை எப்படி எதிர் கொள்வது” என்று சற்று தடுமாற்றமாக இருந்தது.. அவள் வருவதை யாரிடமும் சொல்லவில்லை, அஸ்வினிடம் கூட.. சொல்லத் தோன்றவில்லை.. ஒரு மாதிரி பதட்டத்தில் இருந்தாள், சில நாட்களாகவே! 

ஜனத்திரளோடு கலந்து அவள் வெளியே வர.. கண்கள் வேகமாக ஓட.. ஈஸ்வர் அங்கே ஒரு ஒருவரையும் பார்த்து இருப்பது தெரிந்தது.. அவனைத் தான் பார்த்து இருந்தாள்.. ஆனால் ஈஸ்வருக்குத் தெரியவில்லை..

ஈஸ்வரை சிறிது நேரம் விடாது பார்த்திருந்தாள், தன்னை காட்டிக் கொள்ள முயலவில்லை.. ஒரு காக்கி பேன்ட், ஒரு வெள்ளை டீஷர்ட்.. உடல் இன்னுமே கட்டுமஸ்தாய் மாறியிருக்க.. முகத்தில் இருந்த பிரன்ச் பியர்ட் இன்னும் வனப்பை கூட்ட.. பல மடங்கு வசீகரமாய் மாறி இருந்தான்.. 

இவனிடம் இருந்து எந்த சேதாரமும் இல்லாமல் நீ வெளியே வரவேண்டும் பெண்ணே! முடியுமா உன்னால்?.. அவனையே பார்த்திருந்தாள்.

“இவனுடன் என் உறவு   நன்றாய் இருந்திருக்க கூடாதா?” என தோன்ற ஒரு பெரு மூச்சு வெளியேறியது.  

“இப்போது மட்டும் என்ன? சரி படித்துக் கொள்!” என மனம் சொல்ல.. “வேண்டாம்! அவன் எவ்வளவு நல்லவனாய் இருந்தாலும், வல்லவனாய் இருந்தாலும், எவனாய் இருந்தாலும் எனக்கு தேவையில்லை!” என்ற பிடிவாதம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் தோன்றியது.. “என்னுடைய உணர்வுகளுடன் விளையாடியவன் இவன், இவன் எனக்கு தேவையில்லை!” என எப்பொழுதும் போல மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.

“நோ டென்ஷன்!” என தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள்.. “திரும்பவும் இவனால் நீ எதையும் இழுத்து விட்டுக் கொள்ளாதே! அமைதி!” என ஆசுவாசப்பட்டு  மனதில் ஒரு உற்சாகத்தை தானாக வரவழைத்துக் கொண்டாள்..

ஈஸ்வரின் பார்வை வர்ஷினியை தேட.. கண்கள் வர்ஷினி மேலும் ஒட்டி.. பின்பு சிறிது தூரம் நகர்ந்து.. பின்னே பார்வையை அவள் மேல் நிலைக்க விட்டான்..

பாதி முகம் மறைக்கும் கறுப்புக் கண்ணாடி… ஒல்லியாக ஒரு பெண் வர்ஷினியாக இருப்பாள் என நினைத்தானா என்ன? பார்வை நிலை குத்தி நிற்க.. 

மெதுவாக அவனைப் பார்த்து கை அசைக்க.. வேகமாக அவளின் அருகில் சென்றான்.. ஆம்! அவளே தான்.. முதலில் தோன்றியது, என்ன இது இவ்வளவு உடல் எடை குறைந்து இருக்கிறாள்!

“வர்ஷ்” என்றவன், “என்ன இவ்வளவு வெயிட் லாஸ்..?” அவ்வளவு நேரம் கண்களைப் பார்க்க கனன்று கொண்டிருந்த வேட்கை மறைந்து.. இப்போது கவலை தான் வந்தது..

“இல்லை, என் ஹைட்க்கு கரக்ட் தான்..” என்றாள் அவனின் கேள்விக்கு பதிலாக.

முகம் சிறிதும் மாறவில்லை.. அப்படியே தான் இருந்தது.. அதை பார்த்த பிறகு தான் ஈஸ்வரின் முகம் தெளிய..

சில வருடங்களுக்குப் பிறகு பார்ப்பதால் தானாக முகம் மலர்ந்து ஒரு புன்னகையை வர்ஷினியின் முகம் ஈஸ்வரை நோக்கி காட்ட..

ஈஸ்வரும் மலர்ந்து சிரித்தவன்.. கைகளை அவளின் முன் நீட்ட..

எதற்கு என்று தெரிந்த போதும்.. தயங்கி நிற்க.. “ப்ளீஸ்” என்றவனின் கைகள் அப்படியே தான் இருக்க..

தன் கண்களில் இருந்த கண்ணாடியை வர்ஷினி கழற்றி கொடுத்தாள். ஆர்வமாய் விழிகளை பார்க்க முற்பட்டவனின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிய..

அவனின் அதிர்ச்சி பார்த்து சமாதானமாக “லென்ஸ் யூஸ் பண்றேன்” என..

மடக்கிய கைகளை திரும்பவும் அவளின் முன் நீட்ட.. அந்த கண்ணாடியை எடுத்து திரும்பவும் அணிந்து கொண்டாள். நொடியில் சூழல் இறுக்கமாக மாறிவிட.. ஈஸ்வரின் முகமும் மாறி விட்டது.. முகத்தில் ஏமாற்றம் அப்பட்டம்மாய் தெரிய அதை மறைக்க வெல்லாம் முயலவில்லை..

சாதாரணமாய் இருந்திருந்தாலாவது ஈஸ்வர் கட்டுக்குள் இருந்திருப்பானோ என்னவோ? வர்ஷினியின் இந்த செயல் வெகுவாக காயப் படுத்தியது.. கோபப் படுத்தியது.. இயல்பை தொலைக்க வைத்தது.  

ஆம்! நீல நிறக் கண்களை லென்ஸ் கொண்டு கரிய விழிகளாய் மாற்றி இருந்தாள். அதுவும் செக்கின் முடித்து வெளியே வரும் சமயம் ஈஸ்வரின் கண்ணில் படும் முன் மாற்றி இருந்தாள்.

அவனின் ஏமாற்றத்தைப் பார்க்கவும், தானாக ஒரு மனம் “எடுத்து விடுவோமா” என நினைக்க.. “நீயும் உன் நினைப்பும், அடங்கு, என்ன பட்டாலும் திருந்த மாட்டாயா நீ. உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தானா? என்ன கரிசனம் உனக்கு” என அடுத்த மனம் கோபிக்க, அவனை பார்த்து நின்றாள்.. “போகலாமா” என ஈஸ்வர் முன் நடக்க அமைதியாய் அவனைப் பின் தொடர்ந்தாள்…

பின்பு ஒரு ஆழ்ந்த மௌனம் இருவரிடமும்.. ஈஸ்வரும் எதுவும் பேசவில்லை.. வர்ஷினியும் பேசவில்லை.. அவளின் லகேஜ் எல்லாம் எடுத்து வெளியில் வந்த போது விடியல் நன்றாக வந்திருந்தது.

காரை நோக்கி சென்ற போது அங்கே அவனின் கருப்பு நிற போர்ச் நிற்க.. அருகில் சென்றதும் தானாக கைகள் அந்தக் காரை தடவியது.. ஏதோ போர் குதிரையை தடவுவது போல தடவியவள் “எப்போ கார் மாத்துனீங்க” என்றாள் இயல்பாக, என்னவோ அவன் வைத்திருக்கும் கார்கள் எல்லாம் தெரிந்தவள் போல,

“டூ மந்த்ஸ் இருக்கும்” என..

ஆசையாக “நான் ஒட்டவா” என்றாள் உடனே..  ஈஸ்வர் யோசிக்க.. பிடிவாதமாய் சாவிக்காக கை நீட்டினாள்.. “இப்போதான் வந்திருக்க, அப்புறமா ஓட்டலாம்” என்றான் பொறுமையாக..

மனமேயில்லாமல் தோளைக் குலுக்கி “ஓகே” என்பதாக ஒரு சைகை செய்தாள். லகேஜ் எல்லாம் காரின் பின் ஏற்ற.. வேடிக்கை பார்த்திருந்தாள், வேடிக்கை பார்க்கும் வர்ஷினியை ஏற்றிக் கொண்டே ஈஸ்வர் வேடிக்கை பார்த்தான்.

ஆம்! ஸ்லிம் பிட்டாக இருந்தாள், ஒரு நீள ஸ்கர்ட், அதன் மேல் ஒரு டாப்ஸ், கழுத்தை சுற்றி ஒரு ஸ்கார்ப்.. இன்னும் அழகாகி இருந்தாள், ஆனால் முகத்தினில் இருந்த குழந்தைத்தனம் மட்டும் மாறவில்லை..

என்ன இருந்தாலும் அந்த பூசின உடல் வாகோடு இருந்த வர்ஷினியை போல இல்லை என்று மனம் சுணங்கியது.. பார்க்க பார்க்க.. வாட்டர் பெட் டிற்காக மனம் ஏங்கியது.   

அந்தக் கண்ணாடியை பிடுங்கி எரிய வேண்டும் போல ஒரு உந்துதல், “அச்சோ! அம்மா! இன்றைக்கு தான் வந்திருக்கிறாள்.. ஏதாவது செய்து இன்றே பிரச்னையை ஆரம்பித்துக் கொள்ள வேண்டாம்” என்று நினைத்தவன், வேகமாக பார்வையை திருப்பி “ஏறு” என்பது போல ஒரு சைகை செய்து, அவனும் ஏற..

அவன் ஏறவும் அலைபேசி அலறவும் சரியாக இருக்க, பார்த்தால் முரளியின் அழைப்பு.. எடுத்து “சொல்லுடா” என,

“வர்ஷினி வந்துட்டாளா?” என்றவனிடம் “வந்துட்டா” என,

“ம்ம், சரி, ஃப்ரீ ஆகிட்டு கூப்பிடு, முடிஞ்சா அவளோட பேச வை, அம்மா வரணும் சொல்லுவாங்க, என்ன செய்ய சொல்ல?” என,

“அப்புறம் கூப்பிடறேன்” என்று ஈஸ்வர் வைத்து விட..

அடுத்தது மலர் அழைத்து “வந்துட்டாளா” என,

“வந்துட்டாம்ம்மா” என பதில் சொல்லி வைத்தான்.  

அடுத்தது அஸ்வின், அவனின் அழைப்பை பார்த்தவன், வர்ஷினியிடம் நீட்ட.. யார் என்று புரியாமல் வாங்கிப் பார்த்து, அஸ்வின் என புரிந்து எடுக்கவும், “ஹல்லோ, மேம் வந்துட்டாங்களா” என தயங்கி அவன் குரல் ஒலிக்க…  

“ம்ம்ம்ம்.. நான் வந்துட்டேன்!” என்ற வர்ஷினியின் ராகமான குரல் கேட்டு அதுவரை ஈஸ்வருக்கு இருந்த இறுக்கம் தளர..

“ஹல்லோ” என்று சண்டையிடத் தயாரானான் அஸ்வின்.

“இந்தியா வர்றிங்கன்னா சொல்ல மாட்டீங்களா? ரெண்டு நாளா எந்த ரெஸ்பான்சும் இல்லைன்னு பயந்து போயிட்டேன்” என கோபமாகப் பேச..

“உங்ககிட்ட தான் பேசணுமாம்” என ஃபோனை ஈஸ்வரிடம் கொடுக்க..

அவனும் என்னவோ வென்று ஃபோனை வாங்கி “சொல்லு” என,

“என்ன விஸ்வா மாதிரி குரல் மாத்தி பேசினா, எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா..?” என மிரட்டும் தொனியில் பேச..

“குரலெல்லாம் மாத்தலை, நான் விஸ்வா தான் பேசறேன்” என ஈஸ்வர் சொல்ல..  

“இல்லை.. அது..” என்று அஸ்வின் உளற.. ஈஸ்வர் “என்ன?” என்பது போல வர்ஷினியைப் பார்த்தான்.. 

சிரிப்போடு கையினில் வாங்கியவள் “இதுக்கு தான் பாஸை மிரட்டக் கூடாதுன்னு சொல்றது.. அப்புறம் நாங்க பெரிய பாஸ் கிட்ட குடுத்துடுவோம்ல..” என,

“போங்க நீங்க..” எனக் கடுப்பாக அவன் வைத்து விட.. பொங்கிய ஒரு சிரிப்பு வர்ஷினிக்கு, அதனைப் பார்த்ததும் தானாக ஈஸ்வரின் மனம் லகுவாகியது..

“சும்மா என்னை கேள்வி கேட்கறான்..” என சிரிப்போடு சொல்ல,

“ஒரு அக்கறையில கேட்பானாயிருக்கும், நமக்கு உதவி பண்ணினவங்களை என்னைக்கும் நாம மறக்கக் கூடாது” என ஈஸ்வர் சொல்ல..

“ம்கூம்! அது வேற இது வேற, என்னைக்கும் நான் அதை மறக்க மாட்டேன். அதுக்காக இதை நான் அனுமதிக்க முடியாது. அப்பப்போ கொஞ்சம் ரொம்ப அக்கறை எடுத்துக்கறாங்க, அப்கோர்ஸ் தப்பா எல்லாம் கண்டிப்பா கிடையாது. ஆனாலும் என்கிட்டே யாரும் உரிமை எடுத்துகிட்டா எனக்குப் பிடிக்காது”   

“அண்ட் நீங்க சொன்ன மாதிரி, எனக்கு ஒன்னும் யாரோட அக்கறையும் வேணாம். அவங்க அவங்க அவங்க லிமிட்ஸ்ல நிற்கணும். எனக்கு என்னைப் பார்த்துக்க தெரியும்” என்று பிகுவாக சொல்ல..

“கிழிச்ச நீ” என மனதினில் கவுன்டர் கொடுத்தவன், அதனை வெளியில் சொல்லாமல், “இது அவனுக்கா? எனக்கா?” என்றான்.

அது ஒரு கோபத்தை சட்டென்று கிளப்ப “ஹலோ, எனக்கு என்ன உங்களைப் பார்த்து பயமா? எதுன்னாளுமே நேரே சொல்வேன். எவனும் நடுவுல தேவையில்லை” என டென்ஷனாகப் பேச.. 

அவளின் முக சிவப்பை பார்த்து கோபத்தை கணித்தவன், “ஓகே பேபி, ஈஸி, ஈஸி” என்றான்.

“ப்ச்” என சலித்தவள், “எனக்குப் பசிக்குது” என,

“இன்னும் ஒரு மணிநேரம் வீட்டுக்குப் போயிடலாம்” என்றான்.  

“என்ன? ஒரு மணிநேரமா…….” என்றவள், அப்படியே வயிற்றை பிடித்து “என்னால முடியாது” என குனிய..

“இவ சும்மா நின்னாலே, நான் தலை சுத்திப் போவேன். என்னை ஒரு வழியாக்காம இவ விடமாட்டா போல” என நினைத்து வர்ஷினியையேப் பார்த்திருந்தான்.  

படுத்த வாக்கிலேயே அவனைத் திரும்ப பார்த்து “ரோட பாருங்க!” என அதட்ட..

பிறகே சாலையில் கவனம் வைத்தவன்.. அங்கிருந்த ஒரு ரெஸ்டாரன்ட் பார்த்து.. நிறுத்தி இவளை அழைத்துப் போனான்.

அங்கே காலையிலேயே ஆட்கள் இருக்க.. “எனக்கு தான் ஊர்ல இருந்து வந்தது பசிக்குது, இவங்க எல்லாம் எதுக்கு வர்றாங்க” என்று அவளுக்கு அவளே பேசி நடக்க..

ஒரு வார்த்தை கூட பேசாமல் பின் தொடர்ந்தான்.. அதை அவளும் கண்டுகொள்ளவில்லை..

வேகமாக உள் நடந்தவள், எங்கு அமர்வது தெரியாமல் நின்று கொள்ள.. “வந்த.. உட்கார வேண்டியது தானே…” என்பது போல ஈஸ்வர் ஒரு பார்வை பார்க்க..  

“என்ன லுக்கு” என்பது போல வர்ஷினியும் சளைக்காமல் பார்க்க.. சித்தம் கலங்கத் தான் ஆரம்பித்தது, நீல நிறக் கண்கள் இல்லாமலேயே! ஏன் கண்கள் காணாமலேயே.. கண்ணாடி மறைத்திருக்கும் போதே! 

வழியில் நிற்பதை உணர்ந்து,  ஈஸ்வர் அவளைத் தாண்டி சென்று ஒரு இடத்தில நின்று, “நீ உள்ளே போ” என்பது போல சைகை காட்ட டேபிளின் உள்ளே சென்றாள்..

இது போல ஒரு ஜன சந்தடி மிகுந்த ரெஸ்டாரன்ட் வந்தே பல வருடங்கள் ஆகிவிட்டன… அவள் உள்ளே சென்றதும் அருகில் அமர்ந்தான்.

“இட்லி” என்றாள் உடனே..

“பேரர் கிட்ட வர்றதுக்குள்ள அந்த கண்ணாடியைக் குடுத்துடு, இல்லை அவன் பயந்துடுவான்” என ஈஸ்வர் சிரிக்காமல் சொல்ல, சொல்லிய விதத்தில் புன்னகை பூத்த வர்ஷினி..

அதை கழட்டவும்.. கர்ம சிரத்தையாய் அதனை வாங்கி அவனின் டி ஷர்டில் சொருகிக் கொண்டான்.

“போதுமா, இட்லி மட்டும்” என..

“இது ஸ்டார்டர்” என சொல்லி சிரிப்பது போல வாயை இழுத்துப் பிடிக்கவும்..  ம்கூம் அவனால் முடியவில்லை.. அந்த இதழ்களை சிறை செய்ய ஒரு ஆவேசம் கிளம்ப.. அவனை அதற்கு மேல் சோதிக்காமல் “முதல்ல அதை சொல்லுங்க அப்புறம் வேற சொல்றேன்” என்றான்.  

ஈஸ்வரின் இறுக்கமான முகம் அவனின் எண்ண ஓட்டம் எதையும் பிரதிபலிக்கவில்லை.

ஒரு பெருமூச்சை வர்ஷினி அறியாதவாறு வெளியேற்றி “இட்லி” என சொல்லவும்.. அது வரவும்… அவசரமாக உண்ண ஆரம்பித்தவள்.. “உங்களுக்கு சொல்லலை” என்றாள் உண்டு கொண்டே.  

அதன் பிறகே அவனுக்கும் அதையே சொல்ல, அதுவும் உடனே வந்துவிட.. வர்ஷினி உண்டு கொண்டிருந்த ப்ளேட்டை ஈஸ்வர் தன் புறம் நகர்த்தி.. புதிதாக வந்ததை அவள் முன் வைத்தான்.  

“என்ன செய்கிறான் இவன்?” என்று விழிவிரித்துப் பார்க்க,

“ரொம்ப பார்க்காதே, அப்புறம் உன் கண்ல இருக்குற லென்ஸ் கீழ விழுந்துடும்” என வர்ஷினியையேப் பார்த்து சொல்ல..  

இமை சிமிட்டியவள், “நீங்க பண்றது சரியில்லை” என..

“ஆமாம் சரியில்லை” என்று இன்னம் தீவிரமாகச் சொன்னவன்..

அவள் உணவினை கையினில் எடுத்த பிறகு தான் ப்ளேட்டை தன புறம் தள்ளி இருந்தான். அந்த அதிர்வில் அதனை வாயில் வைக்காமல் கையில் வைத்தபடி வர்ஷினி பார்த்துக் கொண்டிருக்க..

“சரியில்லை” என்று சொன்ன நொடி, அவளின் கை பற்றி, அந்தக் கவளத்தை ஈஸ்வர் தன் வாயினில் வைத்துக் கொள்ள.. 

வர்ஷினி ஸ்தம்பித்து விட்டாள்..  அடிவயிற்றில் சொல்ல முடியாத ஒரு உணர்வு!

பிறகு மெதுவாக கையை விட்டவன் “இப்போ சரியா.. இப்போ நீ சாப்பிடு!” என, 

அவனை முறைத்து “இது ரொம்ப தப்பு” என்றாள் பார்வையில் உக்கிரத்தை தேக்கி..   

“உன்கிட்ட எதுவுமே எனக்கு தப்பில்லை பேபி” என..

ஈஸ்வர் பார்க்க பார்க்க அவன் வாயினில் வைத்த தன் கையினை அங்கே தண்ணீர் வைத்திருந்த டம்ளரில் விட்டு சுத்தம் செய்ய..

அதனை எந்த பாவனையுமின்றி பார்த்தவன், “என்ன தப்பு? நான் சாப்பிட்டதையா உன்னை சாப்பிட சொன்னேன், நீ சாப்பிட்டதை தானே நான் சாப்பிட்டேன்” என அணி இலக்கணம் பேச..  

அப்போதும் வர்ஷினி எதை தூக்கி அவன் மேல் வீசலாம் என்பது போலப் பார்த்திருந்தாள்.

“ரொம்ப பசியா இருக்கு சொன்ன.. சாப்பிடு, இனிமே இங்க இப்படி பண்ண மாட்டேன்.. எப்படியும் பிரிய தான் போறோம், எனக்கு கொஞ்சம் மெமரீஸ் வேண்டாமா?” என்றவன்..

“ஆமாம், எதுக்கு இப்போ லென்ஸ் போட்ட” என்றான் திரும்பவும் தீவிரமாக.  

அதற்கு பதில் சொல்லாமல் வர்ஷினி உணவை உள்ளே தள்ளத் துவங்க.. அவள் உண்டு முடித்ததும் வேகமாக அவளுக்கு தேவையானதை அவளைக் கேட்காமலேயே சொன்னான்..

அதுவரை இருந்த இலகுத்தன்மை போய் இருந்தாலும் வர்ஷினி அதை உண்பதில் எல்லாம் காட்டவில்லை.. தேவையானதை வயிறு நிறையவே உண்டாள்.. ஆனால் திரும்பவும் இருவருக்குள்ளும் ஆழ்ந்த அமைதி..

கார் வரும்வரை நீடிக்க.. அமர்ந்ததும்.. “இப்போ சொல்லு, எதுக்கு கண்ல லென்ஸ் போட்ட” என்றான் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற பிடிவாதமான குரலில்.

‘சோ சிம்பிள், அதை என் வாயல கேட்கணும்னா சொல்றேன், கேட்டுகங்க, நீங்க என் கண்ணைப் பார்க்க கூடாதுன்னு தான்” என்றாள் அலட்சியமாக.  

“அதுதான் ஏன்? ஏன் நான் பார்க்கக் கூடாது?” என ஆவேசமாகக் கேட்கவும்..

“பார்க்கக் கூடாதுன்னா.. கூடாது தான்!” என்றாள் தெளிவாக.  

“இப்படியே இந்தக் காரை ஸ்டார்ட் செஞ்சு, எது மேலயாவது மோதிடுவேன்” என்றான் ஆக்ரோஷமாக..  

“அப்போவும் என் கண் தெரியாதுல்ல” என்றாள் சற்றும் அலட்டிக் கொள்ளாமல்.. பின்பு கதவைத் திறந்து, இறங்கி, அவன் புறம் வந்து.. “இறங்கி அந்த பக்கம் போங்க” என சாவியை கேட்க.. அதையே அங்கேயே விட்டு எதுவும் பேசாமல் மறு புறம் அமர்ந்தான் … முகமும் அவ்வளவு இறுக்கமாக இருக்க..

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவள் “இப்போதான் வந்திருக்கேன், அதுக்குள்ள இப்படி செஞ்சா எப்படி?” என,

“என்னால நல்லவன் மாதிரி நடிக்க முடியாது. நான் இப்படி தான் உன்கிட்ட” என்றான்.    

“இவ்வளவு திமிர் வேண்டாம், அது உங்களை அழிச்சிரும்..”

“உன்கிட்ட நான் அழிஞ்சாலும் தப்பில்லை, உன்னால அழிஞ்சாலும் தப்பில்லை” என,  

தலையில் தானாக தட்டிக் கொண்டவள் “சைக்கோ மாதிரி பேசாதீங்க, நான் வந்திருக்கவே வேண்டாம்” என்று மீண்டும் தலையில் தட்டிக் கொள்ள..

கைபிடித்துத் தடுத்தான்..  

“அதுக்கு ஏன் இந்த கண்டிஷன் போட்டு என்னை பக்கம் வர வைக்கணும்.. என்னவோ பண்றேன்னு விட வேண்டியது தானே!” என கத்த..

“அதுவும் என்னால முடியாது! அப்படி உன்னை விட முடியாது! நீ எப்படி ஒன்னுமே நமக்குள்ள இல்லாத மாதிரி சகஜமா பேசற.. என்னால முடியலை?” என,

“வேற என்ன பண்ண நான்? அச்சச்சோ என்னை விட்டுடுங்க, டைவர்ஸ் குடுத்துடுங்கன்னு கெஞ்சணுமா இல்லை சேர்ந்து வாழுவோம்னு சொல்லணுமா?” என..

“ஏன் கெஞ்சணும்? இப்படி ஒரு ஆர்டர் போடேன்” என கையை சொடகிட்டு காட்ட..

“நீங்க ரொம்ப நாளைக்கு பிறகு என்னைப் பார்த்ததுனால எமோஷனலா இருக்கீங்க. நாம இதை பத்தி அப்புறம் பேசலாம்”  

“எப்போ வேணா பேசு, ஆனா என்னோட ஸ்டான்ட் இதுதான்.. யாரோ மாதிரி.. எதுவுமே நமக்குள்ள இல்லாத மாதிரி என்னால இருக்க முடியாது.. உன்னை பார்க்கற வரை உன்னை எந்த வகையிலையும் தொந்தரவு பண்ணக் கூடாது தான் நினைச்சேன். ஆனா என்னால முடியலை.. சொல்லு என்ன பண்ணலாம்?” என்றான் தீவிரமாக..

ஈஸ்வர் அவனின் கட்டுக்குள் இல்லை என்பது அவனின் முக பாவத்திலேயே தெரிய.. 

“இதுக்கு தான் இந்த மூணரை வருஷமா நான் உங்களை பார்க்க விடலை” என்றவள்,

“இப்போதைக்கு ஒன்னும் பண்ண வேண்டாம் வேடிக்கை பாருங்க” என்று வார்த்தைகளை நிறுத்தி.. அவளைப் பார்த்திருந்தவனிடம் “என்னை இல்லை, வெளில” என்று அவன் பக்க காரின் கண்ணாடியை காட்டியவாறு காரை எடுத்தாள்.. 

இருவரின் முகமுமே தீவிரத்திற்கு மாறி இருந்தது.. 

இப்படி ஆகுமென்று ஈஸ்வர் நினைக்கவேயில்லை.. இன்னுமா இந்த தீவிரம் தன்னுள்! அவனுக்கே பயமாய் இருந்தது.. அவனின் டீ ஷர்டில் இருந்த வர்ஷினி அணிந்திருந்த கண்ணாடியை எடுத்து அணிந்து எதிலிறிந்தோ தப்பிப்பவன் போலக் கண்களை இறுக மூடிக் கொண்டான்.  

கூடவே “சாரி” என்ற வார்த்தையும் உதிர.. சொன்னது இவன் தானா என யோசித்த போதும்.. இறுக மூடியிருந்த அவன் விரல்கள் கண்ணில் பட.. அதன் மேல் தன் விரல் கொண்டு லேசாக தட்டிக் கொடுத்து அதன் இறுக்கம் தளர்ந்த பிறகே வர்ஷினியின் விரல்கள்  ஸ்டியரிங் பிடித்தது..   

ஒரு கல்! ஒரு கண்ணாடி!   

               

 

 

Advertisement