Advertisement

சிதையாத உணர்வுகள்….!!

‘டிக்…டிக்… ‘ என அலாரம் ஒலிக்க துவங்கிய, முதல் நொடியிலேயே.. அதை நிறுத்த இவளால் தான் முடியும் ..! அலாரம் இவளை எழுப்பியதா?!  இல்லை இவள் அலாரத்தை நிறுத்தவே முதலில் விழிக்கிறாளா…?! சில நாட்களாய் தோன்றும், அதே சந்தேகம் இப்போதும் என்னுள்… நான் விஸ்வநாதன்… இதுவரை எனக்கென ஒரு அடையாளம் இருந்தது… விச்சு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், விச்சு எலக்டிரானிக்ஸ் ஓனர்… இன்று… இதோ இந்த வீட்டில் அறையிலிருக்கும் கட்டில், பீரோ, ச்சேர் போல ஒரு பொருள்…

பத்து வயதில், பசி என நின்ற போது, வயிறு நிறைய சோறு போட வசதியில்லாமல், மதிய உணவாவது கிடைக்கட்டும் என்ற எண்ணத்தோடு பள்ளிக்கு அனுப்பப்பட்டவன் நான்… அதுவும் நிரந்தரமில்லை.. என நிரூபித்தது என் தாயின் மரணம்…

இதுவரை இருந்த இடம், அக்கம், பக்கம் யாரும் உதவிக்கு வராத நிலையில் என்னை நானே காத்துக்கொள்ள வேண்டி துவங்கிய ஓட்டம்…

ஒரு சிறு மளிகை கடையில், பொட்டலம் கட்டும் வேலையில் சேர்ந்தேன்… முதலாளியிடம் எத்தனையோ ஏச்சும், பேச்சும் என்னை பொறுமைசாலி ஆக்கியது… அவரின் தந்திரங்கள் என்னை அறிவாளி ஆக்கியது… பத்து வருட போராட்டத்திற்கு பிறகு.. தொடங்கிய எனது சொந்த மளிகை கடை டிபார்ட்மெண்டல் ஸ்டோராக மாற, நான் எடுத்த முயற்சியும் உழைப்பும்… அப்பப்பா…

வாழ்க்கை ஒரு நிலைக்கு வரும் போது, அதுவரை தெரியாத உறவுகளின் வருகை எதற்கு என அறிந்த போது தான் உணர்ந்தேன், எனக்கும் திருமண வயது தாண்டி போயிக்கொண்டிருப்பதை… இதுவரை என்னை எண்ணிடாத சொந்தங்களில் நுழைய விரும்பாமல் நானே தேர்ந்தெடுத்தவள் ஜானகி…

அநாதையாய் ஆசிரமத்தில் இருந்தவள்.. பொறுமையின் சிகரம்… ஆம்! இல்லாவிட்டால், என்னை பொறுத்து போயிருப்பாளா.. ?! நிச்சயம் சந்தேகம் தான்… நான் நல்ல உழைப்பாளி, நல்ல முதலாளி, நல்ல முறையில் வருமானத்தை பெருக்க தெரிந்த வித்தகன்.. ஆனால் குடும்பத்தில்…???
அக்கரை இல்லாதவன், அன்பை காட்டாதவன், எனது உணர்வுகளுக்கு அவர்களை வடிகாலாக்கி கொண்ட ஒரு சுயநலவாதி… அப்படி தான் இப்போது தோன்றுகிறது… ஆனால் அன்று எனக்கு அது தெரியவில்லை என்பதை விட அந்த மாதிரியான உணர்வுகள் எழவில்லை என்பதே சாலச்சிறந்தது.

மனைவி என்று ஒருத்தி வீட்டில் எனக்காக.. சமைத்து எனது வேலையை பார்க்கிறாள், வீட்டை பராமறிக்கிறாள்.. எனக்கு தேவையான சுகத்தையும், அடுத்த தலைமுறையையும் கொடுத்தாள் இது தான் என் மனைவி பற்றிய எண்ணம்.. நான் மாடாக உழைக்கிறேன் அவளுக்கென்ன சுகமாய் மூன்று வேளையும் நான் கொட்டி வைத்திருக்கும் பணத்தினால் சுகமாய் வாழ்கிறாள்..  எவ்வளவு கீழ்தரமான சிந்தனை என்னது… இன்று புரிந்தது.. அதுவும் இந்த சில நாட்களில் நன்றாகவே புரிகிறது..

காலை கண்விழித்ததும், என்னை தொந்தரவு செய்தால், தூக்கம் கெடுமென மெதுவாக அரவமில்லாமல், குளித்து தயாராகியவளின் நோக்கம் அப்போது தெரியவில்லை.. இப்போது அந்த அதிகாலை குளிக்காவிட்டால், அடுத்து அதற்கு கூட நேரம் அவளுக்கு கிடைக்காது என்பதை உணர்ந்து விட்டிருக்கிறேன்.

காலையில் அனைவரையும் எழுப்புவதில் ஆரம்பிக்கும் அவளின் ஓட்டம், காலை டீ, டிபன், குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுப்பது, பள்ளி பேருந்தில் ஏற்றிவிடுவது, அடுத்து தொடங்கும் மதிய சமையல் முடியும் போது, காலை உணவோடு அமரும் நிலை அவளுக்கு… மதியம் சரியான நேரத்தில் எனக்கு வரும் உணவை எண்ணி கொண்டேன்… சில சமயம் தாமதமானால், வீட்டில் நான் சொன்ன வார்த்தைகள் இப்போது அதிகமாய் வலியை கொடுக்கிறதே…  அவளுக்கும் இப்படி தான் இருந்திருக்குமோ…?!

அதோடு முடியாமல், மாலை வரும் குழந்தைகளுக்காக சிற்றுண்டி…! தொடர்ந்து இரவு அனைவருக்கும் கொடுக்கும் பால் வரை அனைத்தையும் முடித்து, அவள் படுக்கைக்கு வர ஆகும் நேரம் நிச்சயம் நான் ஒரு முறை தூக்கி எழுந்திடும் நேரம்… அதன் பின், எனது தேவை…. அவளின் உணர்வுக்கு மதிப்பளித்தேனா?! நினைவிலேயே இல்லை…! அன்றைய தேவை மட்டுமே மனதில்….

இந்த முதுமையில் நான் ஓய்வில்..  ஆனால் அவளோ…?! அவளின் குழந்தையோடு, அவர்கள் வாரிசுக்கும் சேர்ந்து இன்னும்..  அதே, இல்லையில்லை.. அதைவிட அதிகமாய் ஓடுகிறாள்… இப்போது நானும் அவளுக்கு பாரமாய்…..

லேசாக கண்ணில் துளிர்த்த கண்ணிரை மெல்ல துடைத்த கரத்தை இறுக பற்றிய போது மீண்டது என அனைத்து நல்லூணர்வுகளும்….

“என்ன மாமா… இப்படி சின்ன குழந்த மாதிரி… ?!” என இப்போதெல்லாம் வழக்கமாகி போன கேள்வியோடு, அதே மாற புன்னகையோடு.. அவள் செய்யும் பணிவிடையில் சிலிர்த்து போனது என் தேகம்… அவளை முதன் முறை உணர்ந்த போது கூட, இப்படி என் உடல் சிலித்ததா நிச்சயம் நான் அறியேன்… சிந்தனையில் காதல், நேசம் இல்லாது தனக்கான அடுத்த உணர்வாம் காமத்தை கண்டவனுக்கு, எங்கிருந்து அத்தகைய சிலிர்த்தல் வரும்…

காலை உணவு வேளையிலும், மாலையிலும், “அம்மா அது வேணும்…” “இது செமையா இருந்துச்சு..” , “அந்த பையன் அத செஞ்சான்… ” , “என்னை எங்க மிஸ் இப்படி பாராட்டினாங்க” என்ற என் மகன்களின் உற்சாக குரல்களில், அன்று தெரியாத, எனது இழப்பு இப்போது தெரிகிறது.. காலம் தாழ்ந்த ஞானோதயம்…

தன்னிடம் அவர்கள் ஒட்டாமல் போனதற்கு காரணமும் நானே தான்… பகல் முழுதும் உழைப்பில் கழிய, இரவில் நான் வரும் வரை காத்திருக்க என் மனைவிக்கு தேவை இருக்கலாம்.. குழந்தைகளுக்கு…

அவர்களின் ப்ரோகரஸ் ரிபோர்ட் கையெழுத்து ஒன்று தான், நான் அவர்களின் தந்தை என நினைவு படுத்தும்.. அதை தவிர அவர்களின் வகுப்பை கூட நான் அறிந்து கொண்டதில்லை… எவ்வளவு பெரிய மூடன்… குழந்தையின் மழலை பருவத்தை உடனிருந்து அனுபவிக்காமல்,  அவர்களுக்கு ஆசானாய் நிற்கவேண்டியவன் பணத்தின் நிழலை மட்டும் கொடுத்து விலகியிருக்கிறேன்.

அவர்கள் தங்கள் துறையில் வளர்ந்தாலும், பண்பு மாறாமல் அதே தன்மையான செயலோடு நடக்க காரணம் என்னவளின் வளர்ப்பால் தானே…. அவள் அவர்களுக்கு தாய் மட்டுமல்லாது தந்தையாய்.. நின்று நல்வழி காட்டியதால் தானே, இன்று என் சொத்து மதிப்பை விட அவர்கள் சம்பதித்து வைத்திருக்கும் பதிவிக்கான மதிப்பு வெகு அதிகம்…

எவ்வளவு பெரிய பதிவியானாலும், இன்றும் அதே சிறுபிள்ளையாய் மாறி தங்கள் தாயிடம் செல்லம் கொஞ்சி, தனக்கு தான் அவரின் மடி என சண்டையிடும், அவர்களின் கூச்சலில் இப்போது நிறைவு தோன்றினால் அப்போதோ.. வேலையில்லா நாட்களின் ஓய்விற்கு இடைஞ்சலாக தோன்றியதே…! பக்குவம் எது தந்தது…?!  காலத்தை விட சிறந்த ஆசான் வேறு யார்…?!

எனது சிந்தனையில் உலன்றவனை நடப்பிற்கு கொண்டுவந்தது என்னவளின் வருகை… “மாமா எழுந்திட்டீங்களா…?! டேய் வருண்.. ! வா, அப்பாவ பாத்ரூம் கூட்டிட்டு போகணும்.. ” , “இதோம்மா..” என்று, தனது கையை துடைத்த படி வந்த எனது முதல் மகனை பார்க்கும் போதே தெரிந்தது, அவன் உணவை வைத்துவிட்டு வந்திருப்பது… நான், “நீ சாப்பிட்டு வா” என ஜாடை செய்த போது .. “அப்பா.. சாப்பாடு எங்கையும் போகாது… நா போய் சாப்பிடுறேன்..  நீங்க வாங்க உங்கள ரெப்ரஸ் பண்ணி விட்டுட்டு போய் பார்த்துக்கறேன்… ” என எனை ஏந்தியவனை பார்க்கும், நான் தந்தையாய் மறித்து போன உணர்வு மீண்டதோ…

என்னை சுத்தபடுத்தி வெளி வந்த நேரம், எனக்கான உணவோடு வந்த இளையவன் தருண்… “வருண்.. நீ போய் சாப்பிடு, ஏதோ ஸ்டேஷன்ல முக்கியமான கேஸ் விசயமா போகணுமின்னு சொன்ன.. நா பார்த்துக்கறேன்” என சொல்ல.. “ஓகேடா .. நா போய் யூனிஃபார்ம் மாத்திட்டு கிளம்பறேன். பாய்ப்பா.. பாய்டா ” என செல்ல..

அருகே வந்த தருண் தந்ததை உண்ட போது… அவர்களுக்கு தான், இதுவரை எப்போதாவது உணவு கொடுத்திப்போமா?! என்ற சிந்தனையே ஓடியது என் மனதில்… “இல்லை ” என்பது தான் பதிலாக இருக்கும்….

எனது தேவைகளை முடித்து, அவனும் தனது பதவிக்கான வேலையை தொடர கலெக்டர் அலுவலகம் விரைய.. எனது இரு மருமகள்களும், இப்போது எனது இரு கடைகளின் பொறுப்புகளை ஏற்று அதனோடு….

இப்போதெல்லாம் கிடைக்கும் சிறு தனிமையில், (அதுவும் எனக்காக அவள் உருவாக்கியிருப்பாள் என்பதில் ஐய்யமே இல்லை…) என்னிடம் பேச வரும் ஜானகியை பார்த்த, என் பார்வையில் என்ன கண்டாளோ… அவளாகவே…

“மாமா.. நீங்க நினைக்கலாம், இவங்களுக்கு  நா என்ன செஞ்சேன்னு….?! உங்களுக்கு தெரியாது.. உறவுன்னு யாருமில்லாம, அநாதையா இருந்தவரை நான் நிம்மதியா தூங்கியிருக்க கூட மாட்டேன்…. காரணம் சொல்லி தெரியணுமா… ?! அந்த நிம்மதியான தூக்கத்த கொடுத்தது நீங்க..  உங்க கையால கொடுத்த இந்த மாங்கல்யம்…

அடுத்து உறவுன்னு யாருமில்லாத, எனக்கு, முதல் உறவு நீங்கன்னா உங்களால் எனக்கு கிடச்ச ரெண்டு குழந்தைங்க… இதவிட வேற என்ன வேணும்… சொல்லுங்க…!

அவங்களுக்கு உங்க கூட டைம் ஸ்பெட் பண்ண முடியாதது, சில சமயம் வருத்தம் கொடுத்தாலும், அவங்களுக்கு நல்லா தெரியும்..  நீங்க பாடுபடறது சம்பாதிக்கறது எல்லாமே எங்களுக்காக ன்னு…

ஒரு விசேஷமின்னா, நீங்க உங்களுக்கு செலவு செய்யறத விட, நாலு மடங்கு எங்களுக்கு தான் செய்வீங்க… அவங்க ஆசைபட்ட படிப்பு படிக்க எந்த தடையும் நீங்க போட்டதில்லை… அவங்க வாழ்க்கைய தேர்ந்தெடுக்கும் உரிமைய கொடுத்தீங்க… வந்த மருமகளுங்களுக்கு தொழில கத்து கொடுத்து, உங்க இடத்துல உக்கார வச்சிருக்கீங்க… இத விட ஒரு குடும்பத்துக்கு தலைவரா..  நீங்க எதை செய்யணும்…..

எங்களால நீங்க தான் ஒரு மிஷினா,  ஓடி இப்ப ஓஞ்சு இருக்கீங்க.. சில அடிப்படை சந்தோஷத்த கூட நின்னு, அனுபவிக்காம ஓடவிட்டது.. எங்களுக்கான தேவைக்காக…” என சொன்னவளை, வாரி அணைத்து “என் உணர்வுகளை சிதையாமல் காக்கும் தேவதை நீயடி!” என சொல்லிட மனம் துடித்தாலும், இயலாத என் ஒரு கரத்தின் நிலையை என் கண்ணீரில் சொன்னது புரிந்தது போல, என்னால் செய்ய இயலாததை இப்போது அவளே செய்திருந்தாள்… தனது மென்மையான அணைப்பின் மூலம்…!!

Advertisement