Advertisement

“பாவி.. பாவி.. என் தலையில மண்ணை அள்ளி போட்டுட்டியே… இந்த சொத்துக்காக தான் உன்னை மாதிரி ஒருத்தனை கல்யாணம் செய்தேன்.. கல்யாணமாகி ஒரு பிள்ளையோட நின்ற உன்னை கட்டினதுக்கு, என்னை ஏமாத்திட்ட இல்ல…” என்று அவர் தன் முகமூடியை கழட்டி எறிய

                   “ரொம்ப நன்றி யமுனா.. உன் வாயாலேயே உண்மையை சொல்லிட்டியே..” என்று வெறுத்துப் போனவராக ரகுவரன் உரைக்க

                    “ஆமா.. உன் சொத்துக்காக தான் உன்னை கல்யாணம் செய்தேன். இதை ஒத்துக்க எனக்கு எந்த அசிங்கமும் இல்ல. ஆனா, நீங்க என்ன உத்தமம்.. பொண்டாட்டி இறந்து ஒரு வருஷம் முழுசா முடியும் முன்னமே சுகத்துக்கு என்னை தேடியவர் தானே நீங்க…”

                      “மூன்று வயசு குழந்தை பசிக்கு அழறதுக் கூட, காதில் விழாத அளவுக்கு தானே இருந்திங்க நீங்களும். அதுவும் ஒரு பிள்ளை பெத்து எடுத்த உங்களுக்கு, இருபத்தைந்து வயதுகூட முழுசா முடியாத ஒரு சின்னப்பொண்ணு கிடைத்தால், பாவம் நீங்களும் தான் என்ன செய்விங்க…”

                      “பச்சைக்குழந்தைக்கு சூடு போட்டதை இன்னிக்கு கொலைக்குற்றமா சொல்லிக் காட்றிங்க.. ஆனா, அன்னைக்கு ஒரு அடி கொடுத்ததோட கோபம் சரியா போச்சே… இல்லல்ல, கோபம் போகல… ஆனா, இந்த சின்னபொண்ணொட உடம்பு மட்டும் தேவையா இருந்தது அப்போதும்… இல்ல.. உங்க கோபத்தைக் கூட, கட்டில்ல தானே தீர்த்துக்க பார்த்தீங்க…”

                     “அதுவும் தினம் தினம் புதுப்புது விதமா, தண்டனை கொடுப்பீங்களே.. மறந்து விடுமா எனக்கு… நீங்கல்லாம் என்னைப் பற்றி பேச வந்துட்டீங்களா… நான் சொத்துக்காக உங்களை வளைத்தேன்… நீங்க என் உடம்புக்காக என்னோட இருந்திங்க…”

                      “மற்றபடி உங்களுக்கு பிள்ளை மேல ரொம்ப அக்கறை… என்னாலதான் அவனை கவனிக்காம விட்டுடுங்க ன்னு எல்லாம் கதை சொல்லாதீங்க…. என்னை அடிச்சு துரத்தி இருந்தால் கூட, உங்க மகன் உங்களோட இருந்திருப்பான்..” என்று சட்டமாக பேசியவர்

                  “எனக்கு இந்த வீடு வேணும்… என்னால இந்த வீட்டை உங்க மகன்கிட்ட கொடுத்திட்டு எல்லாம் வெளியேப் போக என்னால முடியாது. உயிலை மாற்றி எழுதற வழியைப் பாருங்க. இல்ல, இன்னிக்கு நமக்குள்ள நடந்த இந்த விஷயத்தை நாளைக்கு கோர்ட்ல சொல்ல வேண்டி வரும்…உங்களுக்குதான் அசிங்கம்..” என்று மிரட்டலாக கூறி, கணவரைத் திரும்பியும் பார்க்காமல் படிகளில் ஏறிவிட்டார் யமுனா.

                   ரகுவரன் மனைவியின் இந்த ரூபத்தை சகித்துக் கொள்ள முடியாதவராக, தவித்துப் போய் அமர்ந்து விட்டிருந்தார். அவருக்கு மனைவியின் வார்த்தைகள் வலி கொடுத்தது என்று சொல்வதை விட, அவரின் சுயநலத்தை அப்பட்டமாக சுட்டிக் காட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.

                 இப்படிப்பட்ட ஒரு பாம்பின் ஜொலிப்பில் மயங்கி பெற்ற மகனை தள்ளி வைத்து இருக்கிறோமே என்று மீண்டும் மீண்டும் சர்வாவை நினைத்து அவர் உள்ளம் கலங்க, மூச்சுக்காற்றே இல்லாதது போல், நெஞ்சை அடைத்தது அவருக்கு. ஏதோ உள்ளுக்குள் அடைத்துக் கொண்ட ஒரு கசப்பை வெளியேற்றவும் முடியாமல், விழுங்கி விடவும் முடியாத சில நிமிடப் போராட்டம்.

                 இவர்கள் சண்டையைத் தொடங்கும்போதே வேலையாட்கள் விலகிச் சென்றிருக்க, அருகில் யாரும் இல்லை அந்த நேரம். சத்தமாக யாரையும் அழைத்து ஒரு வாய் தண்ணீர் கூட கேட்க முடியாத தன் நிலையை எண்ணி அவர் கண்ணீர் விட்டபோது தான், இது மகனுக்கு தான் இழைத்த அநீதிக்கான தண்டனையோ என்று தவித்தது உள்ளம்.

                  தன் முடிவு நெருங்கிவிட்டது என்று முடிவு செய்து கொண்டவராக, ரகுவரன் தன்னை தயார்படுத்திக் கொள்ள, அவரின் ரட்சகியாக வந்து சேர்ந்தாள் அவரின் செல்ல மகள். அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த அவள் முகத்தில் அப்படி ஒரு ஆர்ப்பாட்டமான சிரிப்பு.

                 வாசலில் யாருக்கோ கையசைத்துவிட்டு திரும்பியவள் தந்தையின் கலங்கிய முகம் கண்ட நிமிடம், அவரை நோக்கி விரைந்து செல்ல, “அப்பா..” என்று அலறி வைத்தாள் சத்தமாக. அவளை வாசலில் இறக்கிவிட்ட அவளது நண்பர்கள் இவள் சத்தத்தில் பயந்து உள்ளே ஓடிவர, யமுனாவும் மாடியில் இருந்து இறங்கி வந்தார்.

              சந்தோஷியின் கவனம் மொத்தமும் தந்தையிடமே இருக்க, அவரின் சட்டையை தளர்த்தி விட்டவள் அவரை சற்றே ஆசுவாசப்படுத்த முயன்று தோற்றவளாக கண்ணீர்விட, அவளின் நண்பர்கள் ரகுவரனை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி வந்திருந்தனர்.

               சந்தோஷி இருந்த நிலையில் யாரிடம் கூற வேண்டும்.. என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் மனதில் இல்லை அந்த நிமிடம். காரில் ஏறாமல் தயங்கி நின்ற அன்னையே அவள் கண்ணில்படவில்லை என்றால் மற்றவர்கள் எம்மாத்திரம்.

                இதோ, யமுனாவை வீட்டின் வாசலில் விட்டுவிட்டு தான் வந்திருந்தாள் சந்தோஷி. தந்தையை காரில் ஏற்றிய நிமிடம், அவர் தலையை மடியில் தாங்கி கொண்டவள் “வண்டியை எடு பிரணா…” என்று கத்தியதில், வேறு யாரும் ஏறுவதற்கு கூட அவகாசம் கொடுக்காமல் வண்டியை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்தனர் அவளும்,அவள் நண்பனும்.

              அவசர சிகிச்சைப் பிரிவில்,ரகுவரனுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்க,அழுது அழுது தீரவே இல்லை சந்தோஷிக்கு. உலகத்தில் இருந்த அத்தனை கடவுள்களிடமும் பிரார்தித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். அவள் அன்னை வந்து விட்டிருக்க, அவர் மகளை விட்டுசற்று தள்ளியே நின்றிருந்தார்.

               யமுனாவுக்கு மகளைத் தெரியும். தன்னைக் காட்டிலும், தந்தையை பெரிதாக நினைக்கும் மகளை முழுதாக தெரியும் யமுனாவிற்கு. இதோ இப்போதும் அவளை நெருங்கினால், தந்தையின் நிலை குறித்து தன்னை துளைத்து எடுத்து விடுவாள் என்று தெரிந்ததால் தான், தள்ளி நிற்கிறார் அவர்.

                                    இரவு ஏறிக் கொண்டிருக்க, இன்னமும் ரகுவரனின் நிலை குறித்து எந்த நம்பிக்கையும் கொடுக்கவில்லை மருத்துவர்கள். சந்தோஷி அசையாமல் அதே இடத்தில அமர்ந்து இருக்க, பரமேஸ்வரன் வீட்டின் வேலையாள் வழியே தகவல் அறிந்து வந்துவிட்டார்.

              அவருக்கு பின்னால், ரேகா, சர்வா, ஸ்ரீகா என்று அத்தனைப் பேரும் வரிசையாக வந்து நிற்க, சந்தோஷி எதையும் கிரகித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. பரமேஸ்வரன் சந்தோஷியிடம் “என்ன நடந்தது கண்ணா… எப்படி..” என்று விசாரிக்க, “எனக்கு தெரியலையே அங்கிள்..” என்று கண்ணீர் விட்டாள் அவள்.

                அவர் சந்தோஷியை ஆறுதலாக அணைத்து கொள்ள, அவர் தோளில் சாய்ந்து கொண்டு அப்படி அழுதாள் அவள். “அப்பா வந்திடுவாங்க இல்ல அங்கிள்..” என்று பரமேஸ்வரனிடம் கேட்டவளுக்கு அழுகையில் உதடு பிதுங்கியது.

                  ரேகா “ஒன்னும் இருக்காது உன் அப்பாவுக்கு.. உன்னை விட்டு எங்கே போயிடுவார் அவர்..”என்று தேறுதல் உரைக்க, அவர் மீது சாய்ந்து கொண்டு அழுதபடி இருந்தாள் அவள்.

                 

                      சர்வா என்ன நினைக்கிறான் என்று கணிக்க முடியாதபடி தான் இருந்தது அவன் முகம். அங்கிருந்த இருக்கை ஒன்றில் அவன் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகே அவன் கைகளை பிடித்தபடி ஸ்ரீகா. அவள் அவன் கைகளை அழுத்தமாக பற்றி இருக்க, கைகளின் நடுக்கத்தை மறைக்க போராடியபடி அமர்ந்திருந்தான் அவன்.

                      தந்தை என்று அழைத்ததில்லை. தந்தைக்கான எந்த கடமையையும் அவரை செய்யவிட்டதில்லை. ஏன்.. தன்னை நெருங்கவே விட்டதில்லை அவன். ஆனால், ரகுவரனின் இந்த நிலை நிச்சயமாக பாதித்தது அவனை. எங்கோ ஓர் இடத்தில் சொல்லமுடியாத ஒரு வலி.

                     அதுவும் நேரம் கெட்ட நேரத்தில்,அந்த மனிதரின் ஏக்கப் பார்வைகளும், தன்னையே தேடும் அவர் விழிகளும் வேறு நினைவுக்கு வர, இன்னுமின்னும் குறுகிக் கொண்டிருந்தான் அவன். மருத்துவர் அந்த நேரம் வெளியே வந்தவர் ரகுவரனின் நிலையை தெரிவிக்க, அதில் இன்னமும் வலித்தது சர்வாவுக்கு.

                    ரகுவரனுக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியிருக்க, மருத்துவரின் ஆலோசனையை புறம் தள்ளி இருந்தார் மனிதர். அதுவும் மருத்துவர் அவரை பாதிக்கும்படியான நிகழ்வுகள் ஏதும் நடந்ததா… அதிகப்படியான அதிர்ச்சியில் இருந்தாரா என்று ஏகத்திற்கும் கேள்விகளாக அடுக்க, ஒன்றிற்கும் பதில் தெரியவில்லை அவர்களுக்கு.

                    சந்தோஷி “நான் டூர் போயிருந்தேன் அங்கிள்..அப்போதான் வீட்டுக்குள்ளே வந்தேன்..அப்பா.. அப்பா இப்படி இருக்கவும், ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டேன்..” என்று அழ, யமுனா வாய் திறக்கவே இல்லை.

                    சர்வா சந்தோஷியின் பேச்சில் தளர்ந்தவனாக அமர்ந்துவிட்டான். ஸ்ரீகா அவனை நெருங்க “என்னாலதானா ஸ்ரீகா.. என் கல்யாண விஷயத்தை அவர்கிட்டே தகவலா தானே சொன்னோம்.அதை நினைச்சு வருந்தி இருப்பாரோ… என்னைப் பற்றி யோசிச்சுட்டே இருந்தாரோ..நான் விட்டுடேனா ஸ்ரீ..” என்று கலங்கிப் போனான் அவன்.

                     “லூசுமாதிரி பேசாத சர்வா. உன் கல்யாண விஷயத்தில் அங்கிளுக்கு ரொம்ப சந்தோஷம் தான். நாங்க ரெண்டு பேரும் மதியம் கூட வெளியே போயிருந்தோம்… அப்போகூட நல்லா தான் இருந்தாங்க.. அதற்குப்பிறகு தான் ஏதோ நடந்து இருக்கணும்…” என்று சிந்தித்தவள் எழுந்து யமுனாவை நெருங்கி இருந்தாள்.

                 “அங்கிள் வீட்டுக்கு வர்ற வரைக்கும் நல்லாதானே இருந்தார். வீட்டுக்கு வந்த பிறகு என்ன நடந்தது…” என்றாள் யமுனாவிடம்.

                  யமுனா “என்னைக் கேட்டால்… நீங்கதானே அவர் பிள்ளையை அவர்கிட்ட இருந்து பிரிச்சு அவரை தனியா விட்டிங்க.. இப்போ என்னை கேள்வி கேட்க வந்துட்டியா… உன் அம்மாவைக் கேளு…” என்று தான் தப்பித்துக் கொள்ள அடுத்தவர் மீது பழி போட முயன்றார் யமுனா.

                    உள்ளேப் படுத்திருப்பவர் எழுந்து வந்தால் தன் குட்டு உடைந்து போகுமே என்ற பதைபதைப்புக் கூட இல்லாமல், அப்போதும் தைரியமாக பேசினார் அவர்.

                    ஆனால், ஸ்ரீகா அவர் பேச்சில் அசராதவளாக, “அங்கிளோட அந்த வீட்ல நீங்க மட்டும்தான் இருந்திங்க… அங்கிள் உங்களோட பேசணும்ன்னு என்கிட்டே சொல்லிட்டுதான் வந்தாங்க…அவர் பேச நினைத்த விஷயமும் எனக்கு தெரியும்.. ஒழுங்கா உண்மையை சொல்லுங்க..” என்று அவள் யமுனாவை மேலும் மிரட்ட, சந்தோஷிக்கு கோபம் வந்துவிட்டது.

                   “போதும் ஸ்ரீகாக்கா.. உங்களுக்கு சர்வாண்ணாவை பிடிக்கும்னு எங்களை குற்றவாளி ஆக்காதிங்க.. எங்களுக்கு இருப்பது எங்க அப்பா மட்டும்தான்.. அவரை இங்கே படுக்க வைக்க என் அம்மா ஆசைப்படுவாங்களா… இப்போகூட, நீங்க உங்க பிரெண்டுக்கு சப்போர்ட் பண்ணனுமா..” என்று அவள் அழ

                    “ஹேய்.. யாருக்கு சப்போர்ட் பண்றேன் நான்… உனக்கு ரொம்ப தெரியுமா.. தெரியாம பேசக்கூடாது. உனக்கு உண்மையிலேயே உன் அப்பா மேல அக்கறை இருந்தால் உன் அம்மாவைக் கேளு… என்ன நடந்தது சொல்ல சொல்லுடி..” என்று ஸ்ரீகா அதட்ட,அவள் குரல் சற்றே உயர்ந்து ஒலித்தது.

                   அதற்குள் பரமேஸ்வரன் மகளின் கையை பிடித்து அவளை அடக்கியவர் “எல்லாத்தையும் அப்புறம் பேசிக்கலாம் ஸ்ரீகா… இப்போ ரகுவைப் பார்க்க வேண்டியது தான் முக்கியம்.அமைதியா இருங்க ரெண்டு பேரும்…” என்று அதட்டி வைத்தார் இருவரையும்.

                  அதன்பிறகு ரகுவரனுக்கு சிகிச்சை தீவிரமாக நடக்க, அடுத்தநாள் காலையில் தான் கண்விழித்து பார்த்தார் அவர். சந்தோஷி தந்தையின் அருகிலேயே நின்றிருக்க, மகளின் கையை இறுகப் பற்றிக் கொண்டார் மனிதர். அவர் உயிரைக் காத்தவள் அல்லவா..

                   திக்கற்று நின்ற நேரத்தில் தனக்காக துடித்த அவள் தாயாக தெரிய, அவள் கைகளை விடமால் தனக்குள் வைத்துக் கொண்டார் மனிதர். ரேகாவை அருகில் அழைத்தவர் அவரிடம், “என் மகனோட கல்யாணத்தை இன்னிக்கே முடிக்கணும் ரேகாம்மா.. முடிச்சு கொடுப்பியா..” என்று கையேந்த, ரேகா அவரின் வேண்டுதலில் திகைத்து நின்றார்.

Advertisement