Advertisement

               சிறு புன்னகையுடன் அவன் படிகளின் வழியாக கீழே இறங்க, அறையில் அமர்ந்து இருந்தவள் முகத்திலும் அதே புன்னகை விரவி இருந்தது.

                            ஸ்ரீகாவின் நேரம் இனிமையாக கழிந்த அதே சமயம், இங்கே சென்னையில் வேங்கையாக  மாறி நின்றிருந்தான் பீஷ்மன். ஸ்ரீகா விஷயத்தில் ஆரம்பம் முதலே கிடைத்ததெல்லாம் ஏமாற்றம் தான் என்றாலும், இன்று மிகப்பெரிய அடி அவனுக்கு.

                       ஸ்ரீகாவின் விஷயத்தில் ஜெய்ராம் கிருஷ்ணாவின் இடையீடு அவன் எந்த வகையிலும் எதிர்பார்க்காத ஒன்று. தொழில், அரசியல் என்று அனைத்துமே போட்டிதான் அவர்களுக்கு இடையே. இப்போது ஸ்ரீகாவை ஜெய் தூக்கியிருப்பது மோசமாக தோற்ற எண்ணத்தை கொடுத்தது பீஷ்மனுக்கு.

                        இவர்கள் இருவருக்கும் என்ன சம்பந்தம் என்று அந்த ஒரே இரவில் அவன்  அலசி ஆராய்ந்து இருக்க, அபிநந்தனின் கல்லுரித் தோழன் ஜெயராம் கிருஷ்ணா என்று தெரிய வந்திருந்தது. மேலும் இவர்கள் அத்தனைப் பேரும் ஒரே கல்லூரியில் படித்ததும் அவன் கவனத்திற்கு வர, பெரிதாக காதல் என்றெல்லாம் எந்த தகவலும் இல்லை.

                      எந்த இடத்திலும் இருவரும் காதலித்ததாக தெரியவில்லை. பின் ஜெயராம் கிருஷ்ணா எதற்காக இதில் தலையிடுகிறான் என்று மண்டை காய்ந்தவனுக்கு, ஸ்ரீகா நண்பனின் தங்கை என்பதால் தன்னிடம் இருந்து காப்பாற்றுவதாக நினைத்து ஏதோ முட்டாள்தனம் செய்கிறானோ ??? என்று எண்ணம் ஓடிய அதே சமயம், காப்பாற்ற நினைக்கிறானா?? கைப்பற்ற நினைக்கிறானா ?? என்று சந்தேகமெழுப்பியது மனது.

                     அந்த சந்தேகம் தோன்றிய நிமிடம், அப்படி மட்டும் நடந்து விட்டால் தான் தோல்வியுற்றதாக ஆகிவிடாதா என்று கொதித்தவன், ஸ்ரீகாவை எப்படி வெளியே கொண்டு வருவது என்று தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தான்.

                         இங்கு ஸ்ரீகாவின் வீட்டிலோ, ரேகா நேற்று இரவில் இருந்தே உணவு கூட உண்ணாமல் அமர்ந்து இருந்தார். பரமேஸ்வரன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கூட, அசையவில்லை அவர். மகளை கண்ணில் பார்க்கும்வரை அந்த அறையில் இருந்து நகரமாட்டேன் என்று அமர்ந்து இருந்தார் அவர்.

                          ஸ்ரீகா வீட்டிற்கு வர சற்று தாமதம் ஆகவும், என்ன எது என்று நான்குபக்கமும் விசாரிக்க தொடங்கியவர்களுக்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே ஜெய்ராம் கிருஷ்ணாவின் தலையீடு தெரிய வந்திருந்தது. பரமேஸ்வரன் மகனின் நட்பை அறிந்தவராக அவனை அழைத்து விசாரிக்க, அவனுக்கும் அதிர்ச்சி தான்.

                           அடுத்த சில நிமிடங்களில் அவனுக்கே அழைத்து விட்டான் அபி. கிருஷ்ணாவும் அவன் அழைப்புக்காகவே காத்திருந்தவன் போல் முதல் ரிங்கிலேயே போனை எடுத்துவிட, அவனிடம் விவரம் கேட்கவும் “என்னோட தான் இருக்கா அபி..” என்றான் எப்போதும் போல்.

                            அபி “என்னடா சொல்ற.. எதுக்காக இப்படி பண்ண… இங்கே அம்மா அழுதுட்டு இருக்காங்கடா இடியட்..” என்று கத்த

                              “போனை அங்கிள்கிட்ட கொடு.” என்றான் ஜெய்.

                             “என்கிட்டே சொல்லு கிருஷ்ணா.. என்னதான் நடக்குது.” என்று அவன் மேலும் சத்தமாக கத்த

                             “போனைக் கொடுடா..” என்று அவனைக் காட்டிலும் சத்தமிட்டான் ஜெய்.

                              அதற்குமேல் அவனோடு வாதிடாமல் அலைபேசியை தந்தையிடம் அபி நீட்ட, பரமேஸ்வரன் “என்ன நடக்குது ஜெயராம்… எதுக்காக ஸ்ரீகாவை நீ கூட்டிட்டு போகணும்.” என்று நிதானம் தவறாமல் விசாரிக்க

                           “இந்த பெருமைக்காக தான் உங்ககிட்ட பேச நினைச்சேன் அங்கிள்.” என்றவனுக்கு பதிலாக

                            “தப்பு ஜெயராம். என் பொறுமை என்னைவிட்டு போயிட்டு இருக்கு. என் மகள் எங்கே இருக்கா.. எப்படி இருக்கா..” என்று அவர் பதற

                             “ஸ்ரீகா நல்லா இருக்கா அங்கிள். முக்கியமா பாதுகாப்பா இருக்கா… நீங்க கவலைப்பட வேண்டியதில்லை.”

                             “ஏன் அவ பாதுகாப்புக்கு என்ன வந்தது… என்ன விஷயம் ஜெய்.” என்று அவர் சரியாக நுனியை பிடித்துவிட

                               “நான் தூக்கிட்டு வராம போயிருந்தால், பீஷ்மன் தூக்கி இருப்பான்.” என்றான் அமைதியாக

                             “என்ன..” என்று அதிர்ச்சியானவர் “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க. என் மக விளையாட்டு பொருளா உங்களுக்கு. அவ்ளோ தைரியம் இருக்கா அவனுக்கு. என் மக என் வீட்டுக்கு வந்தாகணும் ஜெய்.” என்று அவனிடமும் அவர் கோபத்தில் சத்தமிட

                           “உங்க மக உங்க அளவுக்கு எனக்கும் முக்கியம் தான் அங்கிள்..” என்று அவரை அதிர வைத்தான் ஜெயராம். பரமேஸ்வரன் கேள்வியாக மகனைப் பார்க்க, தந்தையின் பார்வையை தவிர்த்து வெளியே பார்த்தான் அவன்.

                             “இப்போ இல்ல. நாலு வருஷத்துக்கு முன்னாடி காலேஜ் டேய்ஸ் இருந்தே எனக்கு அவ முக்கியமானவ தான்.  அவளுக்கும் நான் அப்படிதான். என்னால அவளை மிஸ் பண்ண முடியாது அங்கிள்.” என்று தீர்மானமாக அவன் உரைக்க

                               “அதுக்கு இதுதான் வழியா ஜெய். தப்பு பண்றிங்க நீங்க. உங்க குடும்ப பிரச்சனையில் என் மகளை  இழுத்து விட பார்க்கிறிங்க. இது சரி இல்ல.” என்று பரமேஸ்வரன் எச்சரிக்க

                                    “நிச்சயமா நீங்க நினைக்கிற மாதிரி இல்லஅங்கிள். உங்க மகளை பாதிக்கிற எதுவும், என்னையும் பாதிக்கும். அவளைவிட அதிகமா எனக்கு வலிக்கும்.அதற்காகத் தான் அவளை கூட்டிட்டு வந்திருக்கேன். அவ அங்கே இருப்பது பாதுகாப்பு இல்ல.”

                                    “பீஷ்மா நிச்சயம் அவளோட நிறுத்தமாட்டான் அங்கிள். அவன் இலக்கு அடுத்தடுத்து மாறிக்கொண்டே  இருக்கும். நிச்சயம் உங்களோட மற்ற பிள்ளைகளும் பாதிக்கப்படுவாங்க. அது எதுவுமே வேண்டாம் ன்னு சொல்றேன் நான். நீங்க பெரியவங்க, நிதானமா யோசிங்க. நான் சொல்றது புரியும்.”

                        “என்னை யோசிக்கிற நிலையில நீங்க யாரும் வைக்கல ஜெய். நான் இருக்கும்போதே என் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்ல ன்னு நீ சொல்ற. இதற்குமேல் என்ன நடக்கணும்.??”என்று அவர் மருகி நிற்க, அபி தந்தையை நெருங்கினான்.

                        ஜெய் “நீங்க ஆலமரம் அங்கிள். நிழல் கொடுத்தே பழகிட்டிங்க.ஆண்ட்டி உங்களையும் அவங்களைப் போலவே ஸ்வீட்ட்டா மாற்றி வச்சிருக்காங்க. நீங்க அப்படியே இருங்க. உங்க இடத்துல இருந்து நான் அடிக்கிறேன்.”

                        “என் ஸ்ரீகாவை தொட நினைச்சதுக்கு நான் பதில் கொடுக்கணும் அவனுக்கு. நீங்க நிம்மதியா இருங்க. நான் அப்பாவை பேச சொல்றேன் அங்கிள். நீங்க கல்யாணத்துக்கு என்ன செய்யணும்ன்னு பாருங்க.” என்று முடித்தான்.

                        அவனின் இந்த அதிரடியில் பரமேஸ்வரனே சற்று ஆடிப்போயிருந்தார் எனில், மற்றவர்களை என்ன சொல்ல. பரமேஸ்வரன் சில நொடிகளில் தெளிந்து கொண்டவர் மனைவியிடம் தான் அறிந்த விஷயங்களை கூற, ரேகாவை அவரால் சமாளிக்க முடியவில்லை.

                        மகளின் நிலை அவரை அமைதியடைய விடாமல் துரத்த, நேற்று இரவு முதலே மகளின் அறையில் தான் தவமிருக்கிறார். அபிநந்தன், துருவன், அறிவன், சர்வா என்று அத்தனைப் பேரிடமும் தன் குறுக்கு விசாரணையை இதற்குள் அவர் முடித்திருக்க, ஸ்ரீகாவின் விஷயம் அத்தனைப் பேருக்குமே ஏதோ ஒரு வகையில் தெரிந்துதான் இருந்தது.

                         தன் மக்கள் தன்னிடம் மறைத்திருக்கின்றனர் என்பது வேறு வேதனையாக இருக்க, யாரையும் குற்றம் சொல்ல முடியாமல் தனக்குள் மருகிக் கொண்டிருக்கிறார் ரேகா. சர்வா “அவங்க ரெண்டு பேருக்கும் அப்போ ஏதோ பிரச்சனை ரேகாம்மா. அவங்க அதுக்கு பிறகு பேசிக்கவே இல்ல. நாங்களும் அதோட முடிஞ்சதா நினைச்சிட்டோம்.” என்று எடுத்துக் கூறியும் யார் பேச்சுக்கும் செவிமடுக்கவில்லை அவர்.

                            மனதின் குழப்பங்கள் அவரை மீள விடாமல் மூழ்கடிக்க, ஏற்கனவே துவண்டு போயிருந்தவர் அன்று மாலையில் வெளியான பத்திரிக்கைச் செய்தியில் இன்னமும் துயரப்பட்டுப் போனார்.

                        பீஷ்மன் எவ்வளவோ முயற்சித்தும், ஜெய்ராமை நெருங்க முடியவில்லை அவனால். ஸ்ரீகா இருக்குமிடம் காலையே தெரிந்து இருந்தாலும், அவளை வெளிக்கொணரும் வழி தென்படவில்லை அவன் கண்களுக்கு.

                       எண்ணத்தை நிதானமாக்கி ஓடவிட்டவன் முடிவில், மொட்டை கடுதாசியைப் போல், ஸ்ரீகா காணாமல் போன விஷயத்தை கசிய விட்டிருந்தான். அவனுக்கென இருந்த ஆட்களை வைத்து அவன் காரியம் முடித்திருக்க, இந்த முறை அவன் நினைத்தது நினைத்தபடியே நடந்திருந்தது.

                      அன்றுமாலை செய்திகளில் ஜெயராம் கிருஷ்ணாவின் சென்னை வருகையும், நடன அமைப்பாளர் ஸ்ரீகாவின் தலைமறைவும் பெரிதாக எழுதப்பட்டு இருந்தது. ஜேஆர்கே வைக் கண்டு அஞ்சி ஒதுங்கினாரா?? அல்லது ஜேஆர்கே வால் கடத்தப்பட்டாரா என்று யூகத்தில் அந்த செய்தி முடிந்து போக, அன்றைய செய்திகள், விவாதம் என்று அனைத்திலுமே பேசுபொருளானாள் ஸ்ரீகா.

                      பெண் என்று தயங்காமல் அவளின் இந்த நான்கு ஆண்டுகால சினிமா வாழ்க்கை வெளிப்படையாக அலசி ஆராயப்பட, பரமேஸ்வரன், ரேகாவையும் கூட தொட்டு மீண்டது விவாதங்கள். பரமேஸ்வரனின் வீட்டு தொலைபேசி ஓயாமல் அடித்துக் கொண்டிருக்க, பதில் சொல்லியே ஓய்ந்து போனவளாக கணவனைப் பார்த்தாள் ஆர்த்தி.

                    அபிநந்தன் வீட்டின் தொலைபேசி இணைப்பை துண்டித்து, அலைபேசிகளையும் அணைத்து வைத்துவிட்டான். இதில் துருவன் சினம் கொண்டவனாக ஜெய்ராமை அழைக்க, அவன் அழைப்பையும் ஏற்கவில்லை ஜெய்.

                     சர்வா தன் பங்குக்கு தீஷியை அழைத்து வாட்டியவன், அவள் கண்ணீரை சகிக்க முடியாமல் அழைப்பை துண்டித்து இருந்தான். இந்த மொத்த போராட்டத்திலும் நிதானமாக இருந்தவன் என்றால் அது அறிவன் மட்டுமே.

                     இதற்கெல்லாம் ஒரு வகையில் அவன் சூத்திரதாரியாக இருக்க, ஜெய்யின் இந்த அதிரடி சற்று கவலையைக் கொடுத்தாலும், ஸ்ரீகாவை நினைத்து மனதை தேற்றி தானும் காத்திருப்பை தொடங்கி இருந்தான் அவன்.

                    இது எதையுமே அறியாமல் அலைபேசி, தொலைக்காட்சி என்று அனைத்தும் மறுக்கப்பட்டு புத்தகங்களோடு புத்தகமாக உறங்கிப் போயிருந்தாள் ஸ்ரீகா. அவளின் அலைபேசி இன்னும் ஜெய்யிடமே இருக்க, அதை பெரிதாக தேடவில்லை அவள்.

                    வீட்டினரோடு பேசாமல் இருப்பது வருத்தம் கொடுத்தாலும், தன் ராமை முழுதாக நம்பினாள். அவன் தெரிவித்து விடுவான் என்பதோடு, அவன் இப்படி நடந்து கொள்பவனில்லை என்பதும் சேர்ந்து கொள்ள, அவனே சொல்லட்டும் என்ற முடிவில் காத்திருந்தவள், தன்னையுமறியாமல் உறங்கிப் போயிருந்தாள்.

Advertisement