பொதிப்பருவம்_9_1
“அக்கா, ஓனருக்கு ஃபோன்லே சொல்லிட்டியா நேத்து மீட்டிங்கலே நடந்ததை?” என்று காலை டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பவியைப் பாரத்து கேட்டான் வாக்கிங் முடித்து வீட்டிற்குள் நுழைந்த தீபக்.
“இன்னும் இல்லை டா..சாயந்திரமா தான் சொல்லணும்.”
“நல்ல வேளை நேத்து  மீட்டிங் அட்டெண்ட் செய்ய நீ ஆத்துலே இருந்த..இல்லேன்னா நான் தான் போயிருக்கணும்..இவ ஸ்கூல் ஃபங்ஷன் முடிஞ்சு வர்றத்துக்கு லேட்டாயிடுத்தே..இந்த மாதிரி ஒவ்வொரு மீட்டிங்கிக்கும் ஓனர் சார்பா போகணுமா பவி?”
“வேணாம் மா..இது ஒன் டைம்..நம்ம இண்டரெஸ்டுக்குதான் போக சொன்னார்.”
“நேத்து நீ ஸ்கூலேர்ந்து வர்றத்துக்கு இராத்திரி எட்டு மணியாயிடுத்தே பவி.”
“நேத்துதான் ஹைஸ்கூல் ஆனுவல் டே ..இன்னும் மூணு பாக்கி இருக்கு..மிடில் ஸ்கூல், பிரைமரி, நர்ஸரி..எல்லாமே சாயந்திரம் 5 மணிக்கு ஆரம்பிச்சு 7 மணிக்கு முடியும்..எல்லா டீச்சர்ஸுக்கும் ரெஸ்பான்ஸிபிலிடி இருக்கு.” என்றாள்.
“என்ன டீ இது..நாலு ஆனுவல் டேவா?”
“பெரிய குழந்தைகளுக்கு டிஸம்பர்லேர்ந்து மாக்ஸ் ஆரம்பிச்சிடும் ஸோ அவளோடதுதான் நேத்து நடந்தது.”
“நோக்கு கொடுக்கற சம்பளத்துக்கு மேலே மூணு பங்கு வேலை வாங்கறா..மத்தியானம் நர்ஸரி குழந்தைகள் ஆத்துக்கு வந்துடுறதுகள்..நீ பெரிய குழந்தைகளோட சாயந்திரம் தான் வர்றே.” என்றார் சுகந்தி.
“நான் நர்ஸரி டீச்சர் மா..ஸ்டுடண்ட் இல்லை..மத்தியானம்தான் மறு நாள் சொல்லி தர வேண்டியதைப் பிளான் செய்யறேன்..மத்த கிளாஸுக்கு ரிப்ளெஸ்மெண்டாப் போறேன்.” என்றாள் பவி.
அதற்கு மேல் அவள் ஸ்கூல் விஷயத்தைப் பற்றி பேசாமல்,”ஏன் டா நேத்து நிறைய பேர் வந்திருந்தாளா?” என்று விசாரித்தார்.
“நிறைய கூட்டம் மா..ஒரே சத்தம்..ஒரு மணி நேரம் ஆச்சு ஒரு முடிவுக்கு வர..நீ என்ன முடிவு செய்திருக்க கா?” என்று கேட்டான் தீபக்.
“நமக்கு கம்யுனிட்டி ஹால்லே நடக்கற ஃபங்ஷன்லேக் கலந்து வேண்டிய அவசியமில்லைன்னு ஓனர்கிட்ட சொல்ல போறேன்.”
“ஏன் கா..நவராத்திரி, தீபாவளி போது நிறைய போட்டி நடத்த போறா..ரங்கோலி, பாட்டு இரண்டுத்துலேயும் நீ கலந்துக்கலாமே.” என்றான் தீபக்.
“அதெல்லாம் வேணாம் டா..நேக்கு இன் டரெஸ்ட் இல்லை..யாரு போய் ஓனர்கிட்ட லெட்டரெல்லாம் கேட்கறது..அவர் வெளியூர்ல இருக்கார் டா..எங்க ஸ்கூல்லே வர்க் செய்யற ஒரு டீச்சர்தான் இங்க முன்னாடி இருந்திருக்கா..இப்ப அவ ஸ்கூல் பக்கத்திலேயே பெரிய வீட்டுக்குப் போயிட்டா..
அம்மாக்கும், நேக்கும் இது போதும்னு நான் இங்கே ஷிஃப்டானேன்…அந்த டீச்சர் சொன்னா ஓனர் வெளியூர்ங்கறதுனால எந்த பிராப்ளமும் கொடுக்க மாட்டர் அதே நேரத்திலே நம்ம பிராளத்தையும் காது கொடுத்து கேட்க  மாட்டாருன்னு..அதனாலே எதுக்கு இந்த வீண் வேலை..லெட்டர் மூலம் நாமதான் டெனண்ட்டுன்னு நிரூபிச்சிண்டு.” என்றாள் பவி.
“பிள்ளையார் சதுர்த்தியை இங்கே கீழையேக் கொண்டாடினா அதுலே கலந்திண்டோம்..பவி சொல்ற மாதிரி பெரிய ஃபங்ஷனெல்லாம் வேண்டாம் டா.” என்று சுகந்தியும் மறுத்து பேசினார்.
“உன் இஷ்டம் கா..நீ திருச்சிலையாவது நல்லா கோலம் போட்டிண்டு இருந்த..இங்க வாசலே இல்லே..அதான் நோக்கு கோலம் போட ஆபர்சூனிட்டி கிடைக்குமேன்னு சொன்னேன்.” என்றான் தீபக்.
“கோலமாவது இப்பதான் விட்டு போச்சு..பாட்டு, பஜனெல்லாம் டவுன்ஷிப்லையேப் போயிடுத்து..படிப்பைக் காரணம் காட்டி நிறுத்தியாச்சு..ஜோஷி மாமி நன்னா சொல்லிக் கொடுத்திண்டு இருந்தா.” என்றார் சுகந்தி.
படிப்பைக் காரணம் காட்டி பாட்டு கிளாஸை நிறுத்தியது அவளில்லை ஜெய்தான். சுதர்ஷனிடம் பத்தாவது முக்கியம் என்று சொல்லி அவளிற்கு பாட்டு கிளாஸிலிருந்து விடுதலை வாங்கி கொடுத்ததற்குப் படிப்பு காரணமில்லை பிரவீண் ஜோஷிதான் காரணமென்று அவர்கள் இருவர் மட்டுமே அறிவர்.
“எதுக்கு காலங்கார்த்தாலேப் பழைசைப் பேசிண்டு இருக்க? நேக்கு இண்ட் ரெஸ்ட் இருக்கலே..நீ சொன்னேன்னு தான் நான் கத்துண்டேன்.” என்று சொன்ன பவிக்கு தான் தெரியும் பிரவீண் அவள் மீது காட்டிய இண்ட் ரெஸ்ட்டில் தான் பாட்டைத் தியாகம் செய்தாளென்று.
“இந்த மாதிரி நவராத்திரி போதெல்லாம் மிஸஸ் ஜோஷிதான் கோவில்லே பஜன் பாடுவா….உன் பாட்டிக்கு ரொம்ப உடம்பு முடியாம போன போது அவ மாமியாரோட ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்திட்டு போனா..அவளோட மாமியார் உன் சித்தப்பா ஆத்து பக்கத்திலேதான் இருந்தா..இப்பவும் அங்கேதான் இருப்பாளாக்கும்..சித்தப்பாக்கும் அவாளை நன்னாத் தெரியும்.” என்றார் சுகந்தி.
“சித்தப்பாவுக்கு யாரைத் தெரிஞ்சா நமக்கு என்ன?..இப்ப நம்மளைப் பார்த்தா அவா யாருக்காவது அடையாளம் தெரியும்னு நினைக்கறேயா?…டவுன்ஷிப் விட்டு வரும்போது தீபக்கு பத்து வயசு..இவனுக்கு யாரையாவது ஞாபகமிருக்கான்னு கேளு..நம்ம பக்கத்தாத்துலே இருந்த பாலகிருஷ்ணன் மாமாவும், மினி மாமியும் இப்ப நேர்லே வந்தா இவனுக்கு அடையாளம் தெரிய போகறதா?..இல்லை மூணு வருஷம் நான் டெய்லி பார்த்திண்டு இருந்த ஜெய் இப்ப என் முன்னாடி வந்து நின்னா நேக்கு அடையாளம் தெரிய போகறதா?..
இந்தப் பத்து வருஷமா வருஷத்துக்கு ஒரு நாள் அப்பாவோட சிராதத்தன்னிக்கு ஃபோன் பண்ற சித்தப்பாவை நீ தான் ஞாபகத்திலே வைச்சிண்டு எப்ப பாரு பேசிண்டு இருக்க….சித்தி, உமா, மகேஷ் யாரும் எங்களோட பேசறதே இல்லை..நீ தான் எங்களைப் பற்றி எல்லாத்தையும் சித்தப்பாகிட்ட அந்த அஞ்சு நிமிஷத்திலே ஒப்பிப்பே.” என்று பொரிந்தாள் பவி.
“என்னதுக்கு கோவிச்சுக்கற? அவன் அங்கையும், நாம இங்கையும் தூரத்திலே இருக்கோம் அதனாலே உறவு தள்ளிப் போயிடுத்து..யாரைச் சொல்லியும் குத்தமில்லை.” என்றார் சுகந்தி.
“இந்தக் காலத்திலே தொலைவுன்னு ஒண்ணுமேக் கிடையாது..மனசு இருந்திருந்தா ஒரு நடை திருச்சிக்கு வந்து நம்மளைப் பார்த்திருக்கலாம்..ஒரு தடவைக்கூட வரலை..அதே தூரத்திலிருந்து வந்து உன்னை எப்படி கல்யாணம் பண்ணிண்டு போனா அப்பா?” என்று பவி கோபமாகக் கேட்க,
“அது உங்க பாட்டியாலதான்..திருச்சிக்கு ஒரு கல்யாணத்துக்கு வந்திருந்தா.. அங்கே என்னைப் பார்த்திட்டு ஒரு மாசத்துகுள்ள மாட்டுப் பொண்ணா அழைச்சிண்டுப் போயிட்டா.” என்றார் சுகந்தி.
“அதை தான் சொல்றேன்..அந்தக் காலத்திலையே வருஷத்துக்கு ஒரு தடவையாவது பாட்டி திருச்சிக்கு வந்திண்டு போயிண்டு இருந்தா..நாமளும் அப்பாக்கு லீவு கிடைக்கும் போதெல்லாம் வந்திருக்கோம்..இப்ப திடீர்னு திருச்சி தொலைவாப் போயிடுத்துன்னு நீதான் பேசற..
இனி சித்தபாவைப் பற்றி பேசாதே..அவரா ஃபோன் பேசினாதான் நீ பேசணும்..நாம இங்க வந்துட்டோம்னு அப்ப தகவல் கொடுத்தா போதும்..ஆனா நீ கேட்க மாட்ட மா உன் இஷ்டப்படி தான் நடப்ப..உன் கண்ணை அந்தப் பகவான் தான் திறக்கணும் மா.” என்று கோபத்தில் ஆரம்பித்து இயலாமையில் முடித்தாள் பவி.
“நேக்கு கண்ணெல்லாம் திறந்து தான் இருக்கு..நீ சொல்றதைக் கேட்டுதான் இவ்வளவு நாளா அவனுக்கு ஃபோன் பேசலை..அவனோட விரோதம் வைச்சுக்க முடியாது பவி..உன் கல்யாணத்தை அவன் தான் முன்னாடி நின்னு நடத்தணும்.” என்றார் சுகந்தி.
“அதுக்காக ஒதுக்கினவாளோட ஒட்டிக்க போறியா? அப்படி நடத்தற கல்யாணம் நேக்கு வேண்டவே வேண்டாம்.” என்று கோபமாக சொல்லி அவள் காலை உணவை முடித்துக் கொண்டு  ஸ்கூலுக்குப் புறப்பட்டாள் பவி. 
அதுவரை மௌனமாக அவர்கள் இருவரின் வாக்குவாதத்தைப் பார்த்து கொண்டிருந்த தீபக்,”அக்கா இரு, நானும் வரேன்.” என்று அவசரமாக செருப்பை அணிந்து அவளுடன் புறப்பட்டான்.  
“எதுக்கு டா? இப்பதான வாக்கிங் முடிஞ்சு வந்தே.” என்றாள் பவி.
“பரவாயில்லே கா..இனி ஆத்து உள்ளதான இருக்க போறேன்..கொஞ்சம் காலனியை சுற்றி பார்க்கலாம்னு தான் காலைலே வெளியே போனேன்..உங்களை ஷிஃப்ட் செய்யும் போது ஒரே ஒரு நாள்தான் தங்கினேன்..அதனாலே இந்த தடவை நவராத்திரி முழுக்க இங்கதான்.” என்றான் தீபக்.
“நீ வந்தது சந்தோஷம் டா..படிப்பு எப்படி போயிண்டிருக்கு?’
“நன்னா போயிண்டிருக்கு கா.” 
அதன் பிறகு இருவரும் மௌனமாக, திடீரென்று
“அக்கா, அப்பா முகம்கூட நேக்கு நினைவுலே இல்லை கா……எல்லாம் ஒரே மங்கலா இருக்கு..
திருச்சி வந்த அப்பறம் எல்லாத்துக்கும் மாமாவே இருந்ததாலே அப்பா இல்லைங்கறே ஃபீலிங்கே நேக்கு வரலை..நான் பார்க்கறத்துக்கு மாமா போலே இருக்கேன்னு எல்லாரும் என்னை அவரோட புள்ளைன்னு நினைச்சிண்டா..அப்பா எப்படி இருப்பா கா? என்னைப் போல குள்ளமா இருப்பாளா? அப்பாவோடது முழு ஃபோட்டோ இருக்கா நம்மகிட்ட?” என்று தீபக் கேட்டவுடன் பவியின் மனது உடைந்து போனது.
“ஸாரி டா..உன்னைப் பற்றி யோசிக்காம என்னென்வோ பேசிட்டேன்…..சித்தப்பாவை அம்மா இன்னும் நம்பிண்டிருக்கா டா..நேக்கு  அவர் மேலே நம்பிக்கையே இல்லை..அம்மாக்கு எப்படி புரிய வைக்கறதுன்னு நேக்குத் தெரியலை டா..
அப்பா உன் ஹைட்தான் இருப்பா டா..நீ ஹாஸ்டல் சாப்பாட்டுலேக் குண்டாகியிருக்க அதான் குள்ளமா ஃபீல் செய்யற..நோக்கு அப்பா, அம்மா இரண்டு பேர் ஜாடையும் இருக்கு..இப்ப வைச்சிண்டிருக்கற தாடியை எடுத்திடூ கொஞ்சம் அப்பாவை போல இருப்ப..
திருச்சி வந்த புதுசுலே ஃபோட்டோ ஆல்பமைப் பார்த்து அம்மா அழந்திண்டே இருப்பா அதனாலே அது எல்லாத்தையும் பெட்டிலே வைச்சுட்டேன்..கொஞ்சம் வருஷம் கழிச்சு அம்மாவே அவா இரண்டு பேரும் இருக்கற ஃபோட்டவை வெளிலே எடுத்தா..அதுதான் இப்ப ஆத்துலே மாட்டி வைச்சிருக்கேன்..அப்பாவோட ஃபுல் ஸைஸ் ஃபோட்டோ இருக்கு டா..நீ ஊருக்குப் போகறதுக்கு முன்னாடி வெளிலே எடுத்து வைக்கறேன்.” என்றாள் பவி.
“வேண்டாம் கா..அம்மா மனசுக்கு கஷ்டமா இருக்கும்….நீ ஜஸ்ட் அப்பாவை பற்றி நோக்குத் தெரிஞ்சதை என்னோட ஷேர் பண்ணிக்கோ.” 
“நோக்கு என்ன தெரியணும் டா?”
“அவருக்கு ஸ்போர்ட்ஸலே இண்ட் ரெஸ்ட் இருந்ததா? என்கூட நிறைய விளையாடின மாதிரி நேக்கு ஞாபகம்.”
“ஸ்போர்ட்ஸலே இண்ட் ரெஸ்ட் இருந்தது..பட்மிண்டன் விளையாடுவா, உன்னோட பால் விளையாடுவா, என் ஸைக்கிள்ளை ஓட்டுவா..ஆனா கடைசி ஒரு வருஷம் ஆக்ட்டிவா இருக்கலே டா..நேக்கு அது அப்பா போன அப்பறம் தான் புரிஞ்சுது..என்னோட சைக்கிளுக்கு காத்து அடிச்சுக் கொடுக்ககூட அப்பா கஷ்டப்படுவா..அப்பவே அவருக்கு ஏதோ பிராப்ளம் இருந்திருக்கணும்..நான் ஏன்னு காரணத்தைக் கண்டுபிடிக்காம ஜெய்கிட்ட என் சைக்கிளுக்குக் காத்து அடிச்சிண்டேன்.” என்றாள் வருதத்துடன் பவி.
“நோக்கும் அந்த வயசுலே என்ன கா தெரிஞ்சிருக்கும்? நீ ஸ்கூல் கூட முடிக்கலை.” என்றான் தீபக். அதன்பின் அக்கா, தம்பி இருவருமே அவர்கள் அப்பாவைப் பற்றி பேசவில்லை.  
“காலம்பற நிறைய ஓல்டீஸ் தான் வாக்கிங் வர்றா.” என்று பவியின் மன நிலையை மாற்றும் முயற்சியில் இறங்கினான் தீபக்.
பவியும் அதைப் புரிந்து கொண்டு, “ஆமாம் டா..நிறைய வயசானவாதான் காலைலேப் பார்க்க முடியறது..யங் எல்லாரும் வேலைக்கு, காலேஜுக்குக் கிளம்பி போயிடு வா..அதே போல இராத்திரிகூட வயசானாவதான் தான் வாக்கிங் வர்றா..யங் எல்லாரும் ஆத்துக்குள்ளையே எக்ஸர்ஸைஸ் பைக்ல நடக்கறான்னு நினைக்கறேன்” என்றாள்.
“நான் வாக்கிங் போகறச்சே காலைலே ஒரு பைக்கரைப் பார்த்தேன்.. சைக்கிள் மேலே உட்கார்ந்து சூரியனைப் பார்திண்டு இருந்தர்..என்னைப் பார்த்ததும் ஹாய் சொன்னார்..நேக்கு அவர் யாருன்னு சட்டுன்னு அடையாளம் தெரியலை அப்பறம் தான் ஞாபகம் வந்தது.. அவரும், ஒரு வயசான ஆன்ட்டியும் நேத்து மீட்டிங்குக்கு லேட்டா வந்ததாலே என்கிட்டதான் அதுவரைக்கும் என்ன நடந்ததுன்னு கேட்டு தெரிஞ்சிண்டா.” என்றான் தீபக்.
“சூர்யோதயம் வரைக்கும் அவர் தினமும் ரவுண்ட் போறார்..ஆனா வீக் எண்ட்ஸலேக் காணும்..ரெஸ்ட் போல.” என்றாள் பவி.
“உயரமா, ஒல்லியா.. வெரி ஃபிட்..பதினைஞ்சு மாடியும் படிக்கட்டு ஏறி போவார்னு நினைக்கறேன்..முகத்தை துணியாலே மூடிண்டா நின்ஜா வாரியர்தான்.” என்றான் தீபக்.
“நின்ஜாவெல்லாம் குள்ளமா இருப்பா.. மாடிப் படிலே ஏறிப் போக மாட்டா தாவிப் போவா.” என்றாள் பவி சிரிப்புடன்.
“போ கா….நிஜமான நின்ஜான்னா சொன்னேன்..மாதிரின்னு சொன்னேன்.” என்றான் தீபக்கும் சிரித்துக் கொண்டே.
“நானும் சும்மாதான் டா சொன்னேன்..எல்லாரும் லிஃப்ட்தான் யூஸ் பண்றா.” என்றாள் பவி.
“அவரும் இங்கே புதுசுன்னு நினைக்கறேன்..அந்த ஆன்ட்டியைத் தவிர யாரோடையும் பேசலே.” என்றான் தீபக்.
“இங்கே புது முகத்துக்குப் பஞ்சமில்லை..500 ஃபிளாட்ஸ் இருக்கு அதுலே நம்ம சிங்கில் பெட் ரூம் லதான் நிறைய பேர் வாடகைக்கு இருக்கா..அரசாங்கத்தோட ரூல் மட்டும் இல்லேன்னா மொத்தமும் த்ரீ பெட் ரூமா கட்டி விட்டிருப்பா.” என்று அக்கா, தம்பி இருவரும் பேசிக் கொண்டே மெயின் கேட்டை அடைந்தனர்.
அங்கே பஸ்ஸிற்காகக் காத்து கொண்டிருந்த நிவேதிதாவையும், அவள் பாட்டியையும் பார்த்த தீபக் “அக்கா நேத்து இவாளதான் மீட்டிங்லேப் பார்த்தேன்.” என்றான். 
தீபக்கைப் பார்த்த நிவியின் பாட்டியும்,”இவரைத்தான் நேத்து மீட்டிங்லேப் பார்த்தேன்.” என்றார் பவியிடம்.
“நேத்து ஸ்கூல்லே ஃபங்ஷன் இருந்ததாலே என்னாலே மீட்டிங்கிக்கு வர முடியலே..அதான் இவனை அடெண்ட் செய்ய சொன்னேன்.” என்றாள்.
“நானும் லேட்டாதான் போனேன்..அதான் என்ன நடந்திச்சுன்னு நானும், என் நெபரோட ஸன்னும் இவர்கிட்ட விசாரிச்சு தெரிஞ்சுகிட்டோம்.” என்றார்.
“நான் சொன்னேனே கா..காலம்பற சைக்கிள்ளப் பார்த்தேன்னு.” என்று பவிக்கு அந்த நெபரின் மகன் யாரென்று விளக்கினான் தீபக்.
“ஆமாம்..அவந்தான்..அமெரிக்காலேர்ந்து வந்திருக்கான்..தினமும் காலம்பற சைக்கிள்ள காலனியைச் சுற்றி வரான்..வீக் எண்ட்ஸ்ல பாண்டிச்சேரி வரை சைக்கிள்ளையேப் போறான்.” என்றார் நிவியின் பாட்டி.
“டேய்..அவன் நார்மல் நின்ஜா வாரியர் இல்லைடா அமெரிக்கன் நின்ஜா வாரியர்.” என்று தீபக்கிடம் கிசுகிசுத்தாள் பவி.  அதைக் கேட்டவுடன் தீபக்கிற்க்கு சிரிப்பு வர அதை அடக்க முடியாமல் அவன் கஷ்டப்பட அதைப் பார்த்த பவி ஸீரியஸாக, 
“இவன் என்னோட தம்பி தீபக்..பெங்களூர்லேர்ந்து லீவுக்கு வந்திருக்கான்.” என்று நிவியின் பாட்டிக்கு 
அறிமுகப்படுத்தி சூழ் நிலையை மாற்றினாள். அவரும் மலர்ந்து முகத்துடன் தீபக்கை பார்த்து, “நமஸ்தே..நான் மிஸஸ் ஸென்.” என்றார். பின் பவியைப் பார்த்து,
“இன்னைக்கு உங்களைப் பார்த்தா இப்ப பூத்த ஆரேன் ஜ் பூவைப் போலே இருக்கு..ஃபிரேஷ் அண்ட் லவ்லி.” என்று பிளெயின் ஆரேன்ஜில் வெள்ளி நிற பார்டர் போட்ட  லெனின் புடவைக்குக் காண்ட் ராஸ்டாக கறுப்பு நிற பிளவுஸ் அணிந்திருந்த பவியின் தோற்றத்தைப் பாராட்டினார் மிஸஸ் ஸென்.
“தாங்க்ஸ்.” என்று அவர் பாராட்டை ஏற்று கொண்டாள்  பவி.  
அதற்குள் அவனை சுதாரித்து கொண்ட தீபக், மிஸஸ் ஸென் தூக்கி வைத்திருந்த நிவேதிதாவைப் பார்த்து,”ஹலோ” என்றான்.
நிவேதிதா அவனிற்கு “ஹலோ”சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.  அவள் மூட் சரியில்லை என்று உணர்ந்த அவள் கிளாஸ் டீச்சர்.
“என்ன ஆச்சு? திரும்ப உடம்பு சரியில்லையா? முகம் சோர்வாயிருக்கு.” என்று விசாரித்தாள்.