Advertisement

அத்தியாயம் 24

தந்தையை காணச் சென்ற மகிழ் இரண்டே நாளில் மீண்டும் வந்துவிட்டாள். அவள் வரவில்லை எனில் ரிஷியே சென்று அழைத்து வர எண்ணியிருந்தான், அவளில்லாத இரண்டு நாள் மிகவும் வெறுமையாக உணர்ந்தான். அவளுக்கும் அவ்வாறு தான் இருந்திருக்குமோ என அவன் எண்ணியிருக்க, ஆனால் அவளோ வருணா அழைத்தால் தான் வந்திருந்தாள்.  

வருணாவிற்கு தேர்வுகள் இருந்தது, அது மட்டுமின்றி மருத்துவ பரிசோதனையும் இருக்க அதை நினைவில் கொண்டு திரும்பி வந்திருந்தாள். ஆனால் சென்ற வேலையை முடித்திருந்தாள். அவள் தந்தை சந்தேகம் கொள்ளாதபடி அவரிடம் ரிஷி பெண் கேட்டு வந்தது பற்றிய பேச்சுக்களை ஆரம்பிக்க, அவள் போன்றே அவனுக்கும் வேறொரு பெண்ணுடன் திருமண பேச்சுவார்த்தை நடந்து நிச்சியகார்தம் வரை வந்து நின்றுவிட்டதை கூறிவிட்டார். 

மகிழுக்கு அந்த நொடி உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது. தான் காட்டிய அன்பும் காதலும் பொய்த்து போன உணர்வு. தான் ஏமாற்றப்பட்டதாகவே உணர்ந்தாள். ஏமாற்றத்தை விடப் பெரிய வலி வேறேது

தன்னை விரும்புவதாக தேடி வந்து திருமணம் செய்தவன், அன்றைய நெருக்கம் அவனுக்கு நினைவில் இருக்க வேண்டும் அதில் தன் நேசத்தை உணர்ந்து தன் மீது அவனும் நேசம் கொண்டதாக எண்ணியிருந்தாள். தானோ நடக்க இருந்த திருமணத்தையே நிறுத்திவிட, அவனோ வேறு பெண்ணனோடு திருமணம் வரை சென்றுள்ளான். 

வருணாவிற்காக என வந்து கேட்டிருந்தாள் கூட அவள் மீது கொண்ட நட்போடும் அவன் மீது கொண்ட காதலோடும் ஏற்றுக்கொண்டிருப்பாள், ஆனால் நேசம் என்று சொல்லி அவளுள் பல எதிர்பார்ப்புகளை விதைத்தது இன்று மொத்தமாக ஏமாற வைத்து விட்டானே என நினைக்கும் போது  இதயம் வெடித்துவிடும் அளவிற்கு வலித்து. இத்தனை மாதங்களில் தன்னை நெருங்காதிருந்ததிற்கு வருணா நலமடைய காத்திருக்கிறான், அதன்பின்னே தங்கள் வாழ்க்கை குறித்து யோசிப்பான் என்றே எண்ணியிருக்க அவனுக்கோ தன் மீது ஈர்ப்பில்லை. 

அவன் வாழ்வில் வருணாவிற்கு பிறகு அவள் என்ற போதும் ஏற்றுக்கொள்ள முடித்தது ஆனால் வருணாவிற்காக அவள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்த போதும் வருணா அழைக்கத் தவிர்க்க மனமின்றி கிளம்பி வந்துவிட்டாள். 

மகிழ் திரும்பி வந்ததிலிருந்து அவளிடம் காணும் மாறுதல்கள் ஏனென்று தெரியாது ரிஷியை  வதைத்தது. ஒரே அறையில் இருந்த போதும் இத்தனை நாட்களில் இல்லாத ஒரு விலகளை உணரச் செய்தாள். அறைக்குள் மட்டுமல்ல வெளியிலும் அவள் தேவைகளை பார்த்து செய்தவள் இன்று விலகி விலகிச் சென்றாள். வேலையாட்கள் பரிமாறும் உணவு தொண்டை தாண்டி இறங்க மறுத்தது. மகிழ் அதிகம் பேசுவதில்லை தான் ஆனால் இப்போது முற்றிலும் மௌனமாகி விட்டாள். அதிக நேரங்கள் வருணாவுடனே இருந்தாள். 

அது மட்டுமின்றி அவன் வெளியூர் செல்ல வேண்டும் இரண்டு நாட்களுக்கான உடையோடு தன்னோடு கிளம்புமாறு சொல்ல, வருணாவிற்கு தேர்வுகள் இருக்கிறதென மறுத்தாள். வருணா கேட்கையில் உடல் நலம் சரியில்லை பயணம் செய்ய முடியாதெனக் காரணம் கூறினாள்.

சந்திரிகாவின் பெற்றோர் அவள் திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டுச் செல்ல ரிஷி அலுவலகத்திலிருந்ததால் வருணாவும் மகிழும் தான் வரேற்றனர். அவர் சென்ற பின் வருணாவுடன் பேசுகையில் அவர்கள் பற்றி முழுவதும் கேட்டறிந்து கொண்டாள்.  

மகிழ்நிரதிக்கு அழைத்த ஸ்ரீதர் எப்போதும் போல அனைவரின் நலம் விசாரித்துவிட்டுப் பேசிக்கொண்டிருக்க, ரிஷி வருணாவிற்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிவிட்டதாக உரைத்தாள் மகிழ். ஒரு நொடி அமைதியாக விட்ட ஸ்ரீதர் வருணாவேன் படிப்பு பற்றிக் கேட்டுவிட்டு அவளிடம் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. 

அன்று மகிழை வெளியில் அழைத்துச் சென்று மனம் விட்டுப் பேசிவிட வேண்டுமென்ற முடிவில் மாலை சான்று சீக்கிரமே வீட்டிற்கு வந்தான் ரிஷி. ஆனால் அத்தனை வேலையாட்களும் பரபரப்பாய் சுற்றிக்கொண்டிருக்க, மகிழ்நிரதி அனைவரையும் கண்காணித்தபடி ஹாலில் நின்றுகொண்டிருந்தாள். விருந்தினர் யாரும் வருகிறார்களா? ஏன் இந்த ஏற்பாடு என்ற குழப்பத்துடனே உள்ளே வந்தான் ரிஷி.

பரபரப்பாய் சுற்றிக்கொண்டிருந்த மகிழை அழைத்தவன் உடைமாற்றி வருமாறு சொல்ல, “எங்க போறோம்?” எனக் கேட்டாள்.

அவன் அமைதியாகப் பார்க்க, “இல்லை இங்க கொஞ்சம் வேலையிருக்கு, அதான் முக்கியமான விஷயம் எங்கேயும் போகணுமா?” எனக் கேட்டு நின்றாள்.

“ஜெஸ்ட் டின்னர் தான், இல்லை பக்கத்துல கோவில் வரைக்கும் போயிட்டு வந்திடலாம்” என அழைத்தான். அவன் தேவை அவளோடு சில நிமிடங்கள்!

சரியெனத் தலையாட்டி விலகிச்சென்றவள் விரைவிலே கிளம்பி வந்தாள். வழக்கம் போலே மகிழ் செல்லும் கோவிலுக்கு அழைத்து வர, இருவரும் கடவுளை வணங்கினர். சிறிது நேரம் அமர்ந்து பேசிவிட எண்ணி ரிஷி அங்கு அமர, மகிழோ அர்ச்சகரிடம் சென்று சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தாள்.

பின் அவன் அருகே வந்தவள், “கிளம்பலாமா ரிஷி?” என்க, “கொஞ்சம் நேரம் உக்காரேன் மகிழ் உங்கிட்ட பேசணும்” என்றான்.

“இல்லை கொஞ்சம் பொருள் வாங்க வேண்டியிருக்கு, ஷாப்பிங் போயிட்டே பேசிக்கலாம்” என அழைத்தாள் மகிழ். சரியென அவனும் எழுந்து வந்தான். மகிழ் வாசல்படிகளைத் தாண்டுகையில் புடவை தடுக்க, சற்றே தடுமாறச் சட்டென அவள் கைகளைத் தாங்கிப் பிடித்தான் ரிஷி. மகிழ் அனிச்சையாக விலக, ரிஷிக்கு என்னவோ போல் இருந்தது.

“மகிழ் என்னாச்சு?” என்க, “நத்திங், லேசா ஸ்லிப்பாகிட்டேன்” என்றவள் முன்னே நடந்தாள்.

“நான் இது கேட்கலை? என் மேல எதுவும் கோபமா?” என்றான். தன் உணர்வுகளுக்கு அவனிடம் மதிப்பு உண்டு என்பத்தை அந்த நொடி மகிழ் உணராது போனாள்.

பதில்லாது அவள் மௌனமாகிவிட, ஏதோ அவள் மனதில் நெருடல் உள்ளது என்பதை மட்டும் ரிஷியால் உணர முடித்தது. அவள் சொல்ல மறுத்தாலும் அதென்ன என தெரிந்து கொள்ளும் வேகம் ரிஷியிடம் இருக்க, வீட்டிற்கு சென்று பேசிக்கொள்ளலாம் எனப் பொறுமை காத்தான்.

அருகே இருக்கும் கடைக்கு அழைத்து வந்தவள், பொம்மைகள், பூஜை பொருட்கள், பட்டுத்துணி வகைகள் என என்னென்னவோ வாங்கினாள். வாங்கும் வரை அமைதியாக இருந்தவன் வரும் வழியில், “இதற்கு இதெல்லாம்?” என்றான்.

“மூணு நாள்ல நவராத்திரி பூஜை ஆரம்பிக்குது. நான் விரதம் இருக்கேன், நம்ம வீட்டுல கொலு வைக்கப்போறோம். அதுக்கு தான்”

“என்ன…!” அதிர்ந்த முகபாவனையுடன் கேட்டான்.

“சாரி இதுக்கும் உங்ககிட்ட பெர்மிஷன் கேட்டு இருக்கணுமா”

“இல்லை அப்படி மீன் பண்ணலை, நம்ம வீட்டுல இதெல்லாம் செஞ்சதில்லையா அதான் கேட்டேன்”

“பெரியவுங்க ஆசீர்வாதம் கிடைக்கும்ல, அதுமட்டுமில்ல வருணா என்ஜாப் பண்றா, ஹேப்பியா இருக்கா இதுக்கு மேல என்ன வேணும் உங்களுக்கு?”

 “சரி, சரி என்னவோ! ஒருநாள் கொண்டாட்டிட்டு போங்க”

“ஒருநாளா…! நவராத்திரிங்க..”

“அப்படினா?”

“ஒன்பது நாள்” என்க, கேட்ட ரிஷி உண்மையிலே அதிர்ந்தான். ரிஷியின் முகபாவனைகளில் மகிழுக்கு சிரிப்பு வர அமைதியாக வீடு வந்து சேர்ந்தனர்.

இரவு உணவிற்குப் பின் படுக்கையில் அமர்ந்திருந்த வருணா உறக்கமின்றி வர இதழை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கைபேசி அதிர எடுத்துப் பார்க்க முதல்முறையாக ஸ்ரீதரிடமிருந்து அழைப்பு.

அவள் ஒரு நொடி தயங்கி நிற்பதிற்குள் நின்ற மணியோசை மீண்டும் அழைத்து. அவன் மீது கோபம் உண்டு என்பதை அவளுக்கு அவளே ஞாபகப் படுத்திக்கொண்டு அழைப்பை ஏற்றாள்.

பொதுவான நலம் விசாரிப்புடன் ஸ்ரீதர் பேச, அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்லினாலே தவிர அவனை நலம் விசாரிக்கவில்லை.

“என்ன விஷயம்?” என்றாள் பட்டென.

“ஒரு முக்கியமான விஷயம், வாட்ஸப்ல ஒரு போட்டோ சென்ட் பண்ணியிருக்கிறேன் பாரு” என்க, ஒரு நொடி காதிலிருந்து எடுத்தவள் பார்க்க, அதில் ஒரு அமெரிக்கப் பெண்ணின் புகைப்படம் இருந்தது.

“யாரு இவ?” என வருணா பற்களை கடித்துக்கொண்டு கேட்க, இதைக் கற்பனையில் கண்டு கொண்ட ஸ்ரீதர் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு, “என் கேள்ஃப்ரண்ட்..” என்றான்.

வருணாவிற்கு சுறுசுறுவென கோபம் ஏறியது, “இதை எதுக்குடா எனக்கு சென்ட் பண்ணியிருக்க?” என கத்தினாள்.

ஸ்ரீதரின் காதுகள் இரைய, விரலால் தேய்த்துக் கொண்டபடி, “என்ன இருந்தாலும் நீ தான் முதல் காதல் இல்லையா, அதனால எங்கிருந்தாலும் மஞ்சள் குங்குமத்தோடு மங்களகரமா உன் கேள் ஃப்ரண்ட்டோட வாழ்ந்துட்டு போடான்னு உன் வாயால ஒரு வாழ்த்து வேணும்” என்றான் சிறிதும் சிரிக்காமல் சீரியஸான குரலில்.

வருணாவிற்கு கோபம் எவரெஸ்டில் ஏறியது, “வாழ்த்தா வேணும்? வாழ்த்து..! ஏன் அவளையும் கூட்டிட்டு இங்க வாயேன் நானே உங்களுக்குக் கருமாரி பண்ணி வைக்கிறேன்” என மீண்டும் கத்தினாள்.

“ஏன் பேபி இவ்வளவு டென்ஷன்? இதுவே எங்கிட்ட கேட்டிருந்தா உங்கண்ணன் பார்க்குற மாப்பிள்ளையைக் கட்டிக்கிட்டு மங்களகரமா வாழுமான்னு வாழ்த்துவேன் தெரியுமா?” என்றான்.

“இப்பவும் என்னை கழட்டிவிடுறதே குறியா இருக்க நீ?” என்க, “பின்ன என்ன செய்ய சொல்லுற? நீ தான் காதலை ஏத்துக்கிடலையே?” என்றான்.

ஒரு தடவை மறுத்ததை ஓராயிரம் தடவையாகச் சொல்லிக்காட்டி மேலும் அவளை எரிச்சல் படுத்த, “என்னவோ செய்” எனக் கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

மறுநாளிலிருந்து ஒன்பது நாள் மகிழ் வீட்டில் நவராத்திரி பூஜை தொடங்கியது. விரதமிருந்து, அதிக நேரமெடுத்து ஆர்வமோடு கொலு வைத்திருந்தாள் மகிழ். சுமங்கலிகள், நண்பர்கள், உறவுகள், மற்ற விருந்தினர் என அனைவரையும் அழைத்திருந்தாள். கொலுவிற்கான பொம்மைகள்  அலங்கரிக்க, விருந்தினருக்கு பிரசாதம், தாம்பூலம் தயாரிக்க என வேலைகள் வரிசையாக நிறைந்திருந்தது. 

இதில் வருணாவும் அவளுக்கு உதவ வேலையாட்கள் அனைவருக்கும் வேலை சரியாக இருக்க, வீடே பரபரப்பாக இருந்தது.   

ரிஷியே சற்று மலைத்துவிட்டான் வீட்டில் பெரியவர்கள் இல்லாது ஒற்றை பெண்ணாக இவ்வளவு வேலையும் இழுத்து கொண்டு இவ்வளவு நேர்த்தியாகச் சிறப்பாகச் செய்கிறாளே என வியந்தான்.  தினமும் மாலை அலுவலகத்தில் இருந்து விரைந்து வந்துவிடுபவன் பூஜையில் கலந்து கொள்வான். 

பூஜைக்காகவே பிரேதேகமாக விதவிதமான வண்ணங்களில் விதவிதமான ஒன்பது பட்டுப்புடவைகளை மகிழிற்கும்  வருணாவிற்கும் பரிசளித்தான். இருவருக்குமாகக் கொடுக்கையில் மறுக்க இயலாது வாங்கிக் கொண்டாள் மகிழ். 

அம்மன் மட்டுமல்லாது மகிழும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணப்பட்டில் சர்வ அலங்காரத்தோடு சுற்றி வருவதை பார்க்கவே பூஜையில் நின்றுவிடுவான் ரிஷி. அதுவும் அவன் அன்னையின் தோழிகள், உறவுக்கார அத்தைகள் எனப் பெரிய பெண்மணிகள் ஒன்பது படிகளில் அத்தனை உயிரினங்களின் வாழ்வில் கோட்பாடுகளைக் கொலு வைத்திருக்கும் அழகைச் சொல்லி மகிழைப் பற்றி அவனிடம் பாராட்டிச் செல்கையில் அவனையே பாராட்டியது போன்று பெரும் வெற்றியைப் பெற்றதை போன்று அகம் மலர்ந்தான். 

வருணா முற்றிலும் நலமடைந்திருந்தாள். ஊன்றுகோல் துணையோடு யார் உதவியுமின்றி தனியாகவே நடக்க தொடங்கியிருந்தாள். அவள் தேவைகளை அவளே கவனித்துக் கொள்ளும் அளவிற்கு முன்னேறியிருந்தாள். 

முதல்நாள் அன்று பூஜைக்கு வந்திருந்தார் ஸ்ரீதரின் தாய் சுலோச்ஷனா. மகிழ் உள்ளே இருக்க வருணாவும் அவள் தோழிகள் சுபியும் கவியும் தான் வரவேற்றுக்கொண்டிருந்தனர். வருணாவிற்கு அவரை பார்த்தது போன்ற நியாயம் இருக்க, யாரென நினைவிலில்லை.  

ஆனால் தோழிகளுக்கு நினைவில் இருக்க, அவரை வரவேற்று சீனியர் பற்றியும் விசாரிக்கப் புரிந்து கொண்டாள். வேகவேகமாக தன் உடையையும் தன்னையும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டு முன்னே வந்து இன்முகமாய் வரவேற்றார். 

அவர் இவள் நலம் விசாரிக்கத் தன்னை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் எனப் புரிந்து கொண்டாள். அவர் கையிலிருந்த கிப்ட் பாக்ஸ் ஒன்றை வருணாவிடம் கொடுத்தவர் சைனா பொம்மை தன் மகன் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வரவைத்தான் எனவும் கொலுவில் வைக்கும்படியும்  உரைத்தார். 

சரியெனத் தலையாட்டியவள் கவரை பிரிந்தபடியே நகர உள்ளிருந்த பொம்மையைப் பார்த்து அதிர்ந்தாள். 

 வருணாவும் ஸ்ரீதரும் ஜோடியாக நிற்பது போன்ற சிறிய அளவிலான மெழுகுப் பொம்மையொன்று இருந்தது. அதை ரசித்தபடி இதை எவ்வாறு கொலுவில் வைப்பதாம் என அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, “வரு அந்த பொம்மையைக் கொடுஎன கிஷோர் கேட்டபடி அருகே வர, “வெய்ட், ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன்என்றபடி அவள் அறை நோக்கி நகர்ந்து விட்டாள். 

அறைக்குள் வந்தவள் மீண்டும் அதே பொம்மையை கைகளில் எடுத்துப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். அச்சு அசலாக அவர்கள் போலே அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவனிடமிருந்து நேரடியாக வரும் பரிசு என்றால் மறுப்பேன் என்றறிந்தே இவ்வாறு செய்துள்ளான், கேடி இதை நான் கண்டிப்பாகக் கொலுவில் வைக்க மாட்டேன் என அறிந்தே அனுப்பியுள்ளான். 

அவள் அலைப்பேசி அதிர, அவள் எண்ணத்தின் திருடனே அழைத்திருந்தான். சட்டென அட்டன் செய்த பிறகே உணர்ந்தாள் அவன் வீடியோ கால் செய்துள்ளான் என்பதை. அவள் அழகு முகத்தையும் விரிந்த கண்களையும் சிவந்த கன்னங்களையும் ஸ்ரீதர் பேச்சின்றி பார்த்தபடி இருக்க, அதை உணர்ந்து கொண்டவள், “இன்னடா இது? இது தான் சைனீஸ் டால்ல?” என பொம்மையை நீட்டிக் கேட்டாள். 

நான் சைனீஸ் டால் தானே ஆடர் செய்தேன், இது எப்படி மாறி வந்துச்சுஎன அவளிடமே கேட்க, அவள் முறைக்க, “பிடிக்கலைன்னா அதை இப்போவே உடைச்சிடுஎன்றான். 

அவள் மேலும் முறைக்க, “அப்போ பிடிச்சிருக்கு அப்படி தானேஎன்றான். சற்றே தடுமாறியவள், “அப்படியெல்லாம் இல்லை இது சாதாரண பொம்மை தானே?” என்றாள். 

ஓஹோ அப்போ கொலுவுல வைக்காம எதுக்கு என்னை உன் ரூம்குள்ள கடத்திட்டு வந்திருக்க?” என்றான். 

பதலின்றி ஒரு நொடி தடுமாறியவள், “நீ..நீ எதுக்கு என் பக்கத்துல இப்படி நிக்கிற? உன் கேள் ஃப்ரண்ட் கூட நிக்க வேண்டிய தானேஎன்றாள் கோபமுடன். 

நானா உன் பக்கத்துல நிக்கிறேன்? நல்லா பாரு நீதான் என்னை பிடிச்சி வைச்சிருக்க, சிறை செய்கிறஎன்க, அவள் உற்றுப்பார்க்க, பொம்மை அவ்வாறு தான் இருந்தது. 

அதில் சிரித்துக்கொண்டவள், “உன்னை தயிர்சாதம் தான் நினைச்சேன், ச்சே தப்பு! யூர் அ ஹாட் அண்ட் ஸ்பைசிஎன்க, சிறு சிரிப்போடு தலையாட்டியவன், “யூர் அ ஸ்வீட்..என்றான். 

அவள் சட்டென முறைக்க, “அதான் ஆல்ரெடி நான் டேஸ்ட் பண்ணி இருக்கேனேஎன அவன் கண்ணடிக்கவும், அவள் முறைப்பெல்லாம் மறைந்து போய் வெட்கச்சிரிப்போடு முகம் திருப்பினாள். அவள் வழுவழுப்பான கன்னங்களைப் பார்த்தவன் அலைபேசி திரை நோக்கி இதழ் குவித்தபடி நெருங்க, அதற்குள் வருணாவை அழைத்தபடி அவள் அறைக்குள் மகிழ் வர, சட்டென அலைபேசி அணைத்து விட்டாள் வருணா.  

ஸ்ரீதரின் அன்னையை இருவரையும் நன்முறையில் கவனிக்க, தாம்பூலம்  கொடுத்தனுப்பினர். அடுத்தடுத்த நாட்களும் வர, இறுதிநாள் அவரோடு ஸ்ரீதரும் வந்திருந்தான். எதிர்பாராது  அவனை கண்டத்தில் வருணாவிற்கு அதிர, மகிழ் வரவேற்க, நண்பர்கள் கொண்டாடினர். பூஜை முடிந்து அனைவரும் கிளம்ப இருவரும் காத்திருந்தனர். 

ரிஷி இருவரையும் அமர வைத்துப் பேசவருணாவிற்கும் படபடப்பாய் இருக்க, மகிழ் அவன் அருகில் வந்தமர்ந்தாள். சுலோச்ஷனா வருணாவை ஸ்ரீதருக்குப் பெண் கேட்டார். இருவருக்கும் மற்றவர் மீது விருப்பம் என்றும் உரைத்தார். ரிஷி யோசனையோடு மகிழைப் பார்க்க, அன்றே சொல்லாமல் விட்டுவிட்டோமோ என எண்ணினாள். 

அவன் பதிலை மகிழ் மட்டுமல்லாது அனைவரும் எதிர்பார்த்திருக்க, ரிஷி அனைவரின் முன்னிலையிலும் வருணாவின் விருப்பத்தைக் கேட்டான். ஸ்ரீதரைப் பார்த்தவாறு அவள் சம்மதம் தெரிவிக்க, பின்னே ரிஷியும் சம்மதம் தெரிவித்தான். ரிஷியைப் பொறுத்தவரை ஸ்ரீதர் குறைவு தான் ஆனால் தங்கை விரும்புவதால் ஏற்றுக்கொண்டான். 

ரிஷி ஒரு நன்னாளில் பெண்பார்க்க வரச்சொன்னான். தன் மாமனார் மற்றும் தங்கள் பக்கம் பெரியவரோடு அன்றே பேசிவிட்டு நிச்சியகார்த தேதியும் முடிவு செய்துகொள்ளலாம் என்க,”என்கேஜ்மெண்ட் எல்லாம் வேண்டாம், மேரேஜ் டேட் பிஸ் பண்ணிடுங்கஎன்றான் ஸ்ரீதர்.

ரிஷி சிரிக்க, வருணா முறைக்க, ஸ்ரீதர் முழிக்க, “அது டைம் இல்லை, சீனியர் கிளம்ப வேண்டியிருக்கும் அதாங்கஎன்றாள் மகிழ். 

ஸ்ரீதரின் அன்னை விடைபெறஇருவரும் கிளம்ப மகிழ், ரிஷி இருவருமாகத் தாம்பூலம் கொடுத்து அனுப்பினர். 

அன்றிரவு மகிழிடம் இருவர் பற்றியும் கேட்டறிந்து கொண்டான். இருந்தும் ஸ்ரீதர் பற்றி தனியாக விசாரித்து அறிந்து கொண்டான்.  வருணாவிடம் பேச அவளோ தனக்கு யூனிவேர்ஸ்சிட்டி ஆஃப் கலிபோர்னியாவில் இடம் கிடந்து விட்டதாகவும் திருமண தேதியை விரைவில் வைத்தாள், திருமணம் முடிந்து ஸ்ரீதருடன் கிளம்புவதாகக் கூறினாள். 

வருணாவின் பொலிவு முகமும் அதில் இருக்கும் புன்னகையும், அவள் வாழ்க்கை விருப்பம் போல் இன்பமாய் அமைத்ததிலும் ரிஷிக்கு மனம் நிறைந்திருந்தது. அந்த உற்சாகத்திலே அவர்கள் திருமண ஏற்பாடுகளைத் தொடங்கினான். 

 

 

Advertisement