Advertisement
அத்தியாயம் ஐந்து:
ப்ரீத்தியின் கோவை வாசத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார் ராஜசேகரன். ஓரிரு நாட்களிலேயே ப்ரீத்தியை பழைய கல்லூரிக்கே மாற்றி விட்டார்.
ப்ரீத்தியிடம், ஹாஸ்டல் அவளின் தம்பிக்கு ஒத்துக் கொள்ளவில்லை, அம்மா இனிமேல் இங்கு தான் இருப்பார்கள், “அதனால் உன்னையும் மாற்றி விட்டேன்”, என்று முடித்து விட்டார்.
மிகவும் தோழமை தான் ராஜசேகரனுக்கு பிள்ளைகளோடு. ஆனால் சில விஷயங்கள் அவர் பேசும் போதோ சொல்லும்போதே மீறி யாராலும் அவரிடம் கேள்விக் கேட்க முடியாது…… அப்படி ஒரு துவனியில் அவர் சொல்லப் ப்ரீத்தியினால் என்ன ஏதென்று மேலும் துருவ முடியவில்லை.
“சரிப்பா”, என்று ஒற்றை வார்த்தையில் அவளும் முடித்துக் கொண்டாள்… மாமனார், மாமியார், ப்ரீத்தியின் தாய்மாமா, அத்தை என அனைவரிடமும் அதையே சொன்னார்.
மாளவிகாவிடம், ப்ரீத்தியிடம் எப்போதும் இதை சொல்லக் கூடாது என்று சொல்லிவிட்டார். எழுந்த பிரச்சனைகளை ஒரே நாளில் முடிவுக்கும் கொண்டு வந்து விட்டார்.
வீடு பொருட்கள் எல்லாம் சென்னையில் இருந்ததினால் மீண்டும் ப்ரீத்தியின் குடும்பம் சென்னையில் வாழ்க்கையை தொடங்கியது.
ராஜசேகரன் போட்டது போட்டபடி வந்ததால் மூன்று நாட்களுக்குள் அவர் துபாய் திரும்ப வேண்டியிருக்க……… மாலினி தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.
அப்போதும் அவருக்கு மனமேயில்லை……
காண்ட்ராக்ட் முடிய இன்னும் மூன்று வருடங்கள் இருந்தன……. அவர் நிலைமையை நினைத்து வெறுப்பாய் இருந்தது. பணத்தின் பின் ஓட ஆரம்பித்து வாழ்க்கையில் நிறைய இழந்து கொண்டிருப்பதாய் தோன்றியது.
மூன்று வருடங்கள் போதும், அதற்கு பின் அங்கே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து ஃபிளைட் ஏறினார்.
ஆனால் அவருக்கே தெரியும், அது நடந்தால் மட்டுமே நிஜம். இதுபோல தான் சென்ற முறையும் நினைத்தார். ஆனால் பிள்ளைகள் படிப்பை முடிக்கட்டும் அவர்களுக்கு சிறந்த கல்வி கொடுக்க மீண்டும் காண்ட்ராக்ட் சைன் செய்து விட்டார்.
கணவரின் கலங்கிய முகத்தை பார்த்து, “நான் பார்த்துக்கறேன் போங்க”, என்று மாலினி தான் மிகவும் தைரியம் சொல்லும்படி ஆகிற்று.
பலவருடங்களுக்கு பிறகு அவரும் மாலினியும் சேர்ந்திருக்க, மீண்டும் பிள்ளைகளின் பொறுப்பு நடுவில் வர இந்த பிரிவு…….
“சாரி”, என்றார் மனைவியை பார்த்து, “நீ சொன்ன, காண்ட்ராக்ட் எக்ஸ்டென்ட் பண்ண வேண்டாம்னு, நான் கேட்கலை”, என்று அவர் சொல்ல…..
“ப்ச், போங்க, இனி பேசி பிரயோஜனமில்லை…. முடிஞ்சவரைக்கும் சீக்கிரம் வந்துடுங்க. என்ன தான் பசங்க கூட இருந்தாலும் தனியா இருக்குற மாதிரி தான் இருக்கும்”, என்றார் கணவரின் மேல் மிகுந்த நேசத்தோடு.
ஒரு சிறு தலையாட்டுதலுடன் ராஜசேகரன் சென்றுவிட்டார்.
நடந்தது எதுவும் தெரியாமல் ப்ரீத்தி பழைய கல்லூரிக்கே வழக்கம் போல செல்ல ஆரம்பித்து இருந்தாள்.
மாலினி மகளின் கவனத்தை மீண்டும் ஸ்குவாஷ்ஸில் திருப்பி இருந்தார். அதனால் கல்லூரி அது முடிந்து ஸ்குவாஷ் பயிற்சி என்று ப்ரீத்தியின் பொழுதுகள் மிகவும் பிசியாக இருந்தன.
இதனிடையில் கண்ணாடியில் முகம் பார்க்கும் போது எல்லாம் ஹரி சொன்ன பையன் மாதிரி இருக்க என்ற வார்த்தைகள் காதில் ரீங்காரமிடும்.
பொதுவாகவே ப்ரீத்தி டோன்ட் கேர் பெர்சொனாலிட்டி. யார் எந்த கமென்ட் கொடுத்தாலும் பெரிதாக எடுக்க மாட்டாள் தான். ஆனால் ஹரியின் வார்த்தைகள் ஏனோ வருத்தப் படுத்தியது.
மாலை பயிற்சி முடிந்து வந்தவளிடம், “அப்படியே ஹேர் கட் பண்ணியிருக்கலாமே ப்ரீத்தி……. முடி கொஞ்சம் அதிகமா இருக்கே…”, என்றார் மாலினி.
“அம்மா, நான் முடி வளர்க்கட்டுமா”, என்று ப்ரீத்தியின் வாய் தானாக கேட்டது.
“நான் முதல்லயே சொன்னேன். நீதான் கேட்கலை”, என்ற மாலினி இப்போ திடீர்னு ஏன் ப்ரீத்தி…..
ப்ரீத்தி உண்மையை அப்படியே சொன்னாள்……. “அம்மா, அங்க கோவை காலேஜ்ல என் சீனியர் ஒருத்தன், என்னை பார்த்தா பையன் மாதிரி இருக்கு அப்படிங்கறான் இந்த ஹேர் கட்ல…..”,
மாலினிக்கு கோவை பற்றிய பேச்சே பிடிக்காததால், “எப்போ இருந்து இப்படி மத்தவங்க பேசறதுக்கு நீ இம்பார்டன்ஸ் குடுக்கற”, என்றார் சற்று பிடித்தமின்மையைக் காட்டி.
“மத்தவங்க பேச்சுன்னு இல்லைம்மா, ஜஸ்ட் எனக்கும் மாத்தி பார்க்கலாமேன்னு தோணுது அவ்வளவுதான்…..”,
“உனக்கா மாத்தணும்னா மாத்து ப்ரீத்தி, ஆனா மத்தவங்க சொன்னாங்கங்கறதுக்காக மாத்தாத”, என்று மாலினி சொல்லவும்,
“வை மா இதுக்கு டென்ஷன்”, என்றாள் புரியாதவளாக ப்ரீத்தி.
“அதுதானே மா இதுக்கு போய் எதுக்கு டென்ஷன்……. தலை மாறினாலும் அவ முகம் அப்படியே தானே இருக்கும்”, என்றபடி ரகு வந்து அமர்ந்தான்…..
“டேய், உன்னை கூப்பிட்டாங்களா போடா”, என்று ப்ரீத்தி கோபப்பட.
“ஐயோ, அக்கா! நீ அழகுன்னு சொன்னேன், ப்ராமிஸ், நிஜம்!”, என்றான் ரகு…
அவன் நிஜமாக தான் சொல்கிறான் என்று ப்ரீத்திக்கு புரிந்தது.
“ஆம், ப்ரீத்தி மாநிறம் தான். ஆனால் முகம் லட்சணமாக இருக்கும். அவளின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும்…… ஸ்போர்ட்ஸ் பெர்சொனலிட்டி என்பதால் உடலும் எந்த அதிகமான சதை பிடிப்பும் இன்றி அதே சமயம் மிகவும் ஒல்லியாகவும் இல்லாமல் நன்றாக இருப்பாள். அழகு முகம் என்று சொல்வதை விட வசீகரிக்கும் முகம். அழகு புன்னகை.
“அம்மா, அக்கா அழகு தானே!”, என்று ரகு சொல்ல…..
“அவளுக்கு என்னடா”, என்று மாலினியும் ஒத்துப் பேச…..
“என்னை ஓட்டரீங்களா”, என்று சொல்லியபடி ப்ரீத்தி எழுந்து சென்றாலும்….. ரூமின் உள் சென்றதும் கண்ணாடி முன் தான் நின்றாள்……. “ஆனால் பையன் மாதிரி இருக்கேன்”, என்று அவன் சொன்னானே என்று ப்ரீத்தியின் மனம் தானாக ஹரியை நினைத்தது.
“என்ன ப்ரீத்தி? நீ எவனோ ஒருத்தன் சொன்னா, அதை நீ பெரிய விஷயமா எடுத்துக்குவியா போ, போ”, என்று மனம் இன்னொரு புறம் அவளை திட்டியது.
அலசி ஆராய்ந்து பார்த்ததில் அவளுக்கு புரிந்தது ஒன்றே ஒன்று, “தான் ஹரியை பற்றி அதிகம் நினைக்கிறோம்…… இது தேவையில்லாத ஒன்று…… இரண்டு மூன்று நாட்கள் பார்த்திருப்போமா….. அதுவும் உன்னை அவ்வளவு அலட்சியமாக பார்த்தான், நீ அவனைப் பற்றி நினைக்க வேண்டிய அவசியமில்லை”, என்று சொல்லிக் கொண்டாள்.
ஆனால் மனம் ஒரு மாயை, தான் எதை நினைக்காதே என்று சொல்கிறோமோ அதையே நினைக்கும்……
ஹரிக்கு மனம் சரியாகவே இல்லை…… ப்ரீத்தியை அவளின் தந்தை அந்த இடத்தில் இருந்து அப்புறப் படுத்திவிட்டார். ஜான் அந்த புகைப் படங்களை எடுத்து விட்டான் என்பது ஒரு புறமிருக்க….. அதன் பிறகு ப்ரீத்தி அங்கே கல்லூரியில் யார் கண்ணிலும் படவே இல்லை.
அதனால் அவள் அதிகம் யார் வாயிலும் அரை படவில்லை…. ஆனால் ஹரி அங்கேயே தானே இருக்கிறான்.
என்னவோ யாரை பார்த்தாலும் அவர்கள் தன்னை தப்பாக நினைப்பார்களோ என்ற எண்ணம் அதிகமாக ஒரு கட்டத்தில் இருக்க, தடுமாறிப் போனான்.
கவனத்தை எல்லாம் பாடத்தில் கொண்டு வந்தான்…. கேம்பஸ் இன்டர்வியூ இருக்க, கவனத்தை அதில் செலுத்தினான். இருந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு இனம்புரியாத சங்கடம், தன்னால் தானோ… அவனை அரித்துக் கொண்டு இருந்தது.
ஆனாலும் குடும்ப சூழ்நிலைகள் முன்நிற்க மனதை ஒருமைப்படுத்தி இன்டர்வியூ அட்டென்ட் செய்து நல்லபடியாக அதில் தேர்வும் ஆகிவிட்டான். அவனோடு நிதினும் தேர்வாகி இருந்தான்.
ஆறுமாதம் ட்ரைனிங் வேறு ஊரில், அதன் பிறகு எங்கே என்று சொல்வார்கள்…. நல்ல கம்பனி, நல்ல வேலை, இருந்தாலும் மகிழ்ச்சி இல்லை…..
சஞ்சலம் அகலுவதாக இல்லை……
காலமும் நேரமும் யாருக்காகவும் காத்து நிற்காமல் அதன் போக்கில் ஓடியது……
இப்போது ப்ரீத்தி மூன்றாம் வருட நடுவில் இருந்தால்….. அன்றும் அவள் அப்போது படிக்கும் கல்லூரியில் காலேஜ் டே…..
தோழிகள் ப்ரீத்தி நீ பாடலையா என்று கேட்ட போது ஏனோ ப்ரீத்திக்கு பாடும் ஆர்வமில்லை….
சுமாராக தான் பாடுவாள், ஆஹா ஓஹோ என்ற அளவிற்கு இருக்காது. தனக்கு அவ்வளவு நன்றாக பாட வராது என்று தெரியும், இருந்தாலும் சும்மாவாவது மேடை ஏறி விடுவாள். அவளுக்கு பாடல்கள் கேட்பதில் பாடுவதில் அவ்வளவு ஆர்வம்.
“இல்லை, நான் பாடலை!”, என்று சொல்லிவிட்டாலும் சென்ற வருடம் மாளவிகாவின் கல்லூரியில் நடந்த நிகழ்வுகள் ஞாபகத்தில் வந்தது.
அந்த நினைவிலேயே உளன்று கொண்டிருந்தாள், ப்ரோக்ராம் முடியும் போது எட்டு மணியை நெருங்கி விட்டது.
மாலினி அதற்குள் பலமுறை அழைத்து விட்டார்….. முதலில் எல்லாம் இவ்வளவு கவலைப்பட மாட்டார். அந்த கோவை சம்பவங்களுக்கு பிறகு இப்போது சற்று கவனமாக தான் இருந்தார்.
“என்னம்மா நீ, நான் என்ன தொலைஞ்சா போயிடுவேன், வந்துடறேன்!”, என்று பேசிக்கொண்டே அவளின் ஹோண்டா டியோவை கிளப்பினாள்.
தோழிகள் இன்னும் பேசிக்கொண்டு தான் நின்றிருந்தனர்….. நான் கிளம்பறேன் என்று அவள் கிளம்ப…..
“தனியா போகாத இரு!”, என்று வகுப்பு நண்பர்கள் இருவர் கூட கிளம்பினர்.
“ரொம்ப பண்றீங்கடா எல்லோரும் இப்ப!”, என்று முணுமுணுத்துக் கொண்டே கிளம்பினாள்.
அவள் வீடு சற்று தொலைவு நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து, அதனால் முன்பே சொல்லியிருந்தது தான்….
நடப்பவைகள் சில சமயம் அவ்வளவு நல்லதாக இருப்பதில்லை. அதனால் இப்போதெல்லாம் கூட படிக்கும் நண்பர்களே பல இடங்களில் வகுப்புத் தோழிகளின் பத்திரத்தை பார்த்துக் கொள்கின்றனர் என்பது தான் உண்மை.
சில தேவையில்லாத மன வக்கிரங்களை கொண்ட ஆண்கள் இருப்பதினால் பல அசம்பாவிதங்கள் பெண்களுக்கு நிகழ்ந்து விடுகிறது. தெரிந்து சில, தெரியாமல் பல….
“நான் கராத்தேல ப்ளாக் பெல்ட்”, என்று ப்ரீத்தி ஆரம்பிக்கும் போதே….
“நான் கலர் கலரா நிறைய பெல்ட் வெச்சிருக்கேன், அதெல்லாம் இங்க பேசாத”, என்றான் விஷ்ணு அவளின் தோழன்.
“ஐயோ, சொல்றதை முழுசா கேளு…… அதெல்லாம் வாங்கலைன்னு சொல்ல வந்தேன்”, என்று தோள் குலுக்கி ப்ரீத்தி சிரிக்க.
“கேட்டம்மா, இப்போ உன்னைக் கேட்டமா, ஒழுங்கா ரோட்டை பார்த்து போ, நாங்க பின்னாடி வர்றமான்னு பார்த்துட்டே போக கூடாது”,
“என்ன ரொம்ப மிரட்ற?”,
“சான்ஸ் கிடைக்கும் போது அதெல்லாம் அப்படி தான் மிரட்டுவோம், போ! போ!”, என்று அதட்டினான்.
“வீட்டுக்கு வா, உனக்கு எதுவும் சாப்பிட குடுக்க வேண்டாம்னு எங்க அம்மா கிட்ட சொல்றேன்”, என்று முன்னால் ப்ரீத்தி வண்டியை விட அவளை சீராக பின்தொடர்ந்தனர் நண்பர்கள்.
வீடு வந்ததும் ஹாரன் அடித்துக் கொண்டே நின்றாள் ப்ரீத்தி……. கீழ் வீட்டில் குடியிருப்பவர்கள் எட்டிப் பார்த்து கதவை திறக்க வர…….
“வேண்டாம் ஆன்ட்டி, ரகு வருவான்!”, என்றாள்.
அவர்கள் அப்படியே சென்று விட….. ரகு மேலிருந்து எட்டிப் பார்த்தவன், “வரமாட்டியா நீ”, என்று கத்தினான்.
“மாட்டேன்”, என்று அப்படியே நின்றுகொண்டிருந்தாள்…….
இதையெல்லாம் விஷ்ணுவும் இன்னொரு நண்பனும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.
“இவ ரொம்ப பண்றாடா”, என்று விஷ்ணு சொன்ன அதே நேரம் பக்கத்துக்கு மாடியில் இருந்து இன்னொரு தலையும் எட்டிப் பார்த்தது…..
யாரு இப்படி கத்துவது என்பது போல….. எட்டிப் பார்த்தது நிதின்.
ப்ரீத்தியை கண்கள் விரிய பார்த்தான், அவளை எதிர்பார்க்கவில்லை.
“ஹரி”, என்று அவனையும் மீறி சத்தமாக கூப்பிட்டான். எங்கே சத்தம் என்று ப்ரீத்திக்கு தெரியவில்லை, ஆனால் ஹரி என்ற அழைப்பு காதில் விழவும்…… அவசரமாக சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள். அது மேலிருந்து வந்தது தெரியவில்லை.
அவள் அதை கவனிக்க….. ரகு, “நீயே வரமாட்டியா……. நீ வந்தா வா, வராட்டி போ”, என்று சத்தம் போட்டான்.
அதில் தெளிந்தவள், “இப்படியே கேட்டை இடிப்பேன்”, என்று பதிலுக்கு சத்தம் போட,
“இடி, எனக்கென்ன”, என்றான் ரகு….
தலையில் அடித்துக் கொண்டே, “ரெண்டும் சரியா தான் இருக்கு…”, என்றபடி விஷ்ணு வந்து கேட்டை திறக்கவும்……..
நிதினின் சத்தம் கேட்டு ஹரி வந்தான்…..
ஆம், அவர்கள் இருவரும் ஒரே கம்பனியில் தேர்வாகியிருக்க……. ஆறு மாத ட்ரைனிங் முடிந்து சென்னையில் ஒரே இடத்தில் போஸ்ட் ஆக….. அன்று மதியம் தான் அங்கே ப்ரீத்தியின் வீட்டிற்கு அருகில் இருந்த மாடி வீட்டிற்கு குடி வந்திருந்தனர்.
இன்னும் பால் கூட காய்ச்சவில்லை…. இருவரும் தாங்களாகவே சமைத்துக் கொள்ள நினைத்து வீடாகவே பார்த்து வந்திருந்தனர்.
அது டபிள் பெட்ரூம், ஹால், கிச்சன் கொண்ட வீடு…..
முன்னிருந்த பால்கனியில் நின்று தான், நிதின் இந்த ப்ரீத்தியின் வரவை பார்த்தவன், அவனை அறியாமல் ஹரிக்கு குரல் கொடுத்திருந்தான்.
ஹரி வந்து எட்டிப் பார்த்தவன், கண்களை நிதினை விட அகலமாக விரித்தான்….. “என்னடா இங்க இருக்கா இவ”, என்றான் அவனையும் மீறி. குரலில் ஒரு கலக்கம்…… “நாம வேற வீடு பார்க்கலாமா”, என்றான் உடனே.
“ஹரி, பத்து நாளா ஹோட்டல்ல இருந்தோம், எவ்வளவு செலவு….. எங்கயும் பேச்சிலர்ஸ்ன்னு வீடு குடுக்கலை, கஷ்டப்பட்டு இப்படி ஒரு டீசன்ட் ஏரியால கச கச ன்னு சென்னை பரபரப்பு இல்லாம வீடு கிடைச்சிருக்கு. அதை மிஸ் பண்ண முடியாது….”, என்றான் கட் அண்ட் ரைட்டாக…..
அதற்குள் விஷ்ணுவும் இன்னொரு நண்பனும் கேட்டை திறந்து அவர்களாக மாடியேறி இருந்தனர்.
ரகு கீழே வராததால், வண்டியை ஸ்டான்ட் போடாமல் அப்படியே காம்பௌண்ட் சுவரில் சாய்த்து நிறுத்தி ப்ரீத்தி மாடி ஏற,
ரகு அவனின் மொபைளோடு வந்து அதை போட்டோ எடுத்தவன், “இரு, நீ பண்ணினதை அப்பாக்கு அப்படியே அனுப்பறேன்……”,
“அனுப்பப் போறியா, இரு, இரு”, என்றவள் சுவரில் சாய்த்து நிறுத்தி இருந்ததை அப்படியே கீழே சாய்த்து, “இப்போ அனுப்பு”, என்று சொல்லி மாடியேற…….
“ரொம்ப திமிர் உனக்கு”, என்று ரகு கத்த…..
“உனக்கு வேணுமா?”, என்று பதிலுக்கு கத்தியபடியே சென்றாள்.
“இவ என்னடா, இன்னும் கொஞ்சம் கூட மாறலை! அப்படியே இருக்கா! அவ்வளவு நடந்தும் மாறலை!”, என்று நிதின் சொல்ல…..
“எவ்வளவு நடந்தது?…….. என்று கேள்வி எழுப்பிய ஹரி, அவளுக்கு எதுவுமே தெரியாதுடா, அவ அப்பா அவளுக்கு தெரிய வர விடமாட்டேன்னு சொன்னதை மறந்துட்டியா”, என்றான் ஹரி.
வண்டியை ப்ரீத்தி சாய்த்து விட்டு போய்விட்டாள், ஆனால் ரகுவால் அதை தூக்கவே முடியவில்லை…
அது இருந்த இடம் சற்று சிரமத்தை கொடுக்க….. தூக்க வெகுவாக முயன்று கொண்டிருந்தான்.
“பிசாசு, பிசாசு”, என்று ப்ரீத்தியை திட்டிக் கொண்டே தூக்கி மறுபடியும் கீழே விட்டான்.
அதை கடைசி படியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்தி….. “இதை நான் அப்பாக்கு அனுப்பிட்டேன்”, என்றபடி வந்தாள். “ஹார்ட்லி டேவிட்சன் பைக் கேட்கற முகத்தை பாரு, வண்டியையே தூக்க முடியலை……”,
“டீ அக்கா……. பிசாசு….. கெடுத்திட்டியா”, என்று ரகு அலறவும்,
“பின்ன முதல்ல வண்டியை நல்லா ஹேண்டில் பண்ணுடா, அதுக்குள்ள உனக்கு செவென் லேக்ஸ்ல பைக்கா”, என்றபடி வந்து, எப்படியோ கிடைத்த கேப்பில் வண்டியை தூக்கி நிறுத்திய ப்ரீத்தி.
ரகு முகத்தை தூக்கி வைத்திருப்பதை பார்த்தவள்…… “சும்மா முகத்தை தூக்கி வைக்கக் கூடாது, நீ ஸ்ட்ராங்னு ப்ரூவ் பண்ணனும், நாளையில இருந்து காலையில் என்னோட கிரௌண்ட் வா”, என்று தம்பியை சமாதானப்படுத்தி அழைத்து சென்றாள்……
எல்லாவற்றையும் ஹரியும் நிதினும் வேடிக்கை பார்த்தனர்…… ப்ரீத்தி அவர்களை கவனிக்கவே இல்லை.
அவள் பாட்டிற்கு சென்று விட, ஹரியின் பார்வை அவளின் உடை மற்றும் அவளின் ஹேர் ஸ்டைலில் தான் இருந்தது…..
உடை ஆண்கள் ஷர்ட், பேன்ட் போல அன்றி, ஜீன்ஸ் குர்தியாக மாறியிருக்க, அதுமட்டுமல்லாமல் ப்ரீத்தி இப்போது முடி வளர்த்து அதை ஒரு போனி டெய்லாக போட்டிருந்தாள்.
அவள் குதித்து ஏறும்போது அந்த முடி அதற்கு தகுந்தார் போல அசைந்து ஆட…. ஹரி அவளையே விழி அகற்றாமல் பார்த்தான்……. “இவ அடங்க மாட்டா போலவே”, என்பதாக….
ஆனாலும் மனதிற்குள் ஒரு நிம்மதி. நடந்தது எதுவும் இவளை பாதிக்க வில்லை என்று. மனதின் பாரம் சற்று குறைந்தது. ஏனென்றால் அந்த பிரச்சனைகளுக்கு பிறகு இப்போது தான் ப்ரீத்தியை நேரில் பார்க்கிறான்.
ஆம், அதுவரை நேரில் தான் பார்க்கவில்லை, நேரில் மட்டும் தான் பார்க்கவில்லை.