Advertisement

அத்தியாயம் இருபத்தி எட்டு:

“என்ன பண்ற..?”, என்று ஹரி சைகையில் கேட்க…..

“ஷ்!!!”, என்று விரல் வைத்து, “பேசாதே”, என்று பதிலுக்கு சைகை காட்டினாள்.

“நானே சைகைல கேட்கறேன்! இந்த லூசு பேசாதன்னு காட்டுது! என்ன சொல்ல?”, என்று ஹரி முறைத்துப் பார்க்க….

அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல், “என்ன பிளான்?”, என்று கேட்ட ராஜசேகரனிடம், “எனக்கு லாங் டிரைவ் போகணும்ப்பா”, என்றாள்.

எப்போதும் லாங் டிரைவ் ப்ரீத்திக்கு பிடித்தமான ஒன்று, சிறு பெண்ணாக இருந்த போது இருந்து அப்பாவை அவர் லீவிற்கு வரும் போது எப்போதும் கேட்பதுதான்,  “அப்பா, கார்ல போகலாம்”, என்று.

“எதுக்கும்மா இப்போ? எங்க போற?, ஹரியோடையா……?”, என்று கேள்விகளை அடுக்கினார்.    

“ஆமாம்! அனுப்புவீங்களா! மாட்டீங்களா!”, என்று பிடிவாதமாக நிற்க,

“எங்கே”,

“கோயம்பத்தூர்”,

“என்ன?”, என்று அதிர்ந்தவர், “நேத்து தான அங்க இருந்து வந்த?”,

“நாளைக்கு வந்துடுவேன்!”,

அவளின் பிடிவாதம் தெரிந்தவர், “தனியா எப்படி அனுப்ப, ரகுவைக் கூட கூட்டிட்டு போ!”, என்றார்.

“ஓகே, அனுப்புங்க! ஆனா நான் போகணும்….. அம்மா கிட்ட நான் அங்க வர்றேன்னு சொல்லிடுங்க! இன்னைக்கு அவங்க வரவேண்டாம்! நாளைக்கு அம்மாவோட வந்துடறேன்!”.

“யாரு டிரைவ் பண்ணப் போறா?”, என்று அவர் கேட்க..

“நான் தான்பா ஸ்பீடா போகமாட்டேன், கூட ஹரி இருக்காங்க, அவங்களும் டிரைவ் பண்ணுவாங்க”, என்று வாக்குறுதி கொடுத்து, “ரகுவை ரெடி ஆகச் சொல்லுங்க”, என்று சொல்லி, போனை வைத்து, “கிளம்புங்க! கிளம்புங்க!”, என்றாள் ஹரியைப் பார்த்து.

“உங்கப்பா இப்போ தான் இறங்கி வந்திருக்கார்! நீ இப்போ ஏன் இப்படி ஒரு பிடிவாதம் என்னைத் தப்பா நினைக்கப் போறார்”, என்று ஹரி சொல்ல….

“எனக்குப் போகணும்!”, என்று ப்ரீத்தி தீவிரமாக பதில் கொடுத்தாள்……

அந்த தீவிரம், அவனுக்கு விஷயத்தை விளக்க, அதன் காரணம் ஜான் என்று நொடியில் அனுமானித்தான்.   

ஹரி, “வேண்டாம், நீ யாரையும் பார்க்க வேண்டாம்”, என்றான் அதே தீவிரத்தோடு. “அந்த விஷயம் முடிஞ்சு போச்சு அவ்வளவு தான்”, என்றான் கூடவே. 

“ப்ளீஸ், நான் அவன்கிட்ட சொல்லியிருக்கேன், நீங்க இல்லாம எனக்குப் போகப் பிடிக்கலை. இப்போ விட்டா மறுபடியும் எப்போ சான்ஸ் கிடைக்குமோ”, என்று ஹரியை கன்வின்ஸ் செய்தாள்…

ஹரி சாமானியத்தில் ஒத்துகொள்ளவில்லை….  பிறகு, “ஓகே! போகலாம்! ஆனா ஒரு கண்டிஷன்…… நீ அவனை பார்த்துட்டு, அவங்கப்பா அம்மா கிட்ட காம்ப்ரமைஸ் பண்ணிட்டு வந்துடணும்….. அதை விட்டுட்டு, மறுபடியும் அவனைத் திட்டக் கூடாது, அடிக்கக் கூடாது, ஓகே வா!”, என்றான்.

“அதெப்படி முடியும்! அவனை அவங்கப்பா அம்மா கிட்ட காம்பரமைஸ் பண்ணிவிடுவேன்! ஏன்னா அவன் சாரி கேட்டான்! ஆனா அவன் செஞ்சதுக்கு நான் அவனை பனிஷ் பண்ணவேயில்லையே…….. அவனை சும்மா விடச் சொல்றீங்களா?”, என்று வீர வசனம் பேச,

“ஹய்யோ!”, என்று தலையில் கைவைத்து அமர்ந்தான். “எனக்குத் தெரியும் உன்னை….. நீ அந்த மாதிரி எதுவும் செய்யக் கூடாது! அப்போ தான் கூட்டிட்டு போவேன்! இல்லை, நீ போகாத! என்றான் கறாராக,

“ஏன்? ஏன்?”, என்று இடுப்பில் கைவைத்துப் ப்ரீத்தி சண்டையிடவும்…

“ஏன்னா? ஏற்கனவே உங்கப்பா அவனை துவைச்சி எடுத்து இருக்கார்! அப்புறம் நான் அடிச்சு இருக்கேன்! அப்புறம் அவங்கப்பா, அம்மா தள்ளி வெச்சு இருக்காங்க….. படிப்பும் போச்சு…..”,

“நிறைய அனுபவிச்சிட்டான்……. நீ சொன்ன மாதிரி நாம செய்யற விஷயம் அடுத்தவங்களுக்கு தெரிய வாரதுன்னு இருக்குறப்போ இதை விட வக்கிரமா நடந்துக்க செய்வாங்க….. ஜான் அப்படி இல்லை!”,

“இன்னைய ஸ்டேஜ்ல உன்னோட தண்டிப்பை விட மன்னிப்பு இன்னும் அதிகமா வருத்தப்படுத்தும்….. ஒரே தப்புக்கு பல முறை தண்டனை கொடுக்கக் கூடாது”, என்றான்.

“அதெப்படி முடியும்!”, என்று ப்ரீத்தி ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்க…….

“இப்படி முடியும்!”, என்று உட்கார்ந்து இருந்தவன், அவன் என்ன செய்கிறான் என்று ப்ரீத்தி உணரும் முன் அவளை இழுத்து மேலே போட்டு இதழ்களை களவாட…..

ப்ரீத்தியால் மீண்டும் அசைய முடியவில்லை. ஆனால் திமிரவில்லை, சற்றே மயங்கித்தான் போனாள்.  ஒரு புது உணர்வு கூட… ஒரு மெல்லிய சிலிர்ப்பு, அவளின் நெகிழ்ச்சியை உணர்ந்தவன்…. சந்தோஷமாகவே அவளை விடுவித்தான்.

அவனையே விழியகற்றாமல் பார்த்தவள், அவன் சந்தோஷமாக அவளைப் பார்க்கவும், சற்றே முகம் சிவந்து, “உனக்கு முத்தம் குடுக்கற வியாதி இருக்கு போல……”, என்றாள்.   

“என்ன வியாதியா?”, என்று சிரித்தவன், “எஸ், எஸ், எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு, ஆனா பாரு நமக்கு சின்னதா ஒரு பிரச்சனையிருக்கும் போது பெருசா ஒரு பிரச்சனை வந்தா அதை மறந்து போயிடுவோம். அதாவது சின்ன கோட்டுக்கு பக்கத்துல பெரிய கோடு போடுற மாதிரி”, என்றான்.

ப்ரீத்தி புரியாமல் பார்க்க… அவளுக்கு புரியவில்லை என்று புரிந்து…….. அவளை விட்டு தூர சென்று நின்று…..  “முத்தத்தை விட வேற ஏதாவது பிடிச்சதுன்னா, அது குறைஞ்சிடும்”, என்று சொல்ல…….

அப்போதும் அவளுக்கு புரியவில்லை…..  

ப்ரீத்தியின் முகத்தில் குழப்பம் பார்த்து, “அது என்ன”, என்று ஹரி வாய் விட்டு சொல்ல….. “டேய், உன்னை..”, என்று ப்ரீத்தி அடிக்க துரத்த, அவளின் கையில் அகப்படாமல் ஓடினான். 

சில சந்தோஷமான, நிமிடங்கள், தருணங்கள்…. ஓடிக் களைத்து, பின்பு ப்ரீத்தியிடம் அகப்பட்டு, சில செல்ல அடிகளை வாங்கி, அது வலிப்பது போல நடித்து……   

அந்த நிமிடங்களை இருவரும் அனுபவித்து ஒரு வழியாக காரை எடுத்து வீடு சென்றனர். அங்கே ரகு கிளம்பவேயில்லை. “ஏன்?”, என்று ப்ரீத்தி கேட்கவும்.

“எனக்கு வயிறு சரியில்லை, ட்ராவல் பண்ண முடியாது……”, என்றான் ப்ரீத்திக்கும் ரகுவிற்கும் தனிமை கொடுக்க விரும்பி…

“அப்போ உன்னால போக முடியாதா, சரி நான் போறேன்!”, என்று ராஜசேகர் கிளம்பவும்,

“நோ! நோ! எனக்கு கொஞ்சம் தான் சரியில்லை! மாத்திரை சாப்டுட்டேன்”, என்று கிளம்பினான். ராஜசேகர் ரகுவை முறைக்கவும், “பா!”, என்றான்

பிறகு ரகு  கிளம்ப செல்லவும், “இப்போ எதுக்கு ப்ரீத்தி”, என்று ராஜசேகர் சீரியசாக கேட்க…

“எனக்கு போகணும்!”, என்று ப்ரீத்தி பிடிவாதமாக நின்றாள்…….

“நான் பார்த்துக்கறேன்! ஒண்ணும் பயமில்லை! அனுப்புங்க!”, என்றான் ஹரி.

அப்போதும் ராஜசேகரனுக்கு மனமில்லை. “எதுக்கு? எங்கே போற கோயம்பத்தூர்?”,

“அம்மாகிட்டத் தான் போவேன்! மாலு கிட்ட சொல்லாம கொள்ளாம வந்துட்டேன்! அதான்!”, என்றாள்.

அப்போதும் ராஜசேகர் நம்பாமல் ப்ரீத்தியைப் பார்த்தார்….. பின்பு ஹரியிடம் திரும்பி, “உங்களை நம்பித் தான் அனுப்பறேன்!”, என்று சொல்லவும்…….

“கண்டிப்பா பத்திரமா பார்த்துக்குவேன்…… என்னை நீங்க நம்பலாம்…… எங்க தப்பு பண்ணினேன்னு தெரியலை…… உங்க நம்பிக்கையை என்னால வாங்க முடியலை”, என்றான்.

“நடந்ததை பேச வேண்டாம்! விட்டுடுவோம்!”, என்று ராஜசேகரன் அவராக சமாதான உடன் படிக்கைக்கு வந்தார்.

“நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா!”, என்று ப்ரீத்தியை அந்த இடத்தை விட்டு அனுப்பியவர்…… “ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கறா? எதுவும் பிரச்சனையில்லையே”, என்றார்.

“எதுவும் இல்லை”,  

“அவளுக்கு எதுவும் தெரியாதே”, என்று கேட்கவும்,

“இல்லை! தெரியாது!”, என்றான் ஸ்திரமாக ஹரி…. பொய்மையும் வாய்மையிடத்து என்ற திருக்குறளைக் கொண்டு……

அதுவரை நின்றே பேசிக்கொண்டு இருந்த ராஜசேகர்… “உட்காருங்க”, என்று ஹரியிடம் சொல்லி……. அவன் என்ன செய்கிறான், தற்போது என்று அவனின் விவரங்களை கேட்டார்.

ஏற்கனவே ஹரியின் குடும்ப விவரங்களை, ஹரியின் தந்தையிடம் பேசும் போது அறிந்திருந்தார்.    

இப்போதுதான் ஹரியிடம் சாதரணமாக பேச்சுக் கொடுக்க,  அவனின் படிப்பு, தற்போதைய வேலை, எல்லாம் கேட்டார். அவருக்கு மிகவும் திருப்தி…… அதுவும் சில நிமிடங்களில் ஹரியின் புத்திசாலித்தனம் புரிந்தது. அசட்டுப் பேச்சுக்கள் இல்லை, பேச்சில் கவர முயலவில்லை, அதிகப்படியான மரியாதை எதுவும் இல்லை.

அவனின் படிப்பு மேனேஜ்மென்ட் மற்றும் ஃபைனான்சியல் ரிலேடட் ஆக இருக்க, அவனிடம் தான் செய்யப் போகும் இன்வெஸ்ட்மென்ட்கள் பற்றி சொன்னார்.

அவன் ஒரு சந்தேகம் கேட்க….. அவர் ஏதோ சொல்ல, “இல்லை, அப்படி இல்லை”, என்று நேரடியாக சொன்னான்.

ஹரி சொன்ன பதிலில் அவருக்கு புரிந்தது ஒன்றே தான், அவனிடம் பணம் இல்லை என்றாலும் பணத்தை பெருக்கத் தெரிந்தவன் என்று.

இப்படியாக சில பல கேள்விகளை கேட்டு, ராஜசேகர் மும்முரமாக பேசிக்கொண்டிருக்க, நேரம் ஆகிறது என்று ப்ரீத்தி டென்ஷன் ஆனாள்.

பல நாட்களாக யாரிடம் ஐடியா கேட்பது என்று திணறிக் கொண்டு இருந்தவர், “கிடைசான்யா….!!!”, என்பது போல….. “இருங்க”, என்று சில பேப்பர்களை எடுக்க உள்ளே போக……

ப்ரீத்தி ஹரியை முறைத்தாள், “டைம் ஆகுது! போகணும்!”, என்று சொல்லி…

“அவரே அதிசயாமா இன்னைக்கு தான் என்கிட்டே சகஜமா பேசறார்! நான் போகணும்னு சொல்லமாட்டேன்!”, என்று ஹரி சொல்லிவிட்டான்.  

ரகு தான், “அப்பா! ரொம்ப முக்கியமா இது! டைம் ஆகுதுப்பா! பகல்ல போனா தான் பரவாயில்லை!”, என்று சொன்னான்…..

“எப்போ ஜெர்மனி கிளம்பறீங்க….?”,

“நாளான்னைக்கு நைட், இங்க சென்னையில இருந்து தான்…..”,

“அப்போ அதுக்கு முன்னாடி இந்த விஷயம் கொஞ்சம் பேசிடுவோம்! டைம் இருக்குமா?”, என்றார்.   

“எப்போ இருந்துடா இவர் என்கிட்டே இவ்வளவு மரியாதையா பேசறார்!”, என்று ஹரி அசந்து நிற்க….

“உங்களுக்கு டைம் இல்லையா?”, என்றார் உடனே.

“இல்லை! இல்லை! என்றவன், “ஐ மீன் நிறைய டைம் இருக்கு!”, என்று ஹரி தடுமாறி சொன்ன விதத்தில் அங்கிருந்த எல்லோருக்கும் சிரிப்பு.

 அவரின் முகத்தில் நிம்மதி….. பிறகு மக்கள் இருவரும் ஹரியுடன் கிளம்பவும்…..

“அவங்கப்பா அம்மாவை பொண்ணு கேட்க வர சொல்லட்டுமா ப்ரீத்தி”,  என்று ராஜசேகர் நேரடியாக கேட்க….

இருவருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஹரியும் ப்ரீத்தியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

“நீங்க எப்படி சொன்னாலும் சரி!”, என்றான் ஹரி…..

“என்கிட்டே அவ்வளவு பேசிட்டு, இங்க சீன் போடறான், இவனை!”, என்று பல்லைக் கடித்த ப்ரீத்தி…

“அவங்க அப்பா அம்மா கிட்ட முதல்ல அவர் பேசட்டும் பா! அவசரமில்லை!”, என்று ப்ரீத்தி விறைப்பாக சொன்ன விதத்தில்…..

“ம்! ஆமாம், முதல்ல சொல்லுங்க!”, என்று விஷயத்தை முடித்துக் கொண்டார் ராஜசேகரன்.

ரகு விடம் காரைக் கொடுக்கவில்லை, ப்ரீத்தியும் ஹரியும் மட்டுமே காரை மாற்றி மாற்றி ஓட்டிக் கொண்டு வந்தனர்.

ரகு இருந்ததால் எந்த ஜாலி பேச்சுக்களும் ப்ரீத்தியிடமோ இல்லாமல் இருக்க, ஹரி, ரகுவின் படிப்பைப் பற்றி கேட்டு, அவனுக்கு அதில் என்ன பண்ணலாம் என்று அட்வைஸ் கொடுக்க….

சத்தமே இல்லாததால், அவன் என்ன செய்கிறான் என்பது போல திரும்பி பார்த்தான்…….

ரகு உறங்கியிருந்தான்…… ப்ரீத்திக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.

“எல்லோரும் என்னை மாதிரி உங்கப் பேச்சைக் கேட்க மாட்டாங்க, எதைச் சொன்னாலும், கேட்டாலும், பேசிப் பேசியே கொல்றீங்க, நீங்க!”, என்று சொல்லிச் சொல்லி சிரித்தாள்.

“நீ மட்டும் கேட்டா போதும்! வேற யாரும் கேட்கத் தேவையில்லை!”, என்று சொல்லி ஹரியும் சிரித்தவன், “ஆனா பாரு! உங்கப்பாவையே கேட்க வெச்சிட்டேன்! அப்புறம் இவன் எந்த மூளைக்கு”.

“உங்கப்பாக்கு என்னோட இம்ப்பார்டன்ஸ் தெரியலை! அதனால் இத்தனை நாளா என் பேச்சுக் கேட்கலை!”.

“அது போல தான் இவனும், இந்த வயசுல கேரியர் பத்தி பேசினா போர் அடிக்கும், அதனால் தூங்கிட்டான்…… கொஞ்ச நாள்ல நீ ரெகமெண்டேஷன் வருவ! ரகு என்ன பண்ணலாம்னு நீங்க சொல்ல மாட்டீங்களா? அவன் கேட்டுக்கிட்டே இருக்கான்னு”, என்று சொல்ல.

“ஷ்! பா, முடியலை!….. மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா….. முதல்ல நான் நிறைய பேசுவேன், இப்பல்லாம் நான் பேசுறதை குறைச்சிக்கிட்டேன்”, என்றாள் கடுப்பாக,

“ஏன், என்னை மாதிரி புத்திசாலித்தனமா பேச முடியலையா?”, என்று மிதப்பாக ஹரி கேட்க,  

“ஐயோ, மறுபடியுமா!”, என்று காதை மூடியவள், “ஒரே வீட்ல கணவன் மனைவி ரெண்டு பேரும் இப்படி விடாம பேசினோம்னு வெச்சிக்கங்க, மத்தவங்களை விடுங்க, எப்படியோ போறாங்க, நம்ம கூட இருக்குற நம்ம அப்பா, அம்மா, அவங்களை விடவும் நம்ம குழந்தைங்க, பாவமில்லையா!”,  என்றாள் பாவனையாக.

ஹரி முறைத்துப் பார்த்து, “என்ன ஒரு இன்சல்ட் டா ஹரி உனக்கு!”, என்று அவனுக்கு அவனே பேசிக்கொண்டு…… “நீ பேசலைன்னாலும் நான் பேச வைப்பேன், ஹனி”, என்று டைலாக் பேசினான்.   

“ஐயோ முடியலை, இப்படி பேசிப் பேசிக் கொல்றதுக்கு”, என்று சொன்னவள் குரலை தழைத்து, ஹரிக்கு மட்டும் கேட்குமாறு வாயசைத்து……… “நீங்க முத்தம் குடுத்தே என்னைக் கொல்லலாம்!”, என்றாள்.

ப்ரீத்தி சொல்லச் சொல்ல, ஹரியின் முகத்தில் முகம் கொள்ளா புன்னகை… “முத்தம் வேணும்னா இப்படிப் பேசனும்னு அவசியமில்லை. கேட்டா குடுக்கறேன்”, என்று பேசினான்.  

“அய்யோடா முத்தம் வேணும்னா உங்க கிட்ட கேட்கணுமா? என்ன புத்திசாலித்தனம்? அதை நான் குடுக்க மாட்டேனா?”, என்று சொல்ல…..

“தேறிட்ட ப்ரீத்தி”, என்று ஹரி சொல்ல……..  இருவரும் சிரித்தார்கள்.  இருவருக்குமே மனது மிகவும் நிறைவாக இருந்தது.

மீண்டும் ஹரி பேச வர, “ஷ்”, என்று வாயில் விரல் வைத்து, “பேசாதே!”, என்று ஹரியை அடக்கியவள்…. ஸ்டீரியோ பிளேயரை ஆன் செய்தாள்.

அதில்,  

காதல் கிளிகள் ரெண்டு ஜாடைப் பேசக் கண்டு, 
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும். 
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது 
நீரோடை போலே என் நெஞ்சம் இனிக்கும் 
இனிய பருவமுள்ள இளங்குயிலே 
இனிய பருவமுள்ள இளங்குயிலே 

ஏன் இன்னும் தாமதம் 
மன்மதக் காவியம் என்னுடன் எழுது 

நானும் எழுதிட இளமையும் துடிக்குது 
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது 
ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி 
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி 
காலம் வரும் வரை பொருத்திருந்தால் 
கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே 
காலம் என்றைக்கு கனிந்திடுமோ 
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ 
மாலை மணமாலை இடும் வேளைதனில் 
தேகம் இது விருந்துகள் படைத்திடும் 
இதழில் கதை எழுதும் நேரமிது……..

என்று இசைக்க…..  

ப்ரீத்தி அதன் ஒவ்வொரு வரிகளையும் அனுபவித்தாள். ஹரி காரை ஓட்டிக் கொண்டிருக்க… ப்ரீத்தி அவன் புறம் இன்னும் நன்றாக தள்ளி அமர்ந்து அவன் தோளில் தலை சாய்த்தவள், “டிஸ்டர்பன்சா இருக்கா? எடுக்கட்டுமா?”, என்றாள் கூடவே.

“நீ இந்த மாதிரி என்னை டிஸ்டர்ப் பண்ண தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…… ப்ளீஸ் எடுத்துடாத”, என்றான் ஹரி.

அவனின் புஜங்களை சுற்றி கையைப் போட்டு, இன்னும் வாகாக தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். 

அவர்களின் வாழ்க்கைப் பயணமும் அந்த காரைப் போலவே வேகமெடுத்தது.

சரியாக பதினைந்து மாதங்கள் கழித்து…….

இரண்டு வருடம் ஹரி ஜெர்மனியில் இருக்க முடிவெடுத்து இருக்க, அதாவது இருபத்தி நான்கு மாதங்கள், அதில் மொத்தமாக பதினெட்டு மாதங்கள் கழிந்த நிலையில், இன்னும் ஆறுமாதம் மீதம் இருக்க……..

ப்ரீத்தி ஹரியின் திருமணம் மிகவும் எளிமையாக எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி, மிக நெருங்கிய உறவுகள் மட்டும் இருக்க…. இந்தியாவில் கோவையில் மருதமலை முருகன் கோவிலில் நடந்தது.

ஹரியின் அம்மாவிற்கு அங்கே மகனுக்கு திருமணம் செய்வதாக வேண்டுதல் இருக்க…… அங்கே நடந்தது.

ஒரு வார லீவில் ஹரி இந்தியா வந்திருக்க, அவன் வந்த இரண்டாவது நாளில் திருமணம் நடந்தது.

கோவிலில் திருமணம், மாலதியின் உறவுகளும் ராஜசேகரனின் உறவுகளும் கூட கோவையில் இருக்க, அங்கேயே ஒரு மண்டபத்தில் மாலை ரிசப்ஷன்…… அதுவும் நெருங்கிய உறவுகள் மட்டுமே.

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை….. ஹரி ப்ரீத்தி இருவரும் ஒரே மாதிரியாக போதும் என்று விட்டனர். அதுவும் ராஜசேகருக்கு கோவையில் ரிசெப்ஷன் வைப்பதில் மனதே இல்லை.

ப்ரீத்தி, “ஏன் இங்க வேண்டாம், எல்லோரும் இங்க தானே இருக்காங்க!”, என்று கேட்க….. வேறு வழியில்லாமல், “சரி!”, என்றார்.

ப்ரீத்தி இப்போதும் நம்பர் ஒன் பொசிஷன் ஸ்குவாஷில், இன்னும் விமரிசையாக ரிசப்ஷன் வைக்க இருவரின் பெற்றோர்கள் விருப்பப்பட,

“அப்பா, புகழோட இருக்குறவங்க எல்லாம் ஆடம்பரம் காட்டணும்னு இல்லை, சிம்ப்ளிசிடி ரொம்ப முக்கியம்……. இப்படியே இருக்கட்டும்!”, என்றாள்.

ஹரியிடம் நீங்களாவது சொல்லலாமே என்பது போல தொலைபேசியில் சொல்ல, “பேரன்ட்ஸ் ஆசைப்படறாங்க”, என்று சொல்ல முனையும் போதே, “இன்னும் உன் கூட சிக்ஸ் மந்த்ஸ் பிளான் பண்ணியிருக்குற லாங் ஹனிமூன் கேன்சல் பண்ணிடுவேன், பரவாயில்லையா!”, என்றாள் மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் தொலைபேசியில்.

“ப்ரீத்தி சொல்றது தான் ரொம்ப சரி! எதுக்கு ஆடம்பரம்!”, என்று விட்டான் அவசரமாக ஹரியும்.

பின்பு, இதுவரை ப்ரீத்தியை மொத்தமாக நேரில் பன்னிரெண்டு நாட்கள் மட்டுமே பார்த்திருக்கிறான். அவளை பார்த்து காதலிக்க ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், கோவையில் ஒரு மூன்று நாட்கள், சென்னையில் ஒரு நான்கு நாட்கள், பின்பு இங்கிலாந்தில் ஒரு நாள், பின்பு சென்னையில் மூன்று நாட்கள், இப்போது இரண்டு நாட்களாக என்று அவர்கள் பார்த்திருந்த நாட்களை அப்போது தான் பட்டியலிட்டு இருந்தனர்.     

அவன் இந்தியா வரும்வரை அவனோடு வந்து இருக்கிறேன் என்று ப்ரீத்தியாக சொல்லியிருக்க, அதைப் போய் வேண்டாம் என்று சொல்லுவானா என்ன?

ப்ரீத்தி என்ன சொன்னாலும், “ஓகே! ஓகே!”, என்று தலையாட்டிக் கொண்டிருந்தான்.

எதிரில் வேறு நிதின் அவனின் நான்கு மாத குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்க……. அவனவன் காதலித்து குழந்தையே பெற்றுவிட்டான், இதில் எனக்கு இன்னும் ஒரு பிரிவா வேண்டவே வேண்டாம்.

ப்ரீத்தி என்ன சொன்னாலும் எங்கு கூப்பிட்டாலும் செல்லும் மனநிலையில் தான் இருந்தான் ஹரி.

சாதனா வேறு அண்ணனையும் அண்ணியையும் மாற்றி மாற்றி போட்டோ எடுத்து ஹரியின் வாட்ஸ் அப்பிற்கே அனுப்பிக் கொண்டிருந்தாள். மிகவும் பிடிவாதமாக ஹரியின் திருமணம் முடிந்த பிறகு தான், தன் திருமணம் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டிருந்தாள்.

அதனால் ஹரியின் பெற்றோர்களும் ஹரியின் திருமணத்திற்கு அவசரப்பட்டனர் என்பது தான் உண்மை. ஹரி இந்தியா வந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருக்க, “இல்லை, வருமுன்னே நீ திருமணம் செய்து கொள்! நீ வந்த பிறகு சாதனாவின் திருமணம்!”, என்று விட்டனர். 

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், இப்போதெல்லாம் ப்ரீத்தி ஹரியின் பேச்சு கேட்பதில்லை. ஆனால் ராஜசேகர் ஹரி சொல்வதை தவிர வேறு கேட்பதில்லை. எல்லாம் அவன் சொல் என்றாகிப் போனார்.

ஹரி இங்கே போன முறை இந்தியா வந்த போது சில டிப்ஸ் இன்வெஸ்ட்மென்ட்டில் கொடுக்க, அதை கொண்டு வேலைகள் செய்த ராஜசேகர் கொள்ளை லாபம் பார்க்க…..

“ஐயோ, இது தெரியாமல் அங்கே போய் மனைவி மக்களை விட்டு உட்கார்ந்தேனே”, என்று நொந்தவர், அதன் பிறகு ஹரியிடம் கேட்டு ஸ்டாக் மார்க்கெட்டில் இறங்க….. அவருக்கு அந்த வேலையும் பிடித்து விட்டது.

அதிக நேரம் ப்ரீத்தியை விட பேசினார் என்பது மிகையில்லை. நிறைய உற்சாகமான இளைஞர்களுக்கு இருந்த தடை தான் ஹரிக்கும் இருந்தது.

என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்! ஆனால் செய்யப் பணம் இருக்காது. இப்போது ராஜசேகரிடம் பணம் இருக்க…. அதைக் கொண்டு அவருக்கு ஆலோசனைகள் வழங்கினான்.

ஆனால் ஏற்கனவே அவரிடம் நிறைய ஏச்சுக்கள் பேச்சுக்கள் வாங்கியிருந்ததால் ஒரு பெர்சன்ட் கூட உரிமை எடுக்க மாட்டான். ஆலோசனைகள் மட்டுமே. மாலினியிடம் கூட மரியாதை நிமித்த ஒரு சில பேச்சுக்கள் மட்டுமே……

அவனை முதன் முதலில் பார்த்த போது மாலினி சொல்லியிருந்த, “ஹரிக்கு ஏதோ வேலையிருக்காம்! இப்போ போறாங்க!”, என்று ப்ரீத்தியிடம் சொல்லி, “நீ வெளியே போ!”, என்று சொல்லாமல் சொல்லியது என்றும் அவன் நெஞ்சில் இருந்தது.

அவனின் உரிமைகள் எல்லாம் ப்ரீத்தியிடம் மட்டுமே…. அதற்கு எந்த அளவு கோலும் இல்லை…….

இன்னும் இன்னும் அவள் மேல் பித்தானான் ஏன் என்று அவனுக்கே தெரியாது.

ரிசப்ஷன் முடிந்து மணமக்கள் ஹரியின் வீட்டிற்கு சென்றனர். ஆம், மூன்று மாதங்களுக்கு முன்னரே ஹரி பெற்றோருக்கு வீட்டை வாங்கியிருந்தான்.

அதன் பின் தான் சொல்லப் போனால், ப்ரீத்தியின் மேல் காதல் அதிகமாகியது, ஒரு பெண்ணின் மேல் வைத்த காதலுக்காக வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ள, பெற்றோரின் வீட்டை விற்று படிக்க போன செய்கை மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்னால் வீட்டை வாங்கிக் கொடுத்திருந்தான், இப்போது திருமணதிற்கு வந்திருக்கும் இந்த சமயத்தில் முதல் வேலையாக கணிசமான ஒரு தொகையும் அவர்களின் பேரில் போட்டு விட்டான். அதை சாதனாவின் திருமணத்திற்காக எடுக்கக் கூடாது என்ற கட்டளையோடு,  

திருமணத்திற்கு அவன் செலவு எதுவும் இல்லை. எல்லாம் ப்ரீத்தியின் வீட்டினரே! அது அவர்களின் பழக்கம் என்று விட்டனர்.

அதனால் அந்தச் செலவு இல்லை. இப்போது கையில் எதுவும் இல்லை என்றாலும், இன்னும் ஆறு மாதம் ஜெர்மனி வாசம் இருப்பதால் சாதனாவின் திருமணத்திற்கு தேவையான அளவுக்கு மேலேயே சேர்த்து விடலாம்.

இப்படி தடைகள் எல்லாம் அகன்று விட, இப்போது ஹரியின் மனதில் ப்ரீத்தி… ப்ரீத்தி…. ப்ரீத்தி…. மட்டுமே.

திருமணத்திற்கு பின் வரும் முதல் இரவு…… ஆனால் அது முதலிரவாக ஆக்கும் எண்ணமெல்லாம் இல்லை என்று தான் ப்ரீத்தி ஹரியிடம் அவனின் அறையில் விம் பார் போட்டு விளக்கிக் கொண்டிருந்தாள்.

ரிசப்ஷன் முடிந்த இரவு என்பதால்……. இன்னும் ஹரியின் உறவினர்கள் எல்லாம் அங்கு தான் இருந்தனர். இரவு கனிய, அவரவர்கள் உறங்க மணமக்கள் தனித்து விடப்பட்டனர்.

ஹரி ஆர்வமாக அவளைப் பார்க்க…. “தூங்கலாமா!”, என்று சாவகாசமாக ப்ரீத்தி கேட்டாள்…

அவள் கேட்ட விதம் ப்ரீத்தியுடனான தனிமையை எதிர்பார்த்திருந்த ஹரிக்கு கடுப்பைக் கிளப்பவும்,

“அதைத் தானே தினமும் பண்றோம்! இப்போ அதுவா மேட்டர்! ஏன் தூங்கணும்?”, என்றான்.

“ஏன் தூங்கக்கூடாது?”,

“இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்”,

“அதுதான் பிரச்சனையே!”, என்றாள்.

“அதுல என்ன பிரச்சனை!”, என்று குழப்பமாக ஹரி கேட்டான்.

“அதுவா நைட் ஆனா தூங்கணும்னு தியரி இருக்குற மாதிரி, ஃபர்ஸ்ட் நைட் ரூம்குள்ள இந்த பொண்ணும் பையனும் என்ன செய்வாங்கன்னு யாரவது நினைச்சிட்டா! அதனால வேண்டாம்!”, என்று கூலாக சொல்ல……..

“என்ன?”, என்று முழித்தான் ஹரி…….

ப்ரீத்தி விஷமமாக சிரிக்க………

அவள் தன்னை கிண்டல் செய்கிறாள் என்று புரிந்தவன்……  

“சரி, வேண்டாம்! நான் எப்போ இங்க வந்தாலும் என்னை காலேஜ்ல ஸ்பீச் குடுக்க சொல்லுவாங்க இப்போ கூட கேட்டிருக்காங்க…. நானும் போறதுக்கு முன்னாடி கண்டிப்பா குடுக்கறேன்னு சொல்லியிருக்கேன்”.

“நாளைக்கே கூட பண்ணலாம்…… இந்த தடவை க்ளோபலைசேஷன்…. அதாவது உலகமயமாக்குதல் பத்திப் பேசப் போறேன்……”, என்று ஆரம்பித்து அதை பற்றி பேச……

“அய்யோடா! இதுக்கு நீங்க முத்தமே குடுக்கலாம்!”, என்று ப்ரீத்தியாக ஹரியின் அருகில் வரவும்…….

“அப்படி வா வழிக்கு!”, என்று சொல்ல……

ப்ரீத்திக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது….. அந்த சிரிப்பை ரசித்தவன், கைகளை விரிக்கவும், அவனுள் சந்தோஷமாக அடங்கினாள்.  அவளைத் தன்னுள் அணைத்துக் கொண்டு, “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ப்ரீத்தி, நீ என்னோட வாழ்க்கையில வந்ததுக்கு”, என்றான். 

“அதே! அதே! நானும்! நானும்!”, என்றாள்.

அணைப்பில் இருந்து விலகாமலேயே முகம் மட்டும் நிமிர்த்தி, இருவரும் ஒருவரை ஒருவர் சந்தோஷமாக பார்த்து சிரித்தனர். 

அங்கே இளமையோடு கூடிய புரிதல் இருவர் கண்களிலும் பிரதிபலித்தது.

               (நிறைவுற்றது)

                         

 

Advertisement