Advertisement

அத்தியாயம் இருபத்தி ஏழு:

ப்ரீத்தி தன் முகத்தை பதிலுக்காக பார்ப்பதை பார்த்தவன், “நான் எவ்வளவு நிதானமானவனா இருந்தாலும் உன் விஷயம் எல்லாம் அவசரப்பட்டு முடிவெடுத்துடறேன்…..”,

“இப்பவும் அந்த தப்பை செய்ய வேண்டாம்…… நான் மூணு நாள் இங்க இருப்பேன், யோசிக்கலாம்”, என்றவன்,

“நம்ம ரெண்டு பேரும் பேசி முடிவெடுக்கலாம், வாழ்க்கையில நான் சொதப்பல் திலகம், ஆனா நீ அப்படி இல்லை. நீ…. உன் முயற்சி…… இதுதான் உன்னோட வெற்றி, நான் ஒன்னும் பண்ணலை….”,

“உட்கார்ந்து பேசி நம்ம முடிவெடுக்கலாம், ஓகே வா! இப்படி அழாத! எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் ஏதோ தப்பு பண்ணின மாதிரி! என்று ஹரியும் அவளை இறுக அணைத்தபடி உருகிப் பேச,

அவன் வருத்தம் தாளாமல் சில நொடிகளில் கட்டுக்குள் வந்தவள், தலை தூக்கி அவன் முகம் பார்த்து, “நான் நேத்து காலையில இருந்து சரியா சாப்பிடலை, பசிக்குது!”,

“நானும் தான், ரகு என்னை பேசினதுல இருந்து சரியா சாப்பிடலை, வா முதல்ல சாப்பிடலாம்”, என்று சொல்லியபடி அவளின் நெற்றியில் முத்தமிட்டு அவளை விடுவித்தவன், அங்கே எங்கே பாத்ரூம் என்று தேட,

ப்ரீத்தி காட்டிக் கொடுத்தாள். ஹரி சென்று முகம் கை கால் கழுவி வரவும், அதற்குள் ப்ரீத்தி எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்திருந்தாள்.

ஹரி சாப்பிட அமர ஆயத்தமாக, அவன் அமரும் முன், “இதை அந்த தாத்தா கிட்ட குடுத்துடுங்க”, என்று ஒரு பார்சலைக் கொடுத்தாள்.

அதுதான் சாக்கென்று, “உன்னை விட உன் மனசு அழகு, அது தான் என்னை இப்படி உன் பின்னாடி சுத்த வெச்சிடுச்சு”, என்று ப்ரீத்தியை அணைத்துக் கொண்டான்.

“அப்போ என்னை அழகு இல்லைன்னு சொல்றீங்க”, என்று அணைப்பில் இருந்து விடுபட போராட……

“ஐயோ! உன்னை விடன்னு தான் சொன்னேன்! அப்போ அது இன்னும் அழகுன்னு அர்த்தம்! நீ அழகில்லைன்னு அர்த்தம் இல்லை”, என்று விளக்கம் கொடுக்க….

“நம்பிட்டேன்!”, என்று ப்ரீத்தியும் நக்கலாக சொன்னபடி, பிறகு விடுபட முயற்சிக்காமல்,  ஆனால் இந்த பேச்சு எதற்கு என்று அவன் முகம் பார்க்க,

“மறக்காம அந்த தாத்தாக்கு வாங்கி வந்தது மட்டுமில்லாம, சாப்பிடறதுக்கு முன்னாடி குடுக்கற இல்லையா, அதுக்கு”, என்றான்.

“எப்பவும் பொதுவா வேலை செய்யறவங்களுக்கு சாப்பிட்ட மீதியைக் குடுப்பாங்க! இல்லை, சாப்பிட்டு தான் புதுசு கூட குடுப்பாங்க. இப்படி சாப்பிடற முன்னாடி குடுக்க மாட்டாங்க”, என்றவன் அவளை இறுக்கிக் கொள்ளவும்……

“இது ஒரு சாக்கா…”, என்று அவன் அணைத்திருந்ததைச் சொல்ல,

“இல்லை, நிஜமா!”, என்று அவளின் முகத்தை பார்த்தான். “என்னவோ பார்த்த நாள்ல இருந்து என்னை நீ அட்ராக்ட் பண்ணின, லவ் பண்றவங்களை எப்படி ஓட்டுவேன், கிண்டல் செய்வேன், தெரியுமா! அனேகமா அவனுங்க சாபம் விட்டிருப்பாங்க! அதுதான் நான் இப்படி உன்கிட்ட விழுந்துட்டேன்! அவனுங்களை விட பையித்தியமா சுத்தறேன்”,

“நீங்க சுத்தலை, என்னை சுத்த வைக்கறீங்க”,

“ஓகே! ஓகே! ரெண்டு பேரும் சுத்தறோம்! அதை செலிப்ரேட் பண்ண இப்ப கிஸ் பண்றோம்”, என்று சொல்லி ப்ரீத்தியின் முகத்தை அருகில் இழுக்க,

“ஐயோடா! என்ன ஒரு செலிப்ரேஷன்!”, என்று அவன் முத்தமிடும் முன் விலகியவள், “இந்தியால இருந்தப்போவே பார்த்து லவ் சொன்ன உடனே கிஸ் பண்ணினீங்க, இப்போ லண்டன் போய் அப்புறம் ஜெர்மனி போய்….. இன்னும் மோசம் ஆகியிருப்பீங்க”,

“ம்ம்ம்ம்! தள்ளி நில்லுங்க!”, என்றாள் மிரட்டலாக,

“இல்லை, இன்னும் பாரிஸ் போகலை, அங்க தான் இது ஸ்பெஷலாமே”, என்றான் ஹரி கண்ணடித்தபடி,

“அய்யோடா! போக வேண்டியது தானே!”, என்று இடுப்பில் கை வைத்து முறைக்க,  

“போனா வேடிக்கை பார்க்க கூடாது. கிஸ் பண்ண ஆள் வேணும் தானே! அதனால உன்னோட தான் போவேன்!”, என்று மயக்கும் புன்னகையுடன் ஹரி சொன்னான்.  

முகம் சிவந்தவள், “இங்க இருக்குற ஆளை, அங்க கூட்டிட்டு போய் கிஸ் பண்ணுவீங்களா, எவ்ளோ ப்ரில்லியன்ட் நீங்க!”, என்று கூடவே நக்கல் செய்ய…..

“அதானே! எனக்கு பிரில்லியன்சி வேண்டாம்! நான் முட்டளாவே இருக்கேன்! இங்கயே பண்ணுவோம்!”, என்று ப்ரீத்தியை மின்னல் வேகத்தில் அருகில் இழுக்க, அவள் தடுமாறி அவன் மேல் மோதி நின்றாள்.

“உங்களை போய் நல்லவன்னு எல்லோரும் நினைக்கிறாங்களே, நீங்க ரொம்ப மோசம்”, 

“பசங்களோட இந்த மோசம், அவங்க அவங்க மனைவிக்கு மட்டும் தான் தெரியும்”, என்று சொல்லிக் கொண்டே, அவளின் இதழ்களை சிறை செய்ய.

என்ன முயன்றும் ப்ரீத்தியால் விடு பட முடியவில்லை.  மிகவும் இறுக்கமான அணைப்பு, உடலளவிலும், இதழளவிலும்….. சற்று நேரம் முரண்டியவள் பின்பு என்னவோ செய்துக்கொள் என்று விட்டே விட்டாள்.

வெகு நேரம் கழித்தே ஹரி விட, “என்ன இது?”, என்று ப்ரீத்தி கேட்டே விட்டாள். அந்தக் கேள்வியே, “நீ செய்வது சரியல்ல”, என்று சொல்லியது….

கூடவே வாய் வார்த்தையாக, “என்னவோ பெரிய இவன் மாதிரி அவசரமா ஷூ மாட்டிட்டு, எங்க வீட்டை விட்டு போனீங்க, நான் உங்க பின்னாடி வந்தா இப்படி பண்ணுவீங்களா”,  என்று சற்று கோபம் காட்டினாள்.

எவ்வளவோ பார்த்துட்டேன், இதைப் பார்க்க மாட்டேனா, என்பது போல ஒரு லுக் விட்டவன், “அடுத்த சண்டை நமக்குள்ள வர்றதுக்குள்ள, கிடைச்ச வாய்ப்பை யூஸ் பண்ணனும் ஹனி. ஐ லவ் திஸ்”, என்று கூறியவன்,        

“உலகத்துல போர் அடிக்காத ஒரே விஷயம் இதுதான், மனசுக்கு பிடிச்சவங்களோட செய்யும் போது, ரியல்லி எனக்கு ரொம்ப சந்தோசம் ப்ரீத்தி. உனக்கும் என்னை பிடிச்சதுல”, என்று மறுபடியும் அணைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் அவனின் அணைப்பில் நின்றவள், “பசிக்குது”, என்று சொல்ல,

அந்த தாத்தாவிற்கு கொடுத்து அவர்களும் உண்டு சோஃபாவில் அமர்ந்தனர். உண்ணும் போது ஒரு வார்த்தைக் கூட ஹரி பேசவில்லை. அவனாக எதையும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் ப்ரீத்தி வைக்க வைக்க மளமளவென்று உண்டான்.

ப்ரீத்தி பசி போல என்று நினைக்க, உண்மையில் ஹரியின் மனம் முழுவதும் யோசனைகள். சற்று நேரத்திலேயே ப்ரீத்தி அதைக் கண்டு கொண்டாள், அவன் யோசனையில் இருக்கிறான் என்று.     

“ம், இப்போ சொல்லு! என்ன பண்ண போற?”,

“அரை மணிநேரம் தான் ஆகியிருக்கு, நான் மூணு நாள் டைம் கேட்டேன்!”, என்றான் பாவமாக ஹரி.

“நீ யோசிச்சிட்டே சாப்பிட்டதை பார்த்தேன். ப்ச், உன் பிரச்சனை சொல்லு! சால்வ பண்ணலாம்!”,

சில நொடிகள் யோசித்தவன் பிறகு பேச ஆரம்பித்தான்.

“பணம் தான் பிரச்சனை! அது உன்னால சால்வ பண்ண முடியும்! ஆனா வேண்டாம்! ப்ளீஸ்!”, என்றான் ஹரி.

“நான் உன்னை வின் பண்ண வெச்சேன்னு நீ சொல்ற தானே! அது மாதிரி என்னையும் வின் பண்ண வை! ப்ளீஸ்!”, என்றான் கெஞ்சுதலாக.

“நீ வின் பண்ண, நான் என்ன பண்ணனும்?”,

“இப்போதைக்கு பெருசா ஒன்னும் இல்லை! ஜஸ்ட் எங்க அப்பா அம்மாக்கு நான் சம்பாதிச்சு வீடு வாங்கிக் குடுக்கணும்! அப்புறம் சாதனாக்கு நல்ல இடத்துல சீரும் சிறப்புமா கல்யாணம் பண்ணிக் குடுக்கணும்”.

“வேற நிறைய பிசினெஸ்ல அசீவ் பண்ணனும்னு பிளான் இருக்கு. அதுக்கு தான் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் எடுத்தேன். ஆனா அவசரமில்லை”.

“இதுக்கும் நம்ம கல்யாணத்துக்கும் சமந்தம் இல்லை தானே!”, என்றாள்.

“கண்டிப்பா இதுக்கும் கல்யாணத்துக்கும் சம்மந்தமில்லை. ஆனா நீ இப்போ நல்லா ஸ்போர்ட்ஸ்ல வந்துட்டு இருக்க…… கல்யாணம் பண்ணி அதை டம்ப் பண்ண வேண்டாம்னு பார்க்கிறேன்….. பிலீவ், இது உண்மை!”,

“எப்போ வேணும்னாலும் தோணினா உடனே பண்ணிக்கலாம். ஆனா இப்ப வேண்டாம்! நீ ஸ்போர்ட்ஸ்ல காண்சன்ட்ரேட் பண்ணு! நானும் கொஞ்சம் ஸ்டேபிள் ஆகிடறேன்!”,

“தினமும் போன்ல பேசறேன்! ஸ்கைப்ல வர்றேன்! எனக்கு இங்க வர்றது செலவு! ஆனா நீ எப்போ வேணா என்னை வந்து பார்க்கலாம்!”,

“எதுக்கு நீங்க இப்படி என்னை சான்ஸ் கிடைச்சப்போ எல்லாம் முத்தம் குடுக்கவா….. அங்க வந்து அதை நான் வாங்கிக்கணுமா,  இதெல்லாம் செல்லாது! செல்லாது!”, என்றாள் முறைப்பாக.

சிரித்தவன், “அப்போ ஒன்னு செய்யலாம்! நான் ரெண்டு வருஷம் டைம் கேட்கறேன்! நீ இப்போ வரணும்னு சொல்ற…. என்ன பண்ணலாம்னா, நான் கொஞ்சம் கம்மி பண்றேன்! நீ கொஞ்சம் அதிகப்படுத்து!”, என்றான்.

“இதென்ன டீல் பேசறீங்க. ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி ட்ரெயின்ட்ன்னு காட்டுறீங்களா”, என்று ப்ரீத்தி இன்னும் முறைத்தாள்.

“சரி, ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி வேண்டாம்!”, என்று சொன்னவன், அவளின் துப்பட்டாவை உருவி எடுத்தான்.  

“ஹேய், என்ன பண்றீங்க”, என்று கேட்க,  

“கண்டிப்பா, உன் லோ கட் நெக் பார்க்கலை”, என்று ஹரி சிரித்தான்.  

ப்ரீத்தி முறைக்கவும், “உண்மை தான் சொல்றேன்! நீ இன்னைக்கு தான் முழுசா டிரஸ் போட்டிருக்க! ஒன்னும் தெரியலை, மத்தபடி எப்பவும் ஐ லவ் யுவர் ட்ரெஸ்ஸிங் சென்ஸ்!”, என்று பாவம் போல சொல்ல,

அவன் தலையில் செல்லமாக குட்டுவது போல ஆக்ஷன் செய்தவள்,

“விட்டா நிறைய பேசறீங்க, விஷயத்தை சொல்லுங்க”,

“எங்க கிராமத்துல இப்படி தான் பேரம் பேசுவாங்க”, என்று அவளின் கையைப் பிடித்து, அதன் மேல் துப்பட்டா போட்டு, “இப்போ சொல்லு, நான் குறைக்கிறேன், நீ அதிகப்படுத்து”, என்று சொல்லி, இது இந்தியன் மெத்தட் என்று சொல்ல……

ப்ரீத்தியினால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. பொங்கி பொங்கி சிரித்தவள், “உங்க காமெடிக்கு நான் தான் கிடைச்சனா”,

“காமெடிக்கு மட்டுமில்லை, எல்லாத்துக்கும் நீ தான் ஹனி”, என்றான்.

“ஆமாம்! உங்க அவதாரமெல்லாம் என்கிட்டே மட்டும் தான்! மத்தபடி ஊருக்குள்ள நீங்க ரொம்ப நல்லவர், வல்லவர்”, என்று ப்ரீத்தியும் கிண்டல் அடித்தாள்.

ப்ரீத்தி சற்று நல்ல மனநிலையில் இருப்பதை புரிந்து கொண்டவன், சீரியசாக அவளைப் பார்த்து, “என்னை காப்பாத்தி விடேன் ஹனி”, என்றான்.

ஹரி கேட்ட விதத்தில், “என்ன”, என்று கலவரமாக ப்ரீத்தி கேட்டாள்.

“உன்னை கேட்காம அவசரமா வேலையை விட்டுப் போனது, வீட்டை வித்து படிக்கப் போனது, அப்புறம் ஜெர்மனி போனது எல்லாம்  தப்பு தான்”.

“எங்கப்பா சொன்னார்னா நீ ஏன் கேட்டன்னு பலமுறை நீ கேட்டிருக்க, ஏன் தெரியுமா? உலகத்துல இருக்குற ஒரு பெஸ்ட் யுனிவர்சிடில படிக்கணும்கிற என் மனசோட ஆசை, என் வாழ்க்கை சம்பளம் வாங்கற வேலைக்காரனா போயிடக் கூடாது! வேலை கொடுக்குற முதலாளியா இருக்கணும்ங்கற ஆசை! இதெல்லாம் தான் காரணம்!”,

“ஏன் இங்க இருந்து முதலாளி ஆக முடியாதான்னு நீ கேட்கலாம். எனக்கு அந்த மாதிரி பெஸ்ட்டா இருக்கணும் நினைச்சேன். இது போதும்னு நினைக்க முடியலை”.      

“இது கூட இன்னொரு காரணம், என்னோட வாழ்க்கை உன்னோட அமையணும்னு தான். ஸோ எல்லாம் சேர்ந்து தான் என்னோட முடிவுகள். நீ வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு தான் உன்கிட்ட சொல்லவேயில்லை”,

“இப்போ வேலையை விட்டு வந்தா எல்லாம் இன்னும் மோசமாகிடும். அது ஜெர்மனில பெரிய கம்பனி! அதுக்கு அப்புறம் இந்தியால நல்ல சம்பளத்துல வேலை கிடைக்கறது ஈசி….. கொஞ்ச நாள் தான் வேலை அப்புறம் தனியா பிசினெஸ் பண்ணுவேன்….. இதெல்லாம் என்னோட ஆசைகள். இதனால தான் எல்லாம். இதுக்கு பேர் சுயநலாமான்னு எனக்கு தெரியலை. இதை யார்கிட்டயும் நான் சொன்னது இல்லை”,

“சொல்ற தைரியம் இல்லை! சாதாரண மிடில் ஸ்கூல் டீச்சர் பையன் சொன்னா௧! இதை சொன்னா சிரிப்பாங்க! ஆனா என்னோட உனக்கான காதல் ரொம்ப உண்மை”. 

“இதெல்லாம் நடக்கற மாதிரி எனக்கு ஒரு சொல்யுஷன் சொல்லு…. ப்ளீஸ்……”,

“எனக்கு எந்த பேக் கிரௌண்ட்டும் கிடையாது…… எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் கிடையாது….. பணம் கிடையாது…… எதுவும் கிடையாது”.    

“இப்போ வேலையை விட்டு வந்தா எல்லா முட்டாள்தனத்துளையும் அது பெரிய முட்டாள் தனம்.  இது என்னோட சுவாசிக்கற டைம். ப்ளீஸ் ஏதாவது பண்ணு… இப்படி அழுது என்னை அப்செட் செய்யாத….. எனக்கு நீயும் வேணும்”.  

ப்ரீத்தி அவனை கோபமாக பார்த்து, “உனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லைன்னு ஏன் சொல்ற? நான் இல்லை! பணம் இல்லைன்னு ஏன் சொல்ற! உன் பின்னாடி யாரும் இல்லைன்னு ஏன் சொல்ற! நான் இல்லையா?”, என்றாள்.

“இருக்க! கண்டிப்பா இருக்க! உன் சப்போர்ட் எனக்கு வேணும், அது பண ரீதியா வேண்டாம்! மன ரீதியா வேணும். ட்ரஸ்ட் மீ! கண்டிப்பா உங்கப்பா அம்மா மாதிரி நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம்ன்னு நம்ம வாழ்க்கை இருக்காது”.

“எனக்கு பணம் வேண்டாம்! நான் நினைக்கறதை செய்யற சுதந்திரம் வேணும். உன்னோட தான் இருப்பேன். இட்ஸ் எ ப்ராமிஸ். கொஞ்சம் அப்பா அம்மாக்கு செஞ்சிட்டு, சாதனாக்கு கல்யாணம் பண்ணி ஃப்ரீ ஆகிடறேன்! அப்போதான் என்னாலயும் துணிஞ்சு பிசினெஸ் இறங்க முடியும்…. அப்போ கண்டிப்பா உன் கிட்ட தான் பணம் வாங்குவேன்”.

“ஏன்னா நீ தான் அதோட ஓனர்…… எனக்கு நம்பிக்கை இருக்கு! கண்டிப்பா நான் வாழ்கையில சக்செஸ் பண்ணுவேன். இப்போ நமக்கு கல்யாணம் நடக்கும் போது நான் யாருன்னு கூட யாருக்கும் தெரியாது. ஆனா நீ ஒரு எல்லோருக்கும் தெரிஞ்ச வின் பண்ணின பெர்சனாளிட்டி”,

“எல்லோரும் உன்னை கேட்கலாம்! யார் இவன்னு இந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்குதுன்னு….. சொல்லிக்கிற மாதிரி எதுவும் என்கிட்டே கிடையாது”. 

“ட்ரஸ்ட் மீ! இன்னும் ஒரு பத்து பதினஞ்சு வருஷத்துல, கண்டிப்பா என்னோட பேர் இந்த பிசினெஸ் உலகத்துல பெஸ்ட்டா இருக்கும்”.      

“என்னோட சைட், என்னோட ஸ்டான்ட் சொல்லிட்டேன்! இனி நீ எடுக்குற முடிவு தான்!”

“மூணு நாள் டைம் கேட்ட நீ! இப்போவே எல்லாம் சொல்லிட்ட….”, என்று சந்தேகமாக கேட்டவள், “அப்போ நீங்க இதை முடிவு செஞ்சு தான் என்கிட்டே பேசினிங்களா”,

“இல்லை, நிச்சயமா இல்லை, முதல்ல எல்லாம் நான் எது செஞ்சாலும் ரொம்ப யோசிச்சு செய்வேன். இப்போல்லாம் அப்படி இல்லை”. 

“எனக்கு எதுவும் ஆறப்போடறது பிடிக்கறதில்லை……. லாபமோ நஷ்டமோ எது செஞ்சாலும் உடனே செய்யணும். சக்சஸ்ஸோட முதல் படி அதுதான். அந்த நிமிஷதுக்குள்ள சரியா முடிவு எடுக்கறவன் தான், இந்த உலகத்துல ஜெயிப்பான். இன்னைக்கு உலகம் அப்படி தான்”, என்றான்.

சொல்லும்போது அவன் முகத்தில் அவ்வளவு தீவிரம்…. ஜெயிக்க துடிக்கும் ஒரு இளைஞனின் ஆர்வம்.

ப்ரீத்தியும் தன்னுடைய எண்ணங்களை தூக்கி தூர வைத்தாள். வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்கும் அவனுக்கு தான் தடைகள் சொல்வது சரியில்லை என்று புரிந்தது.

ஆனாலும் உடனே எதுவும் சொல்லவில்லை. “நீங்க மூணு நாள் டைம் கேட்டிங்க, ஆனா உடனே டிசைட் பண்ணிட்டிங்க, எனக்கு இப்போ அந்த டைம் குடுங்க ஆனா உங்களுக்கு சாதகமா சொல்லுவேன்னு சொல்ல முடியாது”, என்று பிகுவாக சொல்ல.

“எடுத்துக்கோ, யோசி! நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகே….. நான் சொன்ன வழில போனா ஜெயிக்கிறது ஈஸ்சின்னு மனசுல ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன்”.

“அதுக்காக அது நடக்கலைன்னா ஜெயிக்க முடியாதுன்னு இல்லை எப்படியும் ஜெயிப்பேன்”, என்றான்.

“அம்மாடி! இது ரொம்ப ஓவர் கான்ஃபிடன்ஸ்……”, என்று ப்ரீத்தி கிண்டல் செய்தாள்.

“கான்ஃபிடன்ஸ் இருக்கலாம்! ஓவர் கான்ஃபிடன்ஸ் இருக்க கூடாது தான்!”, என்று ஒப்புக் கொண்டவன், “ஆனா சில சமயம் தேவை… என்னை மாதிரி எதுவும் இல்லாம ஜஸ்ட் ப்ளான்ஸ் மட்டும் வெச்சிக்கிட்டு இருக்குறவங்களுக்கு தேவை……”,

“அப்போ எதையும் பிளான் பண்ணி செய்யணும்னு சொல்றீங்க”,

“ஆமா, பிளான் பண்ணனும்”, என்று வடிவேலு பாணியில் ஹரி சொல்ல……

“அப்போ ஒரு லாங் டிரைவ் பிளான் பண்ணலாமா”, என்றாள் உற்சாகமாக.

“என்ன?”, என்று முறைத்தவன், “இப்போ தான் உங்க அப்பா இறங்கி வந்திருக்கார், அதை கெடுக்காத”,

“அதெல்லாம் முடியாது! ப்ரீத்தி பிளான் பண்ணிட்டா! லாங் டிரைவ் இப்போ, இந்த நிமிஷம்!”,

“எங்கே”, என்று ஹரி கேட்க, அவனுக்கு பதில் சொல்லாமல் அப்பாவிற்கு போன் செய்தவள், “அப்பா, ஹரி ஒரு லாங் டிரைவ் கூப்பிடறாங்க! போகட்டுமா!”, என்றாள்.

ஹரி தலையில் கை வைத்து, “ஐயோ, மறுபடியும் பிரச்சனையா?”, என்று ப்ரீத்தியைப் பார்த்தான். 

“அப்புறம் உங்களுக்கு பயந்து உடனே வேண்டாம்னு சொன்னாங்க! நான் தான் எங்கப்பா அனுப்புவார் அப்படின்னு சொன்னேன்! அனுப்புவீங்க தானே!”, என்றாள்.

“அந்த பையன் எனக்கு பயப்படறானா! என்ன கதை இது,  என்ன உன்னோட பிளான்”, என்று ராஜசேகரன் சரியாக கணித்துக் கேட்க…..

“அப்பா”, என்று போனிலேயே சிணுங்கினாள்.    

அவர் அந்த புறம் என்ன பேசினார் என்று தெரியாமல், “ஐயோ! அந்த மனுஷன் என்னை திரும்ப வில்லன் லுக்ள பார்ப்பாரே, இதுல நான் பயப்படரேன்னு என் இமேஜ் வேற டேமேஜ் பன்றாளே”, என்று ஹரி பரிதாபமாக ப்ரீத்தியைப் பார்த்து இருந்தான். 

Advertisement