Advertisement

அத்தியாயம் இருபத்தி நான்கு:

ஆத்திரம், ஆத்திரம், ப்ரீத்திக்கு கண்மண் தெரியாத கோபம், ஆத்திரம். என்ன திமிர்! செய்வதையெல்லாம் செய்து விட்டு என்ன தெனாவெட்டாக பேசுகிறான்…….

“நான் வரவேண்டுமா? வரவைக்கிறேன் உன்னை”, இங்கே அவனை வரவைக்க வேண்டும், என்ன செய்வது மனது தீவிரமாக யோசித்தது….

வழி தான் தெரியவில்லை…….

மூளையே வேலை செய்யவில்லை, சோர்ந்துத் தலையைப் பிடித்து அமர்ந்து விட்டாள்.  அவளின் பேச்சு சத்தம் கேட்காததால் ரகு ப்ரீத்தியைத் தேடி வந்தான்.

அவள் அமர்ந்திருந்த கோலம் ரகுவை அசைக்க, “என்ன ப்ரீத்தி? என்ன சொல்லு?”, என்று அருகில் அமர, அவனை நிமிர்ந்து பார்த்த ப்ரீத்தியின் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.

“என்ன ப்ரீத்தி, அந்த ஆட்டோக்காரன் பேசினதுல அப்செடா”, என்றான்.

“ப்ச், ஆமாம்!”, என்பது போல தலையாட்டியவள், “அப்பாக்கு அம்மாக்கு இது தெரியக் கூடாது. அவங்களுக்கு இந்த பிரச்சனை முன்னமே தெரியும் போல, எனக்குத் தெரியக் கூடாது வருத்தப்படுவேன்னு  சொல்லாம விட்டிருக்காங்க”,

“ஹரிக்கும் நிதினுக்கும் கூட தெரிஞ்சிருக்கு, அம்மா, அப்பாக்கு தெரிஞ்சிருக்குன்னா மாலு மூலமா தான் தெரிஞ்சிருக்கும்……. ஐ ஃபீல் ஷேம்ட், எனக்கு யாரையும் பார்க்கப் பிடிக்கலை”.

“என்ன ஃபோட்டோஸ் அது ரொம்ப பேடா….”, என்றான் ரகுவும் தயங்கி தயங்கி.  

“இல்லை, அப்படி இல்லைன்னு அடிச்சு சொல்றான் ஹரி! நத்திங் டு வொர்ரின்னு”,  

“அப்போ விடு ஏன் இவ்வளவு கவலைப்படற. மிஸ்டர் ஹரி என்ன சொல்றாங்க, என்ன மாதிரி ஃபோட்டோஸாம்”,

“நேர்ல வா சொல்றேன்னு  திமிரா பேசறான்! நான் அவன் சென்னை வந்தப்போ பார்க்கலையாம், வேணும்னா ஜெர்மனி வந்து பார்க்கிறதாம், எவ்வளவு திமிர் அவனுக்கு…. அவன் என்னவோ உலக மகா நல்லவன் மாதிரி அவங்கப்பாம்மா பேசறாங்க… என்னை டார்ச்சர் பண்றான்”, என்றாள் ப்ரீத்தி அவளையும் மீறி….

“அவனா வந்தான்…… அவனா லவ் பண்ணினான்…….. அவனாவே அப்பா சொன்னாங்கன்னு போனான்…… என்கிட்டே பேசவேயில்லை…….. நான் தான் துரத்தி துரத்தி பேசினேன். இப்போ என்கிட்டே சொல்லாம ஜெர்மனி போக ஒத்துக்கிட்டான்…….. அதனால நான் சென்னை வந்தப்போ அவனை பார்க்கலை…… இப்போ ஜெர்மனி வான்னு சொல்றான்!”, 

ஹரியிடம் அந்த ஃபோட்டோக்கள் இருக்கின்றன என்று சொல்ல ப்ரீத்திக்கு வாய் வரவில்லை….

அக்காவின் அருகில் உட்கார்ந்திருந்த ரகு, ஆதரவாக அவளின் கையைப் பற்ற அது சில்லென்று இருந்தது.

ப்ரீத்தியின் பயம் டென்ஷன் ரகுவிற்கு புரிந்தது. கடுமையான பயிற்சிக்கு பிறகு கூட இப்படி இருக்க மாட்டாள் என்று தெரியும்.

“என்ன கருமமடா இந்த காதல்!”, என்று தான் அந்த நொடியில் ரகுவிற்கு தோன்றியது. சந்தோஷமாக இருப்பதை விட்டு காதலிக்கிறேன் என்று வீணாக மன உளைச்சலை ஏன் இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

“என்ன பண்ணலாம்?”,

“தெரியலை!”,

“உனக்கு மிஸ்டர் ஹரி வேண்டாம்னு தோணுதா”, என்றான் ரகு.

“ப்ச், அப்படியெல்லாம் தோணலை, ஆனா எல்லாம் அவன் இஷ்டத்திற்கு பண்றான். அவன் பேசுனா, நான் பேசணும்! அவன் வேண்டாம்னா, நான் பேசக் கூடாது! எரிச்சலா வருது…”,

“இப்போவே இப்படின்னா, கல்யாணம் பண்ணினா எப்படி டாமினேட் பண்ணுவார். அவர் உனக்கு வேண்டாம் ப்ரீத்தி!”,

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “லைஃப்… லவ்……. மேரேஜ்…… எல்லாம் கமிட்மென்ட் தான் ரகு……. ஐ அம் கமிடட் டு ஹிம்…. அவன் சரியானவனோ! தப்பானவனோ! என் வாழ்க்கை அவனோட தான்…… அண்ட் அவன் தப்பானவன் கிடையாது..”,

“அவனும் என்னை இப்படி டாமினேட் பண்ண ட்ரை பண்ணினாலும் என்னை விட்டு வேற போகமாட்டான், ஏன் பார்க்கக் கூட மாட்டான்…. ஹி இஸ் மோர் கமிடட் டு மீ”, என்றாள். ஆனா அந்த கமிட்மென்ட் ஸ்டார்ட் ஆனது கண்டிப்பா அந்த ஃபோட்டோனால என்று நினைத்துக் கொண்டாள், வெளியில் சொல்லவில்லை.   

“சொல்லப் போனா எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு… ஆனா அட்ஜஸ்ட் ஆக மாட்டேங்கறோம்…….”,

“என் இஷ்டத்துக்கு அவன் இருக்கணும்னு நான் நினைக்கிறேன், அவன் இஷ்டத்துக்கு நான் இருக்கணும்னு அவன் நினைக்கிறான்”.

“நம்ம மண்டபத்துல இருந்து எல்லோரும் வர்றதுக்கு முன்னாடி சென்னை போயிடலாமா? எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கலை, எல்லோரும் என்னை தப்பா பார்த்திருப்பாங்களோன்னு பயமா இருக்கு”, என்றாள் சொல்லும் போதே கண்களில் கண்ணீர்.

நேரம் பார்த்தான் ரகு, நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருக்க, அப்போது கோவை எக்ஸ்பிரஸ் கோவையிலிருந்து சென்னைப் போக இருந்தது.

“போகலாம்! கிளம்பு!”, என்று எழுந்து நின்றான்…

“அப்பா, அம்மா கேட்டா?”,

“யார் கேட்டாலும் நான் பேசிக்கறேன்! உன் மொபைல் என்கிட்டே குடு!”, என்று வாங்கிக் கொண்டான்.

ப்ரீத்தி உடை மாற்றி வர, வெளியே காவலுக்கு இருந்தவரிடம் சொல்லி கிளம்பிவிட்டனர்.

அவர்கள் வெளியே வரவும், ஜானின் ஆட்டோ மறுபடியும் சரியாக அந்த புறம் வந்தது…… “நீ இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறாயா”, என்பது போல ரகு ஜானை முறைக்கவும்…

“இங்க ஒருத்தர் இறங்கினாங்க இப்ப தான்”, என்றான்.

“ஏறுடா!”, என்று ரகுவிடம் சொன்ன ப்ரீத்தி, அவளும் ஏறி அமர்ந்து கொண்டாள்.

ரயில்வே ஸ்டேஷன் என்று ரகு சொல்ல, அவர்கள் ஊருக்கு கிளம்புகிறார்கள் என்று தெரிந்தும், ஒன்றும் செய்ய இயலாதவனாக ஜான் ஆட்டோவை எடுத்தான்.

இடம் வந்து அவர்கள் இறங்கியதும், ப்ரீத்தியாகவே, “இப்போ தான் எனக்கு நீ செஞ்ச காரியமே தெரியும்! அந்த ஷாக்ல இருந்து என்னால வெளில வரமுடியலை. இப்போ என்னால யோசிக்க கூட முடியலை. கண்டிப்பா சீக்கிரம் உங்க பேரன்ட்ஸ் கிட்ட பேசறேன், கொஞ்சம் டைம் குடு”, என்றாள்.

ஐயோ! விஷயமே தெரியாத அவளிடம் தானாக விஷயத்தை சொல்லிவிட்டது இன்னும் ஜானை வருதப்படுத்த, “சாரி, சாரி, ப்ளீஸ்! என்னை மன்னிச்சிடுங்க”, என்றான்.

அந்த மன்னிப்பு வேண்டுதலில் உண்மை மட்டுமே இருந்தது.

“கண்டிப்பா நான் பேசறேன்!”, என்று மெதுவாக அவனைப் பார்த்து ப்ரீத்தி புன்னகைக்க……

“ஐயோ! இந்த பெண்ணுக்குத் தான் என்ன கொடுமை செய்து விட்டோம்!”, என்று ஜானின் மனதில் மீண்டும் அவனைக் குறித்தே காழ்புணர்ச்சி தோன்றியது.

ரகு பெற்றோரிடம் தொலைபேசியில் அழைத்து சொல்லியிருந்தான், “மண்டபத்துல நடந்ததுக்கு ப்ரீத்தி ரொம்ப அப்செட்பா….. அப்படியே இங்க இருந்தா எல்லோரும் கேட்பாங்க. நான் அவளைக் கூட்டிக்கிட்டு சென்னை போறேன்”, என்றான்.

“ஹப்பா!”, என்று இருந்தது ராஜசேகரனுக்கு, ப்ரீத்தியை இங்கே வைத்துக் கொண்டு அவளுக்கு எதுவும் தெரிந்து விடுமோ என்று பயந்து கொண்டே இருப்பதற்கு, அவள் ஊருக்கு போகிறாள் என்பது நிம்மதியை தர, “சரி!”, என்றார்.

“நானும் அம்மாவும் நைட் கிளம்பி வர்றோம்!”,

“அப்பா, நாங்க சின்னப் பசங்களா, நாங்க இருந்துக்கிறோம்! நீங்க மெதுவா எல்லா வேலையும் முடிச்சிட்டு வாங்க! அப்புறம் இங்க எல்லோரும் என்னவோ ஏதோன்னு நினைக்கப் போறாங்க…. ப்ரீத்தியை நான் பார்த்துக்கறேன்!”, என்றான்.

ரகுவும் மூன்றாவது வருட படிப்பில் இருக்கிறான், சிறு பையன் அல்லவே, தோற்றத்திலும் பார்த்தால் ப்ரீத்திக்கு அண்ணன் போல தான் இருப்பான்.   

என்னவோ தன் மகன் பெரிய மனித தோரணையாக பேசுவதாக ராஜசேகரனுக்கு தோன்ற… மறுத்துப் பேசாமல், “சரி”, என்றார்.

ராஜசேகரை தனக்கு வில்லன் என்று ஹரி நினைத்திருக்க, அவனுக்கே தெரியாமல் அடுத்த வில்லனை ஹரி உருவாக்கி விட்டான்.

“எவண்டா அவன்? என் அக்காவை இவ்வளவு கஷ்டப்படுத்தறவன், என்னடா இந்த காதல்?”, என்பது போல தான் ரகு வின் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.

அவர்கள் ட்ரைனில் அமர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ப்ரீத்தி உறங்கிவிட, 

“இந்த ஹரி என்ன…… ஒரு வேலையா? ஐ அம் கமிட்டட் டு ஹிம்ன்னு   ப்ரீத்தி சொல்ல…..”,

இந்த எண்ணம் தோன்றிய அடுத்த நிமிடம், யோசிக்கவேயில்லை ரகு, உடனே ஹரிக்கு அழைத்தான்.

“சொல்லு ஹனி! ஜெர்மனி எப்ப வர்ற?”, என்றான் ஹரி எடுத்தவுடனே.

“அவ வரமாட்டா!”, என்றான் ரகு.

“நீ…….. நீயேன் பேசற, ப்ரீத்தி போன்ல இருந்து”, என்று ஹரி பயந்து கேட்டான்.

“ரொம்பப் பேசிவிட்டோமோ?”, என்று ஹரியே நினைத்துக் கொண்டிருக்க, இதில் ரகு பேசவும்…. ப்ரீத்திக்கு என்னவோ ஏதோவென்று பயந்து விட்டான்.  

“அவளை உயிரோட கொல்லாம விட மாட்டீங்களா நீங்க?….. என்ன பெரிய காதல்…. உங்களைப் பார்த்ததுக்கு அப்புறம் நான் வாழ்க்கையில காதலிக்கவே கூடாது அப்படின்ற முடிவுக்கு வந்துட்டேன்……”,

“உங்களைப் பார்க்கறதுக்கு முன்னாடி வரைக்கும் ப்ரீத்தி எவ்வளவு சந்தோஷமா இருந்தா தெரியுமா? இப்போ எப்போப் பார்த்தாலும் அவ முகத்துல சந்தோஷமே இல்லை! அப்பாவோட சண்டை! அம்மாவோட சண்டை! சரி, உங்களோட சந்தோஷமா இருக்காளா? அதுவும் கிடையாது!”,

“என்ன சொன்னா தெரியுமா? என்கிட்டே இன்னைக்கு உங்களை, அவன் என்னை டார்ச்சர் பண்றான்னு சொல்றா! எவ்வளவு டென்ஷன் இருந்தா சொல்லுவா”,

“அப்படி மிஸ்டர் ஹரி உனக்கு தேவையா? வேண்டாம்! விட்டுடுன்னு சொன்னா…..”,

“நோ! ஐ அம் கமிட்டட் டு ஹிம்! அப்படிங்கறா, நீங்க என்ன வேலையா ப்ரீத்தி கமிட் பண்ணிக்க, இல்லை அரேஞ்ட் மேரேஜ்ஜா……. இனிமே இவர் என் கணவர்ன்னு மனசுல அசைன் பண்ணிக்க, அப்புறம் மனசுல காதல் வர!”,

“இல்லையே! இது காதல் தானே! இப்போவே கமிட்மென்ட்ன்னு  வந்தா  அப்புறம் உங்க மீதி வாழ்க்கை, இது உங்க காதலுக்கு கிடைச்ச தோல்வி தான்!”,

ஹரியின் முகத்தில் அறைந்தது ரகுவின் பேச்சு……   

“சாரி, டு சே திஸ்! ஆனா இது தான் உண்மை! இந்த காதல்னால அவ மனசளவுல சந்தோஷமா இருந்ததை விட டென்ஷன் தான் அதிகம்”,

“இனிமே நீங்க ப்ரீத்திக்கு டென்ஷன் குடுக்கறதை என்னால பார்க்க முடியாது! எதுன்னாலும் நீங்க நேர்ல வாங்க……”,

“ப்ரீத்தியே வர்றேன்னு சொன்னாலும் நான் விட மாட்டேன்”,

“என்ன உங்கப்பா போய்….. இப்போ நீயா?”,

“அப்படித் தான் வெச்சிக்கங்க….”,

“எங்க கூட உங்க சண்டை இருந்தா பரவாயில்லையே, ப்ரீத்தி கூட எதுக்கு சண்டை போடறீங்க…. நீங்க என்ன பண்றீங்கன்னு நீங்களே யோசிங்க”.

“அவ என்கிட்டே சொல்லலை, பட் என்னால கெஸ் பண்ண முடியும்! அவ அந்த ஜான் சொன்னதுனால அப்செட்! அதே சமயம் உங்க கிட்ட பேசினதுக்கு அப்புறம் இன்னும் அப்செட்….!”,

“உங்களையெல்லாம் பார்த்து நான் வாழ்க்கையில இந்த காதல், கன்றாவி எல்லாம் பண்ணக் கூடாதுன்னு முடிவே பண்ணிட்டேன்….”, என்று சொல்லும் போதே டவர் இல்லாமல் போன் கட் ஆனது! என்ன என்று ரகு ஆராயும் போதே சார்ஜ் இல்லாமல் போன் ஆஃப் ஆனது……!

“போடா! இவங்களும் இவங்க காதலும்!”, என்று நினைத்தவன், “சொல்லிட்டேன்! இனி மிஸ்டர் ஹரி என்ன பன்றார்னு பார்போம்!”, என்று கூடவே நினைத்துக் கொண்டான்.  

இங்கே இந்தியாவில் அது மதிய நேரம், ஜெர்மனியில் இதைவிட மூன்றரை மணிநேரம் குறைவு…….  காலையில் அலுவலகம் ஆரம்பித்து ஹரிக்கு சிறிது நேரமே ஆகியிருந்தது. ரகுவின் பேச்சு அவனை மிகவும் அசைத்து இருந்தது.

எல்லோரிடமும் ஹரி எப்போதும் ஈசியாக பழகிவிடுவான்.  அங்கிருந்த தனது ஹையர் அஃபிசியளிடம் எப்படியோ பேசி கன்வின்ஸ் செய்து, அவர் மூலமாகவே டிக்கெட் எடுத்து, மூன்று நாள் விடுப்பில் சென்னை கிளம்பிவிட்டான்.

தான் ஒழுங்காக ப்ரீத்தியிடம் பேசியிருந்தால், இந்த செலவே இல்லை என்று நொந்து கொண்டே…. அங்கிருந்து ஒன்பது மணிநேரப் பயணம்….

அதெல்லாம் சென்னை செல்லும் வரை மட்டுமே, அதன் பிறகு எண்ணம் முழுவதும் ப்ரீத்தியே…… ப்ரீத்தியின் வீடு முன்பும் நின்று விட்டான். அதிகாலை ஆறு மணி… அவள் பிராக்டிசிற்கு அப்போது இருக்கும் மனைலையில் வருவாளா? மாட்டாள் என்று தெரிந்தும் என்று பார்த்திருந்தான்…..

கதவு திறக்கவேயில்லை. இப்போது அவளை எப்படிப் பார்ப்பது என்றும் தெரியவில்லை…… வீட்டின் பெல் அடிக்கவும் தயக்கமாக இருந்தது… அவளின் அப்பா வந்து திறந்தால் என்ன செய்வது என்று.

அவர்கள் திருமணத்தில் இருந்து இன்னும் வந்திருக்க மாட்டார் என்று ஞாபகத்தில் இல்லை.

அவசரமாக கிளம்பியதால் ஹரியின் போனும் ஸ்விட்ச் ஆஃப்…

கிட்ட தட்ட ஒரு மணிநேரம் நின்றிருந்தான்…. ரகு தான் எழுந்து வந்து கதவை திறந்து, பேப்பர் கீழே கிடக்கிறதா என்று மேலேயிருந்து எட்டிப் பார்த்தான்.

அப்போதும் ஹரியை அவன் கவனிக்கவில்லை….. பேப்பர் இருப்பதை பார்த்து எடுக்க கீழே வந்தான்…. எடுத்த பிறகு நிமிர்ந்து வீதியைப் பார்க்கவும் அங்கே ஒரு ஷோல்டர் பேகுடன் ஹரி நின்று கொண்டிருந்தான்.

ஒரு நொடி அப்படியே பார்த்த ரகு, பிறகு மகிழ்ச்சியை முகத்தில் காட்டி, அவசரமாக கேட்டை திறந்து, “வாங்க”, என்றான்.

“ப்ரீத்தியை வரச் சொல்லேன் ரகு! உங்கப்பா என்னைப் பார்த்தால் டென்ஷன் ஆவார்!”, என்றான்.

“அட, வாங்க சார்! இன்னும் அப்பா திட்டுவார், டென்ஷன் ஆவார்ன்னு கதை பேசிகிட்டு”, என்று சகஜமாக ஹரியின் தோளில் இருந்த பேகை கழட்டினான்.   

“நேற்று அப்படிப் பேசினான்! இன்றைக்கு இப்படி பேசுகிறான்! என்பது போல ஹரி பார்க்க,

“எனக்கு  ப்ரீத்தி சந்தோஷமா இருக்கணும்! அவ்வளவு தான்! வாங்க!”, என்று சொல்லி அழைத்துப் போனவன்…..

“உட்காருங்க!”, என்று சொல்லிக் காஃபி போடறேன்!”, என்று கிட்சன் உள் போகப் போக….

வீட்டின் அமைதியே வீட்டில் யாரும் இல்லை என்பது போல ஹரிக்கு உணர்த்த……

“யாரும் இல்லையா?”,

“அம்மாவும், அப்பாவும், கோவைல தான் இருக்காங்க. இன்னைக்கு நைட் கிளம்பி, நாளைக்கு தான் வருவாங்க!”,

“ப்ரீத்தி…..!”, என்றான் அவசரமாக ஹரி, மீண்டும் அவளைப் உடனே பார்க்க முடியாதோ என்பது போல.

“தூங்கறா!”, என்று சொல்லவும் தான் ஆசுவாசப்பட்டு அமர்ந்தான்.

கிட்சன் உள் நுழைந்த ரகு, “உங்களுக்கு காஃபியா? டீயா?”, என்றான்.

“உனக்கு எது ஈசியோ, அது!”, என்று ஹரி சொல்லவும்..

“ஓகே! அப்போ காஃபி!”, என்று சொல்லியபடி திரும்பியவன்,

“அது ப்ரீத்தி ரூம்! நீங்க போனா நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்!”, என்று கூடவே சொல்லிப்  போகவும்,

ஹரி, புன்னகை முகமாக ப்ரீத்தியின் ரூமை திறந்தான்.

ஏ சீ யின் குளிர் ரூம் திறந்த உடனே தாக்கியது, “இவ்வளவு ஏ சீ ஏன் வெச்சிருக்கா”, என்று யோசித்துக் கொண்டே ப்ரீத்தியைப் பார்க்க அவளின் முகம் மட்டுமே தெரிந்தது. ராஜாய்க்குள்,  உடம்பு முழுவதும் மறைந்து இருக்க, நல்ல உறக்கத்தில் இருந்தாள்,

போய் அருகமர்ந்து அவளை ரசித்துப் பார்த்தான்…. முகமும் கூந்தலும் மட்டும் தெரிய…. சற்று நீண்டு இருந்த கூந்தலில் கையை நுழைத்துப் பார்த்தான்.

“சில்கி ஹேர், இவளோட ஸ்கின் டெக்ஸ்சர் கூட”, என்று பலமுறை மனதில் நினைத்ததை இப்பொழுது உறுதி செய்ய கூந்தலுக்குள் அலைந்த கையை எடுத்தவன், கிடைத்த வாய்ப்பை விட மனமில்லாமல் அதனுள்ளே திரும்பவும் நுழைத்து, இன்னொரு கையால் ப்ரீத்தியின் மென்மையான சருமத்தை உணர கைகளால் அவளின் கன்னத்தை வருடிக் கொடுத்தான்.

அந்த இதமான வருடலுக்கு கண்விழித்த ப்ரீத்தி, “யார்?”, என்பது போல பார்க்க…….. ஹரியைப் பார்த்ததும் அவனை சற்றும் எதிர்பாராமல் கண்களை அகல விரித்தாள்.

“ஹாய் ஹனி! எ ஸ்வீட் ரொமேன்டிக் மார்னிங்!”, என்று ஹரி வசீகர புன்னகைப் புரிந்தான்.

ப்ரீத்தி எழ முயல, முடிந்தால் தானே! ஹரியின் ஒரு கை கூந்தலில் அலைய, மறு கை கன்னதின் மென்மையை உணர்ந்து கொண்டிருக்க,

ஹரியைத் தள்ளி விட்டு தான் எழவேண்டும்.  ப்ரீத்தியும், அதற்கு மனமேயில்லாமல் ஹரியைப் பார்த்து படுத்துக் கொண்டே இருந்தாள்.

பல மாதங்களுக்கு பிறகு பார்க்கிறாள்.

ஆனாலும் உதடுகள், “அது என்ன ஃபோட்டோ”, என்று தான் ஹரியைப் பார்த்து கேட்டது.   

“நீ என்னை நம்பலையா?”, என்றான்…..

நேற்று ஜானை பார்த்ததில் இருந்து மனம் தவித்த தவிப்புக்கு, ஹரியின் கைகளின் ஆதரவு ப்ரீத்திக்கு மிகவும் தேவையாய் இருந்தது. இருந்தாலும்  ஹரியை நேர் பார்வைப் பார்த்து,

“நீ இப்படிப் பண்ணுவேன்னு நான் என் கனவுல கூட நினைச்சது இல்லை…. எப்படித் தப்பா பிஃஹேவ் பண்ணியிருக்க…..”,

“என்ன தப்பு பிஃஹேவ் பண்ணினேன்?”,

“என் ஃபோட்டோ! எனக்குத் தெரியாம தினமும் பார்த்துட்டு இருந்திருக்க! அது தப்பு தானே…!”,

ஹரி அவளின் குற்றச்சாட்டை எதிர் கொண்டு பார்த்தான். “அப்போ நாம லவர்ஸ் கூட இல்லை…. அந்த மாதிரி என்னைப் பார்த்தது தப்பு தானே!”,

“எந்த மாதிரி?”, என்றான் ஹரி.

“எனக்குத் தெரியலை!”, என்று ப்ரீத்தி சொல்லிக் கண்களை மூடிக் கொள்ள, அதில் இருந்து கண்ணீர் பெருகியது.

“ஷ், ப்ரீத்தி!”, என்றவன், அவளை அப்படியே தூக்கி அணைத்துக் கொள்ள, தேம்பி தேம்பி அழத் துவங்கினாள்.  

“நீ என்னைத் தப்பா நினைக்கிறியா?”, என்றான் மீண்டும் ஹரி.

“நீ அந்த ஃபோட்டோ பார்த்துட்டு இருந்ததுனால தான் என்னைத் தேடி வந்தியா?”,

“இப்போ உன் ப்ராப்லம் என்ன? ஃபோட்டோ பார்த்ததா இல்லை அதனால தான் உன்னை தேடி வந்தேன்னு நீ நினைக்கிறதா?”,

“தெரியலை!”, என்று சொல்லி மீண்டும் தேம்பித் தேம்பி அழ…….

ஹரி அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

Advertisement