Advertisement

அத்தியாயம் இருபத்தி ரெண்டு:

மனம் முழுவதும் ஒரு மகிழ்ச்சி, உற்சாகம் ப்ரீத்தியின் முகம் மலர்ந்து இருக்க…….

சாதனா போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அண்ணனுக்கு அனுப்பிய  வண்ணம் இருந்தாள்.

அதனால் சாதனா நின்றபடி இருக்க, சாதனா இயற்கையிலேயே அழகான பெண் என்பதால் எல்லோர் கவனத்தையும் கவர்ந்தாள். நிதினின் அண்ணன், பெரியப்பா மகன், அவனும் மருத்துவனே, அவனுடைய கவனத்தை சாதனா சற்று அதிகமாகவே கவர்ந்தாள்.  

ப்ரீத்தியின் புகைப்படம் வந்த வண்ணம் இருக்க, ஹரியின் மனமும் நிறைவாக இருந்தது.

எல்லாம் அடுத்த நாள் மறையப் போவது தெரியாமல்.

நிறைய நிதினின் நண்பர்கள், மாளவிகாவின் நண்பர்கள், திருமணத்திற்கு வந்திருந்தனர்.

ப்ரீத்தியை இரண்டு வருடத்திற்கு முன் பார்த்தவர்கள் தானே. இப்போது ப்ரீத்தி ஆல் இந்தியா ஃபிகர், ஆர்வமாக அவளிடம் பேசினர்.

யார் புதிதாக பேசினாலும் ராஜசேகர் தடை சொல்லவில்லை, ஆனால் கூடவே இருந்தார்.

அதனால் யாராலும் ஒரு வார்த்தை கூட அதிகமாக பேசமுடியவில்லை.

“ஹாய், ஹலோ, எப்படி இருக்கீங்க, கங்க்ராட்ஸ், கிரேட் அச்சீவ்மென்ட்! எங்க வீட்ல உங்க அட்வர்டைஸ்மண்ட் நல்ல ரீச். எல்லார்கிட்டயும் உங்களை எனக்கு தெரியும்னு சொல்லியிருக்கேன்”, என்பது மாதிரியான பேச்சுக்கள் மட்டுமே.

எல்லோரும் வரவும், அவளால் அதன் பிறகு ஹரியின் பெற்றோருடனோ, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றோ அருகில் இருந்து பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை.

அன்றைய பொழுது அப்படியே சென்றது.

அடுத்த நாள் காலை தான் திருமணம் அன்றும் சாதனாவும் அப்பாவும் அம்மாவும் வரவேண்டும் என்று நிதின் கட்டயாமாக சொல்லியிருந்தான்.

ஹரி போன் பண்ணுவோமா ப்ரீத்திக்கு என்று நினைத்தவன், வேண்டாம் எப்படியும் அவளின் அப்பாவோ, அம்மாவோ கூட இருப்பார்கள் என்று விட்டு விட்டான்.

“பேசியிருக்கலாம்!”, என்று பிறகு நினைத்து நினைத்து வருத்தப்படுவான் என்று நினைக்கவேயில்லை.     

மறுநாளும் சாதனாவும், லக்ஷ்மணனும், புனிதாவும் திருமணத்திற்கு வந்திருந்தனர். இன்று சாதனா இன்னும் பளிச் உடைகளில் இருக்க, ப்ரீத்தியே, “நீ ரொம்ப அழகா இருக்க சாதனா?”, என்றாள்.

“ஐயோ ப்ரீத்தி, எங்கண்ணா கூட போட்டோ பார்த்துட்டு அப்படி தான் சொன்னான்”, என்று சொன்னாள்.

“அதுக்குள்ள உங்க அண்ணனுக்கு உன் போட்டோ அனுப்பிட்டியா”,

“ஐயோ சொதப்பறேன், உங்க போட்டோ பார்த்துட்டு நான் நேத்து வாட்ஸ் அப் ல அனுப்பினேன்”, என்றாள்.

“இந்த வேலை வேற செஞ்சியா நீ……. உன்னை!”, என்று ப்ரீத்தி போலியாகக் கோபப்பட….

அதை அப்படியே மறுபடியும் ஸ்னேப் எடுத்து அனுப்பினாள்….. சாதனா என்று அவளை கோபமாக பார்க்க முயன்று முடியாமல், ப்ரீத்தி சிரிக்க அதையும் எடுத்து அனுப்பினாள்.

“போதும், கல்யாணத்தைப் பாரு!”, என்று சாதனாவை திசை திருப்ப முயன்றால்,

“இல்லை அண்ணி! நிஜமா அண்ணா சொன்னான்!”, என்று சாதனா சொல்ல,

“அய்யோ நம்பிட்டேன், உங்கண்ணன் என்னை அழகுன்னு சொன்னாங்களா……. கதை விடாத…… ஒரு தடவை கூட என்கிட்டே சொன்னது இல்லை. நிஜமா எனக்கு இன்னும் புரியவேயில்லை, ஏன் உங்க அண்ணனுக்கு என்னை பிடிச்சதுன்னு. இங்க கோவைல இருந்தப்போ ஜஸ்ட் த்ரீ டேஸ் தான் ஃபேஸ் டு ஃபேஸ் பார்த்தேன், அதுக்கு முன்னாடி ஒரு வாரம் தூரமா பார்த்து இருக்கேன் இந்த நிதினோட…….. மாலு பின்னாடி அப்படி சுத்துவாங்க நிதின்”.

 “என்னை பார்த்த முதல் நாளே அப்படி திட்டினாங்க, உன்கிட்ட ஒரு பையன் வம்பு பண்ணினான்னு நான் அடிக்க போனேன், அப்போ நீ பெரிய ரௌடியா கேட்டாங்க”,

“நீங்க போனீங்களா”, என்று சாதனா ஆச்சரியமாக கேட்டாள்.

“ஆமாம்”, என்றாள் ப்ரீத்தி…… அன்றைய நிகழ்வுகளை நினைவு கூறவும் சாதனாவிற்கு அதெல்லாம் ஞாபகம் வந்தது.

“அந்த பையன் ஜான், அப்புறம் காலேஜ்ல ஹெச் சோ டி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணினான்….”,

“அப்போவும் என்னை அப்படி திட்டினாங்க, என்னோட ஹேர் கட் பார்த்துட்டு பையன் மாதிரி இருக்கேன்னு சொன்னாங்க, அப்புறம் ப்ரின்சி கிட்ட போனா போகுதுன்னு என்னை கூட்டிட்டு போய் என் மேல தப்பு இல்லைன்னு சொன்னாங்க. அப்போவும் அந்த வம்பு பண்ணின பையன் முகத்தை நான் உடைச்சிட்டு தான் வந்தேன், அப்போவும் என்னை திட்ட தான் செஞ்சாங்க”,

“அப்புறம் ரகுக்கு உடம்பு சரியில்லைன்னு நாங்க சென்னை வந்துட்டோம்”.

“ஆனா ஒரு வருஷம் கழிச்சு என் முன்னாடி திடீர்ன்னு பெரிய ரொமேண்டிக் பையனா நிக்கறாங்க, ஏன்னு தெரியவேயில்லை”, என்று ஹரி தன்னை தேடி வந்ததை பிட்டு பிட்டு வைத்தாள்.

ஹரிக்கு ஏன் தன்னைப் பிடித்தது என்ற கேள்வி எப்போதும் ப்ரீத்தியின் மனதின் ஓரத்தில் இருக்கும். முதல் பார்வையில் ஹரி தன்னை மிகவும் அலட்சியமாக நீயெல்லாம் ஒரு ஆளா என்பது போல பார்த்த பார்வை, இன்னும் அவளின் ஞாபகத்தில் அழியா சித்திரம், கூட நீ பையன் மாதிரி இருக்குற என்ற பேச்சு…..   

யாரென்று தெரியாத போதே ப்ரீத்தி தனக்காக இவ்வளவு பிரச்சனைகளை இழுத்துக் கொண்டது சாதனாவுக்கு அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது.

“தேங்க்ஸ் ப்ரீத்தி!”, என்றாள் மனதார.

இதில் அந்த புகைப்பட விஷயம் தெரியாது. உண்மையில் ஹரியை ப்ரீத்தியின் பால் இழுத்து வந்தது அதுதான். அது யாருக்குமே தெரியாது.                 

இருவரும் தனியாக அமர்ந்து இந்த அரட்டையில் ஈடுப்பட்டனர்.பிறகு கெட்டிமேளம் கொட்டவும் தான் அவர்களின் கவனம் திரும்பியது.

மங்கள நாண் பூட்டிய பிறகு ஹரியின் பெற்றோர்கள் கிளம்ப முற்பட, “அம்மா ஒரு பத்து நிமிஷம், பத்து நிமிஷம்”, என்று சாதனா நேரத்தை கடத்திக் கொண்டு இருந்தாள்.

அதற்குள் ஒரு வயதான பெண்மணி மாலினியின் அருகில் வந்து உட்கார்ந்தார். நிதினின் பாட்டி அவர், “மெதுவாக நமக்கு தெரிஞ்சவங்களா இவங்க?”, என்று ஹரியின் குடும்பத்தைக் காட்டி மாலினியிடம் கேட்டார்.

“நிதின் ஃபிரண்ட் ஹரி, அவங்க அப்பா, அம்மா, தங்கச்சி”, என்று மாலினி சொல்ல,

“ஓ! ஹரி அப்பா அம்மாவா! நேத்து இருந்து உங்க கூட இருந்தாங்களா உங்க சொந்தம்னு நினைச்சேன்”,

“சுத்தி வளச்சு பேச என்ன இருக்கு? நம்ம பெரியவன் பையனுக்கும் பொண்ணு பார்த்துட்டு இருக்கோம். அதான் பொண்ணு நல்லா இருக்கே நம்ம சொந்தமான்னு கேட்க வந்தேன்”, என்றார் நீட்டி முழக்கி…..

கூடவே அவர்களின் உடை அணிமணிகள் என்று புனிதாவையும் சாதனாவையும் அளவெடுக்க… அந்த பாட்டியின் பார்வை தங்களின் செல்வ நிலையை எடை போடுவதை புனிதா கண்டு கொண்டார். ஏனோ அது அவருக்குப் பிடிக்கவில்லை.

அந்த பார்வை எடை போடுவது மட்டுமல்லாமல் நாங்கள் உங்களை விட மேலே, என்று அப்பட்டமாக சொல்லியது.      

“ஹரியைத் தெரியாதா? அருமையான பையன்! அவன் தங்கச்சின்னா எங்களுக்கு ரொம்ப சந்தோஷம், பொண்ணு டாக்டர்க்கு படிக்குதாமே சொன்னாங்க”, என்றார்.

இதை சொன்னவர்கள், ஹரியின் தங்கை என்று சொல்லியிருக்க மாட்டார்களா என்ன?

இவர்கள் ஏன் உங்களோடு இருக்கிறார்கள் என்பதற்கான மறைமுக கேள்வி இது, ராஜசேகரனுக்கோ மாலினிக்கோ புரியவில்லை. அவர்கள் அதிகம் வெளியூரில் இருந்து விட்டதால், வட்டார வழமைகள், பேச்சு சாதுரியங்கள் தெரியவில்லை. ஆனால் லட்சுமணனுக்கும் புனிதாவிற்கு புரிந்தது.

இந்த மாதிரியான பேச்சுக்கள் எப்போதும் புனிதாவிற்கு பிடிக்காது.

“ப்ரீத்தி, நம்ம பொண்ணுக்கு ரொம்ப சிநேகிதம்”, என்று புனிதா பதில் சொன்னார். அதனால் தான் இவங்களோட இருக்கோம் என்ற மறைமுக பதில்.

“பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கறீங்களா, ஏன்னா?……”, என்று அந்த பாட்டிப் பேச்சை வளர்க்க,        

“பார்த்துட்டோமே”, என்றார் புனிதா.

“எப்போதடா இவ, எனக்குத் தெரியாம பார்த்தா!”, என்று லட்சுமணனே விழித்தார். அவரை கண்களால் அடக்கிய புனிதா, வாயைத் திறக்காதீர்கள் என்று சமிஞ்சை காட்டி,

அந்த அம்மாள் சம்மந்தம் பேசுவது பிடிக்காமல் வேண்டுமென்றே சொன்னார்.

அந்த அம்மாள் அப்போதும் நிறுத்தாமல் தங்களின் குலப் பெருமை, குடும்பப் பெருமை என்று பேச,

கல்யாண வீடு, அவர்களின் பேரனுக்கு கல்யாணம், மாலினியின் அண்ணன் பெண்ணை குடுக்கிறார்கள் என்பதால் புனிதா அமைதி காத்தார்.

ஏனென்றால் அந்த பாட்டி பேசிய விதம், எங்கள் வசதிக்கு உங்களை மாதிரி ஆட்களை பெண் கேட்பது அதிகம், உனக்குக் கொடுக்க கசக்கிறதா என்பது போல தான் இருந்தது.

நிதினின் காதல் திருமணம் பற்றி அறிந்தவர் புனிதா, அதனால், “இல்லைங்கம்மா, நாங்க பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிறோம், ஏன்னா எப்போ வேணா பசங்க காதல்ன்னு வந்து நிற்பாங்க. அதுக்கு முன்னாடி நம்மளே பண்ணிடறது நல்லதுன்னு பேசி முடிசிட்டோம்”, என்று அவரின் பேரனை ஒரு குட்டு குட்டி பேச்சை முடிக்க பார்க்க,

“என்ன பொண்ணு குடுத்து, பொண்ணு எடுக்கறீங்களா, இது என்ன புதிதாக?”, என்பது மாதிரி ப்ரீத்தியின் மொத்த குடும்பமும் அதிர்ந்தது.

அந்த அம்மாள் அதற்கு ஒரு படி மேலே, “நம்ம பசங்க நல்லா இருந்தா தான், இந்த காலத்துப் பொண்ணுங்க விடறது இல்லையே”, என்று அதற்கும் குட்ட,

“ஐயோ, இந்த அம்மாள் பேச்சை முடித்தால் போதும்”, என்று,

“ஆமாம் மா! நீங்க சொல்றதும் சரிதான்”, என்று சொல்லி, “வாங்க போகலாம் என்று கணவனையும் மகளையும் அழைத்துக் கொண்டு இந்த அம்மாளிடம் இருந்து தப்பித்தால் போதும் என்பது போல மாலினியிடம் ராஜசேகர் ப்ரீத்தி ரகு எல்லோரிடமும் விடைபெற்றுக் கிளம்பி விட,

“ஐயோ, இந்த பேச்சு ப்ரீத்தியை பாதித்ததா”, என்று சாதனா அவசரமாக ஆராய்ந்தாள்.

ப்ரீத்தியை மட்டுமல்ல மொத்த குடும்பத்தையும் அந்த பேச்சு பாதித்து இருந்தது.

“அவங்க பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கப் போறாங்க”, என்பது ஒரு செய்தி, அதையும் விட, “நம்ம பசங்க சும்மா இருந்தாலும் இந்த பொண்ணுங்க விடறதில்லை”, என்ற அந்த பாட்டியின் பேச்சுக்கு புனிதா சரி யென்று சொல்லியிருக்க,

ராஜேகரன், “பார் உனக்கு கிடைத்தப் பெயரை”, என்று மகளைக் கண்களால் குற்றம் சாட்ட…..

தந்தையின் பார்வையைப் பார்த்த ப்ரீத்தி, என்ன இது என்பது மாதிரி ஓய்ந்து போனாள்…… ம்கூம், இதற்கு மேல் என்னால் யாரிடமும் போராட முடியாது என்ற மனநிலைக்கு தள்ளப் பட்டாள். விளையாட்டில் மிகுந்த போராட்ட குணம் கொண்டு வெற்றியை நோக்கி கடைசி நொடி வரை போராடுபவளுக்கு, மனது மிகவும் பாரமானது.

புனிதா அந்தம்மாவை விட்டுப் போனால் போதும் என்று வேகமாக ஒரு தலையசைவோடு மகளையும் கணவனையும் கூட்டிக் கொண்டு விரைந்து விட்டார்.

“கொஞ்சம் நேரம் இந்த அம்மா இருக்குற இடத்துல இருக்க முடியலையே, எப்படிடா இந்த அம்மா வீட்டுக்கு பொண்ணை குடுக்க?”, என்பது மாதிரியாக.

ப்ரீத்தி அதன் பின் யாரோடும் ஒரு வார்த்தையும் பேசவில்லை, சாதனா அம்மாவிடம் பேசி, அப்படி எல்லாம் இல்லை, அந்த பாட்டிக்காகச் சொன்னது என்று சொல்ல பல முறை முயன்றாள்.

ஃபோன் எடுக்கவே இல்லை…….. ப்ரீத்தி மிகவும் அப்செட்…. ஹரியின் அம்மா ஏன் அப்படி சொன்னார்கள் என்று  யோசிக்க முயலக் கூட இல்லை.

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருந்த நிலையில், தனியாக உட்கார முடியாத சூழ்நிலை, சில சடங்குகள் சம்பிரதாயங்கள் வேறு இருந்ததால் மாளவிகாவின் வீட்டினர் வேறு ராஜசேகரனையும் மாலினியையும் எல்லாவற்றிற்கும் அழைக்க,

“நான் ரகுவை கூட்டிட்டு வீட்டுக்கு போறேன் மா”, என்று ப்ரீத்தி சொல்லிக் கிளம்பினாள்.

“எல்லோரும் கேட்பாங்க?”, என்று மாலினி சொல்ல……….

“எனக்கு போகணும்! அனுப்ப முடியாதுன்னா நான் சென்னை போறேன்!”, என்று ப்ரீத்தி சொன்ன விதம்,

ராஜசேகரை மறுப்பின்றி, “அவளைக் கூட்டிட்டு போ ரகு!”, என்று சொல்ல வைத்தது. எதற்கும் ப்ரீத்தி ராஜசேகரைப் பார்க்கவில்லை.

அதன் கொண்டே அவருக்கு தெரிந்து விட்டது ப்ரீத்திக்கு அவர் மீதும் கோபம் என்று……

அவசரமாக ப்ரீத்தியிடம், “நான் என்ன பண்ணினேன்! உனக்கு என் மேல என்ன கோபம்! உனக்காகத் தான் நான் அந்த பையனோட பேரன்ட்ஸ் கிட்ட கூட சகஜமா பேசினேன். அந்த பையனோட அம்மா பேசினதுக்கு நான் என்ன பண்ணுவேன்”, என்று சொன்னார்.

“அவங்க பேசினாங்க, பேசலை, அதை நான் பார்த்துக்கறேன், ஆனா எப்போப் பார்த்தாலும், நீங்க ஏன் நான் ஏதோ தப்பு செஞ்சிட்ட மாதிரியே பார்க்கறீங்க, பார்க்காதீங்க, it gives me a guilty concious”, என்று கோபமாக பொறிந்து, அந்த இடத்தை விட்டு அகல, ரகு தான் வேகமாக பின் சென்றான்.

“இருடா, என்ன கார் இருக்குது, கொண்டு போய் விட யாரவது இருக்காங்களா பார்க்கிறேன், வீட்டு சாவி…..”, என்று ராஜசேகரன் பெண் பின்னால் செல்ல,

“அப்பா! நான் சின்ன பொண்ணு இல்லை! என்னை பார்த்துக்கத் தெரியும், என்னை மட்டுமில்ல உங்களையும் நான் பார்த்துக்குவேன், தயவு செஞ்சு போங்க”, என்றாள்.

ப்ரீத்தியின் கோபம் பார்த்த மாலினி, “வாங்க, எல்லோரும் நம்மளை பார்க்கிற மாதிரி இருக்கு. கல்யாண வீட்டுல கலாட்டா வேண்டாம்”, என்று ராஜசேகரனை இழுத்துக் கொண்டு போனார்.

மண்டபத்தை விட்டு ப்ரீத்தியும் ஹரியும் வெளியே வந்து ஒரு ஆட்டோவைக் கை காட்டி நிறுத்தி, ஆட்டோ வருமா என்று கேட்கவில்லை, எங்கு செல்ல வேண்டும் என்று கூட சொல்லவில்லை, ப்ரீத்தி உள் ஏறி அமர்ந்து கொண்டாள்.

ரகு தான் போகவேண்டிய இடத்தை சொல்லி, “ஆட்டோ அங்க போகுமா?”, என்று கேட்டு இடத்தை சொல்லி ஏறி அமர்ந்தான்.

ஆட்டோக் காரன் திரும்பி ஒரு முறை பின் அமர்ந்தவர்களைப் பார்த்தான்,

“என்ன?”, என்பது போல ரகு கேட்கவும், ஏதோ சொல்ல வந்துத் தயங்கி பின்பு ஆட்டோ கிளம்பியது.

சற்று பெரிய சாலை, ட்ராஃபிக் குறைவாக இருக்க….. ஓரமாக ஆட்டோ நின்றது.

“என்ன அண்ணா? ஏன் நிறுத்திட்டீங்க?”, என்று ரகு கேட்க,

“என்னை என் அப்பா அம்மாவோட சேர்த்து வைக்கறீங்களா?”, என்றான் அந்த ஆட்டோக்காரன்.

“யாரிது, என்கிட்டயா பேசறாங்க”, என்பது போல ப்ரீத்தி பார்க்க….  

“இந்த மூணு வருஷமா என்னை சேர்க்கலை, படிப்பைக் கூட மூணாவது வருஷத்தோட நிறுத்திட்டேன். என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லிச் சேர்த்து விடறீங்களா”, என்று வேண்டும் குரலில் அந்த ஆட்டோகாரன் ப்ரீத்தியை நோக்கி மன்றாடினான்.

அப்போதும் ப்ரீத்தி, “யார்”, என்பது போல புரியாமல் பார்தாள்.

தாடிக்குள் புதைந்து இருந்த முகத்தை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை,

“யார் நீங்க?”, என்று கேட்க,

“நான் ஜான் என்னைத் தெரியலையா?”, என்றது அந்த குரல்.

காலையில் தான் சாதனாவிடம் முன்பு நடந்ததை நினைவு கூர்ந்து இருந்ததால், “ஜான்”, என்ற பெயர், யார் அவன் என்று தெளிவாகக் காட்டிக் கொடுத்தது.

பிரச்சனை தான் அவனோடு, ஆனால் அவனின் பெற்றோர்கள் ஏன் சேர்க்கவில்லை, தான் ஏன் அவனை மன்னிக்க வேண்டும் என்று ப்ரீத்தி புரியாமல் பார்த்து,

“நான் எதுக்கு உன்னை மன்னிக்கணும்?”, என்று கேட்டாள்.   

ராஜசேகரனும் ஹரியும் எந்த விஷயம் அவளுக்குத் தெரியக் கூடாது என்று போராடிக் கொண்டிருந்தார்களோ??? அதை நோக்கி ப்ரீத்தி செல்ல ஆரம்பித்தாள்.

Advertisement