Advertisement

அத்தியாயம் இரண்டு:

ஹரி அந்த இடத்தை விட்டு அகன்று சிறிது தூரம் வந்தவுடன், சாதனா அவனை தேடிக் கொண்டு வந்தாள்.

“என்ன ஆச்சு அண்ணா, உன் போனுக்கு”, என்றாள் கலங்கியவளாக.

“ஏன் சாதனா?”,

நண்பர்கள் மத்தியில் இருந்த ஹரியை கைபிடித்து தனியாக அழைத்து போனவள், “உனக்கு ட்ரை பண்ணினேன், போன் ஸ்விட்ச் ஆஃப்”, 

“சார்ஜ் போயிடுச்சு”, சொல்லி……. “என்ன”, என்றான்.  

“அது….. அது….”,

“சொல்லு”,

கண்களில் இருந்து கர கர வென்று கண்ணீர் வழிய பதறினான். “என்னடா என்ன ஆச்சு….?”,

“நான் நடந்து வந்துட்டு இருக்கும் போது என் மேல இடிக்கற மாதிரி ஒருத்தன் வந்தான்… வேகமா விலகிட்டேன்….. வேகமா நடக்கும் போது பின்னாடியே வந்து என் டிரஸ் பேக் சைட் ல இருந்த நாட் இழுத்து விட்டுட்டான் அண்ணா……”,

“என்ன?”, என்று அதிர்ந்து நின்றான் ஹரி…. 

சாதனா அணிந்திருந்த சுரிதாரின் கழுத்தின் பின்புறத்தில் டிசைனிற்காக கயிறினால் முடிச்சு இருக்க, அதை இழுத்து அந்த முடிச்சை அவிழ்த்து இருந்தான்.

“அவனை சும்மா வா விட்ட நீ…. உன் கூட ஃபிரண்ட்ஸ் யாரும் இல்லையா….”,

“இருந்தாங்க, அவன் யாருன்னு தெரியலை, உடனே வேகமா நடக்க ஆரம்பிச்சிட்டான்….. நாங்க ஷாக் ஆகி நின்னுடோம். அப்புறம் என்னோட ஒரு ஃபிரண்ட் யாருன்னு பார்க்க கூட வேகமா பின்னால போனா”, என்று சாதனா சொல்லும் போதே……

அந்த தோழி வந்துவிட்டாள்……

“யாரு அவன்?”, என்று ஹரி முகம் இறுகிக் கேட்கவும்…….

“நீங்க தான் அவனை போக விட்டுட்டீங்களே”, என்று அந்த பெண் குறைபட,

“என்ன”, என்றான் புரியாமல்……

“இங்க நடந்ததை இன்னொரு பொண்ணு பார்த்திருப்பா போல, அவனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டு இருந்தா, நீங்க வந்தீங்க, அந்த பொண்ணுகிட்ட என்னன்னு கேட்டீங்க, அவ சொல்லாத போது நான் எப்படி சொல்றதுன்னு விட்டுடேன்…. அதுவுமில்லாம அந்த பையனை உங்களுக்கு தெரிஞ்சது இல்லையா அதான் அப்புறம் சொல்லிக்கலாம்ன்னு விட்டுட்டேன்…….”, 

ஹரியின் முகம் இன்னும் இறுகி விட்டது……. தலையை அழுந்த கோதிக் கொண்டான்.

“சரி, வா, கிளம்பலாம்”, என்றான்.

நண்பர்களிடம் சொல்லிக் கொள்ள கூட இல்லை…. “இதை பத்தி யார் கிட்டயும் பேசாத……. வீட்ல சொல்லாத”, என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்கு சென்றான்.   

கண்டிப்பாக் வீட்டிற்கு தெரிந்தால் அம்மாவும் அப்பாவும் பயந்து விடுவார்கள். ஸ்ரீ ஹரியும் , சாதனாவும் ,  லக்ஷ்மணன், புனிதா தம்பதியினரின் புதல்வர்கள்.

அம்மாவும் அப்பாவும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். நடுத்தர குடும்பம், பிள்ளைகளின் படிப்பை அவர்களின் எதிர்காலத்திற்கு பெரிய ஆதாரமாக நம்பி, சேமிப்பு என்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் சம்பாதனை முழுவதையும் அவர்களின் படிப்பிற்காக கணக்கு வழக்கு இல்லாமல் செலவு செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

சொந்த வீடு கூட கிடையாது…. பெரிய பள்ளிகளில் அவர்களின் சக்திக்கும் மீறி படிக்க வைத்தார்கள். மக்களும் நன்றாக படித்தார்கள். மக்கள் இருவரும் கவர்மென்ட் கோட்டா என்றாலும், அங்கு பீஸ் அதிகமே….. ஹரி மட்டுமன்றி இப்போது சாதனாவும் மருத்துவம்  சேர்ந்திருப்பதால் செலவுகள் எக்கச்சக்கம்…….

எஜுகேஷன் லோன் ஹரிக்கு கிடைத்திருந்தது. ஆனால் சாதனாவிற்கு இன்னும் இல்லை……. சாப்பாட்டிற்குப் போக அத்தியாவசிய தேவைகளை கூட குறைத்துப் படிப்பு செலவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

இப்படி படிக்க வைத்துக் கொண்டிருக்க, இப்படி ஒரு நிகழ்வை தெரிந்தால் மனமொடிந்து போவர்…..

அந்த பையன் எந்த நோக்கத்தோடு செய்தான் என்று தெரியாது. எப்படி செய்தாலும் இது மிகவும் தப்பான ஒரு செயல்…. ஆனால் சில சமயம் விளையாட்டு போல அல்லது பெட் கட்டி என்று ஏதாவது நடந்திருந்தால்…….

அவனுக்கு தெரிந்த வரை ஜான் சற்று விளையாட்டு பையன் தான் மூன்றாம் ஆண்டு மாணவன். சற்று எப்போதும் உதார் காட்டிக் கொண்டே திரிவான்.

மாணவப் பருவத்தில் இருக்கும் ஸ்ரீ ஹரி எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தான்…… தப்பாக நடந்த ஒரு விஷயம், ஆனால் தன்னுடைய அணுகுமுறையால் மேலும் தப்பாகி விடக் கூடாது என்று தங்கையை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.

எத்தனை கோபம் வந்தாலும் எப்போதும் நிதானம் தவறாதவன் ஹரி…… மிகவும் பொறுப்பான பிள்ளை…. நண்பர்களோடு இருக்கும் போது தான் சற்று வாய் பேசுவான். மற்றபடி பேச்சுக்கள் கூட குறைவு தான். 

ஹரியின் அந்த கம்பீரம், அவனின் படிப்பு, அவனின் தோற்றம் என்று அத்தனையும் நிறைய நண்பர்களை பெற்று தந்தது. அவனை மரியாதையாகவும் பார்க்க வைத்தது.

இதுவரை அவன் கல்லூரியில் அவன் தான் டாப்பர்…… யுனிவர்சிட்டி ராங்கிற்கு உழைத்துக் கொண்டிருந்தான்.     

“சும்மா விளையாடி இருப்பாங்க விடுடா”, என்று தங்கையையும் சமாதானப்படுத்தியவன்…… “நான் இந்த வருஷம் முடிச்சிடுவேன், அப்புறம் நீ தான் அங்க படிப்ப…. அந்த பையன் முகம் காட்டமா தான போனான் விட்டுடு…..”,

“மேல பிரச்சனையாக்கி விட்டுக்காத……”,

தங்கையிடம் சொல்லிவிட்டான், ஆனால் அந்த ஜானை அப்படியே விட்டுவிட முடியாதே.       

“என்ன ஹரி, ஒரு மாதிரி டென்ஸ்டா இருக்க”, என்று அப்பாவும் அம்மாவும் கேட்ட போது….

“நோ மா, ஐ அம் ஆல்ரைட்….”, என்று விட்டான். ஆனால் மனது கொதித்துக் கொண்டிருந்தது…… என்ன தைரியம் அந்த ஜானிற்கு என்பது போல…..

அடுத்த நாள் விடுமுறை….. நண்பர்கள் அழைப்பை ஏற்கவில்லை….. நிதின் வீட்டிற்க்கே வந்துவிட்டான். “என்னடா ஏதாவது பிரச்சனையா?”, என்று அவன் கேட்ட போது அவனிடம் கூட சொல்ல மனம் வரவில்லை.  

மறுநாள் காலை கல்லூரிக்கு சென்று அவனின் பைக்கை நிறுத்திய போது வேறு புறமாக மாளவிகா ஸ்கூட்டியை நிறுத்த அவளின் பின் புறம் இருந்து ப்ரீத்தி இறங்கினாள்.

பில்லியனில் இருந்து ஏதோ ஆண்கள் இறங்குவது போல காலை போட்டு இறங்கினாள்.

இன்றும் பேன்ட் ஷர்ட் தான்……

“என்ன உடை இவளது…… ஆண்கள் போல பேன்ட் ஷர்ட், அது கூட ஓகே! ஆனால் அவளின் தலையலங்காரம், அந்த ஆண்களை போன்ற கட்டிங் ஹரிக்கு பிடிக்கவில்லை”.

மாளவிகாவும் ப்ரீத்தியும் தன் அருகில் வரும்வரை காத்து இருந்தவன்….. அவர்கள் அருகில் வந்ததும்,

மாளவிகாவிடம், “நீ போ!”, என்றான்.

ப்ரீத்தியும் கூடப் போக, அவளை பார்த்து, “நீ இரு!”, என்றான்.

மாளவிகா தயங்கி நிற்கவும்…. “நீ போ, நான் வர்றேன்!”, என்று ப்ரீத்தி சொல்லவும் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

அப்போதும் தூரமாக போய் இருவரும் பார்வையில் படுவது போல மாளவிகா நின்று கொண்டாள்.

“நேத்து அந்த பையனை ஏன் அடிக்க போன”, என்றான் ஹரி,

இன்று அருகில் யாரும் இல்லாததால், “ஒரு பொண்ணு  கிட்ட மிஸ்பிஃகேவ் பண்ணினான், அதுதான்!”, என்றாள்.

தலையை அழுந்த கோதி விட்டவன், “அது என்னோட சிஸ்டர். இங்க தான் மெடிசின் ஃபர்ஸ்ட் இயர் படிக்கறா”, என்றான்.

“ஒஹ்!”, என்றவள், “டூ பேட், அவனை எல்லாம் சும்மா விடக் கூடாது! என்ன தைரியம்?”, என்று ஆத்திரப்பட….

“வேண்டாம், எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத, விட்டுடு”……

“ஏன்? ஏன்?”, என்று ப்ரீத்தி கோபமாக பேச,

“வேண்டாம்னா விட்டுடு! என் சிஸ்டர்ன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்காது, தெரிஞ்சிருந்தா செஞ்சிருக்க மாட்டான்… பட், நான் இப்போ எதுவும் சொல்லப் போறதில்லை. டைம் கிடைக்கும் போது நான் பார்த்துக்குவேன்…… சில சமயம் தெரியாத மாதிரி போறது நல்லது…. தெரிஞ்சிடுச்சு அது கஷ்டம்”, என்றான்.

“என்ன பேச்சு இது, அப்போ உங்க சிஸ்டர் இல்லாம வேற யார்கிட்டயாவது பண்ணியிருந்தா, உங்களுக்கு ஓகே வா”, என்று கோபப்பட்டாள்.

ஹரிக்கு ப்ரீத்தியிடம் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை…. ஆனாலும் விளக்கினான். “எந்த அனாலிசிசும் என்னால முடியாது இப்போ, என்னோட ஃபைனல் செம் இப்போ. எந்த பிரச்சனையும் எனக்கு வேண்டாம். லெட் மீ ஹேண்டில் திஸ் நீ தலையிடாத”, 

“எப்படி தெரியாத மாதிரி போக முடியும், ஏற்கனவே நேத்தே நான் அவன்கிட்ட சண்டை போட்டேன்”,

“என்ன சொன்னான்….”,

“உனக்கு செய்யலைன்னு கோபமா, நீயும் அந்த மாதிரி டிரஸ் போட்டுட்டு வான்னு எப்படி பேசறான், அதான் அடிக்க போனேன்”, என்றாள்.

“என்னவோ நீ விட்டுடு, நான் அந்த பையனை பார்த்துக்குவேன்”,

“இந்த விஷயத்துக்காகன்னு அவனுக்கு தெரியலைன்னா, இன்னொரு பொண்ணு கிட்ட அப்படி நடக்கக் கூடாதுன்னு அவனுக்கு எப்படி தோணும். இதை சொல்லி கண்டிங்க”,

“அது முடியாது……… ஜான் நிச்சயமா இன்னைக்கு காலேஜ் விட்டு ஒழுங்கா போக மாட்டான். ஆனா இது தான்னு அவனுக்கு தெரியாது…… என் சிஸ்டரை இதுல இழுத்து விட முடியாது…… நீயும் ஒதுங்கிக்கோ, வீணா பிரச்சனை பண்ணிக்காத…….”,

“அது முடியாது என்னால, நேத்தே இஸ்ஸு ஸ்டார்ட் ஆகிடுச்சு. நான் ஒண்ணும் யார் கிட்டயும் சொல்லிக்கலை. ஆனா என்கிட்டே அதை காட்டி வம்பு பண்ணினான். சும்மா விடமாட்டேன்”.

“அவன் உன்னை விட சீனியர்”,

“இருந்தா, நேத்தே அவனை ஒரு வழி செஞ்சிருப்பேன், நடுவுல புகுந்து நீங்க தான் கெடுத்தீங்க”,

“இவ்வளவு தூரம் சொல்கிறேன், இந்த பெண் கேட்க மாட்டேன் என்கிறாளே”, என்ற கோபம் தலைதூக்க….

“ஏய், என்ன பண்ணுவ நீ, உன்னால என்ன பண்ண முடியும்……”,

“நான் என்ன பிளான் பண்ணியா பண்றேன், எனக்கு என்ன தோணுதோ செய்வேன்”, என்றாள்……

ப்ரீத்திக்கு எரிச்சலாக இருந்தது ஹரியின் நிதானத்தை பார்த்து, நேற்று மாலையே தெரிந்திருக்க வேண்டும்……. இந்நேரம் அந்த ஜானின் கையையாவது உடைத்திருக்க வேண்டாமா என்று ஆத்திரமாக வந்தது.

“சும்மா ஆம்பிளை பசங்க மாதிரி டிரஸ் பண்ணினா, அந்த மாதிரி ஹேர் கட் பண்ணினா பையன் ஆகிட முடியாது…… வீணா பிரச்சனையை இழுத்து விட்டுக்காத…..”,

ப்ரீத்திக்கு அவளை, அவளின் உடையை பேசியது ஆத்திரம் பொங்க…….

“நான் ஆம்பிளை பசங்க மாதிரி டிரஸ் பண்றேன், பண்ணலை……. நீ ஆம்பிளை பையன் தானே…… நீ முதல்ல இதை தட்டிக் கேளு”, என்று ஒருமைக்கு தாவவும்……..

“ஏய், என்ன பேசற!”, என்று அவளை அடிக்க போவது போல ஹரி அருகில் சென்று கட்டுப்படுத்தி நின்றான்…….

“நிஜமாவே செமி தான் நீ, பசங்க கிட்ட என்ன வார்த்தை பேசணும் பேசக் கூடாதுன்னு கூட தெரியலை…. அறிவுகெட்ட…”, என்று சொல்ல வந்த வார்த்தையை முயன்று அடக்கினான்.    

கண்களால் நேற்று போல இன்றும், “போடா”, என்று சொல்லிப் போனாள் ப்ரீத்தி……. அவளுக்கு கோபம் அடங்கவில்லை, எப்படி தங்கையிடம் ஒருவன் இப்படி நடந்து கொண்டான் என்று தெரிந்தும் இப்படி இருக்கிறான்……..

இதில் என்னை ஆண் போல என்று சொல்லுகிறான்………….. கோபம் கண்மண் தெரியாத கோபம்……

வேகமாக ப்ரீத்தி நடக்க, மாளவிகா பின்னே வேகமாக போனாள்….. “என்ன சொன்னாங்க ப்ரீத்தி ஹரி சார்”,

“சார், மோர்ன்ன கொன்னுடுவேன், பேசாம வாடி!”, என்று தன் கோபத்தையெல்லாம் மாளவிகாவிடம் காட்டினாள் ப்ரீத்தி. 

வெகுநேரம் ப்ரீத்திக்கு மனது சமன்படவில்லை. என்ன தைரியம் என்னை ஆண் போல என்று சொல்லுகிறான். கண்கள் கலங்க ஆரம்பித்து. தனிமை தேவையாய் இருக்க…. “வந்துடறேன்”, என்று மாளவிகாவிடம் சொல்லி ரெஸ்ட் ரூம் சென்றாள்.

அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தன்னை பார்த்தாள். தான் பெண் போல இல்லையா? என்ன உடை அணிவது? என்ன ஹேர் ஸ்டைல்? என் விருப்பம்…. எவனும் அதை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று கோபம் பொங்கியது.

சிறு வயதில் இருந்து அவளின் அம்மா இந்த ஹேர் கட் தான் செய்து விடுவார்…… கொஞ்சம் பெரிய பெண்ணான பிறகு, “முடி வளர்த்துக்கலாம் ப்ரீத்தி”, என்று அம்மா சொன்ன போது….. அவளுக்கு இதுவே சௌகர்யமாக பட, “வேண்டாம்மா”, என்று விட்டாள்.

பிள்ளைகளின் விருப்பத்தை பெரிதாய் மதிக்கும் பெற்றோராய் இருக்க, விட்டு விட்டனர். அப்பாவிற்கு அரபு நாட்டில் வேலை….. இஞ்சினியர்.

பிள்ளைகள் பெரியவராகும் வரை அம்மா சென்னையில் இவர்களை பார்த்துக் கொண்டு இருந்தார். இவள் ஒருத்தி, தம்பி ஒருவன்…

ப்ரீத்தி பிளஸ் டூ முடித்தவுடன், அவளை சென்னையில் இருக்கும் கல்லூரி ஒன்றில் ஹாஸ்டலில் சேர்த்து விட்டு…. தம்பியை அங்கிருக்கும் பள்ளியில் பிளஸ் ஒன் ஹாஸ்டலில் சேர்த்து விட்டு அவர் ப்ரீத்தியின் அப்பாவிடம் சென்று விட……

ப்ரீத்திக்கு ஹாஸ்டல் பிடிக்கவேயில்லை…. இங்கே கோயம்பத்தூரில் ப்ரீத்தியின் அம்மா வழிப் பாட்டி வீட்டில், இவளின் மாமாவின் பெண்ணான மாளவிகாவும் இவளை ஒத்த படிப்பை படித்துக் கொண்டிருக்க……

அதிர்ஷ்டவசமாக இங்கே படித்துக் கொண்டிருத்த படிப்பை நிறுத்த, இரண்டாம் வருடத்தில், ஜனவரி மாதத்தில் இங்கே மாற்றிக் கொண்டு வந்து விட்டாள்.

இயல்பிலேயே சுதந்திரமாக வளர்ந்து விட்டவள் ப்ரீத்தி….. ஸ்குவாஷ் ப்ளேயர் கூட…. நேஷனல் லெவல் பிளேயர், இன்னும் பெரிதாக வெற்றியை ருசிக்கவில்லை. அதனால் அடையாளம் காணப்படவில்லை. மிகுந்த ஈடுபாடு, எந்நேரமும் அதன் பயிற்சி, அதனால் இந்த உடைகளே அவளுக்கு வசதி….

இப்போது ஹரியின் ஆண் போல என்ற வார்த்தை அவளை காயப்படுத்தியது… காலையில் கூட அவளின் பாட்டி, “இது என்ன ப்ரீத்திலக்ஷ்மி, இப்படி பசங்க மாதிரியே பேண்டு சொக்கா போட்டுக்குற”, என்று கேட்ட போது கூட….

“போங்க பாட்டி”, என்று அசால்டாக தான் சொல்லி வந்தாள்.

ஏனோ ஹரி சொன்னது கோபத்தைக் கொடுத்து….. “நான் இப்படி தான்!”, என்ற ஒரு ஆங்காரத்தையும் கொடுத்தது.

சற்று சமன்பட்டு வெளியே வந்தாள்…. கிளாஸ் ஆரம்பித்திருக்க, அந்த நீண்ட காரிடாரில் ப்ரீத்தி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

இவள் செல்வதை அவனின் க்ளாசில் இருந்து பார்த்த ஜான்……. வேகமாக எழுந்து ப்ரீத்தியின் பின் வந்தவன்……….

“நில்லு, என்னவோ பெரிய இவ மாதிரி நேத்து கூட்டம் சேத்து என்னை அடிக்க வந்த…. நான் என்ன உன்கிட்டயா வம்பு பண்ணினேன்…… வேற பொண்ணு கிட்ட பண்ணினா உனக்கு என்ன வந்தது….. நேத்து சீனியர் வந்ததுனால தப்பிச்ச, இல்லைனா”, என்று அவன் உதார் காட்ட……

“இல்லைனா என்ன பண்ணியிருப்ப”, என்று ப்ரீத்தி கேட்கவும்……..

“ஒரு சீனியரை இன்சல்ட் பண்ணற நீ”, என்று சொன்ன ஜான்…….

“என்ன செய்யறேன்னு பாரு”, நிமிடத்தில் அதை சீனியர் ஜுனியர் பிரச்சனையாக்கி விட்டான்…. அதுவும் அவன் சிவில் டிபார்ட்மென்ட்….. ப்ரீத்தி ஐ டீ……..

“இந்த டிபார்ட்மென்ட்களுக்குள்ளும் சற்று ப்ரச்சனையிருக்க….. பிரச்சனையை வேறு மாதிரி திசை திருப்பினான் ஜான்.

ப்ரீத்தி கல்லூரிக்கு புதிது என்பதால் அவளை பற்றியும் யாருக்கும் தெரியாததால், ஏதோ அவளின் தப்பு போல தோற்றமளித்து…. அதுவும் அவளின் தோற்றம் ஆண்கள் போல உடை ஏதோ அவள் அடாவடி செய்பவள் போல ஒரு தோற்றத்தையும் கொடுத்தது.  

மதியம் நெருங்கும் முன்னரே அவளின் துறை ஹெச் ஓ டி அவளை அழைத்து விட…..

ப்ரீத்தி அவரை காண சென்றாள்….. “காலேஜ் வந்து ஒரு வாரம் தான் ஆகுது, அதுக்குள்ள நீ என்ன பிரச்சனை பண்ற”, என்றார் எடுத்த எடுப்பில்.

“நான் ஒன்னும் பண்ணலை சார்”, என்று அவள் பணிவாகவே பதில் கொடுக்க……..

“உன் கிளாஸ்ல எத்தனை பேர் இருக்காங்க. அவங்களை பத்தி ஒன்னும் கம்ப்ளைன்ட் இல்லையே. நீ ஒன்னும் செய்யலைன்னா நீ ஏன் பிக்சர்ல வர்ற….. காலேஜ் வந்தமா போனமான்னு ஒழுங்கா இருக்கணும். அனாவசியமா எந்த பிரச்சனையும் செய்யக் கூடாது”, என்று கடுமையாக வார்ன் செய்தார்.

ப்ரீத்தி அதற்கு மேல் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை….. அவள் மேல் என்ன கம்ப்ளைன்ட் என்றே அவளுக்கு தெரியவில்லை.

ப்ரீத்தியின் முக பாவனைகள், அவள் நின்றிருந்த தோற்றம், எல்லாம் அவளை ஒரு திமிர் பிடித்த பெண்ணாக உருவகப் படுத்த… அந்த ஹெச் ஓ டி அவளை தாளித்து எடுத்தார்.

கூட இருந்த ஒரு லேடி அசோசியேட், “இனிமே செய்ய மாட்டேன்னு சொல்லி, சாரி கேளும்மா”, என்று சொல்ல…..

“நான் ஒன்னும் செய்யவேயில்லை எப்படி சாரி கேட்கறது. நான் செய்ய மாட்டேன்னு சொல்லி சாரி கேட்டா நான் செஞ்ச மாதிரி ஆகிடாதா”, என்று கேட்கவும்…..

“ஹெச் சோ டி முன்னாடி எதுத்துப் பேசாத”, என்று அவர் வேறு ஒரு பக்கம் அட்வைஸ் செய்யவும்….

ப்ரீத்தி நொந்து விட்டாள். அவர்கள் சொல்லியதை எதையும் காதில் வாங்காமல் அவர்கள் பேசிய பேச்சுக்களை எல்லாம் கேட்டு கொண்டு நின்றிருந்தாள்.

“ஒரு அப்பாலஜைஸ் லெட்டர் எழுதிக் கொடு”, என்று ஹெச் சோ டீ சொல்லவும்…….

“நான் எதுவும் செய்யவில்லை, ஆனாலும் ஹெச் சோ டீ என்னை அப்பாலஜி லெட்டர் எழுதிக் கொடுக்க சொன்னதால் கொடுக்கிறேன்”, என்று எழுதிக் கொடுத்து அந்த இடத்தை விட்டு வெளியே வந்துவிட…

ஹெச் ஓ டீ ப்ரீத்தியின் மேல் மிகுந்த கோபத்தில் இருந்தார்.

விஷயம் தெரிந்த மாளவிகா…. “ஏன் ப்ரீத்தி பிரச்சனை, ஒரு மன்னிப்பு  லெட்டர் தானே கொடுத்துடு……. வீணா ஏன் பிரச்சனை செஞ்சிக்கற”, என்று அட்வைஸ் செய்ய……..

“நீ உன் வேலையை பாரு”, என்று முகத்தில் அடித்தார் போல பதில் சொல்லி….. “மதியம் நான் வீட்டுக்கு போறேன், நீ பஸ்ல வா”, என்று ஸ்கூட்டி சாவியை அவளிடம் வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

“இரு, நானும் லீவ் எழுதிக் கொடுத்துட்டு வர்றேன்”, என்று மாளவிகா சொல்ல சொல்ல…… வண்டி எடுக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்க…..

மாளவிகா வேறு தோழியிடம் சொல்லிப் ப்ரீத்தியின் பின் ஓட….

“இவள் என்ன செய்கிறாள், தான் கிளப்பிவிட்ட பிரச்சனை என்ன ஆகிற்று”, என்று பார்ப்பதற்காக வந்த ஜான்……

“என்ன வாங்கிக் கட்டிக்கிட்டயா….. உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்க்கணும்”, என்று மிதப்பாய் சொன்னான்.

“நீ என்னவோ சொல்லிக்கொள்”, என்று ப்ரீத்தி நடந்துவிட….

ப்ரீத்தி எதிர்புறமாக நடப்பதை பார்த்து, ஜான் மாடி ஏறி அவன் வகுப்பிற்கு போகப் போக, 

திரும்பி அவன் போவதை பார்த்து, இரண்டு மூன்று படி அவனை ஏற விட்டவள்….. யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்து…… ஏறிக் கொண்டிருந்த ஜானின் கால்களுக்கு நடுவில் வேகமாக இவள் கால் விட….

தடுமாறி படியில் அப்படியே முகம் மோத விழுந்தான் ஜான்.

இவள் ஒன்றும் நடக்காதது போல அந்த இடத்தை விட்டு வேகமாக மாளவிக்காவை அழைத்து விரைந்து விட…..

ஜானின் மூக்கில் அடிப்பட்டு ரத்தம் ஒழுகியது…. அந்த பக்கம் வந்த மாணவர்கள் பார்த்து அவனை தூக்கி விட…… முகத்தில் மோசமாக அடிப்பட்டு இருந்தது.

ஜானிற்கு என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை…… அவனே தடுமாறி விழுந்தது போல அவனுக்கு தோன்றியது…. ப்ரீத்தி சென்றதை தான் அவனே பார்த்தானே.

அவனை அங்கிருந்த பிசிக்கல் டைரக்டரின்  ரூமிற்கு பார்ஸ்ட் எய்ட் செய்வதற்காக அழைத்து சென்றனர்.

அதற்குள் ப்ரீத்தி இப்படி ஹெச் சோ டியிடம் திட்டு வாங்கியது அவளின் துறை முழுக்க பேச்சாக இருக்க…. அவளின் துறை சீனியரான ஹரிக்கும் அது தெரிந்தது.

மதியம் லஞ்ச் இண்டர்வலில் அந்த ஜானை தேடி ஹரி செல்ல….. அவன் முகத்தில் அடிப்பட்டு மாணவர்கள் அவனை ஹாஸ்பிடல் அழைத்து சென்றிருப்பது தெரிந்தது.

இந்த ப்ரீத்தி தான் ஏதோ செய்திருப்பாள் என்று ஹரியின் உள் மனது சொன்னது.

“எல்லாம் நானும் ரௌடி தான்னு கிளம்பிடுறாங்க…… இண்டர்னல்ஸ், லேப், எல்லா மார்க்சும் குறைபாங்களே”, என்று நினைப்பதை தவிர ஒன்றும் செய்ய விழையவில்லை.

அவன் எதுவும் ஹீரோயிசமாக செய்ய முடியாது. நல்ல படியாக படித்து முடித்து வேலையில் அமர வேண்டும். அதுவும் அடுத்த வாரம் கேம்பஸ் இன்டெர்வியுவிற்காக வரும் இந்த சமயத்தில் ஒன்றும் செய்ய முடியாது.

கம்பனிக்காரன் செலக்ட் செய்வது மட்டுமல்ல, இங்குள்ள ப்ரொபஸர் ஹெச் ஓ டி எல்லோர் ஒபினியனும் சில சமயம் கேட்பார்கள்….

இப்போது அவள் கேட்ட மாதிரி எதுவும் செய்து நிச்சயம் எதிர்காலத்தை இழக்க முடியாது…..

அப்பா அம்மாவின் உழைப்பு அவனின் படிப்பு. அது கெடுவது போல சிறு செயல் கூட செய்ய மாட்டான்.

“என் தங்கச்சி, நான் பார்த்துக்கறேன், நீ விட்டுடுன்னு சொன்னா பெரிய இவ மாதிரி இழுத்து விட்டுகிட்டா, நான் என்ன செய்ய….”, யோசனையோடே எப்போதும் போல வகுப்பை கவனிக்க சென்று விட்டான்.

Advertisement