Advertisement

அத்தியாயம் பதினெட்டு:

இங்கிலாந்தில் இருந்து வந்தவுடனே ப்ரீத்தி தன்னிடம் ஏதாவது ஹரியைப் பற்றி, அவர்களின் பழக்கம் பற்றி ஏதாவது விளக்கம் சொல்லுவாளா என்பதுப் போல ராஜசேகரன் பார்க்க,

அவளின் முகத்தில் மிகவும் தீவிர பாவனை, அந்த பையனைப் பற்றி நினைக்கிறாள் என்று ராஜசேகரன் நினைக்க, ப்ரீத்தியின் நினைவு முழுவதும் அவளுடைய ஸ்குவாஷ் கேம் மட்டுமே.  

ப்ரீத்தி அவளாக எதுவும் சொல்லவில்லை என்றவுடன் பொறுத்துப் பார்த்தவர் அவராக ஹரியைப் பற்றி பேச முற்பட்டார்.

“அப்பா, இன்னும் ஒன் மந்தல அலெக்ஸாண்டரியா போகணும். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம். என்னோட முழுக் கவனமும் விளையாட்டுல தான் இருக்கணும். ஜெயிக்கறோம்! தோக்கறோம்!, அது வேற விஷயம். ஆனா என் கவனம் முழுவதும் அதுல தான் இருக்கணும். சின்ன டைவெர்ஷன் கூட வேண்டாம்”, என்று விட்டாள் தெளிவாக.

அவள் அப்படிச் சொல்லும்போது என்ன சொல்லுவார், ராஜசேகரனும் அமைதியாகிவிட்டார். மாலினியிடம் கூடச் சொல்லவில்லை. வீணாக மனைவியை டென்ஷன் செய்ய வேண்டாம் என்று நினைதவராக.

ப்ரீத்தியின் எண்ணம், சொல், செயல் எல்லாம் பயிற்சி, பயிற்சி, பயிற்சி மட்டுமே…..

அவ்வப்போது இங்கிலாந்து வெற்றிக்காக ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆஃப் இந்தியா நடத்திய பாராட்டு விழா அதில் மட்டுமே கலந்து கொண்டாள்.

பின்பு பயிற்சி உறக்கம், பயிற்சி உறக்கம் மட்டுமே.

ஹரியிடம் கூட எப்போதாவது தான் பேச்சு. அவள் வெற்றியை முன்னிறுத்தி உழைத்துக் கொண்டிருந்ததாள். அந்த கவனத்தில் ஹரி என்ன செய்யப் போகிறான் என்பது போல கேட்கவேயில்லை, கேட்க தோன்றவில்லை.

ப்ரீத்தி முறையான பயிற்சியில், மனதை ஒருமைப் படுத்துவதில் என்று நேரத்தைச் செலவிட்டு, அவளின் வெற்றியை நோக்கி பயணத்தை ஆரம்பித்து இருந்தாள்.  

அதற்குள் ஹரி சில பல முடிவுகளை எடுத்து இருந்தான்.

ப்ரீத்தியிடம் கேட்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் அதைச் செய்யவில்லை.

அவள் வேண்டாம் போகாதே என்று சொல்லி விட்டால், அவனிடம் வேறு ஆப்ஷன் கிடையாது.

அதனால் ப்ரீத்தி இதை எந்த அளவுக்கு ஒத்துக் கொள்ளுவாள், விரும்புவாள் என்று தெரியாமலேயே முடிவெடுத்து விட்டான்.

எஸ், ஒரு ஜெர்மன் கம்பனியில் சேர ஒப்புக் கொண்டு விட்டான். நல்ல ஆஃபர், நல்ல ஊதியம், அவன் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகம்.

ஒரே வருடத்தில் விற்ற வீட்டின் மதிப்பை விட இருமடங்கில் அழகிய பங்களாவே வாங்கலாம். அப்பா அம்மாவை அங்கே குடி வைத்துவிடலாம் ஹரியின் எண்ணம் முழுவதும் அதே.

ப்ரீத்தியிடம் கேட்காதது மனதிற்கு ஒரு மாதிரி தான் இருந்தது. ஹரியின் உள்மனது சொல்லுவது பல சமையங்களில் சரியாகத் தான் இருக்கும்.

என்னவோ ப்ரீத்தி இதற்கு சம்மதிக்க மாட்டாள் என்று தோன்றவும் தான், கேட்காமலேயே முடிவெடுத்தான். அதன் பிறகு அவனே நினைத்தாலும் மாற்ற முடியாதே.

ஹரியின் உள்ளுணர்வு சொல்வது எப்போதும் சரியாக இருக்கும். இன்னும் அவனிடம் ப்ரீத்திக்கு இருக்கும் வருத்தம் அவன் ஜானை ஒன்றும் செய்யவில்லை என்பது.

என்னவோ அப்போது ஒரு உள்ளுணர்வு ஜானை எதுவும் செய்து அவனை தூண்டி விடாதே என்பதாக, அதனால் தான் அமைதியாக இருந்தான்.

அப்போதும் ஜானை ப்ரீத்தி தள்ளிவிட்டுப் பிரச்சனையாக்கிக் கொண்டாள்.

இதை ப்ரீத்தியிடம் என்றும் விளக்க முடியாது.

அதன் பிறகு அந்த புகைப் படங்கள், அது தான் ஹரியின் மனம் ப்ரீத்தியின் பின் செல்ல முக்கிய காரணம். ப்ரீத்தியை தேடி வரவும் அது தான் காரணம்.

வந்த பின் அவனையும் மீறித் தான் அவள் பின்புறம் சென்றது, அதன் பிறகு லண்டன் வந்தது என்று முற்றிலும் பெரிய ரிஸ்க்குகள்.

இப்போது வேலை, நல்ல வேலை, அதையும் விட நல்ல சம்பளம், ஒத்துக்கொண்டு விட்டான்.  இங்கிலாந்தில் இருந்து பயணத்தை முடிவு செய்தாலும் அப்படியே செல்ல முடியாது இந்தியா வந்து தான் செல்ல வேண்டும்.

இந்தியா வந்து பத்தே நாட்களில் மீண்டும் பயணம் இருப்பது போல முடிவு செய்து விட்டான்.    

இதை எதுவும் தெரியாதவளாக ப்ரீத்தி போட்டிக்குத் தயாராகி அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்தாள்.

தன் பெண்ணை இவ்வளவு சீரியசாக பார்த்திராத ராஜசேகரனும் மாலினியும் சாதரணமாக அவளிடம் பேசக் கூட யோசித்தனர்.

என்ன விளையாடுறியா என்று நாம் சாதரணமாக பேசும் வார்த்தையை கொண்ட இந்த விளையாட்டு என்பது மிகவும் சீரியசான ஒன்று. அதற்குரிய உழைப்பு என்பது மிகவும் கடுமையானது.

ப்ரீத்தி அதை முழுமையாக செய்தாள். full concentration and dedication……

போட்டி நடந்த நாட்கள் முழுமையான கவனம் விளையாட்டில்….. அவளுடைய விடா முயற்சி, சிதறாத கவனம் அவளுக்கு வெற்றியைத் தேடித் தந்தது……

உலக அரங்கில் புகழ்….

வெற்றி, அது கொடுத்த சந்தோஷம், அதையும் விட அந்த சாதித்த உணர்வு, ப்ரீத்தியின் மனதை ஒரு வகையாக அமைதியடையச் செய்தது.

வெற்றி பலவகையாக மனிதர்களை மாற்றக் கூடியது, சிலருக்கு தலைகனத்தை கொடுக்கும், சிலருக்கு மமதையைக் கொடுக்கும், சிலருக்கு பேச்சுக்களே மாறிவிடும், அடுத்தவரை அலட்சியபடுத்தும் பேச்சுக்கள். இப்படி பலவகையாக மனிதர்களை நிலை பிறழச் செய்யக் கூடியது வெற்றி.

வெகு சிலருக்கே பக்குவத்தை, பொறுப்பை கொடுக்கும். அந்த மாதிரியான ஒரு மாற்றத்தை கொடுத்தது ப்ரீத்திக்கு. அன்றைய நிலையில் அவள் அவளின் பிரிவில் உலகின் நம்பர் ஒன் பொசிஷனில் இருந்தாள்.

ஆனால் வெற்றி ஒரு அதீத சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. அவளுடைய விளையாட்டு கொடுத்த புகழ் அவளுடைய விளையாடுதனங்களை விட வைத்தது. புன்னகையோடு மற்றவர்களின் பாராட்டுகளை ஏற்றுக் கொண்டாள். அவ்வளவே அவளின் ரியாச்ஷனாக இருந்தது.

மாலினியும் ராஜசேகரும் கூட தங்கள் மகளின் மாற்றத்தை ஆச்சர்யத்தோடு பார்த்தனர். எப்போதும் சிறு சந்தோசம் என்றாலும் குதித்து, கத்தி, யேய்ய்ய்ய்ய்ய்ய என்று ஆர்ப்பாட்டமாக சந்தோஷத்தை கொண்டாடுபவளிடம், இப்படி ஒரு வளர்ந்த தன்மையோடு கூடிய செய்கைகளை அவர்களே வியப்பாக பார்த்தனர்.

இருவரும் அவளுடன் அலெக்ஸாண்டரியா வந்திருந்தனர். எப்போதும் எடுத்த வார்த்தைக்கு படபட வென பொரிபவள், இப்போது நிறுத்தி நிதானித்து ஒவ்வொரு வார்த்தையையும் பேசினாள்.

மிக அதிகமான பணம் கூட அந்த வெற்றியுடன் கிடைத்தது. ராஜேகரன் அவர் வாழ்நாள் முழுவதையும் சம்பாதித்ததை விட இன்னும் அதிகம், அவருக்கு பெருமை பிடிபடவில்லை.

இவ்வளவு சாதிக்கும் தன் மகளுக்கு ஹரி மாப்பிள்ளையா என்ற எண்ணம் கூடவே….

ஊருக்கு போனதும் அவளிடம் உட்கார்ந்து பேசி அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்று முடிவாக இருந்தார்.

ஆனால் வெற்றி பெற்றவுடன் எல்லோருடைய வாழ்த்தையும் ஒரு புன்னகை முகத்தோடு ப்ரீத்தி ஏற்றாலும், இன்னும் ஹரி ஏன் கூப்பிடவில்லை என்பது அவளின் மனதிற்குள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டே இருத்தது.

வெகு நேரம் கழித்து தான் கூப்பிட்டான், “கங்க்ராட்ஸ் ஹனி, இப்போ தான் உன் மெசேஜ் பார்த்தேன். யூ ஹேவ் மேட் இட்”, என்றான் அவன் ஆர்ப்பாட்டமாக

ஆனால் ப்ரீத்தி அதை மிகவும் அமைதியாக ஏற்றுக் கொள்ளவும்,

“ஹேய், உனக்கு சந்தோஷமா இல்லையா”, என்றவனிடம்,

“இருக்கு, அதுக்காக என்ன குதிக்கவா முடியும். இவ்வளவு நேரம் விளையாண்டு வின் பண்ணனும். அந்த டென்ஷன் எல்லாம் இப்போ தான் ரிலீவ் ஆச்சு”, என்றாள். 

“வளர்ந்துட்ட ஹனி நீ”, என்று முதல் முறையாக அவனாக சொன்னான்.

“ஆனா நீ உடனே ஏன் கூப்பிடலை, இவ்வளவு லேட் விஷ்”, என்று உரிமையாக சண்டையிடவும், 

“சாரி ஹனி, இங்க ஒரு பேப்பர் பிரசன்டேஷன். கூட ஒருத்தன், ஜூனியர் நம்ம இந்தியன்னு சேர்த்துக்கிட்டேன், வேற ஸ்டேட், அவன் லாஸ்ட் மினிட்ல சொதப்பிட்டான். என்னால முடியாதுன்னுட்டான். எல்லா வேலையும் நானே செஞ்சு, நான் தனியா பண்ணினேன், அதான் பேசக் கூட முடியலை, சாரி”, என்றான்.

“என்ன ஆச்சு? நல்லா பண்ணிணீங்களா இல்லையா?”, என்று ப்ரீத்தி அக்கறையாக கேட்க,

“ம், பண்ணினேன்! வேற ஒரு யுனிவர்சிட்டில இருந்து கூட அங்க வந்து ஒரு ஸ்பீச் குடுக்க சொல்லியிருக்காங்க”, என்றான்.

“பட், என்ன லைஃப் இது, நம்ம வெற்றியை கூட உடனே ஷேர் பண்ண முடியாம, ரெண்டு பேரும் வேற வேற இடத்துல, ஐ மிஸ் யூ, எனக்கு இது பிடிக்கவேயில்லை”, என ப்ரீத்தி சொல்லவும்,

ஏற்கனவே இருந்த சஞ்சலம் பயமாக மாறத் துவங்கியது. வேலையை ஒத்துக் கொண்டேனே ப்ரீத்தி என்ன சொல்வாளோ என்று

ப்ரீத்தியின் பிடிவாதம் அவன் அறிந்தது தானே, என்னவோ பயமாக இருந்தது. ஆனால் அவனிடம் வேறு வழியில்லை.

மகனாக பெற்றோருக்கு கடமைகள் நிறைய இருந்தாலும், அதை செய்ய இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றாலும், அவர்களிடம் இருந்ததையாவது அவன் திருப்பிக் கொடுக்க வேண்டுமல்லவா.

அதனால் தான் கேட்காமல் பிடிக்காமல் இந்த முடிவு,

இருந்தாலும் பயமாக இருந்தது. மீண்டும் வெளிநாடு என்றாள் ப்ரீத்தியின் ரியாக்ஷன் எப்படி இருக்குமோ? இல்லை ஆக்ஷன் அவதாரம் எடுத்து தன்னை அடிப்பாளோ? திட்டுவாளோ?

மனது என்னமோ சரியில்லாமல் போகப் போகிறது என்று விடாமல் சொல்ல……

ப்ரீத்திக்கு அழைத்தான் சொல்லிவிடுவோம் என்று, ஆனால் அவள் எடுக்க வில்லை. அங்கிருந்த மற்ற ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

தொலைபேசி மாலினியிடம் இருந்தது…… அது வாட்ஸ் அப் கால், யார் என்று தெரியாமல் அதை எடுத்தார்.

“சொல்லுங்க”, என்று அவர் சொல்லவும், அது ப்ரீத்தி இல்லை என்பதை புரிந்தவன், போனை வைப்பதா? தொடர்வதா? என்று தெரியாமல்,

“ப்ரீத்தி இல்லீங்களா”, என்றான்.

“அவ பக்கத்துல இல்லை, நீங்க யாரு?”, என்றார் மாலினி.

“ஸ்ரீ ஹரி”, என்றான்.

“ஸ்ரீ ஹரி”, என்று ஹரி சொல்லவும், அவருக்கு ஹரி என்ற பெயர் ஞாபகத்தில் வராமல்,

“யாருப்பா? என்ன சொல்லணும்?”, என்றார்.

அவர் பேசிய விதத்திலேயே அவருக்கு தன்னை தெரியவில்லை என்று புரிந்த ஹரி, “ப்ரீத்தி வந்தா ஹரின்னு சொல்லுங்க”, என்று வைத்து விட்டான்.

“யாரோ ஹரியாம்”, என்று அருகில் வந்த கணவரிடம் சொல்ல,

ராஜசேகரன் எரிச்சல் ஆனார். “விடாம துரத்துறான்! அவனை என்ன செய்ய?”, என்று அவர் சொல்லவும், ப்ரீத்தி அருகில் வரவும் சரியாக இருந்தது.

“யாரு ப்ரீத்தி, ஸ்ரீ ஹரி?”, என்றார் மாலினி.

“மா! நம்ம ஹரி மா!”, என்று ப்ரீத்தி இயல்பாக சொல்ல,

“யாரு?”, என்றார் பயந்து கொண்டே,

“நம்ம பக்கத்துக்கு வீட்ல இருந்தாங்கள்ள நிதின், தாத்தாவுக்கு தெரிஞ்சவங்க. அந்த நிதினோட கூட இருந்தாங்கள்ள, ஹரி”, என்று எடுத்துக் கொடுத்தாள்.

“என்ன இது புதிதாக?”, என்று கலவரத்தோடு ராஜசேகரனைப் பார்த்தார் மாலினி.

“அப்போ இருந்து அந்த பையன் ப்ரீத்தியோட சிநேகிதமா தான் இருக்கான்”, என்று ராஜசேகரன் சொல்லவும்,

தன்னால் அதைக் கூட தெரிந்து கொள்ள முடியவில்லை, அவளோடே இருக்கிறோம் என்று மிகவும் வருத்தம் கொண்டார் மாலினி. அதை முகத்திலும் காட்ட,

“நீ அவனை வீட்டை விட்டுப் போன்னு சொன்னேல்லம்மா, அதுக்கு அப்புறம் உன்கிட்ட சொல்லி உன்னை ஏன் டென்ஷன் பண்ணனும்னு சொல்லலை”, என்று ப்ரீத்தி விளக்கம் கொடுத்த போதே, மீண்டும் அவளுக்கு அழைப்பு வர அவள் எழுந்து சென்றாள்.

“என்ன நடக்குது”, என்பதாக மாலினி ராஜசேகரனைப் பார்க்க,

அவர் எனக்கும் தெரியவில்லை என்பது போல உதடு பிதுக்கினார்.

“அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க போல”, என்று ராஜசேகரன் சொல்ல,

“என்ன?”, என்று அதிர்ந்த மாலினி, “என்ன? யார் விஷயத்தையோ சொல்ற மாதிரி சொல்றீங்க, அவ நம்ம பொண்ணுங்க”, என்றார்.

“நம்ம பொண்ணு தான், ஆனா லவ் பண்றாளே”,

“உங்க கிட்ட சொன்னாளா?”,

“சொல்லலை…… புரிய வெச்சா!”, என்றார் பாவமாக ராஜசேகரன்.

“அந்த பையன் தான் அவளோட விளம்பரப் படத்துக்கு எல்லாம் சைன் பண்ணியிருக்கான், இவளோட சைனிங் அதாரிட்டி அவன், பணமே அவன் தான் முடிவு பண்றான், பணம் அவன்கிட்ட வந்து தான் நம்ம கிட்ட வருது”, என்றார்.

“ஓஹ்”, என்ற வார்த்தை தான் மாலினியிடம் இருந்து வந்தது. இன்னும் தன் மகள் காதலிப்பாள் என்று அவருக்கு தோன்றவே இல்லை.

எல்லா பெண் நண்பர்கள், ஆண் நண்பர்கள் எல்லோரையும் அவருக்கு அறிமுகப்படுதுவாள். எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வாள், இதைப் பற்றி மட்டும் ஏன் பேசவேயில்லை.

தங்கள் அணுகுமுறை எங்கு தவறியது……. “நம்ம அந்த பையன்கிட்ட பேசி அனுப்பியிருக்க கூடாது, இவ கிட்ட தான் பேசியிருக்கணும்”.

“அதை தான் அவளும் சொல்றா”, என்றார் ராஜசேகரன்.

“நம்ம இவ விஷயம் இவளுக்கு தெரிய வேண்டாம்னு செய்ய போய், அந்த பையன் மேல இவளுக்கு சாப்ட் கார்னர் ஆகிடுச்சு”, என்றார் ஒரு பெருமூச்சை வெளியேற்றியபடி.

“என்ன பண்ண இப்போ?”, என்று கவலையாக மாலினி பேச,

“ஊருக்கு போய் அவளுக்கு புரிய வைக்க ஒரு முயற்சி எடுக்கலாம். அப்புறம் நடக்கறது தான். நம்ம ஒன்னும் பண்ண முடியாது”, என்றார் ராஜசேகரனுமே கவலையாக. 

பெற்றோர்களாக அவர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.

அவர்களையும் விட ஹரி, “ப்ரீத்தி என்ன சொல்லுவாளோ”, என்ற கவலையில் இருந்தான்.

 சில சமயம் நாம் இது நடக்கக் கூடாது, நடந்து விடுமோ என்று சஞ்சலமாக நினைப்பது நடந்து விடும்.

அங்கிருந்து இந்தியா கிளம்பும் முன்னர், எப்படியாவது விஷயத்தை ப்ரீத்தியிடம் சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்த ஹரி,

ப்ரீத்தி இந்தியா வந்து, அவளுடைய வெற்றியைப் பாராட்டுக்களை அனுபவித்த பிறகு, அவளுக்கு ஆசுவாசப்பட நாட்கள் கொடுத்தவன்,

ஒரு வழியாக, அவளுக்கு நேரில் விஷயத்தை சொல்ல பயந்து, இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா வர இருப்பதாகவும், அங்கு வந்து ஒரு பத்து நாட்கள் இருந்து ஜெர்மனியில் ஒரு வேலையில் சேரப் போவதாகவும் மெசேஜ் அனுப்பினான்.

அந்த மெசேஜ் ப்ரீத்தி படித்த நிமிடம், ஹரியின் தொலைபேசி விடாமல் அடித்தது.

எதிர்பார்த்தே இருந்தான், ப்ரீத்தியின் பிடிவாதம் கோபம் அறிந்தவன். கோவையில், “எங்கப்பா வருவாங்க”, என்று சொல்லி ஒரே இடத்தில் மதியம் வரை ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அந்த பிடிவாதம் தான் அவனை ப்ரீத்தியின் புறம் திரும்ப வைத்தது.

அந்த டிடெர்மினேஷன் தான் ப்ரீத்தியின் வெற்றிகளின் காரணம் என்பதை அவன் அறிவான்.   

இப்போது அந்த பிடிவாதம் பயத்தைக் கொடுத்தது.

ஹரி போன் எடுத்த நொடி, “என்னவோ மெயில் பண்ணியிருக்கியே, சும்மா என்கிட்ட என்னை டென்ஷன் பண்ண விளையாடுறியா? இல்லை நிஜமா சொல்றியா?”, என்றாள் ப்ரீத்தி.

“அது ப்ரீத்தி…….”, என்று ஹரி ஆரம்பிக்கும் போதே,

“நிஜமா? பொய்யா? அதை மட்டும் சொல்லு”, என்று ப்ரீத்தி கறாராக பேச,

“நிஜம்”, என்று ஹரி சொன்ன நிமிடம் தொடர்பு அறுந்தது.

அது தொலைபேசியினது மட்டுமல்ல……  

 

       

 

Advertisement