Advertisement

அத்தியாயம் பதினேழு:

மிகவும் மகத்தான தருணம் ப்ரீத்தியின் வாழ்வில், வெற்றிக் கோப்பையை கையில் வாங்கியவள், நியூஸ் சேனல் ஒன்றிற்கு அந்தக் கோப்பையை வைத்துக் கொண்டு பேட்டி கொடுத்தாள்.

பத்திரிக்கை ஒன்று ஸ்னேப் எடுக்கக் கேட்ட போது, அப்பாவின் அருகில் நின்றவள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஹரியே எதிர்ப்பார்க்காத போது இழுத்துக் கொண்டாள்.

“இப்போ தான் என் பிக்சர் கம்ப்ளீட்”, என்று ஹரியிடம் மெதுவாக கண்ணடித்துச் சொன்னாள்.

ஆனால் அந்த சந்தோஷத்தை முழுமையாக ஹரியால் அனுபவிக்க முடியவில்லை. அவனுக்கு ராஜசேகரனிடம் பேசிக் கொண்டிருந்த பேச்சுக்கள் மட்டுமே மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

“எவ்வளவு பேசி வைத்துக் கொண்டேன் எனக்கு நானே, இப்படி பேச வேண்டாம் என்று பிறகும் ராஜசேகரனிடம் பேசிவிட்டேன்”, என்று அவனுக்கு அவனே வருந்திக் கொண்டிருந்தான்.

ஹரி இயல்பாக இல்லை என்பதை புரிந்து கொண்டவள், தயங்கவே இல்லை, “என்ன ஹரி? என்ன பிரச்சனை? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?”, என்று ராஜேகரன் முன்பே தான் கேட்டாள்.

“ஒன்றுமில்லை”, என்பதாக தலையை மட்டும் ஆட்டியவன், “இது உனக்கான நேரம், ஜஸ்ட் என்ஜாய் தட்”, என்று சொல்லி,

“இப்போ வந்துடறேன்”, என்று சொல்லி வெளியில் சென்று அங்கிருந்த திட்டில் அமர்ந்து கொண்டான்.

என்னவோ மனதிற்குச் சரியாகவே படவில்லை, இனி ப்ரீத்தியின்  அப்பாவிடம் இதைப் பற்றி பேசுவதில்லை என்று முடிவெடுத்துக் கொண்டான்.

அவர் என்ன சொல்வதென்றாலும், தன் மகளிடம் சொல்லிக் கொள்ளட்டும் என்பதாக சிறிது நேரம் அமர்ந்திருந்தான்.

ஆனால் மனது சமன்படவில்லை, என்னவோ தப்பு செய்து விட்டதாகத் தோன்றியது.

அதற்குள் அவனின் மொபைல் அடித்தது, “எங்கடா இருக்க”, என்று உரிமையாக ப்ரீத்தயின் குரல் ஒலித்தது.  

“எங்க டா வா, இவ்வளவு மரியாதையா நீ பேசி நான் கேட்டதேயில்லையே”,

“அதான் இப்போ கேட்கறையே, சொல்லு! சொல்லு! வின் பண்ணிட்டேன்! என்ன ட்ரீட் குடுக்கப் போற?”,

“ம், ட்ரீட்டா? உங்கப்பா கூட இருக்கிறார் ஹனி”,

“அதான் உன்கிட்ட கேட்கறேன், இல்லைன்னா நான் கொடுத்திருப்பேனே”, என்று ப்ரீத்தி உற்சாகமாகப் பேச,

அந்த உற்சாகம் சிறிது ஹரியைத் தொற்றியது, “என்ன வேணும்? நீ சொல்லு”, எனவும்,

“போடா……… ரெண்டு வருஷம் கழிச்சு பார்க்கிறோம், என்கிட்ட பேசாம, எங்கப்பா கிட்ட பேசி, மூட் அவுட்டாகி வெளில உட்கார்ந்து இருக்க”, என்றாள்.

ஹரி ஷாக்கானவன், “உனக்கு தெரியுமா? எப்படி?”,

“ம்க்கும், எங்கப்பாவை எனக்கு நான் பொறந்ததுல இருந்து தெரியும். கண்டிப்பா ஏதாவது பேசியிருப்பார்”, என்று ஈசியாக சொன்னாள்.

“என்ன விளையாடுறியா?  நானே ரொம்ப பதில் குடுத்துட்டேன்னு அப்செட்டா இருக்கேன்”,

“என்ன நீ பேசினியா? என்ன பேசின?”,  

“ம்! என்ன பேசினேன்னு ஞாபகமில்லை, ஆனா அவர் கொஞ்சம் இன்சல்ட் பண்ணற மாதிரி பேசினார். பதில் குடுத்தேன். இப்போ தேவையில்லைன்னு தோணுது”, என்றான் உண்மையாக.

“அப்போ ஒரு சாரி கேட்டுடு”, என்று ப்ரீத்தி ஈசியாக அதற்கு விடை சொல்ல,

சற்றும் யோசிக்காமல், “முடியாது”, என்றான் ஹரி. “நான் பேசியிருக்கத் தேவையில்லை தான். அதுக்காக சாரி எல்லாம் கேட்க முடியாது. என்னவோ நான் ரோக் மாதிரி, பணத்துக்காக, உன்னோட புகழுக்காக, உன் பின்னால வர்ற மாதிரி, எனக்கு தகுதியே இல்லைன்ற மாதிரி பேசறார்”.

“இப்படி லாஸ்ட் டைம் பேசவும் தான் வேலையை தூக்கிப் போட்டுட்டு, வீட்டை வித்து, இங்க வந்து உட்கார்ந்தேன். இப்போ பயங்கர பிரஸர்ல இருக்கேன். எங்கப்பாம்மாக்கு வீடு வாங்கிக் குடுக்கணும், எங்கப்பா கிட்ட சேவிங்க்ஸ் கூட கிடையாது, என் தங்கை கல்யாணத்துக்கு நான் சப்போர்ட் பண்ணனும்”, பேச்சே தடுமாறியது ஹரிக்கு.

“ஹேய், என்னப்பா? எதுக்கு இவ்வளவு அப்செட், நான் முதல்லயே சொல்லியிருக்கேன் நீ பேச வேண்டியது என் கிட்ட, என் அப்பா கிட்ட இல்லைன்னு, உன்னை யார் அவர்கிட்ட பெரிய இவன் மாதிரி பேசச் சொன்னது”.

“இதை நீ உன் அப்பாகிட்ட சொல்லலாமே”, என்று எரிந்து விழுந்தான்.

“சும்மா நீ பேசிட்டு இப்ப எதுக்கு என்கிட்ட கத்தற! உன்னை யார் பேசச் சொன்னா! அவர் சொன்னா நீ கேட்கணும்னு எந்த அவசியமுமில்லை! நீயா வேலையை விட்டு…….. நீயா வீட்டை வித்து…….. இங்க வந்து உட்கார்ந்துகிட்டு, அவரை ப்ளேம் பண்ணாத”, என்றாள் ப்ரீத்தியும் சற்று காரமாகவே.

“சரி, என்னோட முட்டாள் தனம் தான் அது, இப்போ அதுக்கு என்ன? நீயும் உங்கப்பா மாதிரி நான் உனக்கு தகுதியில்லாதவன், புத்திசாலித்தனம் பத்தாதுன்னு நினைக்கிறியா?”

ஹரி இப்படி பேசி பார்த்திராதவள், சண்டையை வளர்க்காமல், “ஹேய் கூல் பா! ஜஸ்ட் நீ பேசினதுக்கு சொன்னேன்! இது ஒரு விஷயமில்லை! விடு, எல்லாம் நான் பார்த்துக்கறேன், அப்பா கிட்ட நான் பேசறேன்!”, என்று சமாதானம் சொன்னவள்,

“நீ உள்ள வா ஹரி, ப்ளீஸ்!”, எனவும்,

“இல்லை, என்னால முடியாது! நான் வரலை, உனக்கு நைட் பிளைட் தான. பத்திரமா போயிட்டு வா!”, என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான்.

ப்ரீத்தி இதை எதிர்பார்க்கவேயில்லை. “எவ்வளவு ஆசை ஆசையாக அவனை பார்க்க வந்துவிட்டு, இரண்டு வார்த்தைகள் நல்ல மாதிரி நேரில் இன்னும் பேசக் கூட இல்லை, நீ கிளம்பு என்று சொல்லிப் போய்விட்டானா”,

“போடா”, என்று தான் சொல்லத் தோன்றியது.

“இவனை யார் அப்பாவிடம் பேசச் சொன்னார்கள், எதுவாயிருந்தாலும் உங்க பொண்ணு கிட்ட பேசிக்கங்க”, என்று சொல்லித் தள்ளி நிற்க வேண்டியது தானே.

கோபம் கோபமாக வந்தது.

இந்த முறை ஹரிக்கும் அப்பாவிற்கும் ஒரு நல்ல சுமுகமான பேச்சை வளர்த்து விட வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க இப்படியாகிவிட்டதே.

எப்போது முடிக்கிறான்? அவனின் பிளான் என்ன? எதுவும் பேசவில்லை! நேரில் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்திருக்க இப்படி போய் விட்டானே என்று இருந்தது.

தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்தவள், சோர்ந்த முகத்தோடு ஃபோனை வைத்து வரவும்,

“என்னடா”, என்றார்,

“போகலாம்பா”, என்று மட்டும் தான் சொன்னாள், வேறு பேச வில்லை.

வழியில் வாழ்த்து சொன்னவர்களுக்கு எல்லாம் புன்னகை முகமாக தலையசைத்து வாழ்த்தை ஏற்றுக் கொண்டாலும் அந்த புன்னகை அவளின் கண்களை எட்ட வில்லை என்று ராஜசேகரனுக்கு புரிந்தது.

வெளியில் வந்து காரில் ஏறும் போது கூட, கண்கள் ஹரி எங்காவது தென்படுகிறானா என்று தான் தேடியது.

அவளின் கண்கள் தன்னைத் தேடுவதை ஹரியும் தூர இருந்து பார்த்துக் கொண்டுதானிருந்தான். போகிறேன் என்று சொல்லி விட்டாலும் அவள் அங்கிருந்து செல்லாமல் எப்படி செல்லுவான்.

தன் பெண்ணின் கண்கள் ஹரியைத் தேடுவதை ராஜசேகரனும் உணர்ந்தார். அவள் முகம் வாட்டமாய் இருப்பதிலேயே அந்த பையன் போய் விட்டான் போல என்று தெரிந்து கொண்டவர், “என்கிட்டே அந்த டைலாக் விட்டான். போயிட்டானா? அவ்வளவு தானா இவன் வீரம்!”, என்று மனதின் ஓரத்தில் ஒரு ஓசை எழுந்தது.

அவர்கள் தங்குமிடத்தில் தனிமை கிடைத்ததுமே, ராஜசேகரனிடம் முதலில் ப்ரீத்தி கேட்டது, “எதுவா இருந்தாலும் நீங்க என்கிட்ட தானேப்பா கேட்கணும், என்ன விஷயம்னு”, என்றாள் சற்று காரமாக.

“அட போனவன் என் பொண்ணை கிளப்பி விட்டுட்டு தான் போயிருக்கானா, இது தானா அவனோட வீரம்?”, என்பது போல ப்ரீத்தியை ஒரு பார்வைப் பார்க்க, அவரின் மகள் அல்லவா அவருக்கு பத்து மடங்கு பதில் பார்வை பார்த்தவள், 

“உங்களுக்கு பிடிக்கலைன்னா என்கிட்டே தானேப்பா சொல்லணும்! இதை செய்யதேன்னு எதுக்குப்பா அவன் கிட்ட சொன்னீங்க”,

ராஜசேகருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

சாதரணமாக இருந்திருந்தால் அவர் ப்ரீத்தியிடம் தான் சொல்லியிருப்பார். ஆனால் அந்த புகைப் படங்கள் அது ப்ரீத்தியின் கவனத்திற்கு வர வேண்டாம் என்பதற்காக தான் ஹரியிடம், “நீ விலகிப் போ”, என்று சொன்னார்.

இப்போது என்ன சொல்லுவார்.

“நீங்க ஏன்பா அவனைக் கார்னர் பண்ணுனீங்க, இருந்த வேலையை விட்டுட்டு, என்னவோ தகுதியை வளர்த்துக்கறேன்னு, ஹையர் ஸ்டடீஸ்ன்னு இங்க வந்து உட்கார்ந்து இருக்கான்”.

“இப்போ அவன் பேசும் போது i can feel, he is more insecured. நமக்கு யாரையும் அந்த மாதிரி பண்றதுக்கு உரிமையில்லைபா”,

தான் சிறு பெண் என்று அவளுக்காக யோசித்து முடிவுகள் எடுக்க, ப்ரீத்தியிடம் இருந்து இப்படி ஒரு தெளிவான பேச்சை ராஜசேகரன் எதிர் பார்க்கவில்லை.

“அவன் அவ்வளவு நல்லவன் இல்லைம்மா”, என்று அவர் சொல்ல.

“நீங்க ஏன் அப்படி சொல்றீங்க, உங்களுக்கு என்ன தோணுது மனுஷங்களை என்னால அடையாளம் கண்டுபிடிக்க முடியாதுன்னா, அப்படியா நீங்க என்னை வளர்த்து இருக்கீங்க”,

“அவன் உன்னை பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்னு என்கிட்டே சொன்னான்”,

“என்கிட்ட கூட அப்படிதான்பா சொன்னான். ஆனா நான் என்ன சொன்னேன் தெரியுமா? நீதானே பார்க்க மாட்டேன்னு சொன்ன, நான் சொல்லலையே. அதனால நீ என்னை ரெஸ்ட்ரிக்ட் பண்ண முடியாதுன்னு சொன்னேன். அந்த தப்பை நான் தான் செஞ்சேன், அவன் செய்யலை”,

“இப்போ கூட பார்க்க வரமாட்டேன்னு உங்க கிட்ட வாக்கு குடுத்திருக்கேன், வெங்காயம் குடுத்திருக்கேன்னான், நான் தான்பா பார்த்தே ஆகணும்னு சொன்னேன்”.

“பணத்தை ஏன்பா கொண்டு வரீங்க நடுவுல, அவன் என் பின்னாடி வந்தப்போ எனக்குத் தனியா ஐடென்டிட்டியே கிடையாது. ஜஸ்ட் பார்டிஸிபேஷன் மட்டும் தான் அப்போ. பெருசா எதையும் நான் ஜெயிக்கவே இல்லை”.

“அப்போ அவன் நல்ல வேலைல இருந்தான். நானும் மேஜர். நீங்க சொன்ன பேச்சை அவனுக்கு கேட்கணும்னு அவசியமில்லை. என்னை வா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு கூட கூப்பிட்டு இருக்கலாமே பா! ஆனா அவன் செய்யலையே!”,

“கூப்பிட்டிருந்தா நீ போயிருப்பியா என்ன?”, என்று ராஜசேகர் ப்ரீத்தியைப் பார்த்து கேட்ட போது, அதில் நீ கண்டிப்பாக சென்றிருக்க மாட்டாய் என்ற செய்தி தான் இருந்தது.

“அப்போ உங்களுக்கு என் மேல போக மாட்டேன்னு நம்பிக்கை இருக்கு தானே. என்கிட்டே பேசாம அவன் கிட்ட எதுக்குப்பா பேசினீங்க”, என்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றாள்.

நிஜமாக ராஜசேகருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இந்த கால பிள்ளைகளின் தைரியத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

“எவ்வளவு தைரியமாக அந்த பையனுக்காக என்னிடம் வாதாடிக் கொண்டிருக்கிறாள். எனக்கு சம்மதம் கொடுங்கள் என்று கேட்கவேயில்லை என்னிடம் பேசாமல் உங்களை யார் அவனிடம் பேசச் சொன்னது”, என்று எப்படி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாள். அசந்து நின்றார். 

“ஹரிக்கே தெரியும் பா! எப்போவும் என்கிட்டே சொல்லுவான், நான் அப்பா அம்மா பொண்ணுன்னு, அதனால தான் உங்களை சேடிஸ்ஃபை பண்ண நினைச்சான்”. 

“உன் நல்லதுக்கு தான் செஞ்சேன்”, என்று தந்தையாக சொல்லவும் ப்ரீத்தியும் வேறு பேசவில்லை, அமைதியாக பேக்கிங்கை ஆரம்பித்து விட்டாள்.

வெற்றி பெற்ற சந்தோசம் சிறிதும் இப்போது ப்ரீத்தியினிடம் இல்லை.

இரவு ப்ளைட்டிற்கு ஏர்போர்டில் அமர்ந்திருந்த போது தந்தையும் மகளும் ஆளுக்கு ஒரு பக்கம் பார்த்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தனர்.

ப்ரீத்தியின் கோச் வள வள வென்று பேசிக் கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் ராஜசேகரன் அவருடன் பேச ஆரம்பித்தார்.

ப்ரீத்தி கண்ணை மூடி அமர்ந்து கொண்டாள். ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த, ஹரி இங்கே கண்டிப்பாக இருப்பான் என்று தோன்றியது.

“இப்போ வந்துடறேன் பா!”, என்று அப்பாவிடம் சொல்லி மெதுவாக அங்கு சுற்றி நடக்க, அவளின் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை, ஹரி அங்கே தான் அவர்களின் பார்வையில் படாதவாறு அமர்ந்திருந்தான்.

பார்த்த உடனே ப்ரீத்தியின் அகமும் முகமும் மலர்ந்தது. இடுப்பில் கைவைத்து அவனைப் பார்க்க, ஹரியும் பார்த்து விட்டான்.

ப்ரீத்தி வேகமாக அவனை நோக்கிச் செல்ல, அசரமால் அவளை பார்வையால் கபளீகரம் செய்தபடி ஹரி அவளையே பார்த்திருந்தான்.    

அருகில் சென்றவள், “நான் தெரியாத இடத்துல உட்கார்ந்து இருக்க, உன்னோட பார்வை வட்டத்துல கூட நான் இல்லை, அப்புறம் எதுக்கு உட்கார்ந்து இருக்க, இப்போ என்ன பார்வை”,

ஹரி சிரிக்க,

“பெரிய பருப்பு மாதிரி நீ கிளம்புன்னு சொன்ன, எதுக்கு உட்கார்ந்து இருக்க”, என்று ப்ரீத்தி கோபமாக பொறிய,

அவள் தன்னைப் பார்த்து விட்ட சந்தோஷத்தில், “ம், உங்கப்பாவை சென்ட் ஆஃப் பண்ண வந்தேன்”, என்றான் நக்கலாக ஹரி.

“போ! போய் அவரையே பண்ணு! உனக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கார்”, என்று வந்த வழியே ப்ரீத்தி திரும்ப,

அப்படியே அவளின் கை பிடித்து இழுக்கவும், சற்றும் அதை எதிர்பாராதவள் நிலை தடுமாறி அவன் மேலேயே விழுந்தாள். 

விழுந்து விட்டாள் தான், ஆனால் எழ அவசரம் காட்டவில்லை என்பாதாக கூட சொல்ல முடியாமல், எழவே இல்லை, எப்படி அவன் மேல் விழுந்தாலோ அப்படியே இருந்தாள்.

“எழுந்திரு ஹனி”, என்று ஹரி சொல்லவும், அப்படியே இன்னும் அவன் மேல சாய,

“ஐயோ! இது எனக்கு பயங்கர பனிஷ்மென்ட்”, என்று சொல்லி, ஹரியாக மெதுவாக விலக்கி அருகமர்த்தினான்.

“இன்னும் அரை மணிநேரம் தான் இருக்கு, அப்புறம் நான் செக் இன் பண்ணனும்”, என்றது தான் அவளின் பேச்சாக இருந்தது.

அவளின் இடையை ஆதரவாக அணைத்துப் பிடித்துக் கொண்டவன், “இன்னும் அரை மணிநேரம் இருக்கு! என்ன வேணா பண்ணலாம்”, என்றான்.

“என்ன பண்ணலாம்”, என்று விஷமமாக ப்ரீத்தி கேட்க,

“எதுவும் பண்ண உங்கப்பா லைசென்ஸ் குடுப்பார்ன்னு தோணலை”, என்றான்.

“அப்போ லைசென்ஸ் கிடைக்கலைன்னா?”,

“லைசென்ஸ் இல்லாம வாழ்க்கையை ஆரம்பிச்சிடுவோம்”, என்று கண்ணடித்து ஹரி சொல்ல,

அவனின் வாய் மேல் ஒரு அடி வைத்தாள், கூடவே, “நீ….. நீ…… நம்பிட்டேன்”, என்றாள் ராகமாக.

“பொண்ணையே கரக்ட் பண்ணிட்ட, அப்புறமும் அவங்கப்பன் சொல்றதை லூசு மாதிரி கேட்டுகிட்டு இருக்குற புத்திசாலி நீ. இதுல அப்செட் வேற”, என்றாள் நக்கலாக.

“வேற பேசறியா?”, என்றான் ஹரி.

அவன் சொன்ன விதமே, அவன் இன்னும் அப்செட் என்பது புரிய,

பேச்சை மாற்றி, “எங்க என் ட்ரீட் வின் பண்ணினதுக்கு”, என்று சந்தோஷமாக கேட்க,

“என்ன வேணும்?”, என்றான் ஹரி.

“நீ என்ன குடுத்தாலும் எனக்கு ஓகே”, என்று கண் சிமிட்ட..

“உங்கப்பா அந்த பக்கம் தான் உட்கார்ந்து இருக்கார்”,

“நான் கூட எங்கப்பாவை இவ்வளவு நினைக்கறது இல்லை. நீ ஏன் நினைக்கற”, என்று ப்ரீத்தி சற்று கடுப்பாகக் கேட்க.

“தெரியலை”, என்று ஹரி சிரித்தான்.

“என்ன டேட்ல உன் ஸ்டடீஸ் முடியுது, கரக்டா சொல்லு, எப்போ இன்டியா வர்ற?”,

“இன்னும் ஒன்னும் பிளான் பண்ணலை ப்ரீத்தி”, என்று அவன் ஆரம்பிக்கவும், செக்கின் அறிவிப்பு கேட்டது.

“கூப்டுட்டாண்டா”, என்று ப்ரீத்தி காண்டு ஆனாள்.

“கிளம்பு, கிளம்பு, உங்கப்பா உன்னை தேடப் போறார்”, என்று ஹரி அவசரப்படுத்த, முகம் சுணங்கிக் கொண்டே எழுந்தாள்.

“நிதின் ஆன்சைட் போயிருக்கான் தானே, நெக்ஸ்ட் மந்த் இந்தியா வர்றான். வந்தவுடனே மாளவிக்காவை பொண்ணு கேட்பாங்க போல”, என்ற கூடுதல் தகவலையும் ஹரி சொல்ல,

“அப்போ நம்ம கல்யாணம்”, என்று ப்ரீத்தி உடனே கேட்டாள்.

“இப்போ தான் எனக்கு இருபத்தஞ்சு வயசு. இப்போ போய் எங்கப்பாம்மா கிட்ட கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்க முடியுமா?”,

“நிதின்க்கும் உங்க ஏஜ் தானே”,

“அவன் மூணு வருஷமா சம்பாதிக்கறான், அதுவுமில்லாம அவன் ஒரே பையன், எனக்கு சாதனா இருக்கா ப்ரீத்தி”, என்று ஹரி சொல்லவும்,

“பாருங்க, எனக்கு எத்தனை விஷ் அனுப்பியிருக்கா”, என்று ப்ரீத்தி சாதனாவின் மெசேஜ்களை காட்டினாள்.

“உங்கள மாதிரி இல்லை சாதனா, என்னோட ரெகுலர்ரா போன்ல பேசறா”, என்று சொல்லியபடி மனமேயில்லாமல் ப்ரீத்தி கிளம்ப,

“இரு, உன் டிரஸ்”, என்றபடி நெருங்கியவன், அவளின் டீ ஷர்ட்டை சற்று கீழே இழுத்து விட்டு, சட்டென்று அவளின் இதழில் ஒரு முத்திரை பதித்து விலக,

அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்தாள் ப்ரீத்தி.  

“யாரும் கவனிக்கலை ஹனி”, என்று ஹரி சொல்லவும், அப்போதும் தெளியாதவள், அவனை முறைக்க,

“யாரு ட்ரீட் கேட்டா, நீ தானே ஹனி”,

“இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல ட்ரீட்டா”,

“ட்ரீட்ன்றது யாராவது ஒருத்தர் அடுத்தவங்களுக்கு குடுக்கறது. இது மட்டும் தானே ஹனி, ரெண்டு பேருக்கும் ட்ரீட்”, 

“போடா லூசு! எங்கப்பா வந்திருந்தா?”,

“அதெல்லாம் நம்ம ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசிட்டு இருந்தோமே, அப்போவே வந்து பார்த்துட்டு போயிட்டார்”,  

“என்ன?”, என்று ப்ரீத்தி விழி விரிக்கவும்,

“ஆமாம் ஹனி, பார்த்தார்…. போயிட்டார்……”, என்றான் ரைமிங்காக கைவிரித்து.

“ஏன், என்கிட்டே சொல்லலை”,

“ஏன் பயமா?”, என்றான் கிண்டலாக.

“அய்யே! மறுபடியும் ஒரு சண்டையை லைவ் வா பார்த்திருப்பேன், அந்த பயத்துல தானே சொல்லலை”, 

“பயமில்லை, நீ உடனே எழுந்து போயிட்டா, அதான் சொல்லலை”, என்றான் புன்னகையுடன்.

“நாம எப்படி உட்கார்ந்து இருந்தோம்”, என்று ப்ரீத்தி கலவரமாக கேட்க,

“பக்கத்துல உட்கார்ந்து இருந்தோம். நான் உன் இடுப்புல கை போட்டுட்டு இருந்தேன்”, என்று ஹரி விளக்கம் சொல்ல,

“ஐயோ”, என்று தலையில் கை வைத்தாள்.

“ப்ச், டோன்ட் வொர்ரி! என் கை உன் டீ ஷர்ட்குள்ள தானே இருந்தது, தெரிஞ்சிருக்காது”, என்றான்.

அவனின் தலையில் செல்லமாக வலிக்காமல் கொட்டியவள், “நீ ரகசியத்தை எல்லாம் வெளில சொல்லுவியா”, என்று.

“நான் எங்க சொன்னேன், நீ டென்ஷன் ஆன சொன்னேன்”, என்று சிரித்தான்.

ப்ரீத்தியின் முகத்தில் ஒரு மெல்லிய வெட்கம் எட்டிப் பார்க்க ரசித்தவன்,   .மறுபடியும் ஒரு அறிவிப்பு வர, “ஓடு, ஓடு, டைம் ஆச்சு, என் மாமனார் அங்க உன்னை விட கலவரமா உட்கார்ந்து இருப்பார்”, என்றான்.

“இரு, எங்கப்பா கிட்ட சொல்றேன். நீ அவருக்கு மாமனார்ன்னு பிரமோஷன் கொடுத்ததை”,

“அம்மா தாயே, அவரை டென்ஷன் பண்ணாம ஊர் கொண்டு போய் சேர்த்துடு. ஏற்கனவே என்னைப் பார்த்த ஷாக்ல இருப்பார்”,

“இனிமே உங்கப்பாவை டென்ஷன் ஏத்த, நம்ம ரூம் போட்டு……”, என்று ஹரி இழுக்க…..

“ஆங்…..”, என்று ப்ரீத்தி மீண்டும் விழிவிரிக்க….   

“ரூம் போட்டு யோசிச்சுப் பண்ணலாம், இப்போதைக்கு இது போதும்”, என்று புன்னகையோடு ஹரி முடித்தான்.

அவன் தோளில் ஒரு அடி வைத்து ஓடினாள் செக்கின் செய்ய.

இருவர் மனமும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

வேகமாக ஓடி அப்பாவின் முன் நிற்க, அவளின் பேகை காட்டி எடுத்துக்கோ என்றார், அப்பா  நான் ஹரி கிட்ட பேசிட்டு இருந்தேன் என்றும் சொல்ல,

“இவ்வளவு நாளா சொல்லலை, இப்போ மட்டும் ஏன் சொல்ற, இப்பவும் உன் இஷ்டப்படியே செய்”, என்றார்.

அவர் சொன்ன விதம் ப்ரீத்திக்குள் பட்டென்று ஒரு கோபத்தை கொடுக்க,   

“என் இஷ்டப்படி எப்பவும் நான் நடக்க நினைச்சது இல்லைப்பா,  இவ்வளவு நாளா நான் யார்கிட்ட பேசிட்டு இருக்கேன்னு நான் எப்பவுமே உங்ககிட்ட சொன்னது கிடையாது….. அதனால ஹரியைப் பத்தியும் சொல்லலை…… சொல்லப் போனா ஹரியை அம்மா கிட்ட, உங்க கிட்ட ரொம்ப முன்னாடியே பேச வைச்சேன்”,

“நீங்க என்கிட்டே சொல்லாம அவன் கிட்ட பேசினீங்க, அதனால நானும் அவன்கிட்ட பேசினதை சொல்லலை”, என்றாள்.

அப்பாவும் மகளும் கோபமாக வழக்காடுவதைப் பரிதாபமாக பார்த்திருந்தான் ஹரி. “இவ முடிக்க மாட்டா போலவே”, என்றவாறு அவன் பார்க்க,

“எல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ கவலைப் படாத”, என்று கண்களால் அவனிடம் ப்ரீத்தி விடைபெற்று செல்ல,

“என் பொண்ணோட என்னை சண்டை போட வெச்சிட்ட இல்லை”, என்று ராஜசேகரன் அவனிடம் கண்களால் கோபத்தை காட்டியபடி செல்ல,

“அப்பாவும் மகளும் என்னைப் பார்த்த நாள்ல இருந்து கண்ல பேசிக் கொல்றாங்கடா”, என்று நொந்து கொண்டே சென்றான் ஹரி.  

      

 

Advertisement