Advertisement

அத்தியாயம் பதினாறு:

என்னவோ மகள் தன் கைக்குள் இல்லாதது போல ராஜசேகரனுக்கு ஒரு தோற்றம் தோன்ற ஆரம்பித்தது. அது மாயத் தோற்றமா இல்லை நிஜமா?

பாம்பேயில் இருந்து வந்த உடனே நான்கே நாட்களில் இங்கிலாந்து பயணம், அதனால் ப்ரீத்தி கடுமையான பயிற்சியில் இருந்தாள்.

ராஜசேகரனுக்கு மகளிடம் அந்த மேனேஜர் யார் என்று எப்போது கேட்பது என்றே தெரியவில்லை.

ப்ரீத்தியிடம் நேரமே இல்லை. அதுவுமில்லாமல் இப்போது பேசி அவளின் கவனம் சிதற வேண்டாம், இண்டர்நேஷனல் மேட்ச் என்பது புரிந்து நிதானித்தார்.

அப்போதும், “யாரும்மா அந்த மேனேஜர்? எல்லாம் சரியா தான் செய்வானா, உனக்கு பதிலா அவன் சைன் செய்யறான்னு சொல்ற? ஏதாவது வில்லங்கமா சைன் பண்ணிடப் போறான்”, என்றார்.

“அப்பா, நீங்க என்ன பேசறீங்க, எனக்கு எந்த ரிஸ்க்கும் கிடையாது. எல்லாம் அவனுக்கு தான். சொல்லுங்க, நான் எங்கயும் அவன் என்னோட சைனிங் அதாரிட்டின்னு எழுதியா குடுத்திருக்கேன், இல்லை ஜஸ்ட் ஒரு வாய் மொழி, அவ்வளவு தான்!”,

“அவர் தான்பா ரிஸ்க் எடுக்கிறார்”,

“அதெப்படி ஒரு ஃபெனிபிட்டும் இல்லாம ஒருத்தர் ரிஸ்க் எடுப்பாங்க”,   

“நாம இங்லாந்து போறோம் தானேப்பா. அங்க அவனை இன்ட்ரோடியுஸ் பண்ரேன்பா, நீங்க டிசைட் பண்ணுங்க”, என்று ப்ரீத்தி புன்னகை முகமாகவே சொல்ல,

ப்ரீத்தி மிகவும் ஈசியாக சொல்வதைப் பார்த்தவர், மிகவும் குழம்பிப் போனார் யாராக இருக்கும் என்று.

ஹரிக்கும் மெசேஜ் அனுப்பினாள், “அப்பாவோட தான் வர்றேன். கண்டிப்பா என்னை நீ மீட் பண்ணனும்”, என்று.

என்று இருந்தாலும் பார்த்து தானே ஆகவேண்டும், “சரி”, என்று ஹரியும் சொன்னான்.

ராஜசேகரன் எப்படித் தன்னை எதிர்கொள்வார், அவரைப் பார்த்தால் எப்படிப் பேச வேண்டும் என்று ஹோம் வொர்க் கூட செய்ய ஆரம்பித்தான்.

அவனும் படிப்பை முடிக்க மிக சில மாதங்களே இருந்தன. அதனால் வேலையின் பொருட்டும் சற்று டென்ஷனாக இருந்தான். ஒரு இரண்டு ஆஃபர்கள் இருந்தன.

சம்பளத்தின் பொருட்டு எதை ஒத்துக் கொள்வது, இல்லை இன்னும் வெயிட் செய்யலாமா, இன்னும் பெட்டர் ஆஃபர் வருமா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒன்று ஆஸ்திரேலியன் பேஸ்ட் கம்பெனி, ஒன்று ஜெர்மனி. இந்தியாவிலும் அவனின் படிப்பிற்கு, அவனின் பெர்ஃபார்மன்சிற்கு, ரத்தின கம்பள வரவேற்பு கிடைக்கும் தான். ஆனால் இதில் பாதி சம்பளம் கூடக் கிடைக்காது. அதனால் இந்தியா போக அவன் யோசிக்கவேயில்லை.

இதை எதையும் அறியாத ப்ரீத்தி, ஹரியைப் பார்க்க போகும் உற்சாகத்தில் இருந்தாள்.

அவளின் மேட்ச் நடக்கும் இடம் லண்டனில் இருந்து தொலைவு, ஹரி இருப்பது லண்டனில். அவளின் மேட்ச் யார்க்ஷையரில். அங்கிருந்து நான்கைந்து மணிநேர பயணம்.

அதுவும் ப்ரீத்தி அங்கு ஐந்து நாட்கள் இருக்க, கடைசி நாளில் தான் வரமுடியும், தனக்கு முக்கியமான தேர்வுகள் இருக்கிறது என்று ஹரி முன்பே சொல்லிவிட்டான்.

“அப்போ நீ என்னோட இனிஷியல் மேட்ச்சஸ் இருக்க மாட்டியா? யூ நோ இங்க வின் பண்ணினா நெக்ஸ்ட் மந்த் அலெக்ஸான்றியால மேட்ச் இருக்கு. யூ நோ வின் பண்ணினா எவ்வளவு அமௌன்ட் தெரியுமா……… ஒன் லேக் டாலர்ஸ்!!!!, நீ கூட இருப்பேன்னு நினைச்சேன்”,

“அதான் உன் அப்பா இருக்கார் தானே ப்ரீத்தி”, என்று ஹரி சமாதனம் பேசினான்.  

“இருக்கார்! ஆனா என்னவோ அவர் மூட் ஆஃப். மே பீ என்னால கூட இருக்கலாம், யாரு உன் மேனேஜர்ன்னு கேட்டார்”,

“அங்க வந்து பார்த்துக்கோங்கப்பா  சொல்லிட்டேன், எனக்கு பேச டைம் இல்லை, அதைவிட இப்போ பேசி ஏதாவது பேச்சு வளர்ந்தா என் மூட் கெடும் ஆகும். இது இண்டர்நேஷனல் மேட்ச் ரிஸ்க் எடுக்க கூடாது”,

“ஐ நீட் டு கோ டு அலெக்ஸான்றியா ஹரி, தட்ஸ் இம்பொர்டன்ட். மணி விட அது என்னோட வோர்ல்ட் ராங்கிங் அதிகரிக்கும், மே பீ நம்பர் ஒன் புரியுதா”, என்றாள்.   

ஹரிக்கும் அவளின் ஆர்வம் புரிந்தது. இது அவளுடைய வெற்றிகளின் நேரம் என்று அவனும் தெரிந்தே இருந்தான்.

“நீ கண்டிப்பா பண்ணுவ ஹனி”,

எஸ் ப்ரீத்தி, இப்போது வெற்றிகளின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தாள். முன்பெல்லாம் ஆடறேன், வந்தா வரட்டும், வரலைன்னா ஓகே, என்பதாக இருந்த அவளின் எண்ணம்.

இப்போது, “ஐ ஷுட் வின்”, என்பதாக மாறியிருக்க, அதை கெடுக்க ஹரிக்கு மனமில்லை.

இந்த தொடர் வெற்றி என்பது சுலபம் அல்ல. அதையும் விட ஒரு முறை வெற்றி பெறுவது ஈசி. ஆனால் அதை எப்போதும் தக்க வைப்பது கஷ்டம். அதற்காக ப்ரீத்தியின் பயிற்சி வகுப்புகள் மிகக் கடுமை.

விளையாட்டின் போது மட்டுமல்ல, ஆஃப் சீசன் ட்ரைனிங் அதை விட முக்கியம். எல்லாம் ப்ரீத்தி நன்றாக செய்தாள். அதன் பலனே இந்த வெற்றிகள்.

“கண்டிப்பா வின் பண்ணுவ ஹனி”, என்று மீண்டும் ப்ரீத்திக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து தான் ஹரி அந்த பேச்சை முடித்தான்.

எதிர் நோக்கிய இங்கிலாந்து பயணம், இறங்கும் வரை ஹரியின் ஞாபகம், இறங்கிய பிறகு அங்கிருந்த விளையாட்டு சூழல் பார்த்த பிறகு ஹரியை மறந்தே விட்டாள்.

வெற்றி மட்டுமே ப்ரீத்தியின் இலக்கு……. பெண்ணின் தீவிரத்தை பார்த்த ராஜசேகரனும் அமைதியையே கடை பிடித்தார்.

வந்துவிட்டாயா என்ற ஹரியின் மெசேஜிற்கு, “எஸ்”, என்பது போல ஒரு பதில் அவ்வளவே, பின்பு கவனம் முழுவதும் விளையாட்டு மட்டுமே.

ப்ரீத்தி எப்போதும் விளையாட்டு என்று வந்து விட்டால் இப்படி தான் என்று தெரிந்த ஹரியும், அவளுக்கு ஆல் தி பெஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பிக் கொண்டிருந்தான்.

பைனல் மேட்ச் அன்று மேட்ச் ஆரம்பிக்கும் சமயம் ஹரி அங்கு வந்துவிட்டான். ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் ப்ரீத்தி இல்லை. கவனம் முழுவதும் மேட்சில் மட்டுமே.

அரங்கும் நிரம்பியிருக்க, ராஜசேகரனுக்கு பின் புறம் தான் ஹரி அமர்ந்திருந்தான். ஹரி கவனித்து விட்டான், ஆனால் அவர் கவனிக்கவில்லை.

இவ்வளவு நேரம் இருந்த தைரியம் ஹரிக்கு சற்று குறைந்தது. என்ன சொல்லுவாரோ? எப்படி எதிர் கொள்ளுவது என்று பயமாக இருந்தது.

அதனால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து ப்ரீத்தியை பார்க்கும் சந்தோஷம் கூட தொற்றவில்லை.

நான் அருகில் இல்லையென்றாலும், உங்கள் பெண் என்னைத் தான் நினைப்பாள் என்று ஜம்பம் பேசிவிட்டு, இப்போது நேரில் பார்க்கா விட்டாலும் இந்த ஆன்லைன் தொடர்பில் அவளோடு இருந்ததை, அவளின் சார்ப்பாக வேலைகள் செய்வதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்று டென்ஷனாக இருந்தது.

அவரிடம் இருந்து கவனத்தை ப்ரீத்தியிடம் திருப்பினான். இரண்டு வருடத்தில் ப்ரீத்தியின் தோற்றம் சற்றும் மாறவில்லை. அப்படியே தானிருந்தாள். அவளின் விளம்பரங்களில் வந்த போது டீ வியில் பார்த்திருந்தான், அப்போது சற்று தோற்ற மாற்றமோ என்று தோன்றியிருந்தது, இல்லை அப்படியே தானிருக்கிறாள், அது கேமரா முன், மே பீ மேக் அப் பாக இருக்கலாம் என்று தோன்றியது. 

ஆனால் அந்த நடை உடை பாவனைகளில் சற்று மாற்றங்கள். இன்னும் இந்த பெண் வளர வேண்டும் என்று எப்போதும் அவனுடன் ப்ரீத்தி பேசும் போது நினைப்பது, இப்போது அவளை நேரில் பார்க்கும் போது சற்றும் பொருந்தவில்லை.

மேட்சில் பாயிண்ட்ஸ் எடுத்த போதும் குதிக்கவில்லை, பாயிண்ட்ஸ் விட்ட போதும் முகம் சுருக்க வில்லை. சற்று புன்னகை முகம் எப்போதும், அதையும் விட விளையாட்டின் கவனம் தான் முகத்தில்.

பேசும் பேச்சுக்களில் தெரியாத வித்தியாசம் இப்போது ஹரிக்கு தெரிந்தது, நிச்சயம் ப்ரீத்தி வளர்ந்து விட்டாள் என்று.

மேட்ச் மிகவும் க்ளோசாக சென்றது, யார் ஜெயிப்பார்கள் என்று பார்த்த உடனே அனுமானிக்க முடியவில்லை.

போகப் போக தோற்று விட்டால் ப்ரீத்தி அப்செட் ஆகிவிடுவாளே என்று ஒரு கட்டத்தில் ஹரி நினைத்தான்.

ப்ரீத்தி தோற்றுவிடுவாள் என்று தான் மேட்ச் தோற்றமளித்தது, ஹரி மிகவும் டென்ஷனாக அமர்ந்திருக்க, கடைசி நிமிடத்தில் ப்ரீத்தி வெற்றி பெற்றே விட்டாள்.

ஹரிக்கு மிகவும் ஆச்சர்யம் தோற்றுப் போகும் மேட்சில் ப்ரீத்தி வென்றே விட்டாள். அந்த வெற்றி கொடுத்த சந்தோசம், எல்லோரின் பாராட்டுக்களை சற்று உள் வாங்கியவள், அதன் பிறகே சுற்றுப் புறம் உணர்ந்து இந்த ஹரி வருகிறேன் என்று சொன்னானே வந்து விட்டானா இல்லையா என்று கண்களை சுற்ற விட்டாள்.

ப்ரீத்தியின் பேசும் விழிகள் இரண்டு வருடம் கழித்து என்னைப் பார்க்கும் போது என்னிடம் என்ன பேசப் போகிறது என்று ஹரி ஆர்வமாக பார்த்திருந்தான்.  

அவள் பாட்டிற்கு கோர்ட்டை சுற்றி பார்வையை ஓட்டினாள். ப்ரீத்தியின் பார்வை யாரையோ தேடுவதை பார்த்த ராஜசேகர், “யாரைம்மா தேடுற?”, என்று கேட்கவும்,

“என் மேனேஜர்பா! உங்க கிட்ட காட்டுறேன்னு சொல்லியிருந்தேன் தானே”, என்று பார்வையை மேலும் நின்று நிதானித்து சுழல விட்டாள். ராஜசேகருக்கு பின்புறம் தானே ஹரி இருந்தான்.

அவள் அதனை விட்டு பார்வையை மற்ற திக்கில் எட்டப் போட்டவள், அவன் வரவில்லை என்பது போல தோன்ற முகம் சுருங்க ஆரம்பித்தது.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஹரியின் முகத்தில் புன்னகை,

ஒரு வேளை ஏதாவது மெசேஜ் அனுப்பியிருக்கிறானா என்று பார்க்க மொபைலை அப்பாவிடமிருந்து வாங்கி பார்க்க,

அவள் தன்னை தேடுவதை பார்த்தவன், “இங்க தான் இருக்கேன், நிமிர்ந்து பார்”, என்று மெசேஜ் அனுப்பினான்.

ப்ரீத்தி அவசரமாக நிமிர்ந்து பார்க்கவும், ஒற்றைப் புருவம் உயர்த்தி ஹரி புன்னகைக்க……. ப்ரீத்தியின் முகத்தில் அவனைப் பார்த்து விட்ட உற்சாகம் தொற்றியது.

“ஹரி”, என்று உதடுகள் தானாக உச்சரித்தது. அந்த பெயரைக் கேட்ட ராஜசேகரன் அப்படியே நின்று விட, கண்களால் ஹரியை அருகில் வா என்பது போல அழைத்தாள், அணுஅணுவாய் ஹரியின் தோற்ற மாற்றத்தை ரசித்தபடி.

ஆம், ஹரி இன்னும் ஹேண்ட்சமாக தெரிந்தான், ப்ரீத்தியின் கண்களுக்கு. நிஜமாகவும் தோற்ற மாற்றம் தான். லண்டன் வாசம் இன்னும் அவனை ஸ்டைலாக மாற்றியிருந்தது. இத்தனை நாட்களாக ஒரு ஃபோட்டோவைக் கூட அவன் கண்களில் காட்டவில்லை.

ப்ரீத்தியின் பார்வையில் தெரிந்த ஆர்வம், அதையும் மீறித் தெரிந்த காதல் ராஜசேகரனை ஸ்தம்பிக்கச் செய்தது.

ஹரி என்ற பெயரே யார் என்பதை அவருக்கு உணர்த்தியிருக்க, அவருக்கு அவனைப் பார்க்கக் கூட விருப்பமில்லை.

அசையாமல் நின்றிருந்தார்.

ஹரி அருகில் வந்ததும் முகம் மலர்ந்து ப்ரீத்தி சிரிக்க, ஹரியின் முகமும் சந்தோஷத்தை பூரணமாக காட்டியது. ஆனால் நிமிடமே, கண்களால் ப்ரீத்தியின் தந்தையைக் காட்டினான்.

ப்ரீத்தியும் கட்டுக்குள் வந்தவள், “அப்பா”, என்று அவரை அழைத்து அவருக்கு பக்கவாட்டில் நின்றிருந்த ஹரியை கைபிடித்து அவரின் முன் நிறுத்தினாள்.

“நான் என்ன சொன்னேன்! நீ என்ன செய்திருக்கிறாய்!”, என்று ஹரியை ராஜசேகரனின் கண்கள் குற்றம் சாட்டியது.

“இவர் கிட்ட இருந்து தான் இவர் பொண்ணு கண்ல பேசக் கத்துகிட்டு இருப்பாளோ”, என்று தான் ஹரிக்கு நினைக்கத் தோன்றியது.

அதே சமயம் ராஜசேகரனை நேர்கொண்டப் பார்வை பார்த்தான், பார்வையை விலக்கவில்லை. ஹரியை பொருத்தவரை அது உண்மையான பார்வை. ஆனால் ராஜசேகரனுக்கு ஹரி தன்னைத் திமிராக பார்ப்பதுப் போலத் தான் தோன்றியது.

“பார்த்தாயா, உன் மகள் என் பின்னால் தான் சுற்றுகிறாள்”, என்பது போல.

அவ்வளவு சிறந்து விளங்கும் தன் மகள், சரியாகத் தேர்ந்தெடுத்திருப்பாள், என்று ஒரு நொடி கூட ராஜசேகரனுக்குத் தோன்றவில்லை.

ஹரி சொன்னது ஒன்று, செய்தது ஒன்று, ஏமாற்றுக்காரன் போல ஒரு உருவகம் தான் அவருள் பதிந்தது.

தன் மகள் அறியாப் பிள்ளை, தெரியாமல் இவன் பால் சாய்ந்து விட்டாளோ என்று தான் தோன்றியது.

அவளை ஹரியிடம் இருந்து காப்பது தலையாய கடமையாய் தோன்றியது.

இப்படி பலதும் தோன்றியதால் ஹரியின் புறம் பார்வையைத் திருப்பவில்லை. அவன் கை கூப்பி, “வணக்கம் அங்கிள்”, என்று சொல்லிய வணக்கத்தையும் ஏற்கவில்லை. 

ப்ரீத்திக்கு தான் கோபம் எட்டிப்பார்த்து, ஹரி அவர் என்ன செய்தாலும், அலட்சியப் படுத்தினாலும், அவமானப் படுத்தினாலும் கண்டுக்கொள்ளக் கூடாது என்ற முடிவோடு தான் வந்திருந்தான்.

“அப்பா, இது ஹரி, என்னோட ஃபிரண்ட்”, என்று மறுபடியும் அவரின் முன் இழுத்து நிறுத்தினாள், அவர் பார்த்து தான் ஆகவேண்டும் என்பது போல.

“ஷ், என்ன ப்ரீத்தி இது”, என்று ஹரி தான், “அமைதியாயிரு”, என்பது போலச் சொன்னான்.

“நம்ம போகலாம் ப்ரீத்தி”, என்பது போல அவர் கிளம்ப,

“அப்பா இன்னும் ட்ராஃபி குடுக்கலை”, என்று ப்ரீத்தி ஞாபகப்படுத்தினாள்.

அதற்குள் ப்ரீத்தியின் டீம் கோச் வர, அவரோடு செல்ல வேண்டிய நிர்பந்தம் ப்ரீத்திக்கு,

“வந்துடறேன்”, என்பது போல ஒரு பார்வை பார்த்துக் கோச்சுடன் செல்லவும்,

“சரியான ஆள் நீ, என்கிட்டே பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்னு சொல்லிட்டு, என் பொண்ணோட தொடர்புல தான் இருந்திருக்க”, என்றார் கோபமாக ஹரியைப் பார்த்து.

“நீங்க சொன்ன மாதிரி பார்க்கவோ, பேசவோ, இல்லை!”, என்று ஹரி சொல்லவும்,

“புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா! நான் எந்த தொடர்பும் இருக்கக் கூடாதுன்னு சொன்னேன். என்னவோ நான் இல்லைன்னாலும் உங்க பொண்ணு என்னை தான் நினைப்பான்னு சொன்ன, அந்த தைரியம் உனக்கு இருந்திருந்தா எந்த தொடர்பும் அவளோட இல்லாம இருந்திருக்கணும்”.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஹரி நிற்க,

“உனக்குத் தெரியும், நீ அவளோட பக்கத்துல வந்து, அவளை உன் பக்கமா திருப்பியிருக்க, நீ பார்க்கலைன்னா அவ உன்னை மறந்துடுவான்னு அவளோட தொடர்புல இருந்திருக்க”,

“இப்போ அவளோட புகழ், பணம், அதுக்காகத் தான் அவ பின்னாடி வர்ற”,

“நான் தான் முன்னாடியே சொன்னேன் தானே, உன்னை மாதிரி ஒரு மாப்பிள்ளை என் பொண்ணுக்கு வேண்டாம்னு……”,

“எவ்வளவு புத்திசாலித்தனமா அவளோட மேனேஜர்ன்னு சொல்லி அதுலயும் நீ பணம் பார்த்திருக்க…..”, என்று அவர் இன்னும் கோபமாக வார்த்தைகளைக் கடித்து துப்ப,

அதற்கு தான் வாய் திறந்து பதில் சொன்னான் ஹரி, “இல்லை, சின்ன பொண்ணு, தெரியாம எதுலயும் கையெழுத்துப் போடக் கூடாது. நீங்களும் கூட இல்லை, அதான் ஒரு செக்யுரிடிக்காக மட்டும் தான் நான் கையெழுத்துப் போட்டேன்”, என்றவனிடம்.

“அப்போ அவ சின்னப் பொண்ணுன்னு உனக்கேத் தெரியுதில்ல, அப்புறம் உன்னை எப்படி சரியா செலக்ட் பண்ணுவா, நீ என் பொண்ணுக்கு வேண்டாம்”, என்றார் அதுதான் அவரின் முடிவு என்பது போல,

நிறைய நினைத்துக் கொண்டு வந்தான், எப்படி அவரிடம் பேச வேண்டும், எப்படி அவரை கன்வின்ஸ் செய்ய வேண்டும் என்பதாக, நிறைய யோசித்து வைத்திருந்தான், பேச பயிற்சி கூட செய்து பார்த்திருந்தான்.

ஆனால் அந்த சமயம் மூளை பேசு என்று கட்டளையிட்ட போதும், மனது செய்யாதே, பேசிப் பேசி கொண்டு வரப்படுவதல்ல நம்பிக்கை, நீ என்ன விற்பனைக்கு இருக்கும் பொருளா? அதன் அருமை பெருமைகளைச் சொல்லி வாங்குங்க என்பது போல தோன்ற, அமைதியாகத் தான் இருந்தான்.  

“பணத்துக்காகத் தான் என் பொண்ணு பின்னாடி நீ சுத்தற, இல்லைன்னா என்னவோ நான் சொல்றதைக் கேட்கற மாதிரி என் பொண்ணு கிட்ட நல்ல பேர் எடுத்து, அதே சமயம் அவளோட தொடர்புலையும் இருந்து மேனேஜர்ன்னு சொல்லி, அவளை பணம் பார்க்க வெச்சு, அது மூலமா நீயும் பணம் பார்த்திருக்க….. இது தான் உண்மை”, என்று ஆணித்தரமாக அவர் ஹரி குற்றவாளி போலப் பேச,

“ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரெஷன்ங்க்ற மாதிரி என்னவோ உங்களுக்கு என்னை பிடிக்கலை. அந்த கண் கொண்டே நீங்க என்னை பார்க்குறீங்க, இப்பவும் சொல்றேன், ப்ரீத்தியோட வளர்ச்சி, அதே சமயம் அவ சேஃபாவும் இருக்கணும்ங்கறதுக்காக தான் நான் அவளுக்கு பதிலா சைன் பண்ணினேன், பணதுக்காக இல்லை”, என்றான் அப்போதும் பொறுமையாக.

“கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி நான் எந்த வகையிலையும் தொடர்புல இல்லைனாலும், ப்ரீத்தி என்னை கண்டிப்பா மறந்திருக்க மாட்டா”, என்று ஆணித்தரமாக பேசினான்.

“அவ்வளவு கான்ஃபிடன்ஸ் இருக்குறவன், கண்டிப்பா தொடர்புல இல்லாம இருந்திருக்கணும், ஏன் இருந்த?”,

“அது அவளோட வளர்ச்சிக்கான பீரியட், அவளை ரொம்ப மைன்ட் ஸ்ட்ரெஸ்ல வைக்க வேண்டாம்னு தான்”, என்று சொல்ல……

“ஏன், இத்தனை வருஷமா நீ இல்லாம என் பொண்ணு வளரலையா? அச்சீவ் பண்ணலையா”,

“கண்டிப்பா இப்போவும் இது அவளோட வளர்ச்சி தான், ஜஸ்ட் என்னோட மனசோட ஒரு பயம், அவளோட சேஃப்டி…”, என்று மறுபடியும் ஹரி சொல்ல,

“என்ன பெரிய சேஃப்டி, உன்னால தான், உன்னை பார்த்த நாள்ல இருந்து தான், அவளுக்கு பிரச்சனையே. நீ என்னோட பொண்ணு வாழ்க்கையில வேண்டாம். எப்பவும் நான் தான் பயந்துட்டு இருக்கேன், அந்த விஷயம் யாருக்காவது தெரிஞ்சு என் பொண்ணைப் பத்தி எல்லோரும் தப்பா பேசுவாங்களோன்னு. இதுல நீ அவளோட வாழ்க்கையிலையா? வேண்டாம்!”, என்று மறுபடியும் மறுத்தவர்,

“நீ வேணுமானா பாரு, ஒரு சிக்ஸ் மந்த்ஸ் அவளோட நீ எந்த வகையிளையும் பக்கம் வராம இருந்தன்னா, அவ உன்னை மறந்துடுவா”, என்று மறுபடியும் சொல்ல,

“முடியாது, அது என்னால முடியாது”, என்று ஹரியும் தீர்மானமாக மறுத்தான்.

“அப்போ உன்னோட ஸோ கால்ட் அட்ராக்ஷன் மேல உனக்கு நம்பிக்கையில்லைன்னு சொல்லு”, என்றார்.

அப்போதும் அவர் காதல் என்ற வார்த்தையைக் கூட உபயோகிப்பதை விரும்பவில்லை என்று புரிந்தவன்.

“யாருக்கும் என் காதலை ப்ரூவ் பண்ணனும்னு எனக்கு அவசியமில்லை”, என்றான் இன்னும் தெளிவாக.

ராஜசேகரன் அவனைக் கோபமாக பார்க்க, ஹரியும் அவரை நேர் பார்வை பார்த்தான்.

“என்ன உன்னோட தகுதின்னு உனக்கு இவ்வளவு திமிர்”, என்பது போல ராஜசேகரன் பேச,

“உங்க பொண்ணுக்கு என்னைப் பிடிச்சிருக்கு, அந்த தகுதி போதும்”, என்றான்.

“அப்போ வேற உன்கிட்ட சொல்ற மாதிரி ஒன்னுமில்லைன்னு சொல்லு!”, என்று சற்று இளக்காரமாக கேட்க,

“என்னோட ஏஜ்ல உங்ககிட்ட என்ன தகுதி இருந்ததோ, கண்டிப்பா அதை விட என்கிட்டே அதிகமா இருக்கும், உங்க ஸோ கால்ட் குடும்ப சொத்தை தவிர்த்து”, என்றான் அலட்சியமாகவே.

பணிவு! ஒழுக்கம்! மரியாதை! இவற்றை மட்டுமே எல்லாவற்றையும் விட அதிகமாக போதிக்கும் ஆசிரியப் பெற்றோரின் மகன் என்பதையே மறந்தான்.

இப்படி எல்லாம் ஹரி பேச வேண்டும் என்று நினைக்கவேயில்லை. ஆனால் என்னவோ அவன் பணத்திற்காக ப்ரீத்தியின் பின் வருவது போல, அதுவும் அவன் பணம் எடுத்துக் கொண்டதுப் போலப் பேச, கூடவே அவனின் செல்வ நிலையம் சொல்வது போல இல்லாததால், அந்த தாழ்வுணர்சியைக்  கொண்டும், ஹரியும் இந்த முறையிலேயே பதில் கொடுத்தான்.   

“கண்டிப்பாக என் பெண்ணை இவனுக்கு கொடுப்பதில்லை”, என்று ராஜசேகரனும் மனதிற்குள் தீர்மானம் எடுத்துக் கொண்டவர், அதைக் கண்களால் வெளிப்படுத்த.   

“என்னைத் தவிர உன் மகளை யாருக்குக் கொடுப்பாய் என்று நானும் பார்க்கிறேன்”, என்று ஹரியும் கண்களால் பதில் கொடுத்தான்.

இதை எதையும் அறியாத ப்ரீத்தி கோச் சொன்ன ஃபார்மாலிட்டீஸ் முடித்து, வெற்றிக் கோப்பையை வாங்கும் ஆர்வத்தில் அவர்களிடம் விரைந்து வந்தவள்,

“அங்க போகலாம்பா”, என்று அப்பாவிடம் சொல்லி, “பின்னால் வா”, என்று ஹரியிடமும் கண்களால் சொல்லி, அவள் பாட்டிற்குச் செல்ல,

அது அவளின் வெற்றியின் தருணம் என்பதை உணர்ந்து ராஜசேகரனும் ஹரியும் பின் சென்றனர். இருவருக்குமே ப்ரீத்தியின் சந்தோஷம், அவளின் வெற்றி மட்டுமே முக்கியம்.

இங்கே முடிவெடுப்பவள் ப்ரீத்தி தான் என்பது காலம் தான் இருவருக்கும் புரிய வைக்க முடியும்.

Advertisement