Advertisement

அத்தியாயம் பதினைந்து:

ஹரி அந்த  விளம்பரக் கம்பனியிடம் பேசி, டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் முடிவு செய்து, அந்த காப்பியை அவனுக்கு அனுப்பச் செய்து, ப்ரீத்தியின் சார்பாக அவன் தான் கையெழுத்தே போட்டான்.

என்னவோ ப்ரீத்தி சின்ன பெண், அவளுக்கு இதைப் பற்றி தெரியாது அவள் எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.

ஏனென்றால் இந்த டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் முடிவு என்பது அப்படி. தேவையில்லாத ஷரத்துக்களை முக்கியம் போல பெரிதாக போட்டு, மிகவும் அவசியமானதை நமது கவனத்திற்கு வர விடாமல் ஒரு இரண்டு வரியில் எங்காவது போட்டிருப்பர்.

இயல்பாகவே விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஹரியின் ஆர்வம், இப்போது மேனேஜ்மென்ட் கோர்ஸ் வேறு, இந்த மாதிரி விஷயங்களை ஹரி தெரிந்து வைத்திருந்ததால், ப்ரீத்தியின் சைனிங் அதாரிட்டியாக ஆனான்.

அவளுடைய தந்தைக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று மனம் முதலில் நினைக்கவில்லை. ப்ரீத்திக்கு இந்த மாதிரி விஷயங்கள் தேவையில்லை என்பதாக தான் ஹரியின் நினைப்பு. அதன் பிறகு அவளின் தந்தைக்கு தெரிந்தால் என்ற கேள்வி மனதில் எழுந்த போது ,

ஹரியின் மனதில் எழுந்தது ஒன்றே தான். நான் சரியானவனா தவறானவனா என்றே அவரால் அனுமானிக்க முடியவில்லை. அதை தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றாலும், என்னவோ மகளை பார்த்துக் கொள்ள வேண்டும், காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும், அவருக்கு புத்திசாலித்தனம் பற்றாது என்பதாக தான் அவனின் எண்ணமாக இருந்தது.

ப்ரீத்தியும் படிப்பை முடித்து விட்டாள், தானும் முடிக்கப் போகும் சூழ்நிலையில், தான் ப்ரீத்தியின் வாழ்க்கையில் இருக்கிறோம், இனி தெரிந்தால் தெரிந்து கொள்ளட்டும் என்று தெரிந்தே ப்ரீத்தியின் சைனிங் அதாரிட்டி ஆனான்.

ஹரி அதை சற்றும் அதிகப் பிரசிங்கித்தனமாக நினைக்கவேயில்லை. ப்ரீத்தி அவனின் பொறுப்பு என்பதே அவனின் எண்ணமாக இருந்தது.

நமக்கு சரியென்று படும் எண்ணங்கள், அடுத்தவரின் பார்வைக்குத் தவறாக போகும் என்று அவன் யோசனைக்கு வந்தாலும், இது ப்ரீத்தியின் முடிவு இதில் யார் என்ன சொல்ல இருக்கிறது என்று விட்டு விட்டான்.

ஹரியின் பேச்சு டீலிங் எல்லாம் பக்கா ப்ரொஃபஷனலாக இருந்தது. அவன் இதற்கு புதியவன் என்று பேசும் யாருக்கும் தெரியவரவேயில்லை.

அமௌன்ட் பேசி முடித்து ப்ரீதியிடம் சொன்ன போது, இவ்வளவு பணமா என்று ப்ரீத்தி வாயைப் பிளந்தாள். 

ஹரிக்கு அதுவே குறைவு என்பதாக தான் எண்ணமாக இருந்தது. ஏனென்றால் அதிகமாக கிரிக்கெட்டில் பிரபலமானவர்களை வைத்து தான் அந்த நிறுவனம் விளம்பரம் எடுக்கும். அவர்களுக்கு கொடுக்கும் பணத்தில் இது மிகவும் கொஞ்சம் தான் என்பது ஹரிக்கு தெரியும்.

இதை பற்றி சற்று தீவிரமாக அலசி ஆராய்ந்தே வேலையில் இறங்கியிருந்தான்.

இதற்கே ஒரு மாதம் ஆகியிருந்தது.  

ப்ரீத்திக்கு இந்த பணமே மிக அதிகம். ஐயோ இவ்வளவா என்று வாயைப் பிளந்தாள்.

அதனால் ஆர்வமாகவே ப்ரீத்தி விளம்பரத்தில் நடித்தாள்.   

ஜஸ்ட் இரண்டே நாட்கள் ஷூட்டிங், ப்ரீத்தியின் பெயர் போட்டு அவளை அவளாகவே ப்ரொஜெக்ட் செய்து, விளம்பரம் எடுத்து இருந்தனர்.  

மிகவும் நன்றாக இருந்தது. ப்ரீத்திக்கு போட்டோஜெனிக் ஃபேஸ், நேரில் விட அந்த விளம்பரத்தில் மிகவும் அழகாக, அழகாக என்பதை விட, எல்லோரையும் கவர்ந்திழுக்கும் முக அமைப்பில் இருந்தாள்.  ஸ்போர்ட்ஸ் பெர்சன் என்பதால் நல்ல உடலமைப்பு…… நல்ல ரீச் அவளுக்கு அந்த விளம்பரத்தில்.

பணமே ஹரியின் அக்கௌண்டில் தான் போடப்பட்டது. டிரான்ஷாக்ஷன் சார்ஜெஸ் என்று அந்த டிரான்ஸ்பரின் போது பணம் பிடிக்கப்பட்டு இருக்க, அந்த சிறு துளி கூட குறையாமல் அப்படியே ப்ரீத்தியின் அக்கௌண்டிற்கு அவன் கையில் இருந்து பணம் போட்டு ஹரி மாற்றி விட்டான்.

ப்ரீத்தியை இப்போது அனேகம் பேருக்கு தெரிந்தது.

ராஜ சேகரன் பயந்து கொண்டிருக்க எல்லாம் சரியாக வந்ததில் அவருக்கு மிகவும் திருப்தி. அவர் விவரங்கள் கேட்ட போது ப்ரீத்தி அந்த டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் பற்றியெல்லாம் சொல்ல,

என்னவோ எல்லாம் மிகவும் புத்திசாலித்தனமாக தன் மகள் செயல் பட்டு பிரபலமாகி விட்டதாக அவருக்கு எண்ணம்.

இதில் ப்ரீத்தி புத்திசாலியா இல்லையா என்று தெரிந்துக் கொள்ள யாருக்கும் சந்தர்ப்பமேயில்லை. எல்லாம் தான் ஹரி செய்து விட்டானே.

அதனால் ப்ரீத்தி புத்திசாலியா, இந்த மாதிரி விஷயங்களிலும் கவனமாக இருப்பாளா தெரியவில்லை.

பணம் என்ற விஷயம் அதிகமாகும் போது எல்லோருக்கும் மகிழ்ச்சியே. ப்ரீத்திக்கு ஒரே விளம்பரத்தில் இவ்வளவு பணம் கிடைக்க குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ப்ரீத்திக்கு இப்போது புது, புது நண்பர்கள் கூட. எப்போதும் போனில் பேசியபடி இல்லை, லேப்பில் சேட்டில் இருந்தபடி, இல்லை யாரவது பார்க்க வர, ப்ரீத்தி வெளியில் போக என்று எப்போதும் பிஸி.

மாலினிக்கு பெண்ணை நினைத்து சற்று கவலையாக இருந்தது. தங்கள் கைக்குள் பெண் இல்லையோ என்பது போல ஒரு எண்ணம். அதிகமாக பெண்ணிற்குக் கட்டுப்பாடோ, அப்படி செய், இப்படி நட என்று சொல்லிப் பழக்கம் இல்லாததாலோ ப்ரீத்திக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ராஜசேகரனிடம் சொன்ன போது, கொஞ்சம் பாபுலர் ஆகிட்டா அதனால் இருக்கும் என்று மனைவியை சமாதனம் செய்து விட்டாலும், அவருக்குமே மனதில் ஒரு நெருடல்.

இப்போதெல்லாம் ப்ரீத்தி அவரிடம் எதுவும் செய்யட்டுமா என்று கேட்பதேயில்லை, செய்து விட்டேன் என்று தகவல் சொல்லுவதோடு சரி.  

நாம் தான் அங்கு போகப் போகிறோமே, இன்னும் மூன்று மாதங்கள் தானே என்று அவரை அவரே சமாதானப்படுத்திக் கொண்டார்.      

எது எப்படி இருந்தாலும் ப்ரீத்தி ப்ராக்டிஸ் என்ற ஒன்றை நிறுத்தவேயில்லை. அதனால்  விளையாட்டைப் பொருத்தவரை அவள் முன்னேறிக் கொண்டு தான் இருந்தாள்.

உலக அளவிலான ஸ்குவாஷ் போட்டிகள் இன்னும் மூன்று மாதத்தில் இங்கலாந்தில் நடக்க இருக்க…… இந்தியாவின் சார்ப்பாக ப்ரீத்தியும் தேர்வாகி இருந்தாள்.

அதற்கான தீவிர பயிற்சியில் இருந்தாள்.   வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தையும் மீறி, இங்கிலாந்து போகப் போகிறோம். அதனால் ஹரியைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இன்னும் உற்சாகமாகச் செயல் பட வைத்தது.

அந்த விளம்பரம் இன்னும் அதிகமாக ப்ரீத்தியை அடையாளம் காட்டியிருக்க, அதன் பொருட்டும் ஜெயிக்க வேண்டிய ஒரு நிர்பந்தத்தில் இருந்தாள்.

இரண்டு மாதங்கள் கடந்திருக்க, இண்டர்நேஷனல் லெவலில் புகழ் பெற்ற ஒரு ஷூ நிறுவனம் ப்ரீத்தியை அதன் விளம்பரத்திற்கு அணுகியது.

ப்ரீத்தி உடனே ஹரிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, அவர்களுக்கும் ஹரியின் கான்டாக்ட்  நம்பரை கொடுத்து விட்டாள். ஹரியிடம் கேட்க வேண்டும் பெர்மிஷன் வாங்க வேண்டும் என்பது போல எல்லாம் ப்ரீத்தியின் எண்ணமில்லை.

ஹரி இந்த வேலையை நன்றாக செய்கிறான் என்பது தான் அவளின் எண்ணம். அதாவது ஹரி விஷயம் தெரிந்தவன் என்பதால் தான் அவனிடம் சொல்லியதற்குக் காரணம். மீறிப் போனமுறை போல அவனிடமோ தந்தையிடமோ கேட்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவேயில்லை.

கேட்கக் கூடாது என்பது எண்ணமில்லை…. ஆனால் தோன்றவில்லை.    

ஹரியிடம் விட்டு விட்டாள், அவ்வளவு தான் அவளுக்கு தெரியும், ஹரி அவளுடன் சேட்டில் இருந்தாலும் அந்த ஷூ விளம்பரம் பற்றி எதுவும் சொல்லவில்லை. கிட்ட தட்ட இருபது நாட்கள் கழித்து, “அந்த ஆட் நீ பண்ணு. நான் எல்லாம் பேசிட்டேன், சைன் பண்ணிடட்டுமா”, என்று கேட்க,

“ம், சரி, டெர்ம்ஸ், கண்டிஷன்ஸ், பேமென்ட் எல்லாம்  ஓகே ன்னா, எனக்கும் ஓகே”, என்றவளை,

“உங்கப்பாம்மா கிட்ட பேசு, ப்ரீத்தி”, என்று ஹரி சொல்லவும் தான்,

“ஆமாமில்லை, மறந்துட்டேன்”, என்றாள்.

அதாவது பெற்றோரிடம் சொல்லக் கூடாது என்பது இல்லை. ஆனால் ப்ரீத்தி இப்போது சற்று தனிச்சையாக செயல்பட ஆரம்பித்து இருந்தாள் என்பது உண்மை.  

இது திடீரென்று வந்த இயல்பா இல்லை, அவளதே அப்படித்தானா யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால் முன்பு இப்படி எந்த விஷயமும் அவளின் வாழ்க்கையில் இல்லை அதனால் கேட்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் இப்போது அப்படி இல்லை, எல்லாம் பெரியப் பெரிய முடிவுகள். அவளும் கேட்கவில்லை.

அந்த ஷூவிற்கான விளம்பரம் அவளின் இங்கிலாந்து பயணத்திற்கு ஒரு வாரம் முன்பு இருந்தது.

ஒரு மாதிரி மிகவும் டைட்டாக இருந்தன, அவளின் பொழுதுகள்.

ஷூட்டிங் வேறு பாம்பேயில், பயம் என்று இல்லை ப்ரீத்திக்கு. ஆனால் தனியான பொழுதுகள், பயணங்கள் எப்போதும் விரும்ப மாட்டாள்.

பேசாமல், “வேண்டாம்”, என்று சொல்லிவிடலாமா என்பதாகக் கூட எண்ணம் போனது.

சரியாக அந்த நேரம் அவளின் அப்பா ராஜசேகரன் வந்து விட்டார். அவளுடன் அவர் வர அதனால் ப்ரீத்தி சமன்ப்பட்டு விட்டாள்.

அவளுடன் வந்த ராஜசேகருக்கு எல்லாம் பிரமிப்பாக இருந்தது. அது வேறு உலகம், விளம்பர உலகம். மிகவும் பரபரப்பாக இருந்தது. ப்ரீத்தி என்னவோ கூலாக தான் இருந்தாள்.

அதுவும் இரண்டு நாட்கள் தான் ஷூட்டிங். கூட ஒரு வளர்ந்து வரும் கிரிக்கெட்டர் ஒருவனும் இருந்தான். இப்போது இந்திய அணியில் ஒரு முக்கியமான இடத்தில் இருக்கும் ஆல் ரௌண்டர் விஷால்.

ஹரி சொல்லியிருந்தான் தான். அதனால் ப்ரீத்திக்கு இது முன்பே தெரியும்.

முன்பு செய்திருந்த எனர்ஜி ட்ரிங்க் ப்ரீத்தி மட்டுமே இருந்தாள். இப்போது வேறு ஒருவருடன் நடிப்பது ராஜசேகரனுக்கு தேவையா என்பது போல் தான் இருந்தது.

“ஏன் ப்ரீத்தி? கூட வேற ஒருத்தர் நடிக்கறாங்கன்னு சொல்லவேயில்லை”.

“இது ஒரு விஷயமா”, என்பது போல பார்த்த ப்ரீத்தி, “ஏன்பா? அதனால என்ன?”, என்றாள்.

“இல்லை, அவாய்ட் பண்ணியிருக்கலாம்”, என்பது போல அவர் பேசவும்,

“ஏன்பா? இப்போ டபில்ஸ் மேட்ச் எல்லாம் மென்ஸ் கூடக் கூட நான் ஆடறேனே”,

“அது ஸ்போர்ட்ஸ் மா”,

“இது மட்டும் என்ன? ஆட் தானேப்பா”, என்றாள் ஈஸியாக.

கிரௌண்ட் ப்ராக்டிஸ் அந்த ஷூவைக் கொண்டு என்பது போல, சில ஷாட்ஸ் விஷாலையும் ப்ரீத்தியையும் வைத்து எடுத்தவர்கள், பின்பு அவரவர் துறைகளில் ஒரு ஷாட், அதன் பின் ஒரு பார்ட்டியில் இருவரும் நடனம் ஆடுவது போலவும்,  ப்ரீத்தி ஒரு த்ரீ போர்த்ஸ் ட்ரெசில், அந்த ஷூ வோடு ஆடுவது போலவும், கூட  விஷாலும் ஆடுவது போலவும் எடுத்தனர்.

நல்ல இளமையான காட்சிகள் அவ்வளவே, வேறு எதுவும் ரொமான்டிக்காக கூட இல்லை. பார்த்தால் என்ஜாய் பண்ண தோன்றும் காட்சிகள். இளமை இளமை மட்டுமே.

ஹரி கான்செப்டில் இருந்து, காஸ்டியும் வரை எல்லாம் கிளியராக பேசியிருந்தான். 

அதுவும் அவன் லண்டனில் வேறு இருப்பதால், அந்த ஷூ கம்பனி பேசியிருக்க, அவனும் அந்த ஷூ கம்பனியிடம் அதன் அம்பாசிடராக வேறு ப்ரீத்தி அந்த வருடத்திற்கு இருக்க, பேசிக் கொண்டு இருந்தான்.   அதை இன்னும் ப்ரீத்தியிடம் கூட சொல்லவில்லை.

பணம் என்பது ஒரு புறம் இருக்க ப்ரீத்திக்கு அதனால் கிடைக்கும் பாப்புலாரிட்டி, இன்னும் பல நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு, அதை யோசித்துச் செய்தான். 

எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்காத வாய்ப்பு, எந்த வகையிலும் ப்ரீத்தியைக் கட்டுப் படுத்த ஹரி நினைக்கவேயில்லை.

அந்த வகையில் ஹரி மிகவும் பெருமைக்குரியவன் தான்.   எல்லா ஆண்களுக்கும் இந்த மனப்பான்மை வராது. அவர்களைச் சார்ந்த பெண்கள் சாதிப்பது அவர்களுக்கு பிடித்திருந்தாலும், தாங்களும் அவர்களுக்கு ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்று நினைப்பர்.

ஹரி அது போல எல்லாம் இல்லை. அது ப்ரீத்தி, அது அவளுக்குரிய முயற்சி, அது அவளின் பெருமை, ஷீ டிசெர்வ்ஸ் தட் என்பதில் தெளிவாக இருந்தான். அவளின் மிகக் கடுமையான பயிற்சி செஷன்கள் அவனுக்கு தெரியும்.  

ஸ்குவாஷில் அதிக பணம் பார்க்க முடியாததால், அதனைக் கொண்டு அவள் விளம்பரத்தில் பார்க்கட்டும் என்று நினைத்தான்.  

இது எதுவும் தெரிய வராத ராஜசேகரன், விளம்பரத்தின் போது, விஷால் வேறு சற்று ஆர்வமாக ப்ரீத்தியிடம் பேச, அது இன்னும் எரிச்சலாக வந்தது அவருக்கு.

அவருக்கு இதெல்லாம் புதிது. ப்ரீத்திக்கு இதெல்லாம் சகஜம். அவள் அங்கிருந்த எல்லோருடனும் சகஜமாக பேசிக்கொண்டிருக்க, எப்போதடா இந்த ஆட் முடியும் என்பது போல ராஜசேகரன் முள்ளின் மீது அமர்ந்திருந்தார்.

விளம்பரத்தை எடுத்து முடித்ததும் அந்த விஷாலிடம் சில பேப்பேர்களில் கையெழுத்து வாங்கியவர்கள் அந்த மாதிரி எதுவும் ப்ரீத்தியிடம் எதுவும் வாங்கவில்லை.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜசேகரன், “உன்கிட்ட எதுவும் ஏன் சைன் வாங்கலை”, என்று அவர் கேட்க,

“இல்லைப்பா, நான் பண்ண மாட்டேன், ஹரி….”, என்று சொல்ல வந்தவள், பெயரை சொல்லாமல், “என் மேனேஜர் தான் பண்ணுவான்”, என்றாள்.

“அது யாரு மேனேஜர், எனக்குத் தெரியாம”, என்று ராஜசேகரன் கேட்கவும்,

“என்னோட ஃப்ரண்ட் பா, ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டில மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் பண்றாங்க, இந்த மாதிரி விஷயம் நல்லா ஹேண்டில் பண்ணுவான். அதனால அவரை பார்க்கச் சொல்லிருக்கேன்”, என்றாள்.

ஒருமையிலும் பேசினாள், பன்மையிலும் பேசினாள். அதனால் ப்ரீத்தி அவனுடன் க்ளோஸ்ஸா. இல்லை வியாபாரத் தொடர்பா, ஒன்றும் ராஜசேகரன்னுக்கு தெரியவில்லை.

“என்கிட்டே சொல்லவேயில்லை நீ”, என்று அப்போதும் மனம் தாளாமல் கேட்டுவிட,

“மறந்திருப்பேன் பா”, என்று ஈசியாக ப்ரீத்தி முடித்து விட்டாள்.

விஷாலுக்கு சம்பளமாக பேசிய பணத்தை விட குறைவு தான் ப்ரீத்திக்கு. என்ன இருந்தாலும் கிரிக்கெட்டின் ரீச் அதிகம் தான்.

பாதி பணம் அக்கௌண்டில், பாதி கேஷ் என்பதாக தான் ஹரி பேசியிருந்தான். பணம் ஹரியின் அக்கௌன்டிற்குத் தான் போகும், கேஷை மட்டும் விளம்பரம் முடிந்தவுடனே கொடுத்தனர்.

வாங்கியவள், அப்படியே அப்பாவிடம் கொடுத்து விட்டாள். அவர் தான் எண்ணி, “இவ்வளவு பணமா இதற்கு”, என்று வியப்புடன் பெண்ணிடம் மெதுவாக கேட்க,

“இது பாதி தான்பா, மீதி அக்கௌன்ட்க்கு வந்துடும், இல்லைனா நிறைய டேக்ஸ் வருமாமே அதான்”, என்று சொல்ல,

இவ்வளவு பணம் என்பதில் சந்தோஷத்தை விட சற்று பயம் தான் வந்தது.  இவ்வளவு பணம் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ப்ரீத்தி ஹேண்டில் செய்வது, என்னவோ அவரை தள்ளி நிறுத்துவது போல தான் அவருக்கு தோன்றியது.

பணத்தை அவரிடம் தான் கொடுத்தாள், ஆனால் எந்த பேச்சு வார்த்தையிலும் அவர் இல்லை. அவரின் செல்ல மகளைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவேயில்லை.

எல்லாம் அவரின் கைமீறி என்பதாக தான் அவருக்கு தோன்றியது. தான் என்னவோ அவளுக்கே ஒன்றுமே தெரியாது சின்ன பெண்ணாக அவளை நினைக்க, அவளானால் அவள் இவ்வளவு பணம் விளம்பரத்திற்கு வாங்குகிறாள், இவரோடு நடிக்கிறாள், பணம் எப்படி வருகிறது, எதுவும் சொல்லவில்லை.

இதில் மேனேஜர் வேறு, அவன் யாரோ தெரியவில்லையே என்று கவலையாக இருந்தது.

முழு மூச்சாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தாலும், தான் பார்க்கும் மாப்பிள்ளைக்கு இவள் ஓகே சொல்லுவாளா, ஒரு விளம்பரத்தில் இவ்வளவு பணம் பார்க்கிறாள். இதற்கு இணையாகச் சம்பாரிக்கும் மாப்பிள்ளைக்கு எங்கே போவது,

ஸ்போர்ட்ஸ் மட்டுமென்றால் வேறு, இப்போது யோசிக்காமல் விளம்பரத்திற்கு ஓகே சொல்லிவிட்டோம். எத்தனை பேர்கள் இதை சரியாக எடுத்துக் கொண்டு திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள் என்று அவருக்கு கவலையாகிப் போயிற்று.

முன்பு கோவையில் வந்த அந்த படங்கள் வேறு, ஒரு தந்தையாக கவலைகளின் உச்சத்தில் இருந்தார் அவர்.  

இன்றைய இளைஞர், இளைஞிகளின் போக்கு அவருக்கு பிடிபடவில்லை. ஒவ்வொருக் காலமாற்றத்திலும் பெற்றோருக்குத் தோன்றும் மிகக் கடுமையான மன உளைச்சல் இது.  

இதற்கு பெயர் தான் தலைமுறைகளுக்கான இடைவெளியா? ஜெனரேஷன் கேப்பா?  தலை வலித்தது அவருக்கு.

Advertisement