Advertisement

அத்தியாயம் பதிமூன்று:

ஹரிக்கு விசா கிடைத்து உடனே கிளம்பவும் ஆயத்தமாக, அவன் சென்னைக்கு லண்டன் ஃபிளைட் ஏறுவதற்காக வரும் நாளுக்கு அடுத்த நாள் ஹைதராபாத்தில் ப்ரீத்திக்கு மேட்ச் ஆரம்பிக்க இருந்தது,

ப்ரீத்தி அதனால் இரண்டு நாட்களுக்கு முன் கிளம்ப வேண்டி இருந்தது, கிளம்பியும் விட்டாள்.

“பார்க்கணும், பார்க்கணும்”, என்று அவள் ஜெபிக்க,

“ப்ரீத்தி, நீ மேட்ச் கவனி”, என்று ஹரிக்கு சமாதானம் சொல்வதற்குள் போதும் என்றானது….

இருவருக்கும் வருத்தம் தான். ஆனால் ஹரிக்கு சற்று நிம்மதி. பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் மீண்டும் பார்ப்பது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

“வின் பண்ணனும் ப்ரீத்தி, ட்ரை பண்றேன்னு சொல்லித் தப்பிக்கக் கூடாது, அப்புறம் நீ போடற எஃபோர்ட்ஸ்க்கு பிரயோஜனமில்லை”, என்று ஹரி நீண்ட அட்வைஸ் கொடுக்க,

“இந்த அட்வைஸ் கேட்கறதுக்கு நீ வின் பண்றதே பரவாயில்லை ப்ரீத்தி, இது ப்ரீத்தியோட மைன்ட் வாயிஸ்”, என்று சொல்லிக் கொள்ள, அதை டைப் செய்தாள்.  

“ஆம், ஹரி தான் அவளிடம் நேரடியாக பேசுவது இல்லையே, ஒன்லி சேட் மட்டுமே…. அதுவும் எப்போதாவது தான்”,

“ஏன் உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு, இங்க இருக்கும் போது கூட ஃபோன் செய்ய மாட்டீங்களா”, என்று சில முறை ப்ரீத்தி மெசேஜ் அனுப்ப,

“பிஸி ப்ரிபரேஷன்ஸ்ல”, என்றான். உண்மையில் சற்று டென்ஷனாக இருந்தான். லண்டனில் தெரிந்தவர் என்று யாரும் கிடையாது. அதனால் எப்படி சமாளிக்க போகிறோம், புது இடம் மட்டுமல்ல, புது நாடு கூட. 

அது புரியாமல் ப்ரீத்தி “போடா டேய் போடா”, என்று ஸ்மைலி போட்டு விட,

“கான்சென்ட்ரேட் இன் ஸ்டடீஸ்”, என்று பதிலுக்கு ஹரி மெசேஜ் அனுப்பினான்.

“அதை தான் பண்றேன், உன்னை ஸ்டடி பண்றேன்”, என்றாள் பதிலுக்கு, அதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும் என்பது புரியாமல்.

ஹரிக்கு புன்னகை மலர்ந்தது…… “ஓகே! ஆல் த பெஸ்ட்!”, என்று மெசேஜ் வர, ஸ்மைலி யோடு விடைபெற்று ப்ரீத்தி சென்றது ஸ்குவாஷ் கேம் விளையாட தான்.

ஆம் கேமிற்கு முன் ஹரியோடு பேசி எனர்ஜி ஏற்றிக்கொண்டு இருந்தாள்.

“ப்ரீத்தி டைம் இஸ் அப்”, என்ற சத்தம் கேட்கவும்,

“எஸ் பா, ஐ அம் ரெடி!”, என்று ப்ரீத்தி எழுந்து நின்றாள்.

ஆம், அவளோடு கூட வந்திருந்தது ராஜசேகர், இருபது நாள் விடுமுறையில் முன் தினம் இந்தியா வந்திருந்தவர் ப்ரீத்தி யோடு கூட வந்திருந்தார்.

ஐந்து நாட்கள் நடக்கும் கேம், எல்லாம் கடந்து ப்ரீத்தி பைனலில் நின்ற போது தான் முதன் முறையாக சற்று டென்ஷனாக இருந்தது. வின் பண்ண வேண்டுமே என்று.

அன்று டபிள்ஸ் பைனல், அடுத்த நாள் சிங்கள்ஸ்சிலும் பைனல்,

சீக்கிரம் உறங்கி அதிகாலை எழுந்தவள், ஹரியிடம் மெசேஜ் எதிர்பார்க்க , வரவில்லை.

அவளின் அப்பா கூட இருக்கிறார் என்று தெரிந்த தினத்தில் இருந்து ஹரி அப்ஸ்கான்ட் தான். மெசேஜ் கூட இல்லை.

அவனுக்கு மேலும் எதுவும் சிக்கலாவதில் விருப்பமில்லை. அவன் லண்டன் சென்றதை பற்றி கூட ப்ரீத்தியிடம் விரிவாக சொல்லவில்லை.  

மனதிற்குள் திட்டிக் கொண்டே கோர்ட் அடைந்தாள்…… அவள் டென்ஷனுடன் அமர்ந்திருக்க.

“யூ கேன் டூ இட்”,  என்ற வார்த்தையோடு கூடிய கார்டுடன் ஒரு அழகிய பூங்கொத்தை ஒரு பொக்கே ஷாப்பில் இருந்து வர, டென்ஷன் எல்லாம் வடிந்தது.  

“யூ கேன் டூ இட்”, பக்கத்தில் ஒரு ஹனி பீ ஸ்டிக்கர். அது யார் அனுப்பி இருப்பர் என்று புரிந்தது.  

“யாரும்மா”, என்று அழகிய பூங்கொத்தை பார்த்து ராஜசேகர் கேட்க,

“என் ஃபிரண்ட் பா”, என்று புன்னகை முகமாக ப்ரீத்தி கோர்ட் உள் சென்றாள்.

அதன் பிறகு ப்ரீத்தி நெவர் டர்ன்ட் பேக்…. எஸ் டபிள்ஸ் வின் செய்து சிங்கள்சும் வின் செய்தாள்.

அவளுக்கே சந்தோசம் பிடிபடவில்லை.

வெற்றி கொடுக்கும் சந்தோஷமே அலாதியானது தான். எல்லோரும் புகழ, ராஜசேகருக்கு மகளை குறித்து பெருமை பிடிபடவில்லை.

அது மட்டும் ரெக்கார்ட் அல்ல, அதன் பிறகும் ரெக்கார்ட்ஸ் தான். ப்ரீத்தி படிப்பிலும் பிஸி, விளையாட்டிலும் பிஸி….

லண்டன் வந்த ஹரி ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டான். நல்ல பள்ளி, நல்ல கல்லூரி என்று படித்திருந்தாலும் ஆங்கிலம் அவனுக்கு அத்துப்படி என்று நினைத்திருந்தாலும் ஆரம்பத்தில் அங்கே பேச பழக மிகவும் சிரமப்பட்டான்.

யாரையும் அங்கே அவனுக்கு தெரியவில்லை. அவனாக விழுந்து, அவனாக எழுந்து, இந்தியர்கள் என்று யார் கண்ணில் பட்டாலும் அவர்களோடு பேச முற்பட்டு அங்கே வாழ பழகினான்.   சாப்பாடு , இருக்கும் இட வாடகை அங்கே ஆளை சாப்பிட்டது.

பணம் தண்ணீர் மாதிரி கரைய, பேசாமல் படிப்பை விட்டு இந்தியாவே போய்விடலாமா தன்னால் சமாளிக்க முடியுமா என்று நினைக்கும் நிலைக்கு தள்ளப் பட்டான். 

கல்லூரி கட்டணத்தை விட இந்த செலவுகளை சமாளிப்பது இன்னும் சிரமமாக இருந்தது.

அவனுடைய அப்பா அம்மா அவர்களின் மாத சம்பளத்தை அப்படியே கொடுத்தால் கூட அவனால் சமாளிக்க முடியாத நிலைமை. 

யாரிடம் போய் உதவி கேட்பான். நிறைய நண்பர்கள் தான். ஆனால் யாரிடமும் எப்போதும் உதவி என்று கேட்டதில்லை. இப்போதும் கேட்பதற்கு வாய் வரவில்லை.

ஹரி நிதினிடம் தான் மிகவும் க்ளோஸ். அவனிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல் லண்டன் வந்து விட்டு இப்போது போய் உதவி கேட்பதா.

அப்போதும் விடாமல் நிதின் ஹரியை பிடித்து அவனுடன் நட்பை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறான். உதவி தேவை என்றால் சொல்லடா என்றும் சொல்லி வைத்திருக்கிறான். 

அப்படி இருக்கும் போது பணம் கேட்க முடியாதே. மிகவும் கீழிரக்கமாக உணர்ந்தான். ஒரே மாதம் தான்……. பணம் மிகவும் பெரிய பிரச்சனையாக இருக்க ப்ரீத்தியிடம்  நான்கு நாட்களாக சேட் கூட செய்யவில்லை. 

கையில் இருக்கும் பணமும் கரைந்து விடும் என்று நான்கு நாட்களாக ஒரு வேளை உணவு, மிகவும் பசிக்கும் போது இரு வேளை,

ஒழுங்காக அந்த வேலையில் இருந்திருக்கலாம். கை நிறைய சம்பாதித்துக் கொண்டு, அப்பா அம்மாவிற்கும் கொடுத்துக் கொண்டு இருப்பதை விட்டு, இப்போது அவர்களிடம் இருந்தும் பிடிங்கி, ஐயோ என்றிருந்தது.   

தேவையில்லாமல் முட்டாள் தனமான முடிவு எடுத்து விட்டோம் என்று அவனுக்கு அவனே மிகவும் மனமுடைந்து இருந்த போது,

விடாமல் பிங் செய்து ப்ரீத்தி அவனுடன் சேட்டிற்கு வந்தவள், ரீடிங் பிட்வீன் லைன்ஸ் என்பார்களே அந்த மாதிரி விஷயத்தை க்ரகித்தாள்.

ப்ரீத்தி யோசிக்கவேயில்லை, ஒரு மாதிரி பேசிப் பேசி சமாளித்து, அவனை கன்வின்ஸ் செய்து, அக்கௌன்ட் நம்பர் வாங்கி, அவள் வெற்றி பெற்றதால் வந்திருந்த பரிசுத் தொகை, அப்பா அம்மாவிற்கு தெரியாமல் பிக்ஸட் டிபாசிட் உடைக்க முடியாது என்பதால், ஸ்பெஷல் கோர்ஸ் தனியாக என்று அம்மாவிடம் சொல்லி அதற்கு தனியாக பணம் வாங்கி, பின்பு அவள் தினமும் அணிவதற்காக அம்மா கொடுத்திருந்த சில சிம்பிள் நகைகள் அவளின் பீரோவில் இருந்ததை விற்று என்று, அப்படி இப்படி பணத்தை புரட்டி ஒரு நல்ல தொகையை நண்பனின் வங்கிக்கணக்கு மூலமாக அனுப்பி வைத்தாள்.

அவளின் வங்கிக்கணக்கு மூலமாக அதுவும் முடியாது, இதுவரை எதுவும் ஒளிவுமறைவின்றி எல்லாம் அப்பா அம்மாவிடம் சொல்லியிருந்ததால் அவளின் அக்கௌன்ட் அதிகம் ஹேண்டில் செய்வதே அவளின் அம்மா தான்.

அனுப்பியதை விடவும் ஹரியை அதற்கு சம்மதிக்க வைப்பது போதும் போதும் என்றானது. கெஞ்சிக், கெஞ்சி பிறகு மிஞ்சி, இது அப்பா பணம் கண்டிப்பாக இல்லை தன்னுடைய பரிசுப் பணம், அப்புறம் தாத்தா கொடுத்தது என்று ஹரியிடமும் பொய் சொல்லி, ஒரு வழியாக வாங்க வைத்து, “ஹப்பா”, என்று நிமிர்ந்த போது,

மனதிற்கு ஏதோ தப்பு செய்வது போல ஒரு உணர்வு வந்து உட்கார்ந்து கொண்டது ப்ரீத்திக்கு.

பெற்றோருக்கு தெரியாமல் இந்த வேலை செய்தது மிகவும் குற்றவுணர்ச்சியாகப் போய்விட்டது. அவளையறியாமல் மனதில் ஒரு பாரம் ஒரு பொறுப்புணர்ச்சி ஏறிக் கொண்டு விளையாட்டுத்தனம் அறவே போய் விட்டது. 

பெற்றோருக்கு பெருமை தேடிக்கொடுத்தே ஆகவேண்டும் என்று கங்கணம் தான் கட்டிக் கொண்டாள்.

ப்ரீத்தி பணம் அனுப்பியதை வாங்கிய பிறகு ஹரிக்கும் அதே மாதிரி ஒரு மனப் போராட்டமே. அவள் தந்தை தன்னை நினைத்ததை விடவும் மிகவும் கீழிறங்கி விட்டோமோ என்று. என்றாவது அவளின் தந்தைக்கு தெரிய வந்தால் அது எவ்வளவு அசிங்கம். அதற்கு வேலையை விட்டு இங்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே.

அவனும் இருபத்து மூன்று வயது இளைஞன் தானே. விளையாட்டுத்தனமாக காதலில் விழுந்து, விளையாட்டுத்தனத்தை முற்றிலும் தொலைத்து, ப்ரீத்தியும் ஹரியும் ஒரு மாதிரி பக்குவப்பட்டதோடு, குற்றவுணற்சிக்கும் ஆளாகி, அவர்கள் இருவரும் அவர்களுக்குளாக சேட் மூலமாக பேசிக்கொள்வதை கூட குறைத்துக் கொண்டனர். 

அதனால் ப்ரீத்தி ஸ்குவாஷ், படிப்பு என்று இன்னும் பிசியாகி, ஸ்குவாஷில் அதிக வெற்றிகளையும் ருசிக்க தொடங்கி, படிப்பிலும் எப்போதையும் விட பரிமளிக்க துவங்கினாள்.                 

அங்கே கல்லூரி நேரம் தவிர, ஹரி ஒரு இந்தியன் நடத்தும் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பகுதி நேர வேலை செய்தான். வந்த புதிதில் யாரும் வேலைக்கு வைத்துக் கொள்ளவில்லை. இப்போது பகுதி நேர வேலை கிடைத்தது.

அதனால் பெற்றோர் கொடுத்த பணத்தை முடித்து, ப்ரீத்தி அனுப்பிய பணத்திலும் கொஞ்சம் கைவைத்து இருந்தவன், மேலும் அதற்கு அவசியமில்லாமல் போனது. பெற்றோரிடம் பணம் கேட்காமல் அவனால் செலவுகளை சமாளிக்க முடிந்தது. அதனால் ஹரி மிகவும் பிஸி,  பகலில் கல்லூரி, மாலை வேலை, இரவு படிப்பு என்று.

மொத்தத்தில் காதலை உறுதி செய்வதற்கு முன் கூட காதல் வசனங்கள் பேசிவிட்டு, ஏன் அதன் பல படிகள் மேலாக முத்தங்கள் கூட பரிமாறிவிட்டு, இப்போது எந்த காதல் வசனங்களும் அவர்களுக்குள் இல்லவே இல்லை.

இருவருக்குள்ளும் ஒரு பயம் ஒரு பொறுப்புணர்ச்சி தான் மிகவும் அதிகமாக இருத்தது. அதிகம் பேச்சுக்கள் கூட இல்லை. பொதுவாக ஹாய், ஹலோ மெசேஜ்கள், வாரம் ஒரு முறை ஹரியின் விடுமுறை நாளில் சற்று நீண்ட சேட் என்று தான் அவர்களின் பொழுதுகள் ஓடியது.

ப்ரீத்தி படிப்பை முடித்து விட்டாள்…… இந்திய மகளிர் ஸ்குவாஷ் சேம்பியன் கூட, எஸ் அவளுக்கென்று ஒரு அடையாளம், ஒரு பெயர், இந்த ஒன்றரை வருடங்களில் சம்பாதித்துக் கொண்டாள்.

அது சுலபம் அல்ல, இந்தியா மாதிரி ஒரு நாட்டில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமே குறுகிய காலத்தில் ஜொலிப்பர்.

அதையும் மீறி ஒரு விளையாட்டில் ஒருவர் ஜவல்லிப்பது என்பது சாதாரணம் அல்ல.

தன்னுடைய கடின முயற்சி, தொடர் வெற்றியால் ப்ரீத்தி அவளின் துறையில் புகழ் பெற்று விளங்கினாள்.

அப்பாவிற்கும் அம்மாவிற்கும் அவ்வளவு பெருமை. இப்போது தான் சற்று குற்ற உணர்வில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

கேம்பஸ் இன்டர்வியூ வந்தது தான். ஆனால் ப்ரீத்தி கலந்து கொள்ளவே இல்லை.

உடனே போக வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லாததால் அதற்கு அவசரம் காட்டவில்லை. அது மட்டுமின்றி நல்ல மதிப்பெண்கள் கூட, கொஞ்சம் கான்ஃபிடன்ட் கூட, எந்த இன்டர்வ்யூ என்றாலும் செலக்ட் ஆவோம் என்று. அதனால் அவசரம் காட்டவில்லை ப்ரீத்தி.

எப்படியும் கேமில் பிசியாக இருந்ததினால் சும்மா இருக்கிறேன் என்ற கேள்வி இல்லை.

ஹரி என்ன செய்ய போகிறான் என்பதை ஒட்டி முடிவெடுக்கலாம் என்பது அவளின் எண்ணமாக இருந்தது.

அன்று கூட ஒரு எனர்ஜி ட்ரிங்க் கம்பெனியில் இருந்து விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக கேட்டனர்.

சந்தோஷமாக இருந்தது, ஸ்குவாஷ் வெற்றியினால் அவள் அறியப்பட்டாலும், அது அந்த கேமை நன்கு அறிந்தவர், தெரிந்தவர்கள் மத்தியில் மட்டுமே.

ஆனால் விளபரப் படத்தில் தோன்றினால், ஸ்குவாஷ் வெற்றியாளர் என்பதை விட அந்த விளம்பரப் படம் தரும் ரீச் அதிகம்.

யோசனையாக இருந்தது. முதலில் அவள் முடிவெடுக்க வேண்டும், பிறகு தானே அப்பா அம்மாவிடம் பேச வேண்டும், இதில் ஹரி என்ன சொல்லுவான் என்று பலதும் யோசித்தாள்.

தன் பெண்ணின் புகழ் பெருமை இவற்றின் காரணமாக, பெஸ்ட் ஆக ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராஜசேகரன் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்.

இன்னும் திருமணத்தைப் பற்றி ப்ரீத்தியிடம் பேசவில்லை மாலினியும் ராஜசேகரும்.  

எப்போதும் பெற்றோர்களுக்கு ஒரு எண்ணம் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் தான் அவர்களின் பணி முடிவடைவது போல, ஆனால் பெரும்பணியே அதன் பிறகு தான்.

பெண்களை பெற்ற பெற்றோர்களுக்கு அவர்கள் இந்த உலகில் இல்லாமல் போகும்வரை கடமைகள் தொடர்ந்து கொண்டு தானிருக்கும்.

ராஜசேகரனும் மாலினியும் மகளுக்கு அமைத்துக் கொடுக்கப் போகும் வாழ்க்கையைப் பற்றி ஏக கனவில் தான் இருந்தனர்.

 

இன்னும் ஐந்து மாதங்களில் பணியினை அரபு நாட்டில் முடித்து ராஜசேகரன் இந்த முறை இந்தியா வர ஸ்திரமாக முடிவெடுத்து இருந்ததினால் வந்த பிறகு மாப்பிள்ளைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தார்.

மகளைப் பற்றிய ஆயிரம் கற்பனைகள்.   

ஹரியின் படிப்பும் இன்னும் எட்டு மாதங்களில் முடிய இருந்தது. சிறந்த மாணவனாக பரிமளித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீ ஹரி லட்சுமணன். அவன் தேர்ந்தெடுத்து இருந்தது மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்.

கணினி பொறியாளனான அவன் மேற்படிப்பாக எந்த டெக்னிகல் சைடும் போகவில்லை.

ஏனோ மேனேஜ்மென்ட் சைட் தான் பிடித்தது. அவனுடைய துறையில் வரும் லேட்டஸ்ட் முன்னேற்றங்களை எக்ஸாம்ஸ் இல்லாமலேயே படித்து தேர்ந்து கொண்டிருந்தான்.

அதனால் தான் இந்த படிப்பை தேர்ந்தெடுத்தான். இரு துறைகள் இரண்டிலும் கவனம் இருந்ததினால், அதற்காக கடுமையாக உழைத்தான். கூட அவனின் பகுதி நேர வேலை.

மொத்தத்தில் வெற்றி பெற்றாக சூழ்நிலை இருந்ததினால் அந்த உந்துதல் இருந்ததினால் அதை நோக்கியே அவன் கவனம் உழைப்பு முழுவதும்.

இதில் ப்ரீத்தியை பற்றிய நினைவுகள் இரண்டாம் பட்சம் ஆகின. தங்கை திருமணத்திற்கு நிற்பதால் அதற்கு முன் படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் அமர்ந்து பெற்றோர்களின் பாரத்தை குறைக்க வேண்டும் என்பதே இடைவிடாத பிரார்த்தனையாக இருந்தது.

ப்ரீத்தி அப்பாவிடமும் அம்மாவிடமும் விளம்பரப் படம் பற்றி பேச இருவரும் வெகுவாக யோசித்தனர்.

மீடியா என்றதும் ஒரு பயம் அதே சமயம் பெண்ணிற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு, யோசனைகள் பலவாறாக ஓடியது.

ஹரியிடம் ப்ரீத்தி அன்று மிகவும் பிடிவாதமாக போனில் பேச வேண்டும் என்று நின்றாள்.

பல மாதங்களுக்கு பிறகு இப்படி பிடிவாதம் பிடிக்கும் ப்ரீத்தியை பார்த்தான் ஹரி,

இந்தியாவில் இருந்து வந்த பிறகு போனில் பேச வேயில்லை. நேரில் பார்த்தால் இருவரின் பேச்சுக்களும் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால் சேட் என்பதால் அவசியமான பேச்சுக்கள் மட்டுமே, லவ் இல்லை, ஒரு ஸ்வீட் நதிங்க்ஸ் இல்லை, எதுவுமில்லை.

அதுவும் வீடியோ சேட், வாய்ஸ் சேட் என்று எதுவுமில்லை, ஜஸ்ட் டைப் மட்டுமே. 

ராஜசேகரன் சொல்லியிருந்தது போல நேரில் பார்க்கவில்லை, போனிலும் பேசவில்லை.

“எதுக்கு இவ்வளவு பிடிவாதம் ப்ரீத்தி”, என்று ஹரி கேட்கவும்,

“முடியுமா? முடியாதா?”, என்று நின்றாள் ப்ரீத்தி.     

“எப்போதான் நீ உன் பிடிவாதத்தை விடுவ”, என்றான் சலிப்பாக ஹரி. வெகுநேரம் வரை படித்துக் கொண்டிருந்து அப்போதுதான் உறங்கலாம் என்று நினைத்திருந்தான்.

காலேஜ், அதன் பிறகு வேலை, இப்போது அதன் பிறகு படிப்பு, லேட் நைட். அன்று மிகவும் களைப்பாக இருந்தது. “இப்போ நான் கார்ட் போடலை, அதனால நாளைக்கு பேசலாம்”, என்றான்.

“எனக்கு பேசணும் போல இருக்கு, நான் என்ன எப்பவுமா உங்க கிட்ட கேட்கறேன். இட்ஸ் மோர் தேன் எ இயர்”, என்று ப்ரீத்தி சொல்ல…….

அந்த குரலே அவனை அசைத்தது, “நீ கால் பண்ணு”, என்று பெர்மிஷன் கொடுத்தான். 

ப்ரீத்தியிடம் பேசப் போகும் சந்தோஷம் அவனைத் தொற்ற, ஒரு பரவசத்துடன் போனை பார்த்தான், என்னவோ ப்ரீத்தியே அது போல,   

போன் அடித்து, அதை ஹரி அட்டென்ட் செய்த நொடி, “இப்படித்தான் எதுக்கெடுத்தாலும் உடனே பேச கூட முடியாம எங்கம்மா அப்பாகிட்ட எப்பவும் கஷ்டப்படுவாங்க….. நீயும் இப்ப அப்படியே செய்யற”, என்று நின்றாள் ப்ரீத்தி.

“இது இப்போ பேசற நேரமா ப்ரீத்தி, நம்ம பேசியே பதினேழு மாசம் ஆகுது”, என்று மாதக்கணக்கை கூட சரியாக சொன்னான் ஹரி.

அதை உணரும் நிலையில் கூட இல்லை ப்ரீத்தி. அவளின் யோசனைகள் எல்லாம் அப்பா அம்மாவை போல ஹரி ஒரு இடம், அவள் ஒரு இடம் என்று இருக்கும் வாழ்க்கை எப்போதும் வேண்டாம் என்பதாக தான் இருந்தது.

அப்படி ஆகிவிடுமோ என்று பயம் பிடித்துக் கொண்டது.       

 

Advertisement