Advertisement

அத்தியாயம் பதினொன்று:

மலங்க, மலங்க விழித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். ஒன்றுமே புரியவில்லை எங்கே போகிறான்.

சில நிமிஷங்களில் வந்த மாளவிகா, “ப்ரீத்தி என்ன பண்ற, ஹரி சர் போயிட்டார்”, என்றபடி வந்தாள்.

ப்ரீத்தி எங்கோ வெறித்தபடி நிற்கவும், “என்ன? என்ன ப்ரீத்தி?”, என்று வந்து உலுக்க…..

அப்போது தான் மாளவிகா பக்கம் நிற்பதை பார்த்தவள், “என்ன?”, என்றாள்.

“ஏன் இங்க நிக்கற, வா போகலாம்”,

“ம், போகலாம்”, என்றபடி ப்ரீத்தி மிகவும் சோர்வோடு நடக்க,

“என்ன ப்ரீத்தி? என்ன பிரச்சனை?”, என்றாள் மாளவிகா.

“ஒன்னுமில்லை”, என்று சொன்னவள் தான் ப்ரீத்தி, அதன் பிறகு வாயே திறக்கவில்லை.

அவர்கள் வரும்வரை நிதின் காத்திருந்தான். “என்ன ஆச்சு ப்ரீத்தி?”, என்று நிதின் கேட்கவும்,

இவன் என்ன கேட்கிறான் என்று ஒரு மாதிரி பயந்து விட்டாள் ப்ரீத்தி, நடந்தது தெரிந்திருக்குமோ என்று.

அவளின் அதிர்ந்த பார்வையை பார்த்தவன் ஏதோ சரியில்லை என்றுணர்ந்து…… “ஹரி என்ன சொன்னான்னு கேட்டேன், நான் கேட்டதுக்கு  ஒன்னும் சொல்லாம வேலையிருக்குன்னு போயிட்டான் அதான்”, என்று சமாதானமாக பேசவும்,

“தெரியலை, போறேன்னு சொன்னார், அவ்வளவு தான்”,

“எங்கே?”,

“தெரியலை”, என்றாள் ப்ரீத்தி.

பேசும்போதே குரல் கமரியது……. அவள் மிகவும் எமொஷனலாக டிஸ்டர்ப்டாக இருக்கிறாள் என்பது புரிந்தது.

அவளுக்கு பழைய விஷயங்கள் ஏதாவது தெரிந்திருக்குமோ என்று பயந்து மாளவிகா அவளை ஆராய, நிதினிற்கும் அதே யோசனை தான்.

“இந்த ஹரிப்பய எங்க போனான்னு தெரியலையே”, என்று நிதின் கவலைப்பட்டவன், “வீட்டுக்குப் போகலாம்”, என்று சொல்லி, “நீ வண்டியை ஓட்டு”, என்று மாளவிகாவிடம்  சொல்லி வீடு வந்து சேர்ந்தனர்.

அவர்கள் வீட்டின் உள் போவதை பார்த்து பிறகு வீட்டின் உள் வந்தான், ஹரி வந்து விட்டானா என்று தேடிக் கொண்டே. என்னவோ வித்தியாசமாக உணர்ந்தான். ஹரியின் பொருட்கள் எதுவும் இல்லை.

அதற்குள் கூட வேலை பார்க்கும் சீனியர் ஒருவர் அழைக்கவும் எடுத்தான்.

“ஏன் நிதின் ஹரி வேலையை ரிசைன் பண்ணிட்டான், அதுவும் அவ்வளவு காம்பன்சேஷன் கொடுத்து, இதை விட பெட்டர் ஆஃபர் கிடைச்சிருக்கா? என்ன அது?”, என்று அவர் துருவவும்,

“என்ன ஹரி ரிசைன் பண்ணிடானா?”, என்று நிதின் அதிர்ச்சியாக கேட்க,

“உனக்கு தெரியாதா? காலையில இருந்து எல்லா ப்ரொசீஜர்சும் எமர்ஜென்சியா முடிச்சு ரிலீவ் ஆகிட்டான்”, என்றார்.

“அவனோட சிக்ஸ் மந்த்ஸ் சாலரி கம்பேன்செட் செஞ்சிருக்கான்”, என்று சொல்லவும்,

“என்ன அவ்வளவு பணமா? எப்படி புரட்டினான் உடனே, என்ன நடக்கிறது?”, ஹரிக்கு அழைக்க மீண்டும் ஸ்விச் ஆஃப், அவசரமாக ஹரியின் அம்மாவிற்கு அழைத்தான்.

எதுவும் காட்டிக் கொள்ளாமல், “அம்மா எப்படி இருக்கீங்க?”, என்று பேச்சை ஆரம்பிக்க……

“நீயுமா ஊருக்கு வர்ற நிதின்”, என்று அவர் கேட்கவும்,

ஹரி ஊருக்கு தான் செல்கிறான் என்றதும் ஒரு நிம்மதி. காலையில் இருந்து நிதின் அவனின் பெற்றோர்களை, “நீங்க நான் சென்னை வந்ததுல இருந்து வரவேயில்லை”, என்று நொச்சி, அவர்களை மதியம் ட்ரெயினில் கிளம்பி வர செய்திருந்தான்.

நிதினுக்கு மாளவிகாவை அவர்கள் கண்ணில் காட்ட ஆர்வம்.

அவர்கள் வந்து கொண்டு இருப்பதால், அவனால் செல்ல முடியவில்லை

“அப்பாவும், அம்மாவும் வர்றாங்கம்மா, முடிஞ்சா லீவ் கிடைச்சா, நான் அவங்களோட வர்றேன்……”, என்று சொல்லி வைத்தான்.

“என்னடா இவன் இப்படி பண்ணிட்டான், என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே……”,

இரவு அவனின் பெற்றோர்கள் வந்துவிட, மறுநாள் காலை மாளவிகாவின் தாத்தாவிற்கு பெற்றோர் வந்திருப்பதாக சொன்னான். அவர்கள் உடனே வீட்டிற்கு அழைக்க…….

பெற்றோருடன் இவனும் செல்ல……. தாத்தா அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம், “எங்க நேத்து உன்னோட வந்த தம்பியைக் காணோம்”, என்று கேட்டார்.

நிதினின் அப்பா, “எங்கப்பா இந்த காலத்து பசங்களை புரிஞ்சிக்கவே முடியலை…… என் பையனுக்கு இந்த நாலு வருஷமா ரொம்ப சிநேகிதம், ரெண்டு பேரும் இங்க வேலையிலன்னு பார்த்தா, அந்த பையன் சொல்லாம கொள்ளாம வேலையை விட்டுட்டு போயிட்டான். என்ன சொல்ல?”, என்று அவர் பேச……

“என்ன போயிட்டானா?”, என்று அவசரமாக நிமிர்ந்தார் மாலினி.

நடப்பதை ப்ரீத்தி பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

“ஹரி வேலையை விட்டுட்டானா?”, என்று அவராக கேட்க கூட செய்தார் நிதினிடம்.

“எஸ் ஆன்ட்டி, வேலையை மட்டும் விடலை, சென்னையை விட்டும் போயிட்டான்”, என்று சொல்லவும்,

நிம்மதியாக உணர்ந்த அதே சமயம், நம்மால் ஒரு நல்ல வேலையை அந்த பையன் விட்டுச் சென்று விட்டானா என்று வருததமாக இருந்தது.

ஏனென்றால் நேற்று காலை ஹரி பேசி சென்ற அடுத்த நிமிஷம் ரூமிற்குள் சென்ற அவர் உடனே ராஜசேகரை அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டார்.

ராஜசேகர் ஹரியின் போன் நம்பர் கேட்க கொடுத்தார். அவ்வளவு தான் அவருக்கும் தெரியும்.

சிறிது நேரத்தில் போன் செய்த ராஜசேகர், “அந்த பையன்கிட்ட நான் பேசிட்டேன். அவன் இனிமே நம்ம வீட்டுக்கு வரமாட்டான். ப்ரீத்தியோட பேச மாட்டான்”, என்று அவர் சொன்ன போது கூட…….

“அதெப்படி? சொன்னால் அவன் கேட்டுக் கொள்ளுவானா?”, என்ற சந்தேகத்தில் தான் இருந்தார்.

இப்போது நிதின் சொல்லவும், நிஜமாகவே சென்று விட்டானா என்று இருத்தது.

ப்ரீத்தி நேற்றிலிருந்து சரியில்லை என்பது மாதிரி தான் அவருக்கு தோன்றியது. ஒருவேளை அந்த ஹரியை மகளுக்கு பிடித்திருக்குமோ என்று யோசித்தார்,

அவளுக்காவது யாரையாவது பிடிப்பதாவது என்று தான் உடனே தோன்றியது. ஒரு வேலை பிடித்திருந்தால் அவள் விளையாட்டுப் பிள்ளை அவளுக்கு என்ன தெரியும் என்றும் கூடவே தோன்றியது.

ஏதாவது ஆர்வங்கள் இருந்தாலும், கண்ணில் இருந்து மறைவது, கருத்தில் இருந்து மறைந்து விடும் என்று கணக்கு போட்டார்.

அந்த கணக்கை நினைத்து தான் ராஜசேகரும் ஹரியிடம் பேசியிருந்தார்.

ப்ரீத்தியை அதன் பின் தனியாக இருக்க விடாமல், எல்லோருடனும் இருப்பது மாதிரி பார்த்துக் கொண்டார். எல்லா பெற்றோருக்கும் எத்தனை வயதானாலும் அவர்களின் பிள்ளைகள் குழந்தைகளே. அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்று நினைக்க முடிவதில்லை. 

ஆனால் ப்ரீத்தி வளர்ந்து விட்டாள்.

ரகுவிற்கு ஹரி தன்னிடம் சொல்லாமல் சென்று விட்டதில் அவ்வளவு வருத்தம்.

“ஏன் அண்ணா ஹரி சார் என்கிட்டே சொல்லாம போயிட்டார்”, என்று நிதினிடம் வருத்தப்பட,

“அவன் என்கிட்டயே சொல்லலை!”, என்றா சொல்ல முடியும், சிரித்து வைத்தான் நிதின்.

ப்ரீத்தியிடம் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று அடிக்கடி மாலினி ஆராயவும், “மா, நீங்க எதுக்கு இப்படி கவனிச்சிக்கிட்டே இருக்கீங்க! என்ன விஷயம்? ஏதாவது எனக்கு பிடிக்காதது செஞ்சிங்களா”, என்றாள் ப்ரீத்தி.

என்ன சொல்வது என்று தெரியாமல், “ஒன்னுமில்லையே, ஏதோ அப்செட் மாதிரி தெரிஞ்சது”, என்று அவர் சமாளிக்க,

“மா, சும்மா நான் அப்செட்டா ன்னு பார்க்க கூடாது, நான் நார்மல் புரியுதா”, என்றாள் எரிச்சலாக.

இவளை ஹேண்டில் செய்ய இவளின் தந்தையால் தான் முடியும் என்று மாலினி அமைதியாகி விட்டார்.

நிதினின் பெற்றோர்கள் ஞாயிறு மாலை கிளம்ப, மாளவிகாவை அவர்களுடன் கோவைக்கு அனுப்பி வைத்து, மாலினியின் பெற்றோர்கள் ப்ரீத்தியின் வீட்டில், மாலினியின் உடல் நிலை சற்று சரியாகும் வரை இருக்க முடிவெடுத்தனர்.

நிதினால் ஹரியை பிடிக்கவே முடியவில்லை. அவனுக்கு விடுமுறையும் வழங்கப்படவில்லை. அடுத்த வாரம் ஊருக்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான். கூடவே இருந்த நண்பன் இல்லாதது நிதினுக்கும் சற்று தனிமையை கொடுத்தது.

ஹரி பேசாதது மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து ப்ரீத்தி நிதினை வெளியில் வைத்து பார்த்தவள், “எங்க போயிருக்காங்க ஹரி?”, என்று கேட்க செய்தாள்,

“நீ பார்த்த போது தான் நானும் பார்த்தேன், அதுக்கு அப்புறம் ஹரி என்கிட்ட பேசவேயில்லை, கோயம்பத்தூர் தான் போயிருக்கான்”.

“வேலையை விட்டுட்டு ஏன் போனாங்க, அவர் ஃபேமிலி பேக் கிரௌண்ட் எப்படி? வேலை இல்லைனாலும் ப்ரச்சனையில்லையா”,

“கஷ்டம் தான்! மிடில் கிளாஸ் தான். வீட்ல அப்பா அம்மா ரெண்டு பேரும் எலிமெண்டரி ஸ்கூல் டீசர்ஸ், தங்கச்சி மெடிசின் படிக்கறா. அவளுக்கும் நிறைய ஃபீஸ்…. இவங்க ஸ்டடீஸ்க்கு நிறைய செலவாச்சு. இவனுக்கு தான் லோன் இருந்தது. அவன் சிஸ்டர்க்கு இல்லை, அவ பீசும் அதிகம். வீட்டை அடமானம் வெச்சு தான் அவ ஸ்டடீஸ், ரெண்டு பேரும் கவேர்மென்ட் வேலைன்றதுனால ரிஸ்க் எடுத்திருக்காங்க”.

“இவனோட சாலரி நிறைய ப்ராப்ளம் சால்வ் பண்ணும்ன்ற சூழ்நிலை தான். இவனும் இந்த செலக்ஷன்காக நிறைய வொர்க் பண்ணினான். ஏன் இப்படி வேலையை விட்டான். அதுவும் இவ்வளவு பணம் காம்பன்சேஷன் குடுத்துன்னு தெரியலை”, என்றான் நண்பன் மேல் அக்கறை கொண்டவனாக.

“உன்கிட்ட என்ன சொன்னான்?”, என்று ப்ரீத்தியிடமே கேட்டான்.  

“சொல்ற மாதிரி ஒன்னுமில்லை”, என்று மட்டும் சொன்னாள். அது அவளுக்கும் ஹரிக்குமான பேச்சு, அதை யாரிடமும் பகிர விருப்பமில்லை.

“கோயம்புத்தூர், ஹரி அவர் வீட்டுக்கு தான் போயிருக்கிறாரா”, என்று ப்ரீத்தி மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொண்டாள்.

அப்பாவோ அம்மாவோ தான் ஹரியிடம் பேசியிருக்கிறார்கள் என்று ப்ரீத்திக்கு இப்போது நிச்சயம்.

ஆனால் ஏன் அவனிடம் பேச வேண்டும் என்று புரியவில்லை. எதுவாய் இருந்தாலும் அவனை பிடிக்காவிட்டாலும் தன்னிடம் சொல்லியிருக்கலாமே, அவனிடம் ஏன் பேசவேண்டும் என்று அப்பா அம்மாவின் மேல் கோபம் வந்தது……

ஹரியும் லூசு மாதிரி ஏன் அவர்களிடம் சொல்ல வேண்டும் எதுவாய் இருந்தாலும் என் பெற்றோரிடம் நான் தானே பேசவேண்டும். அவனை யார் பேச சொன்னது.

எந்த பெற்றோரும் காதல், அது இதென்றால் ஒத்துக் கொள்ள மாட்டர் தான். நின்று போராடி இருக்க வேண்டாமா. இவனை யார் இங்கிருந்து போக சொன்னது என்று இன்னும் ஹரியின் மேல் கோபமாக வந்தது.

ஒரு முத்தம் கொடுத்தால் ரிசெர்வேஷன்னா, இடியாடிக் கான்செப்ட் என்று ஹரியின் மேல் ஆத்திரமாக தான் வந்தது. அறிவுகெட்டவன் என்று அத்தனை கோபம் நெஞ்சுக்குள் பிரவாகமாக பொங்கியது.

ஸ்டுபிட் இடியட் என்று அவளுக்கு தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தையிலும் திட்டித் தீர்த்தாள்.

அதற்கு சற்றும் மாறாத கோபத்தில் இருந்தான் ஹரி. கோபம் அவனின் மேல் தான். பொதுவாக மிகவும் நிதானமானவன், ஆனால் வேலையை விட்ட அன்று என்ன ஆகிற்று என்று அவனுக்கே தெரியவில்லை.

ராஜசேகர் என்ன சொன்னாலும், அவனுக்கு செய்ய வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. அவருடன் நடந்த பேச்சு வார்த்தை வளர, அதன் முடிவாக வேலையை விட்டு வந்து விட்டான்.

உடனே விட்டதிற்க்கான காரணம், சற்று யோசித்தாலும் விட்டிருந்திருக்க மாட்டான்.

இப்போது ஆற அமர யோசிக்கும் போது அவன் செய்தது சற்று அதிகம் தான். ஒன்றும் பிரச்சனையில்லை நம்பிக்கை இருக்கிறது.  ஆனாலும் மீண்டும் பெற்றவர்களுக்கு சிரமம்.

அவர்கள் வாழ்க்கையின் சம்பாதணை முழுவதையும் பிள்ளைகளின் எதிர்க்காலதிற்காக செலவு செய்து கொண்டிருக்க, மீண்டும் அவர்களை செலவு செய்யும் நிலைக்கு தள்ளி விட்டிருக்கிறான். அது தான் அவன் மேல் அவனுக்கே கோபம்.           

 எஸ், மேல் படிப்பிற்காக லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டியில் இடம் கிடைத்திருந்தது. ப்ரீத்தியின் அப்பா, அவனுடைய பின்புலம், படிப்பு இதெல்லாம் தனக்கு திருப்தியில்லை…… என்று பேச,   

அதைவிடவும், “நீ பக்கத்தில் இருந்து தான் என் பெண்ணை வேண்டுமென்றே தொடருகிறாய்”, என்று பேச……

அதையும் விட “போனவருடம் என் பெண்ணிற்கு பிரச்சனை வந்தது உன்னால் தான்”, என்று பேச,

அதையும் விட, “ஒரு வேளை, நீதான் அதை செய்தாயோ”, என்பது போலவும் பேச,

அதையும் விட, “நீ பக்கத்தில் இல்லாமல் இருந்தால், என் பெண் ஏதோ ஒரு வேகத்தில் உன் மேல் சற்று ஆர்வமாக இருந்தாலும் மறந்து விடுவாள், தைரியமிருந்தால் என் பெண்ணின் கண்ணில் படாமல் நீ தூர போ”, என்றும் பேச……

வந்து விட்டான், வந்தே விட்டான்.

சில செய்கைகள், அவனின் சில செய்கைகள்……. ப்ரீத்தியை அவன் அனுதினமும் அவள் கோவையை விட்டு சென்ற பிறகு பார்த்துக் கொண்டிருந்த செய்கைகள், ராஜசேகர் பேசவும் அதுவும் அவனை உறுத்த வந்துவிட்டான்.

ஆனாலும் ப்ரீத்தியை பார்த்த போது ஒரு வேளை அவளின் தந்தை சொன்ன மாதிரி செய்து விடுவாளோ என்று தான் அந்த கீழ்த்தரமான செய்கை.

காதலில் முத்தம் அனுமதிக்கப்பட்டதே….. உலக காதலர்களின் தற்காலிக உறுதி பத்திரம் தான். ஆனால் அது காதலாக இல்லாவிட்டால் அது என்ன மாதிரியான செய்கை……..      

எதுவாகினும் ப்ரீத்தி எப்போதும் அவனின் எண்ணத்தில்.   

அட்மிசன் கிடைத்திருந்தாலும் யாரிடமும் அவன் சொல்லவில்லை. ஏன் நிதினிடம் கூட அவன் சொல்லவில்லை….. குடும்பச் சூழ்நிலையை முன்னிட்டு படிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தான்.

இப்போது வேலையை விட்டும் வந்து விட்டான். படிப்பை படிக்கவும் முடிவு செய்தான்.

தந்தையிடம் சொன்ன போது ஒன்றுமே சொல்லாமல் வீட்டை விற்று பணம் கொடுக்க அவர் ஏற்பாடு செய்யவும் தான் ஹரிக்கு மனம் அறுக்க ஆரம்பித்தது.

யாரோ எவரோ சொன்னார் என்று முட்டாள் தனம் செய்திருக்கிறேன். அப்படி தான் தங்களுக்குள் காதல் என்றாள் ப்ரீத்தி வந்திருப்பாள். அதை விடுத்து வேலையை விட்டு பெற்றோரை கஷ்டத்தில் ஆழ்த்திய தன்னை நினைத்து அவனுக்கு மிகவும் கோபமாக வந்தது.

ஆனால் இனி பின் வாங்க முடியாது…….

அப்பாவிடமும் அம்மாவிடமும் பேசினான், “வேலையை விட்டுடேன் அதுவும் இவ்வளவு பணம் கொடுத்து, கோபம் இல்லையே”, என்று.

“கோபம் இல்லை, ஆனா வருத்தமா இருக்கு. அதே சமயம் நான் நிறைய படிக்கணும்னு நினைச்சேன். குடும்ப சூழ்நிலை படிக்க முடியலை. டீச்சர் ட்ரைனிங் முடிச்சேன். கவர்மென்ட் வேலை. ஒரே மாதிரி வாழ்க்கை போயிட்டே இருக்கு….”,

“வேலை இருக்கு எனக்கும் உங்கம்மாக்கும், எப்படியும் சாப்பாட்டுக்கு பிரச்சனையில்லை”,.

“பணம் போறது பிரச்சனையில்லை, நீங்க நல்லா வரணும், சந்தோஷமாவும் இருக்கணும். அதுதான் எனக்கு வேணும்……. இல்லைன்னா எங்க உழைப்பு எல்லாம் வீண் தானே”,

“என்னை நம்புங்கன்னு சொல்ல ஆசையா இருக்குப்பா. ஆனா பயமா இருக்கு. உங்க கிட்ட எந்த சேவிங்க்ஸும் இல்லாம பண்ணிட்டேன். இப்போ வீடு கூட போகப் போகுது”,  

“பணத்தை எங்களோட சேவிங்க்ஸா நினைச்சிருந்தா, உங்க படிப்பு எல்லாம் பெரிய ஸ்கூல்ல பெரிய காலேஜ்ல இவ்வளவு பணம் கட்டி படிக்க வெச்சிருக்க மாட்டேன். நீங்க தாண்டா எங்களோட சேவிங்க்ஸ்”, என்று அம்மாவும் சொல்ல,

“எல்லாம் சரியாக வரவேண்டுமே”, என்று மனம் வெகுவாக கலங்கிப் போயிற்று.

விசாவிற்காக அன்று இரவு சென்னை கிளம்ப இருந்தான். ஹரியின் கலங்கிய முகத்தை பார்த்த அவனின் அம்மா, “சரியோ? தப்போ? இறங்கிட்ட…….. சரியாக்கிக்க வேண்டியது உன் பொறுப்பு ஹரி. நாங்க இருக்கோம் உன்கூட எப்பவும். எதுக்காகவும் தைரியத்தை இழக்காத”, என்று வெகுவாக தேற்றினார்.

“ஹேய் என்னோட அண்ணனா நீ? ஏன் அண்ணா இப்படி ஆகிட்ட? வாட் ஈஸ் ஈடிங் யூ?”, என்று சாதனா ஆராய்ச்சியாக கேட்க வேறு செய்தாள்.

“ஒன்னுமில்லை, ஒன்னுமில்லை”, என்று ஹரி அவசரமாக மறுக்க சாதனா அவனை சிரிப்போடு பார்த்தாள்.

“எதுக்கு சிரிக்கிற?”, என்று ஹரி ஆராய்ச்சியாக பதிலுக்கு கேட்டான்.

“நீ சொல்லலை, நானும் சொல்லலை”, என்று சாதனா போகவும்,

“இவ வேற சமயம் தெரியாம, லூசு மாதிரி!”, என்று நினைக்கத் தான் தோன்றியது.

விசாவிற்காக சென்னை வந்த ஹரி, காலையில் கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் இறங்கி வெளியே வரவும், “எவ்வளவு நேரமா வெயிட் பண்றது. ஏன் லேட்”, என்றபடி ப்ரீத்தி அவளின் டியோவில் நிற்கவும்,

இப்போது ஹரி நின்றது நின்றபடி நின்றான்.

மெளனமாக அவளை பார்த்து விட்டு நடக்கவும், “ஹல்லோ சீனியர்,  நிக்கறேன் இல்லை”, என்றாள் அதட்டலாக.

“நான் உன்னை கொஞ்ச நாளைக்கு பார்க்க மாட்டேன். பேச மாட்டேன்னு உங்கப்பாக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்”,

“நீ தான பண்ணின, நான் பண்ணலையே”, என்று தீர்க்கமாக பார்த்தபடி ப்ரீத்தி நின்றாள்.  

ஹரி அவன் சொன்னது சொன்னதுதான் என்பது போல நடக்கப் போக….

“நீ இப்போ போனா, என் லைஃப்ல இருந்து எப்பவும் போன மாதிரி தான்… உன்னோட ரிசர்வேஷனும் செல்லாது, ஒரு மண்ணும் செல்லாது”, என்று ப்ரீத்தி சொன்ன விதம்,

மீண்டும் ஹரிக்கு அவளை முத்தமிட தான் தோன்றியது.

“ரிசர்வேஷன் செல்லாதா, திரும்பவும் செய்யட்டுமா”, என்று அவனையும் மீறி தான் கேட்டான்.

“இப்படி பேசி பேசியே, நீ ஜர்னிய மிஸ் பண்ண போற”,

ஹரி முறைக்கவும்,

“எந்த ரிசர்வேஷனும் என்னை ரெஸ்ட்ரிக்ட் பண்ணாது. முதல்ல அதை புரிஞ்சிக்கோ”, என்று அலட்சியமாக ப்ரீத்தி சொல்ல.

“ஓஹ், கன்ஃபர்ம் பண்ணிக்க சொல்றியா”, என்றான் கண்ணடித்து. ப்ரீத்தியை பார்த்தால் தான் அவன் மனமே அவன் வசம் இருக்காதே. 

ப்ரீத்தியின் முகத்திலும் மெல்லிய புன்னகை, “நீ இன்னும் என் பின்னாடி சுத்தி எனக்காக உன்னோட லைஃப்  டெசிஷன்ஸ் மாத்துறது, நம்பவே முடியலை”, என்று ப்ரீத்தி மீண்டும் விழிவிரித்து சொன்னவள், “என்ன பார்த்த என்கிட்ட”, என்று ஆச்சரியமாக கேட்க…..

“இன்னும் ஒன்னும் பார்க்கவே இல்லையே ஹனி”, என்றான் மீண்டும் கண்ணடித்து. 

ஹரியை போலியாக முறைத்து, “சொல்லுங்க, என்னை சுத்தி என்ன நடக்குது”, என்று விஷயத்தை வாங்க முற்பட்டாள்.

ப்ரீத்தியின் மரியாதையான அழைப்பு அவள் நார்மலாக இருக்கிறாள் என்று ஹரிக்கு சொல்லியது.  

அவளின் தந்தை ஹரியிடம் சொன்னதும் அதுதான், “என் பெண் நீ அவள் பின்னால் வரும் பிரமிப்பில் இருக்கலாம். விலகி இரு, அவள் பக்கம் வராதே”, என்று. அந்த பேச்சு அசைப்போட்டுக் கொண்டே……  

“ம், உன்னை விட அழகா ரெண்டு பொண்ணுங்க நடக்குது”, என்று ஹரி சொல்லி அவளை திசை திருப்ப முயல……

“நடந்து என்ன பண்ண? நீங்க பார்க்கப் போறீங்களா? இல்லையில்ல, நீங்க என்னை மட்டும் தான் பார்ப்பீங்க, பேச்சை மாத்தாதீங்க, விஷயத்தை சொல்லுங்க”, என்று பிடிவாதமாக நின்றாள்.   

ஹரி அவளை எப்படி சமாளிப்பது, எப்படி விலகி நிற்பது என்று பார்த்து நின்றான்.

 

Advertisement