Advertisement

“இல்லை, அவளை பயப்படுத்தக் கூடாது” என்று முடிவெடுத்தவன், “எதுக்குடி அப்படி சொன்ன, உங்க அம்மா வீட்டுக்கு போகணும்னு” என்று முறைப்பாய் கேட்டான்.  
“அச்சோ, தெரியாம சொல்லிட்டேன்” என்று அவள் தளர்வாய் பேச,
“இனிமே சொல்லக் கூடாது” என்று கோபத்தை காட்டி பாலை குடித்தவன்,
“இன்னும் இருபது நாள் தான் சொல்லியிருக்காங்க, அங்க இங்க நடந்திட்டே இருக்காத, எதுன்னாலும் என்னை கேளு. நானும் இந்த ஐ டி கம்பனிக்காரன் மாதிரி வீட்ல இருந்து வேலை செய்ய போறேன்” என்றான்.  
“அப்புறம் நம்ம சண்டை தூள் பறக்கும்”
“பறக்கட்டும், அப்போவும் உன்னை தனியா விட போறதில்லை” என்று சொல்லிவிட, அப்போதும் மருதுவின் மனவுளைச்சல் புரியவில்லை.
“அம்மா” என்ற வார்த்தையை சட்டை கூட செய்யாமல் இருந்தவனை, குழந்தையை பற்றி பேசிப் பேசி அவனின் அம்மாவை நினைக்க வைத்திருந்தாள்.
மருதாச்சலமூர்த்திக்கு, தன் அம்மா போல ஜெயந்திக்கும் ஆகிவிடுமோ என்று பயம் வர காரணமாகி விட்டாள். மருது தன் அதீத பயத்தை ஜெயந்திக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான்.
 
 
கால் தரையில் பாவ விடாமல் கண்களில் வைத்து தாங்கினார்கள் ஜெயந்தியை. இதற்கு நல்ல ஆரோக்யமான பெண். வேறு உடல் உபாதைகள் கூட இல்லை.    
கலைச்செல்வி வீட்டில் இருக்கும் நேரம் ஸ்டோர்ஸ் சென்று வருவான்.
மருதுவை பற்றி தெரிந்தவர்களாக வீட்டிற்கு பிரசவத்திற்கு அனுப்புங்கள் என்றோ, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றோ ஜெயந்தியின் பிறந்த வீட்டினர் கேட்கவேயில்லை.
இந்த கூத்தெல்லாம் ஒரு வாரமே, இன்னும் பத்து நாட்கள் பிரசவத்திற்கு இருந்த போதும் முன்னெச்சரிக்கையாக ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டான் மருது.
“இப்போது எதற்கு வேண்டாம், வலி வந்த பிறகு சேர்ந்து கொள்ளலாம்”  என்று ஜெயந்தி பிடிவாதம் பிடித்த போதும், அதையும் விட பிடிவாதம் பிடித்து சேர்த்து விட்டான்.
“உங்க அலப்பறை பெரிய அலப்பறையா இருக்கு? உங்க குழந்தை வர்றதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா?” என்று ஜெயந்தி மருதுவிடம் குறை பட்டாள். ஆனால் அது அவளிற்காக என்று புரியவில்லை.
எதுவாகினும் ஜெயந்தி சந்தோஷமாக, அமைதியாக, நிம்மதியாக இருந்தாள்.
 
 
ஒரு வழியாக ஐந்தே நாட்களில் ஜெயந்திக்கு வலி வர, டாக்டரும் அவனும் போட்டுக் கொண்ட சண்டையை மருத்துவமனையே வேடிக்கை பார்த்தது.
ஆம்! கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் அவள் வலியோடு பிரசவ அறையில் இருப்பதை பார்த்தவன், “டாக்டர் ஆபரேஷன் செஞ்சு குழந்தையை எடுத்துடுங்க” என்றான்.
ஜெயந்தியின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, தம்பி என்று அனைவரும் “என்ன இவன் இப்படி பேசுகிறான்?” என்று பார்க்க, விஷாலும் இருந்தான், அவனும் பதறி தான் பார்த்தான். 
“ஆபரேஷன் எல்லாம் தேவையில்லை, அவங்களுக்கு நல்ல படியா குழந்தை பிறக்கும்” என்றார் அந்த புகழ் பெற்ற பெண் மருத்துவர், சற்று வயதானவரும் கூட.
“வேண்டாம், ஏற்கனவே ரொம்ப நேரமா வலில இருக்கிறா. ஏதாவது ஆகிடப் போகுது, நான் சொல்றதை செய்ங்க” என்று மருது அதிகாரமாய் பேசினான். 
நேர்மையானவர்களுக்கு இயற்கையாக வரும் கோபம் அந்த பெண் மருத்துவருக்கும் வர, “என்ன ஆகும்? வலி இல்லாமையா குழந்தை பெத்துக்க முடியும். அவங்களுக்கு அது வயிறுல பிரசவம்னா, எங்களுக்கு அது மனசுல பிரசவம். அது ஒரு உயிர், நாங்க விட்டுடுவோமா அப்படி” என்று அவரும் எகிறி பேசினார்.
 
 
“எப்படி நீங்க பார்க்காம வெளில போயிடறீங்கன்னு நான் பார்க்கறேன்” வேஷ்டியை மடித்துக் கட்ட,
“திஸ் இஸ் அட்ராஷியஸ்” என்று அந்த பெண் மருத்துவர் முகம் சுளிக்க, 
“அண்ணா என்ன இது பொறுமையா இருங்க” என்று விஷால் ஓடி அருகில் வர,
“நீ தூரப் போடா” என மருது பேச,
“என்ன இது ரௌடியிசம், ஐ வில் கால் த போலிஸ்” என்று மருத்துவர் கத்த, வந்த கோபத்தில் விஷாலை ஒரு அறை விட்டான்.
விஷாலுக்கு கண்கள் கலங்கி விட்டது, விட்ட அறையின் தாக்கம் அப்படி.
“கூப்பிட சொல்றா, யாரை வேணா கூப்பிட சொல்றா, இந்தம்மா சும்மா பூச்சாண்டி காட்டுது. உள்ள போய் ஜெயந்தியை பார்க்காம என்கிட்டே பேசிட்டு இருக்கு. ஏதாவது ஏடாகூடமா ஆச்சு அந்தம்மா மட்டுமில்லை இந்த ஆசுபத்திரியே இருக்காதுன்னு சொல்லுடா” என்று கத்தினான்.  
விஷால் அமைதியாய் நிற்க, அதுவரை யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் தடுமாற்றமாய் நின்றிருந்த எம் டீ, “மருது ப்ளீஸ் கண்ட்ரோல், அவங்க பிரசவம் பார்ப்பாங்க, உங்க மனைவிக்கு ஒன்னும் ஆகாது. நாங்க இருக்கோம் நம்புங்க” என்று வெகுவாய் தணிவாய் பேசினார்.

Advertisement