Advertisement

திருமணம் அவளோடு நடக்க இருக்கின்றதோ இல்லையோ சிநேகிதம் பண்ண வேண்டும், பேச வேண்டும், அவளின் துயர் எதுவென்றாலும் துடைக்க வேண்டும் போல தோன்ற, அந்த ஆர்வத்தை கட்டுப் படுத்த முடியாமல்… என்ன செய்வது என்றும் தெரியாமல்… யாரிடமும் இதனை பற்றி பேசவும் முடியாமல் திணறி விட்டான்.

ஒரு சின்ன இனுக்கு யாருக்கு தெரிந்தால் கூட “அண்ணிடா” என்று ஏரியா முழுக்க பரப்பி விடுவர்.

தன்னால் ஒரு பெண்ணின் பெயர் அடிபடுவதை விரும்பவில்லை. இந்த சில நல்ல குணங்களுக்காக தான் அவனின் கடத்தல் தொழிலில் கூட அவன் மாட்டவில்லையோ? 

காலையில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வந்து அமர்ந்தான். ஆரம்பித்து ஒரு வருடம் தான் ஆகின்றது மருது ஸ்டோர்ஸ்.

பெயருக்கு ஒரு தொழில் வைத்து அமர்ந்தது தான். பெரிதாக ஆர்வமில்லை. அவனுக்கு தெரிந்த இரு தொழில்கள், ஒன்று டீக்கடை இன்னொன்று கடல் கடந்த வாணிபம். ஹ ஹ கடத்தலுக்கு அவன் கொடுத்துக் கொண்டிருக்கும் பெயர்.  

இவ்வளவு சொத்துகளை வைத்துக் கொண்டு டீக்கடை வைக்க முடியாது. கடல் கடந்த வாணிபம் விட்டாயிற்று. 

==========================

“சாயந்தரம் கூட்டம் அதிகமா வரும், அப்போ ஆளுங்க இல்லைன்னா கஷ்டம்”

“அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது, பொண்ணுங்களை ஆறு மணிக்கு அனுப்பிடுங்க” என்றான் கட்டளை போல.

“சரிண்ணா” என்று விட்டான்.

இரண்டு பெண்கள் அவனிடம் நேரடியாக கேட்டிருந்தனர். “ண்ணா, ஆறுமணிக்கு விட்டா புள்ளைங்களைப் பார்க்க சௌகரியமா இருக்கும்” என்று.

“சரி” என்று விட்டான்.

அவர்கள் கேட்டது அவர்களுக்கு சாதாரண விஷயம்.

ஆனால் இவனுக்கு… பார்ப்பதற்கு யாருமன்றி வளர்ந்தவன் அல்லவா. “பத்து மணில இருந்து ஆறு மணி வரைக்கும் இருங்க” என்று விட்டான்.

================================

இவளை பார்த்ததுமே கண்கள் விரிய, சுற்றி யாரோ லலலலா பாடினர்.

“வேலைக்கா?” என்று விஷால் கேட்க,

“ஆமாம்” என்று சொன்னாள்.

“எங்களுக்கு பொண்ணுங்க வேண்டாம், பசங்க தான் வேண்டும்” என்று சொல்ல..

“ம்ம் சரி” என்று திரும்பிப் போனவளின் முகம் சுருங்கி விட்டது.

அதற்குள் விஷாலை தொலைபேசியில் அழைத்த மருது – “அந்த பொண்ணு எதுக்கு வந்தது?”  

“வேலை கேட்டு ண்ணா” என்று சொல்லு போதே ஜெயந்தி வெளியில் நடக்க ஆரம்பித்தாள்.

“கூப்பிடு அவங்களை” என்றான் அவசரமாக.

“ண்ணா போயிட்டாங்க” என்றான். நினைத்திருந்தால் உடனே அழைத்திருக்கலாம். ஆனால் அவனின் டக்கு மிகவும் மெதுவாய் இருக்க அவள் வெளியில் நடக்க ஆரம்பித்து இருந்தாள். அது மருதுவிற்கு கடுப்பைக் கொடுத்தது.   

====================================

“மேம், அண்ணா கூப்பிடறாங்க” என்றவனை ஜெயந்தி புரியாமல் பார்த்து நிற்கவும்…

“எங்க முதலாளி கூப்பிடறார்” என்றான் அவளுக்கு புரியும் படியாக.. ஆம் “மேம்” என்று தான் அழைத்தான்.. மருது கோபப்பட்டதாலா இல்லை அவளின் மரியாதையான தோற்றத்துடன் கூடிய பாவனைகளா.. தானாகவே வந்தது.  

அதுதான் பெண்கள் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டார்களே பின்னே எதற்கு கூப்பிடுகிறார்கள் என்ற தயக்கம் ஜெயந்தியிடம் வந்து ஒட்டிக் கொண்டது.   

“இல்லை, நான் வரலை” என்று திரும்பி நடக்கப் போக,

“அச்சோ மேம், வந்திடுங்க, அண்ணா சொல்லி நடக்கலைன்னா பிரச்சனை ஆகும். ப்ளீஸ்! அவர் நீங்க உள்ள இருந்தப்போவே சொன்னார், நான் சொல்ல லேட் பண்ணிட்டேன், நீங்க கிளம்பிட்டீங்க” என்றான் கெஞ்சலாய்.

அவனுக்காக திரும்பி வந்தாள்.

அழைத்து விட்டான் தான், ஆனால் உள்ளுக்குள் பரபரப்பாய் உணர்ந்தான்  மருது. கடத்தல் பொருள் கைமாற்றும் போதோ அல்லது எடுத்து வரும் போதோ கூட இவ்வளவு பதற்றமில்லை

Advertisement