திரு துளசியை கண்ணுக்குள் வைத்து தாங்கினான் என்று சொல்லவே முடியாது, ஏனென்றால் அவர்கள் முந்தைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர். அதாகப் பட்டது முன்பு போல காலையில் எழுந்து திரு ஷட்டில் ப்ராக்டிஸ் சென்றான், ஆனால் நேரமாக வந்து மீனாக்ஷியை அவனே பள்ளிக்கு கொண்டு விட்டு வந்து குளித்து உண்டு மில்லுக்கு கிளம்பினான். மதியம் வருவான் உண்பான் கிளம்புவான் மாலை மீனாக்ஷியை வருவான் காபி குடிப்பான் கிளம்புவான், இரவு வருவான் உண்பான் உறங்குவான்.

என்ன துளசியின் முகம் பார்த்து பத்தி சொல்ல ஆரம்பித்து இருந்தான். ஆனால் துளசி கேள்வி கேட்டால் தானே.

ஆம் பேச்சுக்கள் அதிகம் இருவருக்குள்ளும் இன்னும் வரவில்லை அவசியமான பேச்சுக்கள் மட்டுமே!

ஆனாலும் கண்ணுக்குள் வைத்து தான் தாங்கினான். இதுவரை முகம் பார்க்காமல் காலையில் துளசியிடம் வாங்கிய காபிக்கும் இப்போது பளிசென்ற புன்னகையோடு துளசியிடம் வாங்கும் காபிக்கும் அவ்வளவு வித்தியாசம்.

===============================

என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அப்படியே விட்டு வேகமாய் அவன் முன் சென்று நின்று கொள்வாள்.

எதுக்கு இவ்வளவு வேகமா வர்ற, இதோ வர்றேன்னு ஒரு சத்தம் கொடுக்க வேண்டியது தானே என்று திரு கடிந்தாலும் தலையை தலையை ஆட்டுவாள் ஆனாலும் குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கவே ஒலிக்காது. முன்பாவது மகளிடம் ஒலிக்கும் இப்போது அவளிடமும் இல்லை

மீனாக்ஷி தான் குறும்பே செய்வதில்லையே, திருவின் ஆதிக்கம் மீனாக்ஷியிடம் அதிகம் இருக்க, கொஞ்சம் பொறுப்பாய் மாறிக் கொண்டு இருந்தாள். இயல்பிலேயே புத்திசாலி படிப்பில் கவனமில்லாமல் இருந்தாள்.

இப்போது திரு அவளை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டு இருந்தான். அவனுடைய போதனைகளும் அவனை போலவே வித்தியாசமானவை.

==============================

அதனையும் விட திரு துளசியின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான விஷயம் இருவரும் ஒரே படுக்கையை பகிர்ந்து கொண்டது. ஆம், திருமணமான நாள் முதல் அது இருந்தது இல்லை. எப்போதும் அவனின் ரூம் உள்ளே ஒரு ரூம் என்பதால் இவன் வெளியில் இருந்த ரூமில் தான் படுத்துக் கொள்வான்.

அவனின் தேவைகளுக்கு மட்டுமே உள்ளே செல்பவன் பின் வெளியில் வந்து படுத்துக் கொள்வான். இந்த சில வருடங்களாக தான் அவனுக்கு கட்டில் மெத்தை எல்லாம்.

அதற்க்கு முன் வெறும் தரை தான் அவனின் படுக்கை. துளசியை கீழே படுத்துக் கொள் என்று சொல்லியிருந்தாலும் அவள் செய்திருப்பாள் ஆனால் சொன்னதில்லை.

துளசி கூட சில முறை நீங்க இங்க படுத்துக்கங்க நான் கீழ படுத்துக்கறேன் என்று சொல்லியிருகின்றாள், ஆனால் சில முறை தான் அதன் பிறகு அவளின் கர்ப்பம் பின்னே குழந்தை, அதனால் அவள் மேலேயே உபயோகித்து கொள்ள, 

==================================

என்னால அவ கிட்ட நான் அப்பாவோட படுத்துக்கறேன்னு சொல்ல முடியுமா நானெல்லாம் சொல்லவே மாட்டேன்.

அப்படி சொல்லாத நீ இனிமே தனியா படுக்கணும்னு சொல்லு  

ஏதாவது சொதப்பிட்டேன்னா அவ நிறைய கேள்வி கேட்பா அப்புறன் அந்த சான்சே எடுக்க முடியாது என்று துளசி கவலையாக சொன்ன விதத்தில்

சரி நானே பார்த்துக்கறேன் என்று தான் திரு களத்தில் இறங்கினான்

செய்து முடிப்பதற்குள் எப்படி மீனாட்சியிடம் பேச என்று எத்தனை ஒத்திகை எத்தனை வார்த்தை கோர்வைகள் ஷப்பா எப்படியோ செய்து முடித்து விட்டான்.

இதுவரை அவனின் வாழ்க்கையில் செய்த சாதனை என்ன என்று கேட்டால் இதனை தான் சொல்லுவான் ஆனால் மனதிற்குள்!

இதோ துளசி அவனின் அருகில், அவளின் சோர்வு குறைந்து விட்டது. ஒரு அமைதி அவளிடம் வந்து விட்டது. மனது அதையும் இதையும் நினைக்கவில்லை. ஆனாலும் திருவிற்கு போதவில்லை, அவளிடம் இன்னும் ஒரு கலகலப்பை எதிர்பார்த்தான்.