Advertisement

செல்லாத்தா செல்ல மாரியாத்தா எந்தன் சிந்தையில் வந்து அரைவினாடி நில்லாத்தா ….

ஆதிசக்தி மாதா கருமரியாத்தா எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா …

எல் ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் ஒலிக்க, ஜெயந்தியின் கண்கள் விழித்துக் கொண்டது, கண்கள் மட்டுமல்ல புலன்களும்,

நேரத்தை பார்த்தால் காலை ஐந்து மணி.

“எப்படி தான் இப்படி வைப்பாங்களோ தெரியலை? மனுஷங்களை ஒரு லீவு நாள்ள கூட தூங்க விடராணுங்களா உயிரை எடுக்கராணுங்க. ஒரு ஆறு மணிக்கு பாட்டை வெச்சா என்ன? இன்னும் ஒரு பதினஞ்சு நாள் மேல இருக்கு பண்டிக்கைக்கு, அதுக்குள்ள காதுல கத்த விடறாணுங்க. இன்னும் தூங்கின படி தான்” என்று அலுத்துக் கொண்டே கண்களை மூடினாள்.

================================

கதவு திறந்து வெளியே வந்து நின்றாள். எங்கும் இருட்டு கோவிலில் மட்டும் விளக்கு எரிந்தது. அந்த பக்கத்தில் அவர்களின் வீட்டுக்காரர் வீடு, கோவிலின் பக்கம் அவர்களின் காம்பௌண்ட் இருக்கும். அதில் இருந்த காலி இடத்தில், வேப்ப மரம், கொய்யா மரம், மாதுளம் மரம், பூச்செடி என நிறைய இருக்கும்.

வீட்டுக்கார அம்மா அதனை பராமரிக்கிறார். அவருக்கு அது ஒரு உயிர். “இந்த பக்கம் எட்டிப் பார்க்க போய் செடியை மிதிச்சு வெச்சேன், அந்தம்மா என்னை மிதிச்சிடும்” என்று நினைத்தவள் காம்பவுண்ட் கேட் திறந்து வெளியே வந்து நின்றாள்.

கோவிலின் முன் ஒரு அம்மா சிகப்பும் மஞ்சளும் கலந்த சேலை கட்டி  வாயிலை கூட்டி தண்ணீர் தெளித்து கொண்டிருந்தார்.

இவளின் இடம் இருட்டாய் இருக்க, அவர் நின்ற இடம் தெரு கோவிலின் முன் இருந்த விளக்கால் வெளிச்சமாய் இருந்தது.  

அங்கிருந்தே ஒரு சத்தம் கொடுத்தாள் “அக்கா” என்று.

=====================================

அவர் நிமிர்ந்து பார்க்கவும் “அக்கா அதுக்குள்ள எதுக்கு பாட்டு, இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு வெக்க கூடாதா? ராத்திரியும் பதினோரு பன்னண்டு வரை பாடுது. இப்பவும் பாடுது, எப்படி தூங்க?” என்றாள்.

அவர் பதில் சொல்லாமல் அங்கிருந்து முறைத்து பார்ப்பது தெரிய,

“தோடா முறைக்குது, கண்ணை நோண்டி காக்காய்க்கு போடணும்” என்று மெதுவாக முணுமுணுத்துக் கொண்டவள்,

“சொன்னேன், முடிஞ்சா செய்ங்க, இல்லை விடுங்க” என்று சத்தமாய் சொல்லி, “அதுக்கு எதுக்கு கஷ்டப்பட்டு முறைக்கறீங்க, கண்ணு வலி எடுக்க போகுது” என்று மெதுவாய் சொல்லி அந்த பெண்மணி எதுவும் சண்டைக்கு வரும் முன் உள்ளே வந்து விட்டாள்.

மெதுவாய் சொன்னதையும் சத்தமாய் சொல்லியிருப்பாள், ஆனால் அவ்வளவு தான் அவளின் வீட்டினர் அவளை உண்டு இல்லையென்று செய்து விடுவர். ஆம்! அவர்கள் இருக்கும் இடமே தெரியாது. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி என்று அத்தனை பேரும் யார் வம்பு தும்புக்கும் போகாதவர்கள்.

=====================================

ஒருவன் அடிப்பது போல வந்து “என்னடா எங்க ஏரியாக்குள்ள வந்து இருந்துகிட்டு எங்களை பாட்டு போட வேண்டாம்னு சொல்றியா? கீசுடுவேன் கீசி!” என்று உதார் விட்டான்.

அப்பாவின் விமலனின் பதற்றம் சிறிதும் இல்லை ஜெயந்தியிடம். வாய் பேச பரபர வென்றது. ஆனால் அப்பா திட்டுவாரே என்று அமைதியாய் நின்றாள்.

“நான் இல்லைங்க” என்று விமலன் சொல்ல,

“பொய் சொல்ற நீ” என்று ஒருவன் அவனின் சட்டையை பிடித்தான்.

அதுவரை அமைதியாய் இருந்த ஜெயந்திக்கு கோபம் பெருக,

“ஏய், கை எடு, சட்டையில இருந்து கை எடு” என்று வேகமாய் அருகில் போனாள்.

==================================

“டேய், என்னங்கடா சத்தம்” என்ற ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.

சத்தமிட்ட இளைஞர்கள் அனைவரும் கப் சிப்பென்று அடங்கினர்.

சுற்றி நின்ற இளைஞர்கள் நகர, உயரமான ஒருவன் முன் வந்து நின்றான்.

ஜெயந்தி அவன் புறம் பார்வையை ஓட்டினாள். இதற்கு முன் அவள் அவனை பார்த்தில்லை. அவனை என்ன அங்கிருந்த யாரையுமே தெரியாது.

வீட்டை விட்டு இறங்கினால் செல்லும் பாதையில் மட்டுமே கவனம், வேறு யாரும் பாதையில் வந்தால் தெரியாது. ஏன் அவளின் குடும்பத்தில் ஒருவர் வந்தால் கூட தெரியாது.

“அட, நம்ம லகான்” என்ற பார்வையை அவனும் ஜெயந்தியின் மீது ஓட்டினான்.

ஆம்! அவளுக்கு தான் தெரியாது. அவனுக்கு தெரியும், தினமும் அவள் கல்லூரி செல்ல நடக்கும் போது அங்கிருக்கும் டீக்கடை ஒன்றில் காலை டீ அருந்தியபடி நிற்பான்.

Advertisement