Advertisement

அத்தியாயம் ஒன்பது:

பல முறை சிபி ஜெயஸ்ரீயின் பார்வையை சந்திக்க முற்பட்டான்… ஆனால் முடியவேயில்லை. கவனமாக ஜெயஸ்ரீ தன் பார்வையை தவிர்க்கிறாள் என்று மிகவும் தாமதமாகத்தான் சிபிக்கு புரிந்தது.

அதன் பிறகு அவனும் முயலவில்லை…. “என்னைப் பார்க்காமல் எங்கே போவாள்”, என்று தான் மனதில் அந்த நேரம் தோன்றியது.. அதே சமயம், “என்ன இது? நம்மை விட திமிராய் இருப்பாள் போல இருக்கிறதே”, என்றும் தோன்றியது.

ஜெயஸ்ரீ இப்போது சொல் பேச்சுக் கேட்டு, திருமணம் மற்றும் வரவேற்பு எல்லாவற்றிலும் காலையில் நடந்ததை விட்டு பிறகு பதவிசாக நடந்தாலும்…. மனதிற்குள் சிபியைக் குறித்த அளவில்லாத பதட்டம் தான். 

புதியவன், இனி அவனோடு தான் தன் வாழ்க்கை, எப்படி இருப்பானோ? எப்படி நடப்பானோ? எனக்கு அவரைப் பிடிக்குமா? அவருக்கு என்னைப் பிடிக்குமா? தன்னால் அனுசரித்துப் போக முடியுமா? மனம் முழுவதும் குழப்பம்….. 

காலையிலேயே என்னைக் குறித்து குழந்தைகள் பேசும் அளவிற்கு வைத்திருந்தனரே அவர் வீட்டினர். என்னைக் குறித்து அந்த எண்ணம் தானா அவர்களுக்கு…. இவருக்கும் அப்படி தானோ….  இத்தனைக் குழப்பங்கள் பொருட்டு அவனின் பார்வையைச் சந்திக்க பயந்து கவனமாக தவிர்த்தாள். 

நொடிக்கு ஒரு தரம் வஜ்ரவேல் தான் வந்து பேசினார்… “இவங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருக்கேனா இல்லை இவரையா?”, என்றுத் தோன்றியது சிபிக்கு.

மாலை வரவேற்பு, இரவு விருந்து எல்லாம் சிறப்பாக முடிய, பெண்ணையும் மாப்பிள்ளையையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துப் போக வஜ்ரவேல் கேட்டார்.

நடராஜன் வீட்டினருக்கு அது பழக்கமில்லை தான்….. ஆனால் திருமண செலவு முழுவதும் வஜ்ரவேல் செய்திருக்கும் போது மறுக்க முடியாது.

நடராஜன் ஈஸ்வரரை பார்க்க… “போகட்டும்”, என்பது போல அவர் தலையசைக்கவும் அனுப்ப சம்மதித்தார்.

“ஒரு ரெண்டு நாள் இருக்கட்டுமுங்க, சொந்த பந்ததையெல்லாம் கூட்டி, ஒரு கார விருந்து போட்டு, சீரோட அனுப்பிடரனுங்க….. உங்களுக்கு எந்த நாளு சொவ்கரியப்படும்னு சொன்னா, அன்னைக்கு வெச்சிக்குவோமுங்க”, என்றார்.

நடராஜனுக்கு சம்பிரதாயங்கள் தலை சுற்றியது…. பெரிய மகனுக்கு வீட்டில் வளர்ந்த பெண் என்பதால் சொந்ததுக்குள் என்பதால் ஒன்றும் தெரியவில்லை…… இன்னும் இது வேறா என்று மனதில் தோன்றியபோதும்…. “வீட்ல கலந்துட்டு நாளைக்கு சொல்றனுங்க”, என்றார்.  

“என்ன அவர்கள் வீட்டிற்குப் போவதா? முடியாது!”, என்பது போல சிபி தந்தையைப் பார்க்க…..

“போயிடு சிபி, ஏற்கனவே இவர் பண்ணியிருக்குற செலவுல நான் தலை சுத்தி கிடக்கிறேன்….. உங்கண்ணன் கல்யாணம் இப்படி நடக்கலை….. நாளைக்கு உன் தம்பி கல்யாணத்தையும் நான் இப்படி செலவு செய்யப் போறது இல்லை….”,

“தாம்பூலத்துக்கு அவர் என்கிட்டே சொல்லவேயில்லை, வந்தவங்களுக்கு ஸ்கூல் பேக், உள்ள லஞ்ச் பேக், அது கூட ஒரு டப்பர் வேர் டிஃபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் போட்டுக் கொடுத்திருக்கிறார்… அது ஒன்னு எவ்வளவு வரும் தெரியுமா? ஒன்னும் சொல்ல முடியாம கண்ணு முழி பிதுங்கிக் கிடக்கிறேன்”.     

“உனக்கு இதுவே ரெண்டாவது கல்யாண செலவு…. இது உன் தப்பில்லைன்னு இருந்தாலும் உன் பங்குக்கு நிறைய செலவு செஞ்ச மாதிரி தான் வரும்…. நானே அந்தக் கவலைல இருக்கேன் நீ இன்னும் ஏதாவது சொல்லாத, அவங்க வீட்டுக்குப் போ”, என்றார்.

அவர் இந்த விதமாக சொல்ல….. வாசு வேறு விதமாக சொன்னான்….. “பாரு, நீ ராதாவைக் கல்யாணம் பண்ணியிருந்தா எல்லாத்தையும் நீயே பார்த்திருக்கணும்….. ஆனா இப்போ பாரு உன் மாமனார் உனக்கு எவ்வளவு செலவு செய்யறார்….. மூணு பவுனுக்கு கழுத்துக்கு சங்கிலி, ஒரு பவுன்ல மோதிரம், ரெண்டு பவுன்ல பிரேஸ்லெட்… கலக்கற சிபி நீ……”,

“பொண்ணு கூட அந்த சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தா ராதாவை விட நல்லா இருக்கா…….. அதனால ராதாவைப் பத்தின நினைப்பை தூக்கி தூர போட்டு, இந்தப் பொண்ணை நல்லா பார்த்துக்கோ…. உன்ற மாமனார் உன்னை நல்லா பார்த்துக்குவார்”, என்று சொல்ல……

“நிமிஷத்துக்கு நிமிஷம் மனசு மாற நான் என்ன பச்சோந்தியா?”, என்று சிபி பதில் பேச…..

“லூசு மாதிரி உளறக் கூடாது… மனசுல நினைக்கறது எல்லாம் செல்லாது மாப்பிள்ளை… அப்புறம் எப்படி நீ இவ்வளவு நாள் மனசுல மனைவியா நினைச்ச பொண்ணு அடுத்தவன் பொண்டாட்டி ஆனா……..”,

“மனசெல்லாம் எங்கயும் செல்லாது….. நீ கட்டியிருக்குற தாலி தான் செல்லும்….. ஒழுங்கா குடும்பம் நடத்துற வழியைப் பாரு…. இந்த மாதிரி பைய்த்தியக்காரத்தனமா எதுவும் நினைக்காத….”,

“மனசு நம்ம சொல்றபடியெல்லாம் உடனே எப்படிக் கேட்கும்….. எப்படி இத்தனை நாள் நினைச்சது மாறும்…..”, 

“டேய்…. என்னடா உன்னோட ரோதனை…. அவ செத்துப் போயிட்டான்னு நினைசிக்கோ…… போ! போ! கிளம்பு! கிளம்பு!”, என்றான்.

“என்னங்கடா இது? நான் ரோதனையா இல்லை இவனுங்க ரோதனையா?”, என்று அத்தனைப் பேரையும் முறைத்துப் பார்த்துக் கிளம்பினான் சிபி.

அவனுக்கு என்ன தெரியும்? இவனையும் விட நிறைய அறிவுரைகள் ஜெயஸ்ரீக்கு சொல்லபடுகிறது என்று.

“கண்ணு, மாப்பிள்ளை நம்ம வீட்டுக்கு வர்றார், நல்லா பார்த்துக்கோ! இனிமே அவர் தான் உன் வாழ்க்கை! அப்பா உனக்கு நல்லா இல்லாத யாரையும் மாப்பிள்ளையா கொண்டு வரமாட்டேன்……”,

“அஞ்சு வருஷம் அவரோட காலேஜ்ல படிச்சவன்! என்னோட ரொம்ப ஸ்நேகிதரோட பையன்….. பையன் குறை சொல்ல முடியாதவன்னு தான் சொன்னான்”.

“அஞ்சு வருஷம் கூடப் படிச்சவங்குக்கு தெரியாம இருக்காது…. உனக்கும் அவரைப் பிடிக்கும்……. காலையில இருந்து நீ இன்னும் ஒரு வார்த்தைக் கூடப் பேசலை…. பதட்டமா இருக்காத… பேசு கண்ணு… பேசப் பேசத் தான் வரும்….. அவரோட பேசுக் கண்ணு, தயங்காத!”, என்று வண்டி வண்டியாக வஜ்ரவேல் அட்வைஸ் செய்யவும்……

வாயில் விரல் வைத்து, “பேசாதீர்கள்”, என்பது போல சைகை காட்டியவள்…. திரும்ப காதை இரு கைகளால் மூடி, “தாங்க முடியவில்லை”, என்பது போல சைகைக் காட்டினாள்.

இதைத் தூரமாக இருந்து சிபி பார்த்துக் கொண்டு தான் இருந்தான். இவளுக்குப் பேச வராதா என்று மிகவும் கவலையாகப் போயிற்று….. “நான் இப்படி சைகையில் கூட காலத்தை ஓட்டுவேன்! என் குழந்தைகள்! அவர்களை எப்படி வளர்ப்பேன்?”, என்ற எண்ணம் ஓடியது.

மனமும் எப்படி இந்தப் பெண்ணை வைத்து குடும்பம் நடத்துவது என்று பாரமாக அழுந்தியது. அவளையே தான் பார்த்திருந்தான், ஆசையாக அல்ல…. காலின் குறையும், பேச்சின் தடையும்…. குறை என்பது மற்றவர்கள் முன் கீழ் என்பது போலவோ அல்ல…… அல்லது அழகு குறைவு அப்படியோ சிபிக்கு தோன்றவில்லை……

அவனுக்கு தோன்றியது எல்லாம் நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள்… எப்படி அவள் வேலை செய்வாள், எப்படி குடும்பத்தை கவனிப்பால் என்பது போல…     

அப்போது வரை வாசுவிடம் மனசு என்ன நிறம் மாறும் பச்சோந்தியா என்று கேட்டவன் மனம் செல்லும் பாதை இப்போது….

மாறுவது தான் மனம்…. அது மட்டும் இல்லாவிட்டால் பல மனிதர்களின் வாழ்க்கை அதன் சுழற்சியைக் கொள்ளாது…….

நினைப்பது எல்லாம் மனிதர்களுக்கு நடந்து விடுகிறதா என்ன…… நூற்றில் இருவருக்கு நடந்தால் அதிகம்…… இருந்தாலும் நடப்பதை ஏற்றுக் கொண்டு மனிதர்கள் ஓடிக்கொண்டே தான் இருக்கிறார்கள், எதைத் தேடி என்பதை அவர்களே அறியார்….

சிலராவது நின்று நடந்த பழையதை திரும்பி பார்ப்பர்… பலர் அதைக் கூட செய்வது இல்லை…. ஓடிக் கொண்டே தான் இருக்கின்றனர்.

அப்பாவின் இடைவிடாத அறிவுரைகளால் நொந்து போன ஜெயஸ்ரீ…….. “என்னடா இது? இந்த அப்பா!”, என்று மனதிற்குள் சலித்தவள்…… அவளையும் மீறி சிபியை பார்க்க…..

அவன் எப்படி இந்த பெண்ணோடு என் வாழ்க்கைப் போகப் போகிறது என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான். பேச்சுக்கள் குறைவு என்பதால், முகத்தைக், கண்களை கொண்டு மனிதர்களை படிக்க ஜெயஸ்ரீ எப்போதும் முயற்சிப்பாள்.

அது போல சிபியைப் படிக்க முற்பட்டாள். பார்த்த ஜெயஸ்ரீக்கு சட்டென்று ஒரு கோபம் மூள…… “என்னை எதுக்கு இவ்வளவு பாவமா பார்த்துட்டு இருக்காங்க…. இவங்களை யார் இவ்வளவு கஷ்டப்பட்டு என்னைத் திருமணம் செய்து கொள்ள சொன்னது”, என்பது போல முறைத்தாள்.

அப்போது தான் சிபி ஜெயஸ்ரீ தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன்…. அவளின் பார்வையின் முறைப்பை கவனித்தான். “நானே இவ கூட எப்படி குப்பை கொட்டுறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்…. இவ எதுக்குடா நம்மைப் பார்த்து இந்த முறை முறைக்கிறா… ரொம்ப திமிரோ?”, என்று தோன்றியது. 

என்னவோ புது மணமகனுக்கான உற்சாகம் இருந்ததோ இல்லையோ… திருமண நிகழ்வில் முழு மனதோடு தான் பங்கெடுத்தான்… இப்போது மனதின் சஞ்சலங்கள் சிபியை ஆட்கொள்ள…. ஜெயஸ்ரீயின் முறைப்பை தவிர்த்து வேறெங்கோ பார்த்தான்.

பார்த்துக் கொண்டிருந்தவன், பார்வையைத் திருப்பியது ஜெயஸ்ரீயை மிகவும் காயப்படுத்தியது….. நான் பார்க்கவே சகிக்க மாட்டாம இருக்கிறேனா என்பது போலத் தோன்ற, கூடவே……

என்ன தான் அடுத்தவரின் பரிதாபப் பார்வை அவளை வருத்தப்படுதினாலும், “என் குறை உங்களுக்கு குறையாய் இருந்தால் இருந்துவிட்டு போகிறது, ஆனால் எனக்கு குறை அல்ல”, என்ற நிமிர்வோடு திமிராய் இவள் தான் பார்வையை திருப்புவாள், அவர்களைக் கண்டு கொள்ள மாட்டாள்…..

“அது மற்றவருக்கு, ஆனால் இவன் என் கணவன் இவன் இப்படிப் பார்ப்பதா, பார்வையை திருப்புவதா?”, முனுக்கென்று கண்களில் கண்ணீர் மூண்டது…..   

மிகுந்த பிரயர்த்தனப்பட்டு அந்த கண்ணீர் வெளியே வராமல், முகத்தை சரி செய்வது போல கர்சீப் வைத்து துடைத்துக் கொண்டாள்.

ராஜவேல் காரை எடுத்து ரெடியாக நிறுத்தினான். “கண்ணு நீ மாப்பிள்ளையோட வீட்டுக்குப் போ கண்ணு, சித்தி, சித்தப்பா கூட வர்றாங்க! வீட்டுக்கு உன் சின்ன தாத்தா, பாட்டி போயிட்டாங்க! அவங்க பார்த்துக்குவாங்க…….”,

“நான் இங்க எல்லோரையும் அனுப்பிட்டு வர்றேன்!”, என்றார்.

பேச வேண்டும் என்று நினைத்தாலும், ஜெயஸ்ரீயின் தொண்டையை விட்டு ஒரு வார்த்தை வரவில்லை. “நீங்களும் வாங்க!”, என்பது போல தந்தையின் கை பிடித்து அழைத்தாள். யார் கவனத்தையும் கவராமல் நாசுக்காக அந்தக் கையை விலக்கிய வஜ்ரவேல்….. “போ கண்ணு! அப்பா சொன்னாக் கேட்கணும்!”, என்றார் தன்மையாக.

மனமேயில்லாமல் ஜெயஸ்ரீ கிளம்ப, “போங்க மாப்பிள்ளை!”, என்றார் சிபியின் அருகில் விரைந்து…..

அந்த மனிதரைப் பார்த்தால் பாவமாக இருந்தது சிபிக்கு, ஒற்றை ஆளாய் அத்தனை பேரையும் கவனித்து, பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார் காலையில் இருந்து. வேலை செய்ய ஆட்கள் இருந்தாலும் அவர் சொல்படி தான் எல்லாம் நடந்தது.

திருமணம் வரவேற்பு எல்லாம் முடிந்த நிலையில்… காலையில் பெண்ணின் குறை பெரிதாய் தெரிந்த இடத்தில்…. “குறை இருந்தா இருந்துட்டு போகுது! பாரு, அவங்கப்பா தண்ணி மாதிரி பணத்தை செலவு செய்யறான்… இதைவிட என்ன வேணும்… போன கல்யாணம் நின்னாலும் இந்தக் கல்யாணம் சிபிப் பயலுக்கு சிறப்பா நடந்திருச்சு”, என்ற பேச்சுக்கள் சிபியின் உறவுக்குள் இருக்க…

“பரவாயில்லை பையன் நல்லவனா தெரியறான்! பார்க்கவும் நல்லா இருக்கான், படிச்சும் இருக்கான், குடும்பமும் மரியாதையா தெரியுது….. முன்ன கல்யாணம் பேச நினைச்சிருந்த பையன் குடும்பம் மாதிரி இல்லை!”, என்பது போல ஜெயஸ்ரீயின் உறவுகளுக்குள் பேச்சு இருந்தது.

மொத்தத்தில் அந்த திருமணத்தை எல்லோரும் வரவேற்றனர்.

சிபியையும் ஜெயஸ்ரீயையும்….. வஜ்ரவேலின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

சிபிக்கு சங்கடமாக இருந்தது, அவன் நினைவு தெரிந்த நாளாக யார் வீட்டிற்கும் சென்று தங்கியதே இல்லை.

இரண்டு நாள் தங்குவதற்கு தான் இவ்வளவு யோசிக்கிறோமே, இந்தப் பெண் வந்து எப்படி நம் வீட்டில் காலம் முழுவதும் இருப்பாள் என்பது போல அவன் யோசிக்கவேயில்லை. எந்த ஆண்மகனுக்கும் அப்படி தோன்றுவது இல்லை என்பது தானே உண்மை.

பெண்ணாகப் பட்டவள் திருமணம் முடிந்துவிட்டால் அவள் உடல், பொருள், ஆவி என்று அத்தனையையும் கணவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் அப்போது தான் அவள் நல்ல பெண் என்ற வட்டத்திற்குள் வருவாள்…. அது சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்க…..

இந்த மாதிரி எந்தத் தளைகளும் ஆண்களுக்கு இல்லை என்பது தான் உண்மை…   

இருட்டில் அது எந்த இடம் என்று கூட சிபிக்கு தெரியவில்லை. கார் நிற்கவும் இறங்கினான்… கூட ஜெயஸ்ரீயும் மெதுவாக இறங்கினாள்… தான் ஏதாவது உதவ வேண்டுமோ என்பது போல சிபி பார்க்க, மீண்டும் அவன் பார்வையை சந்திப்பதைத் தவிர்த்து….  அவளாக சிரமப்பட்டு இறங்கி கைத்தடியை கூட நிறுத்திக் கொண்டாள்.

அதற்குள் வயதான பெண்மணி ஒருவர் வந்து ஆரத்தி எடுத்தார். பின்பு வீட்டினுள் சென்றனர்.

ஓட்டு வீடு, ஆனால் பெரிய வீடு… வீடு மட்டும் தான் ஓட்டு வீடு மற்றபடி உள்ளே கீழ் தரை கூட முழுவதும் கிரானைட்ஸ் போடப்பட்டு, அங்கே இருந்த பொருட்கள், அவர்கள் சற்று வசதியானவர்கள் என்று பறைசாற்றும் படி தான் இருந்தது.

வீடு, தரை, சாமான் எல்லாம் இப்படி வசதியா இருக்கு! ஆனா ஏன் ஓட்டு வீடு என்ற கேள்வி சிபியினுள் எழுந்தது.

அவன் பாட்டிற்கு வீட்டின் வசதியை பார்வையால் அளந்து கொண்டிருக்க.. ஜெயஸ்ரீ எங்கே என்பது போல பார்த்தால் அவளைக் காணவில்லை. அவளை மட்டுமல்ல யாரையும் காணவில்லை.

“இப்போதானேடா ஆரத்தி எடுக்கும் போது நாலஞ்சு பேர் இருந்தாங்க! எங்க போனாங்க?”, என்று சிபி வியப்பாய் நினைத்தான்.

ஜெயஸ்ரீ அவளின் ரூமிற்குள் போயிருக்க… உறவுகள் எல்லாம் மற்ற அறைகளில் இருந்தனர். மரியாதை நிமித்தம் அவன் முன் வரவில்லை, அவன் முன் அமரவுமில்லை….  

இப்படியே பத்து நிமிடங்கள் போக…. தனம் தான் ஜெயஸ்ரீயிடம் விரைந்து, “மாப்பிள்ளைத் தனியா உட்கார்ந்து இருக்கார் கண்ணு! நீ போம்மா! அங்க போய் இரு!”, என்றார்.   

அப்படி ஒன்றும் மரியாதை தெரியாதவளல்ல ஜெயஸ்ரீ….. அங்கே முன் கூடத்தில் அதிகம் யாரும் அமரமாட்டர், வஜ்ரவேல் அழைத்தாலன்றி என்று அவளுக்கும் தெரியும். மெதுவாக எழுந்து கூடத்திற்கு வந்தாள்.

சிபி தனியாக அமர்ந்திருப்பதை பார்த்தவள், முயன்று தனத்திடம், “சித்.. சித்.. சித்தப்பாவை… வந்து உட்கார சொல்.. சொல்லுங்க…”, என்றாள்  திக்கித் திணறி….

காலையில் இருந்து ஜெயஸ்ரீ பேசும் முதல் வாக்கியம்… அமைதியாக இருந்த அந்த இடத்தில் நன்கு கேட்டது…. திக்கி திணறி பேசப்பட்ட அந்த வாக்கியம் சிபியின் காதுகளில் விழ… பேசியது யார் என்பது போல சிபி வேகமாக பார்வையை சுழற்றினான்.

ஜெயஸ்ரீ தனத்திடம் பேசுவது தெரிய… மனதில் இவ்வளவு நேரம் இருந்த பாரம் விலகியது, இவளுக்குப் பேச வரும் என்று.

அது சிபியின் முகத்தில் இருந்த இறுக்கத்தை தளர்த்தியது. ஆர்வமாக அவர்கள் பேசுவதை பார்த்தான். “உன்ற சித்தப்பா வந்துட்டாலும்… அவர் வரமாட்டார் கண்ணு…. மாப்பிள்ளை தம்பி கிட்ட வேற முன்னம் நீ யாருன்னு மரியாதையில்லாம பேசியிருக்கிறாராம்.. அதுக்குப் பயந்துகிட்டு வரமாட்டேங்கறார்… நீ போய் இரு கண்ணு!”, என்று சொல்லி தனம் சென்று விட்டார்.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற ஜெயஸ்ரீ, பின்பு மெதுவாக நடந்து வந்தாள், டீ வீ போடும் நோக்கத்தோடு… அவள் நடந்து வருவதை விழியகற்றாமல் சிபி பார்த்துக் கொண்டிருந்தான்.

எப்படி நடக்கிறாள் என்பது போல தான்… சிபி தன்னையே பார்ப்பதை உணர்ந்தவளுக்கு நடை தடுமாறியது.. கைகளும் வேர்க்க பிடித்திருந்த கைதடி வழுக்கியது….

நெற்றியில் அரும்பிய வியர்வையை ஜெயஸ்ரீ துடைக்க…. அதுவரை அவளின் நடையை ஆராய்ந்து கொண்டிருந்த சிபி…. அப்போது தான் அவளின்  பதட்டத்தை கவனித்தான்.

தான் பார்ப்பது தான் அவளுக்கு பதட்டம் என்று சிபிக்கு இன்னும் பிடிபடவில்லை.

கைத்தடியை நழுவ விட்டவள், பக்கத்தில் இருந்த சுவரைப் பிடித்துக் கொண்டாள். சிபி வேகமாக அருகில் சென்றவன், “என்ன ஆச்சு?”. என்றான் அவளையும் விட பதட்டமாக.

அவன் பேசியது இன்னும் பதட்டத்தைக் கொடுக்க… சுவரை அழுந்த பிடித்து நின்றாள்.

“இரு, உன் சித்தியைக் கூப்பிடறேன்!”, என்று திரும்ப…..

“இவர் என்ன என்னை நோயாளி என்கிறாரா? ஐயோ எல்லோரையும் கூப்பிட்டு அவர்கள் என்ன என்று கேட்டு? என்னைக் காட்சி பொருள் ஆக்குகிறாரா”, என்று சட்டென்று எரிச்சல் மூள, பதட்டத்தில் பேச வராததால்…. இன்னொரு கையால் அவன் கையைப் பற்றி போகாதே என்பது போல அவள் புறம் இழுத்தாள்.

இழுத்தாள் என்பது திசையை மட்டும் குறிக்கும், சிபி நகரக் கூட இல்லை.. ஜெயஸ்ரீயின் பலம் அவ்வளவுதான். 

அவளின் கையின் ஈரத்தை உணர்ந்து இன்னும் என்னவோ ஏதோ வென்று பயந்து விட்டான் சிபி… “என்ன பண்ணுது”, என்று திரும்பவும் கேட்க…

“ஒன்னுமில்லை”, என்பது போல தலையாடியவள், அவன் கைகளை பிடித்திருப்பதை உணர்ந்து இன்னும் பதட்டமாக, அவசரமாக கைகளை விட்டு, “எங்கேயும் போகவேண்டாம், யாரும் வேண்டாம்!”, என்று சைகை காட்டினாள்.

சிபிக்குப் புரியவில்லை….. அவன் இன்னும் கவலையாக பார்க்கவும்…. முயன்று அமைதிப் படுத்தி….. “ஓ… ஒன்… ஒன்னும்மில்லை…. யா… யா… யாரும் வேண்டாம்”, என்றாள் திக்கித் திக்கி…..

ஜெயஸ்ரீ பேசி சிபி நேரடியாக கேட்கிறான், மிகவும் இனிமையான குரல், அதில் ஈர்க்கப்பட்டவன், இவ்வளவு இனிமையான குரல், ஆனால் ஏன் இந்த குறை என்பது போல சிபி அவளையேப் பார்த்திருக்க…

“போய் உட்காருங்கள்!”, என்பது போல சைகை காட்டியவள்… டீ வீ யைப் போட்டு விட்டு மெதுவாக சிபியிடம் வந்து ரிமோட்டைக் கொடுத்தாள்.

சிபி சேனல் மாற்றவும் அதில்…… ஒலித்துக் கொண்டிருந்தது….

என் வாழ்வில் நீ வந்தது விதியானால்                                                                            நீ எந்தன் உயிரன்றோ….

பூங்காற்று புதிதானது                                                                                         புதுவாழ்வு சதிராடுது…

இரண்டு உயிரை இணைத்து விளையாடும்                                                            உயிரை இணைத்து விளையாடும்….

அந்தப் பாடல் அவர்களின் செவிகளை எட்டினாலும், வரிகளின் அர்த்தங்கள் இன்னும் எட்டவில்லை.   

 

Advertisement