Advertisement

அத்தியாயம் ஆறு:

“ஏண்டா, நான் ஊருல இல்லாத நேரமா பார்த்து கல்யாணத்தைச் செஞ்சிகிட்டு போயிட்டியா? என்ன ஜென்மம்டா நீ? உங்கப்பனை விட இன்னும் பெரிய ஃபிராடுப் பயலா இருப்ப போல”, என்று கண்ணனைப் பார்த்து சொல்ல….. அவன் முகம் அவமானத்தில் சிறுத்தது.

யாரிடம் போய் என்ன விளக்கம் சொல்ல முடியும். எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே.

“உங்கப்பனா உன்னை படிக்க வெச்சான். எல்லாம் எங்கப் பணம்டா… எப்படிடா எப்படி? உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா.. அவ்வளவு பணத்தை வாங்கி சுரணையா உடம்பை வளர்த்துக்கிட்டு, எப்படிடா எங்க பொண்ணை ஏமாத்த உனக்கு மனசு வந்தது”,

“நான் ஒன்னும் உங்ககிட்ட பணம் வாங்கலை!”,

“நீ வாங்கலைன்னாலும் உன் பேரைச் சொல்லித்தானேடா உங்கப்பா பணம் வாங்கினான். நான் இல்லாத நேரம் கல்யாணம் முடிச்சிகிட்ட… என் பொஞ்சாதி வந்து கேட்டதுக்கு என்னவோ பணத்தை உங்க மூஞ்சில தூக்கி எறிவோம்னு உங்கப்பன் திமிர் பேசினானாமே…. இன்னைக்கு அவனே எரிஞ்சு போயிட்டாண்டா…..”,

பத்மினியைக் காட்டி, “இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் குடுத்து அதுல வர்ற பணத்துல தானே உங்கப்பன் எங்களுக்கு பணம் குடுக்கறேன் சொன்னான்! இப்போ கல்யாணமும் நின்னு போச்சு! அவனும் செத்துட்டான், எங்களுக்கு யாரு பணம் குடுப்பா! எங்க பொண்ணு கதி…..”,

“இதுக்கு ஒரு வழி தெரியாம பொணத்தை எடுக்க விடமாட்டேன்…… நடுவுல யாரு வந்தாலும் பணத்தை வெச்சிட்டு, என்ற பொண்ணுக்கு ஒரு வழி சொல்லிட்டு, இதைத் தூக்கிட்டு போய் காரியம் செய்ங்க”, என்று சட்டமாக அமர்ந்து கொண்டான்.

அவர்களின் உறவுக்காரர்கள் எல்லோருக்கும் அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக கண்ணன் வீட்டினர் சொல்லியிருந்தது எல்லோருக்கும் தெரியும். அதனால் யாரும் கண்ணனின் உதவிக்கு வரவில்லை. அமைதியாக நடப்பதை பார்த்து இருந்தனர்.

மீறி ஓரிருவர், “எதுன்னாலும் பேசி தீர்த்துக்கலாம். இப்படி எரிஞ்சு போன உடம்பை எவ்வளவு நேரம் வெச்சிருக்க முடியும்”, என்று சொன்னதற்கு…..

“அந்த அக்கறை இந்த பயலுக்கில்ல இருக்கணும்…..”,

யாரும் ராஜவேலை அணுக பயந்தனர். “போய் உன்ற ஊட்டுகாரன் கிட்ட சொல்லு தனம்…… அந்த பய கல்யாணம் முடிச்சிட்டான். இனி என்ன செய்ய முடியும்…. எப்படியாவது பணத்தை வாங்கற வழியைப் பார்ப்போம்”, என்று சொன்னர்.

தனம் தயங்கித் தயங்கி, “அப்புறம் பேசிக்கலாம், இப்போ ஆகற காரியத்தைப் பார்ப்போம்”, என்று ராஜவேலிடம் சொன்னது தான் போதும்……. அவன் விட்ட அறையில் அந்த பெண்மணி தூர போய் விழுந்தாள்.

“என்ன ராஜவேலு? பொம்பளைப் பிள்ளையை இப்படிக் கை நீட்டுற”, என்று அங்கிருந்தவர்கள் கடிய….

“உங்க வீட்டுப் பொண்ணுனா உங்களுக்கு அவ்வளவு வலிக்குதா? அப்போ என்ற அண்ணன் பொண்ணை என்ன செய்ய? எவன் கட்டுவான்…..? என்ற சொந்தக்காரங்க எப்படி என்னை சேர்த்துக்குவாங்க….?”,

“யாரும் எதிர்பாராத விதமாக பொண்ணைத் தானே அடிக்க கூடாது இவனை அடிக்கலாம் தானே”, என்று கண்ணனை ஒரு உதை விட தூரப் போய் விழுந்தான் கண்ணன்.

அவசரமாக ராதா ஓடிச் சென்று தூக்கினாள்… “இவனையும் அவங்கப்பன் கூடப் பொணமா படுக்க வெச்சிடறேன்”, என்று மீண்டும் அடிக்க வர……

“இவங்கப்பா செஞ்சதுக்கு இவர் என்ன பண்ணுவார்”, என்று ராதா கேட்க…..

“என்னது இவங்கப்பா செஞ்சதா…… இவனுக்கு எல்லாம் தெரியும்…… தெரியாதுன்னு சொல்லச் சொல்லு”, என்று எகிறிய ராஜவேல்…. கண்ணனை முறைக்க..

“என் பேர் சொல்லி வாங்கினப்போ தெரியாது! அதுக்கு அப்புறம் தான் தெரியும்!”,

“எப்பவோ தெரியும் தானே! தெரிஞ்சு என்ன பண்ணின நீ!”,

“நான் கொஞ்ச கொஞ்சமா திருப்பிக் குடுத்துடறேன்…..”,

“திருப்பிக் குடுக்கறவன், குடுத்துட்டு நீ கல்யாணம் பண்ணியிருக்கணும்! நீயேண்டா அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட….”,

“அது, அது”, என்று சொல்ல முடியாமல் தடுமாறினான்……. யாரை காட்டிக் கொடுக்க முடியும் அவனால்….. முடியாது! 

“ஏய் தனம்! இங்க வாடி!”, என்று தன் மனைவியைப் பார்த்து கத்தினான் ராஜவேல்.

தனம் பதறி அருகில் வர,

“இந்தப் பொண்ணை அந்த புறம் கூட்டிட்டு போ, நம்ம வீட்டுக்கு அப்படியே கூட்டிக்கிட்டு போயிடலாம்… இந்தப் பய பணத்தை திரும்பக் குடுத்த பிறகு, நம்ம பொண்ணுக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்ச பிறகு, இவ புருஷன் கூட்டிட்டு போகட்டும்”, என்று சொன்னதும் கூடியிருந்த ஜனம் அப்படியே ஸ்தம்பித்தது.

“ஏய்ய்ய்!!!!!”, என்று கண்ணன் பாய்ந்து வந்தவன்… “நீ எதுன்னாலும் என்னைத் தான் பண்ணனும்”, என்று சொல்ல, அவனை ஒரு கையால் தூர தள்ளிய ராஜவேல்….

“டேய்! ரொம்பத் துள்ளாத! அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் பொஞ்சாதிக்கும் மட்டும் மரியாதைக் குடுக்குறவன், நான் கிடையாது….. எல்லாப் பொண்ணுங்களையும் மதிக்க தெரிஞ்சவண்டா…… என் பொண்ணு மாதிரி பார்த்துக்குவேன்……. நீ முதல்ல இதெல்லாம் சரி பண்ணிக்குடு”, என்று அசையாமல் நிற்க….

கண்ணன் செய்வதறியாமல் ஸ்தம்பித்தான்…           

ராதா இந்த வார்த்தைகளைக் கேட்டுத் தேம்பித் தேம்பி அழ…… இத்தனை நாள் வளர்த்த நடராஜனால், அதைப் பார்த்து அமைதியாக இருக்க முடியவில்லை.

அருள் மொழிக்கும், சிபிக்கும், வர்மனுக்கும் கூட ரத்தம் கொதித்தது… “இப்படி ஒரு வாழ்க்கை இவளுக்கு தேவையா? என்ன காதலோ?”, என்று தான் தோன்றியது….. ரோஷம் கெட்ட காதல்…  

“என்ன தம்பி? என்னப் பேசறீங்க? உங்க பிரச்சனைக்குப் பொண்ணை இழுக்காதீங்க! எதுனாலும் குடுத்தவன் கிட்ட கேளுங்க…..”, என்று நடராஜன் முன் போய் நின்றார்.   

 

அவரின் மரியாதையான தோற்றம் ராஜவேலை சற்று நிதானபடுத்திய போதும், காட்டமாகவே, “நீங்க யாரு”, என்றான்.

“ராதாவோட தாய்மாமன்”, என்று நடராஜன் சொல்ல…..

“அப்போ நீங்க பணம் குடுக்கறீங்களா”, என்றான் உடனே….

“நான் எதுக்குப் பணம் குடுக்கணும்!”,

“அப்போ பேசாதீங்க, பணம் குடுத்துட்டு, அப்புறம் என்ற பொண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை அமையட்டும், உங்கப் பொண்ணைக் கூட்டிட்டு போங்க”, என்று தெனாவெட்டாக நின்றான்.

“போலிஸ்க்கு போவோம்”, என்று நடராஜன் சொல்ல,

“போங்க! நான் வெளில இருந்ததை விட உள்ள இருந்த நாள் அதிகம்.. உன்னால ஆனதை பார்த்துக்கோ, இந்த பிரச்னை தீராம எதுவும் தீராது….”,

“உனக்கு மனசாட்சியே கிடையாதா! ஏற்கனவே இந்த உடம்பு சிதிலமடைஞ்சு இருக்கு, திரும்ப ஏன் இப்படிப் பண்ற…..”,

“உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா…. இப்போ விட்டா இந்த பய அடுத்த நிமிஷம் காணாம போயிடுவான்…… என்ற ஊட்டுப் பொண்ணை கல்யாணம் கட்டணும்னு இவனுக்கு நல்லா தெரியும்! தெரிஞ்சும் இப்படிப் பண்ணியிருக்கான்….”, என்று நடராஜன் எதிரில் வந்து கையை நீட்டிப் பேச…

அதை காணப் பொறுக்காத அவரின் மகன்கள் மூவரும், “கையை இறக்கி பேசுடா”, என்று விரைந்து அருகில் ராஜவேலை அடிப்பது போல வர…..

அதற்கும் ராஜவேல் அசராமல், “என்னங்கடா நீங்க யாரு?”, என்று நின்றான்.

“அவர் பசங்க…..”,

“அப்படியா அப்போ உங்கள்ள ஒருத்தன் என்ற பொண்ணை கட்டிகோங்க”, என்று அசால்டாக பேச..

“சீ! சீ! என்னடா நீ? உன் வீட்டுப் பொண்ணை இப்படி ஏலம் போடற!”, என்று நடராஜன் பேசினார்.  

“ஏய் தனம்! இது சரி வராது! இந்தப் பொண்ணை நம்ம வீட்டுக்கு வர சொல்லு! அப்புறம் வேணா பொணத்தை எடுக்க விடறேன்!”, 

இவனிடம் மிரட்டல் சரிவராது என்று புரிந்து நடராஜன்…. “இவனை விடு!”, என்று கண்ணனை காட்டியவர்….. “இந்த பசங்க என்ன பாவம் பண்ணினாங்க? இவங்களுக்காகவாவது அவங்க அப்பா அம்மா உடலை காட்டுக்குக் கொண்டுப் போக விடு……. இவங்க கதி என்ன ஆகும்னு தெரியாத நிலையில இந்த பிள்ளைகளுக்கு நீயேன் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்குற….. இவங்களைப் பார்த்தும் உனக்கு பாவமா இல்லையா..”,

“பாவமாத்தான் இருக்கு! ஆனா என்ன பண்ண? அவளும் என்னோட பொண்ணு கிடையாது, என் அண்ணன் பொண்ணு! அவளோட நிலைமையும் இவங்களுக்கு குறைஞ்சது இல்லை…. அவளுக்கு அம்மா கிடையாது….. அவளைப் பார்த்து பார்த்து நொந்து போய் கிடக்கறான் எங்க அண்ணன்….. எங்களுக்கு குழந்தை இல்லை… எங்க வீட்டுக்கே அவ ஒருத்தி தான் வாரிசு……”,

“வேற கல்யாணம் என்ற பொண்ணுக்கு நல்ல படியா நடக்கும்னு நம்பிக்கை இருந்தா நான் ஏன் இவ்வளவு ரகளை பண்ண போறேன்..  எங்க பொண்ணுக் கிட்ட சில குறைகள் இருக்கு….. எல்லாம் பேசித் தான் இந்தப் பயலுக்கு உதவி பண்ணினோம்….. மனசாட்சியில்லாம இப்படி செஞ்சிட்டான்”.      

கண்ணன் ஏதோ பேச வர….. அவனைப் பேச விடவேயில்லை ராஜவேல், “வாயை மூடுடா”, என்றான்.

“சரிப்பா! உங்கப் பொண்ணுக்காவது இத்தனைப் பேர் இருக்கீங்க! இந்த பசங்களுக்கு யார் இருக்கா?”,   

“இப்போ சொல்றேன், என்றப் பொண்ணுக்கு ஒரு வாழ்க்கை அமையட்டும்,  இந்தப் பசங்களை நானும் என்ற பொஞ்சாதியும்  நாங்க சாகற வரைக்கும் நல்லாப் பார்த்துக்கறோம்”.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பரபரப்பான நடராஜன், சற்றும் யோசிக்காமல் வாக்கு கொடுத்தார்.

“உங்கப் பொண்ணுக் கல்யாணத்துக்கு நான் பொறுப்பு, நான் என் வீட்டு மருமகளாக்கிக்கறேன், நீங்க இந்த மூணு பசங்களையும் பார்த்துகுவீங்களா?”,  என்றார்.

சிபி அப்படியே நின்றது நின்றபடி நின்றுவிட்டான்….. “இவர் என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறார்”, என்பது போல….

அருள்மொழியும் மாமல்லவர்மனும் கூட மலைத்து நின்றனர், “அப்பா என்ன பேசுகிறார்”, என்பது போல……

அருகில் அவசரமாக சென்ற சிபி, “அப்பா என்ன பேசறீங்க?”, என்று மெதுவாக அவருக்கு மட்டும் கேட்குமாறு கேட்க……

“வாயை மூடு! ஒரு வார்த்தைக் கூட நீ பேசக் கூடாது. உன்னோட யோசிக்காத தன்மையால மூணு பிள்ளைங்க அனாதையா நிக்குது…”,

“அப்பா! அந்தப் பிள்ளைங்களை நான் பார்த்துக்கறேன். அதுக்காக கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது!”,

“எவ்வளவு நாள் பார்த்துக்குவ, ஒரு பிள்ளைனாலும் பரவாயில்லை, மூணு பேர், அதுல ரெண்டும் பொண்ணுங்க, அதுக் கண்டிப்பா சரி வராது…….. நாளைக்கு உனக்கு வர போற மனைவி இதுக்கு எப்படி ஒத்துக்குவா.. அது சரிவராது”.

“என்னாலக் கண்டிப்பாக் கல்யாணம் பண்ண முடியாது!”,

“நான் இங்க சொல்லிட்டேன், இனி மாத்திப் பேச  முடியாது…. உன்னால தான் இந்த நிலைமை, அதை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதை விட முடியாது”,

“அப்பா”, என்று சிபி பேச வர…

“நீ வாயை மூடு, ஒரு வார்த்தைக் கூட பேசக் கூடாது, எதுன்னாலும் நாம் அப்புறம் பேசலாம்”, என்றார்.

சிபியையும் விட ராஜவேல் இன்னும் அதிர்ந்து பார்த்திருந்தான், “இவர் நிஜம் தான் பேசுகிறாரா”, என்பதுப் போல….

இவ்வளவு நேரமாக ஆங்காரமாக கத்திக் கொண்டு இருந்தவன்… “ஐயா, நிசமாத்தான் சொல்றீங்களா”, என்று பணிவாக நடராஜனிடம் பேச….

“இவ்வளவு நேரமாக இவனா அந்த கலாட்டா பண்ணிக் கொண்டு இருந்தான்”, என்பது போல மொத்த உறவு ஜனமும் பார்த்தது.

“நான் வாக்குத் தவற மாட்டேன், வாக்குத் தவறினேன், உனக்கு என்னை என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ….”, என்று தீவிர முகபாவனையோடு நடராஜன் பேசினார்.

“இந்த வார்த்தையை நீங்க ஒரு தடவை என்ற பொண்ணை பார்த்துட்டு சொல்லுங்க…. மறுபடியும் ஒரு ஏமாற்றத்தை என்ற அண்ணன் தாங்க மாட்டார்…”,

ராஜவேல் பேசப் பேச, சிபி முகத்தை சுளித்தான்….

அவன் தான் மாப்பிள்ளையோ என்பது போல அவன் மீதும் ஒரு பார்வை வைத்திருந்த ராஜவேல்…. “என்னை வெச்சு என் அண்ணன் குடும்பத்தை எடை போட வேண்டாம்… நம்ம முதல்ல இருந்தே ரகளை ரச்சு கலாட்டான்னு நாள் ஓட்டிடோம். ஆனா அண்ணன் அப்படியில்லை…. என்ற பொண்ணு தங்கம்”, என்றான்.

“நான் சொன்னது சொன்னதுதான்…. இப்போ ஆக வேண்டியதை பார்ப்போம்”, என்று நடராஜன் சொன்னது தான் போதும்….. அந்த பிள்ளைகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று மருகிக்கொண்டிருந்த உறவு ஜனம், பிரச்சனை ஒரு வழியாக இப்படி பயணிக்கவும், மளமள வென்று வேலையை ஆரம்பித்தினர்.

கண்ணனை இப்போது யாரும் கண்டு கொள்ளவே இல்லை……. எல்லா சடங்கையும் ஜெய் ஷங்கரை கொண்டு உறவுகள் செய்தனர். கண்ணன் பணம் கொடுக்க முயல, அதை வாங்காமல் தனம் எல்லாச் செலவையும் பார்த்துக் கொண்டார்….

கண்ணன் ஒரு புறமாக ராதா ஒரு புறமாக அமர்ந்து நடப்பதை பார்த்து இருந்தனர். ராதா கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க, அதைத் துடைக்க கூட செய்யாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

அதைப் பார்க்க பார்க்க அருள்மொழிக்கும் வர்மனுக்கும் மனதை பிசைந்தது…… என்ன இருந்தாலும் அவர்களோடு வளர்ந்தவள்…. ஆனால் சிபிக்கு பயந்து யாரும் அருகில் போகவில்லை.   

எல்லாம் காட்டில் முடித்து வீடு வந்த போது…. பத்து மணிக்கும் மேலாகியிருந்தது…. எல்லாம் நாங்க பார்த்துதுக்குறோமுங்க என்று ராஜவேலும் தனமும் வாக்கு கொடுக்க….

“நானும் வாக்குத் தவற மாட்டேன்”, என்று உறுதி கொடுத்தே வீடு வந்து சேர்ந்தார் நடராஜன்.   

அவரின் பின்னேயே கண்ணனும் ராதாவும் வந்தவர்கள், வீட்டிற்குள் வரவில்லை…. “ஒரு பத்து நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க மாமா”, என்று ராதா கண்ணீரோடு நின்றாள்.     

முகம் திருப்பி நடராஜன் செல்ல, “நான் உங்க கிட்ட என்னை ஏதுக்கங்கன்னு சொல்லலை, நான் செஞ்சது சரின்னும் சொல்லலை, ப்ளீஸ் கேளுங்க”, என்று கெஞ்ச…….

அவர் அவர்களை வீட்டிற்குள் கூப்பிடாமல் வாயிலில் இறங்கிப் போய் நிற்க…. கண்ணனும் ராதாவும் அவர்களின் தரப்பைச் சொல்லிவிட்டு அந்த இடத்தில் நிற்கவில்லை சென்று விட்டனர்.

வீட்டின் உள் இருந்து எல்லோரும் பார்த்து தான் இருந்தனர். ராஜலஷ்மியும் மகளைப் பார்த்தபடி கண்ணீருடன் தான் நின்றார்.  

என்னவோ எல்லாத் தவறும் தன்னது போலவே உணர்ந்தார் நடராஜன், தாங்களாகவே சில விஷயங்களை நினைத்து, ராதாவிடம் கேட்காமல் செய்தது தவறு தானே…..  

தாங்களும் கஷ்டப்பட்டு, அவமானப்பட்டு, இந்தப் பெண்ணையும் கஷ்டப்படுத்தி…..   உள்ளே வந்தவர் ராஜலக்ஷ்மியிடம்…… “உன்கிட்ட முன்னாடியே சொன்னாலா சிபியைக் கல்யாணம் பண்ண இஷ்டமில்லை, இந்தப் பையனை பிடிச்சிருக்குன்னு…….”,

“ம்”, என்பது போல ராஜலக்ஷ்மி தலையாட்ட…

“ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லியிருக்கலாம் இல்லை……”,

“எப்படிச் சொல்வேன் சிபிக்கு அவளை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம்னு தெரிஞ்சு, என்னை இத்தனை நாள் ஆதரிச்ச உங்களை விட்டுட்டு நான் எப்படி சொல்வேன்….”, என்று கண்ணீரோடு கேட்டார்.

“ஏன் பசங்க தான் அம்மா அப்பாவை பார்க்கக் கடமைப் பட்டவங்களா பொண்ணுங்க இல்லையா… இவன் தான் உன் புருஷன், இப்படித்தான்னு நான் சொல்லிச் சொல்லி வளர்த்தும் இந்தக் குடும்பத்தை பத்தி நினைக்காம அவ இஷ்டப்படி செஞ்சா….   நீங்க இல்லைனா நாங்க நடுத்தெருவுல நின்னிருப்போம்… ஒரு வருஷம் பார்க்கலாம் ரெண்டு வருஷம் பார்க்கலாம் இருபத்தி ரெண்டு வருஷம் முகம் சுனக்கமில்லமா எங்களைப் பார்த்து இருக்கீங்க… ஒரு நன்றி வேண்டாம்”,  

“எல்லாரும் எல்லாம் பேசினாலும் ஒரு பாதிப்புமில்லை… இப்போதைக்கு எல்லாத்தையும் சுமக்க போறவன் சிபி தானே!”, என்று சொல்லிப் படுக்க போய் விட்டார்.

அடுத்த நாள் காலையில் அவருக்கு தொலைபேசியில் அழைத்த ராஜவேல், “ஐயா, தொந்தரவுப் பண்றனோன்னு இல்லை உங்களைச் சந்தேகப்படறனோன்னு நினைக்காதீங்க.. ஒரு தடவை பொண்ணை பார்த்துட்டு சொல்லுங்க….”, என்று திரும்பத் திரும்ப பேச….

மனைவி தேவியை அழைத்துக் கொண்டு சென்றார்….. பார்த்தவர்கள் பார்த்தபடி நின்றுவிட்டனர்…. ராஜவேல் அந்த பெண்ணின் திருமணம் குறித்து அவ்வளவுக் கவலைப் பட்டு பிரச்சனை செய்தது ஏன் என்று புரிந்தது.

நேற்று கண்ணன் சொன்னான் தான்…. ஆனால் ரொம்பப் பெரிதாக அவர் நினைக்கவில்லை…. இப்போது சிபியை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு தெரியவில்லை என்பதை விட…. எப்படி அவன் எடுத்துக் கொள்வான்.

“எப்படி இந்தப் பெண்ணுடன் தான் உனக்குத் திருமணம்”, என்றுச் சொல்ல முடியும்……

அவரின் மனைவியைத் திரும்பிப் பார்க்க…. “இப்படி செய்து விட்டீர்களே!”, என்று அவரின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.

அதையும் விட வருத்தத்தோடு அந்த பெண்ணின் கண்கள் அவர்களைப் பார்த்து இருந்தது….. எல்லோரும் எப்போதும் முதல் முறையாக அவளைப் பார்க்கும் போது பார்க்கும் பார்வை தான்….  ஆனாலும் அந்தப் பார்வைகள் அவளுக்கு பழகவே இல்லை. ஒவ்வொரு முறையும் யாராவது இந்தப் பார்வை பார்க்கும் போது தாளவே முடிவதில்லை.

சிபியோ வீட்டில் மிகுந்த வருத்தத்தில் இருந்தான்…. தான் திருமணம் செய்ய இருந்த பெண்ணை அந்தக் கண்ணன் திருமணம் செய்தது போய் இப்போது அவன் வேண்டாம் என்று சொன்ன பெண்ணைத்  தான் திருமணம் செய்வதா…. அவமானமாக உணர்ந்தான்.   

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

 

Advertisement