Advertisement

அத்தியாயம் ஐந்து:

தந்தையிடம் பெரிய வாக்குவாதம் தான் சிபிக்கு, ஆனாலும் மனது அமைதியாகவில்லை, என்னவோ தான் தப்பு செய்யவில்லை என்று காரணங்கள் கண்டுபிடித்தாலும் மனது பாரமானது.

என்னவோ நினைக்க, என்னவோ நடந்து விட்டது! யாரைக் குற்றம் சொல்ல…. தான் இதுவரை யாருக்கும் தீங்கு நினைத்ததோ செய்ததோ இல்லையே….

கோபக்காரன் தான், விசுக்கென்று கோபம் வந்ததும் வார்த்தைகளை விடுவான், சண்டைக்கு போவான், ஆனால் தீங்கு யாருக்கும் இழைத்தது இல்லையே…..

முதல் முறையாக யாரையோ பழிவாங்க ஒரு திருமணத்தை நிறுத்தப் போய் இப்படியாகிவிட்டதே….. திருமணம் நின்றிருந்ததில் உறக்கம் தொலைத்திருந்தான்.

இரண்டு உயிர்கள் போனதில் இப்போது நிம்மதியும் தொலைத்தான்…. “யாரோ எதுவோ செய்யப்போக நான் குற்றவாளியா, அய்யகோ”, என்று இருந்தது.

அப்பா சொல்வது போல, என்னால் தான் இந்தப் பிள்ளைகள் அனாதையானார்களா…… வீட்டின் வாசல்படியில் அப்படியே அமர்ந்து விட்டான்.

“உள்ள வா சிபி!”, என்று வர்மன் அழைத்தும்….

“இல்லை! வரலை! என்னை விடு…..”, என்றான், பேசும்போது அவன் குரல் கரகரத்தது…..

சிபி என்று வர்மன் அருகில் அமர….. “ப்ச், என்னைத் தனியா விடு! போ!”, என்று அந்த இரவிலும் கத்தினான்.

வர்மன் பயந்து போய் எழுந்து கொண்டான்…

அதற்குள் சத்தம் கேட்டு வீட்டினர் வந்துவிட்டனர். “என்னடா கத்தறான்?”, என்று நடராஜன் கோபமாக கேட்க….

“ம், இன்னும் யாரைக் கொல்லலாம்னு பிளான் பண்ணிட்டு இருக்கேன்… இல்லை, முடியலைன்னா நான் தொலைஞ்சு போயிடறேன்”, என்று கத்தி விட்டு, சட்டைக் கூட அணியவில்லை…. அந்த இரவில் வண்டியை எடுத்துக் கொண்டு போய், எப்பொழுதும் போல வயல் வரப்பில் தஞ்சம் அடைந்தான்.

அந்த மூன்று பிள்ளைகள் நடந்து சென்றது கண்ணிலேயே நின்றது. இருட்டில் வெறித்தபடி இலக்கில்லாமல் பார்வை நின்றது.

அங்கே வீட்டில் நடராஜனை ஈஸ்வரர் மிகவும் கடிந்து கொண்டார்… “பாரு நடராஜா, இந்த உலகத்துல நடக்குற எதுக்கும் யாரையும் பொறுப்பாக்க முடியாது…. எல்லாம் விதிப்பயன்…. இதுல நீ ஏன் சிபியை கோவிச்சுக்குற..”,

“தப்பு! ரொம்ப தப்பு! நீ பேசாம இருந்திருந்தா கூட அவன் சும்மா இருந்திருப்பான்… இதுல நீ எதுவும் செய்யாதன்னு அவன் கிட்ட நிறைய முறை சொன்னதே, அவனுக்கு எதையாவது செய்யத் தூண்டியிருக்கும், தப்பு உன் மேல!”, என்று நடராஜனைக் குற்றம் சாட்டினார்.

“அப்பா! என்னை சொல்றீங்களா!”, என்று நடராஜன் வருத்தப்பட,

“ஆமாம்! உன்னைத் தான் சொல்றேன்…. ராதா போயிட்டா….. உடனே இவனுக்கு நீ ஒரு பொண்ணை பார்த்துக் கல்யாணம் செஞ்சிருக்கணும்….”, “அது செய்யாம விட்டுட்ட… முதல்ல அவனை இதுல இருந்து வெளில கொண்டு வா!”,

“இப்போ எப்படிப்பா உடனே கல்யாணம் பண்ண முடியும்… இருக்குற எல்லா நகையும் பேங்க்ல…. நிறைய செலவு வேற… கல்யாண செலவுக்கு என்ன பண்ணுவோம்”,

“என்ன பெரிய பணம்! எல்லோரும் கைல பணத்தை வெச்சிகிட்டா கல்யாணம் பண்ணுவாங்க! ஏதாவது கடனை உடனை வாங்குவோம்!”,

“பொண்ணு! பொண்ணுக்கு எங்கப்பா போவோம்!”,

“தேடுவோம்! இனிமேவா அவனுக்குப் பொறக்கப் போறா…… பொறந்திருப்பா…”,

“அவன் சம்மதிக்கணுமே…..!”,

“சம்மதிக்க வைப்போம்டா!”, என்றார் ஈஸ்வரர் உறுதியான குரலில்… “சிபி சொன்ன மாதிரி நாம தான் சொல்லிச் சொல்லிச் அந்த எண்ணத்தை அவன் மனசுல விதைசோம்…. அவங்களா விருப்பப்படலை! நம்ம தப்பு அது! நம்ம தப்புனால பிள்ளைங்க வாழ்க்கை பாதிக்கறதா…..”,

“பிற்காலத்துல நடக்குமா நடக்காதா.. பெரியவங்க ஆனதுக்கு அப்புறம் அவங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு தெரியாம, நம்ம பெரியவங்க செய்யற தப்பு வேலைடா இது… சரி பண்ணுவோம்! எல்லோரும் போய் தூங்குங்க!”, என்றார் வீட்டின் பெரியவராக.  

உறங்கச் சென்று விட்டார்கள் தான்! ஆனால் யாருக்கும் உறக்கம் தானில்லை.

அங்கே சிபியும் உறங்கவில்லை… “என்ன செய்துவிட்டேன் நான்… ஆனால் இப்படி ஆகும் என்று நினைக்கவில்லையே”, என்று மிகுந்த மன உளைச்சலில், கழிவிரக்கதில் இருந்தான்.

அதிகாலையிலேயே வர்மன் அவனைத் தேடி வந்த போது, உறக்கமில்லா விழிகள் சிவந்து இருந்தது…  வீட்டில் அனைவரும் வர்மனைத் துரத்தி இருந்தனர். “சிபி என்ன செய்யறான்னு பாரு”, என்பது போல……

அதனால் தேடி வந்தான்… 

சிபி, அங்கிருந்த தென்னை மரத்தில் சாய்ந்து அமர்ந்து இருப்பதை பார்த்தவன்…… “முதல்ல சட்டையைப் போடு…. அம்மா டீ குடிக்க வர சொன்னாங்க….”,

சட்டையை மட்டும் வாங்கி போட்டுக் கொண்டான்…… ஆனால் இடத்தை விட்டு அசையவில்லை..

“வாடா!”, என்று வர்மன் கை நீட்டினான்.

அப்போதும் சிபி அப்படியே அமர்ந்திருக்க…. “அப்பா ஏதோ கோபத்துல சொல்றாரு, நீ வா! இப்படியே இருந்தா ஆகுமா…. எழுந்துரு, என்ன செய்யலாம்னு பார்க்கலாம்…..”,

“ப்ச், கஷ்டமா இருக்குடா! நான் இப்படியாகும்னு நினைக்கலை!”, என்றான்..

“நடக்கறது எப்படியும் நடக்கும். தாத்தா சொன்ன மாதிரி அது நடக்கணும்னு இருந்திருக்கு, உன் மூலமா நடந்திருக்கு…. அவ்வளவு தான்!”,

“அதுக்காக சங்கடப்படுகிட்டு அப்படியே உட்கார்ந்து இருப்பியா….. நம்மளால ஆனதை செய்யலாம்”,   

“அந்த பசங்க வேற அந்த ராத்திரி நேரத்துக்கு வந்தாங்க… அந்தப்பய எப்போ வர்றது, அந்த பசங்க அதுவரைக்கும் என்ன பண்ணுவாங்க….  வா போய் பார்க்கலாம்”, என்று வர்மன் கூப்பிட உடனே எழுந்தான் சிபி….

அவனும் போய் பார்க்க வேண்டும், ஆனால் போவதா வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்தான்.

இப்போது அண்ணனும் தம்பியும் கிளம்பினர்….

பத்மினியின் வீட்டிற்கு சென்ற போது..  அங்கே மூவரும் பசி மயக்கத்தில் ஆளுக்கு ஒரு மூலையில் சுருண்டு இருக்க….. நேற்று பேசிய பாட்டி, பக்கத்தில் இருந்த இன்னொரு வயதான பெண்மணியிடம்….

“காசு எவ்வளவு வெச்சிருக்க! என் கிட்ட இருவது ரூபா இருக்கு… காசிருந்தா குடு, டீயாவது வாங்கிட்டு வரலாம், அஞ்சு பேர் இருக்கோம்”, என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

சரியாக அந்த நேரத்தில் சிபியும் வர்மனும் போக….. அந்த கிழவிகள் நோட்டை தடவிக் கொண்டிருப்பதை பார்த்து சிபி வர்மனிடம், “ஒரு நூறு ரூபா குடுடா”, என்றான்.

“இப்போது எப்படிப் போவது”, என்று கிழவிகள் தடுமாறினார். ஏனென்றால் டீக்கடைக்கு மெயின் ரோடு போக வேண்டும், குறுக்கு பாதையில் நடந்தாலும் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம்..

ஜெய்சங்கரை சைக்கிளில் போகச் சொல்லலாம் என்றால், அவன் சோர்ந்து படுத்துக் கிடந்தான்.

“நான் போறேன்!”, என்று வீட்டினுள் இருந்த ஒரு தூக்கு வாளியை எடுத்துக் கொண்டு அதில் ஒரு பாட்டி கிளம்ப,

வர்மன், “அந்தப் பையனை எழுப்பி விடுங்க! நான் கூட்டிட்டுப் போறேன்”, என்று சொல்லவும்…..

அவர்கள் அவசரமாக ஜெய் சங்கரை எழுப்பி விட்டனர். அவனைக் கூட்டிக்கொண்டு வர்மன் போக….. அங்கே எப்படி இருப்பது என்று நினைத்து….. அந்தப் புறமாக இந்த வயல் வரப்பில் இறங்கி நடக்க ஆரம்பித்தான் சிபி.

அவன் நடக்க நடக்க அது நல்ல விளைச்சல் பூமி என்று கண்டுகொண்டான்.  ஒரு புறம் கரும்பும், இன்னொரு புறம் மஞ்சளும் இருந்தது.

அதைப் பார்த்தவுடன் மனது சற்று அமைதியானது. வாழ்க்கையில் முதன் முறையாக சற்று நிதானமாக யோசித்தான். இனி என்ன செய்வது என்று..

யோசித்தபடியே அவன் மீண்டும் பத்மினியின் வீட்டை அடைய… அதற்குள் வர்மன் டீ மற்றும் எளிமையாக பன் போன்ற உணவுகளை வாங்கி வந்திருக்க….

அவர்கள் உண்டனர்……. அவர்களின் பசியாற்றியது இன்னும் சற்று நிம்மதியைக் கொடுத்தது.

மெதுவாக அந்த வீட்டை, அவர்களைப் பார்வையால் அளந்தான். எல்லோரும் சிறு பிள்ளைகள் தான்… அதில் பெரியவளான பத்மினியை ஆராய….. “ஐயோ! இந்த பெண்ணிற்குத் திருமணமா”, என்று தான் இருந்தது.

முகமும் முதிரவில்லை, உடலும் முதிரவில்லை… சிறு பிஞ்சு தான் அவள். தன்னுடைய பிரச்னையை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தான். இந்த பெண்ணை விட இரண்டு மடங்கு அதிக வயதானவனுடன் திருமணம்.

யோசிக்கவே முடியவில்லை. இவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இருக்காதா என்று தான் தோன்றியது.

மனதிற்குள் மெல்லிய உறுதி தான் செய்தது சரிதான் என்பது போல…. நிச்சயம் இவளுக்கு திருமணம் ஆகியிருந்தால், உடனே உண்டாகிவிட்டால் பெற்றுப் பிழைப்பது கூட இந்த சிறுமிக்கு கடினம் தான் என்று தோன்றியது.

இவன் அவர்களைப் பார்வையிடுவதைப் பார்த்ததும் பத்மினி வந்து, “தேங்க்ஸ் அண்ணா! டீ வாங்கிக் குடுத்ததுக்கு…… நாங்கல்லாம் நேத்து காலையில சாப்பிட்டது தான்!”, என்று அவள் சொல்லும் போது மனது உருகியது.

ஆனாலும் பத்மினிக்கு பதில் சொன்னான்…… “தயவுசெஞ்சு என்னை அண்ணான்னு எல்லாம் கூப்பிடாத, உங்கண்ணன் மாதிரி ஒரு ஈனப் பிறவியை கூப்பிட்டிட்டு, அந்த உறவு முறைய சொல்லி என்னை கூப்பிடாத”, என்றான்.

அவன் சொன்ன விதத்தில், அவன் உறங்கா சிவந்து இருந்த கண்களில் தெரிந்த ரௌதிரத்தை பார்த்து பத்மினி பயந்து சற்று பின்னடைந்தாள். 

சிபி என்று வர்மன் அதட்ட கட்டுக்குள் வந்தான். பத்மினியிடம் சமாதானமாக பயந்துக்காதம்மா என் அண்ணன் பேசறதே அப்படித்தான் என்றான் வர்மன்.

அதற்குள் அவர்களின் அருகில் வந்த ஜெய்சங்கர்… “காலையில ஆசுபத்திரிக்கு வரச்சொல்லி போலிஸ்காரங்க சொல்லிட்டு போனாங்க… எங்க போறது? எப்படிப் போறது? அங்க போய் என்ன பண்ணனும்!”, என்று ஜெய்சங்கர் கேட்கும் போதே…..

சிறுமி ராகினி அம்மாவை நினைத்து, தேம்பி தேம்பி அழத்துவங்கினாள். அவள் அழுவதைப் பார்த்ததும்  பத்மினியும் ஜெய்சங்கரும் கூட அழ,

கூட இருந்த வயதான பாட்டி அதட்டியது, “அழறதுனால உங்கப்பா அம்மா வந்துடுவாங்களா என்ன? பசங்களா, தைரியமா இருக்க வேண்டாமா”, என்று சொல்லி…

‘டேய், தம்பி! இனி நீ தான் உங்கக்காவையும் தங்கச்சியையும் பார்த்துக்கணும். பையன் நீ அழலாமா”, என்று பொறுப்பைத் தூக்கி அந்த சிறு பையன் மேல் வைத்தது.

“உங்கண்ணன் எப்போ வர்றான்னு போன் பண்ணினானா”, என்று பத்மினியை பார்க்க…. அவள் இல்லை என்பது போல தலையசைத்தாள்.

“அவன் எப்போ வந்து, என்ன செய்யறது…… இங்க யாரும் எடுத்துக் கட்டி செய்ய மாட்டாங்க. உன்ற அத்தைக்குப் போன் பண்ணுனியா, அவளுக்கு தகவல் சொன்னீங்களா…..”,

“எனக்கு யாரு வந்தாங்க, போனாங்கன்னு கூடத் தெரியாது ஆயா!”, என்றாள் பத்மினி.

“என்ற பையனுக்குப் போன் போடு!”, என்று சொல்லி மகனிடம் கேட்டார். “ஏண்டா இந்த ஊட்டு பொறந்தவ கிட்ட சொன்னிங்கலாடா…”,

“அதுல தன் ஒரு தப்பு நடந்து போச்சு… அக்காக்கு போன் போகலை…. நான் மறுபடியும் போடறதுக்குள்ள…. கூட இருந்தவன் அக்கா ஊட்டுகாரருக்கு போன் போட்டுட்டான்… அவரு லாரிக்கு போயிருக்காரு போல….”,

“எவனும் தகவல் சொல்லக் கூடாது. நான் வந்து சொல்லிகறேன்னு சொல்லிட்டாரு. அதான் சொல்லலை!”,

“என்னடா இப்படிப் பண்ணிடீங்க….”, என்று சலித்து பாட்டி போனை வைத்தார்.

“அத்தைக்கு தெரியுமா?”, என்று பத்மினி கேட்க…..

“தெரியாதாம்! உன்ற மாமன் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டான் போல…… ஊரே கேளு நாடே கேளுன்னு போனவாரம் தான் வந்து மண்ணை வாரி இரைச்சிட்டு போனா அவ……. இன்னைக்கு உன்ற அப்பனும் இல்லை ஆத்தாளும் இல்லை….”,

“உங்கப்பனும் உங்கண்ணனும் செஞ்ச வேலைக்கு யாரு வருவா? எப்படியோ உங்கம்மா போய் சேர்ந்தா… உன் சித்தி இத்தனை நாள் உங்கப்பன் கிட்ட தாங்குனது பெரிய விஷயம்….”,

“உங்கண்ணன் பெரிய படிப்பு படிக்கிறான். உங்களைப் பார்த்துக்குவான்னு நினைச்சா…. அவனா கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு போய்ட்டான்…… உங்களை நினைச்சா தான் பசங்களா மனசு பதைக்குது! இனி என்ன செய்வீங்க….”, என்று அந்தக் பாட்டியே கலங்க…..

“தைரியம் சொல்றேன்னு நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க”, என்று அதட்டிய சிபி…. “அவங்க அத்தை பார்த்துக்குவாங்கன்னா அவங்களுக்கு தகவல் சொல்லுங்க”, என்று ஊக்கினான்…

எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்தான் சிபி. எப்படியாவது அந்த பிள்ளைகளுக்கு ஒரு ஆதரவை அமைத்துக் கொடுத்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் அத்தைக்கு அழைக்கச் சொல்ல…

சிபிக்குத் தெரியவில்லை இன்னும் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கப் போகிறோம் என்று.  

“இவங்க அத்தை மச்சாண்டார் பொண்ணை இவனுக்கு கட்டி வைக்கிறேன்னு இவங்கப்பன் சொல்லி,  கண்ணன் படிப்பு செலவுக்கு இவங்க அத்தை கிட்டயும் . அந்த பொண்ணோட அப்பன்கிட்டையும் நிறைய பணம் வாங்கிட்டான்”.

“இவன் பையன் சொல்லாம கொள்ளாம வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டான்”, என்று கதை சொல்ல….

“ஐயோ!”, என்று இருந்தது சிபிக்கும் வர்மனுக்கும்…. “என்னடா இது!”, என்று இருந்தது.. சிபிக்கு கல்யாணம் என்ற வார்த்தையே கசந்தது….

“சே, ச்சே! என்னடா இது!”, என்பது போல முகம் தானாக ஒரு கசப்புணர்வை காட்டியது…

“அக்கா, நீ போன் பண்ணி பாரேன்! அத்தை நீ பேசினா பேசுவாங்க”, என்று ஜெய்சங்கர் பத்மினியைப் பார்த்து சொல்ல……

அந்த பெண் தகவல் சொல்ல….. “ஐயோ, ஏன் சொல்லலை, இதோ வர்றோம் கண்ணு…”, என்று பத்மினியின் அத்தை தனம் உடனே கிளம்பி வருவதாக சொல்ல…. அந்த பிள்ளைகளின் முகம் துக்கத்தில் இருந்தாலும் சற்று தெளிந்தது.

அந்த நடுத்தர வயது பெண்மணி மட்டும் அரை மணிநேரத்தில் யாரோ ஒரு பையனுடன் வண்டியில் வந்தார்… அவரை விட்டதும் அந்தப் பையன் போய் விட…

அந்த பெண் சூழ்நிலையைக் கையில் எடுத்து, உறவுக்கரார்களை அழைத்து, அப்படியே போய்டுவீங்களா என்று சத்தமிட்டு, வேண்டிய பணத்தை கொடுத்து, “நீங்க ஜீ ஹெச் எல்லாம் வரவேண்டாம்”, என்று பத்மினியிடமும் ராகினியிடமும் சொல்லி, ஜெய்சங்கர் மற்றும் சில உறவுக்கரார்களை அழைத்துக் கொண்டு ஜீ ஹெச் கிளம்பினார்.

அப்போது தான் சிபி சற்று தெளிந்து, என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள அங்கிருந்த ஒருவரின் தொலைபேசி  எண்ணெய் வாங்கி….. உடல் வருவதற்குள் சற்று குளித்து வரலாம் என்று வீட்டிற்கு வந்து  பிறகு போனில் என்ன நடக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருக்க…

மாலை வரை உடல் வரவில்லை…. அந்த கண்ணனாகப் பட்டவன் கூட மதியத்திற்கு மேல் வந்து சேர்ந்து விட்டான் அவன் மனைவி ராதாவோடு…

உடல் மாலை ஆன போது, போராட்டங்களுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தது.

உடல் வந்து விட்டது என்று தெரிந்த பின், அவர்களின் மனதை சமாதானப்படுத்திக் கொள்ள அந்த உடல்களோடு காடு வரை செல்ல சிபி, நடராஜன், வர்மன், அருள்மொழி என்று சிபி வீட்டு ஆண்கள் கூட  அங்கே வந்தனர்.

அதன் பின் நடந்தது…… உடல் வீடு வந்து சேர்ந்தாலும் காடு சேரவில்லை….

“என்னைத் தாண்டி எவன் இந்த பொணத்தைக் காடு கொண்டு போய் சேர்க்கறாங்கன்னு பார்க்கிறேன். எனக்கு பைசல் பண்ணாம இந்த பொணம்ங்க இந்த இடத்தை விட்டு நகராது….  என்னை என்ன ஈனா வானான்னு நினைச்சிடீங்களா… இந்த ஃபிராடுப் பயலை வழியனுப்ப இத்தனை பேரா.. நல்லவன் செத்தா ஒரு நாலு பேர் கூட இருக்குறது இல்லை. கலிகாலம் தான்”, என்று தனத்தின் கணவன் ராஜவேல் வந்து நின்றான். அதுமட்டுமில்லாமல் அந்த இடத்தை விட்டு யாரையும் நகர விடவில்லை. 

யாராலும் அவனை அடக்கவோ, சமாளிக்கவோ முடியவில்லை. 

“சே! சே! என்ன கருமம் பிடிச்சவனுங்கடா இவனுங்க…. இங்க போய் ராதா கல்யாணம் பண்ணி இருக்காளே!”. என்று இத்தனை நாள் அந்த பெண்ணை வளர்த்தவராக நடராஜன் கவலைப் பட்டுப் போனார்.

சிபி, “ஐயோ என்ன சுழலடா இது….”, என்று நினைத்தாலும்…. ராதாவிற்காக அவனும், நடராஜனும், மற்ற சகோதரர்களும் தான் போய் நின்றனர்.

ஆம்! ராதாவிற்காக.. எப்படியோ போகட்டும் என்று உறவினளாக அற்று விட்டுவிட்டாலும், தன் தங்கையின் பெண்ணை அப்படி அவமானப்பட விட முடியாமல்…… நடராஜன் போய் நிற்க……. வேறு வழியில்லாமல் தந்தை கூட மகன்கள் நிற்க, இன்னும் சிக்கல்களை தேடிக் கொண்டனர்.   

 

Advertisement