Advertisement

அத்தியாயம் நான்கு:   

விஷயம் கேள்விப்பட்டு நடராஜன் பதறி ஓடி வந்தார். ஆனால் எல்லாம் முடிந்து இருந்தது.

இரண்டு கரிக்கட்டைகள் மட்டுமே மிஞ்சி இருந்தது…. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கான்ஸ்டபிள்களும் வந்திருந்தனர். ஜீ ஹெச்சிற்கு அதை எப்படி கொண்டு போவது என்று கூட தெரியவில்லை. அவ்வளவு சிதிலம் அடைந்து இருந்தது உடல்கள்.

பிள்ளைகள் மூவரும் அழுது ஓய்ந்து இருந்தனர். நடராஜன் சிபியிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அத்தனை முறை சொல்லியும் இப்படி தேவையில்லாமல் மீண்டும் ஒரு பிரச்சனையை இழுத்து விட்டுக் கொண்டானே என்று ஆத்திரமாக வந்தது.

ராதா போய் அவ்வளவு மனவேதனைகள் என்றால், இப்போது இவன் இருந்து இவ்வளவு வேதனை கொடுக்கிறான் என்று தான் அவருக்கு இருந்தது. எத்தனை முறை சொன்னேன்…

அங்கே எடுத்துச் செய்ய ஆளே இல்லை. போலிஸ் வந்து உடல்களை ஜீ ஹெச் கொண்டு போய்விட, பத்மினிக்கும் அவள் தம்பி தங்கைக்கும் என்ன செய்வது என்று கூட தெரியவில்லை.

உடல்களை எடுத்துச் சென்ற பின் நடராஜன் வீட்டிற்கு சென்று விட்டார். வேறு என்ன செய்ய முடியும் அவரால். இன்னதென்று சொல்ல முடியாத ஒரு அழுத்தமான மனபாரத்தில் சிபியும் வீட்டிற்குள் சென்று முடங்கிக் கொண்டான். அவன் எப்பொழுதும் ஆறுதல் தேடும் வயல்வரப்பிற்குக் கூடச் செல்லவில்லை.   

உடல்களை கொண்டு சென்றது அவினாஷி ஜி ஹெச்சிற்கு, அப்போது மணி இரவு பத்து…….. எந்த பஸ் பிடித்து எப்படி அங்கே போவது என்று கூட தெரியவில்லை பத்மினிக்கு. அப்படியே அமர்ந்து விட்டாள் தம்பி தங்கைகளோடு…

உறவுகளும் யாரும் எதுவும் செய்யத் தயாரில்லை…. தங்களுக்கு ஏன் வம்பு என்பது போல கூட அதிகம் கிடையாது….. பணம் எப்படி செலவு செய்ய முடியும், எல்லார் ஜீவனும் வாயுக்கும் வயிற்றுக்கும் சரியாக இருப்பது.

அப்படியும் மீறி போனால் போகிறதென்று பணம் செலவு செய்தாலும், நாளை இந்த பிள்ளைகளின் பொறுப்பும் சேர்ந்து கொண்டால், அதுவும் பையன்கள் என்றால் கூட ஏதோ ஆதரிக்கலாம், அவன் வயிற்றிற்கு அவன் ஏதோ சம்பாதித்துக் கொள்வான் என்பது போல….

ஆனால் இங்கே இரண்டு பெண் பிள்ளைகள்……. அதுவுமில்லாமல் அவன் மகன் நல்ல வேலையில் இருக்கிறான். இப்போது தான் தைரியமாக வந்து பெண்ணை மணமுடித்து போனான். வேண்டுமென்றால் அவன் பார்த்துக் கொள்ளட்டும் என்று நினைத்து, “உங்க அண்ணணுக்கு போன் பண்ணுமா”, என்றனர்.

பத்மினி தான் என்ன செய்வாள். வீட்டில் இருந்த தந்தையின் போன் எடுத்து பல முறை முயன்று விட்டாள். ஆனால் கண்ணன் எடுத்தால் தானே……..

அந்த பெண்ணிற்கு அழுகை பொங்கியது………. திருமணம் நின்றுபோனத்தில் வீட்டிலும் ஒன்றும் சமைக்கவேயில்லை….. காலையில் இருந்து எல்லோரும் பட்டினி…..

அங்கே என்ன ஹோட்டலா இருக்கிறது. பிஸ்கட் பன் மாதிரி ஏதாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் பக்கத்தில் ஒரு மளிகைக் கடைக் கூட கிடையாது, ஊருக்குள் போகவேண்டும்……

பசியின் கோரப்பிடிக்குள் அவர்கள் மூவரும் இருந்தனர்…… அண்ணன் போன் எடுக்கவில்லை……. ஆசுபத்திரிக்கு எப்படிப் போவது, அங்கே போய் என்ன செய்வது என்றும் தெரியவில்லை…..

இப்போது போய் பசிக்கிறது என்று யாரிடம் சொல்ல முடியும், அவள் எப்படியோ தாங்கிக் கொள்வாள், ஆனால் ராகினியும் ஜெய்சங்கரும் எப்படித் தாங்குவர்.

ஆமாம் அவளின் சித்திக்கு சினிமா என்றால் பைய்த்தியம். அதன் பொருட்டே அவளின் பெயர் பத்மினி, தங்கையின் பெயர் ராகினி, தம்பியின் பெயர் ஜெயசங்கர்.

சித்தியின் நினைவு வந்ததும் அவர் இறந்த துக்கம் வேறு தொண்டையை அடைத்தது… மீண்டும் அழுகை ஆறாகப் பெருக….. செய்வதறியாமல் மீண்டும் அழுதாள்.

இரண்டு கிழவிகள் மட்டும் துணைக்கு இருக்க உறவுகள், “எப்படியாவது உங்க அண்ணனுக்கு போன் பண்ணு, நாங்க  காலையில வர்றோம், அவன் வந்து தான் ஜி ஹெச்ல இருந்து அந்த பாடி வாங்க முடியும், கையெழுத்து போடணும், அதுக்கு செலவு பண்ணனும்”, என்று சொல்லிச் சென்று விட்டனர்.

அவளும் விடாமல் அண்ணனுக்கு முயன்றாள். சிறிது நேரத்தில் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

“ஆயா, அண்ணன் எடுக்க மாட்டேங்கறாங்க”, என்று கூட இருந்த கிழவியிடம் சொல்ல.

“உங்கண்ணன் கட்டிக்கிட்டானே அந்த பொண்ணு ஃபோனு தெரியுமா”,

“தெரியாது ஆயா….”,

“அந்த பொண்ணு இந்த ஊரு தானே, அவங்க வீட்ல நம்பரு கேப்போம்”,

“குடுப்பாங்களா ஆயா”,

அந்த குழந்தைகள் படும் பாடு பொறுக்காமல், “அவங்க மட்டும் குடுக்காம இருக்கட்டும், அவங்க மொத்த குடும்பத்தையும் தெருவுல இழுத்து விட்டுடறேன், நீ வா!”,  என்று ஆவேசமாக கிளம்பினார்.

“ஐயோ! ஆயா, நமக்கு யாரோடயும் சண்டை வேண்டாம்”, என்றாள் பத்மினி.

“சண்டை போடாம….. உங்கப்பனையும், உங்கம்மாவையும் நீ காடு கொண்டு போய் சேர்க்க வேண்டாமா கண்ணு…….”,

“வா, போகலாம்!”, என்று அவர் கிளம்பியதும், கூடவே, “இங்க தனியா இருக்க மாட்டோம்”, என்று கூட இருந்த இன்னொரு கிழவி மற்றும் ராகினி ஜெய்சங்கர் எல்லோரும் கிளம்பினர்.

இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் அந்த இருட்டில் நடந்து சென்று சிபியின் வீட்டை அடைந்த போது இரவு மணி பன்னிரண்டரை..

அவர்கள் வீட்டுக் கதவை தட்ட…… அந்த இரவின் நிஷப்ததில் நன்கு கேட்டது.

மாமல்ல வர்மன் தான் முதலில் கண்விழித்தான்….. யார் இப்படி கதைவை உடைப்பது என்று அவசரமாக கதவை நோக்கி செல்ல…. அவன் விழித்த பரபரப்பில் சிபியும் விழித்தான். அவர்கள் இருவரும் முன் கூடத்தில் உறங்கிக் கொண்டு இருந்தனர்.

மாமல்ல வர்மன் கதவை திறக்க….. அங்கே அவர்களை பார்த்து அப்படியே நின்றான்.

விஷயம் கேள்விப்படாமலா இருப்பான். சிபியை திரும்பி பார்க்க, அவன் வாசலுக்கு வந்தான். அவனும் இவர்களை எதிர்பார்க்கவில்லை. சில நொடிகள் அவன் முகம் வெளுத்தது…. “உன்னால் தான்”, என்று தன்னிடம் சண்டையிட வந்திருக்கிறார்களா என்று பயந்து விட்டான்.

அதற்குள் அந்த ஆயா பேச்சை ஆரம்பித்தது…. “உங்க வீட்ல இருந்து இவங்கண்ணனோட   போச்சே அந்த பொண்ணு ஃபோன் நம்பர் வேணும்”, என்றார்.

அதன் பின் தான் முகமே தெளிந்தான் சிபி…

“எதுக்கு?”, என்று வர்மன் கேட்கவும்…..

“டேய், அப்பாவை கூப்பிட்டு விடு”, என்றான் சிபி.

வர்மன் போய் அப்பாவை எழுப்ப, சத்தத்தில் வீடே எழுந்தது.

எல்லோரும் வாயிலுக்கு வந்தனர். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மூன்று மக்கள், வனிதா என்று எல்லோரும். குழந்தை மணிமேகலை மட்டுமே உறக்கத்தில் இருந்தாள்.

“என்னங்கம்மா?”, என்று நடராஜன் கேட்க….

“உங்க வீட்ல இருந்து இவங்கண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போச்சே பொண்ணு,  அது போன் நம்பர் வேனுங்கய்யா”,

“ஏனுங்கம்மா?”,

“அதுங்க இவன் கூடப் பொறந்தவன்….”, என்று பத்மினியைக் காட்டியவர், “ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டேங்கறான்…. அவங்கப்பா ஃபோனுன்னு எடுக்க மாட்டானோ என்னவோ……?”,

“அந்த பொண்ணு நம்பர் குடுங்க, இவங்கண்ணன் வந்தா தான் இவங்கப்பனையும் அம்மாவையும் காடு கொண்டு போய் சேர்க்க முடியும்…”,

உறவுக்காரர்கள் உதவுவார்கள் என்று நினைத்து தான் நடராஜன் வந்திருந்தார். இந்த அர்த்த ராத்திரியில் அந்த பிள்ளைகள் மூன்று பேரும் வயதான பெண்மணியோடு வந்து நிற்கும் போதே….. யாருமற்று நிர்கதியாய் நிற்கிறார்கள் என்று புரிந்தது.

“ஐயோ, இந்தப் பாவத்தை நான் எங்கு கொண்டு போய் தொலைப்பேன்”, என்று ஆய்ந்து ஓய்ந்து போனார்.

“டேய், போன் நம்பர் குடுங்கடா”, என்று சொல்ல…..

அருள்மொழி தொலைபேசி எண் கொடுத்தான்.

“கூப்பிடுக் கண்ணு”, என்று அந்த கிழவி பத்மினியிடம் சொல்ல, பசி மயக்கத்தில் அவளால் அந்த நம்பர் கூட அடிக்க முடியவில்லை…. கண்ணில் பூச்சி பறந்தது, ஒன்றும் சரியாகத் தெரியவில்லை.

“நீ பண்ணு!”, என்று ஜெய்ஷங்கரிடம் நம்பர் கொடுத்தாள். அவன் வாங்கி ஸ்பீக்கரில் அழைக்க, அது இரண்டு ரிங் போனதும் எதிர்புறத்தில் கட் செய்யப்பட்டது..

அதுவே சொன்னது….. அவர்கள் வேண்டுமென்றே கட் செய்கிறார்கள் என்று……..

“அக்கா, அப்பா கூப்பிடறாங்கன்னு நினைச்சு அண்ணா கட் செய்யறாங்க”, என்று ஜெய்சங்கர் சொல்லவும்… என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினர்.

“நீங்க உங்க போன்ல இருந்து பண்ணி குடுங்க ஐயா”, என்று அந்த கிழவி கேட்கவும், செய்யவா, வேண்டாமா என்று நடராஜன் தடுமாறினார்.

“நாங்க அவ கிட்ட பேசறது இல்லைங்கம்மா”,

“நீங்க பேசாதீங்க ஐயா! நாங்க பேசறமுங்க!”, என்றார் அந்த பெண்மணி…

“அண்ணா! நம்ம எதுக்கு பேசணும்!”, என்று ராஜலக்ஷ்மி இடைப்புக…

இவ்வளவு நேரம் பணிவாய் பொறுமையாய் பேசிக்கொண்டிருந்த அந்த கிழவி…. பொறுமையை பறக்க விட்டு….

“ஏன் பேசணுமா? உங்க வீட்டுப் பொண்ணு எங்க வீட்டுக்கு வந்த நேரம் ஒரு கல்யாணம் நின்னுபோச்சு…. அதுமட்டுமா ரெண்டு காவு வாங்கிடுச்சு, இந்த பிள்ளைகளை அனாதையாகிடுச்சு”, என்றார் ஆவேசமாக…..

நடராஜன் எதுவும் பதில் பேசாமல் சிபியை ஒரு பார்வை பார்த்தார்…. எல்லாம் உன்னால் தான் என்பது போல….

ராஜலக்ஷ்மியை பார்த்து, “எதுவும் பேசாதே”, என்று சொன்னவர்….. அவர்களும் பாதிக்கப்பட்டு இருப்பது இப்போது அடுத்தவரின் பார்வைக்கு வராது என்று புரிந்து…

“அவளுக்கு ஃபோன் பண்ணுடா”, என்றார் அருள் மொழியைப் பார்த்து…….

பலமுறை ராதா அருள் மொழிக்கு திருமணத்தின் பின் முயன்று இருந்தாள். அவன் போனை எடுக்கவேயில்லை. இப்போது அவன் செய்தால் எடுப்பாளா என்ற யோசனையோடே இப்போது கூப்பிட்டான்.

அடித்த இரண்டாவது ரிங்கிலேயே எடுத்தவள், “சொல்லுங்க மாமா!”, என்றாள்.

அருள்மொழி அமைதியாக இருக்கவும்…. “அங்க யாருக்கும் ஒன்னும் இல்லைல்ல”, என்று பதட்டமாக கேட்டாள்.

“ஊருக்குள்ள உங்க அம்மா மட்டும் உயிர் கிடையாது, இன்னும் இருக்காங்க”, என்று கடுமையாக பேசியவன், “எங்க உன்னை ஒருத்தன் இழுத்துட்டு போனானே, அவன் கிட்ட ஃபோன் குடு….”,

“அவர்கிட்ட என்ன பேசணும்?”, என்று கவலையாக ராதா கேட்க,

“ஏய், குடு முதல்ல, அவங்கப்பாவும் அம்மாவும் செத்துட்டாங்க! அதை சொல்லணும்…..”,

“என்ன?”, என்று அதிர்ந்தாள்.

“அவர் தங்கச்சிக்கு இன்னைக்கு கல்யாணம்”,

“அங்க எந்தக் கல்யாணமும் நடக்கலை, கருமாதி தான் நடந்திருக்கு….. அவன் கிட்ட போனை குடு”, என்று சொல்லி…… அதை பத்மினியிடம் கொடுத்தான்.

கண்ணன் அந்த புறம் பதட்டமாக தொலைபேசி வாங்க,

“அண்ணா!”, என்றாள் பத்மினி.

“என்ன பத்மினி?”,

“அம்மாவும், அப்பாவும் செத்துப்போயிட்டாங்க….”, இவள் சொல்லும் போதே சிறு பெண் ராகினி ஒரு கேவலோடு அழுக…..

அந்த சிறு பெண் துக்கத்தில் அழுகிறாள் என்று நினைத்தவர் நடராஜனும் சிபியும் மட்டுமே…. மற்றவர்களுகேல்லாம் தினம் பார்கின்ற கேட்கின்ற ஒரு இறப்பு செய்தி அவ்வளவே….

அவர்கள் கவலையெல்லாம் இரவு தான், ஆனாலும் யாராவது பார்த்துவிட்டால் என்ன ஆவது என்பது போல தான்.

பத்மினி ஒரு கையால் ராகினியை பிடித்து….. தன் மேல் ராகினியின் முகத்தை வைத்து  அழுத்திக் கொண்டாள், அழுகை சத்தம் வெளியே கேட்காமல்.

“அண்ணா காலையில ஆசுபத்திரிக்கு போகணும், நீ எப்போ வர்ற உடனே வா”, என்றாள் பத்மினி….

“இப்போவே மணி ஒன்னு! நான் ஏதாவது ட்ரெயின் கிடைக்குதான்னு பார்த்து, முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வர்றேன்”, என்று கண்ணன் சொல்ல…

“அண்ணா எதுன்னாலும் போன் எடுண்ணா, எடுத்து பேசு”, என்றாள்.

“ம், நான் சீக்கிரம் வரப் பார்க்கிறேன். ஆனா எவ்வளவு நேரம் ஆகும்னு சொல்ல முடியாது”, என்றான்.

அந்த குரலில் வரவேண்டும் என்பது கடமையை முன்னிட்டு மட்டுமே இருந்தது. அப்பா அம்மா இறந்துவிட்டார்களே என்ற பரிதவிப்பு இல்லை.

பத்மினி அழுகையோடு தான் பேசினாள்…. ஒரு வார்த்தைக் கூட அழாதே, என்று கண்ணன் சொல்லவில்லை என்பதை அங்கிருந்த பலர் கவனித்தனர்.

ஸ்பீக்கரில் தான் பேசினர்.

பத்மினி போன் வைக்கப்பட்டதும்…. அதை கொடுத்து விட்டு போகலாம் ஆயா… என்று அவர்கள் கிளம்பினர்.

அவர்கள் திரும்ப நடந்த விதம்…. கண்டிப்பாகப் பார்ப்பவர் யார் மனதையும் கலங்கச் செய்யும்……

நடராஜனுக்கு மனது மிகவும் பாரமாகிப் போனது…..

அவரின் கோபமெல்லாம் சிபியின் மீது திரும்பியது…. “ஏண்டா ஒரு வாரமா கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றேன், எந்த பகையுணர்ச்சியும் வேணாம் விட்டுடுன்னு….”,

“ராதா செத்துப்போயிட்டான்னு நினைச்சு மனசை தேத்த வேண்டியது தானேடா….. அவ போனதுக்கு இந்த பிள்ளைங்களை பழி வாங்கிட்டியே… அந்த பய போன்ல பேசும்போதே தெரியுது… அவன் வர்றதே பெரிய விஷயம். அவன் வந்து காரியத்தை செய்யறது அதை விட பெருசு…”,

“இதுல இந்த பசங்களை அவன் ஆதரிப்பானா என்ன…. இப்படி செஞ்சு தொலைச்சிட்டியேடா”, என்று மிகவும் கோபமாக பேச…..

இப்படி நடந்துவிட்டதே என்று சிபிக்கு சொல்லொணா வருத்தம் தான்… ஆனால் இதில் அவன் தப்பு என்ன இருக்கிறது, இப்படி அப்பா திட்டும் அளவுக்கு என்று கோபமும் துளிர்க்க….

அவனும் பதிலுக்கு வார்தையடினான்…. “நான் என்ன செஞ்சேன்… நான் ஒன்னும் கல்யாணத்தை சதி செஞ்சு நிறுத்தலை. அது சட்டத்துக்கு புறம்பானது…. அவங்க பார்வைக்கு கொண்டு போனேன்….. அதுக்கு உரியவங்க நடவடிக்கை எடுத்தாங்க….. அவ்வளவு தான்”.

“அவன் அப்பன் ஒரு மொள்ளமாரி, பசங்களை வளர்க்கத் துப்பில்லாம அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சு குடுத்து குளிர்காய நினைச்சிருக்கான். அதுக்கு அவன் பொண்டாட்டியைப் பசங்களை அடிச்சு சித்ரவதை செஞ்சிருக்கான்….. அந்தம்மா அவன் கொடுமை பொறுக்காம அவனைப் பத்த வெச்சு அதுவும் பத்திகிச்சு…..”,

“அவன் எவ்வளவு கொடுமை செஞ்சிருந்தா இந்த மாதிரி செஞ்சிருக்கும்… அதைய உட்டுபோட்டு என்னை குத்தம் சொல்லுவீங்களா…”,

“எவ இருந்தா எனக்கென்ன செத்தா எனக்கென்ன…. எவ போனாலும் போய் தொலையறான்னு என்னால விட முடியும்… என்னோட வலி வருத்தம் எல்லாம் எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப்படுத்திட்டு போயிட்டா. போனவ முன்னாடியே போக வேண்டியது தானே”, என்று ஆக்ரோஷமாக பதிலுக்கு பேச……

அவன் கோபத்தை பார்த்து அத்தனை பேரும் மிரண்டனர்.

“எங்கக்கிட்டயே இந்த பொருமு பொருமுற….. இந்த கோவத்தை பார்த்து தான் உன்னைப் பிடிக்காம அந்த பொண்ணு போயிடுச்சு”, என்று நடராஜனும் பேச……

“என்னை எவளுக்கும் பிடிக்கணும்னு நான் இங்க ஒன்னும் ஏங்கிக்கிட்டு நிக்கலை….. இல்லை, மனசுல ஆசையை வளர்துக்கலை….. நீங்கல்லாம் பேசி பேசி அந்த எண்ணத்தை மனசுல விதைச்சீங்க அவ்வளவு தான்….. அந்த கருமம் பிடிச்சவளுக்கு, என்னைப் பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன?”, என்றான் ஆத்திரமாக.

“பிடிச்சா என்ன? பிடிக்காட்டி என்னன்னு இவ்வளவு லொள்ளு பேசறியே அப்படியே விட்டிருக்க வேண்டியதுதானே.. இந்த பசங்களை எதுக்குடா நடுத்தெருவுல நிறுத்தின”, என்றார் ஆவேசம் அடங்காமல் நடராஜன்.

இருவரும் அப்படி முறைத்துக் கொண்டு நின்றனர்….

“சிபி வாடா…. அப்பா தான பேசாத”, என்று வர்மனும், அருள் மொழியும்   சிபியைப் பிடித்து இழுக்க….. ஈஸ்வரரும் சுலோச்சனாவும் தங்களின் மகன் நடராஜனை, “நடந்ததுக்கு அவன் என்ன பண்ணுவான்”, என்று சமாதானம் செய்ய…

தேவியும், வனிதாவும், அழுதுகொண்டிருந்த ராஜலக்ஷ்மியை சமாதானம்  செய்ய…

எதுவாகினும் அழுதுகொண்டிருந்த தங்கையை அணைத்துப் பிடித்தவாறு இருட்டில் நடந்து கொண்டிருந்த பத்மினி, அக்காவையும் தங்கையும் பார்த்தவாறு நடந்து கொண்டிருந்த ஜெய்சங்கர்….. இவர்களை சரிபடுத்துமா என்ன?                                            

Advertisement