Advertisement

அத்தியாயம் இருபத்தி ஆறு:

அன்று மாலையே சிபிக்கு அவனுடைய பாட்டி அழைத்தார், “டேய், தாத்தா ரொம்ப சிரமப்படறார்… நீ வீட்டை விட்டுப் போனது தான் அவர் ஞாபகத்துல இருக்கும். நீ வந்தது அவரால உணர முடியலை.. வந்து அவருக்கு பால் ஊத்து”, என்று கெஞ்சலாக பேச… அதற்கு மேல் எப்படி நிற்பான் சிபி, மாலை ரீடிங் எடுத்தது ஊருக்கு கிளம்பினான்.

பஸ் ஏறியதும் தான், ஜெயஸ்ரீயிற்கு அழைத்து, “ஊருக்கு வருகிறேன்! பாட்டி அழைத்தார்கள்!”, என்று சொல்லவும்… ஏற்கனவே மனது சஞ்சலமாக இருந்தவளுக்கு மீண்டும் பயம் தொற்ற.. “ஓஹ்!”, என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது.

வைத்து விட்டாள்..  சிபிக்கும் அதற்கு மேல் பேசமுடியவில்லை… “சாவா?”, என்பது போல அவனுக்கும் ஒரு மாதிரி இருந்தது.

அவன் வீட்டிற்கு சென்று பாட்டி சொன்னதைப் போல செய்து.. வந்து நேரம் பார்த்த போது மணி இரவு ஒன்பது..

தாத்தாவும் இப்போதோ அப்போதோ என்பது போல இருந்தவர்… இரவு ஒரு மணிக்கு எல்லாம் அடங்கி விட… வீடே விழித்துக் கொண்டது.

எல்லாருக்கும் தகவல் சொல்ல… வீட்டில் ஜனம் குழும ஆரம்பித்தனர்… காலை ஆறு மணிக்கு அழைத்து ஜெயஸ்ரீயிடம் தகவல் சொன்னான்.

சொன்னவன், வேறு பேசவில்லை வைத்து விட்டான்.. “ஐயோ! இது என்ன? அப்பாவிடம் சொல்லுங்கள் என்று சொல்வதற்கு முன் வைத்து விட்டார்”. ஜெயஸ்ரீயிற்கு கோபமாக வந்தது. தானாக அப்பாவிடம் சொல்வதா வேண்டாமா என்று யோசிக்கும்போதே, கதவின் அழைப்பு மணி கேட்க… திறந்து பார்த்தால் மாமல்லவர்மன் வாசுவுடன் நின்றிருந்தான்.

“தாத்தா காலமாயிட்டார் நைட் ஒருமணிக்கு”, என்று தயங்கித் தயங்கி சொன்னவன், “அப்பா சொல்லிட்டு வரச் சொன்னார்”, என்று நின்றான்.

“இருங்க!”, என்பது போல சைகைக் காட்டியவள்.. அப்பாவைப் போய் எழுப்பி விட… “என்னமா?”, என்றவரிடம் வெளியே காட்டினாள்.

“ஐயோ! ஏன் பேசமாட்டேன் என்கிறாள்? இப்போது என்ன பிரச்சனை”, என்று வஜ்ரவேல் பதறி வர, அங்கே வர்மனைப் பார்த்ததும் என்னவோ ஏதோவென்று பயமாகி விட்டது… நேற்றிலிருந்து தான் ஜெயஸ்ரீ அவரையும் சேர்த்து பயமுறுத்தி இருந்தாளே…

அவரைப் பார்த்ததும், “தாத்தா காலமாயிட்டாங்க, ராத்திரி ஒரு மணிக்கு, அப்பா சொல்லிட்டு வரச் சொன்னாங்க”, என்று அவன் சொல்ல… “உஷ், ஹப்பா!”, என்ற பெருமூச்சு எழுந்தது.

“சரி”, என்பது போல தலையாட்டினார்.. ஏதாவது கேட்பார்களா? சொல்வார்களா! இருக்கவா? போகவா!”, என்று சில நொடி தடுமாறிய வர்மன்.. தலையசைத்துக் கிளம்பினான். “அண்ணியின் அப்பா வருவதற்கு முன்னமே அண்ணியிடம் ஒரு சாரி கேட்டு இருக்கலாமோ”, என்று தோன்றியது.    

இப்போது கேட்பதற்கு ஒரு பயம் அமைதியாக சென்று விட்டான். தந்தையும் மகளும் யார் முன் பேசுவது என்று ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.

ஜெயஸ்ரீ பேசுவதாக காணோம் என்ற பிறகு, “என்ன செய்யலாம், போகணுமா?”, என்றார்.

“நீங்க போறீங்களா பா! நான் வரலை?”.

 

“நான் கண்டிப்பா போகணுமா?”, என்றார் வஜ்ரவேல்.

“என்னை கேட்டா போங்கன்னு சொல்வேன்! உங்க விருப்பம் அப்பா! ஆனா உன்னால் தான் போனேன்னு எல்லாம் நீங்க சொல்ற மாதிரி இருந்தா போகாதீங்க”, என்று சொல்ல..

“நீயும் போகமாட்ட… என்னையும் போகச் சொல்ல மாட்ட… ஆனா நானா போகணுமா? என்ன இது?”, என்று சற்று கோபமாகக் கேட்டார்.

“நீங்க தானே இவரை எனக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சீங்க! அப்போ நீங்களா தானே போகணும்! நான் ஏன் சொல்லணும்?”, என்பது போல ஒரு புது சாஸ்திரம் பேச..

பெண்ணை முறைத்துப் பார்த்தார்.. “எப்போதும் இப்படித் தான் எனக்கு வேண்டும் என்று கேட்காமல், அவராக செய்ய வேண்டும்”, என்று எதிர்பார்ப்பது.

ஜெயஸ்ரீயும் அவரை பதிலுக்கு முறைத்துப் பார்த்தாள்.  

“போகிறேன்௧! போகவில்லை!”, என்று சொல்லாமல்  வஜ்ரவேல் எழுந்து போய் விட…

ஜெயஸ்ரீயும் போகிறீர்களா கேட்கவில்லை, அவளும் அவளுடைய ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.   

வஜர்வேல் வெகுவாக யோசித்து, எப்படியும் சிபியோடு தான் வாழ்க்கை என்று தெளிவாக சொல்லி விட்டாள்… இனி அவர்களை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பழகித் தானே ஆகவேண்டும்… பெண்ணைப் பெற்றவர்களுக்கு நேரும் மிகப் பெரிய கொடுமை இது… எப்போதும் அவர்கள் தான் முதலில் இறங்கி வர வேண்டும்..

“இந்தப் பெண்கள், பெண்கள் தான்! அதென்ன என்ன செய்தாலும் கணவன் என்று அவன் பின் போவது. அவன் தான் விட்டுச் சென்று விட்டானே, அவன் தான் வேண்டும் என்பது போல என்ன…. போடா என்று சொல்லாமல்”, என்று அவருக்கு மனதிற்குள் பெரும் போராட்டம்.

“உன் பெண் தானே எப்படி இருப்பாள்… ஓரிரு வருடங்கள் உன்னுடன் வாழ்ந்த உன் மனைவியை உன்னால் இன்றும் மறக்க முடிந்ததா..”, என்று மனசாட்சி கேள்வி கேட்க..

“ஆனால் என் மனைவி என்னோடு ஒன்றி வாழ்ந்தால்… அந்த வருடங்களின் நினைப்பே என்னை இதுவரை வேறு சிந்தனையின்றி வைத்திருக்கிறது. இவன் விட்டுச் சென்றானே…”, இப்படியாக மனதில் அவருக்கு அவரே சண்டையிட்டுக் கொண்டாலும் முடிவில்,  வேறு வழியின்றி சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினார்.

சொல்ல வேண்டிய முறைக்குத் தான் சொல்லி விட்டனர் சிபியின் வீட்டினர். ஆனால் வஜ்ரவேல் வருவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை…. ஏன் சொந்த பந்தங்கள் கூட அவர் வந்ததை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

யாரிடமும் எதுவும் விசாரிக்காமல், சம்மந்தியான நடராஜனிடம் மட்டும் கை கொடுத்து விட்டு, அங்கே ஓரிடத்தில அமர்ந்து கொண்டார். வேறு சிலர் சம்மந்தி முறைகளைச் செய்ய முயன்ற போது, “என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள், உரிய பணத்தைக் கொடுத்து விடுகிறேன்”, என்று பங்கும் சேர்ந்து கொண்டார்.

நடராஜனுக்கு அவரிடம் என்ன பேசுவது என்று கூடத் தெரியவில்லை… ஒரு பெரிய தயக்கம்… நல்லா இருக்கீங்களா என்று எப்படிக் கேட்பது இவர்கள் செய்து வைத்த வேலைக்கு…. அவரும் சம்மந்தி அருகில் அமர்ந்து கொண்டார். வஜ்ரவேல் வந்ததுமே தலையசைத்து போனான் சிபி அவனுக்கு வேலைகள் இருந்தன.

எல்லாம் சிபியின் மேற்பார்வை தான்! அவன் என்ன சொல்கிறானோ அதை தான் எல்லோரும் கேட்டனர்.. பார்க்க பார்க்க எரிச்சலாக வந்தது வஜ்ரவேலிற்கு…

இவ்வளவு ஆளுமை இருப்பவன் எதற்கு விட்டுச் சென்றான் என்பது போல. முடியாதவன், தெரியாதவன், திறமை இல்லாதவன், இப்படி என்றால்…. அவன் அவ்வளவுதான், அதற்கு மேல் அவனிடம் எதிர்பார்க்க முடியாது என்று விட்டு விடலாம்… ஆனால் எல்லாம் இருந்து சிபி எதற்குப் போனான்.. கோபமாக வந்தது. 

இரண்டு வருடங்கள் எங்கிருந்தான் என்று தெரியவில்லை… ஒரு நாளில் வந்து நின்றால் என் பெண் அவனோடு தான் வாழ்க்கை என்று சொல்கிறது, என்ன செய்வது? தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல தோன்றியது.    

ஆனால் இனி கோபத்தைக் காட்டி என்ன செய்வது…

யாருமில்லாத போது அருகில் வந்தவன்… “ஜெயஸ்ரீ வரலீங்களா?”, என்று கேட்க… “வரலை”, என்றவர்.. கூடவே, “நான் வேண்டாம்னு சொல்லலை”, அவளா வரலை! என்றும் சொன்னார். 

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல், “நான் போய்க் கூட்டிட்டு வரட்டுமா?”,

“இல்லை! நீங்க இங்க பாருங்க! அவ வேண்டாம்!”, என்று சொல்லவும் சிபி அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகிவிட்டான். தன்னையே இப்படிப் பார்க்கும் உறவுகள், இதில் ஜெயஸ்ரீ வந்தால் இன்னும் பார்ப்பர்… அவளுக்கு எப்போதும் காட்சிப் பொருள் ஆவது பிடிக்காது, கோபம் வரும், என்று தான் அவர் வேண்டாம் என்று சொன்னார். 

அதுமட்டுமில்லாமல், ஜெயஸ்ரீ வருவாளா? மாட்டாளா? என்று அவருக்கேத் தெரியாது.  

அவருக்கே இன்னும் மனது சமனப்படவில்லை….  

ஆனாலும் அவனிடம், “நீங்க ஏதோ மேல ஏறி வேலை பார்க்கறீங்கலாமே.. ஜெயஸ்ரீ ரொம்ப பயப்படறா, விட்டுடுங்க!”, என்றார்.

“சரி”, என்றான் வாயத் திறந்து..

“உடனே விடுங்க… அப்புறம் எல்லாம் வேண்டாம்! ஜெயஸ்ரீ ரொம்ப பயப்படறா”, என்றார்.

“இவர் என்ன என்னை மிரட்டுகிறாரா”, என்பதுப் போல சிபிக்குத் தோன்றியது. அவராவது அதட்டுவது போல பேசுகிறார், உன் பெண்ணிற்கு இப்படி ஒரு நிலை வந்திருந்தால் நீ எதிரில் இருப்பவனிடம் பேசுவாயா என்ன? அடித்து துவைத்து இருக்க மாட்டாய், விடுடா என்று அவனுக்கு அவனே சமாதானம் செய்து கொண்டான்.

அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை, பேசும் அவசியமும் வரவில்லை.      

காடு செல்லும் போதும் கூட வந்தவர்… திரும்ப எல்லோரும் வீடு வந்த பிறகே… அவர் வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்.

அப்பா வந்ததும், என்ன நடந்தது என்பதுப் போல எல்லாம் கேட்கவில்லை. அவரவர் பாட்டிற்கு வேறு பேசினர்… வேறு வேலைகள் பார்த்தனர். சிபியைப் பற்றியோ சிபியின் வீட்டினர் பற்றியோ பேசவில்லை.

இரவு ஜெயஸ்ரீயிற்கு அழைத்தவன், “நீ ஏன் வரலை? உங்க அப்பா வந்திருந்தார்…”,

“வரலை!”,

“அதான் ஏன்”,

“ரொம்ப வருஷம் ஆகிடுச்சு! இப்போ அங்க வந்தா எல்லோரும் என்னையேப் பார்ப்பாங்க…  அதான் வரலை…”,

“அப்போ எப்போ தான் வருவ?”,

“தெரியலை..?”,

“உங்கப்பா வேற வேலையை விட்டுடுங்கன்னு சொன்னார்! என்ன சொன்ன நீ அவர்கிட்ட…”,     

“அதுவா அம்மாக்கு அப்புறம் நானாவது உங்களுக்கு இருந்தேன்… ஆனா எனக்கு யாருமில்லைப்பான்னு சொன்னேன்! அதான் சொல்லியிருப்பார்!”, என்று திக்கித் திக்கி சொல்லவும்… அதிர்ந்து விட்டான்.

“என்ன பேசி வெச்சிருக்குற நீ!”, என்று…

“நிஜம் அதுதானே!”, என்று அவளின் பிடியில் அவள் நிற்க…

என்ன பேசுவது என்றே தெரியவில்லை சிபிக்கு…

“நீ நான் பதில் கொடுக்க முடியாதபடி தான் நிறைய பேசற”, என்றான்.

அதற்கு எந்த பதிலுமில்லை ஜெயஸ்ரீயிடம்…

“நான் ஒரு ஒரு வாரம் பத்து நாள் போல, இங்க இருந்து தான் போவேன்.. அந்த ரீடிங் எடுக்கற வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டேன்… தாத்தாக்கு சடங்கெல்லாம் முடியும் வரை இங்க தான் இருப்பேன்…”,  

“அந்த ரீடிங் எடுக்க போக மாட்டேன்”, என்றதும் ஆசுவாசப் பெருமூச்சு ஜெயஸ்ரீயிடம்…. “அதுக்கு… அப்புறம்…”, என்றாள்..

“தெரியலை, அந்த ஒரு வாரத்துக்கு அப்புறம் தான் தெரியும்…”, என்றான்.

இருவருக்கும் அதற்கு மேல் பேச எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.. “வெக்கட்டுமா”, என்று சிபி கேட்க… “ம்”, என்றாள்..

ஆயிற்று தாத்தா இறந்து பத்து நாட்கள் ஆகிற்று… தாத்தாவிற்கு சாமி கும்பிடும் போதும்… வஜ்ரவேலின் வீட்டிற்கு வர்மன் மூலமே சொல்லிவிட அதற்கும் வஜ்ரவேல் மட்டுமே வந்தார். ஜெயஸ்ரீ வரவில்லை..

அன்று காலையில் தான் தொலைபேசியில் அழைத்து, “நீயும் வாயேன்”, என்று அத்தனை முறை சொல்லியிருந்தான்…. முதலில், “மாட்டேன்”, என்றாள், பிறகு அவன் வற்புறுத்திச் சொல்லவும், “சரி”, என்பது போல சொல்லியிருந்தாள், ஆனால் வரவில்லை…

சிபிக்கு ஏமாற்றமாக தான் இருந்தது.

இந்த சில நாட்களாக வீட்டில் இருந்த போது தான், அப்பா அம்மாவிடம் பேசுவதே இல்லை என்று தெரிந்தது சிபிக்கு. மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. எவ்வளவு சிறப்பாக வாழ்ந்துவிட்டு இப்போது பேசிக்கொள்வதில்லை என்பது…

இரண்டு வருடமாக விவசாயமும் செய்யவில்லை.. அவன் செல்வதற்கு முன்பே நிறைய கடன்கள் இப்போது இன்னும் அதிகம்..  ஆண்கள் வேலைக்கு சென்று வருவதில் பாதிக்கு மேல் வட்டிக்கேச் சென்றது.

தன்னால் வீட்டில் எல்லாமே குளறுபடி, அதை சரி படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் தனக்கு இருக்கிறது. சிபியின் கவனம் எல்லாம் அதுதான்.. பணம், அதை சரி படுத்தி விடும் தைரியம் நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஆனால் அப்பா, அம்மா.. ஜெயஸ்ரீ வந்தால் சிறிது சரி படுமோ என்று தான் அவளை வருத்தி, வருத்தி அழைத்து இருந்தான். ஆனால் அவள் வரவில்லை.

“ஜெயஸ்ரீ வர்றேன்னு சொன்னா, நீங்க கூட்டிட்டு வரலையா”, என்றான் வஜ்ரவேலிடம் போய்…  “என்கிட்ட சொல்லலையே!”, என்றார் அவர்.

“நான் போய் கூட்டிட்டு வரட்டுமா?”, என்றான்.. அவர் பதில் பேசுமுன்னேயே, “வேண்டாம்னு சொல்லாதீங்க! வரட்டும்!”, என்றான் வற்புறுத்தலாக..

அவன் வற்புறுத்தவும், “அப்புறம் ஏன் விட்டுட்டுப் போன”, என்று கேட்க மீசை அவருக்கு துடித்தது தான்… ஆனால் சீர்பட வேண்டிய உறவு, அதைத் தன் வார்த்தைகளால் மீண்டும் சிக்கலாக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்தார்… கூடவே அப்படி சிபியிடம் சட்டென்று பேசிவிட முடியவில்லை. அவன் தோரணை, பேச்சு, பார்வை, விலக்கி நிறுத்தியது..

“ஒரு வார்த்தை கூட அதிகமாக் கேள்வி கேட்கற மாதிரி பேச முடியலை”.   அதுதான் அவருக்கு இன்னமும் கோபம்… இப்படி பேசக் கூட எதிராளியை யோசித்துப் பேச வைப்பவன் எப்படி விட்டு சென்றான்.

அவர் யோசித்துப் பார்க்கும் போதே கிளம்பிவிட்டான். அப்பாவிடம், “இன்னும் நேரமிருக்குப்பா! இருந்தாலும் எனக்காகப் பார்த்துட்டு இருக்காதீங்க, நீங்க கும்பிடுங்க …”,

“எங்க போற சிபி…?”,

“எனக்குக் கொஞ்சம் வேலைப்பா, வந்துடறேன்!”, என்று சொல்லிச் சென்றான். வஜ்ரவேல் கேட்டுக் கொண்டு தான் இருந்தார். ஜெயஸ்ரீயை கூப்பிடப் போகிறேன் என்பது போல சொல்லவில்லை.

பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்… வீட்டில் தான் இருந்தாள்…

“ஏன் வரலை?”, என்று அவள் முன் போய் நின்றான் கோபமாக… சிபி வருவான் என்று தெரியும், ஆனால் முடிந்த பிறகு மாலை வந்து சண்டையிடுவான் என்று எதிர்பார்த்தால்.. இப்படி வந்து நிற்பான் என்று எண்ணவேயில்லை.

“அது, அது”, என்று திக்கினாள்…

“சொல்லு”, என்பதுப் போலக் கையைக் கட்டி அவள் முன் நிற்கவும்…

“எனக்கு என்னவோ போல இருந்துச்சு… எப்படி எல்லார் முன்னாடியும் வருவேன்… அப்பா உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்து, ஜெயில் எல்லாம் போனீங்க, எல்லோரும் அங்க வீட்ல நான் வேணும்னு செஞ்சேன்னு நினைச்சா?”,

“அப்புறம் நீங்க வீட்டை விட்டுட்டு போய்டீங்க.. எல்லோரும் நான் தான் காரணம்னு நினைப்பாங்க.. ஏற்கனவே அங்க என்னை யாருக்கும் பிடிக்கலை! இப்போ இன்னும் பிடிக்காது!”, என்று திக்கித் திக்கி அவள் முழுதாக பேசி முடிக்கும்வரை கேட்டவன்.

“பாரு… நீ எதுக்கும் காரணமில்லை… எல்லாம் என்னோட முட்டாள் தனம்… அதை நான் கண்டிப்பா சரி பண்ணனும்… யாருக்கு அங்க உன்னை பிடிச்சா என்ன? பிடிக்கலைன்னா என்ன… எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு”,

“பிடிச்சிருந்தா, ஏன் போனீங்க?”, என்றது வார்த்தையாக வரவில்லை… கண்களால் வந்தது.

“நீங்களா இப்போக் கூட வரலை!”, என்பது வார்த்தையாக வந்தது.   

“அப்போ என்னோட வரமாட்டியா நீ…”,

செல்ல வேண்டும் போலத் தான் இருந்தது. ஆனாலும் ஒரு தயக்கம்..

ஏதோ ஒரு கோபம், விரக்தி, சென்று விட்டான். ஆனால் இரண்டு வருடங்கள் அவளாகப் பார்க்கும் வரை, அவள் அவனைத் தேடுகிறாள் என்று உணர்த்தும் வரை வரவில்லை… எல்லாம் சரியாகிவிட்டது இருவருக்குள்ளும் என்ற தோற்றம் இருந்த போதும் ஜெயஸ்ரீயிடம் தயக்கம் தான்.

அதை முகம் தாங்கி நிற்க… சிபி இதை எதிர்பார்க்கவில்லை…

“இப்போ நீ என்னோட வர்ற! அங்க எல்லோர் முன்னாடியும் நல்ல விதமா நடந்துக்கற… நீ யாரோடயும் பேசணும்கிற அவசியமில்லை… முன்ன நான் விட்டுப் போனது கூட, நீ என்னோட வர மாட்ட, உன் அப்பா உன்னை என்னோட அனுப்ப மாட்டார், மத்தவங்க முன்னாடி எனக்கு அசிங்கம்ன்னு தான், நீ சொன்ன மாதிரி ஓடிப் போயிட்டேன்… ஆனா இனிமே அது நடக்காது… கிளம்பு!”, என்றான் அதட்டலாக..

அப்போதும் ஜெயஸ்ரீ தயங்க.. “வான்னு சொன்னேன்!”, என்று கோபமாக கத்தியவன், அவளின் கையைப் பற்றி இழுக்க, அவன் மேலயே விழுந்தாள்.  

“அப்போ உனக்கு என்னைப் பிடிக்கலை அப்படிதானே…”,

“இல்லை! அப்படி இல்லை!”, என்று அவள் அவசரமாகத் தலையாட்ட முயலும் போதே… அவளின் முகம் பற்றி அதை அசைய விடாமல் நிறுத்தினான்.

“பிடிச்சிருந்தா….. எல்லாத்தையும் மன்னிக்க வைக்கும், மறக்க வைக்கும்… உனக்காக சுயமரியாதையைக் கூட அவ்வளவா பார்க்காம, என் மேல அவ்வளவு கோபம் இருந்தாலும், உங்கப்பா வந்து உட்கார்ந்து இருக்கார் தானே.. பொண்ணுக்காக அவர் செய்யும் போது, எனக்காக உன்னால செய்ய முடியலை இல்லை..”,

அவன் முகத்தில் அவ்வளவு கோபம், ஆத்திரம், இயலாமை… “நான் செஞ்ச தப்பு உன்னைச் சேராதா? அப்போ நீ வேற தானா…”,

“எங்கப்பா எங்கம்மாவோட பேசறதுக் கூட இல்லை என்னால…”,

“இன்னும்… இன்னும்… என் தப்பு முடியவே முடியாதா… என்ன செய்யணும் நான் சொல்லு! சத்தியமா எனக்குத் தெரியலை என்ன செய்யணும்ன்னு! நான் வாழணும்னு நினைக்கும் போது எல்லாம் முடிஞ்சி போச்சுன்ற உணர்வைத் தான் குடுக்கறீங்க…”,

“ஒருத்தி கல்யாணம் பண்ணாம என்னை அசிங்கப்படுத்திப் போனா! இப்போ நீ கல்யாணம் பண்ணி.. இந்த பயத்துல தான் நான் போனேன்…”,  

“அவளை மனசுல இருந்து தூக்கி எறியவே, எனக்கு இவ்வளவு நாள் ஆச்சு…”, 

“வேண்டாம் போ! நீ வரவேண்டாம் போ! என்ன பண்ணணுமோ நான் பார்த்துக்கறேன்..! நீ சொன்ன மாதிரி நான் ஓடிப்போயிட்டேன், உனக்கு தகுதியில்லை, என் உலகம் தனி தான்! அதுல யாரும் தேவையில்லை!”,

“பறந்து விரிஞ்ச உலகம் இருக்கு, எனக்கு நிம்மதி குடுக்கற என் இயற்கை இருக்கு… அது போதும் எனக்கு, இந்த ஜென்மத்துக்கு! யாரும் தேவையில்லை!”,  என்று சோபாவில் அவளை வலுக்கட்டாயமாக அமர்த்தி சென்றான். ஜெயஸ்ரீயிற்கு சந்தர்ப்பமே கொடுக்கவில்லை.

“ஐயோ! இவ்வளவு கோபமா?”, என்று ஜெயஸ்ரீ பயந்து விட்டாள். அவனின் இந்தக் கோபம் தானே எல்லா முடிவுகளையும் எப்போதும் அவனைத் தப்பாக எடுக்க வைக்கிறது.         

நேரே வீட்டிற்குத் தான் சென்றான்… அங்கே கற்பூரம் பொருத்தும் நேரமாகியிருக்க… முகத்தில் எதையும் காட்டாமல் தாத்தாவின் படத்தின் முன் படையல் வைக்கப்பட்டு கும்பிடப்பட.. அவனும் கும்பிட்டான்.

அவன் தனியாக வருவதைப் பார்த்திருந்தார் வஜ்ரவேல், அருகில் வந்து, “ஜெயஸ்ரீ வரலையா?”, என்று மெதுவான குரலில் கேட்க… “வரவில்லை”, என்பது போல தலையசைத்தான்.

மகளைப் பற்றி அவருக்கு தெரியும், அதனால் தான் முன்னமே அவன் கேட்டதற்கு, “வேண்டாம்!”, என்று சொன்னார்.. ஜெயஸ்ரீ மிகுந்த பிடிவாதம் தானே…

வஜ்ரவேலிற்கு மிகுந்த கவலையாகிப் போயிற்று, அதுவும் சிபியின் முகம் மிகவும் இறுகி இருந்தது, அதுவே சொல்லாமல் சொன்னது… அங்கே இருவருக்குள்ளும் பெரிய பிரச்சனையாகி இருக்க வேண்டும் என்பது.  

சாமி கும்பிட்டு முடித்ததும் உணவு பரிமாறப்பட, எல்லோரும் அதை பார்த்துக் கொண்டிருக்க… வஜ்ரவேலை மரியாதை நிமித்தம் நடராஜன், “வாங்க சம்மந்தி”, என்று அவரை அழைத்துப் போய் அமர்த்தினார்.

அவர் உண்டு முடித்து வந்ததும்.. அவரிடம் தன்மையாக, “நீங்க எப்போ சொல்றீங்களோ நாங்க வந்து ஜெயஸ்ரீயைக் கூட்டிட்டு வரட்டுமுங்களா”, என்று கேட்க… என்ன சொல்வார் வஜ்ரவேல்.. “அதெல்லாம் என் பெண்ணும், உங்கள் பையனும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு”, என்றா…

“பொண்ணுக்கிட்ட பேசிட்டு சொல்றேன்!”, என்று முடித்துக் கிளம்பினார்.

அவர் சென்றதும் அம்மாவையும் அப்பாவையும் தனியாக அழைத்தவன்… “ஏம்பா சிபின்னு ஒரு பையன் பொறப்பான்… கடைசி வரைக்கும் அவன் என்னை பார்த்துக்குவான்னு தெரிஞ்சா அம்மா உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க”, என்றான் கோபமாக… அவன் சொல்ல வருவது புரியாமல் நடராஜானும் தேவியும் விழிக்க..

“இல்லை தானே! உங்களை நம்பித் தானே கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க. அப்புறம் என்னைக் கொண்டு, அம்மாக்கிட்ட ஏம்பா கோபத்தை காட்டி பேசாம இருக்கீங்க… நான் மட்டும் தான் உங்க சந்தோஷமா? வேற இல்லையா… தயவு செஞ்சு இந்த வயசுக்கு மேல அம்மா கிட்ட பேசாம அவங்களைக் கஷ்டப்படுத்தாதீங்க.. என்னை நிம்மதியா இருக்க விடுங்கப்பா”, என்றான்.

“இன்னும் மூணு பசங்க இருக்காங்கப்பா உங்களுக்கு, அண்ணியையும் சேர்த்து தான் சொல்றேன்.. நான் போனா அவங்க இல்லையா உங்களுக்கு… இப்படி செஞ்சு எல்லோர் சந்தோஷத்தையும் நீங்க கெடுக்கறீங்க..”,

“நான் பொறக்கறதுக்கு முன்னாடியும் நீங்க வயல்ல தான் இறங்கி வேலை செஞ்சீங்க! இப்போ ஏன் போறது இல்லை.. நான் செத்துப் போயிருந்தா என்ன செஞ்சிருபீங்க?”, என்று கத்த..    

பதறிவிட்டனர் பெற்றோர்கள்…

“ஏண்டா? ஏண்டா? இவ்வளவு கோபம், அம்மா கிட்ட தானே, நான் பேசறேன்! இவ்வளவு கோபம் வேண்டாம்…! வயலுக்கு தானே, நான் போறேன்! கோவப்படாத வா! முதல்ல நீ சாப்பிடு!”,  என்றார் நடராஜன்.

காலையில் இருந்து தாத்தாவிற்கு சாமி கும்பிடும் பொருட்டு வீட்டின் ஆண்மக்கள் யாரும் தொண்டையைத் தாண்டி தண்ணீர்க் கூட இறங்க விடவில்லை.

“கொஞ்சம் வயிறு சரியில்லை, எனக்கு மோர் மட்டும் குடுங்கம்மா, நீங்க சாப்பிடுங்கப்பா”, என்றான். அம்மா மோர் கொடுத்தும், “நான் வயல் வரை போயிட்டு வர்றேன்”, என்று சென்றான்.

உறவுகள் கிளம்பியிருப்பார்கள் என்று தோன்றிய நேரம் வீட்டிற்கு வந்தவன்…  “அங்க ஊர்ல எனக்கு கொஞ்சம் வேலைப்பா, நான் போயிட்டு முடிஞ்சா ராத்திரி வர்றேன், இல்லை நாளைக்கு வர்றேன்”, என்றான்.

“என்ன அப்படி வேலை இந்த சாயந்தர வேலையில…”,

“நான் என்ன சின்னப் பையனா? என்ன வேலைன்னு சொல்ல! எனக்கு வேலையிருக்கு அவ்வளவு தான்!”, என்று சொன்னவன்.. வாசு அந்த நேரம் வர, “என்னை பஸ் ஸ்டான்ட்ல இறக்கி விடு!”, என்று ஏறி அமர்ந்து கொண்டான். அவன் சென்ற நேரம் பஸ்சும் வந்து விட…

ஏறி அமர்ந்தான்.. பஸ் அவனின் ஊர் போய் அன்று விரைவாகச் சேர்ந்து விட்டது. அவன் வீடு இருந்த இடம்… ஒரு வயல் வரப்பின் ஆரம்பம்… அவனது ஒரு ஓட்டு வீடு…. பக்கத்தில் சில வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தள்ளித் தள்ளி..

அங்கிருந்து பார்த்தால் எங்கும் பசுமை அதன் கொண்டே தனிமையை விரும்பி அங்கே வீடு வாடகைக்கு எடுத்து இருந்தான். அந்தப் பசுமையைப் பார்த்தும் மனது சற்று சமன்பட்டது. மாலை ஆறு மணியாகியிருந்தது.  வீட்டைத் திறந்தவன்..

அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டான். மிகவும் சோர்வாக இருந்தது.. பசி வேறு காதை அடைத்தது.. அவனே சமைத்துக் கொள்வான் எப்போதும்… இப்போது எழவே பிடிக்கவில்லை….

எவ்வளவு நேரம் சென்றது என்றே தெரியவில்லை… பேச்சுக் குரல் வீட்டின் வெளியில் கேட்டது… “இங்கே யார் வருவர்”, என்று யோசிக்கும் போதே கதவு மெதுவாகத் தட்டப்பட..

“யாருங்க”, என்று படுத்தவாரே குரல் கொடுத்தான்.. அதன் பிறகு சத்தம் எதுவுமில்லை… “யாரது?”, என்று எழுந்து வெளியேப் பார்க்க…    அங்கு ஜெயஸ்ரீ அமர்ந்து இருந்தாள் படியில்.. சிறிது தூரத்தில் வஜ்ரவேல் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.

“வந்துவிட்டாளா?”, என்பதுப் போல ஒரு நிம்மதி, இவளை யார் இப்படி மனதில்லாமல் வரச் சொன்னது போன்ற ஒரு இறுமாப்பு…

சற்று தொலைவில் ஒரு கார் நின்று கொண்டிருக்க, அதில் வந்திருப்பர் என்று புரிந்தது.

“அவர் ஏன் போறார்?”, என்றான் ஜெயஸ்ரீயிடம்..

சிபியைத் திரும்பியும் பாராமல், “தெரியாது”, என்ற பாவனையில் ஜெயஸ்ரீத் தோளைக் குலுக்கினாள்.

“ப்ச்”, என்று அவளிடம் சலிப்புக் காட்டியவாறே.. சிபி விரைந்து இறங்கி வேகமாக எட்டுக்கள் வைத்து அவரை அடைந்தான். “மாமா”, என்று அழைக்கவும் திரும்பினார்.. “ஏன் உள்ள வராம போறீங்க…  வாங்க!”, என்றான்.

“இல்லை, இன்னைக்கு வேண்டாம்.. அவளை இங்க கூட்டிட்டு வர்றதுக்குள்ள எனக்கு ஒரு வழியாகிடுச்சு… அழுதுட்டே இருக்கா!  பேசமாடேங்கறா! நானே கொண்டு வந்து விடலாம்னாலும் வரமாடேங்கறா! கட்டாயப்படுத்தி அங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்… அதுக்குள்ள நீங்க இங்க கிளம்பிட்டீங்கன்னு சொன்னாங்க! அதான் இங்க நேரா கூட்டிட்டு வந்தேன்! என்னால அவளை இந்த கொஞ்ச நாளா சமாளிக்க முடியலை…”,

“எனக்கு அவ சந்தோஷம் தான் வேணும்! அவளைப் பார்த்துக்கோங்க! நான் அப்புறம் வர்றேன்!”, என்று சொல்லி நிற்காமல் நடக்க ஆரம்பித்தார்.

திரும்பவும் அவர் புறம் வேகமாக சென்றவன்.. “நம்புங்க என்னை! கண்டிப்பா அவளை சந்தோஷமா வெச்சிக்குவேன்… நீங்க வருத்தப்படாதீங்க”, என்றான்.   

“அந்த நம்பிக்கை இருக்கவும் தான் கொண்டு வந்து விட்டேன், இல்லைன்னா கண்டிப்பா கூட்டிட்டு வந்திருக்க மாட்டேன்..”, என்று ஆதரவாக சிபியின் தோளைத் தட்டி கொடுத்தவர்…

“பார்த்துக்கோங்க… இப்போ அவ இருக்குற மூட்க்கு ரொம்ப தொந்தரவு கொடுப்பா…”, என்று சொன்னார்.

சிபி புன்னகைக்க, அந்த புன்னகை அவரையும் தொற்றியது.

கார் வரை அவருடன் சென்றான்… கார் ஏறும் முன் அவனிடம் ஒரு பேகை நீட்டினார்… “அவ டிரஸ் கூட எடுத்துக்கலை, அவ அலமாரில இருந்ததை அப்படியே கொஞ்சம் இதுல எடுத்து வைச்சேன்”, என்று அவனிடம் கொடுத்தார்.

இருவரும் ஜெயஸ்ரீயைத் திரும்பிப் பார்க்க.. இவர்கள் பார்ப்பது தெரிந்ததும் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவசரமாக தலையை வேறு புறம் திருப்ப..

இருவருக்கும் அவள் தலையை திருப்பிய விதம் சிரிப்பை தான் கொடுத்தது… அவர் அங்கிருந்தே கை ஆட்டிச் சென்றார்.

அவர் சென்றவுடன் பேகை தூக்கிக் கொண்டு வீட்டின் புறம் சிபி நடக்க… ஜெயஸ்ரீ அவன் புறம் திரும்பவுமில்லை… அருகில் சென்று அமர்ந்தான், அப்போதும் அவன் புறம் திரும்பவில்லை.

“ரொம்ப சுயநலாவாதி ஆகிட்டேனா”, எனவும்.   

அதற்கு வெடுக்கென்று தலையைத் திருப்பியவள்… “ரொம்ம்ம்ம்ம்பபபப..”, என்பதைக் கண்களில் காட்டினாள், பேச முயலவில்லை.

“எவ்வளவு சுயநலாவதி ஆகிட்டேன் காட்டு!”, என்று சிபி சொல்ல… கைகளை அகலமாக விரித்து, இவ்வளவு என்பது போல காட்ட..

“அந்தக் கைக்குள்ள நான் வந்துடட்டுமா”, என்று சிபி கேட்கவும் அவனை விழியகற்றாமல் பார்த்தாள்.

 

Advertisement