Advertisement

அத்தியாயம் இருபத்தி ஐந்து:

சிபி, “சாரி!”, என்றதும்… “அதைப் பத்தி பேசவேண்டாம்! விட்டுடுவோம்!”, என்றவள்..

“நடந்து முடிஞ்சதை, நான் எப்பவுமே பிடிச்சு வைக்கறது இல்லை..”, என்றாள்.

இப்போது திக்குவது தெரியாமல், நிறுத்தி நிதானமாக பேசுவது போல வார்த்தைகள் பேசினாள். அதாவது வார்த்தைகள் வராமல் திக்குவது அவளுக்கு தெரியும். ஆனால் எதிரில் இருப்பவர் ஏதோ மொழிதெரியாமல் புதிதாக பேசுவது போலவோ அல்ல நிறுத்தி நிதானமாக ஸ்டைலாக பேசுவது போலவோ தோன்றும்.

சிபி ஆச்சர்யமாகப் பார்க்க… “இந்த ரெண்டு வருஷமா ப்ராக்டிஸ் பண்ணினேன் ஒரு ஸ்பீச் தெரபிஸ்ட் கிட்ட… ரொம்ப ஸ்ட்ரெஸ்ல, அவசரத்துல, எமோஷனல்லா இருக்கும் போது வர்றதில்லை. ஆனா மனசு அமைதியா இருக்கும் போது வருது”.   

“இதுக்கு தான் சொன்னேன்! நீ நல்லா பேசற! உன்னோட பாசிடிவ் ஆட்டிடியூட்… அது ரொம்ப அழகு! நீ சிரிக்கும் போது இன்னும் அழகு…!”, என்று அவன் சொல்ல…

“பொண்ணுங்க சிரிக்கறதை விட, அவங்க சிரிப்பு வாடாம பார்த்துக்குற ஆண்கள் இன்னும் அழகு”, என்று ஜெயஸ்ரீ சொல்லவும், தன்னை சாடுகிறாளோ என்று ஸ்தம்பித்து பார்க்க…

“ஐயோ! நோ ஹார்ட் பீலிங்க்ஸ்… பேஸ் புக்ல படிச்சேன்! ரொம்ப பிடிச்சது..!”, என்றாள் நெருங்கி அமர்ந்து…

அவளைப் பார்த்து சிரித்தவன்… “இந்த மாதிரி எல்லா விஷயத்தையும் ஈசியா எடுத்துக்குற மனப்பக்குவம் இருந்திருந்தா…”, என்று இழுத்தவன்.. “ப்ச், பேசிப் பிரயோஜனமில்லை, என்கிட்டே அது கொஞ்சம் கம்மி! அதான் நிறைய பிரச்சனையை இழுத்து விட்டுகிடேன்..”,

“பழசை விட்டுடுடுவோம்!”, என்றாள் கண்டிப்பான குரலில் நிறுத்தி நிதானமாக திக்குவது தெரியாமல்…

இப்போது அவன் நெருங்கி அமர்ந்து கொண்டான்… “ஆனா, உங்க அப்பா!”, என்று தயங்கிப் பேச..

“அவர் கிட்ட நான் பேசிக்கறேன்….”, என்றாள் ஸ்திரமாக..

“இல்லை, நான் பேசினா தானே உனக்கு மரியாதை…”,

“உங்களுக்குப் பேசத் தெரியலை! வேண்டாம்!”,

“எனக்குப் பேசத் தெரியலையா?”,

“பின்ன?”, என்று சிரித்தாள்… “ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் தெரியவேயில்லை! இதுல பிரேக் த ரூல்ஸா ஹா ஹா”, என்று மீண்டும் சிரித்தாள்..

“மனைவிக் கிட்ட இப்படி தான் நடந்துக்கணும்! அது தான் ரூல்ஸ்! அதுவே தெரியலை! என்ன சொல்ல?”, என்று மீண்டும் சிரிக்க..

அவளுடைய மகிழ்ச்சி அவனையும் தொற்றியது. பின்பு சிறிது நேரம் எதுவும் பேசாமல் ஒருவரின் அருகாமையில் அடுத்தவர், அந்த க்ஷணத்தை அனுபவித்து அமர்ந்து இருந்தனர். பேச்சற்ற மௌனமான கணங்கள்… பேச முயலவில்லை… அருகில் நெருங்கி அமர்ந்து இருந்தாலும் தொட முயலவில்லை… மனதின் அலைப்புருதல்கள் எல்லாம் அடங்கி ஒரு அமைதி…        

சில நிமிடங்கள் கடந்த பின், “என்ன நேரம்?”, என்றான்…. பன்னிரெண்டு தான் ஆகியது…. “எனக்கு நாளைக்கு காலையில அங்க இருக்கணும் ஸ்ரீ, இங்க இருந்து பஸ் எத்தனை மணிக்கு?”, என்றான்.

“அஞ்சு மணிக்கு.. அதுவரைக்கும் கிடையாது….”, 

“ஓஹ்…”, என்று அவன் இழுக்க..

“ரொம்ப நேரம் வேலை செஞ்சிருக்கீங்க! படுத்திருங்க கொஞ்ச நேரம்..”,

சிபிக்கும் அசதியாக இருந்தது…. வயலில் வெகு நேரம் வேலை செய்தது… ஆனால் எங்கே படுப்பது என்பதுப் போல ஜெயஸ்ரீயைப் பார்க்க…

“தோ அங்கே!”, என்று காட்டினாள்… அங்கே ஒரு கயிற்றுக் கட்டில் இருந்தது… “அப்பா, மதியம் இங்கே தான் படுப்பார்.. தூங்குங்க!”,

“சரி, நீ வீட்டுக்குப் போ! நான் தூங்கி எழுந்து போயிடறேன்!”, என்று எழுந்தான் அவளைக் கொண்டு போய் விட….

மனதேயில்லாமல் மீண்டும் எழுந்தாள் ஜெயஸ்ரீ… எழுந்தவளைத் தூக்க முற்படவும், “வேண்டாம்! வலிக்கப் போகுது….!”,

“அதெல்லாம் வலிக்காது… அப்படியே வலிச்சாலும் பரவாயில்லை! இந்த வலி எனக்குப் பிடிச்சிருக்கு”, என்று தூக்கி வீட்டின் அருகில் கொண்டு சென்று விட்டான்.

அவள் உள்ளே போகும்வரை நின்றிருந்து…. திரும்ப வந்து, அந்தக் கட்டிலில் படுத்தவன் தான் உறங்கி விட்டான்.

அதிகாலை ஜெயஸ்ரீ அவனை உலுக்கி எழுப்பவும் தான் எழுந்தான்… மணி நான்கரை… “சீக்கிரம் போகணும்னு சொன்னீங்க?”, என்றபடி…

“ம், ஆமாம்!”, என்று நேரம் பார்த்தபடி வேகமாக எழுந்தான்… “ஹப்பா, எழுப்பி விட்டுட்ட.. இல்லை.. எழுந்தே இருக்க மாட்டேன், நேரமாகியிருக்கும்”.

“அங்க டீ இருக்கு”, என்று வீட்டின் படியைக் காட்டினாள்.. “நீங்க குடிக்க மாட்டீங்க.. ஆனா வேற என்ன செய்யறதுன்னு தெரியலை”, என்றாள், அவன் குடிப்பானோ மாட்டானோ என்பது போல…

“எப்பவாவது குடிப்பேன்!”, என்று சொன்னவன், “வா!”, என்று அவளை மீண்டும் தூக்கி வந்து வேகமாக அதைக் குடித்தான்..  “என்ன இது எப்போ பார்த்தாலும் தூக்குவாங்களா?”, என்று அவள் கிண்டல் செய்ய… “நம்ம குழந்தை வர்ற வரைக்கும் நீ தான் முதல்ல…”, என்று சிபி சொல்ல..

“வரும் போது பார்க்கலாம்”, என்றாள் மீண்டும் கிண்டலாக…   

“எப்போ வரவைக்கலாம்?”, என்று சிபி கேட்க..   

பதில் சொல்லாமல் ஜெயஸ்ரீ பார்த்த பார்வை, “இதெல்லாம் கேட்பாங்களா”, என்று கிண்டல் செய்ய… 

சிபியும் திரும்பப் பேசாமல் பார்வை தான் பார்த்தான்.. ஆனால் அதில் பதிலுக்கு கிண்டல் இல்லை, அது சொல்லாமல் சொல்லியது.. “இப்போதைக்குக் கேட்கத்தானே முடியும், நான் அந்த மாதிரியான வேலைகளைத் தானே செய்து வைத்திருக்கிறேன்”, என்பது போல.  

சட்டென்று லகுவான அந்தக் க்ஷணம், கணமாய் மாறியது.   

திடீரென்று ஞாபகம் வந்தவனாக, “அச்சோ டைம் ஆகிடுச்சா”, என்ற பதட்டத்தோடு, அவசரமாக நேரம் பார்த்தான். “இன்னும் டைம் இருக்கு பஸ்க்கு”, என்று அவனை ஆசுவாசப்படுத்தி…. “ஏன் இவ்வளவு காலையிலயே போகணும்? என்ன வேலை?”, என்று கேட்க…

தானாக, “ரீடிங் எடுக்கணும்”, என்று சொல்லிவிட்டவன், “அச்சோ! உளறி விட்டேனா!”, என்பது போல பார்க்க..

“என்ன ரீடிங்?”, என்றாள் புரியாமல்….

“செல் போன் டவர்ல”, என்று அவன் சொல்லவும்…

“டவர்லன்னா…?”,

“மேல ஏறி எடுக்கணும்”, என்றான்.

“என்ன?”, என்று அதிர்ந்தாள், “ஏன்? ஏன் எடுக்கணும்…? எதுக்கு எடுக்கணும்”, என்று ஜெயஸ்ரீ கேள்விகளை அடுக்க…  

“பேங்க் வேலையோட அந்த வேலையும் செய்யறேன்… அதுக்கு பன்னிரெண்டாயிரம் சம்பளம், காலையில ஒரு தடவை எடுக்கணும், சாயந்தரம் ஒரு தடவை எடுக்கணும், அவ்வளவு தான் வேலை”, என்றான்.

“அதான் பேங்க் வேலை இருக்கில்ல, எதுக்கு அந்த வேலை ரிஸ்க் எடுத்து…”, என்று சொல்லும் போதே கண்முன் ஊரில் அவள் பார்த்த உயரமான செல்போன் டவர் வந்துப் போக…. பயத்தோடு பார்த்தாள்.

“ப்ச், ஒன்னும் பயமில்லை! நான் ஏறிடுவேன்! இப்போ ரெண்டு வருஷமா இங்க இருந்து போன நாள்ல இருந்து அந்த வேலையை செய்யறேன்.. அதுதானே எனக்கு வருமானம் முன்ன…”,

“சரி, ஓகே! இப்போ வேற வேலையிருக்கு தானே! விட்டுடுங்க..!”,

“சரி!”, என்று உடனே ஒத்துக் கொண்டான்…. “ஆனா கொஞ்ச நாள் போகட்டும்.. பயப்படாத.. ரொம்ப ஈசியா ஏறுவேன்…”,

“என்ன அவசியம்? தேவையில்லை! உடனே விடுங்க!”, என்றவளிடம்…

“ப்ச்! ஸ்ரீ….. கவனமா இருப்பேன், பயமில்லை… எனக்குப் பணம் வேணும்… அதுல வர்ற பணத்துல தான் மரக் கன்றுகள் வாங்கறேன்… சில பசங்களுக்கு உதவி செய்யறேன்… அவங்க ஆர்வமா என்னோட துணை நிக்கறாங்க… இந்த ரெண்டு வருஷமா யாருமில்லாத என்னோட தனிமையில என்னை உயிர்ப்போட வெச்சது இந்த வேலை தான்…”,

“மரக்கன்றுகள் நடறேன்… இதுவரைக்கும் மூணு லட்சம் மரக்கன்றுகள் நட்டிருக்கேன்.. ஸ்கூல் பசங்க துணையோட… என்னால முடிஞ்சதை என்னோட இயற்கைக்கு நான் செய்யறேன்…”,

“முகத்துக்கு நேரா பலர் புகழ்ந்தாலும், பின்னாடி பைத்தியக்காரன் இவனுக்கு வேலையில்லைன்னு நம்ம வேலையும் கெடுக்கறான்னு தான் சொல்லுவாங்க… யாரும் அவ்வளவாக் கூட நிற்க மாட்டாங்க…. கண்டிப்பா உதவிகள் கிடைக்கும், ஆனா தொடர்ந்து கிடைக்காது. என்னை இவ்வளவு நாள் தளர விடாம தொடர்ந்து வழி நடத்தி செல்லறது இதுதான்”.

“இல்லைன்னா என் நிலத்தை விட்டு பிரிஞ்சதுக்கு எனக்கு பைத்தியமே பிடிச்சிருக்கும்! நான் என்னோட வேலையை அவ்வளவு நேசிச்சேன்! ஏன் சுவாசிச்சேன் கூட”, என்றான் உணர்வுபூர்வமாக…

“என்னோட வாழ்க்கைக் கோட்பாடுகள் பலருக்கு முட்டாள் தனமா தோணும்…”, 

கூடவே ஒரு பயம், இவ்வளவு பேசுகிறேனே, என்னை நினைத்தாயா என்று ஜெயஸ்ரீ கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ன சொல்வது என்பது போல..

உண்மையில் அவன் யாரைப் பற்றியும் அதிகம் நினைக்கவில்லை… இந்த வேலைகளில் முழு மூச்சாக இறங்கியிருந்தான்… திரும்பிப் பார்க்கவேயில்லை.. பார்த்தால் அவன் குடும்பத்தை விட்டு மனைவியை விட்டு வந்த செயல் அவனை கோழை என்று சொல்லாமல் சொன்னது… மிகுந்த மனப்போராட்டங்கள் அவனுக்குள், யாரிடமும் காட்டவில்லை… காட்டவும் மாட்டான், அது ஜெயஸ்ரீ ஆகிணும் கூட… 

இப்போது ஜெயஸ்ரீயைப் பார்த்த பிறகு.. குடும்பத்தைப் பார்த்த பிறகு அவனுடைய நிலத்தைப் பார்த்த பிறகு அதிக போராட்டங்கள் இல்லை.. சந்தோஷமாகவும் கூட இருந்தான்… ஆனாலும் விட்டுப் போனதை யாரும் கேவலமாக பேசுவார்களோ என்ற பயம் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. ஜெயஸ்ரீ கூட நிற்பது வெகுவான ஒரு மன தைரியத்தைக் கொடுத்தது.         

ஆனால் அவனின் பயத்திற்கு அவசியமில்லாமல், அவள் என்னைப் பற்றி நினைத்தாயா என்று கேட்கவேயில்லை..

“கிளம்புங்க டைம் ஆச்சு! இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு! நீங்க நடக்கச் சரியா இருக்கும்!”, என்றாள்.

பிறகு பேச நேரமில்லை… சிபி விரைந்து விட்டான்.

காலையில் ஜெயஸ்ரீ கிளம்பாமல் அமர்ந்திருக்க, “இன்னைக்குக் கிளாஸ் போகலையா கண்ணு, உடம்பு எப்படி இருக்கு… சரியாத் தூங்கலையா முகம் வாடிக்கிடக்கு”, என்றார் வஜ்ரவேல்…

“அதுப்பா யோசிச்சிட்டு இருந்தேன்!”, என்றாள் ஆர்வமான குரலில்.

“என்ன கண்ணு அப்படி யோசிச்ச?”, என்றார் வஜ்ரவேல் அவளின் பாவனையில் ஈர்க்கப்பட்டு…

“அதுப்பா டைவர்ஸ் குடுத்துடட்டுமா”, என்றாள்.

இதுவரை அதைப் பற்றி ஒரு வார்த்தைக் கூடப் பேசாதவள், இப்போது அதைப்பற்றி பேசவும், ஆச்சர்யமாகப் பார்த்தார்.. அதுவும் அந்த குரலில் ஒரு குதுகலம் இருந்ததோ?

“நீ என்ன கண்ணு சொல்ற?”,

“நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படிப்பா…”,

“டைவர்ஸ் கொடுத்துடலாம் கண்ணு”,

“கொடுத்துடலாம்! ஆனா நீங்க அப்படியே விட மாட்டீங்க! இன்னொரு கல்யாணம் பண்ணச் சொல்வீங்க…”,

“ஆமா கண்ணு! அப்படியே உன்னை எப்படி விட முடியும்!”,

“ஆனா உங்களுக்கு ரெண்டு செலவுப்பா, கல்யாண அலைச்சல் எல்லாம்… உங்களுக்கு தான் சிரமம்!”,

“எனக்கு ஒரு சிரமும் இல்லை கண்ணு… இதென்ன ஒரு செலவு… உன் வாழ்க்கைத் தான் எனக்கு முக்கியம்.

“அப்பா வீண் செலவுப்பா”,

“என்ன வீண் செலவு”,

“ஒரே மாப்பிள்ளைக்கு ரெண்டு கல்யாண செலவு, வீண்தானே!”, என்றாள் கொஞ்சியபடி..

பதில் சொல்ல வந்தவர், அவள் சொல்லிய அர்த்தம், சொல்லிய விதம் பார்த்து அசந்து, தானாக புன்னகை மலர்ந்தது.

இப்படி உற்சாகமாக ஜெயஸ்ரீ பேசியே வருடங்கள் ஆகியிருந்தன… அது மனதிற்கு அவருக்கு அத்துணை சந்தோஷத்தைக் கொடுத்த போதும்… “ஆனா கண்ணு, அவன் உன்னை விட்டுட்டுப் போயிட்டான்! திரும்ப எனக்கு அவனோட அனுப்ப மனசில்லை…”,

“அப்பா! முன்னாடியே சொல்லியிருக்கேன்! இப்பவும் சொல்றேன்! மரியாதையில்லாம அவரைப் பேசாதீங்க”, என்றாள் மிகவும் ஸ்ட்ரிக்டான த்வனியில்… வார்த்தைகள் தான் திக்கின, வாக்கியங்கள் தெளிவாக வந்தன.

“கண்ணு அவனை….”, என்று ஆரம்பித்தவர், ஜெயஸ்ரீயின் பார்வையில், “அவரை நம்ப முடியாது கண்ணு”, என்றார்.

“இருக்கட்டும் பா! எனக்கு அவரை பிடிச்சிருக்கு… நானா அவரை கல்யாணம் செஞ்சுக்கலை! நீங்க தான் செஞ்சு வெச்சீங்க… நடுவுல அவர் தான் என்னை விட்டுப் போனார்! நான் எப்பவும் விடலை… இனிமேயும் விட மாட்டேன்…”,

“நீங்க அவரோட என்னை அனுப்பறதும் அனுப்பாததும் உங்க முடிவு! அதை நான் மீற மாட்டேன்… ஆனா இந்த ஜென்மத்துக்கு அவர் மட்டும் தான்பா என் வாழ்க்கை துணை..”, என்று திக்கி திக்கி பேசினாலும் வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்து, இதிலிருந்து நான் மாற மாட்டேன் என்பது  முடித்து விட்டாள்.

இனி திரும்ப அதைப் பற்றி பேசமாட்டாள் என்று வஜ்ரவேலிற்கு தெரியும்… ஆனாலும் சொன்னார்… “எனக்கு உன்னை அவங்க வீட்டுக்கு அனுப்ப முடியாதுடா…”, என்று.

“நான் தான் சொன்னனேப்பா, உங்க விருப்பம்… கண்டிப்பா உங்களை மீற மாட்டேன்”,

“நீங்க சாப்பிடுங்க பா! எனக்குத் தூக்கம் வருது! நான் தூங்கி எழுந்து சாப்பிடறேன்!”, என்று சொல்லி அறைக்குப் போக முற்பட்டாள்… அதுவரை அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும் அவளின் முடிவை என்ற எண்ணமே.. முடித்ததும் அவன் செல் போன் டவர் மேல் ஏறுவது ஞாபகம் வர சற்று பதட்டம் ஆகியது. அதில் முகம் வாட..  

“அக்கா! கிளாஸ் வரலையா?”, என்று பத்மினி வந்து நின்றாள்…

“வரலை, நீ போ!”, என்பது போல சைகை செய்தாள். பத்மினி பேச வர… “காய்ச்சல்!”, என்று சைகை காட்டவும்…

“அக்கா என் மேல கோபமா?”, என்றாள் பயந்து பயந்து பத்மினி.

“இல்லை!”, என்று அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, “தேங்க்ஸ்!”, என்ற வார்த்தையை உதிர்க்க…

பத்மினியின் முகம் பளிச்சென்று மலர்ந்தது. “அப்போ நிஜம்மா ட்ரீட் டா…?”,

“நிஜம்மா…. ட்ரீட்…”,

“எப்போ போ போ போ”,

“என்ன இது?”, என்பது போல ஜெயஸ்ரீ சைகை செய்ய,

“இது எக்கோ கா! எத்தனை எக்கோ கேட்குதோ! அத்தனை ட்ரீட்!”, என்று பத்மினி சிரிக்க…

“இது நல்லாயிருக்கே!”, என்பது போல ஒரு பாவனையை காட்டி, ஜெயஸ்ரீயும் கலகல வென சத்தமாக சிரிக்க…

சிரிப்பது ஜெயஸ்ரீ தானா என்று எட்டிப் பார்த்தார் வஜ்ரவேல்… என்னவோ பொலிவிழந்து இருந்த அவர்களின் வாழ்க்கை ஒரே நாளில் மாறிவிட்டது போல ஒரு தோற்றம்… ஜெயஸ்ரீயின் பேச்சு மற்றும் சிரிப்பு கொடுத்த எண்ணமிது..

எப்போதும் அவளுக்கு தேவையானதைக் கூட எனக்கொன்றுமில்லை உங்களுக்கு தான் லாபம் என்பது போல பேசுவாள் சிறுவயதில் இருந்து, மிகுந்த தன்னம்பிக்கையான பேச்சு… பேச்சு மட்டும் திக்கி வராமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் இன்னும் உயரத்தில் வந்திருப்பாள் என்று எப்போதும் தோன்றும்.

பேச்சு திக்குவதால், அவளின் ப்ளஸ்கள் யாருக்கும் அவ்வளவு விரைவில் எட்டாது. 

 சில வருடமாக மறைந்திருந்த அது, இப்போது அவளிடத்தில் காணவும்… அவருக்கும் அப்படி ஒரு சந்தோசம்…

பத்மினி போனதும் மீண்டும் சிபியின் எண்ணம் தலை தூக்க, முகம் வாடியது… அவளையே கவனித்துக் கொண்டிருந்த வஜ்ரவேலிற்கு நன்கு தெரிய…  “என்ன கண்ணு?”, எனவும்…

“அவர் தினமும் செல் போன் டவர்ல ஏறி ரீடிங் எடுக்கறாராம், ஒருவேளை கீழ விழுந்துட்டா”, என்று சொல்லும் போது, ஜெயஸ்ரீயின் முகத்தில் தெரிந்த கலக்கம்… கலங்கிய கண்கள்… சிபியைத் தூக்கி வந்தாவது அவளின் முன் நிறுத்தி முகத்தில் அந்த கலகத்தை துடைக்கத் தோன்றியது.

“ஒன்னும் ஆகாதும்மா! மாப்பிள்ளை நல்ல திடமா வலிமையா தான் இருக்கார். பயிற்சி இல்லாம இருக்க மாட்டார். விடு!”, என்று அவளைத் தேற்றினார்.

“நீங்க எப்போ பார்த்தீங்க.. நீங்க தான் அவரை பார்க்கவேயில்லையே”, என்றாள், சிபி வீட்டிற்கு அவளைப் பார்த்த மாலையே வந்தது ஞாபகமில்லாமல்.

“அதான் மூணு நாள் முன்னாடி வீட்டுக்கு வந்தாரே!”,

“ஆமாமில்லை..”, என்று சொல்லிக் கொண்ட போதும், சமாதானம் ஆகவில்லை… அதில் அவர் மாப்பிள்ளை என்று சொல்லியதையும் கவனிக்கவில்லை…

“விடு, வேற வேலைப் பார்க்க சொல்லலாம்!”,

“வேற வேலை இருக்கு, பேங்க் வேலை… ஆனா இதையும் செய்யறார்..”,

“ஏன்”,

“ஏதோ மரம் வெக்கிறாராம்…”, என்று சலிப்பாகச் சொல்ல…

“ஏன்மா நல்லது தானே செய்யறார் நல்ல விஷயம் மா…”,

“ஆனா இந்த வேலை வேண்டாம்பா.. அவருக்கு ஏதாவது ஆகிட்டா”,

“நீ சொல்லும்மா வேண்டாம்னு..”,

“சொன்னேன்… அப்புறம் பார்க்கலாம்ன்னு சொல்றார்”, என்று சொல்லும் போது பெண்ணின் முகத்தில் தெரிந்த கவலை…

இப்போதுதானே பழைய ஜெயஸ்ரீ திருப்புகிறாள் என்று நினைத்தோம் மீண்டும் கவலையா என்று அவருக்குக் கவலையாகிப் போனது.

“நீ முதல்ல தூங்கி எழுந்துரு! அவருக்கு ஒன்னும் ஆகாது!”, என்று சமாதானம் செய்து அவளை உறங்க அனுப்ப முற்பட்டார்.

“இதென்னடா நம்ம வேண்டாம்னு சொல்றது போய், நம்மளே சேர்த்து வெச்சிடுவோம் போல இருக்கே”, என்று தோன்றியது.  அடுத்து ஜெயஸ்ரீ சொன்ன வாக்கியம்… சிபியை எப்படியும் அவளோடு வாழ வைக்க வேண்டும் என்று அவரை உடனடியாக முடிவெடுக்க வைத்தது.

போ கண்ணு போய் தூங்கு என்றார்.

மெதுவாக சுவரைப் பிடித்து ரூமின் வாயில் அவரை சென்றவள் திரும்பி அவரைப் பார்த்து… “அப்பா! அம்மா போனதுக்கு அப்புறம் உங்களுக்காவது நான் இருந்தேன்! எனக்கு யாருமேயில்லைப்பா!”, என்று சொல்ல…  வஜ்ரவேல் அப்படியே நின்று விட்டார்.

இது அப்போது சொல்லும் வார்த்தையில்லை.. பல நாட்களாக ஜெயஸ்ரீ அவளின் மனதில் அசை போட்டிருப்பாள் என்று அவள் சொன்ன விதத்திலேயே புரிந்தது. அதுவும் இப்போது அவன் மேலே ஏறுகிறான் என்று தெரிந்த பிறகு வெகுவாக கலங்கியிருக்கிறாள் என்று புரிந்தது.  

மகளின் முன் கண்கள் கலங்கி விடாமல் இருக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

மகளிடம் விரைந்தவர்… “அப்படி எல்லாம் எதுவும் நடக்காது! அப்பா இருக்கேனில்லை.. அப்படி எல்லாம் விடமாட்டேன்! போய் தூங்கு கண்ணு”, என்று அவளை அனுப்பி, அவள் உறங்கிவிட்டாளா என்று பார்த்தப் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். மனம் மிகவும் கணத்துப் போனது.

Advertisement