Advertisement

அத்தியாயம் இருபத்தி நான்கு:

அன்று இரவு வரையிலும் அந்த வயல் வரப்பில் இருந்தான்.. “ஏன்பா இப்படி விட்டீங்க”, என்று அவரிடம் சண்டையிட்டான்… இப்படிப் பலப் பல… பிறகு அது என்ன பருவகாலம் என்பதைப் பார்த்து, அதில் என்ன பயிரிடலாம் என்று விவாதித்தான்… பின்பு தேக்கு மரங்களைப் பார்வையிட்டான், அதை சீர் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.

அதற்கும் என்ன செய்வது என்று முடிவு செய்து, அப்பாவிடம் இன்னம் இரண்டொரு நாளில் அதை ஆரம்பிக்கலாம் என்று சொல்லி வைத்தான்.

அப்பா, அருள் மொழி, மாமல்ல வர்மன் என்று யாரும் அவனின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசவில்லை, என்ன சொன்னாலும் தலையாட்டினர். முன்பும் அப்படிதான்.. இப்போது இன்னும் அதிகம்.   

திரும்ப வீடு வந்தார்கள்.. மணிமேகலை எங்கே என்பதுப் போலத் தேட… வீட்டில் ஹாலில் விளையாடிக் கொண்டிருந்தவள், இவனைப் பார்த்ததும் ஓடி அன்னையின் பின் மறைந்தாள்.

வளர்ந்துவிட்டாள் என்று குழந்தையைப் பற்றி நினைத்துக் கொண்டே அண்ணியைப் பார்க்க.. இதென்ன என்று தான் தோன்றியது… அப்படி வயதானது போல ஒரு தோற்றம்… உடையா, தோற்றத்தில் அக்கறை இல்லாத தன்மையா, தெரியவில்லை. வீட்டில் இருந்தாலும் எப்போதும் பளிச்சென்று நேர்த்தியாய் உடையணிந்து, தலைசற்றும் கலையாமல் இருக்கும் பெண். இப்போது பார்ப்பதற்கே பரிதாபமாய்…   

இவனைப் பார்த்து சிரிப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே பார்த்தாள். “ஐயோ! என்ன அண்ணி இது! இப்படி இருக்கீங்க!”, என்று வார்த்தைகள் அவனையறியாமல் வந்தது.

தன்னிடம் தான் பேசினானா என்று விழியகற்றாமல் பார்த்தாள். “என்ன அண்ணி என்கிட்டே பேசமாட்டீங்களா?”, என்றான்.

“உனக்கு என் மேல கோபம் இல்லையா?”, என்று கேட்கும் போதே கண்கள் கலங்கியது.

“உங்க மேல எதுக்கண்ணி கோபம்?”,

“என்னால தான் நீ வீட்டை விட்டு போயிட்டன்னு எல்லோரும் திட்டுறாங்க…”, 

“ச்சே! ச்சே! என்ன அண்ணி நீங்க? யாரு சொன்னா… மேகி பாப்பா இங்க வாங்க”, என்று அம்மாவின் புடவையை பிடித்து நின்ற மணிமேகலையை தூக்கினான்… அது சற்று மிரண்டு பார்க்கவும்… “சித்தப்பாடா! மறந்துட்டியா, என்னை!”, என்று கேட்க… குழந்தை என்ன சொல்ல என்று தெரியாமல் விழித்தது.

வனிதா கண்கள் கலங்கியபடி நிற்கவும்.. “யாரு சொன்னா உங்களை அப்படி”, என்று மீண்டும் சிபி கேட்க….

“எல்லோரும் அப்படித் தான் சொல்றாங்க”, என்று தேம்ப…

“ஐயோ! அண்ணி அழாதீங்க!”, என்றான்.

ஆனாலும் வனிதா தேம்பித் தேம்பி முகத்தை மூடிக் கொண்டு அழ… அம்மா அழுவதைப் பார்த்த குழந்தையும் அழ.. இந்த அருள் மொழி எங்கே என்பது போல பார்க்க.. அவன் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றான்.

“டேய்! அருள் என்னடா பண்ற? அண்ணி அழறாங்க! சமாதானப்படுத்த மாட்டியா… என்னவோ எல்லாமே மொத்தமா தப்பா போச்சு! அதுக்கு யார் என்ன செய்ய முடியும்..”, என்று எப்போதும் போல அதட்ட.. அப்போதும் அசையாமல் தான் நின்றான்.

சிபிக்கு கண்மண் தெரியாத கோபம் பொங்கியது, என்ன எல்லோரும் இப்படி இருக்கிறார்கள் என்பது போல….

யாரும் யாருக்கும் பரிந்து கொண்டு வரவில்லை… யாரும் யாருடனும் பேசவுமில்லை. ஆளுக்கு ஒரு பக்கம் தான் நின்றனர். என்ன பேசுவதென்று சிபிக்கும் தெரியவில்லை.

“அண்ணி அழாதீங்க! நீங்க காரணமில்லை! யார் சொன்னாலும் நம்பாதீங்க சரியா… எனக்கு எப்படி சூழ்நிலையைக் கையாள்றதுன்னு தெரியாம இருந்திருக்கலாம்.. இனி பேசி பிரயோஜனமில்லை.. இப்படி அழாதீங்க எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு..”,

“இவனுங்க ரெண்டு பேரும் எனக்கு எப்படியோ அப்படிதான் நீங்களும்!”, என்று அருளையும் வர்மனையும் காட்டியவன்.. “நீங்களும் என்னோட தானே அண்ணி வளர்ந்தீங்க.. நான் வீட்டை விட்டுப் போகணும்னு நீங்க எப்பவும் நினைச்சு இருக்க மாட்டீங்க! விடுங்க அழாதீங்க!”, என்று வெகுவாக சமாதனம் செய்தான்.

பின்னர், “அம்மா நேரமாகுது! எனக்கு சாப்பாடு போடுங்க!”, என்று சொல்லவும், வீடே மீண்டும் அவனை என்ன போகிறாயா என்பது போல பார்த்தது.

“அங்க எனக்கு வேலை இருக்கும்மா… திடீர்ன்னு விட முடியாது! என்னன்னு சொல்றேன்… இப்போ நான் போகணும்..!”,

“காலையில போ!”, என்றனர்…

“இல்லைம்மா என்னால காலையில எழுந்து போக முடியாது…. என் கால் என்னை வயலுக்கு தான் கொண்டு போகும்…”,

“அப்போ நீ இங்க வரமாட்டியா”,

“இல்லம்மா கண்டிப்பா வருவேன்! ஆனா உடனே முடியாது! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வர்றேன்!”, என்று கிளம்பவும், நடராஜன் அவனிடம் அவன் மாமனார் அனுப்பிய விவாகரத்து வக்கீல் நோட்டீசை கொடுக்க…

அதை வாங்கிப் பார்த்தவன்…. “தூக்கிப் போடுங்கப்பா! நான் டைவர்ஸ் எல்லாம் கொடுக்க மாட்டேன்! என்ன பண்றாங்கன்னு பார்போம்!”, என்றான். ஜெயஸ்ரீயின் முகம் கண் முன் வந்தது.

அவன் டைவர்ஸ் கொடுக்க மாட்டேன் என்று சொன்னது ஏதோ ஒரு வகையில் வீட்டினருக்கு வெகு திருப்தி, நம்மால் இவர்கள் பிரிந்து விடவில்லை என்பது போல.. 

“நம்ம வேணாப் போய் கூப்பிடலாம்!”, என்றார் நடராஜன்.

அவன் சென்று அழைத்ததை சொல்லவில்லை… “பார்த்துக்கலாம் பா..!”, என்று கிளம்பினான்.   

படி இறங்கும் போதே ஜெயஸ்ரீயின் ஞாபகம் தான்… வர்மன் வண்டியை எடுத்து நிற்கவும், அவனை பஸ் ஏற்றிவிட… “நீ போடா அருள் வரட்டும்!”, என்றான்.

வர்மனின் முகம் சுருங்கி விட… “எனக்கு அவன் கூட பேசணும்டா! வேற ஒன்னுமில்லை!”, என்று அவனை சாமாதானம் செய்து கிளம்பியவன்…

அருள் பின் உட்கார்ந்து வண்டி சிறிது நகர்ந்ததுமே… அவனை திட்ட ஆரம்பித்தவன் தான், பஸ் ஸ்டாப் வரும் வரை நிறுத்தவில்லை. “ஏண்டா அண்ணி அழறாங்க! நீ சமாதானம் செய்யவேயில்லை.. என்ன பழக்கம் டா இது! அடுத்தவங்க முன்னாடி நீ இப்படித்தான் செய்வியா! அப்போ நீ தான் அவங்களைத் திட்டிட்டே இருக்கியா…”,

“அவங்க பொறந்ததுல இருந்து உனக்கு அவங்களை தெரியும்… பட படன்னு யோசிக்காம பேசுவாங்க! அவ்வளவு தான்! ஆனா கெட்ட மனசு இல்லைடா.. நம்மளை விட்டா அவங்களுக்கு யாரும் கிடையாது.. என்னதான் நம்ம வீட்ல குறையில்லாம வளர்ந்தாலும் அப்பா இல்லாம வளர்ந்தவங்க மனசு கஷ்டப்பட விடாத…”,

“தப்பு பண்ணாதவங்க யாரு… அவங்க தப்பே செஞ்சிருந்தாலும் கூட நிற்கணும்டா. என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்குற அவங்களை.. என்னை விட அவங்க தான் உனக்கு முக்கியம்! தயவு செஞ்சு அவங்களை நல்லா பார்த்துக்கோ!”, என்று அவனின் காது தீயும் அளவிற்குத் திட்டி இறங்கினான்.

“அடுத்த முறை நான் அவங்களைப் பார்க்கும் போது அவங்க முகத்துல சந்தோசம் தான் தெரியணும்…”,

“அடுத்த முறைன்னா?”, என்று அருள்மொழி கேட்க…

“ம்ம்ம்ம்! நாளைக்கு டா!”, என்று அவனை கடித்து விட்டு கிளம்பினான்.

“ஒரு நாள்ல எப்படி முடியும்…?”,

“குடும்பம் நடத்தி ஒரு குழந்தைக் கூட பெத்திருக்க… இப்படி முழிக்கற.. என்னை மாதிரி கட்டிக்கிட்டவளோட மனசு புரியாம சுத்த வேஸ்ட்ன்னு நீயும் ப்ரூவ் பண்ணாத போடா”, என்றான் சிரிப்போடு.

திட்டுகிறான்! சிரிக்கிறான்! அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் அருள் மொழி, “என்ன சொல்ற?”, என்று புரியாத பாவனையில் கேட்க…

“என்னை நானே திட்டிக்கறேன்! இது உனக்கு புரியாது! போடா!”, என்றான் லகுவாகவே.

“என்னவோ நீ பேசறதே புரியலை!”, என்று பாவமாக அருள் மொழி சொல்ல… 

“புரிஞ்சிக்கவே வேண்டாம்! அண்ணியைப் பாரு போ.. நீங்கள்லாம் சந்தோஷமா இருந்தா தான் நான் என் வாழ்க்கையை பார்க்க முடியும்..”,

“ஜெயஸ்ரீ வருமா உன்னோட”, என்றான் அருள்மொழி.

“வரலைன்னா யாரு விடறா? போ! நீ வீட்டைப் பாரு… இப்படி இருக்காதீங்க.. என்னை, என்னைப் பார்த்துக்க விடு!”, என்று அண்ணன் மேல் பாரத்தைப் போட்டுக் கிளம்பினான்.

பஸ் ஏறியவுடன் செய்த முதல் வேலை ஜெயஸ்ரீயிற்கு போன் அடித்தது தான்…  ஆனால் அவள் எடுக்கவே இல்லை…

அடித்துக் கொண்டே இருந்தான்… அவள் எடுக்கவே இல்லை… சற்று பயமானது! ஏன் எடுக்கவில்லை என்பது போல… வருத்தத்தில் இருக்கிறாளா இல்லை கோபமாக இருக்கிறாளா! எதுவாகினும் மீண்டும் அவளைக் கஷ்டப்படுத்திப் போக இஷ்டமேயில்லை! பஸ் கால் வாசி தூரமே கடந்து இருந்தது… அடுத்த வந்த ஊரின் நிறுத்தத்தில் இறங்கினான்.

மணி அப்போதே இரவு ஒன்பது… திரும்ப ஜெயஸ்ரீயின் ஊருக்கு பஸ் ஏறினான். அதுதான் சொல்லப் போனால் கடைசி பஸ்… 

அவளின் ஊரில் இறங்கிய போது மணி பத்து… நடந்து போகும் பாதையில் யாருமில்லை… அவள் வீடு தென்படும் தூரம் வந்ததும் திரும்பவும் போன் அடித்தான்.

ஆள் அரவமற்ற நிசப்தம்… எட்டு மணிக்கே அந்தப் பகுதியில் எல்லாம் அடங்கி விடும்… அங்கொன்றும் இங்கொன்றுமாய் தூரமாக இருக்கும் வீடுகள்… எல்லோரும் வீட்டின் உள்… அதுவும் பலர் தூக்கத்தில்.     

இந்த முறை போன் அடித்ததும் எடுத்தாள்… “ஸ்ரீ இருக்கியா?”, என்று பதட்டமாக சிபியின் குரல் கேட்கவும்…

“ம்ம்ம்!!!”, என்றாள்…

“ஏன் இவ்வளவு நேரம் போன் எடுக்கலை?”,

பதிலில்லை… எடுப்பதா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன் என்றா சொல்லுவாள். ஆர்வமாக, “நான் அப்பாவிடம் பேசவா?”, என்று கேட்க அழைத்தாள், “நான் அப்புறம் கூப்பிடறேன்!”, என்று சொன்னதும், என்னவோ ஒரு ஏமாற்றம்! எதற்கென்று தெரியாமல் ஒரு அழுகை!… அழுது அழுது அவளின் முகமே வீங்கியிருந்தது.

அப்பாவிடம் தலைவலி, சளி பிடித்து இருக்கிறது என்று பொய் சொல்லி, அவரை நம்ப வைப்பதற்காக விக்சை வேறு அள்ளி அப்பி இருந்தாள்.. அது வேறு எரிந்தது.    

“ப்ச்! ஸ்ரீ இப்போ நான் உன் வீட்டுக் கிட்ட தான் இருக்கேன்… நீ போன் எடுக்கலைன்னதும் கொஞ்சம் டென்ஷன் ஆகிடுச்சு உன்னைப் பார்க்கணும் போல! அதான் வந்துட்டேன்…!”, என்றான்.

என்ன வீட்டின் அருகிலா..? தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்பது தெரிந்ததும், அவளையும் மீறி முகம் பளிச்சென்று மலர்ந்தது… அவனை உள்ளே வாருங்கள் என்று அழைக்க மனம் பரபரத்தது. 

ஆனால் அழைக்க முடியாதே.. அப்பா எப்படி எடுத்துக் கொள்வாரோ தெரியாதே… அப்பாவிடம் கேட்டு விடுவோமா? பரபரத்தவள்…. அப்பா என்ன செய்கிறார் என்பது போல ரூமை விட்டு வெளியே வந்து மெதுவாக எட்டிப் பார்த்தாள்… அவர் நல்ல உறக்கத்தில் இருக்கவும்… எழுப்ப மனமில்லை.  எப்போதும் அவள் நடக்கும் சத்ததிற்கே விழிப்பவர் அன்று எழவில்லை.

கதவை திறந்து வெளியே போவோமா என்று மனம் பரபரத்தது.

காலில் இருந்த ஷூ சத்தம் செய்யக் கூடும் என்று அதைக் கழற்றினாள். பிறகு ஸ்டிக் சத்தம் செய்யும் என்று அதையும் ஓரமாக வைத்தாள். பிறகு மெதுவாக சுவரைப் பிடித்து கதவை திறந்து அவன் எங்கே என்பது போல் பார்த்தாள்.

ம்கூம், இருட்டில் அவளின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் இவள் கதவை திறந்தது மங்கிய ஒளியிலும் சிபிக்குத் தெரிய… விரைவாக அவளின் புறம் நடக்கத் துவங்கினான்.

அதுவரை நாளா புறமும் ஜெயஸ்ரீ அவனைத் தேடுவது நன்கு தெரிந்தது. பக்கம் செல்ல செல்ல அவளின் முகத்தில் தெரிந்த ஆர்வம், ஒரு தவிப்பு இன்னும் விரைவாக அவனை எட்டு எடுத்து வைக்கச் சொன்னது.

அவளின் பார்வை வட்டத்திற்குள் சிபி வரவும்… முகத்தில் ஒரு சந்தோஷ ஜொலிப்பு..

வீட்டின் அருகில் சிபி வந்துவிட.. “இருங்க! நான் வர்றேன்!”, என்பது போல சைகை காட்டியவள்.. மெதுவாக சத்தம் செய்யாமல் கதவை மூடி முன் புறம் தாழ் போட்டு படியிறங்க முற்பட்டாள்.. ஆனால் ஷூ இல்லாதது, ஸ்டிக் இல்லாதது, பிடிமானத்திற்கு சற்று தடுமாற… வேகமாக இரண்டே எட்டில் அவளை அடைந்தவன்… அவளின் கை பற்றி இறக்கி விட…

மெதுவாக அவனின் கை பிடித்து இறங்கினாள். இறங்கியவள் அவனின் முகத்தை ஆர்வமாய் பார்க்க…சிபியும் அவளைத் தான் பார்த்தான்! கண்கள் அழுது அழுது சுருங்கி இருந்தது.  விக்ஸ் வேறு தடவி இருக்க மூக்கின் மேல் அது வேறு பளபளத்து.

“எதுக்கு இவ்வளவு அப்பி இருக்க! எரியாது?”, என்று கேட்க…

“எரியுது”, என்பது போல அவள் தலையாட்ட,

“அப்போ துடை!”, என்றவன்..அவனிடம் துணியோ, கர்சீப் போல எதுவும் இல்லாததால்.. அவள் இடுப்பில் சொருகியிருந்த புடவையை எடுத்து அதைத் துடைக்க முற்பட்டான். அது அப்படியே இழுத்தாலே வரும், ஆனால் வேண்டுமென்றே அவளின் இடுப்பில் விரல் விட்டு அதை எடுத்து விட.. இதை எதிர்ப்பார்க்காத ஜெயஸ்ரீ கூசி சிலிர்த்தாள்.

அதை உணராதவன் போல.. அவள் முகத்தில் இருந்த விக்சை துடைத்து விட, அது இன்னும் எரிச்சல் கொடுத்தது. “ஷ்!”, என்று அவள் சத்தம் எழுப்ப, துடைக்காமல் ஒற்றி எடுத்தான். அவனின் கைகள் இந்த வேலையைச் செய்ய, ஜெயஸ்ரீயின் கைகளை விட்டு இருக்க.. இப்போது ஜெயஸ்ரீ அவனின் புஜங்களை பிடித்து நின்றிருந்தாள். 

“எதுக்கு இவ்வளவு அழுதிருக்க..”, அவன் கேட்டது தான் போதும்… இந்த முறை தயங்கி நிற்காமல் ,பதில் பேச ஆரம்பித்தாள்…   

“நீங்க போன் உடனே வெச்சிட்டீங்களா அழுகை வந்துடுச்சு… எனக்கு ராசியே இல்லை போல, எதுவும் சரியா நடக்கறது இல்லைன்னு”, என்று திக்கினாலும் பேசினாள். 

“என்ன உனக்கு ராசியில்லையா?”, என்று அதட்டினான் என்ன பேச்சு இது என்பது போல.  

“ஆமாம்!”, என்பது போல தலையாட்டினாள்… “சின்ன வயசுல இருந்தே எப்பவும் எல்லோருக்கும் ஹெல்ப் பண்ணுவேன்! ஆனா அதுல எப்பவும் பிரச்னையில மாட்டிக்குவேன்!”,

“பின்ன அத்தனை குழந்தைகளைக் காப்பாத்தினது எவ்வளவு பெரிய விஷயமா எல்லோரும் பேசுவாங்க, பாராட்டுவாங்க!  ஆனா என் விஷயம் யாருக்கும் தெரியாது… அதையும் விட எனக்கு வாழ்நாள் முழுசும் வேதனை, என்னோட இந்த பாதிப்பு”,

“அந்தக் கண்ணனை சும்மாக் கூட நான் திரும்பிப் பார்க்க மாட்டேன்! அவனோட என் கல்யாணம்னு சொல்லி, ஒரு மூணு வருஷ டென்ஷன்… பிடிச்சு தான் உங்களை கல்யாணம் பண்ணினேன், ஆனா ரெண்டு வருஷம் காணாமப் போயிட்டீங்க…”,

“காலையில தான் அவ்வளவு நல்லா பேசினீங்க… திரும்ப நான் கூப்பிட்டா உடனே வைக்கறீங்க”, என்று திக்கித் திணறி சொல்லும் போதே கண்களில் நீர் முட்டியது.  

அவள் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டு நின்றான். “ப்ச்! என்ன இது? இனிமே போகவே மாட்டேன்! நீ துரத்தினா கூட… போதுமா! இப்படி அழாத!”, என்று சமாதானம் செய்தான்.             

மெதுவாக, “என்னோட இப்படியே வந்துடறியா?”, என்று அவளின் முகம் பார்த்துக் கேட்க.. “மாட்டேன்!”, என்பதுப் போல தலையாட்டவும்.

புடவையை விட்டவன், அவள் எதிர்பார்க்கும் முன் அப்படியே கையில் தூக்கவும்.. என்ன செய்கிறான் என்பது போல இறங்க முற்பட்டவள், யாராவது பார்க்கிறார்களா என்பதுப் போல பதட்டமாக பார்வையை சுழற்ற..

“ஷ்! அமைதியாயிரு! இல்லை மாமான்னு கத்தி உங்கப்பாவைக் கூப்பிடுவேன்”, என்று சொல்ல, கப் சிப் பென்று அடங்கினாள். பிறகு, அப்பாவைக் கூப்பிட வேண்டாம் என்பது போல தலையசைக்க, “அப்போ அமைதியாயிரு!”, என்று சொல்லி, அவளை அப்படியேத் தூக்கி கொண்டு நடந்தான்.

சுற்றி யாராவது பார்க்கிறார்களா என்று ஜெயஸ்ரீ மீண்டும் பார்வையை ஓட்டவும், “அந்தப் பக்கம் ஒரு பேய், இந்தப் பக்கம் ஒரு பிசாசு பார்க்குது!”, என்று சீரியசாக சொல்ல..

உண்மையில் இருட்டு என்றால் ஜெயஸ்ரீயிற்கு சற்று பயம், அவன் நெஞ்சினில் முகத்தைப் புதைத்துக் கொள்ள…

அவன் சிறிது தூரம் நடந்து, அவர்களின் தோப்பின் ஆரம்பத்தில் இருந்த ஒரு திட்டின் புறம் வந்ததும் அவளை இறக்கி விட்டவன்.. கைபிடித்து அமர வைத்தான். பின்பு, “அம்மா!”, என்று முதுகை நெட்டி முறிக்க…

“என்னைத் தூக்க முடியலையா?”, என்பது போல ஜெயஸ்ரீ கிண்டலாக பார்க்க..

“ம்! இது உன்னால இல்லை… நாலு மணிநேரம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி இருக்கேன்.. அதான்!”, என்று சொல்லியபடி,  பிறகு அவனும் அருகில் அமர்ந்து கொண்டான்.

“ஏன்?”, என்ற பார்வையை ஜெயஸ்ரீ செலுத்த… வீட்டில் நடந்த அத்தனை கதையையும் சொன்னான். “அப்பா! நிலத்துல கால் வைக்கவே இல்லை! மூணு பசங்களைப் பெத்துட்டு ஓய்வெடுக்க வேண்டிய வயசுல வேலைக்கு போறார், மனசுக்கு கஷ்டமா இருந்தது.. அது மட்டுமில்லாம எங்க நிலமே வறண்டு இருந்தது. தென்னந் தோப்பும் தேக்குத் தோப்பும் மட்டும் தான் இருந்தது. வீடும் வீடாவே இல்லை”.

பேசி முடித்தவனிடம், “இவ்வளவு கவலைப்படறவர் ஏன் வீட்டை விட்டுப் போனீங்க…”, என்று திக்கி திக்கி கேட்க..

“அந்த சமையத்துல இங்க இருந்திருந்தேன், என்னால யாரோடயும் இப்படி பேச முடிஞ்சிருக்காது! என்னோட இந்தப் பாசம், இந்தத் தெளிவு இருந்திருக்காது! உறவே முடிஞ்சிருக்கும்… இன்னைக்கு என்னால எல்லோரையும் எதிர் கொள்ள முடியுது, அன்னைக்கு முடிஞ்சிருக்காது!”,    

“இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்”, என்பது போல பார்க்கவும்…

“என்ன செய்யட்டும்?”, என்றான் அவளைப் பார்த்து.

“நீங்க என்ன செஞ்சாலும் சரி…”, என்றாள்.

“ஏதாவது செய்யலாம்!”, என்று சொல்லிக் கொண்டே அவளைப் பார்த்தான்.. புடவையைப் போர்த்தி அமர்ந்து இருந்தாள் ஜெயஸ்ரீ… வெட்ட வெளி குளிரெடுக்க ஆரம்பித்தது… காற்றும் சிலு சிலுவென வீச… இன்னும் நெருங்கி அவளின் பக்கத்தில் அமர்ந்தான்.

“குளிருது”, என்று அவளைப் பார்த்து சொல்லவும் செய்தான். போர்த்திக்கொள்ள என்ன இங்கே கிடைக்கும் என்பது போல ஜெயஸ்ரீ பார்க்க..

“நீ போர்த்தியிருக்கறதை, எனக்கும் சேர்த்து போர்த்தி விடு!”, என்று சொல்லவும்… “ஆங்! என்ன இது.. வெட்ட வெளியில் அமர்ந்து கொண்டு என்ன பேச்சு இது!”, என்பது போல முறைத்துப் பார்த்தாள் ஜெயஸ்ரீ..

“ப்ச்! என்ன லுக்கு!”, என்று சொல்லிக் கொண்டே அவளின் தோள் சுற்றியிருந்த புடவையை விலக்கி, அவனின் தோள் சுற்றியும் போட்டுக் கொண்டு நெருங்கி அமர…

“யாரும் பார்க்கிறார்களோ?”, என்று பதட்டமாக சுத்தி முத்திப் பார்க்க… அப்போதுதான் இருந்த இடம் தெரிந்து ஆசுவாசமானாள். அது அவர்களின் தோப்பின் ஆரம்பம், வீட்டைத் தாண்டி வரவேண்டும், யாரும் வரமாட்டர்.

“பகல்லயே உங்க வீட்டை யாரும் பார்க்க மாட்டாங்க! இப்போ யாரு பார்ப்பா!”, என்று நெருங்கி அமர்ந்திருந்தவன் கூற..

“யாரும் பார்த்தாலும் பார்க்கலைன்னாலும் வெளில இப்படி உட்காருறது தப்பு!”, என்று விலகி அமர முற்பட்டாள்..

“ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் பொண்டாட்டி பக்கத்துல இப்படி நெருக்கமா உட்காருறேன்! அது உனக்கு பொறுக்கலையா..!”, என்று அவளைப் பார்த்தபடி அதட்டலாக கேட்க..

ஜெயஸ்ரீ பதில் பேசாமல் அவனை பார்த்தாள்… அந்தப் பார்வையே சொன்னது, “நான் எப்போ உட்கார வேண்டாம்னு சொன்னேன்!”, என்பது போல..

வாயை சிரிப்பது போல இழுத்துப் பிடித்தவன்.. “மச்சான்! கொஞ்சம் லேட் பிக் அப்..”, என்று சொல்ல..

“அய்யே! நீங்க அதை சொல்லவே வேண்டாம்!”, என்று ஜெயஸ்ரீ பதில் பார்வை பார்த்தாள். ஆனாலும் விலகி அமர்ந்து இருந்தாள்…. அவன் சுற்றியிருந்த புடவையும் எடுத்து இடுப்பில் சொருகியிருந்தாள்.

“செம ஃபாஸ்ட் போ!”, என்று சிபி கடுப்பாக சொல்ல…

“வீட்ல ரெண்டு பேருமே ஸ்லோவா இருக்கக் கூடாது!”, என்று வாய் திறந்தே சொல்லிவிட…

“அப்போ என்னை விட நீ ஃபாஸ்ட்ங்கற!”, என்று சிபி சிரிப்போடு சொல்ல…

ஜெயஸ்ரீ அவனை முறைக்க முற்படவும், அவளின்  தலையில் செல்லமாக முட்டினான். ஜெயஸ்ரீயிற்கு முகம் கொள்ளா சிரிப்பு…

அந்த சிரிப்பைப் பார்த்தவன்… “நிஜமா! உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? என்னை தேடுனியா..?”,

“ஐயோ! முதல்ல இருந்தா…! என்னால முடியாது!”, என்று திக்கித் திணறி சொல்லி ஒரே காலில் ஊணி பாதி எழுந்தவளை, இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.

அவளின் பாரம் அழுத்த, அந்த மேட்டிலேயே சாய்ந்தான்.. கூடவே அவளையும் விடாமல் மேலே சாய்த்தான். 

வெகு அருகில் இருந்த அவளின் முகம் பார்த்து, “ரொம்ப ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் பார்பேன் ஃலைப்ல! எல்லாம் பெர்பெக்ட்டா இருக்கணும்னு! அதுதான் எதுவுமே சரிவரலை போல.. இனிமே பிரேக் தி ரூல்ஸ் தான்…”,  எனவும்.. அப்போது ஜெயஸ்ரீ பார்த்த பார்வை சத்தியமாய் புரியவில்லை.

“நீயே சொல்லிடு…”, என்றான்.

“ரெண்டு வருஷம் கழிச்சுக் கட்டிப் பிடிச்சுட்டு, பிரேக் தி ரூல்ஸ்ன்னு டைலாக்! அதுவும் உங்க பொண்டாட்டிகிட்ட.. நான் பாவம் தான் போல!”, என்று ஜெயஸ்ரீ சொல்ல..

“ஆங்!”, என்று வாய் பிளந்து பார்த்தான் சிபி…

அந்த பாவனையைப் பார்த்து ஜெயஸ்ரீ கலகல வென்று சிரிக்க… அது இரவின் நிசப்தத்தில் நன்கு சப்தம் செய்ய…

“நல்லா பேச நீ!”, என்றான்.

“எனக்கு பேச்சே வரலை! இதுல நல்லா பேசறனா!”, என்று திக்கித் திக்கி சொல்லி மீண்டும் சிரிக்க..

“சத்தமா சிரிக்காத! பேய் தான் சிரிக்குதுன்னு எல்லோரும் பயந்துக்க போறாங்க!”, என்று சொல்லவும் இன்னும் சிரித்தாள்…

“ஆனா பேய் இவ்வளவு அழகா இருக்காது, இவ்வளவு அழகா சிரிக்கிறது”, என்று அவளின் கலகல சிரிப்பைப் பார்த்துக் கூடவே சொன்னான்.

பொதுவாகவே சிறு பிள்ளையில் நிறைய சிரிப்பால் ஜெயஸ்ரீ… சில வருடங்களாக மறைந்திருந்த அந்தச் சிரிப்பு, இப்போது கரை புரண்டு ஓட.. அவள் அதை நிறுத்தும் வழி காணாததால்…

அதை நிறுத்தும் பொருட்டு சிபி செய்த வேலை..  

இரு கைகளும் அவளை இருக்கிப் பிடித்து இருந்ததால்.. கைகளால் அவளின் வாயை மூட முடியாமல், அவசரமாக அவளின் இதழ்களைச் சிறை செய்தான்.   

முதல் மயக்கம் இருவருக்குமே… தயக்கங்கள் பின்னோக்கி செல்ல முயலும் போதே சுதாரித்து விலகினர்.

ஜெயஸ்ரீயின் முகத்தில் இருந்த வெட்கம்.. சிபி தன்னிடம் வந்து விட்டான் என்ற நிம்மதி கொடுத்த பூரிப்பு, பார்க்க பார்க்க அழகியாக ஜொலித்தாள். 

இந்தச் சிறையில் இருந்து மீள நினைப்பவன் முட்டாள் என்பது சிபிக்குப் புரிய… தானாக காரணங்கள் கற்பித்து கொண்டு, விட்டுச் சென்றதற்கு, “சாரி!”, என்றான் மனமார..  

                                     

Advertisement