Advertisement

அத்தியாயம் இருபத்தி இரண்டு:

சிபி அவளைப் பிரமிப்போடு பார்த்து, “பெரிய வேலை, அந்தச் சின்ன வயசுல.. எல்லோருக்கும் இந்த தைரியம் வராது… தீயைப் பார்த்தா முதல்ல இறங்கி ஓடத் தான் தோணும்”, என்று புன்னகையோடு பாராட்டியவன்..

“எப்படியும் ஒரு நாலஞ்சு வருஷம் முன்ன தானே.. எப்படி இத்தனைப் பேரைக் காப்பாத்தினது வெளில அதிகம் தெரியலை… கல்யாணத்தப்ப கூட வெந்தது வேகாததுன்னு அத்தனையும் பேசிட்டு இருந்த சொந்தக்காரங்க, இதைப் பத்தி ஏன் அதிகம் பேசாமப் போனாங்க..”,

“அதிகம் பேருக்குத் தெரியவே தெரியாது… இந்த விஷயம் வெளிலயே வரலை.. அப்படியே அமிங்கிடுச்சு… ஸ்கூல் பேர் கெட்டுப் போயிடும்னு ஸ்கூல் மேனேஜ்மென்ட் வெளிய வரவே விடலை”.

“பெற்றோர் எல்லாம் எப்படி விட்டாங்க..”,

“எல்லாம் சின்னக் குழந்தைங்க… யாருக்கும் ரொம்ப அதிகமான பாதிப்பு இல்லை, ரெண்டு மூணு பேருக்கு எலும்பு முறிவு.. அந்தச் செலவை ஸ்கூல் ஏத்துகிடுச்சு! அதோட அந்தப் பிள்ளைங்க எல்லோரும் ஸ்கூல் முடிக்கறவரை ஃபீஸ்னு எதுவும் கிடையாதுன்னு சொல்லவும்..”,

“யாரும் இதைப் பிரச்சனையாக்கலை… எல்லோரும் எனக்கு நன்றி சொன்னாங்க! என்னோட இந்த வெந்து போன காலைக் கூடத் தொட்டுக் கும்பிட்டாங்க! அவ்வளவு தான்! மேட்டர் ஃபினிஷ்!”,  

“என் விஷயம் அவங்களுக்கும் ஒரு விஷயமாயிடுச்சு…”,

“அதுல பாதிப்பு எனக்கு மட்டும் தான்… கால் மட்டுமில்லை… குரலும் போச்சு.. முன்ன கொஞ்சம் திக்கிப் பேசுவேன்… ஆனா ரொம்ப இல்லை. அதுல என்னோட பேச்சு வர்ற தசைகள் ஏதோ ஸ்பேசம் ஆகிடுச்சு.. அதனால இப்படி பேச முடியலைன்னாங்க…..”,

“அப்படினா?”,

“பேச நினைக்கும் போது அந்த தசைகள் டைட் ஆகிடும்…. ரிலாக்ஸ் ஆகாது.. ரொம்பப் பேசினா வலிக் கூட எடுக்கும்..”,

“ஸ்கூல்ல எங்களுக்கும் நிறைய பணம் குடுக்க வந்தாங்க…  ஆனா எங்கப்பா பைசா வாங்கலை யார்கிட்டயும்.. முதல்ல கேஸ் அது இதுன்னு திரிஞ்சார். அப்புறம் ஸ்கூல்ல மிரட்டினாங்க.. சாட்சியும் யாருமில்லை… அதை விடவும் நம்ம தானே பொண்ணுக்குத் துணை! நமக்கு ஏதாவது ஆகிடிச்சுன்னா அவளை யார் பார்த்துக்குவான்னு அவரும் விட்டுட்டார்”.

“அதனால தான் ஸ்கூல் அனுப்பலை, டென்த் கூட ப்ரைவேட்டா தான் எழுதினேன். அப்புறம் பாலிடெக்னிக் சேர்த்துட்டார்”,

“ஆனா அதுல அவர் ரொம்ப மனசு விட்டுட்டார்! அந்த சமயத்துல தான் கல்யாணம் யார் பண்ணிக்குவா.. பொண்ணு… அப்படி இப்படின்னு மனசைக் குழப்பி அந்தக் கண்ணனைப் பத்தி சொல்லி…”,

“அய்யே! அவன் முகமே எனக்குப் பிடிக்கலை”, என்று அவள் முகத்தை சுளித்துச் சொன்ன விதம்.. ஒரு விரிந்த சிரிப்பைத் தான் சிபியின் முகத்தில் கொடுத்தது.

“கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டே இருப்பேன்! அவன் எனக்கு வேண்டாம்னு… கல்யாணம் அவனோடன்னு பேசியிருந்தாங்க தான். ஆனா நாள் குறிக்கற அந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும் போது நிச்சயம் அப்பாக்கிட்ட சொல்லிப் புரிய வெச்சிருப்பேன்!, நானா ஆரம்பிக்க வேண்டாம்னு தான் நினைச்சு அமைதியா இருந்தேன்”,

“இதுல எனக்கு அவன் வாழ்க்கை குடுக்கறான்னு டைலாக் வேற… எரிச்சலா இருக்கும்.. அப்போதான் தெரிஞ்சது அவன் லவ் பண்றான்.. நான் குறையோட இருக்கறதால என்னை வேண்டான்னு சொல்ல முடியாம எனக்கு வாழ்க்கை குடுக்கறான்னு..”,

“நான் சொன்னேன் எனக்கு நீ வேண்டாம்னு… அப்போ சாட்சிக் கையெழுத்துப் போடறீங்களான்னு கேட்டான்… ஹப்பா விட்டது கெட்ட நேரம்னு நினைச்சேன்”,  

“அதைவிட எனக்கு வேற என்ன வேலை? சொன்ன நாள், சொன்ன டைம் போய் போட்டேன்…”,

“இதுல அந்தப் பொண்ணு உங்களுக்கு நிச்சயமாகிருக்குன்னு தெரியாது… தெரிஞ்சிருந்தாலும் போட்டிருப்பேன் அது வேற விஷயம்..”,

எல்லாவற்றையும் திக்கித் திணறி சொன்னாலும், மடை திறந்த வெள்ளமாகப் பேசிக் கொண்டே இருந்தாள்.. நிறுத்தவேயில்லை… வாங்கிய ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் முடிந்து மீண்டும் அவள் தண்ணீருக்காகப் பார்க்க…

அது இல்லை என்ற போதும் தொடர்ந்து பேச… அவன் மீண்டும் ஒரு பாட்டில் கொண்டு வரச் சொல்லி அவள் முன் வைத்த போதும் பேசிக்கொண்டு இருந்தாள்.

முன்பு எப்படியோ, இப்போது ராதாவின் திருமணத்தைப் பற்றி ஜெயஸ்ரீ பேசும் போதும் சிறிதும் வருத்தமாகவோ கஷ்டமாகவோ இல்லை..

அந்த விஷயத்தை விடுத்து, “இப்படி உன் காலைப் பண்ணிக்கிட்டு அந்தக் குழந்தைங்களைக் காப்பாத்தி இருக்க.. இப்படி உன் கூட நிக்காதது கஷ்டமா இல்லையா…”,

“முன்ன கஷ்டமா இருக்கும்! யாரவது என்னை பரிதாபமா பார்க்கும் போது கோபமா வரும்… ரொம்பக் மனசுக்கு கஷ்டமா இருக்கும்!”,   

“ஆனா இப்போ அதிகமில்லை.. இந்த உலகத்துல எத்தனையோ பேர் எத்தனையோ நல்லது மத்தவங்களுக்கு செய்யறாங்க! எல்லோரையும் பாராட்டுறாங்களா என்ன? என்னை மாதிரி செஞ்ச விஷயம் வெளில கூட வராது”.

“வருத்தமா இருக்கும் போது எல்லாம் நினைச்சிக்குவேன், நான் மிலிட்டரில வேலை செஞ்சு இப்படி ஆகிடுச்சுன்னு. நாட்டுக்காக எத்தனைப் பேர் எத்தனை கஷ்டப்படறாங்க, எத்தனைப் பேர் உயிரை விடறாங்க! எல்லாம் நமக்கு ஒரு செய்தி தானே.. அது நல்ல விஷயம்னு தெரியும்! அதுக்காக நம்ம அதை பாராட்டிட்டே இருக்குறோமா என்ன? அப்படித்தான் இதுவும்..”,

“அத்தனை வார்த்தைகளும் தடுமாறி தான் வந்தன! ஆனால் அவளின் வார்த்தைகளில் தான் தடுமாற்றம்! சிந்தனையில் இல்லை”.

முன்பு பார்த்த ஜெயஸ்ரீயிற்கும் இப்போது பார்க்கும் ஜெயஸ்ரீயிற்கும் நிறைய மாற்றங்கள்.. அவள் அப்போது பேசவே மாட்டாளே? இப்போது எப்படி இப்படி பேசுகிறாள்!.

கண்டிப்பாக் திக்கி, சிரமப்பட்டு தான்.. ஆனால் பேசுகிறாள்! அப்போது பேசவில்லை… ஒரு வேளை அவளுக்குப் பேசும் சந்தர்ப்பத்தை தான் கொடுக்க வில்லையோ என்று சரியாக நினைத்தான் சிபி.

அதே சமயம் மிகவும் சிரிப்போடு கலகலப்பாக இருந்திருப்பாள், இந்த நிகழ்வுக்கு முன் என்று தான் தோன்றியது.

பின்பும் அவளையேப் பார்த்திருக்க..   

சிபி அவளையே பார்த்திருப்பதை உணர்ந்தவள்.. “நீங்க பேசக் கூட்டிட்டு வந்தீங்க! நானே பேசிட்டு இருக்கேன்… இப்போ சொல்லுங்க!”, என்றாள்.

“அவனை வேண்டாம்னு எப்படியும் சொல்லியிருப்பேன்னு சொல்ற! என்னை மட்டும் எப்படிக் கல்யாணம் செஞ்சிகிட்ட…”,

சற்றும் யோசிக்காமல் தயக்கமேயில்லாமல் உடனே பதில் சொல்ல ஆரம்பித்தாள். “அது அவன் முகத்தைப் பார்த்ததுமே பிடிக்கலை… உங்களைப் பார்த்ததும் அப்படித் தோணலை..”,

“அப்போப் பிடிச்சி இருந்ததா”,

“அப்படிச் சொல்ல முடியாது… ஆனா பார்க்க சகிக்காம இல்லை…”, என்று அவள் சொன்னதும், “டேய் சிபி, இந்தக் கேள்வியை நீ கேட்காமையே இருந்திருக்கலாம்”, என்று மனதிற்குள் நொந்து கொண்டான்.   

“அப்புறம் அப்பா நிறையப் பேசி என்னை ஒத்துக்க வைச்சார்..  அவரும் உங்களைப் பத்தி நிறைய விசாரிச்சு நேர்ல பார்த்து, அப்புறம் தான் என்னை சம்மதிக்க வெச்சார்..”, என்று அவள் சொல்லிய விதம்…        

அதற்கு மேல் என்ன கேட்க… என்ன சொல்ல… கேட்பதற்கோ  சொல்வதற்கோ எதுவும் இருப்பது போல தெரியவில்லை சிபிக்கு..

“இல்லை! எனக்கு ஒன்னும் பேசயில்லை! என்றான்.

“அப்போ சொன்னிங்க”, என்று சைகையில் கேட்டாள், பேசிப் பேசி களைத்து இருந்தாள். 

“அப்போ நிறைய பேசணும்னு தோணிச்சு! இப்ப பேச ஒன்னுமேயில்லாத மாதிரி இருக்கு.. ஏற்கனவே எனக்கு தலைக்கணம் திமிர்ன்னு எல்லோரும் சொல்லுவாங்க! இப்போ இன்னும் சொல்வாங்க!”, என்றான் சம்மந்தமில்லாமல்.

“ஏன்?”, என்று சைகையால் கேட்கவும்…

“உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்கறது நிஜமான கர்வமான விஷயம்.. என் வாழ்கையில நடந்த எந்த விஷயத்துக்கும் இனிமே எனக்கு வருத்தமே கிடையாது”, என்று பளிச் புன்னகையோடு சொல்ல… மெல்லிய வெட்கத்தின் சாயல் ஜெயஸ்ரீயின் முகத்தில்.

புகழ்ச்சிக்கு மயங்காத ஆட்கள் யார்? அதுவும் பிடித்தமானவர்களிடம் இருந்து வரும் போது. 

சிபிக்கு மனதிற்குள் மிகவும் வருத்தமாக இருந்தது…. “இறைவன் இப்படி ஒரு வாழ்க்கைத்துணையைத் தனக்காக வைத்திருக்கும் போது தான் இப்படி முட்டாள் தனமாக தன்னை வேண்டாம் என்று சொன்ன ஒருத்திக்காக எத்தனை பிரச்சனையை இழுத்து விட்டுக் கொண்டிருக்கிறேன்!”, என்பது போல.

முகத்தில் சற்று வருத்தத்தின் சாயலும்…

அவனின் முக மாற்றத்தைக் கவனித்தவள், என்ன? என்று கேட்க.. “ஒன்றுமில்லை”, என்பது போல தலையாட்டினான்.

“உங்க வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க?”, என்று ஜெயஸ்ரீயாகக் கேட்கவும்..

“தெரியாது”, என்பது போல தலையாட்டியவன், “அன்னைக்கு என்ன நடந்தது?”, என்றான். ஏற்கனவே அவள் சொன்னதுதான், ஆனால் முழுமையாகச் சொல்லவில்லை.. 

முதல் நாள் உணவருந்தாததால் சற்று களைப்பாக எழும்போதே உணர்ந்தது.. டீ குடிக்க சென்ற போது, குளித்து வருமாறு தேவி பணித்தது, பின்பு வந்த போது புடவையைச் சரியாகக் கட்டாமல் வந்ததால் அந்த அவசரத்தில் ஸ்டிக் எடுக்காமல் வந்தது.

அப்போது மணிமேகலை புடவையை இழுத்து அவளுடன் விளையாடியது.. விடு என்ற வார்த்தைக் கூட வராமல் புடவை சரிந்து விடுமோ என்று பதட்டமாக புடவையை விடாமல் பதிலுக்கு இழுத்தது.. அப்போதும் குழந்தையும் வேகமாக இழுக்க, சற்று வேகமாக இவள் பதிலுக்கு இழுக்க… குழந்தை தூரப் போய் விழுந்தது, விழுந்ததும் பெரும் குரலெடுத்து அழுதது… வீட்டினர் பேசியது.

பின்பு தான் கையில் ஸ்டிக் இருக்காததை உணர்ந்தவள்.. புடவையை நன்றாகக் கட்டி அதை சென்று எடுத்து வரும் போது, மணிமேகலை அங்கிருந்த ஒரு இரும்பு முக்காலியின் மேல் நின்று அங்கிருந்த பிளாக் பாயிண்டில் சிறு சாவியை உள்ளே நுழைத்துக் கொண்டிருந்தது..

பார்த்தவுடன் ஷாக் அடித்துவிடும் என்று கையில் இருந்த ஸ்டிக்கால் சற்று வேகமாக தான் மணிமேகலையைத் தள்ளி விட்டது… அதற்குள் மணிமேகலைக்கு ஷாக் அடித்து இருந்ததா அதனால் தூக்கி எறியப்பட்டாளா இல்லை ஜெயஸ்ரீ வேகமாகத் தடியால் அடித்ததா தெரியவில்லை.

அவள் தடியால் அடித்த சமயம் மாமல்ல வர்மன் பார்த்துவிட….

குழந்தைக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் வேறு வர..

எல்லோரும் மீண்டும் பேசியது…. சிபி சற்று அதிகமாகப் பேசியது… பின்பு அவர்கள் குழந்தையை ஹாஸ்பிடல் கொண்டு போக… தான் உள்ளே நுழைந்த சமயம் ரூமின் வாயில் கால் தட்டியா இல்லை இந்த பேச்சுக்கள் எல்லாம் கொடுத்த பாதிப்பா கீழே அப்படியே பின்புறம் விழுந்தது.. தலையில் அடிப்பட்டது… யாரும் விழுவதைப் பார்த்தார்களா இல்லையா தெரியவில்லை.

என்று அத்தனையும் சொன்னாள்..

“விழுந்தது தான் தெரியும்! அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலை!” என்றாள்.

“எனக்கு எதுவுமே வருத்தமில்லை… சூழ்நிலை அந்த மாதிரி ஆகிடுச்சு… ஆனா நான் குழந்தையை அடிச்சேன், தள்ளிவிட்டேன், இதெல்லாம் வேணும்னு செஞ்சேன்னு எப்படி இவங்க நினைச்சாங்க. அது தான் இந்த மாதிரி ஆகிடுச்சு….”,

“என்னவோ சரியில்லாம ஆகிடுச்சு… ஆனா அப்பா கம்ப்ளைன்ட் கொடுத்தது எனக்குத் தெரியாது! வாசு அண்ணா தான் சொன்னாங்க… அப்பா கிட்ட கேட்டேன் வாபஸ் வாங்கச் சொல்லி செய்யலை… அப்புறம் நான் சாப்பிடலை ஒரு நாள் முழுசும்! அப்புறம் தான் வாபஸ் வாங்கினாங்க”.

“உடனே நீங்க வந்து பணம் நகை எல்லாம் குடுத்துட்டுப் போயிட்டீங்க நான் எப்படி இருக்கேன்னு கூடப் பார்க்கலை! அதுதான் அப்பாக்கு இன்னும் வருத்தம் ஆகிடுச்சு…”,

“எனக்கு இதையெல்லாம் ஜீரணிச்சிக்கவே கொஞ்ச நாள் ஆச்சு…”,

சிபியும் அதற்கு மேல் எந்த விளக்கமும் சொல்லவில்லை. நடந்தது நடத்தது தான்… அது தப்பும் கூட… அமைதியாக அமர்ந்திருந்தான்.. ஜெயஸ்ரீயும் திரும்ப பேசவில்லை..

நடந்ததற்கு எங்கே யாரை குற்றம் சொல்ல… ஆனாலும் இவளை ஏன் நம்பாமல் போனார்கள், குழந்தையை அடிப்பாள், தள்ளி  விடுவாள் என்று எப்படி நினைக்க முடிந்தது என்ற ஒரு கோபம் அப்போதும் மனதினில் எழுந்தது.

அவர்கள் அப்படி நினைக்காமல் இருந்திருந்தால் இத்தனை அனர்த்தங்கள் நடந்து இராது. மனது பாரமானது.

சிபி யோசனையின் பிடியில் இருக்க… அவன் முகத்தை சிறிது நேரம் ஆராய்ந்தவள்… தன்னுடைய ஃபோனை நொண்டி…. “இது உங்களுக்காக”, என்பது போல சைகை காட்டி நீட்டினாள்..  

என்னவென்று புரியாமல் அதை வாங்கினான்.     

          NEVER LEAVE A TRUE RELATIONSHIP FOR FEW                                 FAULTS….

           NO BODY IS PERFECT

           NO BODY IS CORRECT AT THE END

            AFFECTION IS ALWAYS GREATER

அதை படித்த சிபி அதன் சாரம்சம் உணர்ந்து புன்னகைதான்..  “அப்போ என்ன சொல்ல வர்ற? உன்னை விட வேண்டாம்னா?”, என்று அவளைச் சீண்ட..

அவன் சீண்டுகிறான் என்று புரிந்த போதும்.. “மறுபடியும் விடப் போறீங்களா”, என்றாள்… அந்தக் குரல் நிச்சயமாய் சொன்னது அவனை மிகவும் தேடியிருக்கிறாள் என்பது..

அதுவரை எதிர் எதிர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவன், எழுந்து அவளின் பக்கம் சென்று அமர்ந்தான்.    

அவளின் போன் அவன் கையில் தான் இருக்க… அதில் தேடி….  

 இதயம் என்பது வினோதமான சிறை ஏனெனில்,

இதில் குற்றம் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில்லை

பாசம் வைப்பவர்கள் மட்டுமே மாட்டிக் கொள்கிறார்கள்

என்ற வரிகளைக் காட்ட..

“இது உங்களுக்கு இல்லை! எனக்கு!”, என்று சைகையால் காட்டினாள், பேச வரவில்லை…

“எவ்வளவு வெச்ச?….பாசம்..”, என்றான் சிறு சிரிப்போடு. 

“வழுக்கி விழற அளவுக்கு”, என்றாள் வாய் மொழியாக…

“எங்கெங்கே அடிபட்டு இருக்கோ, அங்க எல்லாம் மருந்து போடலாம்”,  

“ஐயோ”, என்றாள்.

அவள் சொன்ன பாவனையில், “என்ன?”, என்று புரியாமல் கேட்க,

“இவ்வளவு அதிர்ச்சி எல்லாம் ஒரே நாள்ல நான் தாங்க மாட்டேன்! நீங்க சிரிக்கறதே என்னால இன்னும் நம்ப முடியலை! நீங்க என்னோட நல்ல முறையில பேசறது அதை விட… இப்போ இந்த டைலாக் ஆஆஆஆ தாங்க மாட்டேன்!”, என்று நெஞ்சைப் பிடித்து, திணறி வசனம் பேச…

வாய்விட்டே சிரித்து விட்டான் சிபி….  

“ரொம்ப நேரமாகிடுச்சு… போகலாம்!”, என்பது போல கூடவே சைகை செய்தாள்.     

கண்டிப்பாக இவளோடு என் வாழ்க்கை நன்றாக இருக்கும்… அந்த ஒரு உணர்வை நானும் இவளுக்கு கொடுக்க வேண்டுமே என்று தான் தோன்றியது.

எழுந்தனர்.. வெளியே வந்ததும்… “இனி கிளாஸ் போக முடியாது வீட்டுக்குப் போறேன்”, என்றாள்..

இவ்வளவு நேரம் இருந்த கலகலப்பு அப்படியே மாறியது.. “இனி என்ன?”, என்ற எண்ணம் இருவரிடமும்..

“மறுபடியும், உங்க அப்பா கிட்ட பேசட்டும்மா…?”,

“வேண்டாம்!”, என்பது போல தலையசைத்தவள், “நான் உங்களைத் தேடினேன் தான்.. ஆனா பிடிச்சு தான் தேடினேனான்னு கேட்டா என்கிட்டே பதில் கிடையாது… நீங்க என்னை ஏன் விட்டுட்டுப் போனிங்கன்னு தெரிஞ்சிக்க தேடினேனா அதுவும் தெரியாது… இல்லை கணவர் அப்படின்ற ஒரு எண்ணம் கொடுத்த உணர்வால தேடினேனா, இது எதுக்குமே என்கிட்டே பதில் கிடையாது..”,    

“முதல்ல இதுக்கு எனக்கு பதில் வேணும்..”,

“பதில் தெரிஞ்சு என்ன பண்ண போற? என்னோட சேர்ந்து வாழலாமா வேண்டாமான்னு முடிவு செய்யப் போறியா”,

“இல்லையில்லை”,

“அப்புறம்”,

“தெரியலை”, என்பது போல உதடு பிதுக்கினாள். 

“என்ன பண்ணட்டும் ஸ்ரீ? தெளிவாச் சொல்லு! இல்லை என் போக்குல போக விடு! என்ன பண்ணட்டும்?”,

“ஒன்னும் பண்ண வேண்டாம்! உடனே எதுவும் சரி ஆகாது! அப்பாக்கு உங்க மேல நம்பிக்கை வந்து என்னை அனுப்புற வரை நீங்க இருந்து தான் ஆகணும்”, என்று மிகவும் திணறலாகத் தான் வந்தது வார்த்தைகள்.

அவளை அறியாமல் தொண்டையைத் தடவி விட.. “வலிக்குதா ஸ்ரீ பேசறது”, என்றான்.  

அதற்கு பதில் சொல்லாமல், “ஒரு வேலை நான் வரலைன்னா…..”, என்று அவள் கேட்ட விதத்திற்கு…

“தப்பு என்னோட பக்கம் இருந்து, அதனால கொஞ்ச நாள் பொறுத்துப் போறேன்… ஆனா பொதுவா எனக்குப் பொறுமை கிடையாது… சொல்லப் போனா அதனால தான் இவ்வளவு பிரச்சனை கூட… சீக்கிரம் என்னோட வரப் பாரு…”, அவனின் இயல்பான அதட்டல் பேச்சு வந்திருந்தது.

“வரலைன்னா..”,

“ப்ச்! கொஞ்சம் சீரியஸா இரு ஸ்ரீ…. விளையாடாத!”,

“இல்லை! நான் விளையாடலை! அப்பா அனுப்பாம வரமாட்டேன்..”,  

“ஸ்ரீ இதே பேசிட்டு இருக்காத, நான் ஒன்னும் பெரிய ஹீரோ கிடையாது சில நாள்லயே ஏதாவது செஞ்சு உங்கப்பா மனசு மாறி என்னோட உன்னை அனுப்பி வைக்கறதுக்கு… நான் ஒரு சாதாரண மனுஷன்.. சில தப்பை என்னை அறியாம செஞ்சிட்டேன்.. அதுக்கான படிப்பினையும் அனுபவிச்சிட்டேன்…”,  

“முடிஞ்சவரை இந்த மாதிரி தப்பு இனி வராது… ஆனா அதுக்காக நான் நல்லவன், வல்லவன், நிறைய சம்பாரிக்கறேன், இப்படிப் பொய்யெல்லாம் சொல்ல முடியாது”.  

ஜெயஸ்ரீ ஏதோ சொல்ல வர..

“நீ வரணும் ஸ்ரீ….”,

“வரலைன்னா..”,

“சிம்பிள், கடத்திடுவேன்..!”,

“சாதாரண மனுஷன்னு இப்போ தான் சொன்னீங்க! சாதாரண மனுஷன் கடத்த மாட்டாங்க!”, முகத்தில் வலியின் சாயல்… வார்த்தைகள் கொடுத்த வலியா இல்லை பேசுவதாலா தெரியவில்லை.     

 “இப்போ என்ன தான் பண்ணனும்ங்கிற… “,

“நான் வீட்டுக்குப் போறேன்.. அதோ என் பஸ் நிக்குது…”,

“அப்போ பதில் சொல்ல மாட்ட..”,

“மாட்டேன்”, என்பது போல தலையசைத்தாள்.

“சரி, உன் பஸ்ல ஏறு!”, என்றான்..

அவள் ஏறியதும், அவனும் ஏற. “நீங்க எங்க வர்றீங்க?”, என்பதுப் போல பார்க்க… “உன்னை வீட்ல விட்டுட்டுப் போறேன்..”,

அவ்வளவு தான் இருவருக்குள்ளும் பேச்சு… பின்பு இருவருமே பேச முயற்சிக்கவில்லை… அவளின் ஊர் வந்து இறங்கியதும்.. இவனும் இறங்கினான்.

ஜெயஸ்ரீ சிறு தலையசைப்புடன், நான் செல்கிறேன் என்று விடை பெற்றாள். அவள் தலையாட்டிய விதமே இனி நீ வரவேண்டாம் என்று சொல்லியது. வீட்டிற்கு வா என்றும் அழைக்கவில்லை.

அங்கிருந்து அவளின் வீட்டிற்கு சிறிது தூரம் நடக்க வேண்டும்… வெயில் கொளுத்தியது..

ஆனாலும் அந்த வெயிலில் மெதுவாக கோல் ஊன்றி நடந்து தான் சென்றாள்.. என்ன செய்வது என்று புரியாமல் ஒன்றும் செய்ய இயலாதவனாகப் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.        

முன்பானால் வேறு! அவனாகத் தவறாக நினைத்திருந்தான்! தன்னுடன் வர மாட்டாள் என்பது போல! ஆனால் இப்போது.. ஆமாம் தேடினேன்! ஆனால் எதற்கு என்று தெரியாது! பிடித்ததாலா! கணவன் என்பதாலா! என்று திமிர் பேசலாம்.. ஆனால் அவளுக்கு அவனை பிடித்திருப்பது அவனுக்கு இப்போது நிச்சயம்..

ஆனாலும் வரமாட்டேன் என்று பிடிவாதம்…   

ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்தது போல இருந்தது சிபிக்கு.

Advertisement