Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று:

ஜெயஸ்ரீயின் சிரிப்பை சிறிது நேரம் ஒரு புன்னகையோடு சிபி பார்த்திருக்கவும்.. அதற்குள் அவர்கள் இறங்கும் இடம் வரப் போக…

“இறங்கணும்”, என்று எழ முற்பட்ட ஜெயஸ்ரீயை, “இரு காந்திபுரம் பஸ் ஸ்டான்ட் போகலாம்”, என்றான்.

“என் கிளாஸ் இங்க தான்!”,

“பரவாயில்லை ஒரு நாள் போகலைன்னா…!”,

“பஸ் ஸ்டாண்ட் போய்…..”, என்று கேள்வி எழுப்ப… 

“எங்கயாவது போகலாம், சாயந்தரம் வீட்டுக்குப் போயிடுவியாம், எனக்கு இன்னும் உன்னோட பேசணும்..”,

“இல்லையில்லை! அப்பாக்குத் தெரியாம நான் வரமாட்டேன்….”, அவளின் வார்த்தைகளைக் கேட்டு சிறிது நேரம் மௌனமாகி விட்டான்.  

“என்னோட முட்டாள் தனத்துனால வாழ்க்கையில நிறைய நாள் வேஸ்ட் பண்ணிட்டேன்… இந்த மாதிரி கொஞ்ச நேரம் பேசியிருந்தாக் கூட உனக்கு என்னைப் பிடிக்காது வரமாட்டேன்னு நானா நினைச்சு இந்த மாதிரி செஞ்சிருக்க மாட்டேன்”.

“எனக்கு ரொம்பத் திமிர் சின்ன வயசுல இருந்தே! எனக்கு தான் எல்லாம் தெரியும்ன்ற மாதிரி…. நான் தான் எல்லாம்ன்ற மாதிரி.. அந்த கர்வம் தான் என்னை இந்த மாதிரி தப்பு மேல தப்பா செய்ய வெச்சிடுச்சு..”,

“போனவ போறான்னு விடாம…. அந்தக் கோபத்தைப் பிடிச்சு அதுக்காக சில வேலைகளைச் செஞ்சு அது பிரச்சனையில் முடிஞ்சு, அது சரி செய்ய வாய்ப்பா உன்னோட திருமணம்”.

“இதுல கிடைச்ச வாழ்க்கையை சரியா வெச்சிக்க தெரியலை…. உனக்கு என்னைப் பிடிக்கும்னு தோணவேயில்லை.. இத்தனை நாளா என் கூட இருந்து என்னைப் பார்த்து பழகின பொண்ணுகே என்னை பிடிக்காம போயிடுச்சே..”,

“கல்யாணமாகி நாலு நாள்ல இவ்வளவு பிரச்னையை இழுத்து விட்டுட்டாங்க எங்க வீட்ல… இதுல உனக்கு அடி வேற பட்டிடுச்சு! போலிஸ் கேஸ் ஆகிடுச்சு..”,

“என்னோட வர மாட்ட! என்னோட உங்கப்பா அனுப்ப மாட்டார்! இன்னும் எனக்கு தலை குனிவுன்னு நினைச்சு அதை சமாளிக்க தெரியாம… உன்னை விட்டுட்டு போயிட்டேன்”.

“உன்னை மட்டுமில்லை! என்னோட அப்பா அம்மா யாரையும் நான் இதுவரைப் பார்க்கலை! பார்க்கப் பிடிக்கலை! நான் போனதுக்கு அவங்களும் முக்கிய காரணம்.. இருந்திருந்தேன் அவங்க கிட்டயும் முகத்தைக் காட்டியிருப்பேன்.. வீட்ல மத்த எல்லார் கிட்டயும் எப்படி நடந்திருப்பேன்னு தெரியாது…”,  

“உண்மையா என் வாழ்க்கையில நான் ஜெயில் போவேன்னு நினைச்சதேயில்லை… அதுவும் பேப்பேர்ல எல்லாம் என் போட்டோ… மனைவியை வன்கொடுமைன்னு போட்டு… எவ்வளவு அசிங்கமா இருந்தது தெரியுமா… யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்கலை”,     

“என்னோட வாழ்க்கைத் தோல்வினால எனக்கு யாரையும் பார்க்கப் பிடிக்கலை! அதுதான் உண்மை!”,

“நீ சொன்ன மாதிரி இப்ப ஊருக்குள்ள நான் ஓடிப் போயிட்டேன்னு தான் பேசுவாங்க! எல்லாம் நானா தேடிக்கிட்டது… போனது போகட்டும்! இன்னும் இப்படி வேண்டாம்!”, என்றான் தீர்க்கமாக…

அந்தக் கைதுப் படலம் அவனை மிகவும் பாதித்து இருப்பது புரிந்தது. அதே சமயம், அவனின் ஆதங்கம், எல்லாவற்றையும் எப்படியாவது சரி செய்துவிட வேண்டும் என்ற உத்வேகம் ஜெயஸ்ரீயிற்கு நன்கு புரிந்தது.

“நான் சரியா சூழ்நிலையை எதிர்கொள்ளாம போனது பெரிய தப்பு தான். ஆனா உண்மையா சொல்லு நீ என்னோட அன்னைக்கு திரும்ப வந்திருப்பியா.. உங்கப்பா என்னோட அனுப்பியிருப்பாரா?”,

கண்டிப்பாக அன்றைய மனநிலையில் ஜெயஸ்ரீயிற்கு அந்த வீடு பிடிக்கவில்லை, அந்த வீட்டு ஆட்களோடு தனக்கு ஒத்து வராது என்ற எண்ணம் தான்.

அந்த நிலைமையில் கண்டிப்பாக தந்தையும் அனுப்பியிருக்க மாட்டார் தான். ஆனால் அதற்காக சிபி விட்டுப் போனது சரி என்று ஆகிவிடாதே.

திரும்ப திரும்ப அதை சொல்ல விருப்பமில்லாமல்… அவனுக்கு சற்று ஆசுவாசதைக் கொடுப்போம் என்று நினைத்தவளாக, “வந்திருக்க மாட்டேன்!”, என்பது போல தலையசைத்தாள்.

அதற்குள் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்திருந்தது… இறங்கினார்கள். சிபியிடம் இருந்த லகுதன்மை மறைந்து இருந்தது, மீண்டும் இருகி இருந்தான்.

“சாரி! பஸ் ஸ்டாப் போயிடுச்சு! கிளாஸ் எங்க? ஆட்டோல போயிடலாம்!”, என்றான்.

ஜெயஸ்ரீயிற்கு அவனுடன் நேரத்தை செலவிட வேண்டும் போல இருந்தாலும், அப்பாவிற்குத் தெரியாமல் போவது ஏதோ பெரிய தவறு செய்வது போல ஒரு மனநிலையைக் கொடுத்தது…

அப்பாவை மீறி எப்போதும் அவளால் எதுவும் செய்ய முடியாது… அதே சமயம் சிபி அவரிடம் சண்டையிடுவதையோ, அவரை எந்த வகையிலும் நிர்பந்திப்பதையோ அனுமதிக்க முடியாது…

“எங்க அப்பாவை நீங்க கஷ்டப்படுத்தக் கூடாது”, என்றாள்.

“என்ன பண்ணினேன் நான்?”, என்றான் புரியாமல்.  

“நீங்க தானே சாம பேத தான தண்டம் ஏதேதோ சொன்னீங்க..”,

“அதுக்குள்ள தெரிஞ்சிடிச்சா?”,

மொபைலைத் தூக்கிக் காட்டினாள், “பார்த்துட்டேன்.. எங்கப்பா கிட்ட எந்த கலாட்டாவும் பண்ணக் கூடாது, பண்ணுனீங்க, அப்புறம் நாம சேர்ந்து வாழ வாய்ப்பே இருக்காது”, என்றாள் திக்கி திக்கி.

சிபி என்ன தான் செய்வது என்று தெரியாமல் நின்றான்.. “அப்பா! அனுப்ப மாட்டேன் என்கிறார்.. இவளும் வரமாட்டேன் என்கிறாள்.. நான் இவளை வற்புருத்தவோ நிர்பந்திக்கவோ கூடாது என்கிறாள். என்ன தான் செய்ய?”,

அந்த பஸ் ஸ்டாண்டில் இருவரும் நின்றனர். காலை வேலை ஆளுக்கு ஒரு புறம் பரபரப்பாக ஓட.. தன்னுடைய பதிலுக்காக ஜெயஸ்ரீ பார்த்திருப்பதை உணர்ந்தவன்..

“சரி, ஒன்னும் பண்ண மாட்டேன்! உங்கப்பாவைக் கஷ்டப்படுத்த மாட்டேன்.. வா ஏதாவது சாப்பிட்டிட்டு போகலாம்.. உன்னை பார்க்க வர்ற பரபரப்புல இன்னும் எதுவும் சாப்பிடலை…”,

பக்கத்தில் இருந்த ஹோட்டலில் அமர்ந்தார்கள்…

சிபி அமைதியாக இருப்பதைப் பார்த்து, தன் பேச்சுக்கு விளக்கம் கொடுத்தாள்.

“அது, அப்பா எனக்காகவே நான் பொறந்ததுல இருந்து பார்த்து பார்த்து செய்யறார்! எல்லா அப்பா அம்மாவும் அப்படி தான்! ஆனா இங்க அம்மா இல்லை… அவரோட கல்யாணமும் விவரம் தெரியாத வயசுல வேண்டாம் பண்ணிக்க கூடாது சொல்லிட்டேன்…”,

“அப்புறம் எனக்கு இப்படி ஆன பிறகு அவரோட எண்ணம் சொல் செயல் எல்லாம் என்னைச் சுத்தித் தான்….”,  

“இப்போ அவரா அனுப்பாம நான் வரமுடியாது.. அப்புறம் வாழ்க்கையில அதை விட என்ன சுயநலம் இருக்க முடியும்…”,

ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றார்கள் இருவரும்… சிறிது நேரத்திற்கு முன் பேசியது கனவு போல தோன்றியது.

ஜெயஸ்ரீயும் காலை உணவு உண்ணவில்லை.. சிபியும் உண்ணவில்லை.

“முதல்ல சாப்பிடலாம் அப்புறம் பேசலாம்.. நீ என்னை விட்டுடுவியோன்னு தான் நான் உன்னை விட்டுப் போனேன். எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம்… இனிமே அது நடக்காது… அதனால இருக்குற இந்த நொடியை அமைதியா கொண்டு போவோம்”.

சிபி என்ன வேண்டும் என்று கேட்டு அதை பேரரிடம் சொல்லவும், உணவு வர காத்திருந்த நேரத்தில்..

“நீங்க, நீங்க என்ன பண்றீங்க…”, என்றாள்.

“வேலை!”, என்று சிபி சிரிக்க முற்பட்டான். ஆனால் அது வருவேணா என்றது.

“என்ன வேலை..?”,

“பேங்க்ல..”, என்றான். 

“என்ன பேங்க்லையா?”, என்று வியப்பாகக் கேட்க..

“அச்சோ! பெரிய போஸ்ட்ன்னு நினைக்காத! டெம்பரவரி போஸ்ட்.. கன்சாலிடேடட் பே…”,  

“ஆனா அக்ரி படிச்சு இருக்கீங்க!”,

“ஆமா! அதுக்கு தனியா என்ன வேலை தேட.. அதை நான் வேலையானதுனால தான் படிச்சேன்! ஆனா இப்போ என் கிட்ட நிலமில்லை.. சாப்பிட என்ன செய்ய… கூடவே இன்னும் சில வேலையும் செய்யறேன்! அதுக்கும் பணம் வேணும்… அதான் ரொம்ப தேடி ஒரு வருஷம் முன்ன தான் இந்த வேலைக் கூட அமைசிக்கிட்டேன்..”,

அவன் சொன்ன போது அவனின் வார்த்தைகளில் தெரிந்த துயரத்தில்… ஜெயஸ்ரீக்கு பேச்சு திக்கியும் வரவில்லை.. “அதுக்கு முன்னே என்ன?”, என்பது போல சைகை செய்ய….

“கூலி வேலை வயல்ல…?”,

கேட்க கேட்க நெஞ்சம் பதறியது.. பெரிய பணக்காரர்கள் அல்ல தான் சிபியின் வீட்டினர்… ஆனால் உழைத்து ஓரளவு வருமானம் வரும் நிலத்திற்கு சொந்தக்காரார்கள் தான்.   

“அப்போ அன்னைக்கு…….”, என்று அந்த ஞாயிற்றுக் கிழமையை ஞாபகப்படுத்த..

“அன்னைக்குக் கூட கூலி வேலை தான்…”,           

“என்ன எம் எஸ் சீ அக்ரி படிச்சிட்டு கூலி வேலையா…”,

“எனக்கு அந்த வேலை தான் ரொம்பத் திருப்தி.. வயல்ல வேலை பார்க்கிறது. அதுக்கு தானே நான் அதை விரும்பிப் படிச்சேன். ஆனா அதுல பெருசா வருமானம் இல்லை… நான் மனத்திருப்திக்காக செய்யற வேலைக்கும் அது பத்தலை….”,    

“அப்படியே வாழ்க்கை போக முடியாது இல்லையா? அதனால இந்த பேங்க் வேலைக்கு முயற்சி செஞ்சு போனேன். ஆனாலும் லீவ் நாள் முழுசும் வயல் வேலை… அது சார்பா படிச்சு இருக்கறதால கூட கொஞ்சம் சேர்த்து மரியாதைக் கிடைக்கும்”.

“நான் செய்யற வேலைக்கு இந்த வருமானம் பத்தலை”, என்று சிபி சொன்னதைக் கவனிக்கத் தவறினாள். அது அவளின் கவனத்தில் படவில்லை. அதே சமயம் பேங்க் வேலையோடு சேர்த்து மற்றுமொரு  வேலையும் வருமானத்திற்கு செய்தான் சிபி, அதையும் சொல்லவில்லை.

கூலி வேலை என்றதுமே அவளின் முகம் மாறியதைப் பார்த்தான். இதில் இன்னொரு வேலையும் செய்வதை சொன்னால் வருத்தப்படுவாள் என்று சொல்லவில்லை.   

என்றுமே வயலில் இறங்கி வேலை செய்வது அவனுக்கு குறையே இல்லை… இதுவரை அதனை விட வேறு சந்தோஷம் உலகில் இல்லை.. இயற்கை வளங்களை காக்கவும் வளர்க்கவும் எப்போதும் விரும்புவான், அதற்காக எப்போதும் முயற்சி எடுப்பான். ஆனால் சொன்னால் பையித்தியக்காரன் என்பார்கள். அதனால் செய்யும் வேலையை அதிகம் காட்டிக் கொள்வதில்லை.

அதுவும் இப்போது எல்லோரையும் விட்டு வந்த பிறகு அவன் மனதிருப்திக்காக செய்யும் வேலையே அவனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

அவன் அதை செய்யும் போது நிச்சயம் உதட்டளவில் பாராட்டுகள் இருக்கும். ஆனால் கண்களில் பலருக்கு பைத்தியக்காரன் திரியறான் என்பது போல தான் தோன்றும்.

“நெவெர் மைன்ட்…”, அது தான் சிபி.

ஆனால் குடும்ப வாழ்க்கையில் எங்கே சறுக்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. இனி நினைத்தும் பயனில்லை.

அவளைப் பார்த்து பளிச்சென்று புன்னகைத்தான்.

எதற்கு இந்த புன்னகை என்று ஜெயஸ்ரீ புரியாமல் பார்த்து… வந்தப்போ ஜாலியா இருந்தாங்க, அப்புறம் மூடி ஆகிட்டாங்க.. இப்போ மறுபடியும் சிரிக்கறாங்க… இவர் சீரியசானவரா ஜாலியானவரா என்ற கேள்வி மனதினுள் எழ.. அந்த பாவனையோடு சிபியைப் பார்க்க..

“என்ன யோசனை?”, என்றான் புன்னகையுடன்..

ஜெயஸ்ரீ மனதை மறையாது கேட்டும் விட்டாள்… “நல்லா ஜாலியா பேசற மாதிரி தான் எனக்குத் தோணுது.. ஆனா எப்பவும் சீரியஸா இருக்கீங்க நான் பார்த்தவரை! எது நிஜம்?”, என்றாள்.

“ஜாலியாப் பேசறனான்னு எனக்குத் தெரியலை!  சீரியஸ் தான்னு எல்லோரும் சொல்லுவாங்க.. ஆனா ரொம்ப சீரியஸ் கிடையாது.. வாழ்க்கையை அனுபவிச்சு தான் வாழ்ந்தேன்! எனக்குப் பிடிச்ச படிப்பு! நான் நேசிச்ச வேலை என்னோட விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து, இப்படிதான் இருந்தேன். என்ன எல்லார்கிட்டயும் எப்பவும் கொஞ்சம் அதட்டலா தான் பேச்சு வரும். அது என்னோட திமிர்”,

 “இப்போ அந்தக் கல்யாணம் நின்னதுக்கு அப்புறம் தான் ரொம்ப முசுடு ஆகிட்டேன் போல!”, என்று அவனுக்கு அவனே விமர்சித்த விதம்..

சுத்தமாக மீண்டும் ஜெயஸ்ரீயைக் குழப்ப, இவன் நல்லவனா? கெட்டவனா? என்று எப்போதும் ஒலிக்கும் டைலாக் மனதிற்குள் ஒலித்தது.

பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்திருந்தார்கள்…

பிறகு சற்று தயங்கி, “நான் உனக்கு ஒன்னு வாங்கிட்டு வந்தேன்! வாங்கிக்குவியா?”, என்றான்.

“என்ன?”, என்பது போலப் பார்க்கவும்… அவனின் ஜோப்பில் இருந்து ஒரு சிறிய நகை டப்பாப் போன்றதை எடுத்து நீட்டினான்…

“என்ன?”, என்று அவளையும் மீறி ஆர்வமாக வாங்கினாள். திறந்தவுடன் முகம் கலவையான உணர்வுகளைக் தான் காட்டியது.

அங்கே இருந்த பொருள் கொலுசு…

ஆனால் சலங்கைகள் இல்லை.

“நீ நடக்கும் போது யாரும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறதை நீ விரும்ப மாட்ட, அதான் சலங்கைகள் எடுத்துட்டேன். ஆனா கொலுசு வாங்கணும்னு தோணினது இப்போ இல்லை! கல்யாணம் ஆன போது உன் காலை ஒரு தரம் பார்க்கணும் காட்டுன்னு சொன்னேன்… அது தீயில கருகி இருந்தது… அப்போ என்ன இப்படி கவனமில்லாம பண்ணிக்கிட்டன்னு எனக்குப் பேசின ஞாபகம் கூட..”,

“ஆனா பேசும் போதும் அந்தக் காலுக்கு ஏன் கொலுசு போடலைன்னு தோணிச்சு… அப்புறம் அதுக்கான சந்தர்ப்பமில்லை… நேத்து திடீர்னு தான் வாங்கினேன்”.

“போட்டுக்கிறியா”, என்றான்.

“சரி”, என்றும் சொல்லவில்லை, “வேண்டாம்”, என்றும் சொல்லவில்லை… ஆனால் அதைக் கையில் எடுத்து அதன் வேலைப்பாடை ரசித்தாள். எனாமல் கோட்டிங் ஆங்காங்கே பச்சையிலும் சிகப்பிலும் கொடுத்து, அழகிய வேலைப்பாடுடன் நகாசு வேலைகள் அதிகமாக செய்து இருந்தது.

ரசிகன் தான் என்று சிபியைப் பற்றி தோன்றியது.

பிறகும் ஒன்றும் சொல்லாமல் அதை அவளுடைய ஹேண்ட்பேகில் வைத்துக் கொண்டாள்.

“எப்படி ஆச்சு இந்த மாதிரி?”, என்றான்.

“என்னுடைய அஜாக்கிரதையால”, என்று திக்கித் திணறி நேர்ப் பார்வை பார்த்துச் சொல்ல..

அன்று அவன் அவளை அதட்டிச் சொன்ன வார்த்தைகள். சொன்ன இவனுக்குக் கூட சரியாக ஞாபகமில்லை. ஆனால் அவளுக்கு நன்கு இருந்தது, புரிந்தது.

“சாரி! அது தெரியாம சொல்லிட்டேன்! எப்படி ஆச்சு இது…?”,

ஜெயஸ்ரீ பேசாமல் அமர்ந்திருக்க..

“சொல்லு ஸ்ரீ”, என்று திரும்பக் கேட்கவும்..

அன்றைய நாளின் நினைவுகள்… அவளின் வாழ்வின் பொன்னாளும் அதுதான்! கருப்பு நாளும் அதுதான்…

அவளின் பள்ளி கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போதெல்லாம் பிள்ளைகள் எப்படிப் படிக்கிறார்கள் என்று சொல்வதைப் போல, எங்கு படிக்கிறார்கள் என்று சொல்வதும் ஒரு பெருமை. அப்படி பெருமையாக சொல்லக் கூடிய பள்ளியில் பணத்தைக் கொட்டி ஜெயஸ்ரீயை வஜ்ரவேல் படிக்க வைத்தார்.

அவள் பத்தாவது படித்த சமயம், அவர்களின் பள்ளி முடிந்து பள்ளி வேன் இவர்களின் ஊருக்கு செல்லும் ஒற்றையடிப் பாதையில் திரும்பி சற்று தூரம் வந்த சமயம், வேன் கட்டுபாட்டை இழந்து தாறு மாறாக ஓடாத துவங்கியது.

அந்த வேனிலேயே இவள் தான் பெரிய பெண். அவளில்லாமல் இன்னும் பதினான்கு பேர் இருந்தனர்.. எல்லாம் மூன்றாம், நான்காம், ஐந்தாம் வகுப்பு சிறுவர் சிறுமிகள்.

வேனை என்ன செய்தும் டிரைவரால் நிறுத்த முடியவில்லை… அது ஒற்றையடிப் பாதை… ரோடின் இருமருங்கிலும் சற்று பள்ளம்…

கட்டுப்பாட்டை இழந்தவுடன் அது வேகமாகச் சென்று, சற்றுப் பள்ளமாக இருந்த இடத்தில் சடாரென்று இறங்க குழந்தைகள் வேனிற்குள்ளேயே ஆளுக்கொரு மூலையில் தூக்கி வீசப்பட்டனர். பின்பு பள்ளத்தில் மோதி செங்குத்தாக வேன் நின்றது.

எங்கும் குழந்தைகளின் ஓலங்கள்.. அந்த பகுதியில் அப்போது பார்த்து வண்டிகளும் வரவில்லை.

ஜெயஸ்ரீ தாறுமாறாக ஓட ஆரம்பித்தவுடனே கெட்டியாக அமர்ந்திருந்த இருக்கையைப் பிடித்து அமர்ந்து இருந்தாள். “எல்லோரும் நல்லா சீட் பிடிச்சு உட்காருங்க”, என்றும் கத்திச் சொல்லியிருந்தாள்.

அப்போதும் வேன் இறங்கியவுடன், தலையில் சற்று அடி அடி பலம் தான், ஆனாலும் சுதாரித்தவள் அவள் மட்டுமே..

விழுந்த வேகத்தில் முன் புறம் தீப்பொறி கிளம்பியது. டிரைவர் அண்ணாவைப் பார்த்தாள், அவர் மயங்கியிருந்தார். அவசரமாக குழந்தைகளை இறக்கிவிட ஆரம்பித்தாள்.

“இறங்குங்க! இறங்குங்க! தூரமாப் போய் நில்லுங்க! பேக் எடுக்க வேண்டாம், போனாப் போகுது ஓடு, அழாத ஒன்னுமில்லை”, என்று கத்தி கத்தி, அவள் இறக்கிவிட ஆங்காங்கே அடிபட்டு இருந்தாலும்… எப்படியோ ஒருவரைப் பற்றி ஒருவர் பிள்ளைகள் இறங்கி ஓட ஆரம்பித்தனர்.  

அவர்களை இறக்கி விட்டாள், ஆனால் தீ அதிகமாக எரிய ஆரம்பித்தது.. டிரைவரை அண்ணா அண்ணா என்று கத்தி கத்திக் கூப்பிட்டாலும் அவர் விழிக்கவில்லை.

அவரை விட்டுப் போகவும் மனமில்லை.

தீ பரவ பரவ, அதன் வெப்பம் தாக்க ஆரம்பித்த போதும்… ரிஸ்க் எடுத்து, டிரைவரின் புறம் உள்ள கதவை திறந்து அவரை அப்படியே வெளியே தள்ளினாள்… அவளால் முடியாத ஒரு செயலை மிகுந்த தம் கட்டித் தள்ளினாள். ஏற்கனவே பள்ளத்தில் பாய்ந்து இருந்ததினால் அதிக உயரமில்லை.. அதனால் அவருக்கு தள்ளுவதால் அடிபட வாய்ப்பில்லை. 

அதற்குள் இருவர் அந்தப் பக்கம் டூ வீலரில் வந்தவர்கள் பிள்ளைகளின் ஓலம் கேட்டு விரைந்து வர…

ஒருவர் கீழே விழுந்த டிரைவரை தூரமாக இழுத்து விட்டார்.

“பொண்ணு நீ இறங்கு!”, என்று ஒருவர் படியின் புறம் நின்று கத்தினார். மிகுந்த வெப்பம் மேலே ஏற முடியவில்லை. பேனட்டின் புறம் ஒரு காலை வெளியே வைத்து ஒரு காலை உள்ளே வைத்து டிரைவரை தள்ளியிருந்தாள்.

அவரைத் தள்ளி விட்டு ஜெயஸ்ரீ அவசரமாக கால் எடுப்பதற்குள் அவளின் கட் ஷூ அணிந்த காலில் இருந்த சாக்சில் தீ பட்டது தான் போதும் அது எரியத் துவங்கியது.. அந்த நைலான் சாக்ஸ் காலோடு பிடித்துக் கொண்டது.

அதில் கால் எடுக்க முயன்றாலும் முடியவில்லை.

ஜெயஸ்ரீ கத்திய கத்தல்… அவளின் சாக்ஸில் தீ பற்றி அது ஷூவில் பிடித்து எரியத் துவங்கியது..

அதற்குள் வெப்பத்தையும் மீறி அந்த இரு மனிதர்களும் வந்து அவளின் காலை இழுத்தனர்.

ஒரு மனிதர் காலில் மேலும் தீ பரவாமல் அவருடைய தோளின் துண்டை  எடுத்து தட்டி தட்டி விட இன்னொருவர் காலை இழுத்தார்.

அப்பா! ஜெயஸ்ரீ கத்திய கத்தல் எப்போதாவது திக்கிப் பேசும் அவளின் குரலையும் சேர்த்து மொத்தமாக பாதித்தது.

எப்படியோ அவளை வெளியே இழுத்து வந்து தூர நின்ற சமயம், வேன் திகு திகு வென எரிய ஆரம்பித்தது…

அவர் தட்டிய துண்டிலேயே தீ பிடிக்க, அதற்குள் தீயின் ஆதிக்கம் சற்று அவளின் காலில் குறைய, அந்த மனிதர் கையாலேயே தட்டி தட்டி அவளின் தீயை அணைக்க… இன்னொரு மனிதர் மண்ணைப் போடா…  அந்த சாக்சும் ஷூவும் அதிகம் காலோடு ஒட்டிக் கொள்ள… மிகுந்த சேதாரம் ஆகியிருந்தது.

அதுவரையிலும் ஜெயஸ்ரீ கத்திய கத்தலில், அவளின் காலுக்கு மட்டுமல்ல குரலும் சேதாரம் ஆகியிருந்தது.  அதை அவளின் வாய் மொழியாகக் கேட்கக் கேட்க சிபி பிரமித்து அவளைப் பார்த்திருந்தான்.

Advertisement