Advertisement

அத்தியாயம் இருபது:

இரண்டு நாட்கள் ஆகிவிட்டது, சிபி ஜெயஸ்ரீயின் வீட்டிற்கு வந்து சென்று. என்னே ஒரு விந்தை! இரண்டு வருடங்கள் கடந்தது தெரியவில்லை! ஆனால் இரண்டு நாட்கள் ஜெயஸ்ரீயிற்கு நகரவேயில்லை.

“நான் வரவில்லை என்று சொன்னால், அவ்வளவு தானா! போய்விட்டாரா!”, நினைவு முழுவதும் அவனே…

அன்று கிளாஸ் போகக் கூட ஆர்வமில்லை… அப்படியே அமர்ந்திருந்தாள் தயாராகாமல்.

காலையில் அவள் கிளம்பிவிட்டாளா என்று பார்க்க வந்த பத்மினி, “அக்கா! இன்னும் கிளம்பலையா?”, என்று கேட்க..

“வரலை!”, என்று சைகைக்  காட்டினாள்…

“என்ன, வரலையா?”, என்றாள் பத்மினி அதைப் பார்த்தவுடன் அவ்வளவு அதிர்ச்சியாக.

எதற்கு இவ்வளவு அதிர்ச்சி என்று ஜெயஸ்ரீயிற்கு புரியாமல், “என்ன?”, என்று கையை ஆட்டிக்  கேட்க…

“ஒன்னுமில்லை!”, என்று அவசரமாக மறுத்தவள்.. “இன்னைக்கு வாங்க அக்கா”, என்றாள்.

“இல்லை வரலை!”, என்று சொல்ல..”ம்கூம் வரணும்…!”, என்றாள் பிடிவாதமாக,

“எதுக்கு?”, என்று மீண்டும் சைகையில் கேட்டாள் ஜெயஸ்ரீ.  

“நான் என் பர்த்டேக்கு ட்ரீட் தர்றேன்! ஹி! ஹி!”, என்று சிரித்தாள். ஆறுமாதம் முன்னே வந்த பர்த்டே க்கு இப்போ ட்ரீட்டா என்று ஜெயஸ்ரீ பார்க்க

“அடுத்த பர்த்டேக்கு இப்போவே தர்றேன்!”, என்று சொல்லியவள், ஜெயஸ்ரீ நம்பாமல் பார்க்கவும், “அக்கா வாங்க! என்னை உளற வைக்காதீங்க!”, என்றாள்.

எப்போதும் ஜெயஸ்ரீயின் முகம் அதிகமாக வாடியிருக்கும் போது பத்மினியோ ராகினியோ இதை செய்வது தான்…. 

அது போல தன்னுடைய மூட் சரியில்லாததால் தன்னை உற்சாகப்படுத்தச் சொல்லுகிறாள் என்று நினைத்த ஜெயஸ்ரீ, அவளுக்காக, “சரி வர்றேன்”, என்பது போல தலையசைத்துக் கிளம்பினாள்.

 பஸ் ஏறியதும் எப்போதும் போல ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் ஜெயஸ்ரீ, அருகில் பத்மினி அமர்ந்தாளா இல்லையா என்று கூட கவனிக்கவில்லை. அருகில் அமரும் வித்தியாசம் தெரிந்து, “யார்?”, என்று அவசரமாகப் பார்க்க…

சிபி…

சட்டென்று முகம் புன்னகையைப் பூசியது அவனைப் பார்த்த நொடியில். ஆனால் சில நொடிகளே, அப்படியே முகத்தை மாற்றி புன்னகையைத் துடைத்தாள்.

பிறகு பத்மினி எங்கே என்பது போலப் பார்க்க.. அங்கே தான் அருகில் இருந்தவள், “அது! அது! அண்ணா உங்களைப் பார்க்கணும் சொன்னாங்க!”, என்று தடுமாறினாள்.

அவளை ஒரு பார்வை பார்க்கவும்.. “எந்திரிங்க! அக்காக்கு கோபம்! நானே உட்கார்ந்துக்கறேன்!”, என்று அந்தப் பார்வையில் பயந்து பத்மினி சொல்ல..

“நானாவது எழுவதாவது?”, என்று பத்மினியை சிபி பார்த்து முறைக்க..

அந்தப் பார்வையில் இன்னும் பயந்த பத்மினி, இப்போது ஜெயஸ்ரீயைப் பார்க்க…

“ஒன்னும் பண்ண மாட்டாங்க!”, என்று சற்றுத் திக்கி சொல்லிவிட்டு, “நீ போய் உட்காரு!”, என்று சைகை காட்டி வெளியில் பார்வையைத் திருப்பினாள்… சிபி அசந்து தான் விட்டான். ஜெயஸ்ரீயிடம் எந்த பதட்டமுமில்லை… எழ முற்படவில்லை… எழுந்து போ என்றும் சொல்லவில்லை.

பஸ்சும் கிளம்பி அடுத்த நிறுத்தம் வர, இன்னும் ஆட்கள் ஏறினர்.. ஆனால் ஜெயஸ்ரீ அவன் பக்கம் திரும்பும் வழியாகக் காணோம். 

அவனாகப் பேசினாள் ஒழிய திரும்ப மாட்டாள் என்று புரிந்தவன்.. “எப்படி இருக்க ஸ்ரீ?”, என்றான்.

“பார்க்கும் போதெல்லாம் இதே கேட்பாரா? இவருக்கு வேறு பேசவே தெரியாதா?”, என்று மனதின் ஓரத்தில் ஒரு சலிப்பு எழ, அதே சமயம் “என்ன பதில் கேட்க ஆசைபடுகிறார், நான் நல்லா இருக்கேன்னு சொல்லணும் என்றா..”,

இப்படி எல்லாம் மனதிற்குள் எண்ணம் ஓடினாலும் திரும்பிப் பார்க்கவில்லை.

“அந்த பச்சைக் கலர் புடவை நல்லாயிருக்கு!”, என்றான்.

என்ன பேசுகிறார் இவர் என்று ஜெயஸ்ரீத் திரும்பிப் பார்க்க.. அங்கே நிறையப் பெண்கள், இரண்டு மூன்று பேர் பச்சைக் கலர் புடவையில்… யாரை சொல்லுகிறார் என்று பார்வையால் தேட..

“உன்னைக் காலையில நீ கிளம்பும் போது கண்ணாடில பார்க்கலையா?”, என்றான்.

அவசரமாக தன்னைக் குனிந்து பார்க்க… அவளின் புடவை தான் பச்சை… “ஐயோ! என்ன அசட்டுத்தனம் தன்னுடையது”, என்பது போல நாக்கை கடிக்க..

அவளைப் பார்த்துச் சிரித்தான் சிபி.

அப்போதுதான் வித்தியாசம் புரிய… “பேசியது இவரா?”, என்பது போல பார்த்தவள், அதுவும் சிரிக்கிறானா…. ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

“நான் தான்!”, என்றான் கூடவே… ஜெயஸ்ரீப் புரியாமல் பார்க்க… “பேசறது! சிரிக்கறது! நான் தானான்னு பார்த்த தானே! அதான்!”,

“அப்போ உங்களுக்கு நான் நினைக்கறது எல்லாம் தெரியுதா?”, என்றாள் எப்போதும் போல திக்கித் திணறி.

ஆனால் எந்த அர்த்தத்தில் அதைக் கேட்கிறாள் என்று சிபிக்கு விளங்கவில்லை.

“தெரியலை! எல்லாம் தெரியுதான்னு தெரியலை! தெரிஞ்சிருந்தா நமக்குள்ள இந்த பிரிவு வந்திருக்காதோ என்னவோ? ஆனா நேர்ல நம்ம பேசும்போது நிறைய நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு தெரியுது! அதனால தானே யாரும் எனக்கு வாழ்க்கைக் குடுக்க வேண்டாம்ன்ற மனநிலையோட உட்கார்ந்து இருந்தப்போ, நான் உனக்கு குடுக்கலை! நீ எனக்கு குடுன்னு கேட்டேன்!”, என்று பட பட வென்று பேசி முடித்தான்.

பிறகு மிகவும் தயங்கி, “இப்பவும் அதைத்தான் கேட்கிறேன்! நான் உனக்கு குடுக்கலை! நீ எனக்கு குடு!”, என்றான்.

“ஐயோ! இவர் நிறைய பேசுகிறார்!”, என்பது போல ஜெயஸ்ரீக்கு அவனின் பேச்சுக்கள் ஒரு தோற்றத்தைக் கொடுக்க..

“குடுக்கலைன்னா!”, என்றாள் திணறியபடி..

“என்னோட சைடுல இருந்து எல்லா முயற்சியும் பண்ணிட்டேன்! உங்கப்பா கிட்ட பேசிட்டேன்! உன்கிட்ட பேசிட்டேன்!… இதுக்கு மேல எல்லாம் யார் கிட்டயும் பேசிகிட்டோ, தளைஞ்சு போகவோ முடியாது!”, என்று நிறுத்தினான்.

“அப்போ அப்பா அனுப்பலைன்னா! நான் வரலைன்னா என்னை விட்டுடுவீங்களா….”,

“சாம, தான, பேத, தண்டம்னு இருக்கு…”,

“முதல் ரெண்டும் ட்ரை பண்ணிட்டேன்! அடுத்தது பேதம் ட்ரை பண்ண போறேன்! அதுவும் முடியலைன்னா தண்டம் தான்!”, என்றான்.

ஜெயஸ்ரீக்கு சாம, அதாவது சமாதானம் மட்டும் தான் தெரிந்தது…. வேறு தெரியவில்லை…

“அப்படின்னா?”, என்று கேட்க….

“நீ தான் எப்போ பார்த்தாலும் இப்போ கம்ப்யுட்டர் முன்னாடியே இருக்கியாமே! உன் கூகிள் கடவுள் கிட்ட கேள்..”,

“இது யாரு சொன்னா?”,

“யாரோ சொன்னாங்க? அதுவா முக்கியம்!… நீ எப்போ வர்ற என்னோட?”, என்றான்.

ஜெயஸ்ரீயின் பேச்சுக்கள் திக்கியபடி வந்தாலும், அவளைப் பேச வைத்துக் கொண்டிருந்தான் சிபி. 

அப்படியே அமைதியாகிவிட்டாள் ஜெயஸ்ரீ அந்தக் கேள்விக்கு பிறகு..

“சொல்லு ஸ்ரீ!”, என்று சிபி வற்புறுத்தவும், “தெரியாது!”, என்றாள்..

“ஏன்? ஏன் தெரியாது…?”,

“நீங்க வேணும்னா விட்டுட்டுப் போவீங்க! வேணும்னா வந்து கூப்பிடுவீங்களா? நான் அப்படியே வந்துடணுமா! முடியாது!… நீங்க செஞ்சது தப்பு!”,

“ஆமாம்! தப்பு தான்! நான் எப்ப சரின்னு சொன்னேன்… ஆனா அந்தத் தப்பையே எத்தனை நாள் பிடிச்சிட்டு தொங்க முடியும்…”, இப்போது அவனின் குரலில் கெஞ்சுதல் எல்லாமில்லை.. ஆமாம்! நடந்து விட்டது! அதுக்கென்ன! என்ற ஒரு திமிர் இருப்பதாக ஜெயஸ்ரீயிற்கு தோன்ற…

அவனை ஒரு பார்வை பார்த்தவள்.. “எனக்கு எத்தனை நாள் தேவையோ, அத்தனை நாள் தொங்குவேன்”, என்றாள்.

இதனைச் சிபி எதிர்பார்க்கவில்லை.. ஜெயஸ்ரீ இப்படி பேசுவாள் என்று அவனுக்குத் தெரியாதே.. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினான்… ஆனால் அவள் திணறி திக்கி பேசுவது ஏதோ குழந்தை பேசுவது போல தான் அவனுக்குத் தோற்றத்தைக் கொடுத்தது.  

அதனைக் கொண்டு, “நமக்குக் குழந்தைங்க இருந்தா! அவங்கச் செய்யற தப்பையெல்லாம் இப்படித் தான் பிடிச்சித் தொங்குவோமா”, என்றான்.

“குழந்தைங்களா!”, என்றாள் வியப்பாக.

“ஏன்?”, என்றான், அவளின் அந்த வியப்பான பாவனை புரியாமல்…

“இன்னும் நான் அதைப்பத்தி யோசிச்சதில்லை!”,

“ஏன்?”, என்றான் திரும்பும்…

“அது உங்களுக்குத் தான் தெரியணும்.. நீங்க இன்னும் என்னை யோசிக்க வைக்கலை, நம்ம வாழ்க்கையைப் பற்றி”, என்றாள்… எல்லாம் திக்கித் திணறி தான் பேசினாள் ஆனாலும் பேசினாள். நேரடியான குற்றச்சாட்டு…

“நீ அப்போ என்னைத் தேடவேயில்லையா?”,

“தேடினேன்! ஆனா எங்கப் போயிட்டீங்களோ? என்னாணீங்களோ?.. என்னைப் பிடிக்காம போயிட்டீங்களா?, இப்படி நிறைய நிறைய நினைச்சு இருக்கேன்! ஆனா இதுல நம்ம வாழப் போற வாழ்க்கை, குழந்தைங்க இதெல்லாம் வந்ததேயில்லை…”,

மிகவும் சீரியசாக இருந்தது இருவரின் பேச்சு…

இந்த முறை வெளியிலோ வேறெங்கோ பார்க்கவில்லை ஜெயஸ்ரீ. அவனையே நேர் பார்வைப் பார்த்துப் பேசினாள். அந்தப் பார்வையில், ஒரு கோபம், ஒரு அலட்சியம்… நீ செய்த வேலைக்கு என்னை கேள்வி கேட்பாயா, எந்த முகத்தை வைத்து என்னை கூப்பிடுகிறாய் என்ற நேரடி குற்றச்சாட்டு. 

திருமணம் ஆன நாள் முதலாக மனைவி என்ற கடமையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த சிபிக்கு, சேர்ந்து இருந்த சில நாட்களும் அந்த உரிமையைக் கொண்டு வந்து பேசிய சிபிக்கு..

அவள் தன்னுடன் வாழ மாட்டாள், அது ஊராரின் முன் இன்னும் தனக்கு தலை குனிவு என்று அசட்டுத்தனமாக அவளை விட்டு விட்டு வந்த சிபிக்கு…

தன்னை அவள் தேடி இருக்கிறாள், அப்படி இருக்கும் போதும் தான் அவளை விட்டு வந்தது தவறு.. கட்டின மனைவியை அவள் தன்னை தேடும்போதும் விட்டு விட்டு வந்து விட்டோம்! அதை விட வேறு தவறு என்ன இருக்கிறது? என்ற குற்றுணர்ச்சி கொடுத்த உத்வேகத்தினால், இப்போது அவளின் பின்னால் வந்த சிபிக்கு…

அவளின் இந்த நேர்ப் பேச்சுக்கள், முதல் முறையாக மனைவி என்பதை மீறி ஒரு ஈடுபாட்டோடு அவளைப் பார்க்க வைத்தது.

அவன் ஒரு ஆர்வத்தோடு அவளைப் பார்க்கும் போதே.. “நீங்க நினைச்சு இருக்கீங்களா?”, என்றாள்.

“என்ன?”, என்றான் புரியாமல்.

“நீங்க நினைச்சு இருக்கீங்களா, என்னோட வாழற வாழ்க்கை, குழந்தைங்க எல்லாம்…”, கூடவே, “உண்மையா சொல்லணும்!”, என்ற தீர்க்கமானதொரு பார்வையோடு. வார்த்தைகள் தான் திக்கின, பார்வை, அப்பா! எதிராளியை நடுக்கம் கொள்ளச் செய்யும்.  

மெல்லியப் புன்னகை சிபியின் முகத்தில், கூடவே, “இல்லை”, என்ற தலையாட்டாலும் கூட…

அந்தப் புன்னகை என்னவோ தன்னை கிண்டல் செய்வது போல ஜெயஸ்ரீயிற்கு தோன்ற,

“எதுக்குக் கிண்டல் பண்றீங்க, நான் திக்கித் திக்கிப் பேசறதுனாலையா….”, என்றாள் ரோஷமாக

“சே! சே!”, என்று, “இல்லை! இல்லை!”, என்று அவசரமாக மறுத்தான்.

“அப்புறம் எதுக்கு சிரிச்சீங்க…”, நினைத்தவனுக்கு மறுபடியும் விரிந்த புன்னகை தானாக மலர்ந்தது…  பார்த்த ஜெயஸ்ரீயிற்கு அப்படி ஒரு கோபம் மீண்டும்.

அவள் கோபமாகிறாள் என்று புரிந்தவன்… “என்னைக் கேவலமா திட்டியிருக்க! அப்பவும் எனக்கு கோபம் வராம, சிரிப்பு வருது! நீ ஏன் கோபப்படற”, என்றான் புன்னகையுடன்.

“நான் எப்போ திட்டினேன்!”, என்பது போல ஒரு பார்வை ஜெயஸ்ரீ பார்க்க..

“என்னோட குடும்பம் நடத்தறதுப் பத்தி உன்னை யோசிக்க வைக்கலை தானே… அது என்னோட தப்பு தானே…”, என்றான் புன்னகையுடனே.

ஜெயஸ்ரீயிற்கு நிஜமாகப் புரியவில்லை.. அவள் புரியாமல் பார்க்க, அதற்கும் தோளைக் குலுக்கி சிரித்தான்.

அவன் இவ்வளவு சிரித்தோ, புன்னகைத்தோ பார்த்ததில்லை ஜெயஸ்ரீ…. அவனுடைய சிரிக்கும் கண்களையும், சிரிக்கும் முகத்தையும் இவள் சிரிப்பில்லாமல் பார்த்திருந்தாள்.

“இல்லை! இல்லை! கிண்டல் இல்லை…! என்னை நீ தேடியிருக்கன்றது எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா, இந்த சிரிப்பை நான் என்னைக்காவது கண்டிப்பா புரிய வைக்கிறேன்!”, என்று சொன்னான்.

அதற்குள் கோவை வந்துவிட்டது, பத்மினி இறங்க வேண்டிய இடமும் வந்துவிட்டது. அதன் பிறகே ஜெயஸ்ரீ இறங்கும் நிருத்தம் வரும்.

“அக்கா! நான் இறங்கட்டுமா!”, என்று தயங்கிப் பத்மினி கேட்க…

“சரி”, என்பது போல ஜெயஸ்ரீ தலையசைக்க…

“உங்களுக்குக் கோபமில்லையே!”, என்றாள் திரும்பவும்..

சிபி பத்மினியைப் பார்த்து, “இன்னும் எத்தனை தடவை கேட்ப! அவளுக்கு கோபம் வரலைன்னா கூட வர வெச்சிடுவ போல இருக்கே”, என்றான் சின்ன சிரிப்புடன்.

“ஐயோ! இந்த அண்ணன் சிரிக்கிறாரா!”, என்பது போல பத்மினியும் பார்த்து நிற்க…

“இறங்கு!”, என்பதுப் போல ஜெயஸ்ரீக் கையைக் காட்டவும்… பஸ்சும் அதற்குள் நின்று விட,  “ஓகே கா! பை!”, என்று மனமேயில்லாமல் அவசரமாக இறங்கினாள், திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே..

அவளின் பாவனைகளைப் பார்த்த சிபி கடுப்பே ஆகிவிட்டான்… “இது என்ன? நான் உன்னை என்ன பண்ணிடுவேன்னு அந்தப் பொண்ணு இப்படி லுக்கு விட்டுப் போகுது!”, என்றான்.

கடுப்பான அவனின் முகத்தைப் பார்த்து, இப்போது ஜெயஸ்ரீ புன்னகைக்க… அவளின் கண்களில் தெரிந்த பாவனையைப் பார்த்து லகுவானவன்..

“என்ன நினைச்ச?”, என்றான்.

“நான் ஒன்னும் நினைக்கலையே!”, என்பது போல அவள் தலையாட்ட..

“இல்லை! நினைச்ச!”,

“என்ன? சொல்லுங்க பார்க்கலாம்!”, என்று வாயை திறந்து திக்கித் திக்கி உங்களால் முடியாது என்ற பாவனையோடு சொல்ல..

“அது நீங்க என்னை ஒன்னும் பண்ணமாட்டீங்கன்னு தான் அந்த லுக் விடறான்னு தானே நினைச்ச?”, என்று சிபி சொல்லவும்…

ஜெயஸ்ரீ வாய் விட்டே சிரித்து விட்டாள். சில வருடங்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரிக்கும் சிரிப்பு!! 

Advertisement