Advertisement

அத்தியாயம் இரண்டு:

ஒரு மாதிரி கொதி நிலையில் இருந்தான் சிபி…… இரு போலீசார் பிடித்து நிறுத்தியிருந்தனர்.

“டேய், என்ன? எங்க வந்து கை வைக்கிற, போலிஸ் ஸ்டேஷன்ல வந்து அடிக்கற அளவுக்கு நீ பெரிய ஆளா?”, என்று ஆணையாளர் வேறு அவனை கோபத்தோடு நெருங்கினார்.

சிபி ஆதங்கத்தோடு, “இங்க என்ன சார், அவன் எங்க இருந்தாலும் அடிப்பேன், நாளைக்கு எங்க கல்யாணம் சார், இன்னைக்கு வீடு முழுசும் ஜனம், மண்டபத்துல இருக்கோம், இப்படி பண்ணியிருக்கான்…… இப்ப பண்றவங்க முன்னமே செஞ்சிருக்க வேண்டியது தானே…..”,

“என்னை இப்படி அசிங்கப்படுத்த இவங்க யாரு?”, என்று சிபி கேட்ட விதம், ஆணையாளரின் கோபத்தைக் கூட மட்டுபடுத்தியது. அவன் கேட்பது நியாயம் தானே.

அதற்குள் ராதா சென்று கண்ணனை கை கொடுத்து தூக்கி இருந்தாள்.

மீண்டும் ஆத்திரத்தில் சிபி கண்ணன் அருகில் போக முயல, “அவரை அடிக்காதீங்க”, என்றாள் ராதா தைரியமாக…

“ஏய்! நீ பேசாதடி! ஒரு வார்த்தை என்கிட்டே பேசின கொன்னே போட்டுடுவேன்……  இத்தனை நாள் என் வீட்ல வளர்ந்திருக்க, என்னை அசிங்கமா பேச வெச்சிடாத.. உனக்கு என்னோட எந்த பேச்சும் கூடாது!”, என்று கோபத்தில் கத்தினான்.  

“உன்னை மாதிரி ஒரு பிறவியை நான் கல்யாணம் பண்ண நினைச்சதே எனக்கு அசிங்கமா இருக்கு”, என்று சிபி பேச……

கேட்ட ராதாவின் கண்களில் மளமளவென்று கண்ணீர் இறங்க…. 

“ப்ளீஸ்! இந்த மாதிரி ஒரு நிலைமை வந்ததுக்கு நான் தான் காரணம்! எதுன்னாலும் அவளைப் பேசாதீங்க!”, என்று கண்ணன் பேசவும்…..

ஆத்திரத்தில் திரும்ப வார்த்தையை விட போன சிபியை, நடராஜன் அவசரமாக வந்து அடக்கினார். “அமைதியாயிரு சிபி”, என்று…..

“அப்பா! இதை அப்படியே விட சொல்றீங்களா”, என்று இன்னும் கோபப்பட…..

“வர்மா, நீ அவனைக் கூட்டிகிட்டு வெளிய போ!”, என்றார்……

சிபியைக் கை பிடித்து இழுத்துப் போனான் வர்மன்…… சிபியால் உதற முடியவில்லை, வர்மனின் பிடி அப்படி……

“வா! கோபப்பட்டு ஒன்னும் ஆகப் போறது இல்லை!”, என்று பிடித்து இழுத்து சென்றான்.

“உங்கம்மாவை கூட நீ நினைக்கலைல்ல, ஏன் இப்படிப் பண்ணின? ஒரு வார்த்தை எங்க கிட்ட சொல்லியிருக்கலாம்”, என்று நடராஜன் கேட்க…..

ராதா வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை…… கண்களில் கண்ணீர் வழிய மெளனமாக தான் நின்றிருந்தாள்.

“என் பசங்களை விடவும் உங்களை தானே நான் பார்த்துப் பார்த்து வளர்தேன்! ஏன் இப்படி பண்ணின…..? உங்கம்மா எப்படி இதை தாங்குவா”, என்று அவர் கேட்க………

எந்த பதிலும் பேசவில்லை, அழுதபடி அமைதியாகத் தான் நின்றிருந்தாள்.

அருண்மொழி தான், “ஏதாவது இந்த பய உன்னைக் கட்டாயபடுத்திக் கல்யாணம் பண்ணிகிட்டானா?”, என்று கேட்க…

“இல்லை! இல்லை!”, என்று அதற்கு மட்டும் பதில் சொன்னாள்.. அதற்குள் கும்பலாக சில ஆட்கள் உள்ளே நுழைந்தனர்… 

“என்னடா தம்பி இப்படிப் பண்ணிட்ட? அப்பாக் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா அப்பா முன்ன நின்னு நடத்திக் கொடுத்து இருப்பனே! இப்படிப் பண்ணிட்டியேடா!”, என்றார்.

பார்க்க பெரிய மனிதர் போல தோற்றம் தான். அவர் பேச்சில் இருந்து அவர் கண்ணனின் தந்தை என்று புரிந்தது.

ஆனால் கண்ணன் அவர் பக்கம் கூட திரும்பவில்லை…. அவன் அசையாது எங்கோ பார்த்துக் கொண்டு நின்றான்.

கண்ணனின் தந்தையோடு கூட வந்தவன், சற்று அரசியல் செல்வாக்கான ஆள் போல, “வணக்கம், இன்ஸ்பெக்டர் சார்!”, என்று பெரிய ஹோதாவோடு அவரோடு போய் பேசினான்.

“சார்! பேசி முடிச்சு விடுங்க சார்!”, என்றும் சொன்னான்.

“நாங்க பேச ஒன்னுமில்லைங்க…. பையனும் பொண்ணும் மேஜர்! கல்யாணம் பண்ணிகிட்டாங்க! இப்ப ப்ரொடக்ஷன் கேட்டிருக்காங்க…”,

“சொல்லப்போனா எங்க லிமிட் கூட கிடையாது! அசிஸ்டன்ட் கமிஷனர் ஆபிஸ் தான் போகணும்! ஆனா இங்க ஜாதி பிரச்சனை கிடையாது! ஒரே இதா போயிட்டதால நான் டீல் பண்ணிட்டு இருக்கேன்..”,

“பையன் சைட் ஒரு பிரச்சனையும் இல்லை… பொண்ணு சைட் என்ன சொல்றாங்கன்னு தெரியலை?”, என்று அவர் நீண்ட விளக்கம் கொடுக்க….

“ஐயோ! இவன் பையனா?”, என்பது போல தான் நடராஜனும் அருன்மொழியும் கண்ணனைப் பார்த்து இருந்தனர்.

அவன் தந்தை ஒரு பக்கா ஃபிராடாக தான் ஊருக்குள் அறியப்படுவார்…… குடும்ப விவகாரங்கள் அதிகம் தெரியாது. ஆனால் ஊரைச் சுற்றி கடன்.. ஒருவருக்கும் பணத்தை திரும்ப கொடுக்கும் வழக்கம் இல்லவே இல்லை.

இப்போது புதிதாக இந்த மாவட்ட செயலாளருடன் சுற்றிக் கொண்டு இருக்கிறார்.

அந்த மாவட்ட செயலாளர் பஞ்சாயத்து செய்பவன் போல…… “ம், என்ன சொல்றீங்க?”, என்று நடராஜனை அணுக……

“உன் வேலையைப் பாரு! உன்கிட்ட சொல்லணும்னு அவசியமில்லை!”, என்று முகத்தில் அடித்தார் போல நடராஜன் பதில் சொல்ல……..

“டேய், யார்கிட்ட பேசற தெரியுமா?”, என்று கூட இருந்த கைத்தடிகள் இரண்டு வலுச் சண்டைக்கு வந்தனர்.

“டேய், யாரா இருந்தா என்னடா? எங்க பொண்ணு விஷயம் நாங்க பேசிக்கறோம்! நடுவுல நீங்க யாரு?”, என்று சொல்ல,

“என்னடா எதுத்து பேசற?”, என்று ஒருவன் அருண்மொழியின் சட்டையைப் பிடித்தான்.

ஒரு கை கலப்பு உருவாகும் சூழ்நிலை.. “கை எடு!”, என்று அதட்டிய ஆய்வாளர், பிரித்து விட…..

கண்ணனும் ராதாவும் ஒன்றும் செய்ய இயலாதவர்களாக நின்றனர்.

நடராஜன் இறுகிய முகத்தோடு, “என்ன பண்ண போற?”, என்று ராதாவை நோக்கி கேட்டவர்….. “உங்கம்மா கிட்ட நான் போய் என்ன சொல்ல”, என்றும் கேட்க…….

அவர் கேட்ட விதத்தில் பயந்து, ராதாவின் கண்களில் மளமளவென்று கண்ணீர் இறங்கியது.

“டேய்! யாருடா நீ? எங்க வீட்டுக்கு வாழ வந்த பொண்ணை மிரட்டுற?”, என்று உதார் விட்ட கண்ணனின் தந்தை……. யாரும் எதிர்பாராத வண்ணம் நடராஜனை அடித்து விட…….

“டேய்!”, என்று அருண் மொழி அவர் மீது பாய்ந்தான், அங்கே போலீசாரையும் மீறி ஒரு கைகலப்பு……

சத்தம் கேட்டு சிபியும், வர்மனும் வர……. அங்கே இருந்ததே ஒரு ஆய்வாளர், இரண்டு காவலர்கள், சமாளிக்க முடியவில்லை.  

ஆங்காங்கே தொலைபேசி அழைப்புகள் பறக்க, அவர்கள் பக்கம் இருந்தும் ஆட்கள், இவர்கள் பக்கமிருந்தும் ஆட்கள்….. வந்த வண்ணம் இருக்க……

நிலைமை ஒன்றும் கட்டுக்குள் இல்லை… அது வகுப்புக் கலவரமாக மாறிப் போனது.

இதை ராதாவும் கண்ணனும் எதிர்பார்க்கவேயில்லை. 

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் என்று மணமகனையும் மணமகளையும் விடுத்து, அனைவர் மேலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.

அதனைக் கொண்டு அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். யாரும் எதிர்பார்க்காத நிகழ்வு….

அவர்களும் ஆணையாளரிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தனர்…… வழக்கு பதிய வேண்டாம் என்று, ஆனால் அவர் ஒத்துக் கொள்ளவேயில்லை.

வழக்கு பதிந்ததன் பின்னனியே வேறு…. அந்த அரசியல் செல்வாக்கு உள்ளவன் கட்டப் பஞ்சாயத்து அது இது என்று தேவையில்லாமல் சில ஆராஜங்களில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்க, அதற்காக சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த ஆணையாளர், இது தான் சமயம் என்று உள்ளே போட்டு விட்டார்.

வகுப்புக் கலவரம் என்று கேஸ் பதிந்தாலும், மூலக் காரணம் அந்த அரசியல்வாதி என்று ஸ்ட்ராங்காக எழுதி வைத்தார்.

அனைவரும் சிறையில் அடைக்கப் பட……. சிபியின் வீட்டினருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை……. வீட்டின் அத்தனை ஆண்மக்களும் ஈஸ்வரரை தவிர்த்து எல்லோரும் சிறையில் இருந்தனர். கூட மற்ற உறவினர்கள், தெரிந்த ஆட்கள் என்று கிட்ட தட்ட இருபது பேர்.

கல்யாண வீடு சில மணிநேரங்களில் சோகத்தில் மூழ்கியது…. பெண் போய்விட்டால் என்று வருத்தப்படுவதா, திருமணம் நின்று போனதற்கு வருத்தப் படுவதா, இல்லை அதையும் விட எல்லோரும் சிறை சென்றதற்கு வருத்தப்படுவதா, யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

மாமல்ல வர்மன் சட்டம் தான் படித்துக் கொண்டிருந்தான், அதன் இறுதி வருடத்தில் இருந்தான். அவன் ஒரு வக்கீலிடம் எப்போதும் மாலை வேளைகளில் சென்று உதவியாக இருப்பான்.

அவரிடம் ஈஸ்வரர் விரைந்தார். ஆனால் வழக்கு பதியப்பட்டு இருந்ததால் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கோர்ட்டை அணுகி ஜாமீன் தான் எடுக்க வேண்டும் அதற்கு எப்படியும் மூன்று தினங்களாவது ஆகும் என்று சொன்னார்.

ஈஸ்வரருடன், வாசுவும் மற்ற சிபியின் வேறு இரண்டு நண்பர்களும்   எல்லாவற்றிற்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

அடுத்த நாள் தினசரிகளில் காதல் ஜோடி திருமணம் முடித்து போலிஸ் ஸ்டேஷனில் தஞ்சம், இருபிரிவினரும் அடிதடி…. எல்லோரும் கைது என்று தலைப்புச் செய்தியாகி….. ஊரெல்லாம் இதே பேச்சாக ஆகிற்று.

கணவர் இறந்த பிறகு மக்களே உலகம் என்று வாழ்ந்து விட்ட ராஜலக்ஷ்மியால் இதைத் தாளவே முடியவில்லை…… ஓய்ந்துவிட்டார்..

அம்மாவை பார்க்கவென்று ராதா கண்ணனோடு வர…… ஈஸ்வரரும் சுலோக்ஷனாவும் தங்கள் மகளை ராதாவைப் பார்க்க அனுமதிக்கவேயிலை.

“உன்னை அருமை பெருமையா வளர்த்த மாமனுக்கு நல்ல கைமாறு செஞ்சிட்ட…. நீ போனதும் இல்லமா சிபியோட வாழ்க்கையையும் கெடுத்து, கல்யாணத்துக்கு பணம் செலவு செஞ்சு அதையும் வீணாக்கி, இப்போ அவங்களை ஜெயில் போக வெச்சு….. எங்க எல்லோர் மானத்தையும் வாங்கிட்ட! தயவு செஞ்சு எங்க கண்ல பட்டுடாதா! அப்படியே போயிடு!”, என்று ஏறக்குறைய ராதாவை ஒரு வார்த்தைக் கூட பேச அனுமதிக்காமல் துரத்தி விட்டனர்.

நான்கு நாட்களுக்கு பிறகே வீட்டின் ஆண்மக்கள் மற்றும் சில உறவினர்களும் வெளியே வந்தனர். தங்களோடு நின்ற உறவினர்களும் இந்த வழக்கில் மாட்டிக் கொண்டதால் எல்லா செலவும் சிபியின் வீட்டினரே வழக்குக்கா செலவு செய்து ஜாமீன் தொகையும் கட்டினர். 

திருமண செலவே அதிகம் ஆகிவிட்ட படியால், வீட்டில் இருந்த பெண்களின் நகையை பேங்கில் அடமானம் வைத்து தான் இந்த வழக்கு செலவுகளையே செய்தனர். 

எப்படியாவது அந்த வழக்கில் இருந்து உறவினர்களை விடுவித்து விடுவோம் என்று நடராஜன், அவரின் சார்ப்பாகவும், அவரின் மக்களின் சார்பாகவும் வாக்குறுதி கொடுத்து, மனவருத்தம், பணவருதம் என்று எல்லாவற்றிற்கும் ஆளாகி, அவர்களுக்கு அவர்களே பேசப் பிடிக்காமல் ஆளுக்கு ஒரு பக்கம் முடங்கினர்.  

சிபி அன்றிலிருந்து யாரோடும் பேசவேயில்லை… உள்ளுக்குள் ஒரு ஜ்வாலை கனன்று கொண்டே இருந்தது.

அவனைத் தேற்ற யாராலும் முடியவில்லை, யாரோடும் பேசவில்லை. ஏமாற்றம் அதையும் விட தான் எல்லோர் முன்னிலையிலும் அசிங்கப்பட்டு போனாதாக தான் தோன்றியது.

வீடு வந்தவன் குளித்து, முதலில் தஞ்சம் புகுந்தது அவன்  வயல்காட்டில் தான். அப்போதும் அவனின் பயிர்கள் எந்த குறையுமில்லாமல் நன்றாக இருக்கிறதா என்று சுற்றிப் பார்த்து பின்னரே ஓய்ந்து அமர்ந்தான். அது அவனின் மக்கள். 

ஒரு பாட்டுட்டுண்டு, “பிள்ளைகள் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே”, என்று. அது போல அதே மாதிரி சில சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் கூட மனிதர்களை தடம் பிறழச் செய்வது உண்டு……

மனிதனின் செயல்களை அவனுடைய அப்போதைய தேவைகளே நிர்ணயிக்கும்…… இதிலிருந்து மாறுபடுபவன் மனிதன் அல்ல அதற்கும் மேலே….

சிபி கண்டிப்பாக ஒரு நல்ல மனிதன் தான். ஆனால் அவன் மனிதன் மட்டும் தான். கோப தாபங்கள் நிறைந்த மனிதன்….. பெரியவர்களாகும் முன்பு வேண்டுமானால், இந்த அத்தைப் பெண், மாமன் மகன் என்பது விளையாட்டுப் பேச்சாக இருக்கலாம்…..

ஆனால் அவன் விடலைப் பருவத்திலும், சரி அதைத் தாண்டி ஒரு பக்குவம் அடைந்த பின்பும் சரி, தன் வாழ்க்கைத் துணையாக ராதாவை தான் மனதினில் வரித்து வைத்திருந்தான்.

தாளவே முடியவில்லை! ஏன் இப்படி செய்தாள்? என்ன குறை என்னிடம்? பிடிக்கவில்லை என்றால் சொல்லியிருக்கலாம் தானே! என்ற யோசனைகள் ஓட, வெட்ட வெளியில் வயல் காட்டில், ஓரமிருந்த ஒரு தென்ன மரத்தில் அடியில் படுத்திருந்தான்.

ராதா திருமணம் செய்த அந்த ஆளை மனதினில் கொண்டு வந்தான்…. அவன் நன்றாக தான் இருந்தான், சிபியை விட இன்னும் நிறமாக இருந்தான்….. சிபியை போல ஒரு திராவிட தோற்றமில்லாமல்… ஒரு தென்னிந்திய தோற்றத்தைக் கொண்டு இருந்தான்.

ஆனால் எந்த வகையிலும் தான் அவனுக்கு குறைவு என்பதாக சிபிக்கு தோன்றவில்லை…. பின்பு ஏன் இப்படி செய்தாள்……. இவள் என்ன பெரிய அழகியா? நான் இவள் பின்னால் சுற்ற! வீட்டில் சொல்லிச் சொல்லி என்னை இப்படி செய்து விட்டார்களே!”, என்று வீட்டினர்  அனைவர் மீதும் கோபம்.

இவன் வந்தது தெரிந்து, வாசு இவனைப் பார்க்க விரைந்து வந்தான். இவன் வயல் காட்டில் அப்படிப் படுத்திருந்த தோற்றம் பார்க்கவே மனதிற்கு என்னவோ செய்தது.

அவனருகில் சென்று அமர்ந்தவன், “போனா போயிட்டு போறா விடுடா! அதுக்கு நீயேண்டா இப்படி வாழ்க்கையே முடிஞ்சிபோன மாதிரி படுத்து இருக்க!”,

“யாரு சொன்னா என் வாழ்க்கை முடிஞ்சு போச்சுன்னு? அவ வாழ்க்கையை முடிக்கணும், முடிப்பேன்! எப்படி வாழறான்னு நான் பார்க்கிறேன்! சும்மா விடப் போறது இல்லை!”, என்றான்

அவன் குரலில் இருந்த தீவிரம் சொன்னதை செய்வான் என்று தெளிவாக சொன்னது.

“போயிட்டா……. விடுடா! இன்னும் இழுத்துப் பிடிச்சு என்ன பண்ண போற….”,

“ஊருக்குள்ள அத்தனை பேருக்கும் தெரியும், அவ தான் என் மனைவியா வரப் போறான்னு! ஊருக்குள்ள நான் எப்படி? நான் எப்படி? தலை காட்டுவேன்”,

“வெளில இருந்த பொண்ணுன்னா பரவாயில்லை! என் வீட்ல இருந்தவடா! என்னை விட்டுட்டு போயிட்டா! என்ன பேசுவான் ஊருக்குள்ள…… இவன் கிட்ட என்ன குறையோன்னு தான் பேசுவான்! அவளை என்னை சும்மா விடச் சொல்றியா! மாட்டேன்!”,

“எங்கப்பாவை அடிச்சிட்டாண்டா அவங்கப்பன்! அவனைச் சும்மா விட சொல்றியா! அப்போ மூணு பசங்களை எங்கப்பா பெத்துக்கே அர்த்தமில்லை”.

“அவங்கப்பன் ஒரு உலக மகா ஃபிராட் பையடா? உனக்குத் தெரியாததா?”,

“அவன் எவனா வேணா இருக்கட்டும்! எங்க மேல கை வெச்சிருக்கான்! சும்மா விடப் போறதில்லை…. அப்புறம் இந்த மீசையை வெச்சிகிட்டு அதை முறுக்கிவிட்டு திரியரதை விட வேற என்ன கேவலம் சொல்லு”,

“அதான் கேஸ் ஆகிப் போச்சு! இன்னும் என்னடா?”,

“அதெல்லாம் பத்தாது! நாங்களும் சேர்ந்து தானே அலையறோம்! வேற! வேற ஏதாவது செய்யணும்! எங்கடா இருக்காங்க…?”,

“அவங்க ரெண்டு பேரும் சென்னைக் கிளம்பி போயிட்டாங்க…… அங்க தான் கண்ணனுக்கு வேலை…”,

“அவனை அப்புறம் பார்க்கிறேன்! இப்போ அவங்கப்பன் எங்க இருக்கிறான் அதை சொல்லு………….”,

“அந்த நாதாரிப் பய வெள்ளையுஞ் சொள்ளையுமா சுத்துவான்! அதைத் தவிர வேற ஒன்னும் கிடையாது! ஊரைச் சுத்தி கடன்! வீட்டுக்கு எப்ப வருவான், போவான் எதுவும் தெரியாது….. இப்போ ஒரு மாவட்ட செயலாளர் கூட சுத்துறான்… அவனுக்கு மாமா வேலை பார்த்துட்டு திரியறதா கேள்வி…”,

“முதல்ல எனக்கு பக்கத்துக் காட்டுகாரன் அது மட்டும் தான் தெரியும்…. அவன் ஃபிராடுன்றது ஊருக்கே தெரியும்…… குடும்பத்தை பத்தி இப்ப தான் விசாரிச்சேன்”.

“முத சம்சாரத்துக்கு பொறந்தது, ரெண்டு….. பையன் ஒன்னு, பொண்ணு ஒன்னு, அவன் தான் இந்த பய கண்ணன், பொண்ணு பொறந்தப்போ அவன் சமாசாரம் செத்து போச்சு….. சொந்தத்துலயே இன்னொரு பொண்ணைக் கட்டியிருப்பான் போல….. அதுக்கும் பொண்ணு ஒன்னு பையன் ஒன்னு…..”,

“இந்த பைய தான் என்ஜீனியரிங் முடிச்சு வேலைல இருக்கிறான்….. மத்த மூணும் ஸ்கூல் தான் போகுது….”,

“ஒரு பொண்ணு பதினொன்னாவது, ஒரு பையன் ஒன்பதாவது, இன்னொரு பொண்ணு ஆறாவது. இது தாண்டா அவன் குடும்ப செய்தி….. இந்த லட்சணத்துல அந்த ஸ்கூல் போற பொண்ணுக்கு கல்யாணம்….. இன்னும் ஒரு வாரத்துல….. அந்த மாவட்டம், அவன் தம்பிக்கு குடுக்கறான்…… அதான் அவன் கூட நின்னு இவ்வளவு உதாரு”,

“என்ன கருமமோ….. அந்த பயலுக்கு முப்பது வயசுக்கு மேல….. இந்த பொண்ணுக்கு பதினாறு, பதினேழு தான் இருக்கும்…… பாதி வயசு! அப்பன் காசுக்கு ஆசைப்பட்டு செய்யறான்…. அவங்கண்ணன் நம்ம வீட்டு பொண்ணை இழுத்துட்டு போறான்…… அவன் பொண்டாட்டி வாயைத் தொறந்தா ஒரு நல்ல வார்த்தைக் கூட வராதாம்….”, 

“அவனுங்க சேறுடா… சேத்தை வாரி நம்ம மேல இறைச்சிக்க வேண்டாம்…. அமைதியா இரு! நல்ல பொண்ணா அமையும்……… இதைத் தூக்கிப் போடு!”, என்று சொன்னது எதுவும் சிபியின் காதில் விழவில்லை.

அவன் காதில் விழுந்தது எல்லாம், ஸ்கூல் படிக்கும் பெண்ணிற்கு திருமணம் என்பது வரை தான்……. அதன் பிறகு பேசியது எதுவும் காதில் விழவில்லை.    

“மொத்த குடும்பத்தையும் மறுபடியம் ஜெயிலுக்கு அனுப்பறேன்….”, என்று மனதிற்குள் கருவிக்கொண்டான்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே….                             

                                                  ( கண்ணதாசன் )

 

Advertisement