Advertisement

அத்தியாயம் பத்தொன்பது:

“விடு, விடு”, என்று வார்த்தையால் சொல்லவில்லை ஜெயஸ்ரீ, ஆனால் அவனின் கைகளை விலக்கி இறங்க முற்பட..

“இரு, இரு, இறக்கி விடறேன். என்னையும் சேர்த்து தள்ளி விட்டுடாத”, என்று சிபி அவனின் இயல்பாக அதட்டவும் தான் அமைதியானாள்.

அதற்குள் அந்தப் பெண்மணி, “பூட்ஸ் காலோட வயல்ல இறங்கினது பெரிய தப்பு. அதுக்காகப் பொட்டப் புள்ளைங்களைத் தூக்கக் கூடாது தம்பி! அது இன்னும் தப்பு இறக்கி விடு!”, என்று சொல்ல…

அவரை முறைத்த சிபி, “தெரியாத பொண்ணை யாராவது தூக்குவாங்களா? அவளைத் தள்ளி விடற மாதிரி வேகமா நீங்க வந்துட்டு இப்போ என்ன ராமாயணம் பேசறீங்க! போங்க! போய் வேலையைப் பாருங்க!”, என்று சொல்ல…

அவன் அதட்டியதை எல்லாம் அந்தப் பெண்மணி காதில் வாங்கவில்லை.. “தெரிஞ்ச பொண்ணுன்னாலும் இவ்வளவு நேரமாவா தூக்கி வைப்ப!”, என்று கையைத் தட்டி மோவாய் கட்டையில் கை வைத்து அதிசயிக்க…

அங்கொன்றும் இங்கொன்றுமாய் பார்த்திருந்த ஆட்கள், பக்கத்தில் நெருங்கி வந்தவர்கள், கொல்லென்று சிரித்தனர்.

சிபி ஒரு நான்கைந்து அடிகள் அவளைத் தூக்கியபடி நடந்து வரப்பின் விளிம்பில் இருந்த தென்ன மரத்தின் அடியில் இறக்கி விட்டான். அதற்குள் ராகினி ஓடிச் சென்று ஜெயஸ்ரீயின் ஸ்டிக்கை எடுத்து வந்து அவளின் கையில் கொடுக்க…

அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு எல்லாம் ஜெயஸ்ரீயின் குறைபாடு புரிந்தது. அவர்களுக்கு முகம் விழுந்து விட்டது.

“அது.. பொண்ணு… தெரியாமப் பேசிட்டேன்!”, என்று விளக்கம் கொடுக்க வர, ஜெயஸ்ரீ தெரியாமல் இறங்கிட்டேன் என்பது போல கையெடுத்து கும்பிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

அப்போது தான் சிபிக்கு ஸ்மரனையே வந்தது. அதுவரை விடாது ஜெயஸ்ரீயைத் தான் பார்வையால் அளந்திருந்தான்.

முதலில் சிபியைப் பார்த்ததும் ஒரு அதிர்ச்சி தான் ஜெயஸ்ரீயிற்கு, ஆனால் அவன் தூக்கிய பிறகு தன்னிடம் அதட்டல் போட்ட பிறகு.. அவன் மாறவேயில்லை என்பது போல ஒரு தோற்றம் ஜெயஸ்ரீயிற்கு.

“நானானால் இவன் என்ன ஆனானோ? ஏதானானோ?”, என்று மனதிற்குள் பதறித் தவிக்க..

அதன் சாயல் சிறிதுமின்றி, “என்னை விட்டு ஓடிப்போனான் என்ற குற்றம் சிறிதுமின்றி எப்படி என்னைத் தூக்குகிறான்”, என்று மனதிற்குள் தோன்றிய அடுத்த நொடி…

“அவன் என்ன உன்னை ஆசைப்பட்டா தூக்கினான்! இல்லையே.. பூமியை, பூமித்தாயை, அந்த வயல் வரப்பை நேசிப்பவனாக உன்னுடைய ஷூ கால்கள் அங்கே படக் கூடாது என்று தூக்கினான்… அதுக் கூட உன்னுடைய அறிவிற்கு விளங்கவில்லையா…”, இந்த எண்ணம் தோன்றிய நிமிடம் கோபம்…. ஆத்திரம் பொங்கியது.

சிபியை நோக்கி பார்வையை திருப்பியவளுக்கு அவன் தன்னையே பார்த்திருப்பது புரிய…. திருமணமாகி அந்த நான்கு நாட்களும் இப்படித் தான் பார்த்திருந்தான்… இப்போது இரண்டு வருடம் கழித்தும் இப்படி தான் பார்க்கிறான்.

ஏதோ பொருளை எடை போடுவது போல, ஆராய்ந்து பார்ப்பது போல…

அந்த ஆராயும் பார்வையைப் பார்க்க பிடிக்காதவளாக அந்த இடத்தை விட்டு போக விரும்பி, தடியைக் கொண்டு வேகமாக நடக்க முற்பட… நடை தடுமாறியது.

வேகமாக பத்மினி ஓடி வந்து பிடித்தாள்.

“விடு!”, எனக்கு யாரும் தேவையில்லை என்பது போல அவளின் கையை விலக்கி சற்று சமன்செய்து நடந்தாள்.

அதுவரையிலும் அவளையே பார்த்திருந்தவன்… வேகமாக அருகில் வந்து “எப்படி இருக்குற ஸ்ரீ?”, என்று கேட்டான்…

“உயிரோட தான் இருக்கேன்”, என்று கத்த வேண்டும் போல ஆத்திரம்.. அதை மறையாமல் கண்களில் கொண்டு வந்து அவனைப் பார்க்க..

“எப்படி இருக்க?”, என்றான் மறுபடியும்… எப்படி ஒன்றுமே நடவாதவர் போல இவரால் கேட்க முடிகிறது என்று மேலும் மேலும் ஆத்திரம் பொங்க…

பதில் சொல்லாமல் வழியில் நின்ற அவனைச் சுற்றி நடக்க முற்பட்டாள்.

“உன் பிடிவாதம் மாறவேயில்லை!”, என்று சிபி சொல்லவும் கட்டுக்கடங்காத ஆத்திரம்..

நின்று திரும்பி நிதானமாக அவனை பார்த்தாள்.. பார்வையே, “என்ன கேட்கணுமோ கேளு!”, என்று சொல்லியது..

சிபிக்கு அந்தப் பார்வையை பார்த்ததும் ஒரு தயக்கம் வந்தது.. அருகில் இருந்த பத்மினியும், ராகினியும், ஜெய்சங்கரும் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளட்டும் என்பது போல ஒதுங்கி நிற்க..

“நீங்க எப்படி இருக்கீங்க?”, என்றாள் திக்கித் திணறி..

ஒரு சம்பிரதாயதிற்கு சொல்வது போல, “நல்லாயிருக்கேன்!”, என்று சிபி சொல்ல..

“ஆனா நான் நல்லாயில்லை! என் புருஷன் என்னை விட்டு ஓடிப் போயிட்டார்”, என்று திக்கி திணறி சொன்னாலும், அவனுக்கு மட்டும் கேட்குமாறு தான் சொன்னாள்.

ஆனாலும் அந்த பதில் சிபியை அவ்வளவு காயப்படுத்தியது..

“நான் ஒன்னும் ஓடி வரலை! நீங்க யாரும் வேண்டாம்னு சொல்லி தான் வந்தேன்… அதுவும் உங்கப்பா கிட்ட வந்து எங்க கேட்டாலும் கையெழுத்துப் போடறேன்னு சொல்லி தான் வந்தேன்!”, என்று சொல்லவும்..

இப்போது ஜெயஸ்ரீயின் மனம் அவ்வளவு காயப்பட்டது… இதுவரை இருந்த மனநிலை போய் அழுகை முட்டியது, கண்களில் நீர் நிறைய, “அப்போ உங்களுக்கு என்னைப் பிடிக்கலை, அதான் விட்டுட்டீங்க.. என்னவோ நான் உனக்கு வாழ்க்கை குடுக்கலை! நீ எனக்கு குடுன்னு சொன்னீங்க! எல்லாம் சும்மா தானே!”, திணறி திணறி சொல்லும் போதே அழுகை வந்துவிட்டது.

அதற்கு மேல் யாருக்கும் காட்சிப் பொருள் ஆக விருப்பமற்று கண்களில் நீர் வழிய நடக்க..

திருமணதிற்கு முன் தான் அவளிடம் கேட்ட வார்த்தைகள்… அவள் சொன்ன விதமே அவளின் மனதிலும் நினைவிலும் அது அழியாச் சித்திரம் என்ற உண்மை சிபியின் முகத்தில் அறைந்தது. 

அப்போது எனக்கு அவளைப் பிடிக்க வேண்டும் என்பது தான் அவளின் நினைவா… அதை அவள் விரும்புகிறாளா என்று சிபி நினைக்கும் போதே… ஜெயஸ்ரீ சிறிது தூரம் நடந்து சென்று விட்டிருக்க..

“அக்கா! ஏன் அழுதுகிட்டு வர்றீங்க?”, என்று ராகினி கேட்க…

பத்மினி ஒரு படி மேலே போய் அவனிடம் விரைந்து நடந்து வந்து சண்டையிட்டாள்.. “போன வாரம் கூட உங்களை எவ்வளவு தேடுனாங்க தெரியுமா… வாசு அண்ணா போன் நம்பர் வாங்கிப் பேச சொன்னாங்க… நான் தான் அவங்க சார்பா நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியுமான்னு கேட்டேன்..”,

“நீங்க அழ வைக்கறீங்க அவங்களை…. எப்பவும் வெளில போகும் போது எல்லாம்….. பஸ்ல போகும்போது எல்லாம்….. நீங்க எங்கயாவது தெரியறீங்கலான்னு பார்த்துகிட்டே போவாங்க!”, என்று பொறிந்தாள்.

கேட்டுக் கொண்டிருந்த ஜெயஸ்ரீயிற்கு இன்னும் கீழிறக்கமாகத் தான் போய் விட்டது. இப்படி இந்த பெண்ணிற்கு தெரியும்படி தான் இருந்திருக்கிறோம் தன் மனநிலைகள் இருந்திருக்கின்றன என்று…

அவளை வர சொல்லு என்று ஜெய்சங்கரைப் பார்த்து சைகை செய்ததில் அவன் பத்மினியைப் பார்த்து, “வா!”, என்று கத்தினான்.. 

அப்போதும், “அக்காவோ அவங்கப்பாவோ எங்களை விடவேயில்லை இந்த வருஷமா……… நீங்க ஏன் அவங்களை விட்டீங்க…. எந்த சொந்தமும் இல்லாத அவங்க எங்களைப் பார்த்த அளவு கூட.. அவங்களுக்கு முதல் சொந்தமான நீங்க அவங்களைப் பார்க்கலைல்ல”, என்று ஆவேசமாக கேட்டு நிற்க…  

ஜெய்சங்கர் பத்மினியை மேலும் பேசவிடாமல் வந்து இழுத்துச் சென்றான்…   

நால்வரும் திரும்பிப் பார்க்காமல் நடந்தனர்.

சொந்தங்களை விட்டு விலகி வந்தவனுக்கு, இப்போது இந்த உலகத்தை விட்டு விலகி விட்டால் பரவாயில்லை என்று தான் தோன்றியது. சிபி இன்னும் கல்லாய் சமைந்து நின்றுவிட்டான். 

ஜெயஸ்ரீயை விட்டு வந்த நாளாக அவள் தன்னை தேடக் கூடும்… என்று கனவிலும் நினைத்ததில்லை. அத்துணை வருடங்களாக கூட இருந்த பெண் வேண்டாம் என்று சென்று விட்டாள்…. இதில் திருமணமாகி சில நாட்கள் இருந்தவள், அப்படி ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னைத் தேடக் கூடும் என்று அவன் எண்ணியதேயில்லை. 

“கண்ணுக்கு கண்ணாக அவளின் தந்தை பார்த்துக் கொள்கிறார்… அவனோடு பெண்ணை அனுப்பும் எண்ணமோ, வாழ்க்கையைத் தொடரும் எண்ணமோ, இருந்திருந்தால் கண்டிப்பாக கேஸ் கொடுத்திருக்க மாட்டார், இப்படி போலிஸ் கேஸ் என்றான பிறகு தன்னுடன் அனுப்பமாட்டார்…”,

வருடக்கணக்கில் இவள் தான் உன் மனைவி என்று அடையாளம் காட்டப் பட்ட பெண் திருமணத்திற்கு முதல் நாள் போய் விட்டாள்… மனைவியான பெண்ணும் நான்கு நாட்களில் இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தி போய் விட்டாள்…. எல்லோர் முன்னிலும் வாழ்க்கைத் துணையை தொலைத்து நிற்கும் அந்த அசிங்கம் வேண்டாம் என்று தான் வந்துவிட்டான்.

இதில் ஜெயஸ்ரீ தன்னைத் தேடுவாள் என்று எப்படி நினைப்பான்.. பெண்டாட்டி தன்னை வேண்டாம் என்று சொல்லும் அசிங்கம் யார் முன்னிலும் வேண்டாம் என்று தான் விலகி வந்தான்.

இதில் ஓடிப் போய்விட்டான் என்ற அவப் பெயரா… உண்மையில் எனக்கு உலகம் புரியவில்லையா.         

உண்மையில் திருமண பந்தம் கொடுக்கும் சொந்தம் அலாதியானது என்று தான் அவனுக்குப் புரியவில்லை. 

அதற்குள் தனதிடம் சென்றிருந்தவர்கள்…. சிபியைப் பார்த்த விபரத்தை எடுத்துரைக்க…

அவரும் வேகமாக அவனைக் காண வந்தார். வந்தவர், “என்ன தம்பி இப்படி சொல்லாம கொள்ளாம காணாமப் போயிட்டீங்க. இப்படிப் பண்ணலாமா?”, என்று கேட்க…

நிஜத்தில் சிபி குழம்பிப் போனான்… “என்ன இவர்கள் ஜெயஸ்ரீயை என்னுடன் வாழ அனுமதித்து இருப்பார்களா?”, என்பது போல…

தானாக தப்பு தப்பாக நடக்கும் விஷயங்களில், தான் இன்னும் தப்பு செய்கிறோமா. இருந்தாலும் ஜெயஸ்ரீ அப்படிப் கண்ணீரோடு அப்போது போனது மனதை வருத்தியது. வீட்டில் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு அவள் வரமாட்டாள் அவளின் தந்தையும் அனுப்பமாட்டார் என்று தான் விலகினான். அவளாகத் தன்னைத் தேடி இருக்கிறாள் என்று தெரிந்த பிறகும் அவளை விடுவது சரியல்லவே.  

“பக்கத்துல தான் என் வீடு வாங்களேன்!”, என்று கூப்பிட்டான்.

“அதுங்க தம்பி, மாமா கிட்ட கேட்காம வரமுடியாதுங்க”, என்றார்.

“கேளுங்களேன்!”, என்றான் இவனும் உடனே… வஜ்ரவேலின் எண்ணம் என்ன என்று தெரிந்து கொள்ள…

தனம் வஜ்ரவேலிடம் தொலைபேசியில் அழைத்துக் கேட்க… “ஒரு வாரம் முன்னாடி தான் அந்தப் பையன் வீட்டுக்கு நாம விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியிருக்கோம்”, என்று சொல்ல தனத்திற்கு அதிர்ச்சி.

“நீங்க அங்க இருக்க வேண்டாம்! விருந்து முடியலைன்னாலும் கிளம்பிடுங்க… அவனுக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியிருக்கோம்! அதுக்குண்டானது என்னவோ செய்ய சொல்லு!”, என்று சொல்லி விட்டார்.

விஷயத்தை சிபியிடம் சொல்லவும் அவனுக்கும் அதிர்ச்சி தான். அவர்கள் அதைத்தான் செய்வர் என்று இத்தனை நாளும் நினைத்து இருந்தான். ஜெயஸ்ரீயைப் பார்க்காமல் இருந்திருந்தால் இந்த அதிர்ச்சி இருந்திருக்காது.

இப்போது அவளை பார்த்த பிறகு, அவள் தன்னைத் தேடியிருக்கிறாள் என்று தெரிந்த பிறகு… அதுவும் அவள் தன்னிடம் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை, அதுதான் சென்று விட்டாய் என்று குற்றம் சாட்டிய பிறகு, தன்னோடு அவள் வருவாளா என்று மனம் எதிர்பார்க்கத் துவங்கிய பிறகு,

இப்படி ஒரு விஷயம் கேள்விப்படுவது அதிர்ச்சி தான் அவனுக்கு.

சிபிக்கு என்ன செய்வது என்று யோசிக்க கூட அவகாசமில்லை. அவனிடம் விஷயத்தை சொன்ன நிமிடம், வஜ்ரவேலின் சொல்லுக்கு இணங்க உடனே கிளம்பிவிட்டார்கள்.

அவர்களின் கார் கிளம்புமுன் அவர்கள் இருந்த இடத்தை அடைந்த சிபி.. “நான் ஜெயஸ்ரீகிட்ட பேசணும்”, என்று சொல்லவும்..

“இல்லைங்க தம்பி! அதுக்கு அனுமதிக்க வேண்டாம்னு இப்போ மாமா திரும்ப போன்ல சொன்னார்!”, என்று சொல்லி அவர்கள் கிளம்பிவிட…

சிபியால் அந்த நிமிடத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை, கார் கிளம்புவதைப் பார்ப்பதைத் தவிர…

ஜெயஸ்ரீ அவனைப் பார்ப்பாளா என்று எதிர்பார்த்துப் பார்க்க… அவள் பார்க்கவேயில்லை.

சற்றும் யோசிக்கவில்லை… ஆட்களிடம் சொல்லிவிட்டு அவனும் பின்னோடு கிளம்பிவிட்டான் ஜெயஸ்ரீயின் வீட்டிற்கு.

அவர்கள் காரில் சென்றதால் வெகு முன்னரே சென்று விட்டனர். அவன் பஸ் ஏறி இடத்தைச் சென்றடைய மாலை ஆனது.

அழுது அழுது ஓய்ந்து அப்போதுதான் உறங்க ஆரம்பித்து இருந்தாள் ஜெயஸ்ரீ.

வஜ்ரவேலிற்கு பெண்ணின் நிலைமை தெரியவில்லை. இவர்களை அனுப்பி விட்டு.. அவர் ஒரு பக்கம் ஒரு கொள்முதல் விஷயமாக சேலம் கிளம்பியிருந்தார்.

இவர்கள் விஷயத்தைச் சொல்லவும் இவர்களை கிளம்பி வர சொன்னவர்.. அவரும் ஊர் திரும்ப ஆரம்பித்து இருந்தார்.

அவரும் மாலை வீடு வந்துவிட்டார். அவர் வந்து வீட்டின் உள் நுழைந்த நிமிடம் சிபியும் வந்தான்.

அவனை அவர் எதிர்பார்க்கவில்லை. தனம் தான் ஜெயஸ்ரீ உறங்குவதால் வீட்டின் உள் இருந்தார். அப்போதுதான் வந்த வஜ்ரவேல், “ஜெயஸ்ரீ என்ன பண்றா?”, என்று கேட்டுக் கொண்டிருக்க…

“தூங்கறாங்க மாமா!”, என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த நேரம் சிபி வர..

அதிர்ந்த வஜ்ரவேல் சுதாரித்து, “என்ன விஷயம்?”, என்று கடினமாகக் கேட்க..

கண்டிப்பாக அவனை வரவேற்பார் வஜ்ரவேல் என்று எதிர்பார்க்கவில்லை சிபி. அதனால் அதை மனதில் கொள்ளாமல், “ஜெயஸ்ரீயைப் பார்க்கலாம்னு வந்தேன்!”, என்று சொல்லியும் விட…

“எதுக்குப் பார்க்கணும்? இத்தனை நாள் ஆள் அட்ரசே இல்லை.. இப்போ எதுக்குப் பார்க்கணும்!”.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. “அவளுக்கு என்னைப் பார்க்க பிடிக்காதுன்னு நினைச்சு வரலை! இப்போ தான் பிடிக்கும்னு தெரிஞ்சது அதான் வந்தேன்!”, என்றா சொல்ல முடியும். மௌனமாக நின்றான்.

“அது தெரியாம நடந்துடுச்சு! இனிமே அப்படி நடக்காது!”, என்று சொல்லவும் செய்தான்.

“இனிமே நடக்குது, நடக்கலை, அது பேச்சில்லை… இப்ப எதுக்கு வந்த என் பொண்ணோட வாழலாம்னு நினைச்சா.. கண்டிப்பா முடியாது… உங்களுக்கு அவ அருமை தெரியலை. வீட்டுக்கு அனுப்பி வச்சவளை நாலு நாள்ல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வெச்சிட்டீங்க மொத்த குடும்பமும்..”,

“அட விரோதியா கூட இருந்துட்டு போறா௧! ஆனா அடிபட்டவங்களைப் பார்க்கணும்ன்ற ஒரு மனிதாபிமானம் கூட உங்க யார்கிட்டயும் இல்லை”.

“இல்லை இனிமே அப்படி நடக்காது! நான் அவங்க கூட இல்லை..!”,

“அது அன்னைக்கே வந்து சொல்லியிருக்கணும்… உங்க ஆளுங்களுக்காக நான் தான் தள்ளினேன்னு சொல்லி ஜெயில்ல போய் உட்கார்ந்த..”,

“என் பொண்ணு சொன்னான்னு நானும் கேசை வாபஸ் வாங்கினேன்.. ஆனா நீ அன்னைக்கே வந்து எல்லாத்தையும் குடுத்துட்டு எப்படி இருக்கா அவன்னு கூட பார்க்காம அவளை விட்டுட்டுப் போயிட்ட.. ரெண்டு வருஷம் எங்க இருந்தன்னு கூட தெரியலை…”,

“உன்னை நம்பி எல்லாம் பொண்ணை அனுப்ப முடியாது… மறுபடியும் நீ விட்டுட்டு போயிடுவியோன்னு பயந்துட்டு இருக்க முடியாது.. எங்க கேட்டாலும் கையெழுத்துப் போடறேன்னு சொன்ன இல்லை.. டைவர்ஸ் குடுத்துடு! என் பொண்ணு நிம்மதியா இருக்கட்டும்!”.

“அதெல்லாம் குடுக்க முடியாது… குடுக்க மாட்டேன்!”,

“என் பொண்ணை நான் அனுப்ப மாட்டேன்!”,

“அது அப்புறம் பார்த்துக்கலாம்! ஆனா நான் டைவர்ஸ் குடுக்க மாட்டேன்… நான் விட்டுட்டு போனது தப்பு தான்! ஆனா அந்த தப்பை திரும்ப செய்ய மாட்டேன்..”,

“நான் அனுப்ப மாட்டேன்!”,

“அது அவ சொல்லட்டும் நான் போறேன்!”,

“அவ்வளவு தானே! அவளே சொல்லுவா!”,

தனத்தை பார்த்தவர்…. “ஜெயஸ்ரீயை எழுப்பு!”,

அரக்கப் பரக்க தனம் அவளை எழுப்பி, “அப்பா கூப்பிடறார் அந்த தம்பி வந்திருக்காங்க”, என்று சொல்ல….

விரைந்து சுவரைப் பிடித்து என்னவோ ஏதோவென்று வர…

“கண்ணு இவர் உன்கிட்டப் பேசணுமாம்! பேசு!”, என்று கையைக் கட்டி வஜ்ரவேல் நிற்க…

“என்ன?”, என்பது கண்களில் கலக்கத்தோடுப் பார்க்கவும்…

“உன்னைக் கூட்டிட்டுப் போக கேட்டான்! நான் அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டேன்.. ஆனா நீ சொன்னா தான் போவேன்னு நிற்கிறான்! நீயே சொல்லிடு கண்ணு…”, அப்பாவின் முகத்தைப் பார்த்தவள்….

சிபி எதுவும் கேட்கும் முன்னரே, “நான் வரலை!”, என்றாள் ஜெயஸ்ரீ…   

“ஏன் வரலை?”, என்று பேச்சை வளர்த்தினான் சிபி…

அவனுக்கு என்னவோ ஒரு உந்துதல்.. “உன்னை நான் விடமாட்டேன்!”, என்று ஜெயஸ்ரீக்கு உணர்த்திவிடும் உந்துதல்… இத்தனை நாளாக இல்லாத ஒரு உந்துதல், ஜெயஸ்ரீ தன்னைத் தேடி இருக்கிறாள், இன்னமும் தேடுகின்றாள் என்ற தைரியம் கொடுத்த உந்துதல்.

வஜ்ரவேல் அவனை மேலே பேச விடாமல், “தயவு செஞ்சு எங்களை விட்டுடு… போயிடு.. என் பொண்ணுக்கு விவாகரத்துக் குடுத்துடு!”, என்று கை கூப்பிக் கேட்கவும்..

சண்டை போடும் மனிதரிடம், சண்டை போடலாம் இப்படி பேசும் மனிதரிடம் என்னப் பேச..

“நான் செஞ்சது தப்பு தான்! என்னை மன்னிச்சிடுங்க, ஒரு வாய்ப்புக் குடுங்க! நான் நல்லா பார்த்துக்குவேன்!”, என்று சிபியும் கை கூப்பிக் கேட்டான்.

அவரும் ஜெயஸ்ரீயை அவனுடன் அனுப்பத் தயாரில்லை… இவனும் அவளை விட்டுப் போகத் தயாரில்லை…

“இல்லை! எனக்கு நம்பிக்கையில்லை! ரெண்டு வருஷம் நீ இல்லை… இப்போக் கூட நீயா வரலை… என் பொண்ணு பார்க்கவும் வந்திருக்க… கிளம்பிடு!”, என்று சொல்லி பேச்சு முடிந்தது என்பது போல வஜ்ரவேல் உள் செல்ல…

ஜெயஸ்ரீயும் அவரின் பின் சென்றாள்.

சிபியால் பார்க்கத் தான் முடிந்தது, வேறு செய்ய முடியவில்லை… ஜெயஸ்ரீ அவளிடம் பேசும் வாய்ப்பை அவனுக்கு கொடுக்கவேயில்லை. தளர்வாக படி இறங்கி செல்ல…

அவன் சென்று விட்டது தெரிந்ததும், அப்பாவைப் பார்த்து… “அவரை மரியாதையில்லாம வா, போ, ன்னு பேசாதீங்கப்பா..”,   என்று திக்கித் திக்கி சொன்னாள்.

“விட்டுட்டுப் போயிட்டான்! அவனுக்கு என்ன மரியாதை..?”,

“அப்பா! இப்படிப் பேசாதீங்க…”, என்றாள் திணறலாக.

“அப்போ நீ அவனோட போகப் போறியா…”,

“இல்லை!”, என்பது போல தலையசைத்து, “மரியாதையில்லாம அவரைப் பேசாதீங்க!”, என்று சொல்லிச் செல்லும் மகளைப் புரியாமல் பார்த்தார்.     

Advertisement