Advertisement

அத்தியாயம் பதினேழு:

அன்று இரவு உணவு உண்ண அழைத்த போது ஜெயஸ்ரீ, “கண்டிப்பாகத் தன்னால் சாப்பிட முடியாது…”, என்பதைத் திக்கித் திக்கி கூட சொல்லவில்லை, சைகையால் தான் கூறினாள்.

அப்படி ஒரு வேதனை அவளின் முகத்தில், அழுகையெல்லாம் இல்லை.

“அவங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்கறேன்….. முகத்துக்கு நேரா அந்த வார்த்தைகளைச் சொல்லக் கூடாதுன்ற அறிவு கூட அவனுக்கு இல்லை”, என்று சிபி சொல்லவும்….

சிபியின் முகத்தைக் கூட பார்க்கவில்லை, வேறெங்கோ பார்த்தாள்.

அவளாக சகஜமாக முற்படும் போது, இப்படி வீட்டினர் செய்வது சிபிக்கு வருத்தத்தைக் கொடுத்தது…

ஜெயஸ்ரீ சாப்பிடவில்லை…. சிபிக்கு பசி தான் ஆனால் அவள் சாப்பிடாமல் இருக்கும் போது தான் மட்டும் சாப்பிடுவது தவறு போல தோன்ற அவனும் சாப்பிடவில்லை.

புதிதாக வந்த கட்டிலில் ஜெயஸ்ரீ படுத்துக் கொள்ள, சிபி அதில் படுக்காமல் கீழே படுத்துக் கொண்டான்.

“என்னால் இங்கே இருக்க முடியாது”, என்பது போல ஒரு எண்ணம் தான் ஜெயஸ்ரீயின் மனதில்…

ஜெயஸ்ரீ, சிபியைக் கணவன் என்று நினைத்தாலும் அதையும் மீறிய ஒரு பிடிப்பு இன்னும் அவளுள் வரவில்லை. அதே தான் சிபிக்கும் ஜெயஸ்ரீக்காக வீட்டினரிடம் சண்டை போட்டாலும், ஏன் நான் தனியாக போகிறேன் என்று சொன்னாலும்… அதையும் மீறியப் பிடிப்பு, மனதின் தேடுதல் இன்னுமில்லை.

இரவு முடிந்து விடியல் வந்துவிட, ஜெயஸ்ரீ எழுந்து பார்த்த போது சிபி அங்கேயில்லை. அவன் காலையில் வயலுக்கு சென்று விட்டான். அவனுக்குக் காலையில் அதைப் பார்த்தால் தான் அந்த நாளே ஓடும். திருமணம் ஆன நாள் முதல் அந்த இடத்தை எட்டிப் பார்க்கவில்லை. அதிகமில்லை நான்கு நாட்கள் தான். 

அதுதான் அவன் செய்த மிகபெரிய தவறு…. அன்றைய நாளுக்காக அவன் பார்க்க…. அதற்காக அவன் வருந்தப் போகும் நாட்கள் பல என்று அவனுக்குத் தெரியவில்லை..    

இனி அப்போதைக்கு அந்த வயலில் அவன் காலடி வைக்கப் போவதில்லை என்று தெரியவில்லை. சிறு வயது முதல் தினமும் பரீட்சை தினங்களில் கூட ஓடி வந்து ஒரு பார்வை பார்த்து தான் போவான். அது எந்த காலம் என்றாலும் சரி, நாற்று நட்டபோதும், பயிர் வளர்ந்த போதும், அறுவடை காலம் ஆன போதும், எப்போதும் எந்த பருவமானாலும் அவன் ஓடிவந்து பார்க்குமிடம்.   

அன்றும் அப்படிப் பார்வையிடப் போய் விட… மிகுந்த அனர்த்தங்கள். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல ஜெயஸ்ரீயிற்கு சிபியின் வீட்டில் ஆகிவிட்டது.

காலை எழுந்து வெளியே வந்தவளிடம், “போய்க் குளிச்சிட்டு வாம்மா, டீ சாப்பிடுவியாம்”, என்று தேவி நல்ல விதமாகத் தான் சொன்னார்.

ஜெயஸ்ரீயும் யாரிடமும் எதையும் காட்டக் கூடாது! அவர்கள் எப்படி இருந்தால் என்ன? அவர்களின் நாகரீகங்கள் அவ்வளவு தான்! நாம் நல்லவிதமாக இருந்து விட்டுப் போவோம்..  என்று நினைத்து, துணிகளை எடுத்துக் கொண்டு பின்கட்டில் இருக்கும் பாத்ரூமிற்கு குளிக்கச் சென்றாள்.

குளிக்க போவதால் காலில் இருந்த ஷூவைக் கழற்றி விட்டு ஒரு ஆதாரத்திற்கு கையில் தன்னுடைய கைத்தடியை மட்டும் கொண்டு அதை ஊணி நடந்தாள். நேற்று மதியம் அவசரமாக சாப்பிட்டது நேற்று இரவு சாப்பிடாதது களைப்பாக இருந்தது.

“இதில் இவர்கள் குளித்து விட்டு வா! டீ குடிக்கலாம் என்று  சொன்னால் குளிக்க தெம்பு வேண்டாமா…”, மனதின் சோர்வு உடலின் சோர்வு எப்படியோ குளித்து வந்தாள்… ஆனால் குளியலறையில் புடவை சரியாக கட்டவில்லை… பின் போடாமல் அப்படியே கட்டி வந்தாள்.

அவள் வெளியே நடந்து ரூமிற்கு வரும் நேரம், பள்ளிக்கு தயாராகிக் கொண்டிருந்த மணிமேகலை, சித்தி என்று வந்து அவளின் புடவையை பிடித்து இழுத்தது,

 ஏற்கனவே அவளின் அம்மா பேசவேண்டாம் என்று சொன்னது, பின்னர் புடவையை பின் வேறு செய்யவில்லை, அது சரிந்து விழுந்து விட்டால், “விடு”, என்று சொல்லுவதற்கும் வார்த்தைகள் சட்டென்று வரவில்லை,

இவள் புடவையை விடு என்பது போல இழுக்க… பதிலுக்கு மணிமேகலையும் விளையாட்டுப் போல இழுத்தாள், குழந்தை தானே அது விளையாடியது.

பின் குத்தவில்லை, புடவை சரிந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம், கூடவே மணிமேகலை இழுப்பதால் இவள் தடுமாற ஆரம்பித்தாள்… அவளுடைய ஸ்டிக்கை அங்கே பாத்ரூம் வெளியில் வைத்திருந்ததால்..

அதை எடுக்காமல் சுவரை பிடித்து ஏதோ யோசனையில் வந்து விட்டால், இப்போது மணிமேகலை இழுக்கவும், இவள் பதிலுக்கு இழுக்கவும் பேலன்ஸ் தப்பியது.

அந்த பதட்டத்தில் வேகமாக இழுத்துவிட புடவையை, குழந்தை பிடியை விடவும் அது தவறி சற்று தூர போய் விழுந்தது. உடனே பெரும் குரலெடுத்து அழ……

எல்லோரும் ஓடி வந்தனர், நடராஜனும் சிபியும் மட்டுமில்லை வீட்டில்…

குழந்தையைத் தூக்கிக் கொண்டே வனிதா, “என்னம்மா?”, என்று கேட்க…

“சித்தி, தள்ளி விட்டுட்டா!”, என்றது மழலையில் சொல்லவும், எல்லோரும் என்ன இது என்பது போல ஜெயஸ்ரீயைப் பார்க்க…

அவளுக்கு காரணம் சொல்ல முடியவில்லை என்பது ஒரு புறம், பேசவும் வரவில்லை.

அங்கே இருந்த சுலோச்சனா பாட்டி, “உன்கிட்ட பேசக் கூடாதுன்னு சொன்னதுக்காக குழந்தையை தள்ளிவிடுவியா, அது தப்புமா!”, என்று பெரிய மனுஷியாக பேச,

“ஐயோ! நான் குழந்தையைத் தள்ளி விட்டேனா!” ஜெயஸ்ரீ பதட்டமாகி விட்டாள்,

“இல்லை”, என்பது போல தலையசைக்க,

“குழந்தை பொய் சொல்லாது! எப்படி விழுந்த?”, என்று அங்கு ஒரு விசாரணை நடக்க…  ஜெயஸ்ரீ குழந்தை என்ன சொன்னால் என்று கூட கவனிக்கவில்லை… அவள் பாட்டிற்கு சுவரைப் பிடித்து உள்ளே சென்றாள், இவர்கள் சொன்ன குற்றம், சாப்பிடாதது, கூடவே பதட்டம் நிற்க முடியவில்லை.. தலையே சுற்றியது.

அமர்வதற்காக உள் செல்ல, சுலோச்சனா பேசிக்கொண்டே இருக்கும் போது செல்லவும்,

தேவி கோபமாக, “என்ன பழக்கம் இது ஜெயஸ்ரீ? பெரியவங்க பேசும் போது போறது, உன்னால பேச தான் முடியாது, பேசறதைக் கேட்கறது கூடவா முடியாது”, என்று ஒரு அதட்டல் போடவும், அதுவும் எல்லோரும் பார்க்க, ஜெயஸ்ரீக்கு கண்களில் நீர் தளும்பி விட்டது.

என்ன செய்வது என்றும் தெரியவில்லை. சுவரில் சாய்ந்து நின்று விட்டாள். மணிமேகலை வேறு அழுகையை நிறுத்திய பாடு இல்லை.

மாமல்ல வர்மன் தேவியிடம், “அம்மா! சிபி இல்லை, அவன் வரட்டும்! இப்படிப் பேசாதீங்க பாருங்க! அவங்களுக்கு நிக்க முடியலை போல”, என்று அம்மாவை அதட்ட..

சிபி பேசியதை ஏற்கனவே கேட்டு இருந்ததால், எதற்கு வம்பு என்று எல்லோரும் அந்த இடம் விட்டு நகர்ந்தனர்.

“இல்லை, என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது”, என்ற எண்ணம் ஸ்திரமாய் அவளின் மனதில் இன்னும் பதிந்தது.

அழுகை! அப்படி ஒரு அழுகை! ஜெயஸ்ரீயால் அடக்கவே முடியவில்லை. யாராவது குழந்தையை வேண்டுமென்று தள்ளி விடுவார்களா? என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் என்னைப் பற்றி….?

ச்சே! ச்சே! இவ்வளவு கீழாகவா என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்…?

சில நிமிடங்கள் அழுதவள் மிகவும் சோர்வாக உணர்ந்தாள்… ஏதாவது சாப்பிடு என்று மனதும் உடலும் சொல்ல…… இதற்கு மேல் முடியாது என்பதாக நினைத்தவள்…

காலில் ஷூவைப் போட்டு புடவையை சரியாகக் கட்டிய போது தான் ஸ்டிக் வெளியிலிருப்பது புரிய…

அதை எடுத்துக் கொள்வோம் என்பதாக அதை எடுக்கப் போய், எடுத்துக் கொண்டு சமையலறை நோக்கி செல்லவும்…. போகும் வழியில் இருந்த அறையில் அவள் கண்டக் காட்சி சற்றும் யோசிக்காமல் செயல் பட வைத்தது……

கையில் இருந்த ஸ்டிக்கினால் குழந்தை மணிமேகலையை அடிக்க…. குழந்தை தூரப் போய் விழுந்தாள்..

சரியாக அவள் குழந்தையை அடித்த நேரம் வர்மன் அங்கே வந்தான்… “ஐயோ அண்ணி! என்ன பண்றீங்க குழந்தையை? ஏன் அடிக்கறீங்க?”, என்று அவன் கத்திய கத்தலில் வீடே அங்கே குழுமியது.

குழந்தைக்கு வேறு அடிப்பட்டு விட அது வீரிட்டு அலறியது… முன்னெற்றியில் காயமாகி, ரத்தம் வேறு வந்துவிட…

வீடே பதறியது… என்ன நடந்தது என்றுக் கூட யாரும் கேட்கவில்லை… ஆளாளுக்கு ஜெயஸ்ரீயை சத்தம் போட…

“ச்சே! ச்சே! நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நினைக்கலை! உங்களுக்காக என் அம்மாவை கொஞ்சம் நேரம் முன்ன தான் திட்டினேன்! இப்போ நானே பார்த்தேன், குழந்தையை அடிச்சீங்க… இப்படிக் கூடவா இருப்பீங்க”, என்று வார்த்தையை விட்டான்.

ஆளாளுக்குப் பேசவும் ஜெயஸ்ரீக்கு ஒன்றும் புரியவில்லை…

“என்ன இது? பெரியவங்க சண்டையில விட்டாக் குழந்தையைக் கொன்னுடுவ போல இருக்கே நீ”, என்று சுலோச்சனா பாட்டி பேச,

“ஐயோ! ரத்தம் அதிகமா வருது! முதல்ல இதைப் பாருங்க!”, என்று வனிதா ஒரு புறம் கத்த..

எல்லோரும் குழந்தையிடம் ஓட, தனித்து நின்றாள். “என்ன? நான் குழந்தையைக் கொல்ல முயன்றேனா!”, அந்த வார்த்தைக் கொடுத்த மன உளைச்சல், ஆளாளுக்கு நின்ற இடத்தில் இருந்து திட்டியது, யாரோ, “இவளையெல்லாம் வீட்ல வெச்சிக்க முடியாது”, என்று சொல்வது, சாப்பிடாதது, எல்லாம் மயக்கத்தை கொடுக்க…. ரூமில் போய் உட்கார்ந்து கொள்வோம் என்று நினைத்து ரூமின் வாயில் உள் நுழைந்ததும்,

மயக்கத்தினாலா இல்லை ஸ்டிக் கதவில் இடித்ததாலா, நிலை தடுமாறி அப்படியே நெடுஜான் கடையாக பிடிப்பின்றி பின்புறம் கீழே விழுந்தாள்,

எல்லோரும் பார்த்தனர்! ஆனால் குழந்தைக்கு அடிப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்ததில் யாரும் வந்து தூக்கி விடக் கூட முயலவில்லை.

குழந்தையை தூக்கிக் கொண்டு வனிதாவும் அருள்மொழியும் ஒரு வண்டியில் ஹாஸ்பிடல் கிளம்ப, கூட வர்மனும் தேவியும் ஹாஸ்பிடல் கிளம்பினர்.

ஈஸ்வரரும் சுலோச்சனாவும் வெளியில் சென்று அமர்ந்து கொண்டார்கள். ராஜலக்ஷ்மி அங்கே இல்லை வெளியில் சென்றிருந்தார். அவர் இருந்திருந்தால் எப்போதும் மணிமேகலையின் பின்னே சுற்றிக் கொண்டிருப்பார். அவர் இல்லாததால் தான் இவ்வளவு பிரச்சனை.     

இவளை யாரும் கவனிக்கவில்லை… சிறிது நேரத்திலேயே நடராஜனும் சிபியும் வந்தனர், வந்தவர்களை வாயிலில் நிறுத்தி வைத்து… நடந்ததை சொல்ல… “என்ன? குழந்தைக்கு ரத்த காயமா? ஜெயஸ்ரீ அடித்தாளா?”,

நம்பியும் நம்பாமலும், செய்திருக்க மாட்டாள்! செய்திருந்தாலும் ஏதாவது காரணம் இருக்கும்! மணிமேகலை ஏதாவது குறும்பு செய்திருப்பாள்! ஆனாலும் அடித்தது தப்பல்லவா? ஏன் இப்படி செய்து விட்டாள் என்ற யோசனைகளோடு சிபி உள்ளே செல்ல……

அங்கே அவன் கண்டக் காட்சி, உயிரே உறைந்தது… “அப்பா!”, என்று கத்திக் கொண்டே சிபி ஜெயஸ்ரீயிடம் விரைய, நடராஜனும் சிபியின் சத்தம் கேட்டு விரைந்து வர…..

ஜெயஸ்ரீ விழுந்து கிடக்க… அவளின் பின்னந் தலையில் இருந்து ரத்தம் வழிந்து உறைந்து இருந்தது.

சிபி அவளின்   தலையை தூக்கிப் பிடித்து, “ஜெயஸ்ரீ”, என்று கத்த, எந்த அசைவுமில்லை, பேச்சில்லை, மூச்சில்லை… மூச்சிருக்கிறதா என்று நடராஜன் மூக்கின் அருகில் அவசரமாக கை வைக்க… மூச்சு இருந்தது.

“தூக்குடா! ஹாஸ்பிடல் கொண்டு போகலாம்!”, என்று விரைந்து நடராஜன் செயல் பட்டார். சிபிக்கு ஒன்றுமே ஓடவில்லை…

உடனே பக்கத்தில் இருந்தவரிடம் கார் எடுக்கச் சொல்லி, கோவைக்கு முன் இருக்கும் பெரிய ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர்.

மிகவும் கடினமான நிமிடங்கள்….. அத்தனை கடவுள்களிடமும் வேண்டுதல் வைத்துக் கொண்டே அந்த தூரத்தை கடந்தான் சிபி.

அங்கே கீழே தவறி விழுந்து விட்டாள் என்று சொல்லி உடனே அட்மிட் செய்து சிகிச்சை ஆரம்பித்தனர்.

வழியில் வரும்போதே நடராஜன் வஜ்ரவேலிடமும் தவறி விழுந்து விட்டாள் என்று சொல்லியிருக்க…. இவர்கள் போய் சேர்ந்த சில நிமிடங்களில் வஜ்ரவேலுவும் வந்துவிட்டார்.

“என்ன நடந்துச்சு ரொம்ப கவனமா நடப்பாளே! எப்படி விழுந்தா! எங்க இருக்கா?”, என்று கேட்டார்.

அவருக்குப் பதட்டம் இருந்தாலும், இன்னும் நிலைமையின் தீவிரம் அவருக்கு புரியவல்லை.

“தெரியலை விழுந்த பிறகு தான் பார்த்தோம், வீட்ல யாருமில்லை, என்ன நடந்துச்சுன்னு சரியா தெரியலை….”, என்று நடராஜன் சொன்னார்.

அப்போது அங்கு வந்த மருத்தவர், “நிறைய ரத்தம் போயிருக்கும் போல, எப்போ ஆச்சு?”, என்ற விவரம் கேட்க….

“சரியாத் தெரியலை, நாங்க இங்க வர அரைமணிநேரம் ஆச்சு, அதுக்கு முன்னாடி வீட்ல ஒரு அரைமணிநேரம் இருக்கும்”, என்று குத்து மதிப்பாக சொல்லி…

 “கண்ணு முழிச்சிடுச்சுங்களா?”, என்று கேட்கவும்.

“எங்க அடிபட்டிருக்கு, கால்ல தானே!”, என்றார் வஜ்ரவேல், இன்னும் அவருக்குப் பின் தலையில் அடிபட்டது தெரியவில்லை.

“இல்லை பின்னந் தலையில. இன்னும் கண்ணு முழிக்கலை”, என்று சொன்ன மருத்துவர்…. “மூச்சு இன்னும் சரியாகலை… அதுக்குப் பார்த்துட்டு இருக்கோம், அதுக்கு அப்புறம் ஸ்கேன் பண்ணனும்”, என்று சொல்லி சென்று விட…….

வஜ்ரவேல் அப்படியே அமர்ந்து விட்டார்……. அவரின் பின்னால் போன நடராஜன்… “உயிருக்கு ஒன்னும் பயமில்லீங்களே”, என்று கேட்க…..

“கொஞ்ச நேரம் போனா தான் சொல்ல முடியும்”, சொல்ல…….

சிபி ஹாஸ்பிடலின் முன் இருந்த பிள்ளையாரிடம் தான் ஓடினான்… “கடவுளே! காப்பாற்றி விடு!”, என்று…….

வஜ்ரவேல் அப்படியே அமர்ந்தவர் தான்……..

நடராஜன் சிபியிடம் ஓடி வந்தவர், “டேய்! பணம் கட்ட சொல்றாங்க! நான் எங்கயாவது போய் பணத்துக்கு ஏற்பாடு பண்றேன், உன் மாமனாரோட போய் இருடா! அவரைப் பார்க்க முடியலை, அவருக்கு ஏதாவது ஆகிடப் போகுது”,  என்று அவர் ஒரு புறம் வெளியே விரைந்தார். 

சிபி வஜ்ரவேலிடம் சென்று நின்றான்….. “ஒன்னும் ஆகாதுங்க!”, என்று சொல்லவும் செய்தான்… அது அவருக்கு சொன்ன வார்த்தையில்லை, அவனுக்கு அவனே சொன்ன வார்த்தைகள்.

“ஆகாது! ஆகாது! எப்படி ஆகும் எத்தனை உயிரை என் பொண்ணு காப்பாத்தி இருக்கா? அவளுக்கு ஒன்னும் ஆகாது… உங்களுக்கே தெரியும் தானே அவ எத்தனை பேரை காப்பாத்தி இருக்கா, அதுல தானே அவ கால் எரிஞ்சு இப்படி ஆச்சு, அந்த கடவுள் அவளை எப்படி காப்பாத்தாம விடுவார்”, என்று வஜ்ரவேல் பேசப் பேச, தொண்டை அடைத்து அவரால் பேசவே முடியவில்லை.

“மூன்று நாட்கள் அவளுடன் இருந்திருக்கிறேன், உன்னோட அஜாக்கிரதையால கால்ல தீக்காயம் பண்ணி இப்படி செய்து கொண்டாயா என்று கேட்டிருக்கிறேன்… ஐயோ என்ன செய்திருக்கிறேன்”, என்று நினைக்க நினைக்க…. சிபிக்கு கண்களில் நீர் நிறைந்தது…..

அதனைப் பார்த்த வஜ்ரவேல் அவனை தேற்றினார்…. “இல்லை! இல்லை! ஒன்னும் ஆகாது என் பொண்ணு பொழைச்சிடுவா”, என்று….

இன்னும் என்ன நடந்தது என்று வஜ்ரவேலிற்கு தெரியவில்லை……. தெரியும் போது சிபியின் நிலைமை……    

அரை மணிநேரத்தில் டாக்டர் வந்தவர்.. “ஸ்டேபிள் ஆகிட்டாங்க… கண் முழிச்சிட்டாங்க, ரத்தம் ஏத்தணும், ஸ்கேன் எடுக்கணும்”, என்றார்.

“வேற ஒரு பிரச்சனையும் இல்லைங்களே…”,

“ஸ்கேன் எடுத்தா தான் சொல்ல முடியும்!”,

“பார்க்கலாமுங்களா”, என்று சிபி கேட்க…..

“ஒரு ஒருத்தரா போங்க!”, என்று டாக்டர் சொல்லவும்…

“நீங்க போங்க!”, என்று அப்போதும் சிபியை தான் முதலில் அனுப்பினார்…

சிபி உள்ளே சென்று பார்த்தவன், அப்படியே நின்று விட்டான். சுற்றிலும் உபகரணங்கள்…. கையில் ஒன்று, விரலில் ஒன்று, போர்வை மூடியிருந்த போதும் நெஞ்சினிலும் ஏதோ வையர் மாதிரி சென்று கொண்டிருந்தது…

அருகில் செல்லவும் ஜெயஸ்ரீ அவனை தான் பார்த்தாள்… முகத்தில் வலியின் சாயல்கள்.

என்ன பேச என்று கூட சிபிக்குத் தெரியவில்லை.  “வலிக்குதா”, என்று கேட்கவும், தலையை அசைத்து, “ஆம்!”, என்று சொல்லக் கூட முடியவில்லை.. விழி மூடித் திறந்தாள், “ஆம்!”, என்பது போல..  

“சாரி! நிஜம்மா சாரி!”, என்றான் அவன் சிறு பிள்ளை போல, “இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா, நான் போயிருக்க மாட்டேன், என்ன ஆச்சு?”, என்று கேட்கவும்…

பேச முயற்சிக்கவேயில்லை..

“ப்ளீஸ் ஸ்ரீ, சொல்லு!”, என்று கெஞ்சுதலாக சிபி கேட்டான். நடந்ததற்கு அவன் பொறுப்பில்லை என்றாலும் அது அவனின் தவறாகத் தான் அவனுக்கு பட்டது.  மனம் மட்டுமல்ல கண்களும் கலங்க அவன் நின்ற தோற்றம் ஜெயஸ்ரீயைப் பேச வைத்தது. 

மெதுவாக ஏதோ பேச முயற்சிக்க…  அவளின் முகம் அருகில் குனிந்து என்ன வென்று கேட்டான்.

திக்கி திக்கி அவள் சொன்ன வார்த்தைகளின் சாராம்சம் இதுதான்… மணிமேகலை ப்ளக்பாயிண்டில், மெலிதாக இருந்த சாவியை உள்ளே விட்டிருக்க.. குழந்தைக்கு ஷாக் அடித்துக் கொண்டிருந்தது.. அதற்காகவே அந்த மரதடியால் அடித்து அவளை விலக்கி விட்டாள். பதட்டத்தில் அவளையறியாமல் சற்று வேகமாக அடித்து விட்டாள்… அதில் குழந்தை தூரப் போய் விழுந்து விட்டாள். 

என்ன காரியம் செய்திருக்கிறார்கள் வீட்டினர்….

அதை சொல்லச் சொல்ல நடந்தது எல்லாம் அவளின் ஞாபகத்தில் வர… 

காரணம் சொல்லிவிட்டு முகத்தை திருப்பியவள் தான் ஜெயஸ்ரீ, அதன் பிறகு சிபியின் முகம் பார்க்கவேயில்லை.

எதையும் தந்தையிடமும் மறைக்க வில்லை.. சிபிக்கு அடுத்து வஜ்ரவேல் அவளை வந்து பார்த்த போது… திக்கி திணறி எல்லாவற்றையும் சொல்லி விட்டாள்.

வஜ்ரவேல் வெளியில் வந்தவர், “உன்னை நம்பித் தானே என் பொண்ணைக் கொடுத்தேன்”, என்றார் சிபியை பார்த்து……

அவர் பேசிக் கொண்டு இருக்கும் போதே நடராஜன் வந்து விட.. “யாரும் இங்க இருக்கக் கூடாது! கிளம்புங்க! என் பொண்ணை நான் பார்த்துக்கறேன்”, என்றார் கோபமாக..

அவரின் கோபம் நியாயமானது தானே…… அதனால் சிபியும் அவரை மேலும் அந்த சூழலில் கோபப்படுத்த விரும்பாமல்.. ஒதுங்கி நிற்க..

அது இன்னும் தவறாகிப் போனது…

இதற்குள் வீட்டினர் வர…… “தயவுசெஞ்சு கிளம்பிடுங்க!”, என்றான் சிபி..

சிபி அவர்களை வெறுத்து தான் அந்த வார்த்தைகளை சொன்னான்.. அவ்வளவு சொல்லியும் இப்படி செய்து விட்டார்களே என்பது போல..

பார்க்க பார்க்க வஜ்ரவேலிற்கு கட்டுக்கடங்காத கோபம் பொங்க, அவசரமாக வெளியே கிளம்பிச் சென்றார்.

“மணிமேகலையைக் காப்பாத்தினதுக்கு அவளுக்கு நல்ல பரிசு குடுத்துட்டீங்க”, என்று அவர்களைத் திட்டி அனுப்பிவிட்டான்.

ஆனால் எல்லாம் கை மீறி தான் விட்டது.

வஜ்ரவேல் சிபியின் வீட்டினர் அத்தனை பேரின் மேலும் கம்ப்ளையின்ட் பதிவு செய்ய… சிபி, “அவர்கள் யாருமில்லை தான் தான் கோபத்தில் தள்ளி விட்டேன்”, என்று இல்லாத ஒன்றை சொல்லி  சிபி தானாக முன்வந்து வாக்கு மூலம் கொடுக்க.. கைது செய்யப்பட்டான்.

அவளின் சிகிச்சையின் பொருட்டு ஏற்றப்படும் மருந்துகளால் ஜெயஸ்ரீ ஒரு அரை மயக்கத்தில் இருந்தாள். அவள் தெளிவாக இருந்திருந்தாலும் யாரும் அவளிடம் சொல்லியிருக்கப் போவதில்லை. அதனால் நடந்தது ஏதும் ஜெயஸ்ரீயிற்கு தெரியவேயில்லை.    

தீயவர்கள் என்று வரையறுக்கப்பட வேண்டியவர்களாக இல்லாவிட்டாலும், சில சமயம் செய்யும் செயல்கள் தீதாகிவிடுகின்றன..

பழி ஓரிடம்… பாவம் ஓரிடம்..

“கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே                                                                  இன்றுச் சிதறி போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே                                                      கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்                                                              உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்”     

       

 

Advertisement