Advertisement

அத்தியாயம் பதினாறு:

இருவரும் அப்படியே தான் இருந்தனர், சிபி படுத்து, ஜெயஸ்ரீ அமர்ந்து, அதுவும் காலில் ஷூ இருந்ததினால் அந்தக் காலை மடக்க முடியாது, ஷூ அணிந்த கால் நீட்டி இருந்தது, இன்னொரு கால் மடக்கி இருந்தது. 

நேரம் மதிய உணவு நேரத்தைக் கடந்து இருக்க, இருவரும் வெளியே வருவதாக காணோம், ஜெயஸ்ரீ அவளிடம் கொடுத்த பணப் பையைக் கூட வெளியே விட்டு வந்திருந்தாள். இன்னும் ஜெயஸ்ரீயின் பொருட்கள் பல வெளியில் இருந்தது.

சிறிது நேரம் பார்த்த நடராஜன், “போ! போய் அவங்களைக் கூப்பிட்டு சாப்பிட சொல்லு, இது அந்தப் பொண்ணுக்கு புது இடம். அவளை நீ தான் பார்த்துக்கணும் தேவி. வீணா வீட்ல பிரச்சனை வளர்க்காத, வனிதா மாதிரி இல்லை, அவ இந்த வீட்ல வளர்ந்த பொண்ணு, அவளுக்கு நீ தனியா எதுவும் சொல்லணும்னு அவசியமில்லை. ஆனா ஜெயஸ்ரீ அப்படிக் கிடையாது”.

“கொஞ்ச நாள் அந்தப் பொண்ணு இங்க நல்லா பழகற வரை நீதான் பார்த்துக்கணும்.  நான் யாரையும் எதுவும் கேட்கமாட்டேன். உன்னை மட்டும் தான் கேட்பேன், இல்லை முடியாதுன்னா சொல்லிடு”, என்று கண்டிப்பாக சொல்லவும்,

“என்னங்க இப்படி பேசறீங்க? நான் யாரை இதுவரை சரியா பார்த்ததில்லை, ராஜலக்ஷ்மி, அவங்க பசங்க, அத்தை, மாமா,  இதுவரை ஏதாவது தப்பு சொல்லியிருக்கீங்களா”,

“அப்படி இருந்தவ இப்படி எப்போ மாறின? உன் பையனோட அம்மால இருந்து அந்தப் பொண்ணோட மாமியாரா மாறிட்டியா? என்னோட மரியாதை உனக்கு தெரியலை, ஜெயஸ்ரீயோட அப்பான்னு தானே அவ்வளவு அலட்சியமா ஒரு விருந்து”, என்று கேள்விகளால் சுட,

 மீண்டும் தேவி கண்கள் கலங்க…. “போ! போய் அவங்களைப் பாரு, இந்தப் பணத்தை பத்திரமா வைக்கச் சொல்லி குடு”, என்று சொல்லி சென்று விட்டார்.

“சிபி”, என்று தேவி குரல் கொடுக்க, “என்னம்மா?”, என்று எப்போதும் உடனே குரல் கொடுப்பவன் அன்று குரல் கொடுக்கவேயில்லை.  ரூம் கதவு அகலமாக திறந்து இருக்க என்ன செய்கிறார்கள் என்று பார்க்க,

சிபி படுத்து இருப்பது மட்டும் தான் தெரிந்தது, அந்த பார்வை வட்டத்தினுள் ஜெயஸ்ரீ வரவில்லை…

“இந்தப் பொண்ணு எங்க போச்சு! இவன் பதில் கூட சொல்ல மாட்டேங்கறான்”, என்று ரூமின் உள் சென்று, “சிபி”, என்று மறுபடியும் கூப்பிட…. அப்போதுதான் கூப்பிடுவதையே க்ரகித்தான் சிபி.

“அம்மா!”, என்று அவசரமாக எழுந்து அமர்ந்தான். இருவரும் ஜெயஸ்ரீ எங்கே என்பது போல பார்க்க, சுவரோரமாக சரிந்து அமர்ந்து இருந்தாள்… ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி, பார்கவே பாவமாக இருந்தது அந்தத் தோற்றம், அவர்களைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“சாப்பிட வாங்கடா!”, என்று தேவி சொல்லவும், “ம்”, என்று எழுந்தான், எழுந்தவனிடம் பையை நீட்ட, “இங்க எங்கம்மா பீரோ இருக்கு, நீயே வெச்சிரு!”, என்றான்.

“துணி மணி வைக்க பீரோ வேணும் தானேடா!”, என்றார்.

“இப்போ போகும்போது தான் இவங்கப்பா உங்களுக்கு பிடிச்ச மாதிரி என்னென்ன பொருள் வேணுமோ வாங்கிக்கங்கன்னு சொல்லிட்டு போறார்”,

“அப்புறம் வாங்கலாம், இந்தப் பணத்தை நீயே வைம்மா, அவகிட்ட இருக்குற நகையும் கொடுக்கறேன்”, என்று சொல்லியபடியே வஜ்ரவேல் அவனுக்கு அணிவித்த செயின், பிரேஸ்லெட், மோதிரம் என்று அத்தனையும் கொடுக்க, பார்த்திருந்த ஜெயஸ்ரீயும் ஒரு செயின் வளையல் மட்டும் அணிந்து கொண்டு, அவள் அணிந்து இருந்ததையும் கழற்றி அமர்ந்த படியே நீட்டினாள்.   

“எதுக்கு இப்படி எல்லாத்தையும்  கழட்டி குடுக்கறீங்க! புதுப் பொண்ணு உன்னை நாலு பேர் பார்க்க வருவாங்க! போட்டுட்டு இரு!”, என்று தேவி சொல்ல,

ஜெயஸ்ரீ சிபியின் முகம் தான் பார்த்தாள்,

“வேண்டாம்மா வீட்ல இருக்குற எல்லா நகையும் பேங்க்ல இருக்கு, இப்ப இவ மட்டும் நகை போட்டுட்டு சுத்துவாளா”, என்று கூறி ஜெயஸ்ரீயை பார்வையால் அளந்தான்.

அவள் கழுத்தில் சங்கிலி, கையில் வளவி என்று இருக்க , “இது போதும், கொண்டு போங்க!”, என்று அமர்ந்த படி நீட்டிக் கொண்டிருந்த அவள் கையில் இருந்து வாங்கி அம்மாவிடம் கொடுத்தான்.

மற்றுமொரு பையை கை நீட்டி ஜெயஸ்ரீக் காட்ட, “என்ன?”, என்று கேட்டுக் கொண்டே சிபி அதைப் பார்க்க.. அதிலும் நகைப் பெட்டிகள்,

பெண்ணுக்கு நிறைய செய்திருக்கிறார் என்பது தேவிக்கு புரிந்தது. இவ்வளவு செய்த மனிதருக்கு தாங்கள் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க, செய்தாலும் செய்யாவிட்டாலும் மனிதர்கள் மதிக்கப் படவேண்டியவர்கள் தான், தேவிக்கு இன்னும் குற்ற உணர்ச்சியாகப் போய்விட்டது.

இன்னும் ஜெயஸ்ரீ ஏதோ சொல்ல வருவது மாதிரி சிபிக்கு தோன்ற, “என்ன?”, என்று அவளின் அருகில் சென்று கேட்டான் சிபி.

“இது, இது எல்லாத்தையும் இங்க வீட்ல அப்பா காட்டச் சொன்னார்”, என்றாள் திக்கி திக்கி…..

போட்டனுப்பும் நகைகளை எல்லோரிடமும் காட்டுவது வழமை தானே!

“அப்புறம் காட்டிக்கலாம், நீ கொண்டு போய் வைம்மா”, என்று முடித்து விட்டான் சிபி…

தேவி சென்று விட, “சாப்பிடப் போகலாம்”, என்று சிபி மடமடவென்று வெளியே போய் விட்டான்.

அவள் கீழே அமர்ந்து இருக்கிறாள், எப்படி எழுவாள் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை.

அந்த ஷூவோடு எழ முயன்று முடியாமல், கதவு வேறு திறந்திருக்க யாரும் வருகிறார்களா என்று பார்த்து, அவசரமாக அந்த ஷூவை கழற்றி,    எப்படியோ அமர்ந்த வாக்கிலேயே கையை ஊன்றி சுவற்றைப் பிடித்து எழுந்தாள்… ஆனால் எழுவதற்குள் சிரமப்பட்டுப் போக கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது.

இதுவரை பெரிதாக தெரியாத குறைகள் இப்போது மிகவும் பெரிதாக தெரிந்தது.  “ஐயோ! என் காலம் எப்படிப் போகுமோ!”, என்ற பயம். இதுவரை அப்பா ஒரு சிரமமும் தெரியாமல் வளர்த்துவிட்டார், சொல்லப் போனால் கண்ணுக்குள் வைத்து தான் பார்த்துக் கொண்டார்.

இப்படிப்பட்ட சண்டைகள், சச்சரவுகள், பேச்சுக்கள் எல்லாம் புதிது அவளுக்கு.. சிபி எங்கேயும் விட்டுக் கொடுக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க, அவனைத் திருமணம் செய்ததால் தானே பேச்சுக்கள், சாகசம் என்கிறார்கள், திறமைசாலி என்கிறார்கள், ஒழுங்கா என்கிறார்கள்…    

எதுவும் வேண்டாம், திருமணம் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், அப்பா வீட்டிற்கே போய் விடலாம் போலத் தோன்றியது. எதுவும் பிடிக்கவில்லை யாரையும் பிடிக்கவில்லை.  

“அப்பா! ஏன் இப்படி செய்து விட்டார்?”, என்று கோபமாக வந்தது.

இதுவரை அம்மா இல்லாதது நிறைய வருத்தத்தை கொடுத்தது இல்லை. அப்பா அது தெரியாமல் தான் வளர்த்தார்… இப்போது அம்மா இருந்திருந்தால் இன்னும் நன்றாகப் பார்த்துக் திருமணம் செய்து கொடுத்திருப்பார்களோ என்று தான் தோன்றியது.

இதுவரை பெரிய பெண்ணாக அவள் தன்னைக் காட்டிக் கொண்டிருந்தாலும் சிறிய பெண் தானே… பக்குவப்பட்டவள் தான், ஆனால் எல்லா நேரமும் அது கைக் கொடுக்காதே

எல்லாவற்றையும் விட அவள் யாரிடமும் பேசுவதில்லை என்பது மிகப் பெரிய கொடுமை… பேச்சு திக்குவதால் பரிகசிப்பார்களோ என்று  யாரிடமும் பேசுவதே இல்லை… தந்தையுடன் மட்டும் தான், அதுவும் மனம் விட்டு எல்லாவற்றையும் பேசுவாள் என்று சொல்லிவிட முடியாது…

ஆனாலும் இப்போதைக்கு அப்பாவை மனம் அதிகம் தேடியது.       

எழுந்தவள் மீண்டும் சுவரோடு சாய்ந்து நின்று விட்டாள்.. கையைக் கழுவி உணவு உண்ண சிபி அமர்ந்த போது, “எங்கடா ஜெயஸ்ரீ?”, என்று தேவி கேட்க….

அவள் கீழே ஷூ வோடு அமர்ந்து இருந்தது ஞாபகத்தில் வர, அப்படியே எழுவது சிரமம் என்று புரிந்து வேகமாக சிபி உள்ளே சென்று பார்க்க,

ஷூ கீழே இருக்க, அவள் சுவற்றில் சாய்ந்து நின்றிருப்பதை பார்த்தவனுக்கு, எழுவதற்கு மிகவும் சிரமப்பட்டு போயிருப்பாள் என்று புரிந்தது.

அவசரமாக அருகில் வந்தவன், “சாரி! சாரி! நிஜமா கவனிக்கலை, வலிச்சதா”, என்று கேட்கவும்,

தேம்பி தேம்பி அழத் துவங்கினாள்….

“ரொம்ப வலிச்சதா! ப்ச்! நான் கவனிக்கலை! அழாத!”, என்று முதல் முறையாகச் சற்று கனிவாக சமாதானப்படுத்தும் நோக்கில் பேசவும், இன்னும் அதிகமாக தேம்பினாள்.

எப்படி சமாதானப்படுத்துவது அவளை என்று சிபிக்கு தெரியவில்லை. தடுமாறி நின்றான்.

பிறகு அவனே வெளியில் சென்று தண்ணீர் எடுத்து விரைய, தேவி, “என்னடா?”, என்று வாய்விட்டுக் கேட்டார், அங்கிருந்த மற்றவர்கள் எல்லாம் என்ன என்பது போல பார்த்தனர்.

“ப்ச்! அழறாம்மா!”, என்றான். வீட்டினர் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற, “நான் பார்த்துக்கறேன்!”, என்று அவர்களிடமும் சமாதானம் சொல்லி, கூட ஒரு சேரை எடுத்துப் போய், அவளை அமர வைத்து தண்ணீர் கொடுக்கவும்,

சிறிது ஆசுவாசப்படுக் கொண்டாள், சிபி, “சாப்பிடலாம் வா!”, என்று கூப்பிட, திக்கி திக்கி, “என்னை, என்னை, அப்பாகிட்ட கொண்டு போய் விட்டுடுங்க, நான் போயிடறேன்!”, என்று சொல்லவும்,

சிபி அப்படியே நின்று விட்டான்…. திருமணத்திற்கு முதல் நாள் ஒருத்தி வீட்டை விட்டுப் போக, திருமணமாகி இப்போது தான் வீட்டுக்கு வந்த இவளின் முதல் நாள், இன்றே இவள் அப்பா வீட்டிற்கு போகிறேன் என்று சொல்கிறாள் என்ன சொல்ல?

அதிர்ந்து நின்றுவிட்டான் சிபி. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. என்னவோ வீட்டை விட்டு தொலைந்து போன குழந்தை வீட்டிற்குப் போக தவிப்பது போல தான் ஜெயஸ்ரீயின் செய்கை இருந்தது.

கோபம் வரவில்லை, வருத்தம் தான் வந்தது. எப்படி சரி படுத்துவது என்று தெரியவில்லை.

அவனும் சிறு குழந்தையை சமாதானப்படுத்துவது போல தான், “போகலாம் வா! முதல்ல சாப்பிடு!”, என்றான்.

அவள் விடுவேணா என்பது போல, “நி.. நி.. ஜ.. ம்மா..”, என்றாள்.

அதற்கு பதில் சொல்லாமல், “சாப்பிடு வா முதல்ல”, என்றான்.

அப்போது கொண்டு போய் விடமாட்டான் என்று தெரிந்து விட, அப்படியே நின்றாள்.

“நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்லை ஸ்ரீ, இன்னைக்கு தான் இங்க வீட்டுக்கு வந்திருக்க, இன்னைக்கே எப்படிப் போக முடியும்! ஒரு ரெண்டு நாள் போகட்டும்! நான் கூட்டிட்டுப் போறேன்!”, என்றான் தன்மையாக..

நம்பியும் நம்பாத முகபாவனையோடு ஜெயஸ்ரீ சுவரில் இருந்து விலகினாள். பிடிப்பின்றி மீண்டும் சுவரை பிடித்துக் கொண்டாள். 

சிபி, “ஷூ போட்டுக்கிறியா”, என்று கேட்க, “வேண்டாம்”, என்பது போல தலையசைத்தாள்.

“சரி, என்னைப் பிடிச்சிக்கோ”, என்று கையை நீட்ட, அவனை பிடிக்கவில்லை, அவளுடைய ஸ்டிக் அங்கே இருக்க, அதை எடுத்துக் கொடுங்கள் என்பது போல கையை நீட்டினாள்.

“அதை அப்புறம் எடுக்கலாம், என்னைப் பிடிச்சிக்கோ!”, என்று சிபி கையை நீட்டிக் கொண்டே இருக்க, கையை பிடிக்கவேயில்லை.

“ஏற்கனவே, திறமைசாலி, சாகசம், அது, இது, என்பது போல பெயர் வாங்கியாகிவிட்டது. இதில் கையைப் பிடித்து வெளியில் நடந்து போவதா வேண்டவே வேண்டாம்”, என்பது மாதிரி தான் ஜெயஸ்ரீயின் எண்ணம்.

சிபி வேறு வழியில்லாமல், அவளுடையை கைத்தடியை எடுத்துக் கொடுத்தான்.

அந்த சமயத்தில் அவள் என்ன நினைக்கிறாள் என்று சிபிக்குப் புரியவில்லை. தன் மேல் கோபமா? தன்னைப் பிடிக்கவில்லையா? இல்லை வீட்டினர் பேசியதற்கா என்று.

பரவாயில்லை, அவர்களின் வீட்டில் டைனிங் டேபிள் இருந்ததினால் கீழே எப்படி அமர்வது என்ற பிரச்சனையில்லை. சமீபமாக ஈஸ்வரனும் சுலோச்சனாவும் கீழே உணவருந்த சிரமபடுவதால் வாங்கியிருந்தனர்.

சிபி அமர்ந்ததும் ஜெயஸ்ரீயும் அமர… “நாங்க சாப்டிக்கிறோம் மா!”, என்றுவிட்டான் சிபி.

“ஹப்பா”, என்று இருந்தது ஜெயஸ்ரீக்கு, அவள் இன்னும் பொருந்தவில்லை அவர்களின் சூழலுக்கு….

அங்கே ஜெயஸ்ரீயின் வீட்டில் சிபிக்கு அவள் தான் பரிமாறுவாள், இப்போதும் அதை செயல்படுத்த பார்க்கவும், “வேண்டாம்! இன்னும் யாரு சாப்பிடாங்க, யாரு சாப்பிடலை, தெரியலை! பரிமாறினா அப்புறம் நீ சாப்பிட லேட் ஆகும், தேவையானதை வெச்சிக்கிட்டு சீக்கிரம் சாப்பிட்டிட்டு எழுந்துக்குவோம்!”, என்று சிபி கூறவும்,

கணவனும் மனைவியும் பத்தே நிமிடத்தில் உண்டு முடித்தனர்.

பிறகு ரூமின் உள் வந்தவளிடம், “உனக்குக் கீழ படுக்க சௌகரியப்படாது! அதே மாதிரி நகை வைக்க பீரோ வேணும்… அது மட்டும் உங்கப்பா குடுத்த பணத்துல வாங்கிக்கலாமா?”, என்று அவளிடம் கேட்டான்.

“இல்லை! வேண்டாம்!”, என்றாள் திக்கித் திணறி,

“ஏன்?”, என்று கேட்டவனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை…. அப்பா மேல் தான் கோபமாக வந்தது, பேசாமல் வாங்கிக் கொடுத்திருக்க வேண்டியது தானே, இப்போதே கண்ணசைவில் ஆட்டுவிக்கிறேன் என்கிறார்கள், உண்மையில் இன்னும் சகஜமாக பேசிக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை, இதில் இவர்கள் முன் போய் கட்டில் மெத்தை வாங்குவதா..

“வேண்டாம்!”, என்பது போல நிற்க….

“ஏன்?”, என்று சிபியும் நிற்க என்னவென்று சொல்லுவாள். சிறிது நேரம் நின்று பார்த்த சிபி வெளியே போகவும்… ஜெயஸ்ரீக்கு கஷ்டமாக இருந்தது… இதையெல்லாம் அவனிடம் என்னவென்று சொல்ல முடியும்.

சொன்னாலும் நான் தான் திரும்ப பேசிட்டேன் தானே! திரும்ப நீயேன் அதைப் பத்தி நினைக்கிற என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்.

என்னவோ எதுவும் பிடிக்கவில்லை ஜெயஸ்ரீக்கு, சிபிக்கு அதற்கு சற்றும் குறையாத மனநிலை… சலிப்பாக இருந்தது.

கண்டிப்பாக ஜெயஸ்ரீக்கு கீழே படுக்க முடியாது என்று தெரியும்… அவளின் அப்பா கொடுத்த பணம் என்பதால் தானே அவளிடம் கேட்க வேண்டி இருக்கிறது என்று நொந்து கொண்டான்.

கண்டிப்பாக அவன் அத்தனை பணத்தையும் அன்றே செலவு செய்தால் கூட ஜெயஸ்ரீ கேட்கமாட்டாள், ஏனென்றால் பணத்திற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு அவளின் மனநிலை மாறவில்லை, ஏனென்றால் அப்படி தேவைகள் இருந்ததில்லை.

எல்லாம், சகலமும் அப்பா தான்.. எப்போது எதற்குப் பணம் தேவையென்றாலும் உடனே கொடுத்து விடுவார்.

இனி அப்படி முடியாது, கணவனின் வருமானத்தில் வாழ வேண்டும், இப்படி நினைக்கும் மனநிலைக்கு வரவில்லை.

அவள் வேண்டாம் என்று சொல்வதற்காக அப்படியே விட முடியாது. அவனிடம் அப்போதைக்குப் பணம் கிடையாது. செய்வது விவசாயம், அவனது தான் எல்லா வேலையும், ஆனால் பண விவகாரங்களை எல்லாம் அப்பா தான் பார்த்துக் கொள்வார்.

எதற்குப் பணம் வேண்டுமென்றாலும் அப்பாவிடமோ அம்மாவிடமோ கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள்.

கண்டிப்பாகக் கட்டில் வாங்கியே ஆகவேண்டும்.. அதை சொல்லியும் வாங்க முடியாது.. இவளை வேண்டாம் என்று சொன்ன பிறகு அவள் அப்பா கொடுத்த பணத்தில் இருந்தும் எடுக்க முடியாது……….. ஒரு மாதிரி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானான்.

ஒன்று மட்டும் தெரிந்தது.. இதுவரை பணத்தேவைகள் அதிகம் கிடையாது.. ஆனால் இனியும் அப்படி இருக்க முடியாது. யாரிடமும் காரணம் சொல்லி சொல்லி பணம் வாங்க முடியாது.

ராதா என்றால் வேறு அந்த வீட்டில் வளர்ந்த பெண், ஏதாவது வேண்டும் என்றால் அவளே கேட்டு வாங்கிக் கொள்ளுவாள், அவளுக்குக் கேட்பதிலும் பெரிய சிரமமில்லை.

ஆனால் இவ்வளவு ஆன பிறகு, காலையில் வந்த பேச்சுக்குப் பிறகு, ஜெயஸ்ரீக்காக என்று சொல்லி வாங்கவும் மனதில்லை.

வாழ்க்கையில் இதுவரை செய்யாத ஒன்றை முதல் முறையாக செய்தான், கடன் கேட்டான்.

கேட்பதற்கு வாயே வரவில்லை, இருந்தாலும் வாசுவுவிற்கு போன் செய்து, “டேய் மாப்ள, கொஞ்சம் பணம் வேணும்டா?”,

“எவ்வளவு”,

“ஒரு அஞ்சாயிரம்”,

“போதுமா”,

நிஜமாகவே பொருட்கள் வாங்கியிராததால் எவ்வளவு தேவை என்று தெரியவில்லை.

“போதும், ரெடியானா சொல்லு! நான் வர்றேன்!”,

“இருக்கு! உடனே வாடா!”, என்று வாசு சொல்லவும், உடனே கிளம்பினான்.

ஒரு பெரிய இரும்புக் கட்டில், அதுவே அவ்வளவு பணம் ஆகிவிட, அதை மட்டும் வீடு கொண்டு வந்து சேர்த்தான்.

யாராவது ஏதாவது கேட்டால் என்ன சொல்லுவது என்று அதுவேறு குழப்பம்…. ஏனென்றால் அங்கே அவனுடைய தாத்தா பாட்டிக்கு மட்டும் தான் கட்டில், வேறு யாருக்கும் கிடையாது.

அவனுடைய அப்பா அம்மாவிற்குக் கூட கிடையாது. எத்தனை பேர் அந்த வீட்டில் பெரியவர்கள் மட்டும் ஒன்பது பேர், குழந்தை ஒன்று, எல்லோருடைய ஜீவனமும் சிரமமின்றி போக வேண்டும் என்பதால் மிகவும் சிக்கனமான எளிமையான வாழ்க்கை தான் அவர்களது. 

யாரும் எதுவும் கேட்கவில்லை, “ஹப்பாடா….!”, என்று இருந்தது. அப்பா மட்டும், “பணம் ஏதுடா உன்கிட்ட?”, என்றார்.

“ஆசீர்வாதம் வாங்கினப்ப வெச்சிக் குடுத்தது இருந்ததுப்பா!”, என்றான். கடன் வாங்கியாகிவிட்டது, பின்னர் பொய்யும் பேசியாகிவிட்டது. மனம் கணத்துப் போனது.  ஆனால் இதெல்லாம் ஒன்றுமேயில்லை, இன்னும் நிறைய அவமானங்கள் அவனுக்காகக் காத்திருப்பது அவனுக்குத் தெரியவில்லை.

ஆம்! எல்லோரும் காலில் விழுந்து வணங்கியபோது பணம் வைத்துக் கொடுத்தது தான். ஆனால் அது ஜெயஸ்ரீ வீட்டில் என்பதால் எல்லாவற்றையும் அவளிடம் கொடுத்து விட்டான். அதுதான் நடந்தது.

ரூமின் உள் வந்ததும் முதலில் ஜெயஸ்ரீயின் முகம் தான் பார்த்தான். சற்று தெளிவாக இருக்கவும், சகஜமாக, “வெளில போகலையா! இங்கயா இருந்த”, என்றான்.

“போய் டீ சாப்பிட்டிட்டு வந்தேன் மணிமேகலை கூட பேசிட்டு இருந்தேன்”, என்றாள் திக்கித் திணறி.. “மணிமேகலை நல்லா பேசுறா!”, என்றாள் குழந்தையின் பேச்சை அசை போட்டபடி,     

பின்னர் அந்தக் கட்டிலைப் பூட்டிக் கொண்டிருந்த போது, மணிமேகலை ஓடி வந்தாள், “சித்தப்பா!”, என்று கத்திக் கொண்டே….

“ஹாய்! மேகி பாப்பா!”, என்று அவளைத் தூக்கிக் கொள்ளவும், அவன் கழுதைக் கட்டிக் கொண்டாள் குழந்தை.

அவள் அந்த வருடம் தான் எல் கே ஜீ சேர்ந்து இருந்தாள். அவன் வெளியே போகும் வரை வரவில்லை. அவனைப் பார்த்து மூன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டதால் ஓடி வந்து விட்டாள்.

அதற்குள், “மேகி வா!”, என்று வெளியே இருந்து வனிதாவின் குரல் கேட்கவும்..

“அம்மா கூப்பிடறாங்க! போ!”, என்று சிபி இறக்கி விட முயல,

“ம்கூம்! மாட்டேன்!”, என்பது போல அவனின் கழுதைக் கட்டிக் கொண்டு ஜெயஸ்ரீயை பார்த்தாள். இதை ஜெயஸ்ரீ அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். மணிமேகலை அவளை பார்க்கவும், அருகில், “வா!”, என்பது போல கை அசைத்துக் கூப்பிட…

குழந்தை, போவதா! வேண்டாமா! என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே…  இதை கவனியாத சிபி,

“போடா, அம்மா கூப்பிடறாங்க”,  என்று மணிமேகலையிடம் மீண்டும் சொல்லிக் கொண்டே அவன் ரூமின் வாயிலுக்கு வந்து விடவும்,

“ம்கூம்! அம்மா அடிப்பா! இங்க சித்தி கிட்ட வரக் கூடாது சொல்லியிருக்கா!”, என்று மழலையில் அது மிளிற்றியது. 

வெளியில் நின்றிருந்த வனிதாவிற்கு அது நன்கு கேட்டது, கூடவே நின்றிருந்த அருள்மொழிக்கும், அமர்ந்திருந்த ஜெயஸ்ரீ எல்லோருக்கும்.

சிபி அவசரமாக திரும்பி ஜெயஸ்ரீயைப் பார்த்தான், அவளுக்கு கேட்டு விட்டதா என்பது போல… அவளின் முக வாட்டத்தில் இருந்தே கேட்டுவிட்டது என்பது துல்லியமாக தெரிந்தது.

அதையும் விட வெளியே நின்றிருந்த வனிதாவின் முகம் பயத்தைக் காட்டியது… சிபி திட்டுவானோ என்பது போல,

சிபியின் முகம் தீவிரமானது… இந்த பேச்சு அவனால் சகிக்கவே முடியவில்லை. என்ன இது திரும்ப, திரும்ப, இது சரிவராது என்று அந்த நொடி அவனுக்குள் தோன்றியது.  

ஆனால் சிபி திட்டவெல்லாமில்லை… “சித்தி கிட்ட பேசலைன்னா இனிமே சித்தப்பாகிட்டயும் மேகிப் பாப்பா பேச வேண்டாம்!”, என்று சொல்லி அருள் மொழியிடம் குழந்தையைக் கொடுத்தான்.

“அது, இன்னும் அவ சாப்பிடலை சிபி, அதான் வனிதா கூப்பிட்டா”,  என்று விளக்கம் கொடுத்தான் அருள் மொழி.

“இனிமே  அவளை இந்த பக்கம் விடாத! நானும் உன் பொண்ணை தூக்க மாட்டேன்! ஜெயஸ்ரீயும் பக்கத்துல வரமாட்டா”, என்று கண்டிப்பாக சொல்லி சிபி திரும்ப முற்பட…

“அது எதுக்கு சொன்னதுன்னா, இப்போ கொஞ்ச நேரம் தான் ஜெயஸ்ரீ கூட மேகி பேசிட்டு இருந்தா… வெளில வந்து அவ மாதிரியே திக்கி திக்கி பேசுறா, ஒரு குச்சி வெச்சு நடக்குறா அதான்….!”, என்று உண்மையை அப்படியே அருள்மொழி போட்டு உடைத்து விட,

ஜெயஸ்ரீயினால் அதை தாளவே முடியவில்லை,  தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள், சிபி சற்றும் யோசிக்கவேயில்லை…….. அவன் அப்பாவிடம் சென்று, “அப்பா நான் தனியா போயிடட்டுமா!”, என்றான்.

அந்த நொடி வரை சிபி அப்படி நினைக்கவேயில்லை… ஆனால் இனி, இப்படி பேச்சு வந்த பிறகு, சரி வருமென்று தோன்றவில்லை. 

வீடே ஸ்தம்பித்தது. முடியாது, வேண்டாம் என்றது… ஆனால் சென்றிருந்தால் எத்தனையோ அனர்த்தங்களை தவிர்த்து இருக்கலாம்.

சில சமயம் மக்கள் எல்லோரையும் சேர்த்துப் பிடிக்க பெரியவர்கள் ஆசைப்படக் கூடாது. திருமணம் முடிந்த உடனேயே தனியாக வைத்து விட்டால் பரவாயில்லை சில குடும்பங்களில்.

இதை செய்யத் தவறுவதால் பின்னர் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசும் நிலை கூட இல்லாமல் போய் விடுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

சகிப்புத்தன்மை என்பது இப்போதெல்லாம் பலரிடம் இருப்பதில்லை கணவன் மனைவிக்குள்ளேயே இருப்பதில்லை… இதில் வீட்டின் மற்ற அங்கதினரிடம் எப்படி இருக்கும்… இது சிரியவர்களிடம் மட்டுமல்ல பல பெரியவர்களிடமும் இருக்கிறது… நான் தான் பெரியவன் என்னைக் கேட்டு தான் எல்லாம் செய்ய வேண்டும் என்பது போல…    

எங்கே சேர்ந்து இருக்க வேண்டுமோ, அங்கே சேர்ந்து இருக்க வேண்டும். எங்கே அவரவர் வழியை காட்ட வேண்டுமோ அங்கே காட்டிவிட வேண்டும். அதுதான் உத்தமம்.

எது எங்கே செய்ய வேண்டும் என்று பலருக்கு தெரியாததால் தான் பல குடும்பங்கள் உடைந்து விடுகின்றன. அவரவர் மனைவி மக்களுக்கு தான் எல்லா முன்னுரிமையும் எனும் போது, சில இடங்களில் பெரியவர்கள் சின்னவர்கள் உடன்பிறந்தவர்கள் இப்படிப் பிரிந்து விடுகின்றனர்…

இப்படி அவரவர் குடும்பம் என்று பிரிந்து விட்டால் கூட பரவாயில்லை, சில இடங்களில் கணவன் மனைவி கூட இதனால் பிரிந்து விடுகின்றனர்!!

Advertisement