Advertisement

அத்தியாயம் பதினான்கு:

அடுத்த நாள் வஜ்ரவேலின் வயல் வரப்பை ஒட்டி உள்ள அவர்களின் தோட்டத்திலேயே கிடா விருந்து.

உறவுகள் எல்லோரும் வந்துவிட்டப் பிறகு கடைசியாகத் தான் சிபியின் வீட்டினர் வந்தனர். அதுவும் எல்லோரும் வரவில்லை, பெரியவர்கள் ஈஸ்வரரும் சுலோச்சனாவும், கூட நடராஜன், அருள்மொழி, மாமல்ல வர்மன் மட்டுமே வந்திருந்தனர்.

வேறு பெண்கள் சிபியின் அம்மா தேவி, அத்தை ராஜலக்ஷ்மி மற்றும் அண்ணி வனிதாவோ குழந்தை மணிமேகலையோ வரவில்லை.

“ஏம்பா, அவங்க யாரும் வரலை, நீங்களும் லேட்டா வந்திருக்கீங்க?”, என்ற கேள்விக்கு நடராஜன் என்ன சொல்லுவார், அவர்களுக்கு வர விருப்பமில்லை என்றா? அவர்களைக் கிளப்ப தான் இவ்வளவு நேரம் காத்திருந்தும் அவர்கள் கிளம்பவில்லை என்று வந்துவிட்டார் என்றா?

“கல்யாணத்துக்கு அலைஞ்சதுல உடம்புக்கு முடியலை, ஒருத்தரை விட்டு இன்னொருத்தர் வரலைன்னாங்க அதான் நாங்க மட்டும் வந்துட்டோம்”, என்றார்.

“யாரு கல்யாணத்துக்கு அலைஞ்சு திரிஞ்சா? யாருக்கு உடம்பு முடியலை? யாரை விட்டு யாரு வரமாட்டேன்னு சொன்னாங்க?”, என்ற கேள்வியைப் போட….

“சிபி விடுடா!”, என்றார் நடராஜன்…. அவரின் குரலில் ஒரு சலிப்பு தெரிய….. அவரை மீண்டும் கேள்விகளால் கஷ்டப்படுத்த விரும்பாமல் விட்டுவிட்டான்.

வஜ்ரவேல் வீட்டினர் சிபியின் வீட்டினரை நன்கு உபசரித்தனர். அறுசுவை விருந்து, “இப்படி கவனிக்கிறார்கள், வீட்டுப் பெண்களுக்கு வந்திருப்பதற்கு என்ன?”, என்று தான் நடராஜனுக்குத் தோன்றியது.

முதல் நாள் திருமணத்திற்கு முன் ஜெயஸ்ரீ முகம் திருப்பியதைக் கொண்டு அவர்கள் வரவில்லை. வீட்டின் ஆண்மக்கள் அவரின் சொல் கேட்டு உடனே கிளம்பி வந்துவிட்டனர். ஆனால் பெண்கள், “அப்பா அவ வரலையாம், உடம்பு  சரியில்லையாம்”, என்று அருள் மொழி வந்து நின்றான்.

“ஏண்டா? ஊரையே கூப்பிட்டு இருக்காங்க! நம்ம எல்லோரும் போகலைன்னா நல்லா இருக்காது! என்னடா பண்றீங்க?”, என்று வனிதா வராததற்கு அவனை திட்டி முடிக்க, தேவி, “நான் வரலைங்க”, என… இவர்கள் இருவரும் வராததால் ராஜலக்ஷ்மி வரவில்லை.

“என்னவோ போங்கடா! ஒரு கல்யாணத்தை முடிக்கறக்கதுக்குள்ள என்னை இன்னொரு ஜென்மம் வாழ வெச்சிடீங்க…. என்னவோ பொண்டாட்டி புள்ளைங்க ஒருத்தரும் ஒரு பேச்சையும் கேட்கறது இல்லை”, என்று வீட்டில் கத்தி விட்டு தான் வந்தார்.

அந்த சலிப்பே சிபியிடம் அவர் காட்டியது. அவர் பேசியதில் வீட்டினருக்கு வரவிருப்பமில்லை என்று புரிந்து கொண்டு தான் சிபியும் அமைதி காட்டினான்.

விருந்து முடிந்து நடராஜன் கிளம்பும் போது, “அப்போ பொண்ணையும் மாப்பிள்ளையையும் எப்போ அனுப்பறீங்க”, என்பது மாதிரி கேட்டார்.

“நாளைக்குக் கொண்டு வந்து விட்டுட்டருணுங்க”, என்றார் வஜ்ரவேல். பெண்ணைப் பெற்றவர் என்பது அவரின் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது. சிபியின் வீட்டினரிடம் பேசும் போது அவ்வளவு பவ்யம்.

விருந்து முடியும் வரையிலும் ஜெயஸ்ரீ, “ஏன் சிபியின் வீட்டில் பெண்கள் யாரும் வரவில்லை?”, என்பது போல தன் மனதை போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாள்.

சிபிக்கு பிடிக்கவில்லை என்பது போய், சிபியின் வீட்டினருக்கு பிடிக்கவில்லையோ என்பது மாதிரியான எண்ணம். எப்படி அவர்களின் வீட்டில் போய் இருப்பது என்ற பயம். அதெல்லாம் அவளை  ஒரு மாதிரி சஞ்சலத்தில் ஆழ்த்தியது.  

ஒரு வழியாக விருந்து முடியவும்…. வீட்டில் அமளி துமளி சற்று அடங்கவும்… மீதமானதை எல்லாம் உறவுகளுக்கு பங்கிட்டு தனம் கொடுத்துக் விட்டுக் கொண்டிருக்க…. அவருக்கு உதவியாக பத்மினி ராகினி மற்றும் ஜெய்சங்கர் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தனர்.

நாளை கணவன் வீடு செல்வதால் அவளுக்கு தற்பொழுது தேவையில்லாத ஜெயஸ்ரீ உபயோகித்து வந்த அணைத்து பொருட்களையும், எடுத்து அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

இனி புடவை தான் உடுத்தப் போவதால், அவளுடைய தாவணி பாவாடைகள்… மற்றும் அவளுடைய லாங் ஸ்கர்ட், டாப்ஸ் என்று எல்லாவற்றையும் எடுத்து பத்மினிக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்.

கால் அப்படி ஆனதில் இருந்து அவள் சுரிதார் அணிவதில்லை, ஷூ போடுவதற்கு இடைஞ்சலாக இருப்பதால், தாவணி பாவாடை மற்றும் லாங் ஸ்கிர்ட் டாப்ஸ் போன்றவை தான் அணிவாள்.

அவள் எடுத்துக் கொடுத்த பொருட்களைப் பார்த்து சிபியே அசந்து விட்டான், “விட்டா, இவ வீட்டையே காலிப் பண்ணிக் குடுத்துடுவா போல”, என்று நினைக்கும் படி தான் அவள் கொடுத்த பொருட்கள் இருந்தது.

எல்லா பொருட்களும் நன்றாக தான் இருந்தது, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் கொடுக்கப்பட்டது தான் அவை என்று பார்த்துக் கொண்டிருந்த சில மணித்துளிகளிலேயே புரிந்தது.

சிபி அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க, அவன் இதை கவனிப்பதை பார்த்த வஜ்ரவேல் அவன் அருகமர்ந்து…… “இப்படிதானுங்க, நமக்கு தேவையில்லைன்னு தூக்கிக் குடுக்கறது வேற……. ஆனா தேவையிருந்தாலும் அடுத்தவங்களுக்கு அது தேவைன்னா உடனே தூக்கிக் குடுத்துடுமுங்க…”,

“யார் என்ன உதவி கேட்டாலும் செய்வா…. யாராவது ஒரு கஷ்டத்துல இருந்தா உடனே ஓடிப்போய் செய்வா…… சில சமயம் நல்லா இருக்கும். ஆனா பலசமயம் தொந்தரவு ஆகிடும்”, என்று அவர் மேலும் பெண்ணைப் பற்றி சொல்ல முற்படும் போதே…. யாரோ அவரைக் கூப்பிட,

“இதோ வர்றனுங்க!”, என்று எழுந்து சென்று விட்டார்.

“பெரிய கர்ணப் பிரபுவோ இவ, எதுக்கு இந்த பில்ட் அப் இவங்கப்பா, வசதியிருக்கு தூக்கிக் குடுக்கறா, வசதியில்லாதவங்க எத்தனையோ பேருக்கு குடுக்க மனசிருக்கும்! ஆனா பொருளோ பணமோ இருக்காது! அதுக்கு என்ன பண்ண?”, என்பது மாதிரி தான் சிபியின் எண்ண ஒட்டம் இருந்தது.

அதன் பிறகு வஜ்ரவேலுவிற்கு அவனிடம் பேச நேரம் கிடைக்கவில்லை… நாளை மகளோடு குடுத்தனுப்பப் போகும் சீர்வரிசைகள் பார்க்க ஆரம்பித்தார்.

அவர் பம்பரமாக சுற்றி வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த மூன்று நாளாக சிபி பார்த்துக் கொண்டு தானிருந்தான். எதற்கோ திரும்பிய போது பார்த்தால் ஜெயஸ்ரீயும் தந்தையை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“நான் புதுசா பார்க்கிறேன்! இவ ஏண்டா இப்படிப் பார்க்கிறா?”, என்ற ஆராய்ச்சிப் பார்வையோடு பார்க்க……..

ஜெயஸ்ரீயின் மனம் முழுவதும் ஒரு இனம் புரியாத உணர்வு, அந்த வீட்டில் அவளும், தந்தையும் தான். இப்போது தான் நாளை போய் விட்டால் இனிமேல் அவர் தனியாக இருப்பார் என்பது அவளுக்கு சொல்லொணா துயரத்தை கொடுத்தது. அதையும் விட தவறு செய்து விட்ட ஒரு உணர்வு கூட….. இந்த நாளை நாம் முன்னமே யோசித்து இருக்க வேண்டாமா என்று……

ஆம்! அவள் ஒரு ஆறாவது, ஏழாவது படிக்கும் சமயம் சரியாக ஞாபகமில்லை, தந்தையின் நண்பர் ஒருவர் அவருடைய தங்கையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்யக் கேட்டு ஜெயஸ்ரீயிடம் பேசினார்.

ஆனால் சிறு பெண்ணான அவள் ஒத்துக்கொள்ளவேயில்லை. அம்மா என்பவரை இதுவரை ஃபோட்டோவில் மட்டுமே பார்த்தவள் அவள். அப்படியிருந்தும், “என்னால எங்கம்மா இடத்துல யாரையும் பார்க்க முடியாது”, என்று பிடிவாதமாக மறுத்து விட்டாள்.

அவரும் பலமுறை பேசிப் பார்த்தார் அசையவேயில்லை. மகள் சம்மதிக்காத போது வஜ்ரவேலுவும் சம்மத்க்கவில்லை. பின்பு அவளுக்கு இப்படியான போது ஒரு பெண் துணை அவசியம் என்று மறுபடியும் அந்த நண்பர் திருமணத்திற்கு சொல்ல அப்போதும் ஜெயஸ்ரீ ஒத்துக் கொள்ளவில்லை. எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை என்று விட்டாள்.

இப்போது அவரை தனியாக விட்டுப் போகவேண்டிய இருப்பதை நினைத்து துக்கம் தொண்டையை அடைத்தது. சரி என்று சொல்லியிருந்திருக்கலாமோ என்று ஒரு எண்ணம். சென்ற காலம் வருமா என்ன?

சிபிக்கு அவளின் எண்ண ஓட்டம் என்ன தெரியும். அவன் நேரமானதும் உண்டு உறங்க சென்று விட…… வெகுநேராமகியும் ஜெயஸ்ரீ வரவில்லை.

“என்னடா பண்றா இவ?”, என்பது போல சிபி எட்டிப் பார்க்க… வஜ்ரவேல் மகளிடம் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பது தெரிந்தது.

வஜ்ரவேல் அமர்ந்து மகளுக்கு புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், தங்கள் வீடு போல அல்ல என்று வண்டி வண்டியாக அறிவுரையை வாரி வழங்கிக் கொண்டிருக்க…. ஜெயஸ்ரீ அவரை தனியாக விட்டுப் போவதை நினைத்துக் கவலையில் இருந்தாள்.

பார்த்தவுடனேயே சிபிக்கு நன்கு தெரிந்தது… வஜ்ரவேல் ஏதோ சீரியசாக பேசிக் கொண்டிருக்க….. ஜெயஸ்ரீ அதைக் கவனிக்கவேயில்லை என்று. அவளின் கவனம் அதில் இல்லை என்று பார்த்தவுடனே சிபிக்கு புரிந்தது.

“அந்த மனுஷன் ஏதோ கண்ணும் கருத்துமா பேசறார், இவ உட்கார்ந்துட்டேத் தூங்கறா! நல்ல அப்பா! நல்ல மக!…”, என்று பார்த்தவன் உள்ளே வந்து உறங்கிவிட……. ஜெயஸ்ரீ உள்ளே வந்த போது நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

என்னவோ ஒரு இனம் புரியாத அச்சம் ஜெயஸ்ரீயின் மனதினுள் சிபியைப் பார்த்து, இவர் எப்படி என்னை பார்த்துகொள்வாரோ, நான் சென்றதும் அப்பா வேறு தனியாகி விடுவார், இவர் வீட்டினர் வேறு தள்ளி தள்ளி நிற்கிறார்கள் என்பது போல.

மறுநாள் சிபியின் வீட்டுக்கு கிளம்பும் முன் அப்பாவை விட்டு செல்ல மனதே இல்லை. “நீ அவருடைய திருமணத்திற்குத் தடையாக இருந்திருக்க கூடாது”, என்று குற்றவுணர்ச்சி  வேறு அதிகமாக இருக்க கண்களில் நீர் பெருகியது.

அவள் மாப்பிள்ளை வீடு செல்ல அழுகிறாள் என்பது போல தான் எல்லோரும் நினைத்து சமாதானம் செய்தனர். அப்பாவை தனியாக விட்டு செல்ல என்று நினைக்கவில்லை. யாரிடமும் அதை சொல்லவும் மனதில்லை, வார்த்தைகளும் வரவில்லை.

“இவ எதுக்கு இப்படி அழறா? டேய் சிபி! உன்னை பார்த்து பயமா? நீ அவ்வளவு  கொடுமைக்காரனா?”, என்று விளையாட்டுப்  போல நினைத்தான்.

அந்த வார்த்தைகள் உண்மையாகப் போவது தெரியாமல். அவனை மீறி தான் எல்லாம் நடக்கப் போவது தெரியாமல்.    

ஜெயஸ்ரீக்கு மனதின் அழுத்தம் கூடிக் கொண்டே போனது… சிபியின் வீடு சென்ற பின் இன்னும் அதிகமாகியது.

வஜ்ரவேல் கூட சென்று அவர்களை விட்டு சீர்வரிசையை வைத்தார். அதிகமில்லை ஜெயஸ்ரீயின் உடைகள் அவள் உபயோகிக்கும் பொருட்கள் அவ்வளவே. கூடவே சாங்கியதிற்கு, சில பொருட்கள், பாய் தலைகாணி, விளக்கு, இருவரும் சாப்பிடுவதற்கு தட்டம்.  

“என்ன இது? சீர்வரிசைன்னு இதைக் கொண்டு வந்து இறக்குறாங்க”, என்பது போல தான் வீட்டுப் பெண்களின் மனதில் எண்ணம். ஆண்கள் அதை ஒன்றும் பெரியதாக நினைக்கவில்லை.

பொருட்களை வைத்து அவர் வாய் வார்த்தையாக எதுவும் சொல்லும் முன்னரே இந்த எண்ணங்கள் அவரவர் மனதில்.

அவர் விட்ட போது மணி பன்னிரண்டு, தேவி, “குடிக்க கொண்டு வா!”, என்று நடராஜன் குரல் கொடுக்க… அவருக்கு காபி மட்டும் வந்தது.

உள் சென்ற நடராஜன், “என்ன காபி மட்டும் குடுக்கற, கூட ஏதாவது சாப்பிட வைக்கலையா…”,

“சாப்பிடற நேரம் ஆகிடுச்சு! சாப்பிட்டிட்டு தானே போவாங்க! இப்ப என்ன குடுக்க?”, என்று மனைவி சொல்லவும், ஒரு வகையில் சரி என்று பட்டாலும், தங்களை அவர் நேற்று எப்படி கவனித்தார்.

கூட ஏதாவது இனிப்பு வகை வைத்திருக்க வேண்டாமா என்று தான் தோன்றியது.  “கூட ஏதாவது பலகாரம் வெச்சிருக்கலாம்!”, என்று சொல்லி விட்டே தான் வந்தார்.       

நடராஜன் வெளியில் சென்றதும் வஜ்ரவேல், அவரிடம் தனியாக, “நீங்க எல்லோரும் ஒன்னா இருக்கீங்க! அதனால தான் சீர்வரிசைன்னு வேற எதுவும் தனியா வைக்கலை, அதுவும் உங்க பெரிய மருமக, உங்க வீட்ல வளர்ந்த பொண்ணு, நான் சீர் செய்யப் போய் வித்தியாசம் எதுவும் வந்துடக்கூடாது இல்லையா?”, என்றார்.

அவருடைய அணுகுமுறை நடராஜனுக்கு அவ்வளவு திருப்தி கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். நான்கையும் யோசித்து செய்யும் வஜ்ரவேலின் பாங்கு, நடராஜனை மிகவும் ஆகர்ஷித்தது.      

“அது பத்தி ஒன்னுமில்லீங்க! உங்க பொண்ணுக்கு நீங்க செய்றீங்க! நான் சொல்ல என்ன இருக்கு?”, என்றார் நடராஜன்.

“பொருளா தான் வாங்கிக் குடுக்கலை, என்னோட எல்லா சொத்தும் என் பொண்ணுக்குதான்னாலும் இப்போ எதுவும் செய்யாம விட முடியாது இல்லீங்களா”, என்று சொல்லி கையில் சுருட்டி வைத்திருந்த மஞ்சப் பையை நீட்டினார், “இதுல பணம் இருக்கு! என்ன பொருள் தேவையோ என்னவோ அதை வாங்கிக்கலாம்”, என்றார்.

நடராஜன் அதைக் கையில் வாங்கவில்லை அதே சமயம், “வேண்டாம்!”, என்றும் மறுக்கவில்லை…. “சிபி, இங்க வா!”, என்று அழைத்தார்.

அவர்கள் என்ன பேசினார்கள் என்று சுற்றி இருப்பவர்களுக்கு கேட்கவில்லை. ஆனால் பேசிவிட்டு வஜ்ரவேல் நடராஜனிடம் ஒரு மஞ்சப் பையை நீட்டவும், அது பணமாகத் தான் இருக்க வேண்டும் என்று எல்லோரின் அனுமானம். முன்பே இதை ஜெயஸ்ரீயிடம் சொல்லியிருந்தார் வஜ்ரவேல். அந்த கூடத்தில் தான் ஒரு மௌன பார்வையாளராக நடப்பது அனைத்தையும் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“பாருங்க அத்தை! பொருளா கொண்டு வந்து கொடுத்தா நம்ம எல்லோரும் உபயோகிச்சா என்ன செய்யறதுன்னு இந்தப் பொண்ணோட அப்பா எவ்வளவு விவரமா பணமா கொடுக்கிறார். நம்ம ஏன் இவ பொருளைப் போய் தொடப் போறோம்”, என்று தன் மாமியாரின் காதைக் கடித்தாள் வனிதா.  

அவரும் அப்படித்தான் இருக்குமோ என்று நம்ப ஆரம்பித்தார்.

அதற்குள் சிபி அவர்களை நெருங்கவும், “அதை வாங்கிக்கோ!”, என்று நடராஜன் அவனிடம் சொல்ல…..        சிபியோ அதற்கு மேல் இருந்தான், “என்னப்பா இது?”, என்றான்

“அவர் சீர்ன்னு தனியா எதுவும் வைக்கலை, பணமா குடுத்துட்டார்!”, என்றார்.

அவன், “ஜெயஸ்ரீ”, என்று மனைவியை அழைத்தான். அங்கே தான் ஒரு ஸ்டூலில் அமர்ந்து இருந்தாள்.

அவள் எழுந்து மெதுவாக நடந்து வரவும், “அதை வாங்கிக்கோ!”, என்றான் அவளிடம்.

ஜெயஸ்ரீ வாங்கிக் கொண்டாள்.

பார்த்துக் கொண்டிருந்த நடராஜனின் அம்மா, தன் கணவரிடம், “வீட்ல இத்தனை பெரியவங்க இருக்கோம், ஒன்னு என்னை வாங்கச் சொல்லலாம், இல்லை உங்களை வாங்கச் சொல்லலாம், இல்லை மருமகளை வாங்கச் சொல்லலாம். அது என்ன அந்தப் பொண்ணை வாங்கச் சொல்றாங்க. இதுவா முறை, பொண்ணுக்குச் செய்யறதுன்னாலும் பெரியவங்க கிட்ட தானே குடுக்கணும், அதுதானே முறை”, என்றார்.

“என்ன பேசற? அவங்க பொண்ணுக்கு அவர் செய்யறார்! அது அந்தப் பொண்ணு வாங்கறது தான் முறை”, என்று ஈஸ்வரரும் பதில் சொன்னார்.

இது பக்கத்தில் நின்று கொண்டிருந்த தேவி, ராஜலக்ஷ்மி மற்றும் வனிதாவின் காதுகளில் நன்கு விழுந்தது.

“அதுதானே நான் இருக்கக் குள்ள இவர் எதுக்கு சிபியைக் கூப்பிட்டு விடறார்”, என்று தன் கணவர் மேல் தான் கோபம் வந்தது தேவிக்கு.

பணம் கொடுத்த வஜ்ரவேல், “அப்போ நான் உத்தரவு வாங்கிக்கட்டுமுங்களா”, என்று கிளம்பப் போக…

“என்ன இது? சாப்பிடாம போவீங்களா, சாப்பிட்டிட்டு தான் போகணும் மச்சான்”, என்றார் நடராஜன் வஜ்ரவேலிடம். அவரும் சம்மந்தி சொல்கிறாரே என்று அமர்ந்து கொண்டார்.

வஜ்ரவேல் இன்று பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு வருகிறார் என்று தெரியும். ஆனாலும் தடபுடல் விருந்து எல்லாமில்லை மிகவும் சாதாரண விருந்தே…

வஜ்ரவேலோடு உணவுண்ண அமர்ந்த நடராஜனுக்கு முகமே விழுந்து விட்டது. ஒரு வழியாக உணவுண்டு வஜ்ரவேல் கிளம்பவும், அதுவரை அங்கேயே ஒரு ஸ்டூலில் அமர்ந்து நடப்பது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஜெயஸ்ரீக்கு அழுகை பொங்கியது.

தனியான ஒரு உணர்வு, தந்தையையும் தனியாக விட்டு விட்டோம் என்ற உணர்வு.

“கண்ணு கலங்கக் கூடாது கண்ணு, பார்த்து நடந்துக்கோ, எல்லார் கிட்டயும் சகஜமா இரு”, என்ற அறிவுரையோடு தந்தை கிளம்பினார்.

என்னவோ ஒரு இனம் புரியாத பயம் வஜ்ரவேலுவிற்கும் அவசரப்பட்டு விட்டோமோ என்பது போல,

அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் யாரும் இன்னும் ஜெயஸ்ரீயிடம் வந்து பேசவில்லை, அருகில் கூட வரவில்லை, “என்னடா இது? பேசாமல் வீட்டோடு மாப்பிள்ளை பார்த்திருக்கலாம். எப்படி இவள் அங்கிருப்பாள்?”, என்று அவருக்கும் மனம் கலங்கி விட்டது. 

அவர் பயந்ததற்கு தகுந்த மாதிரி, அங்கு சிபியின் வீட்டிலும் சரியான சத்தங்கள் வஜ்ரவேலு அந்த புறம் வந்ததும். 

சிபியிடம் இருந்தும் அவர்கள் வீட்டினர் யாரும் அப்படி ஒரு பேச்சை எதிர்பார்க்கவில்லை. ஏன் ஜெயஸ்ரீயே எதிர்பார்க்கவில்லை, மனதில் இருந்த சஞ்சலம் பெரும் பயமாக மாற, அத்தனை பேர் அந்த வீட்டில் இருந்தாலும் தனியாக ஒரு மூலையில் அவர்கள் பேசுவதையெல்லாம் பார்த்துக் கொண்டு நின்றாள்.

கால்கள் சிறிது அமரு என்று கெஞ்சிய போதும் சுவரில் சாய்ந்தது சாய்ந்த படி நின்றாள்.       

 

Advertisement