Advertisement

அத்தியாயம் பதிமூன்று:

ஜெயஸ்ரீயின் முகம் நொடியில் சுருங்கி விட அப்படியே நின்றுவிட்டாள். பிறகு மனதிற்குள் அவளுக்கு அவளே சமாதானம் செய்து கொண்டாள், இது அவனின் இயல்பு என்பதாக.

உண்மையில் சிபியின் இயல்பு அது இல்லை.

எப்போதும் சற்று அதட்டலாக கறாராக பேசுவான் தான். ஆனால் இப்போது ராதாவுடனான திருமணம் நின்றதில் இருந்து தான் மிகவும் அதிகமாகி விட்டது.  

ஜெயஸ்ரீ அவன் இப்படி சுள்ளென்று பேசியதை யாராவது பார்த்தார்களா என்று பார்க்க… ஆங்காங்கே ஆட்கள் சென்று கொண்டு தான் இருந்தனர். ஆனால் எல்லோரும் தூரமாக சென்று கொண்டு இருந்ததால் காதில் விழுந்திருக்காது என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு அந்த இடத்தை விட்டும் சென்று விட்டாள்.

ஜெயஸ்ரீ அவனின் வார்த்தைகளில் அப்படியே நின்று பின்பு யாராவது பார்த்தார்களா என்று சுற்றிலும் பார்த்தது, பின்பு பதில் சொல்லாமல் திரும்பி சென்றதும் ஒரு மாதிரியாகிவிட்டது சிபிக்கு. தேவையில்லாமல் அவளைக் காய்ச்சி எடுக்கிறோம் என்று புரிந்தவன் அதன் பிறகு அவனும் எதுவும் பேசவில்லை. யாராவது பேசினால் பதில் கொடுத்தான்…

அந்த பிள்ளைகள் வேறு வந்து கனகாரியமாக, “கிளம்பறோம் அண்ணா!”, என்று அவனிடம் சொல்லிச் செல்லவும் இன்னமும் மனம் கனத்தது.

பின்னர் வஜ்ரவேலின் வீட்டை சுற்றி இருந்த வயல் வரப்பைப் பார்வை யிட்டான்… மனதின் அலைப்புறுதல் மட்டும் நிற்கவேயில்லை. மேலும் மேலும் ஏதோ தவறு செய்வதாகவே சிபிக்கு தோன்றியது. எப்படி சரிப்படுத்த என்று தெரியவில்லை.  

ஜெயஸ்ரீ சிபி வீட்டின் உள் இருக்கும் நேரம் அவனின் மீது தான் பார்வையை வைத்திருந்தாள். அவள் சிபியை பார்க்காதே என்று அவளின் மனதிற்கு அவளே சொல்லிக் கொண்டாலும் பார்வை அவனிடம் தான் நிலைத்தது.

அவனுக்கு நேரத்துக்கு என்ன தேவையோ அதைப் பார்த்துச் செய்தாள். ஆனால் அதைவிடுத்து அருகில் சில நிமிடங்கள் கூட இருக்கவில்லை. சிபியும் பேசவில்லை. ஜெயஸ்ரீ அரிதாகவே பேசுவாள் திக்கி திணறி.. இப்போது சிபியிடம் மட்டுமல்ல யாரிடமும் பேசவில்லை.

முகத்தை அமைதியாக வைத்திருந்தாள்.. அதனால் அவளின் மனதின் வருத்தம் யாருக்கும் புரியவில்லை. சிபி இப்படி தான் பேசுவான்…. தான் பழகிக் கொள்ள வேண்டும் என்று உருப்போட ஆரம்பித்து இருந்தாள்.

என்னதான் உருப் போட்டுக் கொண்டிருந்தாலும் பார்வை சிபியை தேடியது. அவன் பார்வையில் பட்டால், அவன் பார்க்காத நேரம் எல்லாம் அவன் மீது தான் ஜெயஸ்ரீயின் பார்வை இருந்தது. 

அடுத்த நாள் கிடா விருந்து என்பதால் வஜ்ரவேல் அதற்கான ஏற்பாட்டில் இருந்தார். வீட்டிற்கு ஆட்கள் வந்த வண்ணம் போன வண்ணம் இருந்தனர். ஒற்றை ஆளாக அவர் ஒரு பக்கம் அலைந்து கொண்டிருந்தார். அதனால் அவர் ஜெயஸ்ரீயையோ இல்லை சிபியையோ அதிகம் கவனிக்க முடியவில்லை.

அதை குறித்து அவர் அதிகம் சிந்திக்கவுமில்லை, ஏனென்றால் ஜெயஸ்ரீ பொறுப்பான பெண், எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை.  

அன்று நாள் முழுவதும் அப்படியேப் போய்விட்டது.

இரவு வந்த போது நேற்று இருந்த ஒரு சுமுக நிலை கூட இருவரிடத்திலும் இல்லை….. பேச்சுக்கள் இல்லை… எதுவுமே இல்லை.

அதே போல நேற்று இரவு ஜெயஸ்ரீயைப் பற்றி தெரிந்து கொள்ள கேள்விகள் கேட்டான். ஆனால் இன்று வரை ஒரு விவரமும் தெரியாது என்பது தான் உண்மை.

இருந்த இடத்தில் அப்படியே இருந்தது அந்த பேச்சுக்கள்.

நேற்றைப் போல ஒரு தலையணையை எடுத்து கீழே போட்டு அவன் உறங்க ஆயத்தமாகவும்….. இன்று அப்படியே விடவில்லை ஜெயஸ்ரீ.

அவன் போட்ட தலையணையை சிரமப்பட்டு குனிந்து எடுத்தாள். எதற்கென்று சிபி புரியாமல் பார்க்க…..

கீழே ஒரு பாயைப் போட்டு அதன் மேல் ஒரு ஜமக்காலத்தைப் போட்டு அதன் மேல் ஒரு பெட்ஷீட் போட்டு அதன் மேல் தலையணையைப் போட்டாள்.

எந்த சிரமுமில்லாமல் இதை செய்தாள் என்று சொல்ல முடியாது. ஆனால் அவள் செய்த விதம் செய்வதில் சிரமங்கள் இருந்தாலும் வேலைகளுக்குப் பழகியிருக்கிறாள் என்று புரிந்தது. அதிக தடுமாற்றங்கள் இல்லை.

சிபி அவள் செய்வதையே தான் காலையிலிருந்து ஜெயஸ்ரீ அவன் பார்வையில் படும் நேரம் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.

மொத்தத்தில் கணவனும் மனைவியும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். ஆனால் சிபி பார்க்காத போது ஜெயஸ்ரீயும் ஜெயஸ்ரீ பார்க்காத போது சிபியும். 

இதனால் சிபி தெரிந்து கொண்டது என்னது என்றால் தடுமாறினாலும் அவளின் வேலைகளை அவளே தான் செய்து கொண்டாள் ஜெயஸ்ரீ, யாரின் உதவியும் நாடவில்லை.

ஹப்பா அவளுடைய வேலைகளை அவள் செய்து கொள்வாள் என்பது சற்று நிம்மதியாகிற்று சிபிக்கு. அப்படி ஒன்றும் ஆண்கள் பெண்களுக்கு வேலை செய்து கொடுக்க கூடாது போன்ற ஆணாதிக்க சிந்தனைகள் எல்லாம் இல்லை.

அவன் கூட இல்லாத நேரம் அவள் வேலைகளை அவள் செய்து கொள்ள வேண்டுமே என்பது போல தான் சிந்தனை. எப்படியிருந்தாலும் தந்தை வீட்டில் பார்த்து பார்த்து மகளுக்கு செய்வர் எந்த வேலையும் செய்ய விடாமல். அதே போன்ற ஒரு சூழலை அவனின் வீட்டில் அவனுக்கு கொடுக்க முடியாது என்று தெரியும்.

இதுவரை எந்த வேலையும் வீட்டில் சிபி செய்ய மாட்டான்.. வீட்டில் நிறைய பெண்கள் என்பதால் அப்படி ஒரு சூழல் வந்திருக்கவில்லை. இனிமேல் புதிதாக மனைவிக்கென்று போய் செய்ய முடியாது இல்லையா. இப்படியாகத்தான் சிபியின் யோசனைகள்.

எது எப்படியாகினும் யோசனைகள் முழுக்க ஜெயஸ்ரீயுடனான அவனின் வாழ்க்கையைப் பற்றி தான்.

படுத்துக் கொண்டே விட்டதை வெறித்து யோசித்துக் கொண்டிருந்தான்.  ஜெயஸ்ரீயும் உறங்கவில்லை. நேற்று சிபி உறங்கிவிட்டதால் அவன் புறம் திரும்பி அவனைப் பார்த்துப் படுத்துக் கொண்டிருந்தவள்… இன்று அதற்கு வழியில்லாமல் வேறு புறம் திரும்பி படுத்து இருந்தாள்.

இருவருக்கும் உறக்கம் அணுகவேயில்லை….. சிபியும் நேராக படுத்திருந்தவன் திரும்பிப் படுத்தான். அவனின் பார்வையில் பட்டது, ஒரு அலமாரி அதனை ஒட்டி இருந்த ஒரு டேபிள் மேல் அடுக்கி வைக்கப் பட்டிருந்த புத்தகங்கள், கூட ஒரு லேப் டேப்.

“டிப்ளமோ கம்ப்யுட்டர் டெக்னாலஜி படித்திருக்கிறாள், அதான் லேப் வைதிருக்கிறாளோ? என்ன வயதிருக்கும் இவளுக்கு? பலமுறை யோசித்து விட்டோம் இன்னும் அவளிடம் கேட்கவில்லை. பார்த்தாலும் வயது சரியாகத் தெரியவில்லை. ஒரு புறம் பெரிய பெண்ணாக காட்சியளிப்பவள் ஒரு புறம் சிறிய பெண்ணாக தெரிகிறாள். எப்படியும் இருபத்தி இரண்டு இருபத்தி மூன்றுக்குள் இருக்கும்”, என்று அனுமானித்தான்…. ஆனால் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற உந்துதல் எழ….. எழுந்தவன் நேராக அந்த டேபிளிடம் சென்றான்.

மனைவி என்றாலும் இன்னும் அவளின் பொருட்களை அவளைக் கேட்காமல் எடுத்துப் பார்க்க மனம் வரவில்லை. அது நாகரீகமற்ற மரியாதையில்லாத செயல் போல தோன்ற, ஜெயஸ்ரீயைப் பார்த்தான். அவள் வேறு புறம் திரும்பிப் படுத்து இருந்தாள்.

“ஸ்ரீ…”, என்று குரல் கொடுத்தான், அவள் விழித்துக் கொண்டிருக்கிறாளா என்று பார்க்க.. ஜெயஸ்ரீ சிபியைப் பற்றிய யோசனைகளில் கண்மூடி படுத்திருந்தாள். அவன் கூப்பிட்டதை கவனிக்கவில்லை. ஆனாலும் அழைத்து முடித்ததும் ஏதோ குரல் ஒலித்ததோ என்பது போல ஒரு உந்துதல், அப்போதும் அவன் அழைத்த விதம் தெரியவில்லை. படுத்த வாக்கிலேயே திரும்பி பார்த்தாள்.

சிபி மேஜையின் புறம் நின்று கொண்டிருந்தது கண்ணில் பட, ஏதோ அவனுக்கு தேவை அவன் குரல் தான் கேட்டது போல அதான் நிற்கிறான் என்று அனுமானித்தவள், ஒரு வேலை தண்ணியாக இருக்குமோ தான் தண்ணீர் கொண்டு வரவில்லை என்று அவளாக நினைத்து இறங்கி சுவரைப் பிடித்து கதவின் புறம் போனாள்.

“எங்க போற?”, என்று சிபி கேட்கவும்,

“தண்ணி கொண்டு வர”, என்பது போல தயங்கித் தயங்கி சைகை செய்தாள். ஏனோ முயன்றும் பேச்சு வரவில்லை.

“அதான் அங்க இருக்கே!”, என்று ஒரு சேரின் மேல் இருந்த பாட்டிலைக் காட்டினான்.

“அப்போ உங்களுக்கு என்ன வேணும்?”, என்பது மாதிரி தயங்கித் தயங்கி சைகை செய்ய……

“அப்போ நான் கேட்டேன்னு நினைச்சு போனியா, என்னன்னு கேட்க மாட்டியா”, என்று சிபி கேட்க……..

மிகவும் முயன்று, “நீங்க தானே உங்களை எதுவும் கேட்கக் கூடாது சொன்னீங்க”, என்றாள் திக்கி திணறி…..

காலையில் தான் சொன்னதை இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறாள்… “அது அவளைக் காயப்படுத்தி இருக்கிறது”, என்று புரிந்தான் சிபி.

ஆனால் சாரி கேட்கவோ இல்லை சமாதானப்படுத்தவோ முயலவில்லை…… “உனக்கு மறதி வியாதி இல்லையா….. இரு, ஏதாவது கடையில மாத்திரை இருந்தா வாங்கிக் கொடுக்கறேன், அது வர்றதுக்காக!”, என்று சிபி சொல்லவும்…..

ஜெயஸ்ரீ அவனை விழி விரித்து ஆச்சரியமாகப் பார்த்தாள், அவனுக்கு இப்படிக் கூட பேச வருமா என்பது போல.

முகத்தில் அந்த பாவனைகள் அப்படியே வந்தது.

அதுவுமில்லாமல் முதல் முறையாக அவளிடம் ஜோக் அடித்து பேசுகிறான். அவன் லகுவாக பேசினாலும் முக பாவனை என்னவோ ஸ்ட்ரிக்ட் ஆபிசர் தான்.

ஆனாலும் அதையும் அனுபவித்தாள் ஜெயஸ்ரீ…. காலையில் இருந்து அவனின் வார்த்தைகளைக் கேட்டு அவன் அப்படித்தான் என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும், ஒரு மாதிரி மன அழுத்தத்தில் இருந்தாள்.

இப்போது அது விடுபடவும் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. முகமும் புன்னகையைப் பூசியது. அவள் கண்களில் கண்ணீரோடு புன்னகைக்கவும் முகம் ஓவியப்பவையாய் ஜொலித்தது.

முதல் முறையாக கண்களில் கண்ணீரோடு புன்னகைத்த அந்த முகம் சிபியை ஈர்க்க…. அதை சில நொடிகள் பார்த்தவன்…… “உன் வயசென்ன?”, என்றான் உடனே.

“என்ன கேள்வி இது? எதற்கு இந்த கேள்வி?”, என்று மீண்டும் ஒரு புரியாத பாவனையை ஜெயஸ்ரீயின் முகம் காட்டவும்…….

அவளைப் புரிந்தவனாக, அவளிடம் விளையாடிப் பார்க்க, “நீ பார்க்க என்னை விட பெரியவளா தெரியரியா அதான் கேட்டேன்”, என்றான் சீரியசாக.

அவன் நிஜமாக தான் சொல்கிறானோ! அதுதான் தான் அவனை ஈர்க்கவில்லையோ என்று ஜெயஸ்ரீயின் முகம் உடனே அதிர்ச்சியைக் காட்டிப் படபடக்கும் இதயத்தோடு அவனைப் பார்த்தாள்.

முகம் மிகவும் சீரியசாக தான் இருந்தது… ஆனால் சிபியின் கண்கள் சிரித்தது.

அதை நம்பியும் நம்பாலும் ஒரு பதட்டத்தோடே ஜெயஸ்ரீ பார்க்க…. அவளின் முகத்தில் மீண்டும் கலவையான உணர்வுகளைப் பார்த்தவன்…..

முகத்தின் கடினத் தன்மையைக் கைவிட்டு மெலிதாக புன்னகைத்தான்…

“பொய், பொய் தானே சொன்னிங்க”, என்றாள் திக்கித் திணறி… அவள் கேட்ட பாவனையில் இப்போது சிபிக்கு சிரிப்பு பீறிட்டு வந்தது.

“ஹா, ஹா”, என்று வாய்விட்டுச் சிரித்தான்…. “நான் சொல்றதை நம்பற அளவுக்கு நீ பச்சைப் புள்ளையா இல்லை நான் நல்லவனா”, என்றான் சிரிப்பினோடே.

சில மாதங்களுக்கு பிறகு சிபி சிரிக்கும் சிரிப்பு.

அவன் பொய் சொல்கிறான் என்று திண்ணமாக தெரிய…. “அய்யே! என்ன இது?”, என்பதுப் போல ஒரு பாவனையை ஜெயஸ்ரீ கொடுக்க…..

“ஹா ஹா”, என்று இன்னும் அதிகமாக சிரித்தவன், “இதுக்குத் தான் வயசைக் கேட்டேன்! சில சமயம் பெரிய பொண்ணு மாதிரி தெரியற! சில சமயம் சின்னப் பொண்ணா தெரியற!”, என்று விளக்கம் கொடுத்தான்.

ஜெயஸ்ரீ பதில் சொல்ல முயலாமல், சிபியைத் தாண்டிப் போய் மேஜையின் டிராவில் அவளின் செர்டிபிஃகேட் அடங்கிய பைலை எடுத்து  சிபியிடம் நீட்டினாள்.

அதைப் பிரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க… இப்போது இன்னும் பயங்கர சிரிப்பு சிபிக்கு.

“நேத்து இன்டர்வ்யூவை இன்னைக்கு முடிக்கறாங்க, என்ன மனைவியா எனக்கு வேலை கொடுப்பாங்களா இல்லையா”, என்பது போலத் தான் ஒரு எண்ணம் ஜெயஸ்ரீயினுள்ளும்.

ஆம்! அதில் அவளின் பத்தாவது மார்க் ஃசீட் மட்டும் டிப்ளமோ செர்டிபிகேட் எல்லாம் இருந்தது. வயதை பார்க்க…..

அன்றைய தினத்தோடு கணக்கிட்டால் பதினெட்டு முடிந்து பத்தொன்பது பிறந்து மூன்று மாதங்களே ஆகியிருந்தது. பத்தாவது முடித்து, டிப்ளமோ முடித்திருந்தாள்.

இவ்வளவு குறைந்த வயதை சிபி எதிர்பார்க்கவில்லை.. இவ்வளவு குறைந்த வயதில் இப்படி அவசரமாக திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன….

அதை மறையாமல் அப்படியே ஜெயஸ்ரீயிடம் கேட்டான். “பதினெட்டு இப்போத் தானே முடிஞ்சிருக்கு…. உன் கல்யாணத்துக்கு அப்படி என்ன அவசரம்…… கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடியே அந்த பிராடுப் பய பையன் கூட சம்மந்தம் பேசி…”,

“அது நின்னு, அப்புறமும் உன்னை செத்துப் போன வீட்ல ஏலம் விட்டு என்னோட அவசரமா கல்யாணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அப்படி ஒன்னும் நீங்க இல்லாதவங்க கூட இல்லை, நீயும் நல்லா தான் இருக்க, இந்த சில குறைகள், அதுக்கு அப்படி ஒன்னும் மாப்பிள்ளைக் கிடைக்காம போகாதே. ஏன் அவசரம்?”, என்று பளிச்சென்று உள்ளதை உள்ளபடி அப்படியே கேட்க…..

என்ன காரணம் ஜெயஸ்ரீ அறியாததல்ல…. நன்றாக ஓடி ஆடி திருந்து கொண்டிருந்த பெண்ணிற்கு இப்படி ஆனதும் தந்தை ஏறக்குறைய உடைந்து விட்டார்.

இதே ஆண்மகனாய் இருந்தால் அவன் இனிமேல் எப்படிப் பிழைப்பான் என்பது போல ஓடும் சிந்தனைகள், பெண் என்பதால் இனி எவன் திருமணம் செய்வான் என்பது போல ஆளாளுக்குப் பேச…….

அப்போது பார்த்து ராஜவேல் தன் அண்ணன் வஜ்ரவேலிடம், “என் மனைவியின் அண்ணன் மகன், நல்லவன், என்ஜிநீயருக்கு படிக்கிறான்… நாம் உதவி செய்து படிக்க வைத்தால் நம் கைக்குள் இருப்பான். அவனுக்கு மகளை திருமணம் செய்துக் கொடுத்து வீடோடு கூட வைத்துக் கொள்ளலாம்”, என்பது போல மனதை கலைத்து….

அந்த நேரத்தில் இருந்த மன உளைச்சலில் வஜ்ரவேலும், “சரி”, என்க அப்படி நிச்சயம் ஆனது தான் ஜெயஸ்ரீயின் திருமணம்.

இப்போதும் அந்த சாவு விழுந்த வீட்டிலும் ஜெயஸ்ரீயை ஏலம் விட்டது போல பேசியது ராஜவேல் தான். அப்படியேப் பேச்சு வளர பின்பு வஜ்ரவேலுக்கும் விசாரித்தவரை சிபி திருப்தியாக இருக்க பெண் கொடுத்தார்.

அதை எப்படி இவனிடம் சொல்வது…..

ஜெயஸ்ரீ தடுமாறி நிற்கவும்…… “திக்கினாலும் பரவாயில்லை! சொல்லு!”, என்று பேசிப் பேசி சிபி விஷயத்தை வாங்கினான்.   

ஜெயஸ்ரீ பதட்டத்தோடு சொல்லி முடித்தவள், திருமணம் நின்றதுப் பற்றி,  கண்ணனைப் பற்றி வேறு சிலதும் சொல்ல முயலும் போதே…. எப்போதும் போல ஜெயஸ்ரீ என்ன சொல்ல வருகிறாள் என்று கேட்காமல்…

“ஆனாலும் உங்கப்பா இப்படி உன் கல்யாணத்துக்கு அவசரம் காட்டியிருக்க வேண்டாம், சொல்லப் போனா அவரே எனக்கு மாமனார் மாதிரி இல்லை மச்சான் மாதிரி தான் இருக்கிறார். பேசாம அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டு, இன்னும் உன்னைப் படிக்க வைச்சிருக்கலாம்”, என்று அவளின் தந்தையைப் பற்றி பேச…..

“இவர் எதற்கு இதை சொல்லுகிறார்”, என்று புரியாமல் விழித்தாள் ஜெயஸ்ரீ.

“பெண்களுக்குப் படிப்பும் முக்கியம், இன்னும் உனக்குத் திருமண வயது வரவில்லை, உன் அப்பா எதற்கு இந்த சிறிய வயதில் தனியாக இருக்க வேண்டும்”, என்று அவனுக்குத் தான் எல்லாம் தெரியும் என்பதைப் போல சிபி அந்த அர்த்தத்தில் பேச……

ஜெயஸ்ரீ சரியாக தப்பாக நினைத்தாள். “தன் தந்தை இப்போது திருமணம் அவளுக்குத் திருமணம் செய்ய நினைக்காமல் இருந்திருந்தால், தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இராது”, என்பதால் சொல்லுகிறான் என்பது போல…..

மீண்டும் ஜெயஸ்ரீயின் முகம் சுருங்கிவிட்டது.

சிபி எதற்கு அவளின் முக சுணக்கம் என்பதை அனுமானிக்கவில்லை என்பதை விட, அவன் ஜெயஸ்ரீயின் முகச் சுணக்கத்தையே கவனிக்கவில்லை.

அவன் பாட்டிற்கு அவளின் டென்த் மார்க் மற்றும் டிப்ளமோ மார்க்ஸ் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல பள்ளி, நல்ல கல்லூரி….. அவன் தமிழ் மீடியம்… இவள் ஆங்கில மீடியம் அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.

எதற்கோ தலை நிமிர்ந்து பார்த்தவன், ஜெயஸ்ரீ நின்று கொண்டே இருப்பதை பார்த்து…. “நீ போய்த் தூங்கு… நான் இதெல்லாம் பார்க்கிறேன்”, என்று அவளின் அலமாரியைக் காட்டினான்.

கூடவே, “உன்னைப் பத்தி இன்னும் ஒன்னும் தெரியாது இல்லையா? தெரிஞ்சிக்க!”, என்று எப்போதும் போல விளக்கம் கொடுக்க…..

மீண்டும் இவன் நல்லவனா கெட்டவனா என்ற யோசனை தான் ஜெயஸ்ரீக்கு.

“மனைவி நான் இவர் எதிரில் இருக்கிறேன்…. என்னைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் என் சான்றிதழ்களைப் பார்த்தா… என்னைப் பார்க்க இல்லையா, என்ன சொல்ல இவரைப் பற்றி…..?”, என்று தான் தோன்றியது.   

ஆனால் அந்த நினைப்பெல்லாம் சிபிக்கு இருந்த மாதிரியே தெரியவில்லை.. அவள் மெதுவாக நடந்து சென்று படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.

சிபி விழித்துக் கொண்டு, அதையும் இதையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். இருந்தாலும் அவன் என்ன செய்கிறான் என்பது போல ஜெயஸ்ரீ கண்திறந்து பார்க்கவேயில்லை.          

பல நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் புரிதல் முதலில் மனதில் இருந்து ஆரம்பிப்பதில்லை, உடலில் இருந்து ஆரம்பிக்கறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

ஒரு மஞ்சள் கயிறு அதற்கு இருக்கும் சக்திகள் பல……. திருமணத்தின் அடிப்படை பந்தம் இதுதான்.

ஒருவரை ஒருவர் மனதால் புரிந்து கொள்வது எல்லாம் இதன் பிறகே…

அப்படி புரிதல் வராவிட்டாலும், இல்லை புரிந்து ஒரு பிடித்தமின்மை வந்துவிட்டாலும், பின்பு அந்த திருமண பந்தத்தை விட்டு விலக முடியாததற்கு காரணமும் இதுவே.   

சிபியின் எண்ணம், சொல், செயல், இதை அவனே அறியாத போது ஜெயஸ்ரீ எங்கனம் அறிந்து கொள்வாள்.   

 

Advertisement