Advertisement

அத்தியாயம் பன்னிரண்டு:

“கண்டுபிடியேன் நல்லவனா கெட்டவனானு”, என்று சொல்லி ஜெயஸ்ரீயை பார்த்தான்.

ஜெயஸ்ரீயின் முகத்தில் அவ்வளவு கலக்கம்…. பேச முயன்றும் வார்த்தைகள் வரவில்லை. கூடவே பயம் கூட…….

“ரொம்ப களைப்பா தெரியற, தூங்கு!”, என்று சிபி அமர்ந்திருந்தவன் கட்டிலை விட்டு இறங்கினான்.

பின்பு பாலை எடுத்து ஜெயஸ்ரீயிடம் நீட்டியவன்…….. “நீ குடிச்சிட்டு குடு!”, என்றான்.

ஜெயஸ்ரீ கொஞ்சம் குடித்து கொடுக்க…… அதை ஒரே வாயில் சரித்தவனை விழிவிரித்து பார்த்தாள். அதையெல்லாம் கண்டு கொள்ளாதவன், “தூங்கு!”, என்று சொல்லி ஒரு தலையணையை எடுத்து கீழே போட்டு அதில் படுக்க ஆயத்தமாக……

“ஏன்?”, என்று சைகையில் கையைக் காட்டினாள்.

“எனக்கு இந்த மெத்தை பழகலை… எங்க வீட்லயும் எல்லோரும் இதை உபயோகிச்சாலும் எனக்கு இது சௌகரியப்படாது, கொஞ்ச நாள் போகட்டும் பழக முயற்சி பண்றேன்…. எனக்கு இப்போ நல்லா தூங்கணும்….”, என்று சொல்லி கீழே படுத்துக் கொண்டான்.

“அவன் கீழே படுக்கும் போது தான் எப்படி மெத்தையில் படுப்பது! இவ்வளவு விளக்கம் சொல்கிறான், அதையும் மீறி மெத்தையில் படுங்கள் என்று சொல்வது என்னுடன் வந்து படுங்கள்”, என்பது போல அர்த்தமாகி விட்டால் என்ன செய்வது என்று திணறிய ஜெயஸ்ரீ……… உட்கார்ந்தபடியே இருக்க…..

“நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன் தூங்கு!”, என்று சொல்லி சிபி கண்களை மூடிக் கொண்டான்.

பட்டு வேஷ்டி சட்டையில் அப்படியே, மாற்றவில்லை, ஒன்றுமில்லை. தானும் பட்டுப் புடவையில் இருப்பதை உணர்ந்தவள்.. அங்கிருந்தே போகக்கூடிய சிறிய அறைக்கு நைட்டியை எடுத்துக் கொண்டு உள்ளே போகக் கதவை திறக்க, அந்த சத்தத்தில் கண்களை திறந்தவன், உடனே எழுந்து அமர்ந்து என்ன என்பது போல பார்க்க…..

அவன் எழுந்த வேகத்திற்கு ஏதோ தவறு செய்தவள் போல ஜெயஸ்ரீ நிற்க… அவள் உடை மாற்ற உள்ளே செல்கின்றாள் என்பதை கையில் இருந்த அவளின் உடையைப் பார்த்து புரிந்தவன்…

“எனக்கும் ஏதாவது லுங்கி இருக்கா இங்க! இது பட்டு! கசகசன்னு இருக்கு!”, என்று சொல்ல…

அது அவளின் அறை அங்கே அவளின் உடுப்புகள் மட்டுமே…. “சரி! அப்பாவினது எடுத்து வரலாம்”, என்பது போல நினைத்தவள் ரூமின் கதவை நோக்கி மெதுவாக சுவரைப் பிடித்து நடக்க…..

சில அடிகள் அவள் எடுத்து வைக்கவும் தான், ரூமின் கதவை திறக்கப் போகிறாள் என்று உணர்ந்தவன்….. “கதவெல்லாம் திறக்காத! வேண்டாம்! என்று சொல்லி…. சட்டையை மட்டும் கழற்றி பனியன் வேஷ்டியோடு மீண்டும் படுத்துக் கொண்டான் வெறும் தரையில்.

என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்த ஜெயஸ்ரீ அப்படியே பார்த்து நிற்கவும்…… “நீ ஏன் நிக்கற? போ!”, என்று சிபி சொல்ல……

அவள் சென்று உடைமாற்றி வந்து பார்க்கும் போது……. சிபி உறக்கத்தின் பிடியில் இருந்தான். வேறு இடம் ஆனாலும் சிபி உறங்கி விட்டான்! ஆனால் ஜெயஸ்ரீக்கு தான் உறக்கமில்லை, மெத்தையில் படுத்தவள், சிபியின் புறமாக பார்த்து படுத்து அவன் உறங்குவதையே பார்த்து இருந்தாள்.

“இவர் நல்லவரா? கெட்டவரா?”, என்று தான் ஆராய்ந்து கொண்டிருந்தாள். இந்த அவளின் ஆராய்ச்சி இன்னும் பலநாட்கள், ஏன் மாதங்கள், வருடங்கள் கூட தொடரும்.. என்று தெரியாமல். 

இந்த ஒரு நாளைக்குள்ளேயே வித விதமாக பேசுகிறார். சில சமயம் நல்லவிதமாக தோன்றுகிறது, சில சமயம் கடுமையாக இருக்கிறது. என் குறைகள் இவருடைய கண்ணுக்கு பெரிதாக தெரிகிறதா… என் நிறைகள் என்று எதுவுமே இவருக்கு தெரியவில்லை. என்னைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. என் தீக்காயங்கள் அஜாக்கிரதையினால் என்கிறார்.

அப்போது என்னைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. யாரும் இவரிடம் சொல்லவில்லையா? இல்லை இவருக்குத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லையா…… நினைத்த போதே கண்ணின் ஓரம் நீர் துளிர்த்து.

இவருடைய வீட்டில் இருந்து யாரும் இன்னும் சரியாக பேசவேயில்லையே…… நான் அங்கே சென்று எப்படி இருப்பது.

யோசனைகள் பலவிதமாக தாக்க எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

காலையில், “ஜெயஸ்ரீ”, என்ற சிபியின் குரல் கூட அவளின் உறக்கத்தை கலைக்கவில்லை. அவன் மெதுவாக தோளை அசைக்க அதன் பிறகு தான் உறக்கம் கலைந்தது.

“மணி ஏழரை! எழுந்த்திருக்கலையா?” எனவும் அடித்து பிடித்து எழுந்தவள்…

“நீ… நீங்க… எப்… எப்போ…”, என்று ஆரம்பித்து, “எழுந்தீங்க”, என்று கேட்க முற்பட….

அவள் கேட்க வருவது புரிந்து.. “நாலரை மணிக்கு எப்பவும் என் தூக்கம் கலைஞ்சிடும்….. தினமும் அந்த நேரத்துக்கு வயலுக்கு இல்லை தோட்டத்துக்கு போயிடுவேன்…”, 

“இப்பவும் உங்க வீட்டைச் சுத்தி நடந்து பார்த்துட்டு வந்தேன். வந்து பார்த்தா நீ தூங்கிட்டு இருந்த, சரி வெளில போய் உட்கார்ந்தா…. எல்லாம் வந்து எட்டி எட்டி பார்த்துட்டு போறாங்க! நான் உட்கார்ந்து இருக்குறதை! அதான் எழுப்பினேன்”.

அவசரமாக எழுந்தவள், உடனே தரையில் கால் வைத்து நிற்க முற்பட்டு தடுமாறினாள்.

சிபி பிடித்து நிறுத்தவும்……… பின்னர் கட்டிலை பிடித்து நின்றவள், சுவரைப் பிடித்து வேகமாக குளிக்க சென்று, குளித்து வந்து போது சிபி அங்கே இல்லை. விரைவாக உடை மாற்றி…… காலில் ஷீ அணிய முற்படும் போது தான் சிபி வந்தான்.

காலில் ஷூ போடுவதற்காக விலக்கியிருந்த  சேலையை அவசரமாக அவள் சரி செய்யவும், அதைக் கண்டும் காணாதவன் போல……. “எனக்கும் குளிக்கணும்….. உங்கப்பா இந்த துணி குடுத்தார்”, என்று ஒரு கவருடன் சிபி பேசி குளியலறை நோக்கி சென்றான்.

அதன் பிறகே மீண்டும் ஷூவை மாட்டி ஸ்டிக்கின் உதவியுடன் வேகமாக வெளியே சென்றாள்.

சமையலறை சென்றவள்…. அங்கே ஆயாவும், சித்தியும் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து… “எல்… எல்லார்… எல்லார்க்கும் குடிக்க காபி டீ குடுத்திடீங்களா சித்தி”, என்று திக்கி திக்கி கேட்கவும்…..

“எல்லோரும் குடிச்சிட்டாங்க… ஆனா மாப்பிள்ளை இன்னும் குடிக்கலை கேட்டதுக்கு நீ எழுந்திரிக்கட்டும்னு சொன்னாங்க”, என்றார்.

மனதிற்குள் ஒரு மெல்லிய சாரல் தான் ஜெயஸ்ரீயிற்கு…. சிபி வார்த்தை பிரயோகங்களை கடுமையாக செய்தாலும்… ஜெயஸ்ரீயிடம் சகஜமாக இருக்கிறான், நேற்று இரவில் இருந்து தான் தனித்து பேசியதே ஆனால் அதிகம் பேசுகிறான் என்று தான் ஜெயஸ்ரீயிற்கு தோன்றியது.

“போ, கண்ணு! என்ன குடிப்பார்னு கேளு…..?”,

“சரி!”, என்பது போல தலையாட்டி வெளியே வந்து, சிபி குளித்து முடித்த பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து, “தந்தை எங்கே?”, என்று தேடினாள்.

அவர் வீட்டின் வெளியே உறவுகளுக்கு காலை உணவு தயாராகிக் கொண்டிருக்க அங்கே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.

மகளைப் பார்த்தவுடன் அவளின் முகம் எப்படி இருக்கிறது என்பது போல தான் ஆராய்ந்தார். எந்த சஞ்சலமும் இல்லாமல், தெளிவாக இருக்கவும் தான் அவருக்கு நிம்மதி ஆகிற்று.

“என்ன கண்ணு? மாப்பிள்ளை என்ன பண்றார்?”,

“குளிக்கிறார்!”, என்பது போல ஜெயஸ்ரீ சைகை காட்டவும்,

“போ கண்ணு! போ! போ! கூட இரு! புது இடம் இல்லையா அவருக்கு! என்ன அவருக்கு தேவையோ, கவனி!”, என்று சொல்ல…..

“அப்பா! என்ன இது!”, என்பதை வார்த்தையில் சொல்லாமல் முகத்தைச் சுருக்கி செல்லமாக ஒரு பாவனையைக் கொடுக்க….

“போ! போ! போய்ப் பாரு!”, என்றார் அவரும் கனிவாக.

“எப்படி எப்படியோ சம்மந்தமாகி திருமணம் நடந்து விட்டது…… மகளுக்கும் மருமகனுக்கும் பிடித்து விட வேண்டும், இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருக்க வேண்டும்….. ஜெயஸ்ரீயின் குறை சிபிக்குப் பெரிதாக தோன்றக் கூடாது, இருவரும் நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும்!”, என்பது தான் அவரின் அப்போதைய ஆசை எல்லாம்.

ஜெயஸ்ரீ உள்ளே போகத் திரும்பவும், “அக்கா!”, என்ற குரல் கேட்க….. திரும்பிப் பார்த்தால் பத்மினியும் ராகினியும் ஜெய்சங்கருடன் நின்று இருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்தவள், “நேத்து ஏன் வரலை”, என்று சைகையில் கேட்டாள்….

எப்படி சொல்வர் தனம் தான் வேண்டாம் என்று சொன்னார் என்று……. உண்மையில் தனம் தான் வேண்டாம் என்று சொல்லியிருந்தார்.

இந்த பிள்ளைகளைப் பார்த்தால் யாராவது அவர்களின் அப்பா அம்மா இறந்ததை பற்றி பேசுவர்…… அப்படியே அது ரயில் பெட்டி போல நீண்டு…. ஜெயஸ்ரீ சிபியின் திருமணம் நிச்சயம் ஆனா விதத்திற்கு வந்து நின்றுவிட்டால்…. அதன் பொருட்டே வேண்டாம் என்று விட்டார்.

இப்போது காலையிலேயே அவர்களை வர சொல்லிவிட்டு அவர்களுக்கு முன் வந்து விட்டார். தனம் ராஜவேலின் வீட்டில் தானே அந்தப் பிள்ளைகள் இருந்தனர் தந்தையும் தாயும் இறந்த பின். அதன் பிறகு தான் ஜெயஸ்ரீக்கு அவர்களுடன் சற்று நல்ல பழக்கம்.

அவர்கள் மூவரும் சொல்வதறியாமல் நிற்கவும், மூவரின் பள்ளிச் சீருடைகளை பார்த்து பள்ளிக்கு தயாராகி இருக்கின்றனர் என்று புரிந்து,  

“உள்ள வாங்க!”, என்பது போல ஜெயஸ்ரீ சைகை செய்ய…. பத்மினியும் ராகினியும் உள்ளே செல்ல…. ஜெய்சங்கர் அந்த சமையல் செய்யும் இடத்தில் ஏதாவது உதவி தேவையா என்பது போல நின்று கொண்டான்.

பத்மினியையும் ராகினியையும் உள்ளே தனம் இருக்கும் இடத்தில் அழைத்து சென்று விட்டாள்.  

“ரெடியாகியே வந்துடீங்களா!”, என்று கேட்ட தனம், நேரத்தைப் பார்க்க இன்னும் பள்ளி செல்ல நிறைய நேரம் இருப்பதால்……

“இன்னும் நேரம் இருக்கு! இப்போவே சாப்பிட்டா பசிக்கும்… கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கலாம்”, என்று சொல்லவும்…. அவர்கள் அங்கே பக்கத்தில் இருந்த கூடத்தில் அமர்ந்து கொண்டனர்.

பிறகு சிபி என்ன செய்கிறான் என்று பார்க்க ஜெயஸ்ரீ ரூமின் உள் செல்ல முயலும் போதே…… சிபி குளித்து தயாராகி வெளியே வந்தான்.

வந்தவனின் தோற்றம் ஜெயஸ்ரீயை கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும்….. தந்தை காட்டிய புகைப் படமும் வேஷ்டி சட்டையில், பின்பு நேரிலும் வேஷ்டி சட்டையில் தான் நேற்றிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது ஒரு ஜீன்ஸ் பேண்டிலும், காட்டன் ஷர்டிலும் தயாராகி நின்றிருந்தவனின் தோற்றம்… ஜெயஸ்ரீயை விடாமல் அவனையேப் பார்க்க வைத்தது.

ஆனால் சிபி அந்த முழுக்கை சட்டையின் கைகளை மடக்கி விட்டுக் கொண்டிருந்தான். அதனால் ஜெயஸ்ரீயின் பார்வையை கவனிக்கவில்லை.   

தன் கணவனை ரசித்தாள் என்று தான் சொல்ல வேண்டும். உயரமாக, இடைவிடாத உழைப்பு கொடுத்த திண்மையான உடல் கட்டுடன், வசீகரிக்கும் முகத்துடன் இருந்தவன், அன்று ஜெயஸ்ரீயை அதிகம் கவர்ந்தான்.

இன்னமும் சிபிக்கு ஒரு இளைஞனின் தோற்றம் தான், ஆண்மகனின் தோற்றத்திற்கு  மாறவில்லை.

காலையில் குளித்து முடித்து தயாராகும் போது அவளின் கழுத்தில் இருந்த மஞ்சள் தாலி கொடுத்த மாற்றம் உரிமை…… சிபியும் அவளிடம் சற்று கடுமையாக பேசினாலும் ஏதோ ஒரு வகையில் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தது சற்று நெருக்கமாக ஜெயஸ்ரீயை உணர வைத்தது. அந்த நெருக்கம் கொடுத்த தைரியம் சிபியை ரசித்துப் பார்த்தாள்.

ஆனால் சிபி சட்டையின் கையை மடித்து விட்டு தலையை நிமிர்தவும்….. பார்வையை விளக்கிக் கொண்டாள். அவன் பார்க்காத போது பார்க்க தான் தைரியம்….. இன்னும் அவனின் பார்வையை சந்திக்க ஒரு மெல்லிய அச்சம் இருந்தது.

அதுவும் இன்னும் கண்ணனை பற்றியும் சொல்லாததால் அதுவும் ஒரு தயக்கத்தைக் கொடுத்தது.

சிபி அவளை பார்க்கவும், “என்ன குடிக்கறீங்க?”, என்று கேட்க நினைத்து சைகை செய்ய கையை உயர்த்தவும், சிபியின் பார்வையில் கோபம் ஆரம்பிப்பதை உணர்ந்தவள்,

மெதுவாக அவனின் பக்கத்தில் வந்து நின்றாள். பின்னர் திக்கி திக்கி “என்ன குடிக்கறீங்க…… என்ன கொண்டு வரட்டும்”, என்று கேட்டாள்.

சற்று நேரம் ஆனது….. ஆனாலும் அவள் பேசி முடிக்கும் வரை பொறுமையாக நின்றான் சிபி…….              

அவள் என்ன பேசுகிறாள் என்பதை அவள் முதல் வார்த்தை ஆரம்பிக்கும் போதே அனுமானித்து விட்டான் சிபி. ஆனாலும் முடிந்தவரை அவள் பேசட்டும் என்று தான் அமைதியாக நின்றான்.

 நேற்று அவன் பேசிய போது ஏதோ இண்டர்வி செய்வது போல தோன்றியது. இன்று ஏதோ யோசித்து யோசித்து பதில் சொல்லும்  மாணவரிடம் வகுப்பு ஆசிரியர் பொறுமையாக நின்று பதிலை வாங்குவது போல தோன்றுகிறது.

நொந்தே விட்டாள்….. இன்னும் கணவன் உரிமையோடு சிபி பார்க்கவில்லை என்பது போல தான் ஒரு தோற்றம் ஜெயஸ்ரீக்கு.

சிபி அவளின் நடவடிக்கைகளை தான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். தன்னுடன் சைகையில் பேச முயன்றவள், அதற்கு முயலும் போது தன் கண்களில் கோபத்தை பார்த்து அதைக் கைவிட்டது. அதே சமயம் அங்கிருந்து பேச முயலவில்லை. பக்கத்தில் வந்து அவனுக்கு மட்டும் கேட்குமாறு தான் திக்கி திக்கி பேசினாள் .

தன்னுடைய குறை மற்றவர்களால் கவனிக்கப் படுவதை ஜெயஸ்ரீ விரும்புவதில்லை என்று புரிந்தது.

அவள் தன் பதிலுக்காக காத்து நிற்பது புரிய…… “காபி டீ அதிகம் குடிக்க மாட்டேன்…. அதுவும் காலையில குடிக்கவே மாட்டேன்”.

“அப்போ என்ன குடிப்பீங்க”, என்று திக்கி திணறி மறுபடியும் கேட்க…….

சொல்லவா? வேண்டாமா? என்று சில நொடிகள் யோசித்தவன், அவள் தெரிந்து தானே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து, “மீதமான சாதத்துல தண்ணி ஊத்தி வெச்சிருப்பாங்க இல்லையா அந்த தண்ணி மட்டும் எடுத்து உப்பு போட்டுக் குடிப்பேன் இல்லை கம்பு இல்லைனா ராகி கஞ்சி குடிப்பேன்…..”, என்றான்.

“நம்மோட உடல் தொந்தரவுகளுக்கு அதிகம் நம்ம உணவுப் பழக்க வழக்கம் தான் காரணம். அதனால அதுல ரொம்ப கவனமா இருப்பேன்”, என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.

“இப்போ அதெல்லாம் இங்க இல்லை”, என்று திக்கி திணறி இல்லையே என்ற தவிப்போடு ஜெயஸ்ரீ சொல்லவும்…….

“பரவாயில்லை வெறும் பால் மட்டும் எதுவும் அதுல கலக்காம் கொடு”, என்று சொன்னான். 

அவன் சொல்லவும் அதை செயலாற்ற ஜெயஸ்ரீ உள்ளே போகவும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அவன் அமர்ந்த இடத்தில் இருந்து உள்கூடம் நன்றாக தெரிய, அங்கே பார்வையை செலுத்தியவனின் பார்வையில் பத்மினியும் ராகினியும் பட்டனர்.

ஒன்றுக்கு இரண்டு முறை அவர்கள் தானா என்று சரி பார்த்தான். அவர்கள் தான்! அதுவரை இருந்த சமன்பட்டு இருந்த மனநிலை மாறியது. சிபி இவர்களைப் பார்த்ததும் பத்மினியும் ராகினியும் அவனைப் பார்த்து புன்னகைக்க, சட்டென்று சிபிக்கு சிரிக்க வரவில்லை.

சில நொடிகளில் தேறிக் கொண்டு அவர்களைப் பார்த்து புன்னகைத்தான். ஆனாலும் மனது முழுவதும் ஒரு எரிச்சல் மூண்டது. இந்த ராதா மட்டும் கடைசி நிமிடத்தில் அப்படி செய்யாமல் இருந்திருந்தால், தான் இப்படி யாரையும் குற்ற உணர்வோடு பார்க்கும் அவசியம் வந்து இராதே என்பது போல….

ஜெயஸ்ரீ பாலை மெதுவாக கொண்டு வந்து நீட்டிய போது….. அதை வாங்கவும் மனமில்லை….. இருந்தாலும் வாங்கினான்….. அதைக் குடிக்கவும் மனமில்லை இருந்தாலும் குடித்தான்.

சிபியின் செய்கைகள் அவனுக்கே பிடிபடவில்லை…… இப்படி தான் ஜெயஸ்ரீயோடு தன் வாழ்க்கையும் என்பது போல ஒரு எண்ணம் அவனுள். குழம்பிப் போனான்.

இருபத்து நான்கு வயது இளைஞன், நல்லவன், உழைப்பாளி, மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவன் தான், யாரையும் அலட்சியப் படுத்த மாட்டான். இப்படிப் பலப் பல அவனைப் பற்றி சொல்லலாம் என்றாலும், சில சமையங்களில் கோபம் முற்ற வார்த்தையை கடுமையாக தான் பேசுவான்.

இப்போதும் ஒரு கோபமான மனநிலை. தனக்கு மட்டும் ஏன் இப்படி என்பது போல…… கடைசி நிமிடத்தில் அவளும் போய்….. அதனால் மற்றவர்களுக்கும் தன்னால் ஒரு அநியாயம் நடந்து….. இப்போது ஜெயஸ்ரீயுடன் திருமணம்.

அவளுடைய குறைகள் ஒன்றும் பெரிய குறைகள் இல்லைதான்…… ஆனால் வாழ்க்கை முழுவதும் இப்படி அவள் பேச வருவதை அனுமானித்து, மிகவும் வேக நடை கொண்ட நான் வாழ்க்கை முழுவதும் இவளுக்காக மெதுவாக நடந்து….. ஐயோ எப்படிப் போகுமோ என் வாழ்க்கை….?

இன்னும் மனதளவில் ஒரு பக்குவம், நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவில்லை சிபிக்கு. நல்லவன் தான், அதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் பக்குவப் படாதவன்.          

மனதில் பலதையும் போட்டுக் குழப்பிக் கொண்டு, அந்தக் குழப்பதோடே ஜெயஸ்ரீயைப் பார்க்க….. “ஏதோ சரியில்லை”, என்பது போல அவனின் முகம் பார்த்துக் கண்டு கொண்டவள், “என்ன?”, என்று புருவம் உயர்த்தி முக பாவனையில் கேட்க……..

 

யாரிடம் தன் கவலைகளை எப்படி சொல்வது என்று தெரியாமல், சிபியின் பார்வை வட்டத்திற்குள் இருந்த அந்த பிள்ளைகள் அமர்ந்திருந்த விதம் நெஞ்சைப் பிசைய, அந்தக் கோபத்தை அப்படியே ஜெயஸ்ரீயிடம் திருப்பினான்.

“இப்படி என்ன என்னன்னு என்னைக் கேள்வி கேட்காத! எனக்குப் பிடிக்காது! ஏதாவது சொல்லணும்னா நானே சொல்வேன்!”, என்று வார்த்தைகளைக் கடுமையாக, ஒரு கடினமான முகபாவனையுடன்  பேச…

எதற்கு அவ்வளவு கடுமை என்று புரியாமல் ஸ்தம்பித்து நின்றாள் ஜெயஸ்ரீ….. 

 

 

Advertisement