Advertisement

அத்தியாயம் பதினொன்று:

உடல் மனம் எல்லாம் சோர்ந்து இருந்த போதும், “தூங்காவிட்டாலும் பரவாயில்லை, படுத்தாவது இருடா!”, என்று உடல் கெஞ்சிய போதும் பிடிவாதமாக ஜெயஸ்ரீயைப் பற்றி தெரிந்து கொள்ள அமர்ந்திருந்தான்.

திருமணம் நன்றாக அன்று நடந்த போதும், அதற்கு முன்பு  மணப்பெண்ணின் குறையை முன்னிட்டு அவளைப் பற்றி அதிகம் வீட்டில் யாரும் பேசிக்கொண்டதில்லை. அதனால் அவளின் விவரங்கள் தெரியவில்லை.

இன்னும் தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்காது. ஜெயஸ்ரீயைப் பற்றி  தெரிந்து கொண்டு தான் தூங்கவேண்டும் என்ற அறிவோடு… ஜெயஸ்ரீக்காக காத்திருந்தான்.

ஜெயஸ்ரீயும் ஒரு பத்து நிமிடத்தில் வந்துவிட்டாள். ஒரு கையில் பாலோடு மறு கையில் ஸ்டிக்கோடு…. பார்த்தவன் எழுந்து சென்று அவள் கையில் இருந்த சொம்பை வாங்கினான்.

கொடுத்தவள், பின்பு என்ன செய்வது? ஏது செய்வது? என்று தடுமாறி நின்றாள்.

“உட்காரு!”, என்று ஜெயஸ்ரீக்கு கட்டிலைக் காட்டி அவன் சேரில் அமர்ந்தான்.

அவன் சொம்பை வாங்கி, அவளை அமரச் சொன்ன விதம், அவன் முகத்தில் இருந்த பாவனை, ஏதோ இன்டர்வ்யூவிற்கு வந்தவர்களிடம் பைலை வாங்கி உட்கார சொல்லி கேள்வி கேட்க ஆயத்தமாவது போல தான் தோன்றியது.

“இவர் காலில் விழுந்து வணங்க சொன்னார்களே! எப்படி சொல்ல?”, என்று தயங்கித் தயங்கி ஜெயஸ்ரீ, சிபியின் முகம் பார்த்தாள்…..

அவள் ஏதோ சொல்ல வருகிறாள் என்பது போல ஒரு மெல்லிய புரிதல் சிபியினுள் தோன்ற….. “ஏதாவது சொல்லணுமா?”, என்றான்.

அவளின் கையில் இருந்த ஸ்டிக்கை ஓரமாக வைத்தவள், அவன் கால்களை தொட்டு கும்பிட விரும்புவது போல சைகை செய்ய…..

“நீ நாட்டியம் கத்துகிட்டு இருக்கியா? குருவணக்கம் சொல்ற!”, என்றான்.

தன்னை கிண்டல் செய்கிறானா என்பது போல சட்டென்று மனம் கலங்க ஜெயஸ்ரீ அவனைப் பார்க்க…… அந்த கண்களில் தெரிந்த கலக்கத்தில் அப்போதுதான் தான் சொன்னது அவளின் காலின் குறையை சுட்டிக் காட்டிக் கிண்டலாக தெரியும் புரிந்தவன்…..

“நான், நீ என்கிட்டே பேச்சுல சொல்லாம சைகைல காட்டினியா! பொதுவா நடனக் கலைஞர் தான் அந்த மாதிரி குருவணக்கம் சொல்வாங்க! இல்லையா? அதை சொன்னேன்! என்று நீண்ட விளக்கம் கொடுத்தவன்……

“உன்னோட காலோட குறைய சொல்லலை! திக்கினாலும் பேச வருது இல்லையா? அதுக்கு முயற்சி செய்யாம சைகை காட்டின தானே, அதுக்கு சொன்னேன்”, என்றான்.

மொத்தத்தில் சிபி என்ன சொல்ல வருகிறான் என்று ஜெயஸ்ரீக்கு புரிந்த மாதிரியும் இருந்தது புரியாத மாதிரியும் இருந்தது என்பது தான் உண்மை. அவள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற இடத்திலேயே நின்றாள்.

“நிறைய சினிமா பார்ப்பியோ? அதோட எஃபக்டா இது! இந்த கால்ல விழறது!”, என்றான் கூடவே.

“இல்லையில்லை!”, என்பது போல தலையாட்டியவள், “வெளில சொல்லிவிட்டாங்க!”, என்பது போல மீண்டும் சைகை செய்ய………….

“அப்போ அவங்க சினிமா பார்த்துக் கெட்டுப் போயிட்டாங்க… இப்போல்லாம் பொண்ணுங்க யாரும் கால்ல விழறது இல்லை, பசங்களை தான் விழ வைக்கிறாங்க!”, என்றான்.

அவனின் திருமணம் நின்றது தெரியும்….. அதைக் குறித்த மிகப் பெரிய சஞ்சலமும் ஜெயஸ்ரீக்கு உண்டு. அதைக் குறித்து தான் இந்த வார்த்தைகளோ என்று ஆராயத் துவங்கினாள்.

“உட்காரச் சொன்னேன்!”, என்று சிபி சொல்லவும்…..

அவன் நிற்பதால் எப்படி அவள் அமர என்று யோசித்தாள்…

“காலையில இருந்து அலைஞ்து! கால் வலிக்குது!”, என்றான்.

“நீங்க உட்காருங்க!”, என்பது போல ஜெயஸ்ரீ காட்ட..

“ப்ச்! உனக்கு கால்ல பிரச்சனை! உன்னை நிக்க வெச்சிக்கிட்டு நான் உட்கார்ந்து பேசறதா”, என்று சிபி கேட்க…….

இவன் நல்லவனா? கெட்டவனா? என்று தான் ஜெயஸ்ரீக்கு தோன்றியது. கூடவே மனதில் உள்ளதை அப்படியே பேசுகிறான் என்றும் தோன்றியது.

“ஒன்று இது லூசுதனத்தின் அடையாளமாக இருக்க வேண்டும், இல்லை நான் என்ன வேணா பேசுவேன் என்னை எவனும் எதுவும் செய்ய முடியாது. எவன் என்ன நினைச்சா எனக்கென்ன!”, என்பது போன்ற தெனாவெட்டாக இருக்க வேண்டும்.

கூடவே அவனைப் பார்த்தவள், “கண்டிப்பாக லூசு கிடையாது! தெனாவெட்டு தான்!”, என்று புரிந்தது.

என்னவோ ஒரு பயம் மனதில் இதுவரை இருந்தது இப்போது குறைந்தது. அவனைப் பார்க்கவும், “உட்காரு”, என்றான்.

“ஐயோ! இவர் பெரிய ஸ்ட்ரிக்ட் ஆபிசர் போலவே!”, என்று தான் தோன்றியது.

உண்மையில் ஜெயஸ்ரீ இப்படி மனதினில் சற்று உற்சாகமாக வார்த்தையாடிச் சில வருடங்களே இருக்கும். அவள் அமர்ந்து கொள்ள….

“உன் பேர் என்ன?”. என்றான்.

மனதின் உற்சாகம் குறைந்தது, “என் பேர் கூட தெரியாமையா என்னை கல்யாணம் பன்ன்னிகிட்டார்”, என்பது போல.

பேர் தெரிந்தாலும் எல்லாம் அவள் வாய்மொழியாக தெரிந்து கொள்ள சிபி கேள்விக் கணைகளோடுத் தயாராக இருக்க…..

“எனக்குப் பேசவரலைன்னு திரும்ப கிண்டல் பண்றாரா!”, என்பது போல பார்த்தாள்.

“ம்ம்! சொல்லு”, என்றான்.

அவள், “முடியாது!”, என்ற பாவனையோடு முகம் பார்க்க…. “உன் சித்தி கிட்ட பேசின பார்த்தேன். என்கிட்டயும் பேசு”, என்று சொன்னான்.  ஜெயஸ்ரீ முடியாது என்று காட்டிய பாவனையை விட அதிகம் காட்டினான்.

 “திக்கினாலும் பரவாயில்லை பேசு….”, என்றான் வற்புறுத்தலாக.

அவனின் வற்புறுத்தலில் சற்று பதட்டமானால் ஜெயஸ்ரீ….. அவள் பதட்டமாக இருந்தால் வார்த்தை வராது…..

முகமும் பதட்டத்தை காட்டியது… “இவர் என் குறையை பெரிதாக நினைக்கிறாரா!”, என்று தான் பதட்டமானாள் ஜெயஸ்ரீ……

ஜெயஸ்ரீயிடம் என்ன, என்ன குறைகளோ? என்ற கவலை சிபிக்கு உண்டு… எப்படி தன்னுடைய தினப்படி வாழ்க்கை சிரமமில்லாமல் போகும் என்ற யோசனை உண்டு….. எப்படி அதைச் சமாளிப்பது என்று தான் குறைகளைப் பற்றி உடனே தெரிந்து கொள்ள விரும்பினான். அவளைப் பேச வற்புறுத்தினான்.

மற்றபடி அதை குறையாக நினைத்து அல்ல….. ஜெயஸ்ரீக்கு அது தெரியாதே.

அவள் முயற்சிக்கவே இல்லை… “வராது!”, என்பது மாதிரி அப்படியே அமர்ந்து இருந்தாள்.

“ப்ச்! உனக்கு ரொம்ப பிடிவாதம்”, என்று நேரடியாக குறைபட்டான் சிபி. என்னவோ அவனிடம் பிடிவாதமே இல்லாததது போல…. சொல்லப் போனால் பிடிவாதத்தின் மொத்த உருவம் சிபி……  

ஜெயஸ்ரீ பதில் பேசமால் அமர்ந்திருக்க…. “சரி விடு! உன் காலைக் காட்டு! கால்ல என்ன பிரச்சனை?”, என்றான்.

கொஞ்ச நஞ்சம் நன்றாக இருந்த ஜெயஸ்ரீயின் மனநிலை முற்றிலும் மாறியது. என்ன இது என்பது போல ஆகிவிட்டது அவளுக்கு. தன்னுடைய குறைகள் மட்டும் தான் இவர் பார்வைக்கு தெரிகிறதா……. வேறு ஒன்றுமே இல்லையா என்னிடம் என்று நினைத்து சோர்ந்து போனாள்.  

“காட்டு!”, என்றான் மீண்டும் ஒரு வற்புறுத்தும் த்வனியில்…… ஜெயஸ்ரீ அவனைப் பார்க்கவும், “உன்னால இந்த ஷூ போடாம நடக்க முடியாதா?”, என்றான்.

அவளுடைய ஷூ வின் இரும்புக் கம்பிகள் முட்டிக்கு கீழ் வரை தான் இருக்கும்….. ஆனால் அது கட்டும் ஸ்ட்ராப்கள் தொடை வரை இருக்கும்.

அவளுக்கு காலை காட்டுவதில் ஒன்றுமில்லை! ஆனால் சிபி அவளையே பார்த்திருக்க, எப்படித் தொடை வரை தூக்கி அதை விடுவிப்பது…. கூச்சமாக இருந்தது.

“அதைக் கூட காட்ட மாட்டியா?”, என்று ஒரு மாதிரி தொனியில் சிபி கேட்கவும்… அப்படியே கால்களைத் தூக்கி படுக்கை மேல் வைத்து கொஞ்சமாக கெண்டைக் கால் வரை சேலையை தூக்கி காட்ட…….

அங்கே ஏதாவது தெரிந்தால் தானே….. அவள் சாக்ஸ் போட்டு அதன் மேல் ஷூ போட்டிருக்க…… சிபி அவளை முறைத்து ஒரு பார்வை பார்த்தான்…..

“இதுல என்ன தெரியுது?”, என்று கடுப்பாக கேட்கவும்…..

“திரும்புங்க!”, என்று ஜெயஸ்ரீ சைகையில் சொல்ல…… சிபிக்குப் புரியவில்லை…

“ப்ச்! நீ என்ன சொல்ல வர்ற?”, என்றான் சலிப்பாக….

எந்த விஷயத்தையும் உடனே செய்ய வேண்டும் சிபிக்கு, ஆறப் போடுவதோ….. பொறுமையோ சற்றும் கிடையாது.

“என்னுடன் இந்த ஒரு மணிநேரமாக தான் தனித்து இருக்கிறார், அதற்குள் என் மொழி புரியாமல் சலிப்பு என்றால்…. வாழ்க்கை முழுவதும்” என்ற பெரிய கேள்விக்குறி ஜெயஸ்ரீக்குள் தோன்ற…… மனம் இன்னும் சோர்ந்து போனது….

“என்ன செய்வது? எப்படிச் சிபியிடம் நடந்து கொள்வது!”, ஜெயஸ்ரீ தடுமாறிப் போனாள்.

அவனின் சலிப்பான வார்த்தைகளை கேட்டு அவளின் முகத்தில் தோன்றிய பாவனையில், சிபியாக, “நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு! இன்னும் உன்னைப் பத்தி எனக்கு தெரியாம இருந்தா எப்படி….. ஏற்கனவே என் கல்யாணம் கடைசி நிமிஷத்துல நின்னு போனதால கல்யாணம் முடியறவரை எதுவும் தெரிஞ்சிக்க மனசு வரலை…. இப்போ தான் கல்யாணம் முடிஞ்சிடுச்சு இல்லையா…….”,

“இனிமே உன்னைப் பத்தி எனக்கு தெரியணும் தானே… உன் பேர் மட்டும் தான் தெரியும்! உண்மையா வேற எதுவும் தெரியாது! நீ டிப்ளமோ கம்ப்யுட்டர் டெக்னோலாஜி செஞ்சிருக்கிறதே, இன்னைக்கு மணமக்கள் பேருக்கு பின்னாடி போட்டதுக்கு அப்புறம் தான் தெரியும்!”, என்றான்.

சிபி மிகவும் சீரியசாக பேசிக் கொண்டிருந்தான்.

ஜெயஸ்ரீ மெதுவாக சேலையை தூக்கி அந்த பெல்ட்களை கழற்றினாள். அதைத்தான் சிபியும் பார்த்தான்……. ஆனால் அதன் வனப்பை அல்ல….. அவள் பெல்ட்டை கழட்டிய இடங்கள் அந்த பெல்ட் போடப்படுவதால் சிவந்து இருந்தன.

மற்றபடி அந்த இடங்கள் நன்றாக இருந்தது. முட்டி வரையும் நன்றாக இருந்தது. ஜெயஸ்ரீ அந்த பெல்ட் கழற்றி விட்டதும் சிபியாகவே அந்த ஷூவை அவளின் கால்களில் இருந்து நீக்கினான்.

பின்னர் கால்களை மடக்கி ஜெயஸ்ரீ சாக்ஸ் கழற்ற ஆரம்பித்ததும் பார்த்தவனுக்கு… அதிர்ச்சிதான்.

ஆங்காங்கே தோல்கள், வெளுத்தும், கறுத்தும், இழுத்தும், முதன் முறை பார்ப்பவர்களுக்கு உடல் சிலிர்க்க வைக்கும்….

கால்கள் தீயினால் பாதிக்கப்பட்டு இருந்தது உடனே புரிந்தது. மிகவும் அதிகப்படியான பாதிப்பு. தசைகள் அந்த இடத்தில் அதிகம் இல்லை. ஆங்காங்கே அறுவை சிகிச்சை மூலமாக தோல்களை ஒட்ட வைத்து இருந்தனர். இருந்தாலும் கால்கள் பார்பதற்கு அகோரமாக தான் இருந்தது.

சிபி அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். அழகு முகம்….. நிச்சயம் அழகி தான். ஆனால் கால்கள் தீயினால் தோல் தசை எல்லாம் பாதிக்கப்பட்டு அதன் வழுவிழந்து இருந்தது. அதன் பொருட்டே இந்த பூட்ஸ் காலில் என்று புரிந்தது.

இது பிறவிக் குறைபாடு அல்ல….

“எப்படி ஆச்சு….?”, என்று மறுபடியும் கேள்விகளைத் தொடுத்தான். ஆனால் முன்பிருந்த வற்புறுத்தல் இப்போது சிபியின் குரலில் இல்லை.

அந்த குரலில் ஒரு தயக்கம் அமர்ந்து இருந்தது. அந்த தயக்கத்திற்கு காரணம் இந்த தீயின் பாதிப்பை பார்த்ததும் அவனுக்கு தீ வைத்து இறந்து போன பத்மினியின் பெற்றோர்கள் ஞாபகத்திற்கு வர…. அவன் தவறு அதில் இல்லை என்று திடமாக நம்பினாலும்…. மனதில் ஏதோ பிசைய, “எப்படி ஆச்சு?”, என்ற கேள்வியோடு நின்றான்.

அவனின் முகம் கவலையைக் காட்டியது. அதன் காரணம் என்ன என்று ஜெயஸ்ரீக்கு புரியாவிட்டாலும், அந்த பாவனை அவன் கவலைப் படுகிறான் தனக்காக என்பது போல ஜெயஸ்ரீக்கு ஒரு தோற்றத்தைக் கொடுத்தது.

சற்று சமன்பட்டாள், அவள் பேச முயற்சி எடுக்கும் முன்….. “இந்த அளவுக்கு பாதிப்பு வர்றவரைக்கும் எப்படி அஜாக்கிரதையா இருந்த?”, என்றான் உடனேயே.

“எனக்கே இங்க பேச்சு வரலை! இதுல என்னை பேசவே விடலைன்னா நான் என்ன செய்வேன்?”, என்பது மாதிரி தளர்ந்து போனாள் ஜெயஸ்ரீ.

அது முகத்திலும் தெரிய, “களைப்பா இருக்குதா? சரி படுத்துக்கோ!”, என்றான் சிபி. கனிவாக சொல்லப்படவேண்டிய வார்த்தைகள் தான், ஆனால் அதுவும் அதட்டலாக தான் வந்தது.

ஜெயஸ்ரீ அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள், அவனை படிக்கவும் முற்பட்டாள். சிபி பேசும் முறையே இப்படித் தான் போல என்று தோன்ற ஆரம்பித்தது.

அது சற்று ஆசுவாசதைக் கொடுக்க…… “பால்!”, என்றாள்…. அவனை அதை சாப்பிடுங்கள் என்பதற்காக……..     

அதை விட்டு விட்டு, அவன், “ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா… பாரு உன்னோட அஜாக்ரதையால நடக்க முடியாம எவ்வளவு சிரமம் ஆகிடுச்சு!”, என்றான்.

“நடந்தது என்ன? நான் அஜாக்கிராதையாக இருந்தேனா?”, என்ற யோசனை ஓடும்போதே ஜெயஸ்ரீயின் முகத்தில் புன்னகை…… சிபியைப் பார்த்து புன்னகைத்தாள்.

“என்ன சிரிக்கற? இப்போ சிரிக்கற மாதிரி நான் என்ன சொன்னேன்!”, என்றான் சிபி. நன்றாக விரிந்த புன்னகை இப்போது ஜெயஸ்ரீயின் முகத்தில்.

அவளின் சிரிப்பை பார்த்தவன், “நல்லாத் தான் இருக்குறா, இவ சிரிச்சா!”, என்று நினைத்தவன், அதை வாய்விட்டும் சொன்னான்… சிபிக்கு தான் நினைத்ததை உடனே சொல்லி விடவேண்டுமே….

“நீ சிரிச்சா நல்லா இருக்குற? அப்புறம் ஏன் முகத்தை தூக்கி வச்சிருக்குற..”, என்றான்.

“இப்படி அதட்டி, உருட்டி, மிரட்டிக் கிட்டே இருந்தா சிரிப்பு எப்படி வரும்!”, என்று நினைத்தவள் சொல்லவில்லை.

“குடிங்க!”, என்பது போல சைகை காட்டினாள்.

“நான் ஒன்னு சொல்லட்டுமா?”, என்றான் சீரியசாக சிபி திரும்பவும்!

“ஐயோ! அப்போ இவ்வளவு நேரமா பேசினது என்ன?”, என்று தோன்றியது ஜெயஸ்ரீக்கு… ஆனால் கவலையாக அல்ல, சற்று உற்சாகமாக….. இப்படி கவுண்டர் கொடுத்து சில வருடங்கள் ஆகியிருந்தது… இப்போது தானாக வந்தது.

“என்ன?”, என்பது போல சிபியை பார்க்க….

“இப்படி சைகை பண்ணாத! முடிஞ்ச வரைக்கும் பேச முயற்சி பண்ணு! திக்கினாலும் பரவாயில்லை!”, என்றான் மீண்டும் அதட்டலாக. காலையில் இருந்து சிபியை பார்த்துக் கொண்டிருந்ததில்… இப்போது சற்று நேரமாக அவன் நேரடியாக பேசிக் கேட்டுக் கொண்டிருப்பதில்… சிபியின் பேச்சு முறை இது… இது தனக்கானது மட்டுமல்ல என்று பிடிப்பட்டிருக்க….     

கட்டிலின் பக்கத்தில் இருந்த மேஜையில் இருந்த குறிப் பேட்டை எடுத்து, “சைகை வேண்டாம்! எழுதிக் காட்டட்டுமா?”, என்று எழுதி அவனிடம் நீட்டினாள்.

அதை வாங்கிப் படித்தவனுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்… ஜெயஸ்ரீயைப் பார்த்தான்.

சற்று முன் அழுத அழுகையென்ன… இப்போது எழுதிக் கொடுப்பது என்ன.. சிபியும் ஜெயஸ்ரீயைப் படிக்க முற்பட்டான்.

அதுதான் ஜெயஸ்ரீ! எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக முகத்தை தூக்கி வைக்கிறாளோ.. அவ்வளவு சீக்கிரம் சரியாகவும் ஆகிவிடுவாள்.

ஜெயஸ்ரீக்கு அதிக பயம், தயக்கம், எல்லாம் இல்லை என்பதாகத் தான் சிபிக்கு தோன்றியது.

அதைத் திரும்ப அவளிடம் நீட்டியவன்….. “எனக்கு சைகையும் புரியாது! படிக்கவும் வராது….. நீ படிச்சு சொல்லு!”, என்றான் வேண்டுமென்றே. இது மட்டும் என்ன வேறு தொனியிலா வரும் இதுவும் அதட்டல் தொனி தான், ஆனால் கண்களில் கிண்டல் இருந்ததோ…

ஜெயஸ்ரீ அவன் கண்களைப் பார்த்தாள். என்னவோ மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் குறைந்தது.

“ம்! படி! படி!”, என்று அதட்டல் போட்டான் சிபி…..     

“ம்கூம்! முயடியாது!”, என்பது போல ஜெயஸ்ரீ தலையசைக்க…

“அப்போ உன்னை தூங்க விடமாட்டேன்! படிச்சு காட்டினா தான் தூங்க விடுவேன்!”, என்று அவளுக்கு எதிரில் மெத்தையில் சிபி சம்மணமிட்டு அமர்ந்து கொண்டான்.

சில வருடங்களாக மறைந்திருந்த ஜெயஸ்ரீயின் இயல்பு குணம் தலைதூக்க…

“நீ… நீங்க… நல்… நல்லவரா? கெட்டவரா?”, என்றாள் திக்கித் திணறி புன்னகையோடு…..

“அது தெரியாம தான் ஒருத்தி ஓடிப்போயிட்டா என் கூட கல்யாணம் வேண்டாம்னு!”, என்றான் சிபி திரும்பவும் சீரியசாக…..

ஜெயஸ்ரீயின் முகத்தின் புன்னகை நொடியில் மறைந்தது. அதை சிபி கவனிக்காமல் பேசிக்கொண்டே இருந்தான்.

“சின்ன வயசுல இருந்து எங்க வீட்டுல தான் வளர்ந்தா…. அவளால கண்டுபிடிக்க முடியலை போல நான் நல்லவனா கெட்டவனான்னு அதான் போயிட்டா… அதனால தான் இவ்வளவு பிரச்சனையும், நான் கெட்டவன் ஆகிட்டேன் போல!”, என்றான் வருத்தமாக.

அவன் பிரச்சனை என்று சொன்னது பத்மினியின் வீட்டில் நிகழ்ந்த நிகழ்வுகளை… அந்த மூன்று பிள்ளைகளும் பெற்றோரை இழந்து நிற்பதை. அதற்கு அவன் காரணம் என்பது போல மற்றவர்கள் பேசுவதை.

ஜெயஸ்ரீக்கு தன்னை திருமணம் செய்ததை தான் பிரச்சனை கூறுகிறானோ என்று தான் தோன்றியது. அதையும் விட கண்ணன் ராதாவின் திருமணம். நினைக்கும் போதே பயம் வந்தது! மீண்டும் கலக்கமாக சிபியைப் பார்த்தாள்.

சொல்லிவிட வேண்டும்!

எதை?  

“சொல்ல வேண்டும் போல நினைத்த சொற்கள் வார்த்தையாக வரவேயில்லை ஜெயஸ்ரீயிற்கு. ஆனால் சொல்லிவிட மனம் துடித்தது தான் உண்மை”. 

“மத்தவங்க பார்வையில கொஞ்ச நாளா கெட்டவன் ஆகிட்டேன்! முடிஞ்சா நீ கண்டுபிடியேன்! நான் நல்லவனா? கெட்டவனா? ன்னு”, என்றான்.

சொல்லும்போது அவன் குரலில் அவ்வளவு வருத்தம்….. 

கேட்ட ஜெயஸ்ரீக்கு மீண்டும் குரல் அடைத்துக் கொண்டது.  

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.

        

 

Advertisement