Advertisement

அத்தியாயம் பத்து:

டீ வீ பார்க்கும் மனநிலை இருவரிடத்திலும் இல்லை… சடங்கு சம்ப்ரதாயம் என்ற எந்த ஏற்பாடும் வீட்டில் செய்யவில்லை. ஏனென்றால் வஜ்ரவேலுக்கு மணமக்களை வீட்டிற்குக் கூட்டி வரும் எண்ணமில்லை.

ஆனால் திருமணம் முன்பே கோவிலில் சில நிகழ்வுகளால் வருத்தம், அதன் பிறகு ஜெயஸ்ரீ சொல் பேச்சுக் கேட்டாலும் முகம் சரியில்லாத மாதிரி தான் அவருக்கு தோன்றியது.

சிபியின் வீட்டுப் பெண்கள் யாரும் ஜெயஸ்ரீயிடம் இன்னும் நெருங்கிப் பேசவில்லை என்பதையும் கவனித்தார். அதனால் முதல் சிபியுடனாவது ஜெயஸ்ரீ பழகட்டும் என்று தான் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

தங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்ற மரியாதை நிமிதமாவது ஜெயஸ்ரீ சிபியிடம் பேசுவாள் என்று தான் இந்த ஏற்பாடு அவர் செய்ததே.

பிறகு சிபியின் வீட்டிற்கு போகும்போது சிபியுடன் சற்று பேசிப் பழகி விட்டால், சகஜமாக உணருவாள் என்று நினைத்தார்.

தம்பிக்கு தொலைபேசியில் அழைத்து, “ஜெயஸ்ரீயின் அறையை அழகு படுத்த வேண்டுமோ? என்ன சம்ப்ரதாயமோ செய்யச் சொல்லு தனத்தை!”, என்றார்.

ராஜவேல் தனதிடம் சொல்ல…… சிபியும் ஜெயஸ்ரீயும் ஹாலில் அமர்ந்து இருந்ததால் மளமள வென்று அவர் அறையை அலங்க ஆரம்பித்து விட்டார்.

ஆனால் மணமக்கள் இருவரும் வரவேற்பின் போது அணிந்திருந்த உடையிலேயே இருந்தனர். சிபி டீவீ பார்ப்பதில் மனதைத் திருப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான். திருமணம் நடந்து விட்டது என்றும் மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தான்.

ஆனாலும் அவனின் கவனம் டீவீயில் இல்லை. சுத்தமாக என்ன பாட்டு அப்போது ஓடிக் கொண்டிருக்கிறது என்று கவனத்தில் பதியவேயில்லை. அது ஒரு படப் பாடல்கள்.

பூங்காற்று புதிதானது என்று மூன்றாம் பிறை பாட்டு முடிந்து,

அதன் பிறகு கண்ணே கலைமானே ஓடி……

பின்பு பொன்மேனி உருகுதே                                                                                     என்னாசை பெருகுதே                                                                                                                                ஏதேதோ நினைவு தோணுதே என்று ஓட….

அவன் சோபாவில் அமர்ந்திருக்க, ஜெயஸ்ரீ ஒரு சேரில் அமர்ந்திருந்தவள், “ஐயோ! என்ன பாட்டு இது!”, என்பது போல பார்க்க…. சிபியின் கவனம் சுத்தமாய் பாட்டில் இல்லை…

“ஐயோ! எந்தக் கிழவி எந்த ரூமில் இருந்து பாட்டைக் கேட்கிறதோ? என்ன நினைப்பார்கள்?”, என்று பதட்டமானால் ஜெயஸ்ரீ.

“இவர் ஏன் பாட்டை மாற்றாமல் இருக்கிறார்”, என்று சிபியைப் பார்க்க அவன் டீ வீ யை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அவன் கவனம் சற்றும் டீ வியில் இல்லை…. பார்வை மட்டும் தான் அங்கே!

ஆனால் ஜெயஸ்ரீக்கு என்ன தெரியும்….. இதென்ன சற்றும் நாகரீகமில்லாமல் இப்படி ஒரு பாட்டை நடுக் கூடத்தில் அமர்ந்து வெறித்து கொண்டிருக்கிறார் என்று அசூசையாக உணர்ந்தவள் முகத்தை சுளித்தாள்.

சிபிக்குச் சுற்றுப் புறம் தெரியவேயில்லை.

யாரும் இன்னும் பார்க்கும் முன்னர் மாற்ற வேண்டும் என்று நினைத்த ஜெயஸ்ரீ, ரிமோட் எங்கே என்பது போல பார்க்கக அது அவன் கையில்..

பதட்டமானதால் வார்த்தை வரவில்லை…… அவளாக சற்று தடுமாறி எழுந்து வந்து கூப்பிட முடியாமல் சிபியின் கையில் இருந்து ரிமோட்டை பறிக்கவும் தான் சிபிக்கு சுயநினைவே வந்தது.  

அப்போதும் அவன் பாட்டைக் கவனிக்கவில்லை, ஜெயஸ்ரீ அவன் கையில் இருந்து ரிமோட்டை பறித்த செய்கை தான் தெரிந்தது.

“என்ன இது?”, என்பது போல சிபி பார்க்க….. ஜெயஸ்ரீ ரிமோட்டில் சேனலை மாற்றினாள்.

சிபிக்கு அவள் ரிமோட்டை பறித்து விட்டு கனகாரியமாக சேனலை மாற்றிக் கொண்டிருக்கவும், சட்டென்று ஒரு கோபம் மூண்டது, என்ன மரியாதையில்லாத தனம் என்பது போல…. அவனுக்கு ஒரு மாதிரியான பாட்டு ஓடிக்கொண்டிருக்கும், அதற்காக அவள் செய்திருப்பாள் என்பது போல கொஞ்சமும் தோன்றவில்லை.

“என்ன செய்கை இது?”. என்பதாக அவளை முறைத்துப் பார்க்க…. என்ன இந்த மாதிரி ஒரு பாட்டை மாற்றியதற்கு இவர் என்னை முறைத்துப் பார்க்கிறார் என்று ஜெயஸ்ரீக்கு கோபம் மூள, அவள் திரும்ப சிபியை முறைத்துப் பார்த்தாள். அது ஒரு சகஜ மனப்பான்மையின் விளைவை கொண்டு வரும் செய்கை தான் அந்தப் பார்வை. உரிமையான முறைப்புப் பார்வை. 

சிரிக்கும் படியான ஒரு சின்ன விஷயம். ஆனால் வார்த்தைகளாக எண்ணங்கள் சொல்லப் படாததால்…. சிபியைப் பற்றி ஜெயஸ்ரீ நல்ல விதமாக நினைக்காமல் இருக்க…… அதே தான் சிபிக்கும், ஜெயஸ்ரீயைப் பற்றி…..

“என்ன திமிர் இவளுக்கு? இவ வீடுன்னு காட்டுறாப் போல, எப்போப் பார்த்தாலும் முறைக்கிறா, ஒரு ரெண்டு வார்த்தைப் பேசிப் பழகலை அதுக்குள்ள இந்த முறைப்பு…..”,

“புருஷன்ற மரியாதையே இல்லை, இதுக்கு இன்னைக்கு தான் கல்யாணம் ஆகியிருக்கு….. இவளைக் கொஞ்சம் அடக்கியே வைக்கணும், இல்லை பொண்டாட்டியை அடக்க தெரியாதவன்னு அப்புறம் பேச்சாகிடும்”, என்பது போல தோன்ற….

சிபியின் பார்வை இன்னும் கடினமுற்றது.

அவனின் பார்வையின் அர்த்தத்தை ஜெயஸ்ரீ படிக்க முற்பட்டாலும் அவளுக்கு புரியவில்லை. சிபியின் கடினமான பார்வை ஜெயஸ்ரீயை உள்ளுக்குள் ஒடுங்க செய்தது..

அவளுக்கு திரும்ப எப்படி நடந்து கொள்வது என்று கூட தெரியவில்லை. பதட்டமாக திரும்ப சிபியிடம் ரிமோட்டை கொடுப்பது போல கையை நீட்ட……

சிபி வாங்கவேயில்லை…… “என்ன நீயா குடுக்கற? நீயா பிடுங்கற? திரும்ப நீயா குடுக்கற….? பேச முடியாததால சிம்பாலிக்கா நீ சொல்றபடி நான் ஆடணும் நடத்திக் காட்டுறியா”, என்று கடினமான வார்த்தைகளைப் பேச…..

“நான் என்ன செய்தேன்? இவர் என்ன பேசுகிறார்?”, என்பது போல ஜெயஸ்ரீக்கு கண்கள் கலங்கியது….

“ஒஹ்! அடுத்தது அழுகையா? இந்த அழுது என்கிட்டே காரியத்தை சாதிச்சிக்க முயற்சி பண்ணாத…. எனக்கு அது பிடிக்கவே பிடிக்காது…… மணிமேகலை அழுது ஏதாவது கேட்டாலே நான் வாங்கிக் கொடுக்க மாட்டேன்…. இப்படிச் செய்யாத!”, என்று இப்போது சிபி முறைக்க………

கலங்கிய கண்கள் மளமள வென்று கண்ணீரை சொரிந்தது…… “காலையிலிருந்து தான் இவரை நேரில் பார்க்கிறேன். நான் என்ன இவரிடம் அழுது காரியம் சாதித்தேன்….”,  திரும்ப நடக்க ஆரம்பித்தாள்….. மனம் தாளவேயில்லை…..      

“என்ன திமிர்? நான் இங்க பேசிட்டே இருக்கேன்! பதில் பேசாம போறா!”, என்று இன்னும் சிபியின் கோபம் அதிகமாகியது.

வேகமாக எழுந்து அவள் முன் நின்றான். “உனக்கு மரியாதையே தெரியாதா? பேசிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு போற… என்ன வளர்த்து வெச்சிருக்கார் உங்க அப்பா?”,

அப்பாவை பற்றி பேசியதும் மனதில் சட்டென்று ஒரு கோபம் மூள, “இன்றைக்குத் தான் என்னை பார்த்திருக்கிறார், அதுவும் திருமணம் ஆன நாள் என்னை இந்த மிரட்டு மிரட்டும் இவரை இவரின் பெற்றோர் நன்றாக வளர்த்திருக்கிறார்கள்! என்னை என் அப்பா நன்றாக வளர்க்கவில்லையா?”, என்ற கேள்வி மனதில் வந்த போதும், அதை வார்த்தையாக அவளால் சொல்ல முடியாது இல்லை.

சிபி அவளைப் பார்த்து பேச, ஜெயஸ்ரீ அவனைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்தாள்.

“முதல்ல என்ன பழக்கம் இது? நான் உன்னைப் பார்த்தா வேணும்னே என்னை பார்க்காம வேற எங்கயோ பார்க்கற, காலையில இருந்து இப்படி தான் செய்யற?”, என்று கோபமாக பேச…

“எனக்கு எந்த பழக்க வழக்கமும் தெரியாது!”, என்று கத்த வேண்டும் போல ஆவேசம் எழ.. கண்கள் கண்ணீர் சுமந்திருந்தாலும் அந்த ஆவேசம் கண்களில் பிரதிபலிக்க சிபியை பார்த்தாள்.

அந்த கண்களின் ஆவேசத்தைப் பார்த்தவன்….. “என்ன இப்படி பார்க்குற… என்ன சொல்ல வர்ற”, என்று அதட்டலாக எப்போதும் போல அவனின் இயல்பைக் கொண்டு பேசினான்.

சிபிக்கு பெண்களின் சாதாரண உணர்வுகளே தெரியாது….. இதில் ஜெயஸ்ரீயின் மெல்லிய நுண்ணிய உணர்வு எங்கே புரியும்.  

ஜெயஸ்ரீக்கும் இன்னும் தெரியவில்லை, சிபி அவளிடம் மட்டும் அப்படி நடந்து கொள்ளவில்லை, அவனின் இயல்பே அதுதான் என்று…..

முதலில் யார் யாரை புரிந்து கொள்வர் என்பது காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

திருமண நாள் அன்று தான், இப்படி ஒரு பெண்ணை மிரட்டக் கூடாது என்ற அறிவு, அந்த அறிவுகெட்ட சிபிக்கு இல்லவேயில்லை.

“என்ன இப்படிப் பார்த்தா நான் பயந்துடுவனா?”, என்று பேசினான்……

“ஐயோ இவர் என்ன இப்படிச் சண்டைக்கு நிற்கிறார், நீங்க பயந்தா பயப்படுங்க, பயப்படாட்டி போங்க”, என்று அலட்சிய எண்ணம் தோன்றிய போதும், ஜெயஸ்ரீ கொஞ்சம் தெளிந்தவளாக, அதைக் கண்களில் காட்டாமல் கவனமாக தவிர்த்து, கண்களில் எதையும் காட்டாமல் வெற்றுப் பார்வை பார்த்தாள்.

அதற்கு மேல் சிபிக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அப்படியும், “இப்படி எல்லாம் செய்யக் கூடாது”, என்று கை நீட்டிப் பேசினான். ஜெயஸ்ரீக்கு மீண்டும் கவலையானது…. “இவர் இவ்வளவு சத்தமாக பேசுகிறாரே யாரவது கேட்டால் என்ன நினைப்பர்”,

அடுத்தவர் முன் காட்சிப் பொருளாவது என்றுமே ஜெயஸ்ரீக்கு பிடிக்காது…. இவர் பேச்சை எப்படி நிறுத்துவது என்று ஜெயஸ்ரீக்கு புரியவேயில்லை.

“என்ன இது?”, என்பது போன்ற ஒரு பார்வையைச் சிபி பார்க்க…… ஜெயஸ்ரீயும் அதையே பார்வையில் காட்டினாள்.

“ப்ச்”, என்று உச்சுக் கொட்டியவன், சென்று மறுபடியும் சோபாவில் அமர்ந்து கொள்ள, ஜெயஸ்ரீ அவளின் ரூமிற்கு சென்றாள். அங்கே தனம் அலங்காரத்தை முடித்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஐயோ! இது வேறா?”, என்றிருந்தது… அந்த மாதிரிப் பாட்டையே வெறித்துப் பார்த்தானே என்று பயம் கொடுத்தது. ஜெயஸ்ரீக்கு என்ன தெரியும், சிபி இன்னும் அவளைத் தன் மனைவியாகக் காதல் கொண்டு  பார்க்கவே நாட்களாகும் என்று.

உண்மையில் சிபி பெண்களைப் பார்க்கும் பார்வையில் மிகவும் கண்ணியமானவன்…… இந்தப் பெண் அழகாக இருக்கிறாள், இவள் அழகில்லை என்பது போலக் கூட யாரையும் பார்க்க மாட்டான்.. இந்தப் பெண் குண்டு, ஒல்லி, உயரம், உயரம் குறைவு, நிறம், நிறமில்லை, இப்படி எந்த யோசனையும் அவனுள் ஓடாது……

ஆனால் அது மற்றவர்களுக்கு என்றால் பரவாயில்லை. மனைவியை இந்தக் கண் கொண்டு பார்க்க கூடாதே…. கணவனின் பார்வையில் தென்படும் ரசிப்புதன்மைகள் தானே மனைவியை இன்னும் அழகாக காட்டும், அவளை இன்னும் அழகுபடுத்திக் கொள்ள தூண்டும்.

அந்த பார்வை கொடுக்கும் பரவசம் தானே உண்மையான பெண்களின் ஆபரணம். தங்கமும் வைரமும் கொடுக்காத ஜ்வளிப்பை அது பெண்களின் முகத்திற்கு கொடுக்கும். 

சொல்லப் போனால் திருமண வரவேற்பின் பொருட்டு அழகு நிலைய பெண்கள் வந்து அலங்கரித்ததில் ஜெயஸ்ரீ மிகவும் அழகாக இருந்தாள். மிகவும் எளிமையான அலங்காரம் தான், அதிலேயே கண்ணைக் கவர்ந்தாள்.

ஆனால் சிபியின் கண்களை எட்டவேயில்லை இன்னும் அது என்பது தான் உண்மை. சிபி ஜெயஸ்ரீயின் உடலின் குறைகள் மற்றும் மரியாதைத் தன்மை குறித்து தான் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

“ஐய்யகோ!”, என்று சொல்ல வேண்டிய நிலை தான் இது…. பின்பு பொதுவாக எந்த ஆண்மகனும் பெண்களை பார்த்த உடனே முதலில் பார்ப்பது அவர்களின் சௌந்தர்யம் தான். சில ஆண்கள் மட்டுமே விதி விலக்கு, அதில் சிபி ஒருவனானதுதான் இங்கே கஷ்டமாகிப் போனது.

சிபி ஹாலில் அமர்ந்திருக்க…. ஜெயஸ்ரீ வேறு ஒரு கூடத்தில் அமர்ந்திருக்க….. வஜ்ரவேல் வந்தவர், “என்னடா இது?”, என்பது போல தான் பார்த்தார்.

மாப்பிள்ளையிடம்.. “உங்களைத் தனியா விட்டு எங்க போனா?”, என்று கேட்டுக் கொண்டே ஜெயஸ்ரீயிடம் விரைந்தவர்……. “மாப்பிள்ளையைத் தனியா விட்டுட்டு நீ என்ன பண்ற கண்ணு”, என்று கடிந்தவர்….. “அவரோட சகஜமா பேசிப் பழகு”, என்றும் கூடவே சொல்ல……

காலையில் இருந்து தந்தை அலைந்து திரிந்ததில் ஓய்ந்து தெரிவதைப் பார்த்தவள்…. “சரி!”, என்பதுப் போல உடனே தலையாட்டி மெதுவாக எழுந்து, சிபி இருக்கும் இடத்திற்கு போய் வேறு ஒரு சேரில் அமர்ந்து கொண்டாள்.

யார் போய் இப்போது சிபியை ஜெயஸ்ரீயின் அறைக்கு போகச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினர். தனம் மெதுவாக வந்து ஜெயஸ்ரீயிடம் “கண்ணு, மாப்பிள்ளைத் தம்பியை உன் ரூம்க்கு கூட்டிட்டு போ கண்ணு!”, என்று சொல்ல….

அவரைப் பார்த்து, “நானா? முடியாது!”, என்பது போலத் தலையாட்டினாள்.             

“பாரு கண்ணு! எப்படி விரைப்பா உட்கார்ந்து இருக்கிறார். எல்லோரும் நீ சொல்லு, நீ சொல்லுன்னு பயந்து அடிச்சிக்கறாங்க தவிர யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க! அப்பா எப்படிப் போய் சொல்வார் நீயே சொல்லு! இனிமே நீதான் சொல்லணும்!”, என்று சொல்ல…..

“என்னவென்று சொல்ல?”, என்றுத் திணறிப் போனாள் ஜெயஸ்ரீ. அவன் திட்டினாலும் மிரட்டினாலும் அவனோடு தானே வாழ்க்கை…. யாராவதுப் போய் சொல்லி, சிபி அவர்களிடம் முறைத்து முகம் காட்டினால் இன்னும் அசிங்கமாகிப் போகும் என்று நினைத்தவள்…

மெதுவாக அவனிடம் சென்று நின்றாள்…. “வாங்க ரெஸ்ட் எடுப்பீங்கலாம்”, என்று வார்த்தையைப் போட விழைந்தாலும் வார்த்தை வரவில்லை….

“வாங்க!”, என்பதுப் போல தலையசைத்துக் கூப்பிட….. சிபி எதுவும் பேசவில்லை உடனே எழுந்து கொண்டான்.

சிபி தனக்காக மெதுவாக நடக்கிறான் என்று புரிந்து, ஜெயஸ்ரீ சற்று வேகமாக நடந்து ரூமை காட்ட விழைய, நடை தடுமாறியது, சற்று கோணல் மாணலாக நடந்தாள்.

“எதுக்கு இவ்வளவு வேகமா நடக்கற?”, என்று சிபி அதட்டினான். அதைக் கேட்டப் பிறகு நின்றுவிட்டாள். என்னவோ பதட்டம், என்ன செய்தாலும் திட்டுகிறானே என்பது போல….. அவன் கூட நடக்கிறான் என்ற பதட்டம் தான் அவளின் வேகமான நடைக்குக் காரணம். அது சிபிக்கு புரியவில்லை.  

“என்னடா இவ நின்னுட்டா”, என்று சலிப்பாக வந்தது சிபிக்கு. “நீ கொஞ்ச நேரம் பேசாம இருடா”, என்று அவனுக்கு அவனே திட்டிக் கொண்டான் சிபி முதல் முறையாக,

பிறகு திரும்ப மெதுவாக நடந்தாள்…… அவள் ரூமின் அருகில் வந்ததும் உள்ளே போகுமாறு சைகை செய்ய……. “என்ன?”, என்று புரியாமல் பார்த்தான்.

“தூங்க!”, என்பதுப் போல கண்கள் மூடி கையில் தலை சாய்த்துக் காட்ட…. ரசிகனாயிருகும் எவனும் அந்த செய்கையில் மயங்கித் தான் போவான். கவிதையாய் அந்தக் காட்சியிருந்தது.

ஆனால் சிபியோ அவள் தூங்கச் சொல்கிறாள் என்று புரிந்தாலும்… “எல்லார் கிட்டயும் பேசற? ஏன் என்கிட்டே பேசமாடேங்கற?”, என்றான் தீவிரமான குரலில்.

எங்கே பேசுவது சிபியிடம் அவனைப் பார்த்தால் ஏற்படும் பதட்டத்தில் ஜெயஸ்ரீக்கு வார்த்தை வரவில்லை என்பது தான் உண்மை. அதை சொல்லவும் முடியாது. சொல்ல நினைத்தாலும் வார்த்தையும் வராது.

சிபி அவளின் பதிலுக்காக காத்திருந்தான். ஜெயஸ்ரீக்கு நிஜமாக அவனுடைய கேள்வி கணைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை.

பாவமாகத் தான் அவனை பார்த்தாள்…… என்ன நினைத்தானோ பதில் பேசாமல் உள் சென்றான்.

சென்றவன் அந்த அறையின் அலங்காரத்தைப் பார்த்ததும் அவனுக்கும் ஜெயஸ்ரீயைப் போல இது வேறா என்று தான் தோன்றியது. அவனும் வரவேற்பிற்காக அணிந்திருந்த பட்டு வேஷ்டி சட்டையில் தான் இருந்தான்.

கசகசவென்று தான் இருந்தது….. அமைதியாகச் சென்று அமர்ந்து கொண்டான். மெத்தை அவனை உள் வாங்கியது. என்னடா இது பஞ்சு மாதிரி இருக்கு என்று தான் தோன்றியது. அவனுக்கு ஒரு ஜமக்காலத்தை விரித்து கட்டாந்தரையில் உறங்கி தான் வழக்கம். மிகவும் எளிமையானவன்……. உழைப்பாளி என்றாலும், அந்த நொடி அந்த நிமிடம் வரை பணத்திற்கு முக்கியம் கொடுக்காதவன்.

விளைச்சல் மட்டுமே அவன் குறிக்கோள், அது எப்படி விளைகிறது என்று பார்க்க அவனிடம் இருக்கும் ஆர்வம், அதைக் காசாக்குவதில் இருக்காது. இவன் வயல் வரப்பை பார்க்க, தந்தை தான் அதன் விற்பனை எல்லாம் பார்ப்பார்.

லாபமா நஷ்டமா என்று பார்ப்பான். ஆனால் எவ்வளவு லாபம் என்று கணக்கில் கொண்டு வரமாட்டான். ஆயிரம் ரெண்டாயிரம் என்றாலும் அப்பாவிடம் தான் இதுவரை பணம் வாங்குவான்.

வாழ்க்கையின் வசதி வாய்ப்புகளுக்கு பழகியிராதவன் என்பதை விட முக்கியத்துவம் கொடுக்காதவன். அந்த மெத்தையில் அமர்ந்திருப்பது ஏதோ அசௌகரியமாக இருக்க….. எழுந்து அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்து கொண்டு ஜெயஸ்ரீ வருவதற்காக பார்த்திருந்தான்.     

    

Advertisement